எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 30, 2006

78. பாரதி கண்ட புதுமைப்பெண்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!"

புதுமைப் பெண்ணைப் பற்றிய பாரதியின் கற்பனை இது. ஆனால் இன்றைய பெண்ணோ என்றால்? எப்படி இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நாள் (இது டோண்டு சார் சொல்ற சமீபம் இல்லை. நிஜமாவே ஒரு 2 நாள் முன்பான சமீபம்) தற்செயலாக ஒரு மெகா சீரியல் பார்க்க நேர்ந்தது. நான் மெகா சீரியல் பார்க்க நேர்ந்த கதை அப்புறம். ஆனால் அந்த சீரியலில் ஒரு பெண் யாருக்கோ பெண் பார்க்கப் போகிறாள். அது யாருக்கு என்றால் அவள் கணவனுக்காம். அவளுக்குக் குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொல்லி விட்டதால் கணவனின் சந்தோஷத்துக்காக அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாளாம். அவளே போய்ப் பெண் பார்த்துக் கணவனையும் பார்க்கச் சொல்லுகிறாள். அந்தக் கணவனோ "நான் உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன். உனக்குக் குழந்தை பிறக்காது என்றால் பரவாயில்லை. மனசில் நீ இருக்கையில் வேறு ஒருத்தியோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியாது." என்கிறான். அவன் இந்த மாதிரிச் சொன்ன பிறகும் கூட அவளுக்குப் புரியவில்லையா? என்ன? கணவனின் சந்தோஷம் தன்னுடன் வாழ்வதுதான் என்று, அவன் சொல்லச் சொல்ல அவள் மீண்டும் மீண்டும் அவனை வற்புறுத்துகிறாள். கணவனின் உண்மையான சந்தோஷம் முதல் மனைவியுடன் தான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும் வற்புறுத்துகிறார்கள். என்ன மாதிரிப் பெண் இவள் என்று எரிச்சல் தான் வந்தது. கணவனைச் சந்தோஷப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு அவனுக்கு அவள் செய்யப்போகும் காரியத்தினால் கிடைக்கப் போகும் நன்மைதான் என்ன? ஒன்றுமே இல்லை. மூன்று பேரின் வாழ்க்கை நரகமாகப் போகிறது..

அது தான் போயிற்று என்றால் இன்னொரு சீரியல் பார்த்தால் அது வேறே ஒரு பாடம் சொல்லுகிறது. இத்தனைக்கும் அது பிரசித்தி பெற்ற "ஏவிஎம்" காரர்களின் தயாரிப்பு. அதில் ஒரு பெண் சொல்கிறாள், மற்றொரு பெண்ணிடம், அந்த மற்றொரு பெண்தான் கதாநாயகி என்று நினைக்கிறேன். "எனக்குக் கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.நானும் என் கணவரும் சோதனைக்குழாய் முறைக் குழந்தைக்கு முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் தெரிய வந்தது என் கணவருக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதும், அவள் கரு உண்டாகி இருப்பதும். அந்தப் பெண்ணையே என் கணவருக்குத் திருமணம் செய்து வைத்தேன். இப்போது அவளுக்குக் குழந்தை பிறந்து அது என்னை "அம்மா" என்று கூப்பிடுகிறது." என்று தான் தன் கணவருக்கு மறு மணம் செய்வித்ததை ஒரு சந்தோஷத்தோடு நியாயப்படுத்திப் பேசுகிறாள். ஒழுக்கம் என்பது இவர்களுக்கு என்ன விலை, எங்கே கிடைக்கும் என்ற அளவில் போய்விட்டது. இப்போது எல்லாம் குழந்தை இல்லை என்றால் யாரும் இடிந்து போய் விடுவது இல்லை. ஒன்று தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது வேறு வழிகளில் மனத்தைச் செலுத்தி அமைதி தேடுகிறார்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதை நியாயப்படுத்தி இரண்டு சீரியல்கள். அதிலும் "ஏவிஎம்" மாதிரித் தயாரிப்பாளர்கள் எடுக்கும் சீரியலில் இந்த மாதிரி வருகிறது என்றால் ஆச்சரியமாக இருந்தது. அதை அதிகம் பார்ப்பதும் பெண்கள் தான். பார்த்து ரசிப்பவர்கள் மனதில் இந்த போதனை பசுமரத்தாணியாகப் பதிந்தால்? எங்கே போகிறது நம் கலாசாரம்?.

இது தான் போச்சு என்றால் கணவனையே கொன்ற இரண்டு பெண்களை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டுமாம். ஒருத்தியின் கணவனுக்கு வயது அதிகம், இன்னொருத்தியை வற்புறுத்தி இருக்கிறார்கள் என்பது மனித நேயக்காரர்கள் பேசும் பேச்சு. கணவனைப் பிடிக்கவில்லை என்றால் வக்கீல் மனைவிக்கு விவாகரத்துக் கேட்டால் கிடைக்காதா? இரண்டு குழந்தைகள் பிறந்துப் பத்து வருஷம் வரை கணவனுக்கும் தனக்கும் உள்ள வயசு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? அப்படி ஒன்றும் படிக்காத பெண் போலவும் இல்லை. இன்னொரு பெண்ணோ நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர். அவர் நினைத்தால் திருமணத்தையே தடுத்திருக்க முடியும். போலீஸிடம் என் வீட்டில் வற்புறுத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம். அல்லது காதலனுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அவளுடைய காதல் வாழ்வுடன் எந்த வகையிலும் சம்மந்தப்படாத ஒரு அப்பாவியைக் கொன்று விட்டு இப்போது பத்திரிகைகள் எல்லாம் இதற்கு மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு பார்க்கச் சொல்லுகின்றன. அந்த அப்பாவியைக் கொல்லும்போது அவர்கள் இருவருக்கும் எந்த மனிதாபிமானம் இருந்தது? ஏன் அவர்கள் இருவரும் மனிதர்கள் இல்லையா? அந்தப் பையனின் தாய், தந்தை எப்படித் துடிப்பார்கள்? இது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?

"சாத்திரங்கள் பலபல கற்பராம்!
என்ன சாத்திரம் கற்றார்கள். கள்ளக்காதல் என்ற புதிய சாத்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

"சவுரியங்கள் பலபல செய்வராம்."
முறையில்லாக் காதலனுடன் வாழ சவுரியங்கள் பலசெய்து கொள்கிறார்கள்.

"மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்"
தங்கள் வாழ்வின் கடந்தகாலத்தை அழிக்கிறார்கள்.

"மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம்."
எந்த மூட நம்பிக்கையை அழித்தார்கள்? அதற்குப் பதில் கட்டிய கணவனை அழித்தார்கள்.

"காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம்."
கடவுளே! கடவுளே! எந்தக் கடவுளுக்கு இனிது இவர்கள் செய்தது?

"ஏத்தி ஆண்மக்கள் போற்றி வாழ்வராம்:
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!"
எந்த ஆணும் இனிமேல் கல்யாணம் என்றால் யோசிக்கும்படிச் செய்து விட்டார்கள். செய்தித்தாளைத் திறந்தால் தினமும் இந்த மாதிரி செய்திதான். எந்த இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்பது? பெண்ணின் பெருமையைக் குலைக்கிறார்களே!எல்லாரும் இப்படி இல்லை, வாஸ்தவம்தான். ஆனால் பெண்களுக்கு ஒரு சிறுமை ஏற்படுவது பெண்களால்தான். எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது. நிச்சயம் பாரதி இன்று இருந்தால் தற்கொலை பண்ணிக்கொண்டுச் செத்திருப்பார். கடவுள் காப்பாற்றட்டும் பெண்களை.

Thursday, June 29, 2006

77. நன்றி, நன்றி, நன்றி.

"காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

இப்போ இந்த நிலைமையில் தான் நான் இருக்கேன். 24-ம் தேதி சனிக்கிழமை என் பதிவுகள் காணாமல் போனதும், திரு மஞ்சூர் ராஜாவின் உதவியால் திரும்ப வந்ததும் இன்னும் மறக்க முடியாது இந்த சூழ்நிலையில், நம்ம "நாகை சிவா" மற்றும் ஒரு மறக்க முடியாத உதவி செய்திருக்கிறார். அதுதான் என் "எண்ணங்களை"த் தமிழ்ப் படுத்தியது. எங்கோ இருந்து கொண்டு என்னைப் பார்க்காமலேயே எனக்கு உதவி செய்ய இத்தனை நல்ல உள்ளங்கள் இருப்பதைப் பார்த்தால் நான் வலைப்பூ வைத்திருப்பதும், அதில் எழுதுவதும் எனக்கு எத்தனை பலன்களைத் தந்திருக்கிறது என்று பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு எழுதவோ, சொல்லவோ வார்த்தைகள் இல்லை. நன்றி என்ற ஒற்றைச் சொல்லால் இதை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.

Wednesday, June 28, 2006

76.வேலையில் சேர்ந்தேன்.

பஸ்ஸுக்குள் கடுமையான வாக்குவாதம். எல்லாம் என்னை எங்கே இறக்கி விடுவது என்றுதான். பஸ்ஸில் இருந்த எல்லாரும் ஆட்சேபித்தார்கள், நான் காலரா ஆஸ்பத்திரியில் இறங்குவதற்கு. அந்தப் பொண்ணு ஊருக்குப் புதுசு போல இருக்கு. எங்கேயோ போய் எப்படி வழி தேடும்? என்று பேசிக் கொண்டார்கள். எனக்கு பயம் அதிகரித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பெண்மணி பஸ்ஸில் ஏறினார். அவர் ஏதோ இடம் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்த சமயம் பஸ்ஸில் எல்லாரும் பேசிக் கொள்வதைப் பார்த்து விட்டு என்ன விஷயம்? என்று கேட்டார். .உடனே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள் என்னைத் தவிர. அந்தப் பெண்மணி விவரம் புரியாமல் பேசாமல் உட்கார்ந்திருந்த என்னிடமே விவரம் கேட்க நான் அரை மனதுடன் என்னைப் பற்றிச் சொன்னேன். உடனேயே அந்தப் பெண்மணி, "அட, கரண்ட் ஆஃபீஸா? நாங்க அங்கே தான் பணம் கட்டுறோம். எங்க வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னாலே சந்திலே இருந்து மெயின் ரோடுக்குப் போகலாம். அந்தச் சந்து முனையிலேதான் இருக்கு ஆஃபீஸ். மெயின் ரோடிலே போனால் பணம் கட்டுமிடமும், சந்து முனையிலே ஆஃபீஸும் இருக்கு. ஆஃபீஸரைப் பார்க்கறதுனா அப்படித்தான் போகணும்."என்றாள். எனக்கு உயிர் வந்தது. "கொஞ்சம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப் சொன்னீங்கன்னா" நான் இழுத்தேன். அதுக்குள் அந்தப் பெண்மணி, "அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.

பஸ் கண்டக்டரில் இருந்து எல்லாருக்கும் நிம்மதி. நான் அந்தப் பெண்மணியுடன் இறங்கினேன். திருவொத்தியூர் ஹை ரோடுக்கு இணையாக அதன் பின்னால் உள்ள ஒரு ரோடில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு 10 நிமிஷ நடை. உடனே ஆஃபீஸ் வந்து விட்டது. அந்தப் பெண்மணி சொன்ன மாதிரி சந்து முனையில் ஆஃபீஸ் நுழையும் இடம். மெயின் ரோடில் பணம் கட்டும் கவுண்ட்டர் முதலியன இருந்தன. என்னை விட்டு விட்டு அந்தப் பெண்மணி போய் விட்டார். ஆஃபீஸில் நுழைந்ததும் உடனேயே முதலில் ஆஃபீஸர் அறை வந்ததால் நேரே அங்கே போய் என் கடிதத்தைக் காட்டியதும் அவர் பார்த்து விட்டு,"அப்போவே மெயின் ஆஃபீஸில் இருந்து நீங்கள் வரப் போகும் செய்தி வந்தது. ஏன் இத்தனை நாழி? திரும்ப அம்பத்தூர் போயிட்டு வரீங்களா?" என்றார். "இடம் தெரியவில்லை. அலைந்தேன்." என்று சொன்னதும், உடனே அவர்,"மெயின் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தால் உடனே அங்கேயே பஸ் நிற்குமே?" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "பக்கத்தில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டாப் தான் இருக்கிறது." என்றேன். "அங்கே இருந்துதான். திருவொத்தியூர் போகும் பஸ்ஸில் அங்கே ஏறினால் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறங்கினால் நேரே ஆஃபீஸ்." என்றார். என் அசட்டுத்தனத்தை நினைத்து நொந்து போனேன். அங்கே நான் பார்க்கும் சமயம் பஸ் எதுவும் இல்லை. அதனாலும் அங்கே இருந்து பஸ் கிளம்பும் என்பது தெரியாத காரணத்தாலும் அங்கே கேட்கவே எனக்குத் தோன்றவில்லை. சரி, என்று என் கணவருக்கு போன் செய்யப் போனேன். அதற்குள் joining report டைப் செய்து வரவே அதில் கையெழுத்துப் போட்டேன். "கீதா சாம்பசிவம்" என்று. மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். 5 மணிக்கு ஆஃபீஸ் முடிகிறது. இவருக்கு ஆஃபீஸ் 3-30க்கே முடிந்து விடும். ஆகையால் எங்கே போன் செய்வது என்றும் புரியவில்லை. அதற்குள் மேலே என்னுடைய இடத்திற்கு அழைத்துப் போனார்கள். நான் மாடி ஏறும்போது வெளியில் இருந்து வந்தது யார் என்கிறீர்கள்? என் கணவர்தான். எப்படி வந்தார்? எனக்கும் ஆச்சரியம்தான்.

Tuesday, June 27, 2006

75. அடங்க மறுத்த மனசாட்சி.

இன்னிக்கு இன்னும் இணைய இணைப்புக் கிடைக்கவில்லை. முதலில் வந்தது 2 நிமிஷம் கூட ஆகலை, உடனே போயிடுச்சு. எப்போ வரும் தெரியாது. அதற்குள் எழுதி வேணா வச்சுக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். "நேத்திக்கு," னு எழுத ஆரம்பிச்சதும் "நிறுத்து" னு ஒரு கூக்குரல். "யாரு" பயத்துடன் பார்த்தேன். "நான் தான் உன்னோட மனசாட்சி." என்றது. "இது என்ன புதுசா? நான் தமிழ் சினிமாவெல்லாம் ரொம்பப் பாக்கறதில்லை." என்றேன். "அலட்டாதே! என்ன எழுதப்போறே?" என்று கேள்வி வந்தது. "இது என்ன கேள்வி? நேத்திக்கு சாயந்திரம் நடந்ததை எழுதப் போறேன்." இது நான். "அப்படியா? அப்போ பாதிலே விட்டிருக்கே அது?" மனசாட்சியின் கேள்வி. "இது என்ன கேள்வி? அப்புறம் எழுதுவேன்." நான். "ஓஹோ~ ரொம்பப் பெரிய எழுத்தாளினு நினைப்போ? பெரிய சஸ்பென்ஸ் கொடுக்கிறியாக்கும்?" கேள்வி வந்தது. "அதெல்லாம் இல்லை. இது கொஞ்சம் வித்தியாசமான காமெடியாயிருக்குமேனு தான்......." நான் இழுத்தேன். "ஆஹா, தெரியுமே, உன் காமெடி எல்லாம். ஒருத்தர் ஒண்ணு சொல்லக்கூடாதே உடனே தலை கழுத்திலே நிக்காதே!' அதட்டல் வந்தது. "என்ன சொல்றே நீ? என் தலை எங்கே போகும்? என் கழுத்திலே தான்...." நான் முடிக்கவில்லை. "என்கிட்டேயே ஜோக் அடிக்கிறியா?" என்று கோபமாகக் கேள்வி வரவே, "இப்பொ என்ன செய்யறது?" என்றேன் ஈனஸ்வரத்தில். நான் செய்வது அறியாமல் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த என் கணவர், "என்ன, மறுபடி ஏதாவது தப்புப் பண்ணிட்டியா?" என்று கேட்டார். "இல்லை, மூளையே குழம்பிக் கிடக்கு. எதை எழுதறதுனு தெரியலை. யோசிக்கிறேன்." என்றேன். "அட, அது வேறேயா?" என்றார். "எது வேறேயா?" நான் கேட்டேன். "அதான், உனக்கு மூளை குழம்பி இருக்குன்னியே! ஆச்சரியமா இல்லை! உனக்கு மூளை இருக்குங்கறது?" என்று கேட்டார். நான் பல்லைக் கடித்த கடியில் கடைவாய்ப் பற்கள் கீழே விழுந்து விட்டது. எழுத்தாளியாக இருப்பது என்றால் இம்மாதிரி விமரிசனங்களையும் ஏற்கும் பக்குவம் வர வேண்டும் என்று (வேறே வழி?) என்னை நானே தேற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
*********************
அப்பாடி, ஒரு வழியாகக் கனெக்ஷன் வந்து விட்டது. இனிமேல் வெளியிடத் தடை எதுவும் இல்லை.
**********************
பஸ் போய்க் கொண்டு இருந்தது. ஒரு வழியாக செகண்ட் லைன் பீச் வந்து விட்டது. ராயபுரம் பழைய ஸ்டேஷன் என்பதால் பீச் ஸ்டேஷனில் இருந்து அங்கே போய் விட்டால் அப்புறம் நடக்கும் தூரம் என்றார்கள். பார்க்கலாம், என்பது என் நினைப்பு. பீச் ஸ்டேஷனில் போய் விசாரித்தால் தான் ராயபுரம் ஸ்டேஷன் போக வேண்டும் என்றால் செண்ட்ரல் தான் போக வேண்டும் என்றும், அதுவும் அங்கே அப்படி ஒண்ணும் லோக்கல் வண்டி எல்லாம் நிற்காது என்றும் புரிந்தது. காலையில் கிளம்பும்போது சாப்பிட்டது. ப;சி வேறு, துக்கம் வேறு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. ஸ்டேஷனில் வேலை செய்த ஒருத்தரிடம் போய் என்னுடைய வேலையில் சேரும் கடிதத்தைக் காட்டிக் கேட்டபோது அதை அவர் கையில் வாங்காமலே "இ.பி.ஆஃபீஸ்தானே, இதோ இப்படிப் போய்த் திரும்பினால் அந்த பாங்க்கிற்கு அடுத்த கட்டிடம், கீழே காஷ் கவுண்டர். மேலே ஆஃபீஸ். " என்றார். அப்பாடி, இவ்வளவு கிட்டத்தில் இருக்கிறதே என்று சந்தோஷத்துடன் அந்த ஆஃபீஸுக்குள் நுழைந்தேன். அங்கே போய் மேலதிகார் யார் என விசாரித்து விட்டு என் கடிதத்தைக் காட்டினால் அவர், "இது DCA/Royapuram, இல்லைம்மா, DCA/Chennai, நீ போக வேண்டிய ஆஃபீஸ் தண்டையார் பேட்டையில் இருக்கிறது. நீ தினமும் எப்படி அம்பத்தூரில் இருந்து வருவே? பேசாம இந்த ஆஃபீஸ் கேட்டிருக்கக் கூடாதோ?' என்றார். "எனக்குத் தெரியவில்லை. தண்டையார் பேட்டைக்கு எப்படிப் போவது?" என்று கேட்டேன். "நாளைக்குப் போயேன். இப்போவே மணி 2 ஆகிறது." என்றார். "இல்லை, வழி சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்." "சரி, 6.-ம் நம்பர் பஸ்ஸில் போ." என்றார். "இறங்க வேண்டிய ஸ்டாப்?" "போலீஸ் ஸ்டேஷன்." " சரி, சார். தாங்ஸ்." மறுபடி பஸ் ஸ்டாண்டு. இன்னிக்கு எப்படியும் போயே ஆகணும்னு ஒரே வெறி வந்தது. 6.-ம் நம்பர் பஸ் வந்தது. நானும் ஏறினேன். கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டேன். "போலீஸ் ஸ்டேஷன்" ரொம்பப் பெருமையாக இடம் தெரிந்த் நிம்மதியில் சொன்னேன். கண்டக்டர் "இப்படி மொட்டையாச் சொன்ன எப்படி? எந்தப் போலீஸ் ஸ்டேஷன்? இந்த ரூட்டில் மூன்று வருகிறது." என்றார். "கடவுளே, இது என்ன சோதனை?" என்று நினைத்துக் கொண்டு இ.பி.ஆஃபீஸ், இருக்கிறதே அங்கே" என்றேன். "அடப் பாவமே, அதுக்கு இந்த 6-ம் நம்பரில் ஏன் ஏறினே? 6-C இல்லே போகும்? இது ராயபுரம் வழியாப் போய்க் காலரா ஆஸ்பத்திரி ரோடு போகும். அதுக்கு முன்னாலேயே திருவொத்தியூர் ஹை ரோடிலே இருக்கு நீ சொல்ற ஆஃபீஸ். காலரா ஆஸ்பத்திரியிலே இருந்து ரொம்ப தூரம் திரும்ப நடக்கணும்." என்றார். "ராயபுரம் தான் போட்டிருக்கு." நான். "ஆஃபீஸ் பேரு அதும்மா. ஆனால் இருக்கிற இடம் திருவொத்தியூர் ஹை ரோடு. நான் எத்தனை நாளா இந்த ரூட்டிலே இருக்கேன். தெரியுமா? நீ எங்கே இறங்கி எப்படி போவே? இது என்னடா தொந்திரவு?" என்று கண்டக்டர் வாய் விட்டுப் புலம்பவே என் மனம் கலங்கியது.
**********************
"என்ன, லிங்க் வந்ததா? எழுதியாச்சா?" என் கணவர் கேட்க, நான் லிங்க் சரியாக வராத எரிச்சலில் இருந்தேனா? "என்னவோ எழுதினேன், மண்ணாங்கட்டி." என்றேன். "பரவாயில்லை, அதைக்கூட எழுதலாமா?" அவர். "ஏன், என்ன விஷயம்?"அப்பாவியாக நான். "இல்லை, உன் மண்டைக்குள் இருக்கிறதை வெளியில் கொட்டி இருக்கியே, அதான் கேட்டேன்." என்று சொல்ல மறுபடி நான் பல்லைக் கடிக்கப் பல் விழுந்தது நினைவுக்கு வர வாயை மூடிக் கொண்டேன்.

