எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 20, 2018

சாமியே சரணம் ஐயப்பா! 4

மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா? பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத் தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம் திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள் பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார்.



"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார்.

காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர் என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்:

ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும் சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.

இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும் இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம்.

இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்ததும் தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன் எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?

பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.

அது வருமாறு:
முதல் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - முருகன்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகா விஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினொன்றாம் படி - சுக்கிரன்
பனிரண்டாம் படி - ரங்க நாதன்
பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமன்
பதினைந்தாம் படி -ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி -விநாயகர்

இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.



ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்
உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]

இரண்டாம் படியில் ஏறுகின்றேன்
ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]

மூணாம் படியில் ஏறுகின்றேன்
மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]

நாலாம் படியில் ஏறுகின்றேன்
அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]

ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்
தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]

ஆறாம் படியில் ஏறுகின்றேன்
காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]

ஏழாம் படியில் ஏறுகின்றேன்
கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]

எட்டாம் படியில் ஏறுகின்றேன்
லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]

ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்
மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]

பத்தாம் படியில் ஏறுகின்றேன்
மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]

பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்
வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]

பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்
அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]

பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்
பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]

பதினாலாம் படியில் ஏறுகின்றேன்
சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]

பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்
சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]

பதினாறாம் படியில் ஏறுகின்றேன்
தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]

பதினேழாம் படியில் ஏறுகின்றேன்
கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]

பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்
அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]

பகவானே உனைக் காண்கின்றேன்
பந்தபாசத்தை விடுகின்றேன்!

ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்
சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!

மகரஜோதியில் கரைகின்றேன்
மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!

பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

அம்பேரிக்காவில் கரோலினா மாநிலம் ராலேயில் வசித்து வரும் மருத்துவ நண்பர் திரு விஎஸ்கே அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம். (மிகப் பழைய பதிவு).

20 comments:

 1. அற்புதமாக சொல்லி வந்தீர்கள் நிறைய விடயம் அறிந்தேன். வாழ்க நலம்
  சாமியே சரணம் ஐயப்பா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. தேவதையின் அம்சத்தையும், திரு விஎஸ்கே அவர்களின் தத்துவத்தையும் இணைத்துப் பார்த்தேன்...

  அம்சமான தத்துவம்... நன்றி அம்மா...

  01.சூரியன் - உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன் - காணல்
  02.சிவன் - ஒலிகள் சத்தம் மறக்கின்றேன் - கேட்டல்
  03.சந்திரன் - மணங்கள் யாவும் விடுகின்றேன் - நுகர்தல்
  04.பராசக்தி - அறுசுவை அகற்றி செல்கின்றேன் - உண்டல்
  05.செவ்வாய் - தொடுவுணர்வற்று நகர்கின்றேன் - தொடுதல்
  06.முருகன் - காமங்கள் யாவும் தொலைக்கின்றேன் - காமம்
  07.புதன் - கோபங்கள் அகலப் பார்க்கின்றேன் - கோபம்
  08.மகாவிஷ்ணு - லோபம் விலகக் காண்கின்றேன் - லோபம்
  09.குரு பகவான் - மோஹம் பறந்திடச் செய்கின்றேன் - மோஹம்
  10.பிரம்மா - மதமென்னும் பேயை விரட்டுகின்றேன் - மதம்
  11.சுக்கிரன் - வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன் - மாத்ஸர்யம்
  12.ரங்கநாதன் - அசூயை அகற்றி வாழ்கின்றேன் - அசூயை
  13.சனீஸ்வரன் - பெருமிதமின்றிச் செல்கின்றேன் - தற்பெருமை
  14.எமன் - சத்வகுணத்தை விடுகின்றேன் - சத்வம்
  15.ராகு - சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன் - ரஜம்
  16.காளி - தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன் - தாமஸம்
  17.கேது - கற்றதையெல்லாம் மறக்கின்றேன் - வித்யை
  18.விநாயகர் - அறியாமை இருளைப் போக்குகின்றேன் - அவித்யை

  சுவாமியே சரணம் ஐயப்பா...

  ReplyDelete
  Replies
  1. அழகாய் இணைத்திருக்கிறீர்கள் டிடி. நன்றிப்பா.

