சாயந்திரம் ஒரு 5-30 போல நாங்கள் ஸ்ரீசாரதா மடத்திற்குச் செல்லத் தயார் ஆனோம். துங்கா நதிக்கரையில் தென்கிழக்குத் திசையில் நரசிம்ம வனம் என்ற பகுதியில் ஸ்ரீமஹாஸ்வாமிகளின் மடம் அமைந்துள்ளது. தென் மேற்குப் பகுதியில் மடத்தின் தங்குமிடங்கள், சாப்பாட்டுக்கூடம், காரியாலயம், ஸ்ரீசாரதையின் கோயில், மற்றும் அதைச் சார்ந்த துணைக்கோயில்கள் இருக்கின்றன. ஸ்ரீசாரதா பீடம் என்ற வளைவு உள்ள பெரிய நுழைவு வாயில். மடத்தைச் சேர்ந்த வாகனங்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி. மிதியடிகளை இட்டுச் செல்ல மடமே ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவர்கள் பணம் கொடுக்கலாம். சாரிசாரியாக மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அதிகம் ஆந்திரா, மற்றும் கர்நாடகாவில் இருந்து. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட முதல் நான்கு மடங்களுள் ஒன்று இது. வடக்கே பத்ரிநாத்திற்கு முன்னால் "ஜ்யோதிஷ்"மடம், கிழக்கே ஜகன்னாத்தில் "கமலா" மடமும், மேற்கே துவாரகையில் "காளிகா" மடம், தெற்கே சிருங்கேரியில் "சாரதா" மடமும் ஸ்தாபிக்கப்பட்டன.யாத்திரையின் கடைசியில் காஞ்சியை அடைந்த ஸ்ரீசங்கரர் தன்னிடம் வைத்துக் கொண்ட யோகலிங்கத்தை அங்கே வைத்து "காமகோடி" பீடத்தை ஸ்தாபித்ததாகச் சொல்வார்கள். மற்ற லிங்கங்களான மோக்ஷலிங்கம், ஸ்ரீசிதம்பரத்திலும், முக்தி லிங்கம் ஸ்ரீபத்ரிநாத்திலும், வர லிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்ட க்ஷேத்திரத்திலும், போக லிங்கம் ஸ்ரீசாரதா பீடத்திலும் ஸ்தாபிக்கப்பட்டன.
பெரிய நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே போனால் வலது பக்கம் காரியாலயத்தை சேர்ந்த அறைகள், மற்றும் சாப்பாடு சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் முதலியன தாண்டி ஸ்ரீசாரதையின் கோயில் வருகிறது. இடது பக்கம் மடத்தின் தங்குமிடங்கள், அதைச் சேர்ந்த கூடங்கள் முதலியன. சாரதையின் கோயிலுக்கு எதிரே மடத்தைச் சேர்ந்த 2 குட்டி யானைகள் நின்று கொண்டு இருந்தன. ஒன்று ரொம்பக்குட்டி மற்றும் குறும்பாக இருந்தது. அதை நாம் கவனிக்கவில்லை என்றால் கூடவே வந்து துதிக்கையால் கூப்பிடுகிறது. கூப்பிட்டால் வீட்டிற்கே வந்தாலும் வரும் என்று நினைத்தேன். கட்டுபடி ஆகாது என்பதால் விட்டு விட்டேன். சாரதை கோயில் நுழைவு வாயிலில் இருந்தே தரிசனம் செய்யும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. சாரதை கல்விக்கு அதிபதி என்பதால் அங்கு வந்து அட்சராப்பியாசம் செய்து கொண்டு போகின்றனர். சதா நேரமும் அங்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத பூஜை. நாம் எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நைவேத்தியப் பிரசாதத்துடன் 40ரூபாய் சஹஸ்ரநாம அர்ச்சனைக்குப் பணம் கட்டினால் பிரசாதம் என்று செங்கல் அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள். சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்டது. 4,5 கட்டிகள் இருக்கிறது. சாப்பிட வயிறு மட்டும் ஒன்றுதான் நம்மிடம் உள்ளது. அதுவும் சொன்னபடி கேட்காது. பிரஹாரத்தில் வேத பாடசாலைப் பையன்கள் வேத கோஷம் செய்யப் பிள்ளையாருக்குப் பூஜை நடக்கிறது. சக்தி கணபதி என்று பெயர். பிள்ளையாரைப் போல ஒரு நட்பான கடவுள் யாருமே இல்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கேட்டுக் கொள்வார். மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சேரும் இடத்தில் உள்ள நேரு பிள்ளையார் எனக்கு ஒரு காலத்தில் ரொம்ப நெருங்கிய சிநேகிதர். இப்போது ரொம்ப வருடம் ஆச்சு அவரைப் பார்த்து. இருக்கிறாரோ என்னமோ தெரியாது.