Monday, June 26, 2006

74. நான் வேலைக்குப் போனேன்.

நான் மின்வாரியத்தில் வேலைக்குப் போனது பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அது கல்யாணத்துக்கு முன்னேயே பரிக்ஷை எழுதி நேர்முகத்தேர்வும் முடிந்து தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேரும் தேதிக்காகக் காத்திருந்த நேரம் திடீரென்று 15 நாளில் கல்யாணம் ஆகி அதன் பின் ஒரு மாதத்தில் எல்லாம் சென்னை வந்து, அம்பத்தூரில் குடித்தனமும் தொடங்கியாச்சு. அதற்கு அப்புறம்தான் பரமக்குடிக்குப் போய் வேலையில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. மதுரைன்னாலும் பரவாயில்லை. பரமக்குடினா என்ன செய்யறது? பாட்டியோட பிறந்த ஊர். ஆனால் யாரும் தெரிஞ்சவங்க கிடையது. அப்பா அந்த உத்தரவை அப்படியே எங்களுக்குத் திருப்பி இருந்தார். அதை எடுத்துப் போய் மின்வாரியச் சேர்மனைப் போய்ப்பார்த்து விவரம் சொல்லிச் சென்னைக்கு மாற்றல் கேட்டு அதுவும் வந்து விட்டது. ஆனால் எங்கே போய்ச் சேருவது என்று எந்த விவரமும் அதில் குறிப்பிடவில்லை. மவுண்ட் ரோடு ஆஃபீஸில் இருந்து வந்திருந்தது. மேலும் அங்கே தான் போய்ச் சேர்மனைப் பார்த்து பேட்டி கொடுக்கவும் போனோம். ஆகையால் அங்கேயே போய்க் கேள் என்று சொல்லி விட்டு என் கணவர் அவர் ஆஃபீஸ் கிளம்பினார். அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருந்தோம். அன்றுதான் அவர் மறுபடி வேலையில் விடுமுறை முடிந்து சேருவதால் மறுபடி விடுமுறை போட முடியாது. ஆதலால் "நீ தான் உன் சித்தி வீட்டில் இருந்திருக்கிறாயே! சென்னை ஒன்றும் புதிது இல்லை. போய்ப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு போன் செய்." என்று கூறினார். நானும் பெரிசாகத் தலை ஆட்டி விட்டேன். என் கடைசி நாத்தனார் வேறே அப்போ எங்களுடன் இருப்பதற்கு வந்திருந்தாள். அவளுக்கு முன்னால் எனக்குத் தெரியாது என்று எப்படிக்கூறுவது? பேசாமல் இரண்டு பேரும் கிளம்பினோம். அம்பத்தூரில் ரெயில்வே ஸ்டேஷனில் சென்னை ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, "ஜாக்கிரதை! போனதும் போன் பண்ணு." என்றார். அவர் ஆவடிப்ப்பக்கம் போக நான் எதிர்திசை வண்டிக்குக் காத்து நின்றேன்.
***********
சித்தி வீட்டில் இருந்தேனே ஒழிய எங்காவது போக வேண்டும் என்றால் முப்பாத்தம்மன் கோவில், அல்லது தி.நகர் போஸ்ட் ஆஃபீஸ். இதோடு சரி. என் தம்பிகளை பள்ளியில் இருந்து அழைத்துவர எப்போவாவது சித்தி அனுப்புவார். அதுவும் ராமகிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த சாரதா வித்யாலயா. அப்போது இருபாலாரும் படிக்கும் பள்ளியாக இருந்தது. அது கூடச் சில சமயம் சித்தியும் வருவார். திருவல்லிக்கேணியில் என் பெரியப்பா இருந்தார். அவர் திருமணம் ஆகாதவர் என்பதாலும், அவர் தங்கி இருந்தது மான்ஷன் என்று அழைக்கப்படும் அறை மாதிரி என்பதாலும் அவருடன் தங்காமல் சித்தியிடம் தங்கினேன். பெரியப்ப இருந்த வீட்டில் 10 பேர் அது மாதிரி தங்கி இருந்தார்கள். அங்கே போவது என்றால் முன்கூட்டியே பெரியப்பா சொல்வார்,. இந்தத் தேதிக்கு வா என்று. அப்போது போவேன். நேரே 13-ல் ஏறினால், "ரத்னா கஃபே' எதிரே உள்ள ஸ்டாப்பில் இறங்கினால், ரத்னா கஃபே பக்கத்துதெரு சாமிப்பிள்ளை தெருவில் பெரியப்பா இருந்தார். இப்போ ரத்னா கஃபே இருக்கா தெரியாது. அங்கே போனால் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு "ஹாய்" சொல்லிவிட்டுப் பார்த்தசாரதியிடம் செளக்கியம் விசாரித்துவிட்டு, பாரதி இருந்த தெரு வழி வந்தால் பெரியப்பா சாப்பிடும் மாமி மெஸ். சில சமயம் அங்கே, சில சமயம் ரத்னா கஃபே, சிலசமயம் ராயர் மெஸ் என்று ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுப்பார். அவர் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்.திருவல்லிக்கேணியில் இருந்து திரும்ப கோஷா ஆஸ்பத்திரி வாசலில் ஏற்றி விட்டால் தி.நகர். சிலசமயம் பெரியப்பாவும் கூட வருவார். இந்த மாதிரி போய்விட்டு நான் என்ன சென்னையைப் புரிந்து கொள்வது? உண்மையில் ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.
**********
செண்ட்ரலில் இறங்கி வெளியே வந்து, மவுண்ட் ரோடுக்கு எந்த பஸ் போகும் என்றால் எல்லாரும் விசித்திரமாய்ப் பார்த்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன, எதுவும் போகாதா?" என்று அப்பாவியாய்க் கேட்டேன். உடனே ஒருத்தர் வந்து "என்னம்மா, ஊருக்குப் புதுசா?" என்றார். கதைகளில் படித்த ஏமாற்று வேலைகள் நினைவுக்கு வரவே நான் பதிலே பேசவில்லை. எல்லா பஸ்ஸும் மவுண்ட் ரோடு வழியாத்தான் போகும்னு அப்புறம் தான் தெரிஞ்சது. கையில் ஒரு முறை அட்ரஸைப் பார்த்துக் கொண்டேன். வரும் வண்டியில் ஏறலாம் எனத் தீர்மானித்து ஏதோ ஒரு வண்டியில் ஏறினேன். கடவுளே, அது பாதியில் திரும்புமாம், வேறு வழியில் போய் விடும். மின்வாரியம் வரை போகாதாம். மவுண்ட் ரோடு போஸ்ட் ஆஃபீஸில் இறக்கி விட்டார்கள். அங்கே இருந்து மறுபடி பஸ் பிடித்து இம்முறை கண்டக்டரிடம் முன் கூட்டிச் சொல்லி வைத்து விட்டதால் ஸ்டாப் வந்ததும் இறங்கினேன். உள்ளே போனால் ஒரே சமுத்திரம். ஆட்கள் வருவதும், போவதுமாக இருக்கிறது. யாரை என்ன கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. திகைப்புடன் ஒரு ஊழியரிடம் போய் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவர் யாரிடமோ சொல்ல அவர் வேறு யாரையோ கூப்பிட ஒரு வழியாக நான் போக வேண்டிய செக்க்ஷனுக்குள் போனேன். அங்கே உள்ள அதிகாரியிடம் என் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம் "முதல் நாள் தனியாவே வந்திருக்கியே? சென்னை பழக்கமா? உன் ஊர் மதுரைனு போட்டிருக்கே?" என்று கேட்க நான் அவரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "நீ அம்பத்தூரில் இருந்து வரியா? அப்போ DCA/Chennai office அல்லது DCA/Royapuram இரண்டில் ஒன்று சரியாக இருக்கும். எது உனக்குச் சரியாக இருக்கும்?" என்றார். எனக்கு இரண்டுமே எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆகவே சும்மா இருந்தேன். அதற்குள் அவரே "DCA/Royapuram messenger இப்போ தான் வந்தார். அங்கே ஆள் இல்லாமல் ரொம்பக் கஷ்டமா இருக்காம். நீ அவர் கூடவே போயிடு." என்றார். நானும் "சரி" என்றேன். உடனே ஒரு லெட்டெர் டைப் செய்து கொடுத்தார். "அந்த மெசெஞ்சர் வெளியிலே இருப்பார் பாரு", என்றார். அதற்குள் ஒருத்தர் "அவர் அப்போவே போயிட்டார் சார்". என்றார். "சரி, நீ எப்படிப் போவே?" என்றார் என்னிடம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.பைத்தியக்காரத் தனமாக ஆஃபீஸ் இருக்குமிடம் கேட்கவில்லை. மறுபடி உள்ளே போனேன். கேட்டதற்கு ராயபுரம் ஸ்டேஷனில் இருந்து நடக்க முடிந்தால் நடக்கலாம் என்றார்கள். அவர்கள் நினைத்தது அம்பத்தூரில் இருந்து தினமும் போக நான் கேட்பதாக. ஒருத்தர் பேசின் பிரிட்ஜ் சிபாரிசு செய்தார். இன்னொருத்தர் செண்ட்ரல் தான் நல்லது என்றார். ஆகவே ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லவே குழம்பிப்போய் வெளியில் வந்த நான் பீச் செல்லும் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். கண்டக்டரிடம் ராயபுரத்துக்கு டிக்கெட் கேட்க அவர் "இது போகாது." என்று சொன்னார். "எங்கே போகிறது?" நான்.
"செகண்ட் லைன் பீச்." கண்டக்டர்.
"சரி, அங்கேயே கொடுங்கள்." நான்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. மணி ஏற்கெனவே மத்தியானம் 12க்கு மேல் ஆகி விட்டது.

Sunday, June 25, 2006

73. காக்காய் கொண்டு போச்சு

விதி வலிதுனு பதிவு போட்டு ஒரு நாள் ஆகலை. அது உண்மைனு நிரூபணம் ஆகி விட்டது. எப்படினு கேக்கறீங்களா? நேத்திக்குப் பதிவு ஒண்ணும் போட வேண்டாம்,தமிழ் மணம் பதிவுகள் சில படித்து விட்டு முத்தமிழுக்கு ஏதாவது எழுதலாம் என்று முடிவு செய்து தமிழ்மணம் பார்க்கும்போது காசியின் மட்டுறுத்தல் அறிவிப்பைப் பார்த்தேன். எப்போதும் பார்த்து விட்டுக் காசியின் பதிவிலே போய்ப் பின்னூட்டம் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அது மாதிரி செய்யலாம் என்று நினைத்துப் போனேன். அப்போது ஒரு விபரீத ஆசை வந்தது. இன்னும் கருவிப் பட்டைநிறுவவில்லையே, இப்போது முயன்றால் என்ன? என்பது தான் அது. ஏற்கெனவே ஒரு முறை முயன்றேன். வரவில்லை. அத்தோடு விட்டு விட்டேன். நேற்று என்னுடைய ஆசை அதிகமாகவே அந்தப் பக்கத்துக்குப் போனேன். அப்போ தான் என்னோட எல்லாப் பதிவையும் காக்கா கொண்டு போச்சு.
கருவிப்பட்டை பதிக்கும் முறை சொல்லி இருக்கும் பக்கத்திற்குப் போய் அதில் சொல்லி
இருந்தபடி,
என்னுடைய templateஐத் திறந்து
வைத்துக் கொண்டு கருவிப்பட்டை
பதிக்கும் முறை பற்றிச் சொன்னபடியெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன். எல்லாம் முடித்து விட்டுக் கடைசியில் மறு வெளியீடுக்கு குறிப்பிட்டதையும் செய்து விட்டுப் பார்த்தால் ஒரே அதிர்ச்சி. ஒன்றுமே வரவில்லை. வெறும் வெற்றுப் பக்கங்கள் மட்டும் தான். என் மனம் என்னிடம், "நான் தான் சொன்னேனே, நீ கேக்கலை" என்று கிண்டல் செய்ய,நான் "இல்லை, இல்லை, இப்போது வரும் "என்றேன். மறுபடி republish allஐச் சொடுக்கினேன். இம்முறை வந்தது வெறும் தலைப்புக்கள் மட்டும். சரி தலைப்பில் தேடினால் கிடைக்கும் என்று ஒன்று ஒன்றாகப் பொறுமையாகச் சொடுக்கினால் வந்தது வெறும் வெற்றுப் பக்கங்கள் தான். ஹி,ஹி,ஹி, சிரிப்பு ஒலி. என் மனம் தான்.
"நான் தான் சொன்னேனே,உனக்கு வராதுனு." கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது. "தேடு" பகுதியில் போய்த் தேடினால் எல்லாம் இருக்கிறது. சரி என்று recover all blogs போட்டுப் பார்த்தால் எல்லாம் வந்தது. அதைப் publish கொடுத்து விட்டுப் பார்த்தால் மறுபடி தலைப்புக்கள் மட்டும் திரும்ப வந்திருக்கின்றன்.செய்வது அறியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தேன். அப்போது என் கணவர் வந்தார். என் முகத்தையும், கிட்டத் தட்ட நான் அழும் நிலையில் இருப்பதையும் பார்த்துப் பயந்து போய் விட்டார். "என்ன ஆச்சு?"
நான்: என் பதிவுகளைக் காணவில்லை.
அவர்:காணவில்லையா? என்ன புதிசாச் சொல்லறே?
நான் நடந்ததை விவரித்தேன். "உன் கையும், காலும் சும்மாவே இருக்காதே. பரவாயில்லை, மறுபடி எழுது."
நான்: என்ன, 72 பதிவுமா? அதிலும் சில பின்னூட்டங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அவர்:அப்படி என்ன வந்தது?
நான்;உங்களுக்கு என்ன தெரியும்? என் தமிழ் எழுத்தைப் பாராட்டி எழுதறாங்க. மேலும் ஒருத்தர் "தேவன்" எழுதற மாதிரி இருக்குனு வேறே சொல்லி இருக்காரு.
அவர்:வஞ்சப் புகழ்ச்சியாயிருக்கும். பாவம்.
நான்:யார் பாவம்? நானா?
அவர்:நீ இல்லை. "தேவன்" தான். இப்போ இருந்து இருந்தால் உன்னோடு சேர்த்துச் சொன்னதிலே நொந்து போய் எழுதறதையே விட்டிருப்பார்.
நான்:உங்களுக்குப் பொறாமை. அதான்.நான் இப்போ என்ன செய்யறது சொல்லுங்க. அதை விட்டுட்டு.
அவர்: உன் friends யாரையும் கூப்பிட்டுக் கேளேன்.
நான்:இன்னிக்குச் சனிக்கிழமை. ஜாஸ்தி யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் நம்மளை மாதிரி வீட்டிலே இருந்து பதிவு போடறதில்லையே. சில பேர் சனிக்கிழமைனா இருக்கவே மாட்டாங்க."
அப்படியும் மனதில் ஒரு யோசனை தோன்றவே உதவி கேட்டு ஒரு பதிவு எழுதினேன். அது போச்சா, போகலையானும் தெரியலை. ஒரே வேதனை தாங்கலை. சரி, இதையே முத்தமிழ்க்குழுமத்திலே சொல்லி உதவி கேட்போம்னு ஜி-மெயிலுக்குப் போனேன். அங்கே நல்லவேளையாக உதவிகேட்டு எழுதினதை அழிக்காமல் வைத்திருந்ததால் அப்படியே போட்டு விட்டு உட்கார்ந்தேன். சற்று நேரத்துக்கு எல்லாம் மஞ்சூர் ராஜா என் அழைப்பைப் பார்த்துவிட்டு அவரும் யாராவது உதவ முடியுமா? எனக்கேட்டு எழுதினார். அப்புறம் டெலஸ்கோப்பிலே பார்த்த மாதிரி என் நிராதரவான நிலையைப் புரிந்து கொண்டு உடனேயே சாட்டிங் வந்தார். (நான் பொதுவாக நானாக யாரையும் சாட்டிங் கூப்பிடுவது கிடையாது. முக்கியமான காரணம் எல்லாரும் வேலைக்குப் போகிறவர்கள் என்பதுதான். அவரவர் வேலையில் இருக்கும்போது நான் வீட்டில் இருந்து கொண்டு சாட்டிங் கூப்பிடுவது முறை ஆகாது என்றுதான். யாராவது முத்தமிழில் கூப்பிட்டால் சாட்டிங் செய்வதுடன் சரி.) ஆகவே தான் இப்போதும் யாராவது மெயில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தேன். திரு மஞ்சூர் ராஜாவைச் சாட்டிங்கில் பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.உடனே அவரிடம் நான் செய்த எல்லாவற்றையும் சொல்லவே அவர் வந்து என் ப்ளாகில் பார்த்து விட்டு மிகவும் அருமையான முறையில் templateஐயும் மாற்றி விட்டு எல்லா பதிவையும் திரும்பக் கண்டு பிடித்துக் கொண்டுவந்தார். நடுவில் என்னைக் கூப்பிட்டுப் பதிவுகள் எல்லாம் இருக்கின்றன. கவலை வேண்டாம், என்றும் வேலை முடித்து விட்டு மறுபடி கூப்பிடுவதாகவும் சொன்னார். அதே மாதிரி வேலை எல்லாம் முடித்து விட்டுக் கூப்பிட்டுச் சொன்னார். எனக்கு உயிர் வந்தது.மீண்டும் சிரிப்பும் வந்தது.

"எந்நன்றி கொன்றார்க்கும், உய்வுண்டாம், உய்வில்லை, செய்
நன்றி கொன்ற மகற்கு."

இன்று நான் இந்த மாதிரி ஒரு பதிவு போட திரு மஞ்சூர் ராஜா தான் காரணம். "நன்றி" என்று வெறும் வாய்வார்த்தையால் சொன்னால் உடனே மறந்து போவேன். அதனால் சொல்லப் போவது இல்லை.

Saturday, June 24, 2006

HELP HELP HELP

முத்தமிழ் அன்பர்களுக்கு, தமிழ் மணம் நண்பர்களுக்கு,
அவசர உதவி தேவை. இன்று தமிழ்மணம் கருவிப்பட்டை நிறுவும் சமயம் என்னுடைய 72 வலைப்பதிவும் திரும்ப வரவில்லை. Republish all blogs சொடுக்கியும் வரவில்லை. என்ன செய்தால் வரும்? வெறும் தலைப்புக்கள் மட்டும் வருகிறது. எடிட் செய்து திரும்ப வெளியிட்டாலும் வரவில்லை. உதவி, ரொம்ப அவசரம். நன்றி. அதில் உதவி கேட்டு பதிவு போட்டாலும் வரவில்லை.

Friday, June 23, 2006

71. விதியின் வலிமை

நேற்று முன் தினம் தற்செயலாக வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் படித்துக் கொண்டு இருந்தேன். சில சந்தேகங்கள் தெளிவதற்கு. அப்போது விதியின் வலிமை பற்றிச் சுமந்திரர் லக்ஷ்மணனிடம் கூறியது பற்றிப் படித்தேன். அதில் இருந்து தெரிந்தது, விதி என்பது வலிது என்றும், அதில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும்.

அந்தச் சம்பவம் ராமாயணத்தில் நடைபெறும் சமயம், ஸ்ரீராமர் நிறை கர்ப்பிணியான சீதையைக் காட்டில் விட்டு வரும்படி லக்ஷ்மணனிடம் சொல்ல அவனும் விட்டு விட்டுத் திரும்புகிறான். அப்போது அவன் தன் அண்ணனின் நிலை பற்றிப் புலம்ப சுமந்திரர் அவனுக்கு எடுத்து உரைக்கிறார்.

