எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 24, 2006

47. அனுபவம் புதுமை

இன்றைய செய்தித் தாளில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதைப் பற்றிப் பார்க்க நேர்ந்தது. எனக்கு உடனேயே எங்கள் ரயில் பிரயாணங்கள் நினைவுக்கு வந்தது. ரயில் பிரயாணத்தில் என்ன புதுமை என்று கேட்பவர்களுக்கு அதை விவரித்துச் சொன்னால் தான் புரியும்.

முதன் முதலில் நான் சென்னை வந்து பாங்க் வேலைக்கு அனுமதித் தேர்வு எழுதி விட்டு, நேர்முகத் தேர்வும் பங்கு பெற்று விட்டு மதுரை திரும்ப வேண்டும். அப்போது எனக்கு அதிகம் வயதும் ஆகவில்லை. இருந்தாலும் சூழ்நிலையை யோசித்து என்னுடைய பெரியப்பா (அப்பாவின் அண்ணா) என்னைத் தனியாக அனுப்ப உத்தேசித்தார். பெரியப்பா திருமணம் செய்து கொள்ள வில்லை என்பதால் நான் என் அம்மாவின் தங்கையுடனே தியாகராய நகரில் தான் தங்கி இருந்தேன். சித்திக்கு மூன்று பையன்களும் பள்ளிக்குச் செல்பவர்கள். ஆதலால் துணைக்கு யாரும் வரமுடியவில்லை. காலை எழும்பூரில் இருந்து கிளம்பும் கொல்லம் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுத்துப் பெரியப்பா ஸ்டேஷனுக்கு வந்து என்னை அனுப்பி வைத்தார். இரவு நேரம் கடந்து போனாலும் அதிக பக்ஷமாக 9 மணிக்குள் போய் விடும். அப்பா வந்து கூட்டிப் போய் விடுவார். இல்லையென்றாலும் பயம் இல்லை. திருச்சி வரும் வரை ஒழுங்காக வந்த வண்டி திருச்சி டவுன் ஸ்டேஷனில் இருந்து வெகு நேரம் கிளம்பவே இல்லை. நான் இருந்தது பெண்கள் பெட்டி. ஒரு வயதான அம்மாவைத் தவிர யாருமே இல்லை. நேரம் செல்லச் செல்ல என்ன செய்வது என்று புரியவில்லை. சீக்கிரம் வீடு போகலாம் என்று ஒரு வேளைக்கு மட்டும் சாப்பாடு எடுத்து வந்தது. பக்கத்தில் உள்ள கார்டு வானில் இருந்த கார்டிடம் போய்க் கேட்டதில் முன்னால் சென்ற கூட்ஸ் வண்டி தடம் புரண்டதாகவும் அது முழுக்கச் சரியாகி வழி கிடைத்ததும் தான் வண்டி கிளம்பும் என்று சொன்னார். மேற்கொண்டு விபரம் கேட்டு விட்டு அவரே எனக்குச் சாப்பாடு வரவழைத்துக் கொடுத்தார். துணைக்கு யாரு ம் இல்லாமல் தனியாக உட்கார வேண்டாம் என்று பொதுப் பெட்டியில் போய் உட்காரவும் வைத்தார். அப்போதே இந்த ரெயில் என்னிடம் "இரு, இரு, உனக்கு வச்சுக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறது. எனக்குப் புரியவில்லை. என்ன இருந்தாலும் அப்போது நான் குழந்தை தானே!!!!!!!!!!!!! அதற்குப் பிறகு வண்டி எடுத்து மதுரை போய்ச் சேரும் போது மறுநாள் காலை 4 மணி.இப்படி ஆரம்பித்த அனுபவம் தொடர்ந்தது.