சாரதை கோயிலுக்குப் பக்கத்திலேயே மற்ற ஸ்வாமிகளுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கின்றன. சற்றுத் தூரத்தில் துங்கா நதிப் படித்துறைப் பக்கத்தில் ஒரு பழமை வாய்ந்த கோயில் தென்பட்டது. கிட்டப் போய் விசாரித்தால் வித்யாரண்யர் கோயில் என்றார்கள். உள்ளே இருள் அடைந்து கிடக்கிறது. 4 அடுக்குகள் கொண்ட கோயிலின் 4 பக்கமும் முறையே சைவம், வைணவம், ஜைனம் மற்றும் புத்தம் மதங்களைச் சேர்ந்த முக்கியமான விக்ரஹங்கள் சுதை வேலைப்பாடு என்று நினைக்கிறேன், காணப்பட்டது. படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 1 அடிக்கு மேல் உயரம். மேலே ஏறிப் போனால் உள்ளே வித்யாரண்யர் சந்நிதி வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு விளக்குடன் காணப்பட்டது. வெளியே வந்து கண்ணில் பட்ட ஒருவரிடம் விவரம் கேட்ட போது மடத்தின் காரியாலயத்திற்கு எதிரே அறிவிப்பு வைத்திருக்கும் என்றார்கள்.
உடனே அங்கே போய்ப் பார்த்தோம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த ஹரிஹர புக்கர்களின் குரு இந்த வித்யாரண்யர் தான் என்றும், சாம்ராஜ்ஜியத்தைத் தன் குருவிற்கு அர்ப்பணம் செய்ததாகவும், அவருக்கு எழுப்பிய கோயில் தான் இது என்றும், தற்சமயம் தொல்பொருள்த் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எழுதி இருந்தது. கோயில் வழிபாட்டிற்கும், மற்றபடி புனர் உத்தாரணத்திற்கும் தொல் பொருள் துறை ஏற்பாடு செய்யலாமே என்று நினைக்கத் தோன்றியது. இவரும் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த குரு பரம்பரையில் தான் வருகிறார்.
//..ஒன்று ரொம்பக்குட்டி மற்றும் குறும்பாக இருந்தது. அதை நாம் கவனிக்கவில்லை என்றால் கூடவே வந்து துதிக்கையால் கூப்பிடுகிறது...//
ReplyDeleteஆகா இந்த காட்சியை கண்மூடி காண்பதற்க்கே சுகமாக உள்ளது, நேரே பார்த்தால்...
//..கூப்பிட்டால் வீட்டிற்கே வந்தாலும் வரும் என்று நினைத்தேன். கட்டுபடி ஆகாது என்பதால் விட்டு விட்டேன்...//
அந்த காலத்து வீட்ல இருக்கீங்க போல, எப்படி இப்படி ஒரு நெனப்பு.:-))
//..பிரசாதம் என்று செங்கல் அளவில் தேங்காய் பர்பி தருகிறார்கள்..//
இது கொஞ்சம் அதிகம்... நெசமாவே செங்கல் அளவிலா இருந்தது?
பதிவு நல்ல விவரிப்பு.
//மதுரை மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சேரும் இடத்தில் உள்ள நேரு பிள்ளையார் எனக்கு ஒரு காலத்தில் ரொம்ப நெருங்கிய சிநேகிதர். இப்போது ரொம்ப வருடம் ஆச்சு அவரைப் பார்த்து. இருக்கிறாரோ என்னமோ தெரியாது.//
ReplyDeleteஅங்கே... அங்கேயே தான் இருக்கிறார். என்ன உங்கள மாதிரி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் போய்ட்டதால நிறைய அரசியல் பேச்சுதான் கேட்கவேண்டியதாயிருக்கு அவருக்கு. பாவம் -)))))
நன்மனம், நிஜமாகவே செங்கல் மாதிரித் தான் இருக்கிறது. ரொம்பத் தித்திப்புத் தெரியுமா?
ReplyDeleteஎனக்கு யானை என்றால் பிடிக்கும். உள்ளூரக் கொஞ்சம் பயமும் உண்டு. என்றாலும் குட்டி யானை என்பதால் நாம் பழக்கலாமே என்ற தைரியம் தான்.
ரொம்ப நன்றி, மனசு,
ReplyDeleteஇந்த முறையாவது மதுரை போகும்போது நேரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு "ஹாய்" சொல்ல வேண்டும். ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கிறார். திட்டினாலும் கண்டுக்கவே மாட்டார். அவருக்கு ஹெல்ப் செய்யத் தான் தெரியும். பாவம், அரசியல் பேச்சுக்களால் மனம் நொந்து போயிருப்பார்.
//எனக்கு யானை என்றால் பிடிக்கும். //
ReplyDeleteஎனக்கும் :)
//..ஒன்று ரொம்பக்குட்டி மற்றும் குறும்பாக இருந்தது. அதை நாம் கவனிக்கவில்லை என்றால் கூடவே வந்து துதிக்கையால் கூப்பிடுகிறது...//
ச்சோ ச்வீட்! :)