"லக்ஷ்மணா, வருந்தாதே, கேள்!
தன் பிள்ளைகளான ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்களின் பிற்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிட வல்லுனர்களிடம் தசரதர் கேட்டார். அவர்கள் ஸ்ரீராமர் தன் மனைவி, சகோதரர்களைப் பிரிந்து வாழ்வார் என்றும், தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்வார் என்றும், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளால் ரகுவம்சம் தழைக்கும் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் வருத்தமடைந்த தசரதன், வசிஷ்டரைப் பார்க்க ஆசிரமத்திற்குப் போன போது அங்கே தற்செயலாக வந்திருந்த துர்வாச முனிவர், தசரதரின் பிள்ளைகளான ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்கனர் ஆகியோர் பற்றி மன்னனிடம் கூறியது என்ன என்றால்:

"தசரத மன்னனே! எதுவும் நம் கையில் இல்லை. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது விதி! அதை யாராலும் மாற்ற முடியாது. இது மஹாவிஷ்ணு பெற்ற சாபத்தின் பலன்" என்றார். "அது என்ன" என்று தசரதர் கேட்டார்.துர்வாசர் கூறினார்:"மன்னா, கேள்1 முன்னொரு காலத்தில் அசுரர்கள் தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாமல் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தார்கள். பிருகு முனிவரின் மனைவி கருணை மிகுந்தவள். அவளால் அசுரர்கள் பாதுகாக்கப் பட அசுரர்கள் அங்கே பயமில்லாமல் வாழத் தொடங்கினார்கள். அசுரர்களின் இந்தச் செயல் பற்றிக் கோபம் உற்ற தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிடவே அவர் தகுதி இல்லாத அசுரர்களைக் காத்து ரக்ஷித்த பிருகு முனிவரின் மனைவியைத் தன் சக்கராயுதத்தால் அறுத்துத் தள்ளினார். மஹாவிஷ்னுவின் இந்தச் செயலால் மனைவியை இழந்த முனிவர் மஹாவிஷ்ணுவைப் பார்த்துக் "கோபத்தினால் மதி இழந்த நீங்கள் எந்த நியாயமும் இல்லாமல் என் மனைவியைக் கொன்றீர்கள். பாவங்களை எல்லாம் விலக்கும் வல்லமை படைத்த நீங்களே இப்படிச் செய்யலாமா? உங்களை நான் சபிக்கிறேன். நீங்கள் பூவுலகில் மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து நெடுங்காலம் மனவேதனையுடன் வாழவேண்டும்."என்று சபித்தார். பிறகு தன் சாபத்தாலும், மன வேதனையில் தானும் கோபமுற்றதாலும் முனிவருக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. அவர் வேதனையைக் கண்ட மஹாவிஷ்ணு அவரைத் தேற்றி பூவுலக நன்மைக்காகத் தான் அவருடைய சாபத்தை ஏற்பதாகக் கூறினார்." அதன்படி ஸ்ரீராமர் அவதாரம் எடுத்து அயோத்தி மாமன்னனாக ஆட்சி புரிந்து, மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே மனைவியைத் துறந்து பின் தன் கையாலேயே தன் அருமைத்தம்பியான லக்ஷ்மணனையும் துறந்து மனவேதனை உற்றுப் பின் அவதாரப் பூர்த்தி செய்வார்." இது தான் தசரத மஹாராஜாவிடம் துர்வாசர் வசிஷ்டர் ஆசிரமத்தில் கூறியது. ஆனால் இது தேவ ரஹஸ்யம் என்பதால் ஒருவருக்கும் கூறக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். நான் அந்தச் சமயம் அங்கே இருந்தேன். இத்தனை நாள் இது பற்றிப் பேசாமல் இருந்ததுக்குக் காரணம் இது இப்படித்தான் இருக்கும் என்று உனக்குத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகையால் வருந்திப் பயன் இல்லை. மனதைத் தேற்றிக் கொள். கடவுளே ஆனாலும் பாவம் செய்பவன் தண்டிக்கப்படுவான். அவன் விதி அது. மனிதகுலம் இதைப் புரிந்து கொள்வதற்குத் தான் ராமாவதாரம் ஏற்பட்டது" என்றார்.

Thursday, June 22, 2006

70. மறுபடி சித்தப்பா

நேத்திக்கு ஒரே நாள் மூன்று பதிவு போட்டதாலே இன்னிக்கு ஒண்ணும் எழுத வேண்டாம்னு இருந்தேன். தற்செயலாக மனுவின் "நாச்சியார்" பதிவிற்குப் போனபோது சித்தப்பா என்ற பெயர் கண்ணில் பட்டது. அவங்க சித்தப்பாவைப் பத்தி எழுதி இருக்காங்க. உடனே என்னோட சித்தப்பாவைப் பத்தி எழுதணும்னு ஆசை வந்தது. இவர் எங்க அப்பாவோட தம்பி இல்லை. அம்மாவோட தங்கை கணவர். நான் முதல் முதல் அவரைப் பார்த்தபோது சின்னப்பெண்ணாக இருந்தேன். இப்போவே சின்னப் பெண்தானே? அப்போ இன்னும் சின்னப் பெண். எங்க வீட்டிலே வச்சுத்தான் சித்தியைப் பெண் பார்த்தார். அன்னிக்கு மதுரை மீனாக்ஷி கோவில் கும்பாபிஷேஹம். ரொம்ப வருஷம் கழிச்சு நடந்தது. எங்க வீடு கோவிலுக்குப் பக்கத்தில் என்பதால் நிறைய உறவினர்களும், வெளி ஊர் ஆட்களுமாக இருந்தார்கள். சித்தப்பா வந்தது முதலில் தெரியாது. அவர் அத்தை வீடு எதிர்ப்பக்கம் இருந்த காரணத்தால் அவரும் அவருடைய அம்மாவும் அங்கே தங்கி இருக்கிறார்கள். ஆனால் அங்கே எங்க வீடு மொட்டை மாடி மாதிரி உயரமான மாடி கிடையாது. எங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் தங்க கோபுரத்தில் இருந்து நன்றாகத் தெரியும். ஆகவே கிட்டே இருந்து கும்பாபிஷேஹம் பார்ப்பதற்காக எங்க வீட்டுக்கு வந்தார். சித்திக்கு ஏற்கெனவே அப்பா மூலம் வரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இவர் அங்கே வரவும் என் அப்பா பேசி முடிக்க அன்று சாயங்காலமே சித்தியைத் தாத்தா வீட்டில் இருந்து அழைத்து வந்து பெண் பார்த்துப் பிடித்து நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது அவர் அவ்வளவு பிரபலம் அடைய வில்லை. ஜெமினியில் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு வெளி நாடு சென்று வந்த பின் முழு நேர எழுத்தாளராக மாறினார். அவர் முதலில் என்னைப் பார்த்த போது நான் நிறையப் புத்தகம் படிப்பேன் என்றதும் இந்த அளவு படித்திருப்பேன் என்று நினைக்கவில்லை. அதற்குப்பின் நான் அவர் வீட்டில் தங்கி இருந்த காலங்களில் அவருடைய புத்தக சேமிப்பு முழுதும் திரும்பத் திரும்பப் படித்தேன். முதலில் சித்தப்பா எழுதி நான் படித்த கதை தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாளின்" ஆங்கில மொழி பெயர்ப்பு. அதற்குப் பின் அவருடைய கதைகளின் கையெழுத்துப் பிரதிகளைப் படிப்பேன். சித்தி வீட்டில் இருக்கும் அந்தக் காலங்களில் நான் பார்க்க விரும்பிய எழுத்தாளர்களில் ஒருவரான திரு நா.பார்த்தசாரதியை அடிக்கடி பார்ப்பேன். நா. பார்த்தசாரதிக்கு மதுரை என்பதில் எனக்கு அப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும். அவருடைய "தீபம்" இதழ்கள் ஒன்று விடாமல் படிப்பேன். வாசகர் வட்டம் கோபால், பாரதியாரின் இரண்டாவது பெண்ணான சகுந்தலா பாரதி என்று நிறையப் பேரைப் பார்த்து அவர்கள் பேசுவது எல்லாம் ஒரு ஓரமாக உட்கார்ந்து கேட்பேன். அதிலும் சகுந்தலா பாரதியைப் பார்த்தால் ஏனோ மனது ரொம்ப வேதனைப் படும். "கணையாழி" புத்தகத்தின் பொறுப்பாசிரியராக அவர் இருந்த போது "கணையாழி" புத்தகங்களைச் சந்தாதாரர்களுக்கும் மற்றும் சில எழுத்தாளர்களுக்கும் விலாசம் எழுதித் தபாலில் போடுவேன். இது எல்லாம் செய்யும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

அதிலும் திரு "தி.சா.ராஜூ" விற்கு அனுப்பும்போது இனம் புரியாத சந்தோஷம் வரும். அவர் கதைகள் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலே "கால்காவிற்குச் செல்லும் கடைசி ரெயில்" என்ற கதை விகடனில் வந்தது என்று நினைக்கிறேன். அதுவும் "திருமல்கிரி போஸ்ட் ஆஃபீஸ்" (தினமணி கதிரில் சாவி ஆசிரியராக இருக்கும்போது வந்தது) என்ற கதையும் இன்றளவும் எனக்கு மறக்க முடியவில்லை. அவர் ராணுவத்தில் இருந்த காரணத்தால் கதைக்களம் அதைச் சுற்றியே அமைந்திருக்கும்.பின்னால் நானும் இந்த மாதிரி ராணுவம் சம்மந்தப்பட்டவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாலோ என்னவோ அதை எல்லாம் படிக்க ரொம்ப ஆவலாக இருக்கும். ஒரு கதையில் காஷ்மீரத்துக்குப் போகும் ஒரு ராணுவ மேஜர் சமீபத்தில் மனைவியை இழந்தவர், அங்கு ஒரு காஷ்மீரப் பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணின் மேல் இனம் புரியாத அன்பு தோன்றுகிறது. விவரம் தெரியாத குழந்தையான அவர் பையனும் அந்தப் பெண்ணிடம் அன்பு செலுத்துகிறான். அந்தப் பெண் தினமும் காஷ்மீர மொழியில் தாலாட்டுப்பாடித் தூங்கச் செய்வதாக வரும் அந்த ராகம் அவர் மனைவி ஜோதிக்குப் பிடித்தமான நாதநாமக்கிரியா வாக வரும் கதையும் அந்த இடத்தில் முடியும். என் ஜோதிக்குப் பிடித்தமான ராகம். நாதநாமக்கிரியா என்று கதை முடியும். அதற்கு திரு கோபுலு அவர்களால் வரைந்த படங்களும், அந்தக் கதையும் இன்னும் மனதில் நிற்கிறது. "திருமல்கிரி போஸ்ட் ஆஃபீஸ்: கதையில் கணவன் இன்னும் உயிருடன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையுடன் தினமும் அவன் தபாலை எதிர்பார்த்துப் போஸ்ட் ஆஃபீஸுக்கே வரும் பெண்ணைப் பற்றி. விஷயம் தெரிந்த அவள் தந்தையின் முகபாவமும், அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்புகள் நிறைந்த முக பாவமும் திரு கோபுலு அவர்களால் நன்றாகச் சித்திரிக்கப் பட்டிருக்கும்.

இந்தப் படங்களைப் பற்றிப் பேசும்போது எங்க வீட்டிலேயே ஒரு சித்திரக்காரர் இருக்கிறார். என்னுடைய பெரியப்பா மாப்பிள்ளை. எனக்கு அக்கா வீட்டுக்காரர். அவர் பெயர் சந்திரசேகரன். சேகர் என்ற பெயரில் படங்கள் வரைவார். ரொம்பத் திறமைசாலி. அவருடைய அப்பா திரு வி.வி.சர்மா அவர்களால் வரையப்பட்ட மதுரை மீனாக்ஷி அம்மன் படமும், ராஜராஜேஸ்வரி படமும் இல்லாத வீடே மதுரையில் இருக்காது ஒரு காலத்தில். என்னுடைய அத்திம்பேர் படம் வரைந்தால் நம்மை அப்படியே தலைகீழாகப் பார்த்து வரைவார். கோயம்புத்தூரில் இருக்கிறார். தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். "தீக்கதிர்" பத்திரிகை வேலைக்காகத் தன்னுடைய மத்திய அரசுப் பணியை (பொட்டானிக்கல் சர்வே) விட்டார். திடீரென்று என்ன ஆச்சு தெரியவில்லை யாருடன் எப்படிப் போனார் என்றும் புரியவில்லை திருமீயச்சூரில் போய் லலிதாம்பிகையைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு கம்யுனிஸ்டாவது, ஒன்றாவது. இப்போ என்னடாவென்றால், திருவாரூர் மாவட்டக்கோயில்கள், தஞ்சை மாவட்டக் கோயில்கள், திருச்சி மாவட்டக் கோயில்கள் என்று ஊர் ஊராகப் போய் வந்துவிட்டு "மயன்" என்ற பெயரில் குமுதம் "பக்தி"யில் எழுதுகிறார். ஏற்கெனவே கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்த சமயம் பிரயாணம் நிறையச் செய்வார் என்று நாங்கள் எல்லாம் "உலகம் சுற்றும் வாலிபர்" என்று கேலி செய்வோம். இப்போது நிஜமாகவே உலகம் சுற்றுகிறார். அது சரி, சித்தப்பாவில் இருந்து எங்கேயோ வந்து விட்டேனே, சித்தப்பா யார்?

சித்தப்பாவின் கதை இந்த மாதிரி வெகுஜனப் பத்திரிகைகளில் ஜாஸ்தி வரவில்லை. சில கதைகள் விகடனிலும், கல்கியிலும், எப்போவோ சிறுகதை மலர் போட்டப்போ குமுதத்திலும் வந்துள்ளது. ஆனால் கல்கி, அமுதசுரபி தீபாவளி மலரில் தவறாமல் வரும். சமீபத்தில் நிறையப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவரும் அவர் வாழ்க்கையை ஒட்டிய சம்பவங்களைத்தான் கதையாக எழுதுகிறார். அதிலே ஒன்றுக்குத் தான் "சாகித்ய அகாடமி" பரிசு கிடைத்தது. அதில் ஒரு பிரதி எனக்குக் கூடக் கொடுத்திருக்கிறார். என் பெண்ணிற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் எனக்குத் தமிழும் கொடுத்தார். சில விஷயங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்தவையாகவே இருக்கும். மெலிதான நகைச்சுவை உணர்வோடு எழுதுவார். சித்தப்பா யார்?

ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறேன் என்று நினைப்பவர்களுக்கு, நான் எழுதி வைத்துக் கொள்வது இல்லை. அந்த சமயம் மனதில் தோன்றுவதை அப்படியே தட்டச்சு செய்கிறேன். எண்ண ஓட்டத்தைத் தடுக்கத் தெரியவில்லை.மன்னிக்கவும்.

Wednesday, June 21, 2006

69.. கடவுள் என்னும் முதலாளி

இந்தக் கடவுள் என்பவரைப் பற்றிப் பலவிதமாகக் கருத்துக்கள் நிலவுகிறது. இருக்கிறார் என்று சில பேர், அப்படி யாரும் கிடையாது என்று சில பேர். என்னைப் பொறுத்த வரை இருக்கிறார். இதை நான் ஒவ்வொரு நிமிஷமும் உணர்ந்தேன், உணருகிறேன், இது ஒரு உணர்வுதான்.

ஆனால் வழிபாடுகளில் கடவுளுக்கு உருவம் வைத்திருக்கிறோம். கடவுளுக்கு உருவம் இல்லை என்பதும் ஒரு கோட்பாடுதான். கடவுள் பல உருவங்களில் இருக்கிறார் என்பதும் ஒரு கோட்பாடுதான். இதில் எது நம் மனதுக்குப் பிடித்திருக்கிறதோ அதைத் தான் நாம் ஏற்றுக் கொள்கிறோம். கடவுள் கல்யாணம் செய்து கொள்கிறாரே, குழந்தை பெற்றுக் கொள்கிறாரே, ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறாரே, இது எல்லாம் நமக்குப் பிடித்தமானது. நாம்தான் கடவுள் மேல் ஏற்றுகிறோம். இது போல அவரவர் மனதுக்குப் பிடித்தமான உருவங்களிலும் கடவுளை நினைக்கிறோம். இது சகுண வழிபாடு என்பது. சாதாரண மனிதனுக்கு இது தான் ஏற்றது.

கடவுளுக்கு உருவம் இல்லை. மனம்தான் அறிய முடியும். புலன்களால் உணர முடியாது. இதயத்தால் மட்டுமே உணரமுடிந்த, புலன்களுக்குப் புலப்படாத உருவமில்லாத தன்மையான நிர்க்குணம் அடைய நாம் எல்லாரும் ஞானிகளாக இருக்க வேண்டும். எல்லாரும் ஞானிகளாகி விட்டால் சிருஷ்டி தத்துவம் என்ன ஆவது? ஆதலால் தான் நாம் முதலில் சகுணத்தின் மூலம் கடவுளைப்புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். பண்பட்டவர்களுக்கு, நாள் செல்லச் செல்ல அவர்களுக்குள்ளேயே கடவுளை உணர முடியும். இதுதான் உள்ளொளி எனப்படும். இது நிர்க்குண வழிபாடு. இது கிடைக்கத் தான் எல்லாரும் முயற்சி செய்கிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒரு சின்னக்கதை. நான் படித்ததில் பிடித்தது:

ஒரு கிராமத்தில் ஒருத்தன் கடவுளை நினைக்காமலோ, ஆராதிக்காமலோ எதுவும் செய்ய மாட்டான். ரொம்பவும் பக்திமான். அந்தக்கிராமத்தில் மழை நாட்கள் வந்த போது நதி உடைப்பு எடுத்து ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது எல்லாரும் கிராமத்தை விட்டுக் காலி செய்யும்படி அரசு உத்தரவு போட்டது. எல்லாரும் காலி செய்து கொண்டு இருந்தார்கள். நம் பக்திமான் கடவுள் நினைப்பிலேயே இருந்து வந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் வரவில்லையா என்று கேட்டதற்கு என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என்று பதில் சொன்னார். கொஞ்ச நேரம் ஆனது வெள்ளம் அதிகமாகச் சூழ்ந்தது. பக்திமான் முதல் மாடியில் ஏறி நின்று கொண்டார். அப்போது ஒரு படகு வந்தது. படகுக் காரர்கள் ஊரில் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு வந்தவர்கள் இவரைப் பார்த்து விட்டுச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்கள். இவர் திரும்பவும் "நான் வரவில்லை, கடவுள் வருவார், என்னைப் பாதுகாக்க" என்று சொல்லி விட்டார். படகுக்காரர்கள் கெஞ்சினார்கள். அவர் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. முதல் மாடியும் தண்ணீரால் சூழ்ந்தது. மேலே மொட்டை மாடிக்குப் போனார். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு எல்லாம் நம்ம பக்தர் இருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு அங்கே வந்து வட்டமிட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ஏணி இறக்கப்பட்டது. ஒரு ஆளும் கூடவே இறங்கினான். " என்ன செய்கிறீர்கள், தனியாக, ஊரில் யாருமே இல்லை, சீக்கிரம் இந்த ஏணியில் ஏறுங்கள்" என்றான். நம்ம பக்தர் மறுத்து விட்டார். "என்னைக் கடவுள் காப்பாற்றுவார் அப்பனே, நீ போய் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்றார். அவன் எவ்வளவு கெஞ்சியும் அவர் மறுத்து விட்டார். பின் அவனும் போய் விட்டான். ஊரை வெள்ளமும் சூழ்ந்தது. நம்ம பக்தர் வெள்ளத்தோட அடித்துச் செல்லப் பட்டார். அப்போ அவன் நினைச்சான். " நாம் இவ்வளவு வேண்டியும் கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லையே" என்று நினத்தான். அப்போது கடவுள் அவன் முன் கடவுள் தோன்றி "அப்பனே, நான் மூன்று முறை வந்தேன், உன்னைக் காப்பாற்ற, நீதான் இடம் கொடுக்கவில்லை" என்றார். "ம்ஹும், நீங்கள் எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டான். கடவுள் சொன்னார். "அப்பனே, முதலில் நான் பக்கத்து வீட்டுக் காரனாக வந்தேன். பின் படகுக்காரனாக வந்தேன். பின் ஹெலிகாப்டரில் வந்தேன். மூன்று முறையும் என் உதவியை நீதான் மறுத்தாய்" என்றார். (சுகி.சிவம் சொன்ன கதை என்று நினைக்கிறேன்.)

நாம் ரொம்பக் கஷ்டத்தில் இருக்கும்போது, அது மனக்கஷ்டமோ, பணக்கஷ்டமோ, உடல் கஷ்டமோ எங்கிருந்தோ வந்து நீளும் உதவிக்கரம் கடவுளுடையது தான் என்பதை நாம் புரிந்து கொண்டால் போதும்.

68. யோகா என்னும் அற்புதம்.