திருமணம் ஆகி முதன்முதல் தனிக்குடித்தனம் வைக்கச் சென்னை வந்த போது கிராமத்தில் இருந்து (புக்ககம்) கும்பகோணம் வந்து ரெயில் பிடிக்க வேண்டும். ஊர் முழுக்கக் கூடி எங்களை வழி அனுப்ப மூட்டை, முடிச்சுக்கள் மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டது.அரிசில் ஆற்றைக் கடந்து தென்கரைக்குப் போய் மெயின் ரோட்டில் கும்பகோணம் செல்லும் பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். மாட்டு வண்டி மட்டும் ஆற்றில் அப்போது கொஞ்சமாகத் தண்ணீர் போனதால் (அப்போதெல்லாம் காவிரிப் பிரச்னை இந்த அளவு முற்றவில்லை. ஆரம்பித்துக் கொண்டிருந்தது.) ஆற்றில் இறங்கி அக்கரை போய்விடும். ஆற்றில் வண்டியைக் கரையில் இறக்கவும் ஏற்றவும் கூடவே ஆட்கள் வருவார்கள். நாம் மட்டும் நம்மால் முடிந்த சிறிய சாமான்களை எடுத்துக் கொண்டு மூங்கில் பாலம் வழியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக வேண்டும். எதிர்க் கரையில் இருந்து யாரும் வருவதற்குள் பாலத்தைக் கடக்க வேண்டும். எதிரே இருந்து யாராவது வந்தால் யார் குறைந்த தூரம் வந்திருக்கிறார்களோ அவர்கள் பின்னால் போக வேண்டும். ஒருத்தர் முன்னால் போகலாம். மற்றவர் பின்னால். என் கணவர் எனக்கு ஊரும் மூங்கில் பாலமும் புதிது என்ற எண்ணமே இல்லாமல் போய்க் கொண்டே இருப்பார். தொட்டில் மாதிரி ஆடும் பாலத்தில் ஒரு மாதிரியாக நானும் போய்ச் சேர்ந்தேன். பின்னாட்களில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போகும் அளவு தேர்ச்சி பெற்று விட்டேனாக்கும். இப்படியாகத் தானே நாங்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் கும்பகோணம் போய்ச்சேர்ந்தோம். ரெயிலையும் பிடித்தோம். ஆனால் எங்கள் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் எங்களால் ஏற முடியவில்லை. அப்போதெல்லாம் "ஜனதா" என்றொரு வண்டி உண்டு. முழுதும் 2-ம் வகுப்பிலேயே இருக்கும். அதில் தான் பதிவு செய்யப் பட்டிருந்தது. அது பகல் நேரத்தில் மதுரையில் இருந்து கிளம்புவதால் மதுரையில் இருந்து வருபவர்கள் கூட்டம் வழிந்தது. யாரும் எங்கள் இடத்தை நாங்கள் அடைய இடம் விடவில்லை. TTR வந்து விவரம் கேட்டு எங்கள் சீட்டை வாங்கிக் கொடுத்தார். அவர் போனதும் மறுபடி ஆக்கிரமிப்பு. "நாங்கள் மதுரையில் இருந்தே வருகிறோம். நீங்கள் இப்போ ஏறிவிட்டு சீட் கேட்பதா?" என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டார்கள். எங்கள் பெட்டி படுக்கையின் மேலேயே உட்கார்ந்து பிரயாணம் செய்தோம். அதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தலை தீபாவளிக்கு மதுரை போக வேண்டும். நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்து நேரே எழும்பூர் போய் இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. ஆனால் ரெயில் தான் எங்களை ஒரு வழி பார்ப்பது என்று நினைத்து இருந்ததே. வீட்டுக்கு வந்து விட்டு மறுபடி இரண்டு பேரும் பஸ்ஸில் எழும்பூர் போனோம். ரெயிலில் போயிருக்கலாம். ஆனால் அப்போது புறநகர் வண்டிகளுக்கு என்று தனி ஸ்டேஷனோ, நடை மேடையோ கிடையாது. 11 அல்லது 12-ம் நடை மேடைகள் காலியாக இருந்தால் மட்டும் வண்டிகளை உடனே விடுவார்கள். இல்லாவிட்டால் பேசின் பிரிட்ஜ் தாண்டி எல்லாரும் "மங்கம்மா" என்று அன்புடன் அழைக்கும் இடத்தில் போட்டு விடுவார்கள். புற நகர் வண்டிகளுக்கு அந்த இடம் ஒரு சாபக்கேடு. எப்போது கிளம்பும் என்று சொல்ல முடியாது. நாங்கள் அதனால் பஸ்ஸில் போனதால் தினத்தந்தி ஆஃபீஸில் இறங்கிப் போக வேண்டும். அன்றைக்கு என்று பஸ் எல்லா ஸ்டாப்பிலும் பிடிவாதமாக நின்று நின்று போய் தினத்தந்தி ஆஃபீஸ் ஸ்டாப் நெருங்கும்போது மணி 7-15. ஓட்டமாக ஓடினோம். அப்போது தான் திருவனந்தபுரம் மெயில் நடைமேடையை விட்டுக் கிளம்புகிறது. மேல் பாலத்தில் ஏறி இறங்கி முதலாம் நடைமேடையை நாங்கள் நெருங்கவும் கடைசி கார்டு வண்டி மறையவும் சரியாக இருந்தது. தலைவிதியே என்று நொந்து கொண்டு டிக்கெட் கான்செல் செய்ய வந்தால் திருச்சிக்கு அனுப்பு என்று சொல்லி விட்டார்கள். அதற்குப்பின் வரிசையில் நின்றால் அது ஸ்டேஷன் வெளியே வரை வந்து விட்டது. தீபாவளி கோவிந்தா தான் என்று நினைத்துக் கொண்டு வருத்தமாக உட்கார்ந்திருந்தோம். அப்போது யாரோ ஒருத்தர் தன் மனைவி டிக்கெட் வாங்கியாச்சா என்று பார்க்க வந்தார். எங்களைப் பார்த்து விட்டு விவரம் கேட்டார். சொன்னதும் எங்களிடம் பணம் கூட வாங்காமல் நேரே தன் மனைவியிடம் போனார். அந்த அம்மா அப்போது டிக்கெட் கவுண்டரை நெருங்கி இருந்தார். எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் போக வேண்டும். அதன் உள்ளே ஏறினது ஒரு தனிக்கதை. அங்கே மதுரையில் எங்களைத் திருவனந்தபுரம் மெயிலில் தேடி விட்டு வராமல் போனது பற்றிக் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். நாங்கள் ஒருவழியாகப் பாண்டியனில் மூச்சு மட்டும் விட இடம் கிடைத்துப் போய்ச் சேர்ந்தோம்.
(தொடரும்.)

