எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 15, 2006

கோபாலகிருஷ்ணன்

நாங்கள் தரிசனம் செய்யும்போது பசு மாட்டின் மேல் சாய்ந்த கோலத்தில் ஒரு கையில் புல்லாங்குழலுடனும், மறு கையில் மாடு கட்டும் கயிறுடனும் கிருஷ்ணனை அலங்கரித்து இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அலங்கரிக்கப் படும் கண்ணனின் நிர்மால்ய தரிசனம் (தினம் காலை 5மணியில் இருந்து 5-30-க்குள்} மிகவும் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார்கள். அன்று உடனே மூகாம்பிகை கோவிலுக்குச் செல்லும் திட்டம் இருந்தமையால் நாங்கள் உடுப்பியில் தங்கவில்லை.

சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள ஜன்னல் தான் வெளியில் இருந்து பகவான் தரிசனம் கிடைக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள ஆஞ்சனேயரைத் தரிசனம் செய்து கொண்டு வந்தால் திரும்பியதும் மத்வரின் சிலை அலங்கரிக்கப் பட்டுக் காட்சி அளிக்கிறது. எதிரே ஸ்ரீமடத்தின் பூஜை அறை. அனுமதிக்கப் பட்டவர்கள் மட்டும் போகலாம். அதன் பக்கத்தில் உள்ள வாசல் வழியே போனால் வலது பக்கம் வெளியே போகும் வாசல். இடது பக்கம் நவக்ரஹ சன்னதி மற்றும் சாப்பாடு போடும் இடம் எல்லாம் உள்ளது. நாங்கள் நவக்ரஹ தரிசனம் முடித்து வெளியே வந்து அங்கே எல்லாராலும் சிபாரிசு செய்யப் பட்ட "மித்ர சமாஜம்" என்னும் ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டோம். உண்மையிலேயே காலை உணவு நன்றாக இருந்தது. பின் அங்கிருந்து கொல்லூர் நோக்கிச் சென்றோம்.

மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலை. அலுக்காத பயணம். வழியெங்கும் காபித் தோட்டங்கள் மற்றும் காபியின் ஊடு பயிராக ஆரஞ்சுச் செடிகள், அங்கங்கே பலா மரங்கள் காய்த்துத் தொங்கின. நல்ல அற்புதமான சுகமான பயணம்.மேலே போகப் போக மழையும் கூட வருகிறது. ஒரு மலையில் பெய்தால் இன்னோர் மலையில் பெய்வது இல்லை. மலையில் உயரத்தில் கூட தண்ணீர் கொண்டு போவதற்கான இணைப்புக்கள். எல்லாக் குழாயிலும் தண்ணீர் கொட்டுவதால் குழாய்களில் கூட்டமே இல்லை. வழியில் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் பேருந்துக்குக் காத்திருக்கிறதிப் பார்க்க முடிகிறது. நம் வண்டியைப் பார்த்ததும் கை காட்டிக் கூப்பிட்டவர்கள் அனேகம்.

எனக்கு எங்கே போனாலும் தண்ணீரைப் பார்த்தால் தமிழ் நாட்டின் தீராத தண்ணீர் தாகம் தான் நினைவு வரும். பத்ரிநாத் செல்லும்போதும் இப்படித்தான் எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர். மேலே தண்ணீரை ஏற்றுவதற்கு எந்த மோட்டாரின் உதவியும் இன்றி அங்கெல்லாம் தண்ணீரின் அதிவேக அழுத்தம் காரணமாக மேலே உள்ள தொட்டிகள், மற்றும் மலை மேல் உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தண்ணீர் ஏறிவிடும். நமக்கெல்லாம் வண்டியில் வரும் தண்ணீரோ அல்லது மாநகராட்சி கொடுக்கும் தண்ணீரோ நிரந்தரமாகக் கிடைத்தால் அதுவே பெரிது. இப்படியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