யாரும் பயப்பட வேணாம். இங்கே நான் யோகா வகுப்பு ஒண்ணும் எடுக்கப் போறதில்லை. யோகாவினாலே எனக்கு ஏற்பட்ட நன்மை பத்தி மட்டும் தான் சொல்லப் போறேன். இன்னிக்குப் பேப்பரிலே ஒரு இரண்டு, மூன்று இடத்தில் யோகா பற்றிப் படித்தேன். இப்போவெல்லாம் நிறையப் பேசப்படுகிறது. எனக்குச் சின்ன வயசிலேயெல்லாம் யோகா பத்தி அவ்வளவு விவரமாத் தெரியாது. என் சிநேகிதி ஒருத்தியோட அப்பா தினமும் ஆசனம் பண்ணுவார். பார்த்திருக்கேன். அப்போவெல்லாம் இது ஆண்களுக்கு மட்டும் உள்ளதுனு நினைச்சிருக்கேன். பின்னாலே வட இந்தியாவுக்கு வந்து வாழ நேர்ந்ததிலே இது எல்லாரும் பண்ணலாம்னு புரிஞ்சுது. ஆனால் எனக்குச் சேரச் சந்தர்ப்பம் வாய்க்கலை. குடும்பப் பொறுப்பு, மேலும் என் கணவருக்கு இதில் அவ்வளவு பிடித்தம் இன்மை என்று புரிந்ததால் இது எல்லாம் நடக்காது என்று இருந்தேன்.

ஒரு 4,5 வருஷங்களுக்கு முன்னால் எனக்குக் காலில் ரத்தக்குழாய் அடைத்துக் கொண்டு ரத்த ஓட்டம் இல்லாமல் கால் வீங்கிக் கொண்டது. வீக்கம் என்றால் பார்த்தால் பயமா இருக்கும். ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. டாக்டரிடம் காட்டியதில் எல்லா சோதனைகளும் பண்ணிப் பார்த்து விட்டு 6 மாத காலம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளச் சொன்னார். சிகிச்சை தொடர்ந்தது. ஆனால் என்னால் வெளியில் எங்கும் போக முடியவில்லை. வீட்டுக்கு மின்சார பில் கட்டுவதில் இருந்து எல்லாவற்றுக்கும் நான் ஒருத்தியே போய்க் கொண்டிருந்தேன். இப்போது பாத்ரூம் போகக்கூட ஒருத்தர் கூட வந்து பிடித்துக் கொண்டால்தான். அந்த நிலமையிலும் பிடிவாதமாக நடந்தேன். நடையே வீட்டுக்குள்தான். அதுவும் இல்லாட்டி என்ன செய்வோம் என்ற பயம்தான். அவருக்கு ஆஃபீஸ் போகும்போது என்னைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கவலையாக இருக்கும். பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது மாற்றி மாற்றி இருப்பார்கள். அப்போதான் ஒரு நாள் இவரோட ஆஃபீஸ்ல ஒருத்தர் இவரோடக் கூட வண்டியில் வருவார். அவருக்கு ஏதோ நரம்புக் கோளாறு ஒரு விபத்தில் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்தவர், ஆஃபீஸுக்கு ரொம்ப சிரமப்பட்டு வருவாராம். அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பிக்கவே என் கணவர் அவ்ரிடம் விவரம் கேட்டதில் அவர் யோகாவைப் பற்றிக் கூறி இருக்கிறார். உடனேயே என்னிடம் வந்து அதைப் பற்றிக் கூற நானும் யோகாவில் சேருகிறேன் என்று கேட்டேன். அப்போது கொஞ்சம் நடக்க ஆரம்பித்து இருந்தாலும் துணை வேண்டும் என்ற நிலை. கொஞ்ச நாள் ஆட்டோவில் போகிறேன் என்று கூறி விட்டுப் போக ஆரம்பித்தேன். முதலில் என்னைப் பார்த்த என் யோக குரு திரு ராஜூ அவர்கள் எல்லாப் பழக்க வழக்கங்கள், என்னோட கோப தாபங்கள், உணவுப் பழக்கம் முதலியவற்றைக் கேட்டு அறிந்தார். பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தார். கீழேயே உட்கார முடியாமல் இருந்தவளைக் கீழே உட்கார வைத்தார். பத்மாசனத்தில் உட்கார முடிந்தது. கீழே படுக்க முடியாது. கீழே படுத்து சவாசனம் பண்ண வைத்தார். நடக்க முடியாமல் இருந்தவளைத் தினமும் வகுப்பிற்கு வரும்போதும், போகும்போதும் நடந்து போய்விட்டு வரும்படிச் செய்தார். "என்னால் இனி நடக்கவே முடியாது. பக்கத்தில் இருக்கும் அண்ணா வீட்டுக்குக் கூட வண்டியில் போக வேண்டி உள்ளதே" என்று ரொம்ப நொந்து போய் இருந்தேன். யோகா செய்ய ஆரம்பித்த 6 மாதத்தில் என்னால் 1கி.மீ வரை நடக்க முடிந்தது. இப்போது தினமும் 4, 5 கி.மீ வரை நடக்கிறேன். யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை என்று புரிந்தது. ஆண்டவன் படைத்த இயந்திரமான இந்த உடல் இயங்கத் தேவையான சக்தியை கொடுக்கும் சூக்ஷ்மம் நிறைந்தது. உணவு, ஒழுக்கத்துடன் யோக முறைகளும் சேர்ந்து கொண்டால் பிணியைப் போக்கலாம். இதுதான் யோக சிகிச்சை எனப்படும். இதிலே ஒரு சில யோகாசனங்கள் தினமும் செய்து வந்தாலே போதும். உடலும் மனமும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இதிலே உள்ள சூர்ய நமஸ்காரம் என்னும் வழிமுறை நாஸ்திகர்கள் கூடச் செய்யலாம். எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.

பிராணாயாமம் யோகாசனத்தின் ஒரு பகுதி தான். இந்த மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்வதின் மூலம் மன அமைதி கிட்டும். எப்படித் தாமிரக் கம்பியில் மின்சாரம் இருப்பது நம்மால் காண முடியாவிட்டாலும் உண்மையோ, அது போல நம் உடலில் பரவி உள்ள பிராணனும் நம்மால் தொட்டு உணரவோ கண்களால்காணவோ முடியாதது.இந்தப் பிராணனை ஆட்சி செய்ய முடிந்தால் உண்மையான யோகி ஆகலாம் என்கிறார்கள். நானும் பிராணாயாமம் செய்கிறேன். ஆனால் பிராணனை ஆட்சி செய்யும் நாள் இன்னும் வரவில்லை.எங்காத்துக் காரரும் கச்சேரிக்குப் போகிறார் மாதிரிதான். முயற்சி செய்தால் கிடைக்குமா பார்க்கலாம்.

67. கரடியும் நானும்

என்ன பார்க்கிறீங்க? கரடி எங்கேருந்து வந்ததுனா? நம்ம "மர்ம தேசம்" நாகா மாதிரி எனக்கும் காடுகள்னா பிடிக்கும். அதுக்காக இது காட்டில் இருக்கும் கரடினு நினைக்கிறவங்களுக்கு,அதுக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை.
ஒரு இரண்டு நாள் முந்தி நாங்க இரண்டு பேரும் நடைப் பயிற்சிக்காகப் போய்க்கிட்டு இருந்தோம். அப்படியே வீட்டுக்குத் தேவையான காயும் வாங்கி வந்துடலாம்னு. என் கணவருக்குக் கணினியில் உட்கார அவ்வளவாப் பிடிக்காது. அவர் உட்கார்ந்தால் அது வருமானவரி "சரள்" பத்தித் தெரிஞ்சுக்கவோ அல்லது நாங்க எங்கேயாவது ஊர் சுற்றக் கிளம்பினால் அந்த ஊர் பத்தித் தெரிஞ்சுக்கவோ தான் இருக்கும். சில சமயம் அது கூட என்னையே பார்க்கச் சொல்லுவார். நான் தினமும் வலைப்பூவில் நடந்தது பத்தி அவர்கிட்டே நாங்கள் சாயங்காலம் நடக்கும்போது சொல்லிக்கிட்டே வருவேன்.

அன்னிக்கும் அப்படியே சொல்லிட்டு இருந்தபோது சட்டுனு எனக்கு ஒரு சந்தேகம். நான் சொல்றதை அவர் கவனிக்கிறாரா இல்லையானு. உடனே கேட்டேன்"நான் இப்போ எதைப் பத்திச் சொல்றேன், சொல்லுங்க" என்றேன். உடனே அவர், "ம்ம்ம்ம்ம்ம்" இரு வரேன், அந்தக் கத்தரிக்காய் பார்த்தால் நல்லா இருக்கு. வாங்கட்டுமா?"
"வாங்குங்களேன். என்னைக் கேட்டால்" இது நான். அவர் கத்தரிக்காய் பொறுக்க என் கதை தொடர்ந்தது. மறுபடியும் சந்தேகம் இவர் என்னைக் கவனிக்கிறாரா இல்லையா? மறுபடி கேட்டேன். "என்னதான் செய்யறீங்களோ, நான் முக்கியமான விஷயம் சொல்றேன் ". அவர் "இரு, வரேன், இந்த வெண்டைக்காய் பிஞ்சா, முத்தலா சொல்லு". ங்கறார்.

நான் பல்லைக் கடித்தேன். "நான் ஒருத்தி இங்கே கரடி மாதிரிக் கத்திக்கிட்டு வரேன். நீங்க என்னன்னா கத்தரிக்காய், வெண்டைக்காய்ங்கறீங்களே"
உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. "பார்த்தியா, தப்பு உன்பேர்லதான். நீ தமிழ்ல பேசினால் எனக்குப் புரிஞ்சிருக்கும். கரடி பாஷை எனக்குப் புரியாதே". சுற்றிலும் கடைக்காரர்கள் சிரிக்க நான் நற நற நற நற நற நற வென பல்லைக் கடித்தேன்.

Tuesday, June 20, 2006

66. ஆறு மனமே ஆறு.

இந்தப் பதிவு நாகை சிவாவிற்குச் சமர்ப்பணம். அவருடைய ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு வகையில் என்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றபடி அவருடைய பதிவிற்கு நான் கொடுத்த லின்க் எல்லாம் வருதோ வரலையோ ப்ளாக்கருக்குத் தான் வெளிச்சம். வராவிட்டால் என்னோட பொறுப்பு இல்லை என்று தெளிவாகச் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே 4 பதிவு போட்டு விட்டேன். மறுபடி ஆறு பதிவு போடச் சொல்லி இருக்கிறார். அவருக்காக இந்தப் பதிவு.

எனக்குப் பிடித்த ஆறு நபர்கள்: யாரைக் குறிப்பிடுவது? புரியவில்லை.
1. லால் பஹாதூர் சாஸ்திரி
2. காமராஜர்
3. பி.ராமமூர்த்தி(கம்யூனிஸ்ட்)
4. மொரார்ஜி தேசாய்
5. நேதாஜி
6. விவேகானந்தர்.

தற்போது இருப்பவர்கள் என்றால்:

1.ஸ்வாமி தயானந்த சரஸ்வதி
2.வாஜ்பாய்
3.நல்ல கண்ணு
4.என்னுடைய யோகா குரு திரு ராஜூ அவர்கள்
5.-----
6.-----

யாரும் தெரியவில்லை. ப்ளாக்கர் வேறு could not connect to blogger.com. posting and publishing may fail னு வருது. என்னத்தை எழுதிக் கிழிக்கப் போறேன் தெரியலை.

பிடித்த சாப்பாடு என்று எதுவும் இல்லை. இப்போது் எல்லாம் inter- continental ஆகி விட்டதில் சாப்பாடே அவ்வளவு பிடித்தம் இல்லாமல் போய் விட்டது.ரொம்பப் பிடித்தது என்றால் ரசம் சாதமும் அப்பளமும். த்யிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் தான்.

செய்த தவறுகள்: தவறைத் தவிர வேறு என்ன செய்திருக்கேனு தெரியலை.
1.முதல் தவறு:கையில் கிடைத்த பாங்க் வேலையை வேண்டாம்னு சொன்னது.
2.கிடைத்த மின் வாரிய வேலையை விட்டது.
3.திருப்ப மின்வாரியத்தில் கூப்பிட்டப்போ போகாதது.
4.சிகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்தது. வாழ்நாளிலேயே பெரிய தவறு இதுதான்.
5.என் பெண்ணுக்குக் குஜராத்திலேயே காலேஜில் சேர்க்காமல் சென்னை அனுப்பினது. இது அடுத்த பெரிய தவறு.
6.எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லாருக்கும் செய்தது, அதனால் பட்ட மறக்க முடியாத நினைவுகள்.
இப்போ என்னுடைய பழைய வாழ்க்கையைத் திரும்ப நீ வாழணும்னு யாராவது திருப்பிக் கொடுத்தால் இந்தத் தவறுகளில் சிலதையாவது என்னால் திருத்த முடியும்னு நம்பறேன். ஆனால் கிடைக்குமா? A million dollar question?

இழந்தது: நிறைய. பட்டியல் போட முடியாது. ஆனால் அதற்காக வருத்தம் எதுவும் இல்லை.

பார்த்த இடங்களில் பிடிச்சது: நிறைய மேற்குப் பக்கமே பார்த்திருக்கிறோம். அதிலே எல்லாமே பிடிக்கும்.
1.கோவா

2.உடுப்பி, சிருங்கேரி

3.ஊட்டி, எத்தனை முறை போனாலும் அலுக்காது.

4.பத்ரிநாத்தில் இருந்து சில கி.மீ. தூரம் உள்ள "மானா" என்ற கிராமம். அங்கே தான் வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் தன் துதிக்கையை உடைத்து மஹாபாரதம் எழுதிய இடம் இருக்கிறது. விநாயகரே அழகு. அதிலும் இவர் மஹாபாரதம் எழுதும்போது கேட்கவே வேண்டாம். அங்கிருந்து சற்றுத் தூரத்தில் வியாசர் குகை உள்ளது. அதில் இருந்து கொஞ்ச தூரத்தில் சரஸ்வதி நதி ஆரம்பிக்கிறது. அந்த நதியைக் கடக்கத் திரவுபதிக்காக பீமன் கட்டிய பாலம் இருக்கிறது. அந்தப் பாலம் வரை தண்ணீர்ச் சாரல் தெறிக்கும். வியாசர் குகைக்குள் நதிப் பிரவாஹம் இருக்கும் இடத்தில்தான் ஸ்வாமி ஹரிதாஸ் அவர்கள் ஜலசமாதி அடைந்தார் என்று சிலரும், ஹரித்வாரில் என்று சிலரும் கூறுகிறார்கள்.

5.மத்ராவில் கிருஷ்ண ஜன்ம பூமி, பிருந்தாவனமும், கோகுலமும். எல்லாம் பழமை மாறாமல் இருக்கிறது. அதிலும் கோகுலம் நிஜம்மாவே கோகுலம்தான்.

6.ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி போய்ப் பார்த்தது. பழைய அழிவுகள் எல்லாம் பார்க்கப் பார்க்க வேதனையாக இருந்தது.

பார்க்க ஆசை:
1.கிழக்கே உள்ள ஊர்கள். இன்னும் கல்கத்தா போகவில்லை. கயா மட்டும் போயிருக்கிறோம்.

2.தலைக்காவேரி.

3.கைலாஷ், மானசரோவர். ஆனால் எனக்கு மருத்துவ அனுமதி கிடைக்காது.

4.கொடைக்கானல். மதுரையிலேயே இருந்தும் இன்னும் பார்க்கவில்லை.

5.துவாரகா. திரும்ப ஒருமுறை போய்ப் பார்க்க ஆசை. ஏற்கெனவே எல்லாம் பார்த்து இருந்தாலும் இப்போது ப்ளாக் எழுத ஆரம்பிச்சதும் போய்ப் பார்த்து விட்டு வந்து முழு விபரத்தோடும் எழுதணும்னு ஆசை.

6.நர்மதை நதி உற்பத்தி ஸ்தானம். ஜபல்பூர் கிட்டனு நினைக்கிறேன்.

கூப்பிட நினைப்பவர்கள்: சங்கத்தலமை வேண்டாம்னு சொல்றதா நாகை சிவா சொன்னதாலே அவர் ஆட்டத்துக்கு அவுட். பொன்ஸ், தேவ் இவங்களை எல்லாம் கூப்பிட்டுட்டாங்க. மேலும் பொன்ஸ் ரொம்ப பிசி. கூப்பிட்டால் வர முடியுமோ முடியாதோ தெரியலை.
1.விவசாயி இளா அவர்கள்

2.கார்த்திகேயன் முத்துராஜன். நான் எழுதுவதைப் பார்த்து ஆசைப்பட்டு அவரும் எழுதுகிறார். என் எழுத்தையும் தமிழ் நல்லா எழுதறீங்கனு சொன்ன ஒரே ஆள்.

3.அமபி. நான் என்ன எழுதினாலும் வந்து பார்த்து விட்டுப் போய் விடுவார். ஊக்க சக்தி.

4.மனு. என்னை உடன் பிறவா சகோதரியாக அங்கீகரிச்சவர். இப்போ வள்ளிங்கற பேர்ல பிசியா இருக்கார். அடிக்கடி வரதில்லைனாலும் எப்போவாவது வராங்க.

5.திருTRC Sir.என்னை "தேவன்" ரேஞ்சுக்குப் புகழ்ந்து ஊக்கம் கொடுத்தவர். நான் எழுதறது எல்லாம் என் வயசைப் போல கதையோனு ஒரு சந்தேகம் உண்டு. அக்மார்க் நிஜம் நான் எழுதறது எல்லாம். சொந்த அனுபவங்கள்.

6.நாகை சிவா: இவரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இப்போ கூடப் பாருங்க ப்ளாக்கர் தகராறு செய்து கொண்டே இருக்கிறது. எப்படி வருமோ தெரியாது. ஆனால் இவருக்கு எப்படியோ மூக்கில் வேர்த்து விடும். அது எப்படி சூடானில் இருந்து கொண்டு கண்டு பிடிக்கிறார் என் ப்ளாக் சரியா வரலைனு, அதான் எனக்குப் புரியலை. கரெக்டா வந்துடுவார், பார்த்துச் சிரிக்கிறதுக்கு.:)

Monday, June 19, 2006

65. பறவைகள் பலவிதம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்-மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
*****************
என்னனு பார்க்கறீங்களா? வேறே என்ன? இந்த மின் தடையும் Tata Indicom Broadband-ம் நேற்று ரொம்ப சோதனை கொடுத்துடுச்சு. மின் தடை என்றால் இப்படியா? 1/2 மணிக்கொருமுறை போய்ட்டுப் போய்ட்டு வந்தது. அது போதாதுனு இந்த பிராட்பாண்ட் வேறே தொந்திரவு. WAN என்று சொல்லப்படும் Wide Area Network வரவே இல்லை. ராத்திரி வரை வரலை. இப்போக் காலையிலே எப்போ வந்ததுனு தெரியலை வந்து விட்டது. அதான் பிள்ளையாருக்கு ஒரு வந்தனம்.
***************
சின்ன வயசிலே நான் வெளியே போய் எல்லாம் ரொம்ப விளையாட முடிஞ்சது இல்லை. அப்பா கண்டிப்பு ஜாஸ்தி. விளையாடினால் என் பெரியப்பா வீட்டுக்குப் போய் பெரியப்பா பெண்ணுடன் விளையாடுவேன். அங்கே அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். பின்னால் வீட்டுக்கு வந்ததும் தான் திட்டு கிடைக்கும். ஆகவே பொதுவாக என் பொழுது போக்கு என்பது புத்தகங்கள் படிப்பதும், பறவைகளைப் பார்ப்பதுவும் தான். இந்தப் பறவைகளைப் பார்ப்பது என்பது ஒரு சுவாரசியமான விஷயம். மதுரையில் மேல ஆவணிமூலவீதி வீட்டில் மாடியில் எங்களுக்கு ஒரு அறை உண்டு. வாடகைக்குத் தான் இருந்தோம். அந்த மாடி அறையில் இருந்து பார்த்தால் எங்கள் வீட்டுக் கொல்லைப்புறம், மற்றும் பின்னால் மேலச்சித்திரை வீதிகளின் வீடுகள், மேலக்கோபுரம், கொஞ்சம் பக்கவாட்டில் பார்த்தால் வடக்குக் கோபுரம் எல்லாம் தெரியும். அப்படி ஒருநாள் பார்த்துக் கொண்டு இருந்தபோதுதான் ஒரு குருவி அந்த ஜன்னலில் வந்து உட்கார்ந்து கொண்டது. அப்போது பள்ளி மாணவியான நான் அந்தக்குருவியைப் பார்த்ததும் பாரதி சிட்டுக்குருவியைப் பற்றி எழுதியதை நினைத்துக் கொண்டேன். பள்ளியில் கட்டுரைப் போட்டியில் அதற்குப் பரிசெல்லாம் வாங்கினேன். அந்தக் குருவி உள்ளே வரத் தவித்த மாதிரி இருந்தது. ஜன்னலைத் திறந்து உள்ளே விட்டேன். உடனே அது அங்கே வந்து உட்கார்ந்து கொண்டு ஒரு ஒரு இடமாகப் பார்த்துத் தனக்குக் கூடு கட்ட இடம் தேடியது. கடைசியில் அதைக் கண்டும் கொண்டது. ஆனால் அந்த அறைக்குள் நான் இருந்தால் தான் வரும். எனக்கும் எப்படியோ அந்தக்குருவி நம் வீட்டுக் குருவி என்று அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியே பழகிப் பழகிப் பறவைகள் எல்லாம் எனக்கு நட்பாகத் தெரிய ஆரம்பித்தன. அவைகளும் என்னைப் பார்த்தால் பறக்காது. இப்போ கூட காக்காய்க்குச் சாதம் வைக்கும் போது தினமும் வரும் காக்காய் என்னைக் கண்டதும் பறக்காது. அணிலும் அப்படித்தான். ஓடாது. இரண்டும் ரொம்ப சிநேகிதமாக உட்கார்ந்து சாப்பிடும். இதில் காக்காய் மட்டும் கழுத்தைச் சாய்த்து என்னப் பார்த்து உறுதி செய்து கொள்ளும். வேறு யாராவது வந்தால் பறந்து விடும். அணிலும் ஓடும். சாதாரணமாகச் சண்டை போட்டுக் கொள்ளும் காக்காயும், அணிலும் அப்போது ரொம்ப சிநேகமாக இருக்கும்.