6 comments:

  1. கீதா, இவ்வளவு உறவா உங்களுக்கும் ரயில்வேக்கும்? தொடரும் என்று வேறு போட்டு இருகிறீர்கள்.நல்ல பதிவு.எப்படி ஒரு துளி கூட மறக்காமல் எழுத முடிந்தது?

    ReplyDelete
  2. //...இப்படியாகத் தானே நாங்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் கும்பகோணம் போய்ச்சேர்ந்தோம். ரெயிலையும் பிடித்தோம்....//

    மொதல்ல விட்ட வண்டிய சொல்லிட்டு இத சொல்லி இருந்தீங்கன்னா சஸ்பென்ஸா இருந்திருக்கும்.

    //(தொடரும்.) //
    இன்னும் இருக்கா? சரி... சரி...:-)

    ReplyDelete
  3. hmm nall kadiya irukke :):)

    ReplyDelete
  4. வல்லி,
    இன்னும் வரும் பாருங்க, முக்கியமான உறவே இனிமேல்தான் வரும்.

    ReplyDelete
  5. நன்மனம்,
    சஸ்பென்ஸ் குடுக்காமலேயே மயிர்க்கூச்செறியும் சம்பவம் வரும் பாருங்க.

    ReplyDelete
  6. Hello Rishi, it is not story, it is true fact. wait and see.

    ReplyDelete