   Delete
 3. வாவர் என்பதை சிறுவயதில் பல நாட்கள் பாபர் என்றே நினைத்திருந்தேன்!!! பிறகுதான் தெரிந்தது.

  சிறப்பான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த வாவர் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன ஸ்ரீராம்.

   Delete
 4. கந்தபுராணத்தில் முருகனுக்கு தேவந்திரன் மயில் வாகனமாய் வருவார் போருக்கு பின் (சூர சம்ஹாரத்திற்கு பின் சூர பதுமன் மயில் வாகனாமய் வருவார்.

  ஐயப்பனுக்கு தேவந்திரன் புலி வானமாய் வருகிறார்.

  திரு. விஎஸ்கே அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல், அருமை.

  அழகாய் ஐயப்பன் வரலாறு சொல்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, மிக்க நன்றி. இந்த ஐயப்பன் வரலாற்றை நான் சிறுமியாக மதுரையில் இருந்தப்போ ராஜம்மாள் சுந்தரராஜன் அவர்களின் திருப்பாவை வகுப்பின் பக்தி கலாநிகழ்ச்சியில் நாட்டிய நாடகமாகப் போடுவார்கள். என்னோடு படித்த வைஜயந்தி என்னும் சிறுமி தான் பால ஐயப்பனாக வருவாள். மிக அழகாக இருப்பாள்.

   Delete
 5. நிறைவான செய்திகள்....
  வாவர் பற்றிய செய்திகள் அருமை...

  படிப்பாடல் மிக அழகாக இருக்கிறது....

  சாமியே சரணம் ஐயப்பா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை. படிப்பாடல் நீண்ட வருடங்களாக நண்பராக இருக்கும் டாக்டர் சங்கர் குமார் என்னும் விஎஸ்கே அவர்கள் எழுதியது!

   Delete
 6. வாவர் கதை முதல் கதை அறிவோம்...மதுரை ...அது இப்போதுதான் அறிகின்றோம். நிறைய தகவல்கள் அறிந்து கொண்டோம் குறிப்பாக படிகள் பற்றிய தத்துவங்களும் அந்தப் பாடலும்.

  துளசிதரன், கீதா

  துளசிதரன்: வாவர் தகவல்கள் அப்படியே. எரிமேலியில் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான். சமீபகாலமாகச் செல்லாததால் மாற்றங்கள் பற்றி தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன், நன்றி கீதா. தற்சமயம் சபரிமலையில் பயணத்தில் இருக்கும் நண்பர்களின் செய்திப்படி அங்கே சரணம் விளிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறதாம். அதுவும் பதினெட்டுப் படியில் ஏறும்போது சத்தமே கூடாதாம்! ஒரு சமயத்து ஐந்து அல்லது ஆறு நபர்கள் தான் செல்ல அனுமதிக்கின்றனர் என்கின்றனர். பெண் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி என்றும் சொல்கின்றனர். எல்லாம் கூடிய விரைவில் நல்லபடியாக நடக்க அந்த ஐயப்பனே அருள்வான் என்னும் நம்பிக்கையில் இருக்கோம். ஒரு சிலர் பெண் பக்தர்களும் செல்ல முடியவில்லை என்கின்றனர். என்னவோ! :(

   Delete
 7. அந்தப் பாடலை எடுத்துக் கொண்டேன். என் அத்தை பையன் ஒவ்வொரு வருடமும் சபரிமலை சென்று வருபவன். சிறிய வயதிலிருந்தே தவறாது செல்பவன் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் இறந்த போது செல்ல முடியாமல் ஆனது தவிர விட்டதில்லை. ஐயப்பன் தான் அவன் வணங்கும் தெய்வமும்....

  இந்தப் பாட்டை எடுத்துக் கொண்டுவிட்டேன் அக்கா மெட்டு போடலாம் என்று அவனிடமும் சொல்லியிருக்கிறேன். அவனும் பாடக் கூடியவன் என்பதால்..அவனும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டான் பாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பிவிட்டேன்.

  அவன் சபரி மலை பற்றி சொன்னது...வாவருக்கான தனி சன்னதி கோயிலுக்குள் கிடையாதாம். கோயிலின் வெளியே இடதுபுறம் ஷெட் போல் போட்டு இருக்குமாம்.