இந்தக் குயில் குஞ்சு இருக்கிறதே அது முட்டையில் இருந்து வெளியே வந்ததும் காக்கைகள் அதைத் துரத்தும் பாருங்கள். ரொம்பப் பாவமாக இருக்கும். குயில் எப்போ வந்து முட்டை இடுமோ தெரியாது. ஆனால் குஞ்சு அலறித் தவித்து மரத்தில் ஒவ்வொரு பக்கமாக உட்கார்ந்து கொண்டு மறைந்து கொள்ளப் பார்க்கும். கடைசியில் காக்காய்கள் சேர்ந்து அதை விரட்டி ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் ஓயும். இதில் ஆண் குயில்தான் பாடும். பெண்குயில் குரல் அவ்வளவு இனிமையாக இருக்காது. ராஜஸ்தானில் பொதுவாகப் பறவைகள் அதிகம். மேலும் எல்லாம் இங்கே இருப்பதைவிடப் பெரிதாக இருக்கும். எங்கள் வீட்டுக் கொல்லை முற்றத்துக்கு வரும் பறவைகளின் ஆகாரத்துக்காகத் தினமும் தானியங்களை உடைத்துப்போடுவோம். ராஜஸ்தானிலேயே இது அதிகமாக இருக்கும். எல்லாரும் தானியங்களை உடைத்து வைத்துக் கொண்டு, எறும்புப் புற்று இருக்கும் இடம், மரத்தடி என்று பறவைகளுக்கு உணவு இடுவார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைப்போம். புறாக்களில் எத்தனை விதம். பக்கூம், பக்கூம் என்று கத்தும் மாடப்புறாவில் இருந்து, கணகணவென்று மணிஓசை போலச் சத்தம் செய்யும் மணிப்புறா வரை நிறையப் பார்க்கலாம். வானில் வட்டமிடும் கழுகுகள் சிலசமயம் அப்படியே விர்ரெனக் கீழே இறங்கிப் பறவைகளைக் கொத்திக் கொண்டு போய்விடும். அப்போது ஏற்படும் களேபரம். தாங்க முடியாது. வீட்டுக்குள் வேலையில் இருந்தாலும் அவைகளின் கூச்சலை வைத்தே ஆபத்து எனப் புரியும். மயில் எல்லாம் கோழி மாதிரித் தினமும் எங்கள் வீட்டு லானில் நடனம் ஆடும். மழை வரப் போகிறது என்று நம்பக்கம் சொல்வார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து மழை இல்லாவிட்டாலும் மயில் நடனம் ஆடும். அதுவும் ஆண்மயில்தான். பெண்மயில் பார்க்கச் சகிக்காது. குரலும் கர்ணகடூரமாக இருக்கும். கிளிகள் எத்தனை விதம். எல்லாம் பெரியதாக இருக்கும். சில வயதான கிளிகள் கூட இருக்கும். கிளிக் குஞ்சு ஒன்று அடிபட்டு விழுந்து அதற்கு மருத்துவம் பார்த்துப் பின் பறக்க விட்டோம். மைனாவில் சிவப்பு மூக்கு மைனா, மஞ்சள் மூக்கு மைனா, பிரவுன் மூக்கு மைனா என்று பலவிதம் உண்டு. அவை சண்டை போடுவது நம் ஊர்க் குழாயடிச் சண்டை மாதிரி ஒரே சத்தமாக இருக்கும். சிலசமயம் ரொம்பச் சத்தம் பொறுக்க முடியாமல்,"உஷ், சும்மா இருங்க எல்லாம்" என்று சத்தம் போடுவேன். எல்லாம் பறந்து விடும். புரிந்து கொண்டதாக நான் நினைத்துக் கொள்வேன். மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது பார்த்தால் தச்சன் கெட்டான் போங்கள், அப்படி ஒரு சத்தம் தச்சன் வேலை செய்வது போலே. முதலில் சில நாட்கள் புரியவில்லை. எங்கிருந்து சத்தம் என்று. ஆர்மியில் ஒரு க்வார்ட்டர்ஸுக்கும், இன்னொரு க்வார்ட்டர்ஸுக்கும் குறைந்தது 1/2 கி.மீ வித்தியாசம் இருக்கும். நான் சொல்வது பழைய க்வார்ட்டர்ஸ். நாங்கள் இருந்த க்வார்டர்ஸ் எல்லாம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. ரொம்பரொம்பரொம்பரொம்பரொமப உயரமாக இருக்கும். ஆதலால் பக்கத்துக் க்வார்ட்டர் சத்தம் இங்கே காதில் விழச் சான்ஸ் இல்லை. அப்புறம் ரொம்பத் தேடிக் கண்டுபிடித்ததில் இது அழகாக மரத்தில் துளை போட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகாக நம்மால் முடியாது. கை தேர்ந்த தச்சனைப் போல வேலை செய்து கொண்டு இருந்தது. இந்த மாதிரிப் பார்த்துப் பார்த்து இது செம்போத்து, இது அக்காக்குருவி, இது வாலாட்டிக்குருவி, இது கரிச்சான் குருவி,(இது தான் காலையில் முதலில் எழுந்துக்கும். நல்லா ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிச்சேன். இதிலே வாலில் சிவப்பு நிறம் ரத்தம் போல இருக்கிற ஒரு வகை, இன்னொரு வகை வெள்ளையாக இருக்கும்) என்று கண்டு பிடிக்க முடிந்தது. இதிலே ஒரு குருவி இருக்கிறது விசில் மாதிரியே சத்தம் கொடுக்கும். அதற்கு நான் வச்சிருக்கிற பெயர் "விசிலடிச்சான் குருவி" அதோட பேர் தெரியலை. இன்னும் தேன்சிட்டு, மஞ்சணாங்குருவி என்று நிறைய இருக்கிறது. இதிலே இந்தத் தேன்சிட்டுப் பார்க்கச் சின்னதாக இருக்கும். குரல் கொடுத்தால் அவ்வளவுதான். பெரிசாக் குரல் கொடுக்கும். சின்னதாக இருக்கே என்று கண்டு கொள்ளாமல் போயிடப்போறதுனு ஆண்டவன் இப்படிப் படைச்சிருக்காரோ என்னவோ? இப்போவெல்லாம் சிட்டுக்குருவி என்று சொல்லப்படும் தவிட்டுக் குருவியை காணக் கிடைப்பதில்லை. இதற்குச் சென்னைக் கான்கிரீட் காடாகி விட்டது என்று காரணம் சொல்லப் படுகிறது. அப்போ மற்றதுக்கெல்லாம் கான்கிரீட் காடு ஒத்துக் கொள்ளுமா? புரியவில்லை. ஆனால் இந்தச் சிட்டுக்குருவி கூடு கட்டிக் குஞ்சு பொரித்ததும் ரொம்பக் கவனமாப் பார்த்துக்கும். குஞ்சு ஏதாவது கூட்டில் இருந்து கீழே விழுந்தால் திரும்பச் சேர்த்துக் கொள்ளாது. ஒருமுறை அது வீட்டுக்குள் வழக்கம்போல சீலிங் ஃபானில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து இருந்தது. தினமும் நாங்கள் யாராவது ஒருத்தர் வீட்டில் இருந்ததால் அது வரவும் போகவும் கஷ்டமாயில்லை. ஒருநாள் சாயங்காலம் 4 மணிக்கே வெளியே போக வேண்டி இருந்தது.அந்த நேரம் குருவிகள் திரும்பும் நேரம் இல்லை. ஆதலால் கதவைப் பூட்டிக் கொண்டு போய்விட்டோம். திரும்பி வர 7 அல்லது 8 மணி ஆகி விட்டது. வீட்டிற்கு வரும்போது குருவி பார்த்துவிட்டு ஏதாவது மரத்திற்குப் போயிருக்கும் என நினைத்தோம். கதவைத் திறக்கும்போதே உள்ளிருந்து குஞ்சுகளுடைய கூச்சல் கேட்டது. உடனேயே குருவிகள் வரவில்லையெனப் புரிந்தது. என்ன செய்ய முடியும் என நினத்து உள்ளே போனால் நாங்கள் கதவை மூடும் சமயம் விர்ர்ர்ர்ரென ஒரு சப்தம். பார்த்தால் எங்கேயோ இருந்து இரண்டும் நாங்கள் கதவு திறந்ததைப் பார்த்து விட்டு வந்திருக்கின்றன். சட்டெனக் கூட்டில் அமைதி. எங்கள் மனதிலும்.

Saturday, June 17, 2006

64. காதலுக்கு அர்த்தம் என்ன?

Tata Indicom-ல் ஒரு வழியாக வந்து வேலையை முடித்துக் கொடுத்து இருக்கிறார்கள். இனிமேல் Broadband connection-ல் தகராறு வராது என்று நம்புகிறேன். ப்ளாக்கரும், மின்தடையும் இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள்வாராக.
**********

சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். கதைகளிலும், காவியங்களிலும் நான் பார்த்த காதல் என்பது வேறாக இருந்தது. முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா என்றால் புரியவில்லை.

நான் படித்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட காதலில் முக்கியமானவையாகக் கல்கியின் "அமரதாரா" கதையில் வந்த ரங்கதுரை, இந்துமதி காதல்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. அந்தக் கதையை நான் முதலில் படிக்கும்போதே கல்கி இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அவருக்குப் பின் அவருடைய பெண் "ஆனந்தி" கதையை முடித்து இருக்கிறார். நான் முதலில் படித்தது "இந்துமதியின் கதை" என்ற பாகம் ஒன்றுதான். அதில் வரும் இந்துமதியின் தாய், தந்தையரின் காதலும், அதற்குப்பின் இந்துமதி, ரங்கதுரையின் காதலும் என்னை மிகவும் வசீகரித்தது. இந்துமதியின் தாய் சந்திரமணியின் காதல் ஆக்ரோஷமானது என்றால் இந்துமதியின் காதல் அமைதியான நதியைப் போன்றது. இன்னும் சொன்னால் வற்றாத ஜீவநதி என்றும் சொல்லலாம். அதிலேயே கல்கி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்:ரங்கதுரையின் வார்த்தைகளில்: "இந்த அன்பை என்னவென்று சொல்வது? ஒரு தாய், தன் மகளிடம் காட்டும் அன்பா, தந்தை, தன் மகளிடம் காட்டும் அன்பா, கணவன் மனைவியிடம் காட்டும் அன்பா அல்லது காதலன், காதலியிடம் காட்டும் அன்பா? புரியவில்லை." என்று வந்திருக்கும். நான் படித்து பல வருடங்களாகிவிட்டபடியால் நினைவில் இருந்து எழுதி இருப்பது தப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் அர்த்தம் இதுதான். அப்படி ஒரு காதலைப் பற்றி அதுவரை நானும் படிக்கவில்லை. அதிலும் ரங்கதுரை வெளிநாடு சென்றதும், அவன் நினைவில் இருக்கும் இந்துமதிக்கு அவன் பாடும் பாரதி பாடல் நினைவில் வரும்.

நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக்குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்டுநிதம் மேகம் அளந்தே,
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினில் உன்கைவிலக்கியே
தருமித் தழுவியதில் நின்முகங்
கண்டேன்"

இந்தப்பாட்டு ரங்கதுரை வெளிநாடு செல்லுமுன் இந்துமதிக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போவான்.
, உடனேயே நிலவில் அவன் முகமும் அவள் நினைவில் தெரிவதாகப் படம் ஓவியர் திரு மணியம் அவர்களால் வரையப்பட்டிருக்கும். இந்துமதியின் கண்களில் தெரியும் அந்த ஏக்கம் இன்னும் கண்ணிலேயே இருக்கிறது. அதற்கு அப்புறம் நான் ரங்கதுரையின் கதை நடக்கும் பாகம் வாங்கிப் படிக்க ரொம்ப நாள் ஆனது. அதுவரை ஒரே கவலையாக இருக்கும். தினமும் நினைத்துக் கொள்வேன் இந்துமதிக்கு என்ன ஆனதோ என்று. அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று தெரியும்போது எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டிருந்தது.

கல்யாணம் ஆகிப் புக்ககம் போனதும் என் கணவர் என்னை விட்டு விட்டுப் புனே சென்று விட்டார். புனேயில் வீடு கிடைப்பது கஷ்டம் என்பதால் நான் உடனே செல்லவில்லை. கிராமத்தில் மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார், மைத்துனர்களுடன் இருந்தேன். அப்போது அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அந்தக் கடிதத்தில் நான் தனியாக இருப்பது பற்றியும் உடனே அழைத்துப் போவது பற்றியும் கொஞ்சம் கவித்துவமாக எழுதி இருந்தேன். அதற்குப் பதில் என்ன வந்தது தெரியுமா? ஒரு இன்லாண்ட் கவரில் 4 வரி. "எனக்குச் சென்னை மாற்றல் ஆகிவிட்டது. இன்னும் 10 நாளில் வந்து அழைத்துப் போகிறேன். மற்றபடி நீ தமிழ் நன்றாக எழுதுவதால் ஏதாவது கதை எழுதிப் பார்க்கவும். முயன்றால் உனக்கு நன்றாக எழுத வரும்." என்பதுதான். எனக்குச் சப்பென்றாகி விட்டது. "பரவாயில்லை" என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அதுதான் அழைத்துப் போகப் போகிறாரே, அப்புறம் என்ன என்று தோன்றியது. குடித்தனம் வைத்துப் பழகும்போதும் அத்தனை பேச்சு, வார்த்தை இல்லை. எங்கள் வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிப் பழகுவோம். என் அண்ணன், தம்பியுடன் எனக்குச் சண்டை எல்லாம் வரும். இங்கேயோ நேர்மாறாக இருந்தது. ஆகவே மறுபடியும் என் கவனம் புத்தகங்களில் திரும்பியது. நான் பாட்டுக்குப் படித்துக் கொண்டு இருப்பேன். இதற்கு நடுவில் எனக்குப் பெண் பிறந்து, ராஜஸ்தான் போய், அங்கே இருக்கும் போதே பையனும் பிறந்தான். குழந்தைகளும் ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் தான் வருவார்கள். என் அப்பா சினிமாவுக்குப் போனாலோ எங்காவது போனாலோ போய்விட்டு வந்து அந்தக் கதையெல்லாம் சொல்லுவார் எங்களுக்கு. அப்பாவுடன் விளையாடுவோம். விளையாட்டில் ஏமாற்றினால் சண்டை போடுவோம். இங்கே அந்த மாதிரி வெளிப்படையாக எதுவும் கிடையாது. ஆகவே என் கணவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா என்னவென்று எனக்குப் புரியவில்லை.

இந்த மாதிரிக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் போய்விட்டது. என் மனதில் தீராக்குறைதான். ஆனால் வெளிப்படையாக இதைப் பற்றி நானும் பேசவில்லை, அவரும் பேசவில்லை. அந்த சமயத்தில் எனக்கு மூலம் வியாதி முதல் பிரசவத்தில் ஆரம்பித்தது ஜாஸ்தியாகி 12 o clock position என்னும் நிலையை அடைந்து ஆபரேஷன் செய்தால் தான் சரியாகும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்துத் தினம் இரண்டு வேளையும் என் கணவர் வருவார். எனக்கு என்னமோ கடமைக்கு வருவதாகத் தோன்றும். ஆதலால் அவரிடம் "நீங்கள் தினம் வர வேண்டாம். ஆஃபீஸ் போய்விட்டுச் சாயந்திரம் வந்தால் போதும்" என்றேன். பதில் சொல்லாமல் சிரித்துவிட்டுப் போய்விட்டார். ஆபரேஷனும் ஆனது. இப்போது ஒரு பத்து வருஷமாகத் தான் லேஸர் எல்லாம். அப்போது எல்லாம் அப்படிக் கிடையாது. லோகல் அனஸ்தீஷியா கொடுத்து ஆபரேஷன் செய்துப் பின் படுக்கையில் கொண்டு விட்டு, விட்டு டாக்டர் சொன்னார்" இங்கே பாருங்க, கீதா, ரொம்ப வலி இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். நான் சொன்னேன், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக்குப் பிரசவ வலியைவிடவா வலிக்கும் என்று சொன்னேன். டாக்டர் அதற்கு"இல்லை அம்மா, இது தாங்காது. உங்கள் நரம்பு வெட்டித் தைத்திருக்கிறோம். 24 மணி நேரம் வலி இருக்கும். உயிர் போகும் வலி இருக்கும். வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டிருக்கிறேன்". என்றார். சரி என்றேன். சிறிது நேரம் டாக்டர் இருந்துவிட்டு எனக்குக் காலில் உணர்வு வந்ததும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மறுபடி எச்சரிக்கை செய்தார். எனக்கு வேடிக்கையக இருந்தது. நர்ஸ் வேறே 10 நிமிஷத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தாள். உணர்வு வந்து ஒரு 1/2 மணிக்கெல்லாம் வலி ஆரம்பித்தது பாருங்கள், வலி என்றால் வலி சொல்லமுடியவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் என்னை அறியாமல் கத்த ஆரம்பித்தேன். மருந்துகளின் மயக்கத்திலும், ஊசியின் தாக்கத்திலும் கூட வலி பொறுக்க முடியவில்லை. கடவுளே என் உயிரை எடுத்துக் கொள் என்று மூன்றாவது மாடியில் இருந்த நான் போட்ட சத்தத்தில் பிரசவ வார்டு, மற்ற ஆபரேஷன் செய்தவர்கள், தினமும் வரும் நோயாளிகள் என்று என் அறை வாசலில் ஒரே கூட்டம் கூடி இருக்கிறது. என் அப்பாவும், அம்மாவும், சகோதரர்களும் என்ன செய்வது என்று புரியாமல் டாக்டரைத் திருப்பிக் கூப்பிட்டார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு வலி தெரிய வேண்டும். அப்போது தான் ஆபரேஷன் செய்ததின் பலன் தெரியும் என்று சொல்லி விட்டு மறுபடி ஒரு சக்தி வாய்ந்த ஊசியைப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அதற்குள் குழந்தைகள் வருவார்கள் அழைத்து வர வேண்டும் என்று வீட்டுக்குப் போவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவருக்கு விஷயம் தெரிந்து திரும்ப வந்துவிட்டார். நான் துடிப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாக என் அருகில் வந்து என் கையைத் தொட்டு ஆறுதல் சொல்ல என் கையை இறுக்கிப் பிடித்திருக்கிறார். சட்டென்று அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.