மலைகள் ஏறி இறங்கியதும் கோவிலுக்குச் செல்லும் வழி வந்தது.வண்டிகள் உள்ளே போக முடியாது என்பதால் கோவிலுக்குப் போகும் வழியிலேயே நசீர் எங்களை இறக்கி விட்டு விட்டுத் தான் கார்கள் நிற்குமிடத்தில் காத்திருப்பதாகச் சொன்னார். பொதுவாக இந்த மாதிரிக் கோவிலுக்குப் போகும்போது நாங்கள் அர்ச்சனையோ, பூவோ அல்லது பழம், தேங்காயோ வாங்கிப் போவது இல்லை. எங்களால் முடிந்ததைக் கோவில் உண்டியலில் போட்டு விடுவோம். சில கசப்பான சம்பவங்களால் இந்த மாதிரி முடிவு.
கோவிலில் வரிசையில் காத்திருக்க நேரிட்டாலும் 10 நிமிடங்களில் அம்பாள் தரிசனம் கிடைத்தது. மத்தியான நேரம். ஆதலால் அம்பாள் சரஸ்வதி அலங்காரம். காலை மஹாலக்ஷ்மி, மத்தியானம் சரஸ்வதி, மாலை மஹாசக்தி என்று நினக்கிறேன். மத்தியானம் சரஸ்வதி என்பது மட்டும் நிச்சயம். நமது முன்னாள் முதல்வர் திரு M.G.R. அவர்கள் கொடுத்த வாள் அம்பாளின் வலது கரத்தில் மேல் நோக்கி வைக்கப்பட்டிருந்தது. நல்ல கூட்டம். ஆனாலும் நல்ல நிர்வாகத் திறமை இருப்பதால் நன்கு நிர்வகிக்கிறார்கள். சிலர் புத்தகங்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து அம்மன் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து எடுத்துப் போகிறார்கள். இதில் மலையாளிகள் தான் அதிகம். இந்தக் கோவிலின் அம்மனின் மூலசக்தி ஆதி சங்கரரால் தனியாகப் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளது. (தாய் மூகாம்பிகை படத்தில் திருடனாக வரும் ஜெய்சங்கர் இந்த இடத்திற்குப் போனதும் தான் ஞானஸ்தனாக மாறி வருவார்.) பிரசாதம் வாங்கும் சமயம் அது பற்றிக் கேட்டதும் அதற்குத் தனிச் சீட்டு வாங்க வேண்டும் என்றும் 25ரூ/- என்றும் சொன்னார்கள். உடனே போய்ச் சீட்டு வாங்கி வந்தோம். வெளிப் பிரஹாரத்திலேயே அம்மன் சந்நதிக்குப் பின் புறம் ஒரு தனி அறை இருக்கிறது. பூட்டி வைத்திருக்கிறார்கள். சீட்டு வாங்கி வருபவர்களுக்குத் திறந்து காட்டுகிறார்கள். இது பற்றிப் பலருக்கும் தெரியவில்லை. கோவிலில் எல்லா மொழிகளிலும் இது பற்றி அறிவிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
உள்ளே ஏறிப் போய் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதையும் அவருக்கு முன்னால் ஸ்ரீசக்கரத்தையும் பார்த்தோம். ஒரு 5 நிமிஷம் அங்கே செலவிட்டோம். வெளியில் வந்தால் ஒரு கூட்டம் காத்திருந்தது. வெளியில் வந்ததும் தரிசனம் செய்யும் கூட்டம் சற்றுக் குறைவாக இருந்தபடியால் மறுபடி மறுபடி என்று ஒரு மூன்றுதரம் அம்மன் தரிசனம் செய்தோம். அங்கிருந்த ஒரு கோயில் ஊழியர் சிரித்துக் கொண்டே" ஏனும்மா இதி"என்று கன்னடத்தில் கேட்க முதல் முறையாக வந்திருப்பது பற்றிச் சொன்னோம். பிறகும் சிறிது நேரம் தரிசனம் முடித்து விட்டுப் பின் அரைமனதாக வெளியில் வந்தோம். கொல்லூரில் இருந்து "ஹொரநாடு" என்ற ஊர் போய் அங்கு உள்ளத் தங்க அன்னபூரணியைப் பார்ப்பதாக முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் ஹொரநாடு கொல்லூரில் இருந்து சிருங்கேரி செல்லும் வழியில் இல்லை. சற்றுக் கிழக்கே இருக்கிறது. கொல்லூரில் இருந்து குறைந்த பக்ஷம் 3 மணி நேரம் ஆகும் என்றார்கள். அப்போதே மதியம் 12-க்கு மேல் ஆகிவிட்டது. ஆகவே நாங்கள் சிருங்கேரி தான் பக்கத்தில் என்று டிரைவரை சிருங்கேரியில் விட்டு விட்டுத் திரும்பும்படிச் சொல்லிவிட்டுக் காரில் ஏறினோம். வண்டி மலை ஏற ஆரம்பித்தது. போகிறோம், போகிறோம், போய்க் கொண்டே இருக்கிறோம்.

2 comments:

  1. உங்களுடைய விரிவான பயண அனுபவங்களை படிக்கறப்போ, எப்படியும் ஜூலை மாசம் போயிடணும்னு தோணுது.

    ReplyDelete
  2. கட்டாயம் பயணத் திட்டம் தேவைதான். ஆனால் ஜூலை மாதம் கர்நாடகாவில் நல்ல மழை அதுவும் சிருங்கேரியில் மிக அதிக மழை பெய்யும். பார்த்துச் செய்யவும்.

    ReplyDelete