  எரி மேலியில் அந்த மசூதியின் உள் செல்ல முடியாதாம். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாமாம். பிராகாரத்தை மட்டுமே சுற்றி வந்து வணங்க முடியுமாம். வாள் வைத்திருப்பது தெரியும் ஆனால் உள்ளே அனுமதி இல்லை என்பதால் விவரங்கள் பார்த்ததில்லை என்று சொன்னான்.

  மலைக்குச் செல்பவர்கள் பலரும் எரிமேலியில் பேட்டைத்துள்ளல் செய்துவிட்டு அங்கிருக்கும் வாவர் மற்றும் ஐயப்பனை தரிசித்து விட்டுச் செல்வர். முதல் மூன்று ட்ரிப் அப்படிச் செய்யவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. பேட்டைத் துள்ளல் நடக்கும் போது ஐயப்ப தந்தக்க தோம், ஸ்வாமி தந்தக்க தோம் என்று பாடுவார்கள் கூட்டத்தினர். என் அத்தை பையன் அதெல்லாம்க் செய்ததில்லையாம் வணங்குதல் மட்டுமே. எரிமேலியிலிருந்து நடந்தும் செல்லலாமாம் அல்லது பம்பை வரை வண்டியில் சென்று அங்கு காரை நிறுத்திவிட்டு மலைக்கான ஆடை அணிந்து நடக்கலாம். என் கஸின் எப்போதுமே நடந்துதான் சென்று வருகிறான்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா, யாராவது பாடலை எழுதியவர் யாரெனக் கேட்டால் வட கரோலினாவில் இருக்கும் டாக்டர் சங்கர் குமார் எழுதியது எனச் சொல்லிவிடுங்கள்! மிக்க நன்றி.

   Delete
  2. பேட்டைத்துள்ளலில் "சாமி தந்தக்கத்தோம்! ஐயப்ப தந்தக்கத்தோம்!" என்று ஆடிப்பாடிக் குதிப்பதன் மூலம் நம்மிடம் உள்ள அகங்காரம், நான் என்னும் உணர்வு. பக்தி செய்தலில் ஏற்படும் கூச்சம், பிறர் பார்ப்பார்களே என்பதால் நாம் சிலவற்றைச் செய்யக் கூசுவோம். அத்தகைய உணர்வுகள் நீங்கி மனம் ஐயப்பன் பால் ஒருமைப்பட்டு அவனிடம் பூரண சரணாகதியாகி விடுவோம் என்பதற்காகவே எனச் சொல்லுவார்கள். கன்னி ஐயப்பனாகச் செல்பவர்கள் இதைச் செய்ய முதலில் மிகவும் கூசுவார்களாம்.பின்னர் பழகி விடும் என்பார்கள். பல வருடங்கள் முன்னர் வந்த ஆனந்த விகடனில் (வாசன் ஆசிரியராக இருந்தார் என நினைவு) கோபு என்பவரால் எழுதப்பட்ட "ஐயப்பனோடு ஐம்பது நாட்கள்" புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள். ஒவ்வொன்றிற்கும் அழகாக அர்த்தம் சொல்லி இருப்பார்.

   Delete
  3. >>> அவன் சபரி மலை பற்றி சொன்னது...வாவருக்கான தனி சன்னதி கோயிலுக்குள் கிடையாதாம். கோயிலின் வெளியே இடதுபுறம் ஷெட் போல் போட்டு இருக்குமாம்... <<<

   பதினெட்டாம் படிகளில் ஏறுவதற்கு முன்பாக வடக்குப் பக்கமாக அரச மரத்தை அடுத்துள்ளது - வாவருக்கான தனி நடை... ஷெட் போல விஸ்தாரமாக இருக்கும்.. நடுவில் சிறு மேடை பச்சைத் துணி விரிக்கப்பட்டிருக்கும்...

   அங்கே சுவரில் வாள்கள் மாட்டப்பட்டிருக்கும்...

   அவரது வம்சாவளிகள் அங்கே பிரார்த்தனைகள் நடத்துவர்... மிளகு அவல் மேலும் ஏனைய பொருட்களும் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படும்... வாவர் நடையில் கேட்டுக் கொண்டால் கையில் கயிறு கட்டி விடுவார்கள்.. நாம் கொடுக்கும் மிளகும் அவலும் பிரசாதமாகத் தருவார்கள்..