Friday, June 16, 2006

63. அனுபவம் புதுமை-தொடர்ச்சி

சிகந்திராபாத்தில் இறங்கின உடனே வண்டியை விட்டது தெரிந்ததும் பித்துப் பிடித்தது போல ஆகி விட்டது. உங்களுக்குத் தான் தெரியுமே நாங்கள் மூட்டை தூக்குவது பற்றி. இப்போதும் அதுமாதிரியே நிறைய சாமான்கள். நாங்கள் கிளம்பின சமயம் குளிர்காலம். ஆகவே ரெயிலில் எங்களுக்கு வேண்டிய குளிர் பாதுகாப்புப் பொருளே நிறைய இருந்தது. ராஜஸ்தானில் நல்ல குளிர் இருக்கும். சிலசமயம் 0 டிகிரிக்குக்கூடப் போகும். நாங்கள் அந்த வருடம் தான் போயிருந்தோம். ஆதலால் எங்களுக்கு மட்டும் இல்லாமல் இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் என் மாமனார், மாமியார், என் அப்பா, அம்மா, மற்றும் எல்லாருக்கும் குளிருக்குப் போர்த்திக் கொள்ளக் கம்பளி, ஸ்வெட்டர், ஷால்(ஆச்சரியப் படாதீர்கள்.) அங்கே எல்லாம் இருந்துவிட்டு இங்கே வந்தால் எங்களுக்குத் தான் குளிர் விட்டுப் போயிருக்கே தவிர, இங்கே எல்லாரும் போபோபோபோபோபோபோபோர்த்திக் கொண்டு படுக்கறதையும் ஜன்னல் எல்லாம் மூடுவதையும் பார்த்தால் எனக்கு இன்னும் புழுக்கமாக இருக்கும். ஆகவே நாங்கள் வாங்கி வந்தது அதிசயமே இல்லை. அது தவிர கோதுமை மாவு அது, இது , நாத்தனாருக்கு எல்லாம் புடவை என்று நிறையச் சேர்ந்து விட்டது. என் வழியில் புடவை வாங்கும் அளவு யாரும் இல்லை. வாங்கிக் கொண்டால் எனக்குத் தான் வாங்கிக்கணும். நானே சின்னப் பொண்ணு, இப்போவே 16தான்னா, அப்போ நான் பிறக்கவே இல்லை, இல்லையா? அப்புறம் யாருக்கு வாங்குவது, அதான். அது போகட்டும். நாங்கள் என்ன செய்யலாம் என்று யோசித்ததில், போர்ட்டர் சொன்னான்:"அம்மா குழந்தையுடன் இங்கே இருக்கட்டும். நாம் இருவரும் "நாம்பள்ளி" போய் இடம் போட்டுக் கொண்டுவருவோம் என்றான். நான் ஒத்துக் கொள்ளவில்லை. இங்கே போய் ஸ்டேஷன் மாஸடரிடம் கேட்கலாம் என்றேன். சரி என்று இருவரும் போனோம். ஸ்டேஷன் மாஸ்டர் முழு லிஸ்ட்டும் நாம்பள்ளியில் தான் இருக்கும் என்றும், அங்கே போனால் தான் நிலவரம் புரியும் என்றும் சொன்னார். இங்கே இருப்பது சிகந்திராபாத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டவர்களின் லிஸ்ட் மட்டும்தான் என்றார்.
என்ன செய்வது என்று யோசித்தார் என் கணவர். பின் ஒரு வண்டி பிடித்து வந்து இருவரும் "நாம்பள்ளி" போகலாம் என்றார். சரி என்று போர்ட்டரிடம் சாமானைத் தூக்கி வந்து ஸ்டேஷன் வெளியே வைத்துவிட்டு ஒரு வண்டி கொண்டுவரச் சொன்னோம். அவன் கொண்டுவந்தது ஒரு ரிக்ஷா வண்டி. இதில் எப்படிப் போவது? என்று நான் மறுத்தேன். உடனே அந்த ரிகஷா காரன் அழுதுவிடுவான் போல் இருந்தது. சரி, இதுவாவது கிடைத்ததே என்று வா போகலாம் என்று கூறினார் என் கணவர். அவர்தான் பி.எம். ,சுப்ரீம் கோர்ட் எல்லாம். ஆகவே அப்பீலே கிடையாது. பேசாமல் ஏறினேன். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டால் அவள் தனி சீட் வேண்டும் என்று பிடிவாதம். அந்த ரிக்ஷாவில் நாங்கள் இரண்டு பேருமே விழாமல் இருந்தால் அதிசயம். பிறகு அவரும் ஏறினார். சாமனை வைத்துக் கொண்டு எங்கே உட்காருவது?. தொங்கிக் கொண்டு போனோம். அது வேறே ஹுஸேன் சாகர் ஏரிப்பாலம் பூரா போகும். அந்த வழி போனவர்கள், வந்தவர்கள் எல்லாருக்கும் எங்கள் பிரயாணம் ஒரு காணக்கிடைக்காத காட்சியாக இருந்திருக்கும். அத்தனை கஷ்டத்திலும் ஏரியையும், அதன் அழகையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்போவே ரொம்ப சுத்தமாக வைத்து இருந்தார்கள். அங்கங்கே உட்கார வசதி. பார்க் மாதிரி எல்லாம் அலங்காரம். ஒருதரம் வந்து நிதானமாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். யாருக்குத் தெரியும்? நான் அங்கேயே அடுத்த மாற்றலில் வரப்போவது? அப்போது தெரியாதே?
ஒருவழியாக நாம்பள்ளி போனோம். அங்கே ஸ்டேஷனில் கேட்டதில் டிக்கெட் வாங்க வேண்டாம் என்றும் அதே டிக்கெட்டிலேயே பிரயாணம் செய்யலாம் என்றும் எழுதிக் கொடுத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். ரிசர்வேஷன் பற்றிக் கேட்டதற்கு RAC கிடைத்தால் தருகிறேன் என்றார்.

வண்டியும் வந்தது. ஒரு முதல்வகுப்புப்பெட்டியில் ஏறினோம். கண்டக்டரிடம் சொன்னதற்கு வெளியில் அவர்கள் உட்கார்ந்து கொள்ளப் போட்டிருப்பார்கள் அல்லவா அந்த இடத்தில் உட்காரச் சொல்லி விட்டு சிகந்திராபாத்தில் பார்க்கலாம் என்றார். சிகந்திராபாத் வந்ததும் உட்கார மட்டும் சீட் கிடைத்தது. அதில் எப்படியோ உட்கார்ந்து கொண்டு சென்னை வரை வந்தோம். இதில் டிக்கெட் நேரே சென்னை வரை எடுத்து இருப்பதால் பார்த்த டிடிஆர் எல்லாருக்கும் ஒரே சந்தேகம். ராஜஸ்தானில் இருந்தா வருகிறீர்கள் என்று திருப்பித்திருப்பிக் கேட்டு எரிச்சல் ஏற்படுத்தினார்கள். ஒரு வழியாகச் சென்னை வந்தோம். இங்கே அண்ணா, தம்பி எல்லாம் நடந்தது தெரியாமல் எங்களைக் காணோம் என்று முதல் வண்டியில் பார்த்து விட்டுக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
முந்தா நாள் நல்ல மழை.

திடீரென்று வந்தது. தமிழ்மணம்

பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது

என்று பார்க்கலாம் என்று

கணினியைப் போட்டால் மின்

விநியோகம் இல்லை.

இப்போதெல்லாம் இது ஒரு

தொடர்கதை ஆக இருக்கிறது.

அறிவிக்கப்படாத பவர்கட். சற்று

நேரத்துக்கு எல்லாம் மழை

ஆரம்பித்தது. மழை என்றால்

எப்படிப்பட்ட மழை? ஒரே காற்று.

விர் விர் விர் விர் என்று சுற்றிச்

சுழல்கிறது. மழையும்

அதற்கேற்பச் சுற்றிச் சுழல்கிறது.

பெரிய பெரிய தாரையாகத்

தண்ணீர் கொட்டுகிறது. காற்றில்

மரங்கள் எல்லாம் ஆடும் வேகமும்,

காற்றின் வேகமும், மழையின்

வேகமும் சேர்ந்து அந்த மத்தியான

வேளையை ஒரு சுவர்க்கமாக

மாற்றியது. காற்று அடிக்கும்

திசையில் எல்லாம் போய்ச் சுழன்று

சுழன்று அடிக்கிறது மழை.

எனக்கு மழை ரொம்பப் பிடிக்கும்.

ஆனால் நனைய முடியாது. உடனே

ராத்திரி என்னோட இணைபிரியா

ஆஸ்த்மாவிற்குக் கோபம் வந்து

விடும் அதனாலேயே மழையில்

நனைய முடியாமல் போகிறது.

இன்னும் எத்தனையோ தொந்திரவு

இதனால். ஊட்டியில் இருக்கும்

போது எப்போது மழை வரும்

என்றே சொல்ல முடியாது.

மத்தியானங்களில் சாப்பாட்டிற்குப்

பின்னர், கணவர் அலுவலகம்

சென்றதும், வீட்டிற்கு வெளியில்

வந்து உலாத்திக் கொண்டு

இருப்பேன். 18டிகிரி A/C

குளிரிலேயே வியர்க்கும் எனக்கு

ஊட்டியில் ரொம்பவும் ஆனந்தமாக

இருக்கும். (இந்த விசித்திரமான

உடல் அமைப்பைப் பற்றி

மருத்துவர்கள் சொல்வது, ஈரப்பதம்

இருக்கும் இடம் என் உடல்

வாகிற்கு ஒத்துக் கொள்ளாது

என்பது தான்.) அந்த மாதிரி

நிற்கும் போது திடீரென எதிரே

வெலிங்டன் மலையில் மேகங்கள்

குவியும். அங்கே மழை பெய்யப்

போகிறது என்று நினைக்கும்

சமயம் அந்த மேகங்கள் எப்படி

வரும் என்று தெரியாது அத்தனை

வேகமாக நான் இருக்கும் இடம்

வந்து விடும். மேகம் அப்படியே

நம்மைக் கடந்து போகும்போது,

ஆஹா, அனுபவித்தால்தான்

தெரியும். மேகம் நம்மை ஊடுருவிக்

கொண்டு போகும்போது அப்படியே

உடம்பைச் சிலிர்க்கும். அந்த

அனுபவம் ஆஹா திரும்பத் திரும்ப

அலுக்காது. சமயத்தில்

சமைக்கும்போதில் கூட சமையல்

அறைப் பக்கம் வரும் மேகங்கள்

"என்ன, எப்படி இருக்கிறாய்"

என்று கேட்டு விட்டுப் போகும்.

பார்க்கவே அழகு கொஞ்சும்.

அங்கே எல்லாம் சமையல் அறை

தனியாக இருக்கும். அதில்

இருந்து வெளியே வந்தால்

திறந்தவெளி முற்றம், தோட்டம்

வரும். அங்கே இருக்கும் மேகம்

பார்த்ததுமே தெரியும் மழை

வரப்போகிறது என்று. உடனே

இடி, மின்னல், மழை ஆரம்பிக்கும்.

இந்த மாதிரிக் காற்று ஜாஸ்தி

பார்க்கவில்லை. ஒருவேளை

மழைக்கால மழையில் இருக்குமோ

என்னமோ தெரியாது. மஞ்சூர்

ராஜாவைத்தான் கேட்கவேண்டும்.

அந்த மழையில் நனைந்து

கொண்டுதான் பாத்ரூமுக்கு

எல்லாம் போக வேண்டு. பாத்ரூம்

மெயின் வீட்டில் இருந்து

கிட்டத்தட்ட 1/2 கி.மீ போகும்படி

இருக்கும். மழை முடிந்ததும் மழை

பெய்த சுவடே இருக்காது.

அதிசயம், ஆனால் உண்மை,

ஊட்டியில் பெய்யும் அத்தனை

மழைக்கும் கொசுவே கிடையாது.

இங்கே மழை அப்படி இல்லை.

ஒரே ஆரவாரம் தான். பெரிய

பெரிய இடி, கண்ணைப் பறிக்கும்

மின்னல் என்று மழை தாளம்

போட்டது. எனக்கு நினைவு

வந்தது பாரதியின் மழையைப்

பற்றிய இந்தப் பாடல் தான்.
$$$$$$$$$

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

தீம்தரிகிட
பக்க மலைகள்

உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது

பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததுங்கிடத்

தித்தோம்-அண்டம் சாயுது சாயுது

சாயுது-பேய் கொண்டு தக்கை

அடிக்குது காற்று-தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட

தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல்-கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை

இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்-கூ

கூவென்று விண்ணைக் குடையுது

காற்று.
சட்டச்சட சட்டச்சட

டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது

வானம்
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி-தலை

ஆயிரந்தூக்கிய சேடனும் பேய்

போல்
மிண்டிக் குதித்திடுகின்றான்

-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத்

தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்;

-என்ன
தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு

கண்டோம்!
கண்டோம், கண்டோம்,

கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு

கண்டோம்.!
கிட்டத் தட்ட இந்த மாதிரிதான்

இருந்தது. பாரதியின் இந்த

அனுபவம் எப்படி அவருக்கு

இருந்திருக்கும் என்றும் புரிந்தது.
*********

இதை மூன்று நாளாக

எழுதுகிறேன். ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு தொந்திரவு.

விக்கிரமாதித்தனுக்கு ஒரு

வேதாளம் தான் இருந்தது.

எனக்கோ மூன்று வேதாளங்கள்.

முதல் வேதாளம்: மின் தடை.

எப்போ போகும் எப்போ வரும்,

சொல்ல முடியாது.
இரண்டாவது வேதாளம்:TATA

INDICOM BROADBAND

Connection.: இதுவும்

இஷ்டத்துக்குத் தான் வேலை

செய்யும். யாரோடவாவது

முத்தமிழ்க் குழுமத்தில் விவாதம்

நடைபெறும் சமயம் அதற்குக்

கண்டிப்பாகத் தெரிந்து விடும். Re

connection Pending: Remote

computer not responding:

என்றெல்லாம் செய்தி

கொடுத்துவிடும். மறுபடி

கனெகஷன் வாங்கறதுக்குள்ளே

போதும் போதும்னு ஆயிடுறது.

புகார் கொடுத்தால் அவங்க

ஃபோனை எடுக்கவே 1/2 மணி

நேரம் ஆகிறது.
மூன்றாவது வேதாளம்: ப்ளாக்கர்:
முதல் இரண்டையும் எப்படியோ

சமாளிச்சு வந்தால் இது ரொம்ப

பிகு பண்ணும். நெருப்பு நரியில்

போனால் இதுக்கு ஆகவே ஆகாது.

எக்ஸ்ப்ளோரெரில் கொஞ்சம்

சமத்தாக இருந்தது. இப்போ 10

நாளாக அதுவும் தகராறு. போடவே

மாட்டேன் என்கிறது. என் கிட்ட

இடமே இல்லை என்று

கைவிரிக்கும். இன்னிக்கு என்ன

பண்ணுமோ தெரியாது. வெட்டித்

தான் ஒட்டப் போகிறேன். சரியா

வந்தால் என் அதிர்ஷ்டம். (trc Sir,

எதுக்கும் உமாமகேஸ்வரியிடம்

(மனைவியா,பெண்ணா) சொல்லி

மாத்திரை வாங்கி வச்சுக்குங்க.

இன்னிக்குச் சரியா வந்தா

தொடர்ச்சி, இல்லாட்டா இல்லை,

ஆந்திராவிலேயேதான்).
தன் முயற்சியில் சற்றும் மனம்

தளராத விக்கிரமாதித்தன் மாதிரி

நானும் மனம் தளராமல் மூன்று

வேதாளங்களையும்

சமாளிக்கிறேன். அப்புறம் என்ன
ஈஸ்வரோ ரக்ஷது.

Wednesday, June 14, 2006

61. அனுபவம் புதுமை.

My thoughtsகாண்ட்வா ஸ்டேஷனில் வண்டி நிற்கும். அங்கே சாப்பாட்டுக்கு ஏதும் ஏற்பாடு செய்யலாம் என்று நினத்தது என்னமோ வாஸ்தவம் தான். ஆனால் இது மாதிரி இஞ்சினைக் கழட்டிக் கொண்டு போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கீழே இறங்கி விசாரித்தால் ரெயில் டைம் டேபிளை எடுத்துக் காட்டினார்கள். இஞ்சின் மாற்றி இன்னும் சில பெட்டிகள் வட மாநிலங்களில் இருந்து வந்து இணையும் என்றும் தெரிந்தது. அதற்கு எத்தனை நேரம் பிடிக்கும் என்று கேட்டால் "ஆராம் ஸே ஜாயேங்கே, ஸாப், சிந்தா மத் கீஜியே" என்று பதில் வந்தது. சரி, பார்ப்போம் என்று என்னை அங்கேயே பெட்டியில் விட்டு விட்டு என் கணவர் மட்டும் பால் வாங்கி வரப் போனார். அதற்குள் மற்றவர்கள் கீழே இறங்கி சமையல், குளியல் என்று நடைமேடையிலேயே குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள். வெளியே போன என் கணவர் ஊருக்கு உள்ளேயே போய் எங்களுக்குத் தேவையான பால், தயிர், பழங்கள் என்று வாங்கி வந்தார். கடைத்தெருவில் மளிகைக்கடை, துணிக்கடை என்று எல்லாம் இருந்ததாம். எல்லாம் வாங்கி வந்தால் ரெயிலிலேயே குடித்தனம் பண்ணலாம். கிட்டத்தட்ட நாங்களும் அந்த ரெயிலில் முதல் நாள் காலையில் இருந்தே இருக்கிறோம். எங்களுக்குள் ஒரு பாசப் பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பின்னே? அந்த ரெயிலில் வந்த எல்லாரும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் டி.டி.ஆர், கண்டக்டர், டிரைவர் கூட 8 மணி நேரத்திற்கு ஒரு தரம் மாறி விடுகிறார்கள். அந்த ரெயில் கிளம்பினதில் இருந்து, (அஜ்மேருக்கும் நசீராபாத்துக்கும் கிட்டத்தட்ட 10 அல்லது 15 கிலோ மீட்டருக்குள் தான்) நாங்கள் தான் மாறவில்லை. இதே மாதிரி போனால் ஒருநாள் டிரைவருக்கும் சிக்னல் கொடுப்பவருக்கும் வழி நாங்கள் காட்ட ஆரம்பிப்போம் என்று மனதுக்குள் ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அப்படியே கிட்டத்தட்ட 4 மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். எங்களை எந்த vendor-ம் சீண்டவே இல்லை. இப்படி ரெயிலே கதி என்று உட்காருவது பார்த்து அவனுக்கும் சீச்சீ இது சாவுக் கிராக்கி என்று தோன்றி இருக்கும். மறுபடி வெளியில் போய்ச் சாப்பாடு வாங்கி வந்தார். எல்லாம் முடிந்து வண்டி சாவகாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பும்போது 11 ஆகி விட்டது. அன்றைய தினம் "அகோலா" ஸ்டேஷன் வரும்போதே வண்டி லேட். மத்தியானம் போக வேண்டியது சாயந்திரம் தான் போனது. மஹாராஷ்டிரா முழுக்கமுழுக்கமுழுக்கமுழுக்கமுழுக்கப் போய் வண்டி ஆந்திராவை நெருங்கும் போது கிட்டத்தட்ட மறுநாள் காலை ஆகி விட்டது. சரியான நேரத்துக்குப் போனால் காலை 10-30-க்குக் காச்சிகுடாவை அடைய வேண்டும். அதற்கு முன்னால் சிகந்திராபாத். சிகந்திராபாத்திற்குக் குறந்தது 9-30 மணிக்காவது போனால் நல்லது. ஆனால் இது மத்தியானம் 2-30 க்குத் தான் போகும் என்று சொன்னார்கள். நாங்கள் பிடிக்க வேண்டிய இணைப்பு வண்டி சென்னைக்கு 3-15க்கோ என்னவோ போட்டிருந்தது. சரி, நாம்பள்ளியெல்லாம் போக வேண்டாம் சிகந்திராபாத்திலெயே ஏறலாம் என முடிவு செய்தோம். சென்னை வண்டி எல்லாம் சிகந்திராபாத்தில் இருந்து ஹைதராபாத்துக்குப் போகும் வழியில் உள்ள "நாம்பள்ளி" என்ற ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்.

அது போல ரெயில் மத்தியானம் 2-45க்கு சிகந்திராபாத் ஸ்டேஷன் போனது. நாங்கள் ரெயிலில் இருந்து இறங்கி நாங்கள் சென்னை வண்டியைப் பிடிக்க வேண்டிய நடைமேடைக்குப் போக ஒர் போர்ட்டரை அழைத்தோம். அவனும் வந்தான். நடைமேடை வெறிச்சோடிக்கிடந்தது. போர்ட்டரிடம் காரணம் கேட்டதற்கு ரெயில் வர இன்னும் நேரம் இருக்கிறது என்றான். அதற்குள் அங்கே சார்ட் ஒட்டி இருப்பதைப் பார்த்து விட்டு நான் உடனே போய் எங்களுக்கு முன்பதிவு ஆகி விட்டதா என்று பார்க்கப் போனேன். இப்போது மாதிரி கணினி வழி டிக்கெட் இல்லையே. முன்பதிவு இணைப்பு வண்டிக்குத் தந்தி கொடுக்க வேண்டும். நாம் டிக்கெட் வாங்கும் ஸ்டேஷன் மாஸ்டர் இதை நமக்காகச் செய்ய வேண்டும். அது மாதிரி செய்து அவருக்கு முன் பதிவு செய்யப்பட்டு விட்டது என்று பதில் வரும். அதன் ஒரு காப்பியை நாங்கள் வைத்திருந்தோம். அதை எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்தேன். முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. பெட்டி நம்பர், வண்டி நம்பர் எல்லாம் ஒத்துப் போனது. போர்ட்டர் என்னை விசித்திரமாகப் பார்த்தான். "ஏன் அதைப் போய்ப் பார்க்கிறே" என்றான். ஏன் கேட்கிறாய் என்றதற்கு "அது ஹைதரபாத் மெயில் வண்டியின் சார்ட், நீங்கள் போக வேண்டிய "சார்மினார் எக்ஸ்பிரஸுக்கு" இனிமேல் தான் ஒட்டுவார்கள்." என்றான். என்னனனனன்னன்னனனனன்னனன என்று நாங்கள் அலறினோம். போர்ட்டர் பயந்து விட்டான். "நாங்கள் போக வேண்டியது ஹைதராபாத் மெயில் தான். அதற்குத்தான் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது." என்று சொன்னதும் இப்போது அலற வேண்டிய முறை போர்ட்டருடையது. அவன் "என்ன்ன்னனனன்னனனன்னன்னன்' என்றான். "ஸாப், அந்த வண்டி டைம் மாற்றி விட்டார்கள். 2-20க்கே போய் விட்டது" என்றான். தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தோம்.

பிளாக்கர் போட மாட்டேன் என்று ஒரே தகராறு. அதைத் தவிர, இந்த TATA INDICOM BROADBAND CONNECTION வெறுப்பு ஏத்துகிறது. ஒரு நிமிஷத்திற்கு ஒருமுறை re-connection pending என்று error report வருகிறது. இந்த ப்ளாக் வந்தால் என் அதிர்ஷ்டம், வராவிட்டால் உங்கள் அதிர்ஷ்டம். பார்ப்போம் யார் ஜெயிக்கிறாங்கனு, ப்ளாக்கரா? நானா?

60. போலிகள் பலவிதம்.

எல்லாரும் போலிகளைப் பற்றி நிறைய எழுதறாங்க. மாயவரத்தாருக்குப் போலி இருக்காம். ஜெயக்குமாருக்குப் போலி இருக்காம். டோண்டு சார் விஷயம் எல்லாருக்கும் தெரியும். தமிழ் மணம் காசிக்குக் கூட போலி இருக்காம். இப்படி எல்லாரும் போலியைப் பற்றி எழுதும் போது நான் மட்டும் எழுதாவிட்டால் எப்படி? இதோ போலிகளுடன் என் அனுபவம்.

சின்ன வயசிலே அம்மா தனியாய்க் கஷ்டப் படறதைப் பார்த்துக் கொஞ்சம் உதவி செய்யலாமேனு ஆரம்பிச்சது. அப்புறம் இதிலே நான் நிபுணி ஆகி விட்டேன். என்ன பார்க்கறீங்க.நான் சொல்றது போளியைப் பத்தி. பார்க்கப் போனால் போளினு தான் சொல்லணும். ஆனால் சிலபேருக்கு இந்த 'ல' 'ள' 'ழ' தகறாறு இருக்கிறது. அவங்க எல்லாம் இதைப் போலினு தான் சொல்றாங்க. போளிகளில் பலவிதம் உண்டு. அவற்றில் முக்கியமானது தேங்காய் போளி, கடலைப்பருப்பு+தேங்காய்க் கூட்டணியுடன் உள்ளது, ஜீரா போளி மற்றும் பால் போளி. இதைத் தவிர சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி, உருளைக்கிழங்கு போளி, காரட், பீட்ரூட் கலவை போளி எல்லாம் உண்டு. ஆனால் போளி என்றால் மேலே கூறிய 4 வகைதான் பிரசித்தமானாது. இப்போ இந்த வெங்கடேஸ்வரா ஸ்டால் என்று போட்டுக் கொண்டு உள்ளே ஒன்றும் இல்லாமல் போளி என்ற பெயரில் ஒன்றைக் கொடுக்கிறார்களே அதையும் போளி என்று சொல்லலாம்.

இந்தத் தேங்காய் போளி செய்வதில், திருநெல்வேலிக்காரர்களை மிஞ்ச முடியாது. தேங்காய்த் திரட்டுப்பாலும் அவர்களின் தனிக் கைப்பக்குவம். கடலைப்பருப்பு+தேங்காய்க்கூட்டணியில் உள்ளது மதுரைப் பக்கம் ரொம்ப பிரசித்தம். கல்யாணங்களில் முதல் நாள் (மாப்பிள்ளை அழைக்கும் நாள்) கட்டாயம் இதைச் சாப்பாட்டில் போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஏதோ தப்பு நடந்த மாதிரி இருக்கும். இப்போ எல்லாம் கூட்டம் நிறைந்த தெருக்களில் எந்த மாப்பிள்ளையும் அழைப்பை விரும்புவது இல்லை. சில சந்தோஷங்களுக்கு, சில விலைகள். இந்த ஜீரா போளி மற்றும் பால் போளி இருக்கிறதே அதில் இந்த ஜீரா போளியை முதல் நாளே செய்து வைத்து மறு நாள் பாலில் போட்டுக் கொடுப்பதில் கில்லாடிகள் தஞ்சைத் தரணிக் காரர்கள். அப்பாடி, ஒரு வழியாக என் அண்ணா , தம்பி மனைவிகளின் பிறந்த ஊரான திருநெல்வேலியையும், என்னுடைய அருமை ஊரான மதுரையையும், நான் வாழ்க்கைப்பட்ட ஊரான தஞ்சாவூரையும் திருப்திப் படுத்தி விட்டேன். பார்க்கப் போனால் இது மஹாரஷ்ட்ரா, குஜராத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருக்கிறது. மஹாரஷ்டிரர்கள் (நான் சொல்வது மஹாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும்) செய்யும் ஒரு போளியைச் சாப்பிட்டால் நமக்கு வயிறு 2 நாளைக்குப் பசிக்காது. குஜராத்தில் தமிழ்நாட்டுப் பாணியில் தான் பார்த்தேன். ஹூஸ்டனில் உள்ள "THALI" என்ற பிரசித்தி பெற்ற ஹோட்டலில் சாப்பிடப் போனால் சுடச்சுட போளி வரும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். நம்மால் முடியாது என்பது வேறு விஷயம். ஆனால் நம்ம போளி புகழ் இந்த மாதிரி யு.எஸ். வரை போயிருப்பது ரொம்ப ஆச்சரியம் இல்லையா? இந்த போளி செய்வதில் நான் ரொம்ப நிபுணி. பெருமை அடித்துக் கொள்கிறேன் என்று நினைப்பவர்கள் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லுவார்கள். இதைப் படிக்கிற தண்டனை போதாது என்று இது வேறேயா என்று நினைப்பவர்களுக்கு: போளியைப் போலியின் தோலை உரிப்பதாக நினத்துக் கொண்டு சாப்பிடுங்கள். ருசிக்கும்.

பி.கு: திரு டோண்டுவிடம் நான் வைணவத்தைப் பற்றி சந்தேகம் கேட்டுப் பின்னூட்டம் கொடுத்ததற்குப் போலி "DOONDU" என்ற பெயரில் என்னை எச்சரித்திருக்கிறான். என்ன வழக்கமான மொழியில்தான் வந்தது.

Sunday, June 11, 2006

59.ஆரியக் கடவுள்கள்-ஒரு பார்வை.

தருமி சார்,
நான் எதுவும் சொல்ல வேணாம்னுதான் இருந்தேன். ஆனால் சில விஷயங்களுக்கு மட்டும் நீங்க பதில் சொல்ல முடியுமா?
சமணரான இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில், கண்ணனைப் பற்றிய பாட்டு வந்தது எப்படி?
கன்று குணிலாக்கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையத் தீங்குழல் கேளாமோ தோழி
கொல்லையஞ்சாரற் குருந்தொசித்தமாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லயந்தீங்குழல் கேளாமோ தோழி
என்றும் வருகின்றது.
மேலும் மதிப்புக்கு உரிய எம்.எஸ். அம்மா அவர்கள் ஒரு சிலப்பதிகார வரிப்பாடலைப் பாடியுள்ளார். அவற்றில் இருந்து சில வரிகள்.:

பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல வுந்தியிடை விண்ணவனைக்கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராயணா வென்னா நாவென்ன நாவே!

சமண முனிவரான இளங்கோவடிகள் காலம் எது? கூற முடியுமா? சங்க காலமா? அதற்கும் முந்தியதா? சங்க காலம் என்றால் சங்க காலத்திலேயே இவை எல்லாம் தமிழில் கவிதை எழுதும் ஒரு சமண முனி எப்படி அறிந்தார். பிற்பாடு வந்ததா? அப்படி என்றால் எப்போது வந்தது? அதிலும்ம் மஹா பாரதத்தில் நிகழ்ந்த கம்ச வதம், மற்றும் பாண்டவர்க்குத் தூது போனது எல்லாம் எப்படித் தெரிந்தது? கூற முடியுமா? மேலும் எல்லாருக்கும் தெரிந்த ஒளவைப் பிராட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பாரியின் மக்களான அங்கவை, சங்கவையைக் காத்தார் ஒளவை தான். பாரி சங்க காலத்தைச் சேர்ந்த கடை எழு வள்ளல்களில் ஒருவர். அந்த ஒளவை தான் விநாயகரைப் பற்றிப் பாடி இருக்கிறார் என்றால் சங்க காலத்திலேயே விநாயகர் வழிபாடு இருந்துள்ளது என்று ஒத்துக் கொள்ள வேண்டுமே! மேலும் நக்கீரர் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சங்கப் புலவர்களுள் முதன்மையானவர். அவர் முருகப் பெருமானிடம் அவர் கொண்டிருந்த பக்தி தெரியும். முருக பக்தி எப்போது வந்தது? முருகன் தமிழ்க்கடவுள் என்றால் தாய் தந்தையர்? தேவி மீனாக்ஷிக்கும், சுந்தரேசருக்கும் பிறந்த திருக்குமாரர் "உக்கிரக் குமார பாண்டியர்" என்று ஒத்துக் கொண்டாலும் மீனாக்ஷியை மணந்தது சிவன் தானே? அவர் எங்கிருந்து வந்தார்? நாம் தான் பிரிக்கிறோம்.
திருவிளையாடல் புராணம் எழுதிய "பெரும்பற்றப்புலியூர் நம்பி" என்பவர் தன் நாட்டு வாழ்த்தில் இவ்வாறு கூறுகிறார்.
"ஆவியந் தென்றல் வெற்பின்
அகத்தியன் விரும்பும் தென்பால்
நாவலந் தீவம் போற்றி
நாவலந் தீவம் தன்னுள்
மூவர்கட்கரியான் நிற்ப
முத்தமிழ்த் தெய்வச் சங்கப்
பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி" இதில் நாவலந் தீவு என்பது பாரத நாடு மொத்தத்தையும் குறிக்கும் என்பது புரிந்திருக்கும். இதில் எங்கே இருந்து வந்தது திணிப்பு?
மேலும் நாட்டார் தெய்வங்கள் என்று இப்போது நீங்கள் பிரித்திருக்கும் தெய்வங்கள் தான் எத்தனையோ வந்தேறிகளின் குல தெய்வமாக உள்ளது. சொள்ள மாடன், சுடலை மாடன், சடையன், சடைச்சி, மாரியம்மாள், காளி, பட்டாள அம்மன், பெரிய காண்டி அம்மன், கறுப்பு, முனியாண்டி, மாயாண்டி, மலையாளக் கறுப்பு, பேச்சி அம்மன், செல்லத்தம்மன், படவட்டம்மன், பிரமன், மாயன் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். இங்கெல்லாம் பூசாரிகள் செய்யும் பூஜையைத் தான் வந்தேறிகள் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். பிரித்தது நம்மை ஆள வந்தவர்கள். சாதி ரீதியாகப் பிரித்து ஆள நினைத்தவர்கள் இப்போது ஓரளவு அதில் வெற்றி காணத் தொடங்கி விட்டார்கள். அப்போது யாருக்கும் புரியவில்லை. நாட்டுச் சுதந்திரம் தான் முக்கியமாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பின் அரசியல்வாதிகளால் பிரிக்கப் படுகிறோம். நஷ்டம் நமக்குத் தான். இன்னும் சொல்லப் போனால் சில தெய்வங்களுக்கு மதுக்குடம் எடுக்கும் வழக்கம் கூட உண்டு என்றும் சொல்லுவார்கள். தென் மாவட்டங்களில் அது பரவலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பிரமன் - பிரம்மா
பேச்சி அம்மன் -சரஸ்வதி
மாரி அம்மன் -ரேணுகா தேவி
மாயாண்டி -சிவனும், விஷ்ணுவும் இணைந்தவர்.
சுடலை மாடன் - ருத்திரன்.
இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு பூர்வப் பெயர் உண்டு. ஆனால் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். சமணமும், புத்தமும் கூட வட நாட்டில் இருந்து வந்தது தான். நம் நாட்டில் மதம் என்று கூறும் எல்லாமே வெளியில் இருந்து வந்தவைதான். சநாதன தர்மத்தைத் தவிர. எல்லாக் கடவுளும் ஒன்று.

ஒரே கடவுள் வாழ்த்துப் பாடி எல்லாக் கடவுளும் ஒன்று என்று புரிய வைத்தார், செய்குத் தம்பிப் பாவலர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பாவலர், சதாவதானி. அவாரிடம் கடவுள் வாழ்த்துப் பாடச் சொல்லவும் என்ன பாடினார் தெரியுமா? "சிரம் மாறு உடையான்" என்று ஆரம்பித்துப் பாடினார். யாரைக் குறிக்கிறது என்று கேட்டதற்கு எல்லாரையும் என்றார். எப்படி என்றார்கள். பாவலர் சொன்னார்:
"விநாயகர் மாறுபட்ட சிரம் உடையவர் ஆதலால் அவர் சிரம் மாறு உடையார்.
முருகன் என்றாலோ சிரம் ஆறு உடையவன். ஆகையால் சிரம் ஆறு உடையோர்.
சிவனோ என்றால் தலையில் கங்கை ஆறு கொண்டவர். ஆகவே அவர் சிரத்தின் மேல் ஆறு(நதி) உடையவர்.
திருமாலோ ஆற்றின் நடுவில் தலை வைத்து (காவிரி, கொள்ளிடம் நடுவே ஆற்றில்) படுத்திருக்கிறார். ஆகவே அவரும் சிரம் ஆற்றில் உள்ளவர்." என்றார். கூட்டத்தினர் "எல்லாம் சர், இஸ்லாமியரான நீர் இந்துக் கடவுள் களைப் பற்றி எப்படிப் பாடலாம்" என்றனர்.
அதற்கு அவர் எல்லாம் ஒன்று தான். அல்லாஹ் என்ற பேரருளாளன் உலகுக்குத் தலையாய (சிரம்) வழியாக (ஆறு) மார்க்கத்தை அருளியவன். எனவே இது அவருக்கும் பொருந்தும் " என்றார். இது தான் உண்மை. நாம் தான் அடித்துக் கொள்கிறோம். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
இப்போது இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள் என்போருக்கு:
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள், விருப்பங்கள். சிலருக்கு அமைதி, சிலருக்கு ஆடம்பரம், சிலருக்குப் படிப்பு, சிலருக்குப் பணம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி அவரவர் தெய்வ வழிபாடும் செய்யலாம். இது வெறும் வசதிக்குத் தான். நோக்கம் ஒன்றே. ஆனால் எல்லாரும் ஞானத்தால் பண்பட்ட மனிதர்கள் இல்லையே. இந்த லெளகீகத்தில் உழல்பவர்கள் எல்லாருக்கும் ஆறுதல், பற்றுக்கோடு, நம்பிக்கை இறை உணர்வுதான். அதை சநாதன தர்மம் நம்மிடம் உனக்கு விருப்பமானதை நீயே தேர்ந்தெடு என்று கூறுகிறது. உங்களை மாதிரி எல்லாம் கடந்து விட்டவர்களுக்கு ஞானம் விரைவில் சித்திக்கும்.

Friday, June 09, 2006

57. ஒரு சினிமா விமரிசனம்.

இரண்டு நாளாகப் பேப்பரைப் பார்த்தால் ஜாம்நகர் செய்தி. தொலைக்காட்சியைப் பார்த்தால் ஜாம் நகர் செய்தி. இப்படி ஜாம் நகரைப் பற்றிச் செய்தியைக் கேட்டதில் இருந்தும், படித்ததில் இருந்தும், அதிலும் அந்த "அம்பேர்" தியேட்டரில் "ஃபானா" திரைப்படம் வெளியான செய்தி தெரிந்ததில் இருந்து என் மனம் துடிக்க ஆரம்பித்து விட்டது. உடனே ஜாம் நகர் நினைவுகள் வந்து முட்டி மோதிக் கொண்டு ஒரே டிராஃபிக் ஜாம் மூளையில். எதை எழுதுவது எதை விடுவது என்று புரியவில்லை. ஏற்கெனவே ராஜஸ்தானில் இருந்து கிளம்பி "காண்ட்வா" வரை வந்து விட்டு அம்போ என விட்டிருக்கிறேன். அதன் பரம் ரசிகர்களான திரு TRC அவர்களும், அம்பியும் என்னவோ ஏதோ என்று புரியாமல் தவிக்கிறார்கள். (அம்பி, TRC Sir, இரண்டு பேருக்கும் செலவில்லாமல் ஒரு விளம்பரம் கொடுத்து விட்டேன்.) அவர்கள் அப்படியே தவிக்கட்டும் என்று விட்டு விட்டு "அம்பேர்" தியேட்டர் பற்றிய சில செய்திகள் இதோ:

அம்பேர் தியேட்டருக்குப் பக்கத்தில் தான் நாங்கள் இருந்தோம். நாங்கள் இருந்த பகுதி ஊருக்குள் இருந்தாலும் இதுவும் மிலிட்டரி கண்டோன்மெண்டைச் சேர்ந்தது தான். ஜாம் நகரில் மட்டும் ஏனோ கண்டோன்மெண்டின் ஒரு பகுதி நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. அதில் தான் என் கணவரின் அலுவலகம் மற்றும் எங்கள் குடி இருப்பும் இருந்தது. மிலிட்டரி சப்ளை டெப்போ இருந்ததால் அதைச் சேர்ந்தவர்கள் குடும்பங்களும், எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பமும் இருந்தன. ராஜா காலத்திலேயே சொலேரியம் அமைத்திருக்கிறார்கள். நாங்கள் இருந்த சமயம் வேலை செய்யவில்லை. ஆனால் பேர் என்னமோ சொலேரியம் ரோடுதான். அந்த ரோடின் கடைசியில் என்றால் மிகக் கடைசியில் எங்கள் வீடு இருந்தது. ஒரு மர்ம, மற்றும் ஆவி உலகைப் பற்றிய கதைகள் எல்லாம் எடுக்கும்படியான அமைப்பைக்கொண்ட வீடு அது. வருபவர்கள் எல்லாம் பயப்படுவார்கள்.எங்களைத் தவிர. பக்கத்தில் சப்ளை டெபோவின் பின் வாசல் சந்து வழியாகப் போனால் உடனே அம்பெர் தியேட்டர் வரும். சனி, ஞாயிறுகளில் தமிழ்ப்படம் காலைக் காட்சி போடுவார்கள். என்னமோ தமிழ் நாட்டில் இருக்கும்போது தியேட்டர்களிலேயே குடி இருந்த மாதிரி நினைப்புடன் நான் வரும் எல்லாப் படத்துக்கும் போகலாம் என்று சொல்வேன். மெஜாரிட்டி கிடைக்காது. இதுவே நசீராபாத்தில் இருக்கும்போது எல்லாரும் அடித்துப் புடைத்துக் கொண்டு வருவார்கள். அங்கே திறந்த வெளி அரங்கம் தான். படைவீரர்களுக்கு இலவசம். எங்களைப் போன்ற அதிகாரிகளுக்கு நம்புங்கள் 1-30 ரூதான் டிக்கெட். இது ஊருக்குள் இருக்கும் தியேட்டருக்கும் பொருந்தும். ஆகவே சினிமா பார்ப்பது என்பது தான் அங்கே ஒரு சுவாரசியம். அதுவும் நல்ல வெயில் காலத்தில் இரவு 8 மணிக்குப் பின் தான் படம் பார்க்க முடியும். அதுவரை வெளிச்சம் இருக்குமே. அந்த மாதிரி அனுபவத்திற்குப் பின் மூடிய தியேட்டருக்குள் படம் பார்ப்பது என்றால் எனக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால் அது பாலச்சந்தர் படம். ஏதோ சஸ்பென்ஸ் உள்ள படம் என்றும் விமரிசனங்களில் படித்திருக்கிறேன். ஆகவே, குழந்தைகள் இருவரையும் விட்டு விட்டு, நாங்கள் மட்டும் படம் பார்க்கப் போனோம். (குழந்தைகள் தனியாகவா என்று கேட்கிறீர்களா? நாங்கள் இருந்தது ஆர்மி கண்டோன்மெண்ட். சிவில் ஆட்கள் அப்படி எல்லாம் நுழைய முடியாது. பால்காரர் கூட அனுமதியுடன் தான் வரமுடியும்.) நாங்கள் போகும் போது படம் ஆரம்பிக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. புத்தகம் படிப்பது என்றாலும் அட்டைப் பெயரில் இருந்து கடைசியில் எழுதும் printed and published by so and so வரை படித்தால் தான் எனக்குத் திருப்தி. அதே மாதிரி படம் பார்க்க வேண்டுமென்றால் censor certificate-ல் இருந்து ஆரம்பித்துப்பார்க்க வேண்டும்.