   நான் ஒரு முறை அரேபியர்கள் தோளில் போட்டுக் கொள்ளும் சதுர வடிவிலான துண்டினை ( Keffiyeh) காணிக்கையாகச் செலுத்தியுள்ளேன்...

   >>> எரி மேலியில் அந்த மசூதியின் உள் செல்ல முடியாதாம். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாமாம்...<<<

   எரிமேலி வாவர் பள்ளிவாசலில் - மண்டலம், மகர விளக்கு ஆகிய திருவிழாக்காலங்களில் இருமுடியுடன்பிரகாரம் போன்ற நடையில் வலம் வரும் ஐயப்ப பக்தர்களுக்கு வாவரின் வம்சாவளிகள் திருநீறு வழங்குவார்ர்கள்...

   பேட்டை துள்ளல்.. அதன்பின் பேட்டை கிராத சாஸ்தா தரிசனம் மற்றும் வாவர் பள்ளியை வலம் வருதல்.. அதன்பின் நேராக காளைகட்டி, அழுதை தான்...

   பொதுவாக எந்த மசூதியின் உள்ளும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை...

   அபுதாபியில் உள்ள பிரம்மாண்டமான Sheikh Zayed Grand Mosque ல் மட்டும் தொழுகை அல்லாத நேரங்களில் ஆண் பெண் அனைவருக்கும் அனுமதி உண்டு...

   தொழுகை வேளையில் முஸ்லீம் ஆண்களைத் தவிர்த்த மற்றவர்கள் வெளியே சென்று விட வேண்டும்..
   பெண்கள் தனியிடத்தில் தொழுகை நடத்துகிறார்கள்...

   அதிலும் மௌல்வி நின்று தொழும் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டிருக்கும்...

   >>> பேட்டைத் துள்ளல் நடக்கும் போது ஐயப்ப திந்தக்க தோம், ஸ்வாமி திந்தக்க தோம் என்று பாடுவார்கள் கூட்டத்தினர்... <<<

   பேட்டைத் துள்ளல் தான் ஆனந்தமே...

   மணிகண்டன் தனது சேனைகளுடன் வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டு
   இலை தழைகளை இடுப்பில் கட்டிக் கொண்டு பேட்டையில் துள்ளி ஆடியதாக ஐதீகம்...

   எரிமேலிக்குச் சென்று விட்டாலே போதும்.. ஆட்டமும் பாட்டும் தன்னாலே வந்து விடும்!..

   சாமியே ஐயப்பா!..

   Delete
 8. அக்கா!..

  நேற்றைய பதிவுல சில சேதி சொல்லியிருக்கேன்...

  அதப் பார்த்துட்டு எப்படி இருக்கு..ன்னு சொன்னீங்க...ன்னா
  அடுத்த வேலையப் பார்க்கப் போவேன்!...

  ஏன்னா -
  வர்ற சனிக் கெழமையில இருந்து ஐயப்ப சாமியப் பத்தி
  பதிவுங்க வர இருக்குதுங்கோவ்!...

  ReplyDelete
  Replies
  1. நேற்றே படிச்சேன் துரை! அதைக்குறித்து என்ன சொல்வது என்று தான் தெரியலை! அல்லது புரியலை! மற்றபடி நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் சரியே! இதை நீங்கள் விளக்கமாகச் சனிக்கிழமையிலிருந்து வரப் போகும் உங்கள் பதிவுகளில் விளக்கினால் நானும் புரிஞ்சுப்பேன். எப்படி இருக்குனு கேட்டால், நல்லாவே இருக்கு! விரிவாக எழுதினால் இன்னும் நல்லா இருக்கும். எதிர்பார்ப்புடன்

   Delete
 9. ஐயப்ப கோட்பாடுகளில் மிகவும்பிடித்தது எல்லோரும்சமம் என்பதே எருமேலியில்பேட்டைதுள்ளல் நான் என்னும் அகந்தை நீங்கவே என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 10. வாவர் ஸ்வாமி முஸ்லிம் என்பது இடைச் செருகல் என்றும் அதன் உண்மை வரலாறும் ஒரு முறை முகநூலில் ஒரு பதிவு படித்தேன்.

  ReplyDelete