படம் ஆரம்பித்தது. ரஜினிகாந்த் படம் வேறே. எடுத்த எடுப்பில் மகன் ரஜினி காந்த் அப்பா ரஜினிகாந்தைத் திட்டுவதுடன் ஆரம்பித்தது. சரி, ஃப்ளாஷ் பாக் என்று நினைத்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் சரிதா, லட்சுமி பேச படம் "சுபம்" என்று போட்டார்கள். என்னடா இது பாலச்சந்தர் டெக்னிக் புது மாதிரியா வந்திருக்குனு நினைச்சோம். கிளம்பலாமா என்னனு புரியலை. 1/2 மணி நேரம்தான் ஆகி இருந்தது. அதற்குள் மறுபடி படம் ஓட ஆரம்பித்தது. இப்போது இடைவேளையில் இருந்து ஆரம்பித்தது. ஒரே தலை சுற்றல். எல்லாரும் படத்தை நிறுத்தச் சொன்னாரகள். படம் நின்றதும் விஷயம் என்னவென்று கேட்டால் படப் பிரதி இடைவேளையில் இருந்து ஆரம்பித்துத் தான் வந்திருப்பதாகவும் மற்றொரு பிரிண்ட் வரவில்லை என்றும், குழப்பத்தில் எதைக் காட்டுவது என்று புரியவில்லை என்றும் சொன்னார்கள். கடவுளே என்று நொந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தோம். டிக்கெட் காசைக் கொடுத்து விட்டார்கள். அதெல்லாம் அங்கே ரொம்ப கரெக்ட்டாக இருப்பார்கள். அதற்குப் பின் நான் தியேட்டரில் படமே பார்க்கவில்லை. குறிப்பிட்ட படங்கள் மட்டும் பார்ப்பதால் தியேட்டர் போவது ஒரு அலுப்பான விஷயமாகப் போய் விட்டது.
ஹூஸ்டனில் இருந்த போது எங்கள் பையன் ஒரு மலையாளப்படம் dvd கொடுத்துப் பார்க்கச் சொன்னான். "காக்காய், குயில்" என்ற அந்தப் படம் மிக அருமை. மோஹன்லாலுடன் சுரேஷ் பாபு என்று நினைக்கிறேன். நடிப்பு, கதை, தயாரிப்பு எல்லாமே நன்றாக இருந்தது. வேலை கிடைக்காத இரண்டு நண்பர்கள் வயதான பணக்காரத் தம்பதியிடம் பேரன் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். உண்மையான பேரன் இல்லை. ஒருத்தன் தன் உடலைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள அனுமதிக்க மற்றொருவன் குரல் மட்டும் கொடுக்கிறான். தம்பதியர் நினைப்பதோ ஒருத்தன் தான் என்று. இரண்டு பேரின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடிக்கும் ஊர்க்காரர்களை நண்பர்கள் ஏமாற்றுவதும், பின் தாத்தா, பாட்டிக்கு விஷயம் தெரிவதும், உடலாய் இருந்தவன் ஓடிப் போவதும், குரலாய் இருப்பவன் என்ன செய்வது என்று தவிக்கும்போது போனவன் மனசு கேட்காமல் திரும்ப வருவதும், தாத்தா, பாட்டி இருவரையும் ஏற்றுக் கொள்வதும் மிக அருமை. இவ்வளவு யதார்த்தமான படங்கள் தமிழில் வருவது இல்லை.

சூர்யா நடித்த சில படங்கள் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நான் பார்த்த வரை "கஜினி" பரவாயில்லை. பிதாமகனில் சூர்யா நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் லைலாவுடன் அவர் ஆடும் ஆட்டங்கள் எந்தக் கிராமத்திலும் நடக்காத ஒன்று. கிராமம் பூரா ஒரு வாலிபன் ஒரு இளம்பெண்ணை உப்பு மூட்டை போலத் தூக்கிக் கொண்டு ஓடுவது நடக்கவே முடியாத ஒன்று. பெரியகுளம் வடகரையில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பெரியகுளம் மாதிரி ஊரில் (போன வருடம் கூடப் போனேன்) இந்த மாதிரி எல்லாம் நடக்காது. மேலும் அந்தப் பெண்ணை அவள் வீட்டில் என்ன தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்களா என்றும் புரிய வில்லை. எப்போதும் சூர்யா&பார்ட்டி கூடவே சுற்றுகிறாள். அவள் படித்துக் கொண்டிருந்த படிப்பு என்ன ஆனது? இந்த மாதிரிக் கதா நாயகிகள் எல்லாம் தமிழ் சினிமாவில் தான் வருவார்கள்.
இப்போது போன வாரம் "சண்டக்கோழி" (சண்டைக்கோழி இல்லை)படம் கடைக்காரர் ரொம்ப சிபாரிசு செய்து கொடுத்தார். ஆனால் பார்க்க முடியவில்லை.வெளியே போகும்படி ஆகிவிட்டது. அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டோம். பார்த்தால் எப்படி என்று எழுதுகிறேன். அதுவரை பெரிதாக எதிர் பார்த்து வந்தவர்களுக்கு ரொம்ப நன்றி. ஏமாற்றத்துக்கு வருத்தங்கள்.

Thursday, June 08, 2006

56. அனுபவம் புதுமை

எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அந்தப் பெண் அழுவதைப் பார்த்தால். என்ன என்று விசாரிக்க என் பெட்டியில் இருந்தவர்களை அனுப்பலாம் என்று நினைத்தேன். அதற்குள் அவர்களே "பஹின் ஜி, bhidhai தேகோ" என்றனர். நான் சரியாகக் காதில் வாங்காமல் ஏதோ மிட்டாய் என்று நினத்துக் கொண்டு இப்போ வேண்டாம் என்று சொன்னேன். உடனே அவர்கள் என்னைப் பார்த்து, "நஹி, பஹின், கோயி கானேவாலே சீஸ் நஹி. உஸ் லட்கி அப்னி மா பாப் ஸே bhidhai லேத்தி ஹை". என்றார்கள். அப்போதுதான் புரிந்தது அவள் புதிதாகக் கல்யாணம் ஆகி முதன்முதல் மாமியார் வீடு போகிறாள் என்றும் அவளை வழி அனுப்பத்தான் இவ்வளவு கூட்டமும் என்று. மாப்பிள்ளை எங்கே என்று தேடினால் அவர் ஒரு பக்கம் நின்று அவர் உறவினருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இது எல்லாம் புதுசு இல்லை என்பது போல மிகச் சாதாரணமாக இருந்தார். இந்தப் பெண் அழுது கொண்டே ஒவ்வொருவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டது. பையன் வீட்டுக் காரர்களும் இது சகஜம் என்பது போல் சாதாரணமாக இருந்தார்கள்.
உண்மையில் இந்த "bhidhai" கல்யாணப் பெண்ணின் கல்யாண சமயம் அவள் கூடப் பிறந்த சகோதரிகளால் ஒரு பாட்டாகவே பாடப்படுகிறது. அதிலும் பஞ்சாபியில் இதைக் கேட்டால் அர்த்தம் புரியாமலே அழுகை வரும். ஊர்மிளா நடித்த ஒரு ஹிந்திப் படத்தில், (பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி எடுத்தது) கதாநாயகி ஊர்மிளாவிற்குத் திருமணம் நிச்சயம் ஆனதும் அவள் தங்கைகள் இந்தப் பாட்டைப் பாடுவார்கள். படம் பேர் மற்றும் பாட்டு இரண்டும் நினைவு வரவில்லை. (வல்லாரையை நிறுத்தினதாலே இருக்குமோ). நினைவு வந்ததும் சொல்கிறேன். பாட்டு மிக உருக்கமாக இருக்கும். பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை" பாட்டுக்குப் பின் நான் அழுதது இந்தப் பாட்டைக் கேட்டுத்தான்.

வண்டி கிளம்பியது. எனக்கு அந்தப் பெண் வண்டியில் ஏறியதும் அழாமல் இருக்கிறாளா என்று பார்க்க ஆவல். ஆனால் அவள் வேறு பெட்டி. இப்போது போல நீநீநீநீநீநீநீநீளமாகப் போக முடியாது. கீழே இறங்கினால் அடுத்த ஸ்டேஷனில் தான் திரும்ப ஏற வேண்டும். ஆகவே ஆசையை அடக்கிக் கொண்டேன் வேறு வழியில்லாமல்.

வழியில் பிரசித்தி பெற்ற சித்தூட்கட் ஊர் வந்தது. ராணி பதுமணி வாழ்க்கைப் பட்டு அலாவுதீன் கில்ஜியால் நெருப்பில் இறங்கின ஊர். கோட்டை ரெயிலில் இருந்து பார்க்கும் போதே நன்றாகத் தெரியும். பழமையை அப்படியே காப்பாற்றி வைப்பதில் ராஜஸ்தான், குஜராத்தியருக்கு ஈடு யாரும் இல்லை என்று என் எண்ணம். இப்போது எப்படியோ?(கைப்புள்ள வந்ததும் கேட்டால் தான் தெரியும்.) அந்தக் கோட்டையை ஒரு நாள் போய்ப் பார்க்க மனதுக்குள் குறித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் எல்லாம் மத்தியப் பிரதேச எல்லை வந்து விடும்.
இரவு நெருங்கும் சமயம் அரை இருளில் "பாதாள்பூர்" என்னும் ஸ்டேஷனில் இருந்து மத்தியப் பிரதேச எல்லை தொடங்கியது. ஊர் உண்மையிலேயே பாதாளத்தில் தான் இருந்தது. ரெயில் மேமேமேமேமேமேமேலேலேலேலேலேஊர் பார்க்கவே மிக அழகாக இருந்தது. அதுவும் மேலே இருந்து கீழே பார்ப்பது ஒரு தனி அனுபவம். ராத்திரி நெருங்க நெருங்க கொஞ்சம் பயமும் வந்தது. மறுபடி சம்பல் வருமே அதான். ஆனால் எந்தத் தொந்திரவும் இல்லாமல் "ரத்லம்" ஸ்டேஷனை வண்டி கடந்தது. (அதிலும் அந்த வண்டியில் முதல் வகுப்பில் 4 படுக்கை வசதி கொண்டது ஒன்றையும், 2 படுக்கை வசதி கொண்டது ஒன்றையும் தவிர வேறு கிடையாது. அதில் நாங்கள் மட்டும் தான்.) அதற்குப் பின் அவ்வளவு பயம் இல்லை. மான் சிங், பூலான் தேவி எல்லாம் எங்களைப் பார்த்து பயந்து விட்டார்களோ என்னமோ?

காலை நேரத்தில் இன்னும் சொல்லப்போனால் அதிகாலையில் வண்டி "காண்ட்வா" என்னும் ஸ்டேஷனை அடைந்தது. இங்கே சில மணி நேரம் வண்டி நிற்கும் எனவும் நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் எனவும் சில பயணிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே கீழே இறங்கினாலும் வட இந்தியாவில் எல்லாம் கடைகள் மிகவும் நேரம் கழித்துத் தான் திறப்பார்கள். புதுப் பால் என்பது வரக் குறைந்தது 8 மணி ஆகும் சீக்கிரம் கிடைத்தால் நம்ம அதிர்ஷ்டம். ஆதலால் என்ன செய்வது என்று புரியவில்லை. ஸ்டேஷன் பக்கத்திலேயே கடைத்தெரு. பிரதானமானது. ரெயில் கிளம்புவதற்குள் போக வேண்டும் என்று நினைததோம். ஆனால் நடந்தது என்ன?

Wednesday, June 07, 2006

55. அனுபவம் புதுமை.

பெட்டியின் உள்ளே போக முடியாமல் நாங்கள் தவித்ததைப் பார்த்த டி.டி.ஆர். வந்து "ஏதாவது உதவி தேவையா" என்று கேட்டார். பின் நிலைமையைப் பார்த்துவிட்டு அவரே ஒரு ரெயில்வே ஊழியரைக்கூப்பிட்டு சாமான்கள் வைக்கும் சிறு அறை போன்றதைத் திறந்து சில சாமான்களை அதில் எடுத்து வைக்கச் சொன்னார். அந்த முதல் வகுப்புப் பெட்டியில் "A to F" வரை உள்ள எல்லாரும் தங்களிடம் அதிகமாக உள்ள சாமான்களையோ, வெயிட் அதிகம் உள்ளதையோ வைக்க இடம் வேண்டும். ஆகவே ஒருமாதிரி, (ஒரு மாதிரிதான்) சாமான்களை வைக்க முடிந்தது. இன்னும் மிச்சம் இருந்தவற்றைக் கீழே மற்றும் மேலே என்று மறுபடியும் ஒரு மாதிரியாக அடுக்கி விட்டுப் பின் கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். முதல் வகுப்பு கூப்பேயில் முன்பதிவு செய்யாத பிரயாணிகள் மாதிரி போனது அநேகமாக நாங்களாகத்தான் இருக்கும். ஏற்கெனவே, உட்கார படுக்க இடம் இல்லை. இந்த அழகில் மத்தியப் பிரதேசச் சம்பல் பள்ளத்தாக்கு அப்போது ரொம்பப் பிரசித்தம். அது வேறு நினைவில் வந்து பாடாய்ப் படுத்தியது. ஒரு சாயந்திரம், ஒரு பகல், இரண்டு இரவு பிரயாணத்திற்குப் பின் நாங்கள் ஒரு வழியாக ஆக்ரா கண்டோன்மெண்ட் ஸ்டேஷனை அடைந்தோம். மூன்றாம் நாள் காலையில். நாங்கள் இது வரை வந்தது அகலப்பாதையில். இனிமேல் போக வேண்டியது மீட்டர் கேஜ் எனப்படும் குறுகிய பாதை வண்டியி. அது ஆக்ரா கோட்டை ஸ்டேஷனில் லிருந்து கிளம்பும். கண்டோன்மெண்டில் இருந்து ஒரு டாக்ஸி வைத்துக்கொண்டு போனோம். டாக்ஸியிலும் அதே கதைதான். சாமான் மட்டும் வைக்க முடிந்தது. கிட்டத்தட்ட நாங்கள் தொங்கிக்கொண்டு போனோம். சீக்கியரான அந்த டாக்ஸி டிரைவர், எதற்கும் கலங்காமல் எங்களைப் பத்திரமாகக் கொண்டு சேர்த்ததோடு, சாமான்களை இறக்கி ஸ்டேஷன் உள்ளே கொண்டு போகவும் மிகவும் உதவினார். அந்த முதல் வகுப்பு பயணிகள் தங்கும் அறையே மிரண்டு போய் எங்களைப் பார்த்தது. எங்கள் சாமான்களை வைத்ததும் எல்லாரும் வெளியில் தான் உட்கார வேண்டும். சாமான்களை வைத்துவிட்டு சற்று ஆஸ்வாசப் படுத்திக் கொண்டோம். ஒரு போர்ட்டர் வந்து விவரம் கேட்டுவிட்டு, "வண்டி இரவுதான். 9மணிக்கு வரும். 10 மணிக்கு மேல் எப்போ வேண்டுமானாலும் கிளம்பும்" என்று ஹிந்தியில் சொன்னான். மேலும் அவன் சொன்ன யோசனை என்னவென்றால், "ஒரு நாள் பூரா இருக்கிறது. சாமான்கள் இங்கேயே இருக்கட்டும். நீங்கள் இருவரும் குழந்தையுடன் ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் எல்லாம் பார்த்து விட்டு வாருங்கள்." என்பது தான். மனதுக்குள் ஷாஜஹானும், மும்தாஜும் டூயட் பாடிக் கூப்பிட்டாலும் போக மனம் இல்லை.எப்படியும் இங்கே ஒரு மூன்று வருடமாவது இருப்போம். அதற்குள் எத்தனையோ முறை இந்த வழி போக வேண்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம். இரவு வண்டியில் ஏறினோம். இது சின்ன வண்டியா? சாமான் வைத்ததும் நிறைந்து விட்டது. பெட்டியில் காற்று வேறே இலை. விளக்கும் இல்லை. ரெயில் கிளம்பி வேகம் எடுத்தால் மின் விசிறி சுற்றும். விளக்கு எரியும். இல்லாவிட்டல் இல்லை. குழந்தை ஒரே அழுகை. வெளியே வைத்துக் கொண்டு எப்படியோ சமாளித்தோம். ஒரு வழியாக மறு நால் காலை 8 மணிக்கு அஜ்மேர் வந்தது. என் கணவரின் சிநேகிதர் வந்திருந்தார். அவர் என்ன நினைத்தார் என்றால், எங்கள் மொத்தக் குடும்பமும் வந்திருக்கிறது என்று. நாங்கள் இரண்டு பேர்தான் என்றதும், இரண்டு பேருக்கு இவ்வளவு சாமானா? என்று திகைத்துப் போனார். பின் சொன்னார். "நல்லவேளை. க்வார்ட்டர்ஸ் எல்லாம் ரொம்பப் பெரிது." இப்படியாக எங்கள் ராஜஸ்தான் குடித்தனம் ஆரம்பித்தது.

அங்கே இருந்த சில வருடங்களில் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்னை ஏதாவது காரணம் காட்டி வந்து விடுவோம். குழந்தை சின்னதாக இருந்ததாலும், பள்ளிக்குப் போகும் வயசு இல்லை என்பதும் வசதியாக இருந்தது. அந்த மாதிரி ராஜஸ்தான் போனதும் ஒரு 6 மாதம் கழித்து ஊர்ப்பக்கம் வரும்படி மாமனாரின் சஷ்டி அப்த பூர்த்தி வந்தது. (ராஜஸ்தான் குடித்தனக் கதை தனியாக வரும்). சஷ்டி அப்த பூர்த்திக்காகத் தயார் ஆனோம். என் கணவர் தான் மூத்த பையன் என்பதாலும், வீட்டில் ஒரே சம்பாதிக்கும் நபர் என்பதாலும் எங்கள் பொறுப்பு அதிகம். ஆகவே முன்னாலேயே போக வேண்டும் என்று டிக்கெட் வாங்கினோம். என் கணவருக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. ஏன் நாம் காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸிலேயே போகக் கூடாது என்பது தான் அது.இந்த வழியில் போய்ப் பார்க்கலாமே என்று தான். சிகந்திராபாத்திற்குச் சில ஸ்டேஷன் முன்னே உள்ள காச்சிகுடா என்னும் இடத்தில் இருந்து கிளம்பும் அது அஜ்மேர் வரை செல்லும் அப்போதெல்லாம். திரும்ப அஜ்மேரில் இருந்து காச்சிகுடா வரை செல்லும். அந்தக் காச்சிகுடாவை நான் இது வரை பார்த்ததே கிடையாது. ரெயிலில் எல்லாரும் சிகந்திராபாத்தில் தான் ஏறுவார்கள், இறங்குவார்கள். இந்த வண்டி யானது மெதுவாக அஜ்மேரில் இருந்து கிளம்பி (அப்போதெல்லாம் அஜ்மேரில் இருந்து காலை நேரம் கிளம்பும்) நசீராபாத் வரும்போது 9-30 (காலை) மணி ஆகும். மிலிட்டரி கண்டோன்மெண்ட் என்பதால் ஆட்கள் ஏறுவது இறங்குவது, சாமான் ஏற்றுவது எல்லாம் இருக்கும். மேலும் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருப்பவர்களுக்கும் இது ஒரே போக்குவரத்து வண்டி. ஆகவே உள்ளூர் ஜனக்கூட்டமும் இருக்கும். இப்படியே இந்த வண்டி ராஜஸ்தானின் தென் எல்லையைத் தொட இரவு ஆகும். அதற்குப் பின் மத்தியப் பிரதேசம். வண்டி போபோபோபோபோபோபோபோபோபோய்க் கொண்டே இருக்கும். இந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து போவது என்பது ஒரு புது அனுபவம். நாங்கள் திட்டமிட்டபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். கூடவே சில உள்ளூர் ஜனங்கள். அவர்களிடம் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் "இது பதிவு செய்யப்பட்ட பெட்டி. யாரும் ஏறக்கூடாது." என்று புரிய வைப்போம். அவர்களும், "டீக் ஹை, பஹின் ஜி, ஹம் லோக் கிஸ் லியே ஹை? ஹம் ஆப் கே மதத் கரேங்கே! இஸ் பேட்டி மே கிஸி கோ ஆனே நஹி தேங்கே!." என்று சொல்லி விட்டு அங்கேயே கழிவறை செல்லும் வழியில் அழுத்தமாக உட்கார்ந்து கொள்வார்கள். நாம் கழிவறைக்குப் போவது என்றால் கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட நடைபாவாடை விரிப்பார்கள். அந்த அளவு மரியாதை. குழந்தை போக வேண்டுமென்றாலோ இன்னும் கேக்கணுமா? குழந்தையை வாங்கி அவளுக்கு வேண்டிய சிசுரூஷை செய்து, இப்படி ஒரு ராணி போல என்னை உணர வைத்தார்கள். சாய்வாலா போனால் கூப்பிட்டால் போதும் அவர்களே நேரே கடைக்குப் போய் ஸ்பெஷல் சாய் போடச் சொல்லிக் கொண்டு வந்து கொடுத்து உபசரிப்பார்கள். இப்படியே வண்டியில் போகும்போது பிக்கானீர் ஸ்டேஷன் வந்தது. (இங்கே ராஜஸ்தான் பெயிண்டிங்கும், மசாலா அப்பளமும் பிரசித்தம். கைபுள்ள, மறக்காதீங்க) பிக்கானீர் ஸ்டேஷனில் ஒரே கூட்டம். ஒரு இளம்பெண். என் வயது இருப்பாள். கூடவோ அல்லது குறைத்தோ ஒரு வயது அல்லது இரண்டு வயது இருக்கும். விம்மி விம்மி அழ சுற்றிக் கூட்டமாக எல்லாரும் சமாதானப் படுத்துகிறார்கள். ஒவ்வொருவராக அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கையில் புதுசாக மெஹந்தி. கை நிறைய வளையல்.நெற்றியில் சிந்தூரம். பார்த்தால் புதுக் கல்யாணப் பெண் மாதிரி இருக்கிறது. ஏன் இப்படி அழுகிறாள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போனேன்.