யாரும் பயப்பட வேணாம். இங்கே நான் யோகா வகுப்பு ஒண்ணும் எடுக்கப் போறதில்லை. யோகாவினாலே எனக்கு ஏற்பட்ட நன்மை பத்தி மட்டும் தான் சொல்லப் போறேன். இன்னிக்குப் பேப்பரிலே ஒரு இரண்டு, மூன்று இடத்தில் யோகா பற்றிப் படித்தேன். இப்போவெல்லாம் நிறையப் பேசப்படுகிறது. எனக்குச் சின்ன வயசிலேயெல்லாம் யோகா பத்தி அவ்வளவு விவரமாத் தெரியாது. என் சிநேகிதி ஒருத்தியோட அப்பா தினமும் ஆசனம் பண்ணுவார். பார்த்திருக்கேன். அப்போவெல்லாம் இது ஆண்களுக்கு மட்டும் உள்ளதுனு நினைச்சிருக்கேன். பின்னாலே வட இந்தியாவுக்கு வந்து வாழ நேர்ந்ததிலே இது எல்லாரும் பண்ணலாம்னு புரிஞ்சுது. ஆனால் எனக்குச் சேரச் சந்தர்ப்பம் வாய்க்கலை. குடும்பப் பொறுப்பு, மேலும் என் கணவருக்கு இதில் அவ்வளவு பிடித்தம் இன்மை என்று புரிந்ததால் இது எல்லாம் நடக்காது என்று இருந்தேன்.
ஒரு 4,5 வருஷங்களுக்கு முன்னால் எனக்குக் காலில் ரத்தக்குழாய் அடைத்துக் கொண்டு ரத்த ஓட்டம் இல்லாமல் கால் வீங்கிக் கொண்டது. வீக்கம் என்றால் பார்த்தால் பயமா இருக்கும். ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. டாக்டரிடம் காட்டியதில் எல்லா சோதனைகளும் பண்ணிப் பார்த்து விட்டு 6 மாத காலம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளச் சொன்னார். சிகிச்சை தொடர்ந்தது. ஆனால் என்னால் வெளியில் எங்கும் போக முடியவில்லை. வீட்டுக்கு மின்சார பில் கட்டுவதில் இருந்து எல்லாவற்றுக்கும் நான் ஒருத்தியே போய்க் கொண்டிருந்தேன். இப்போது பாத்ரூம் போகக்கூட ஒருத்தர் கூட வந்து பிடித்துக் கொண்டால்தான். அந்த நிலமையிலும் பிடிவாதமாக நடந்தேன். நடையே வீட்டுக்குள்தான். அதுவும் இல்லாட்டி என்ன செய்வோம் என்ற பயம்தான். அவருக்கு ஆஃபீஸ் போகும்போது என்னைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கவலையாக இருக்கும். பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது மாற்றி மாற்றி இருப்பார்கள். அப்போதான் ஒரு நாள் இவரோட ஆஃபீஸ்ல ஒருத்தர் இவரோடக் கூட வண்டியில் வருவார். அவருக்கு ஏதோ நரம்புக் கோளாறு ஒரு விபத்தில் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்தவர், ஆஃபீஸுக்கு ரொம்ப சிரமப்பட்டு வருவாராம். அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பிக்கவே என் கணவர் அவ்ரிடம் விவரம் கேட்டதில் அவர் யோகாவைப் பற்றிக் கூறி இருக்கிறார். உடனேயே என்னிடம் வந்து அதைப் பற்றிக் கூற நானும் யோகாவில் சேருகிறேன் என்று கேட்டேன். அப்போது கொஞ்சம் நடக்க ஆரம்பித்து இருந்தாலும் துணை வேண்டும் என்ற நிலை. கொஞ்ச நாள் ஆட்டோவில் போகிறேன் என்று கூறி விட்டுப் போக ஆரம்பித்தேன். முதலில் என்னைப் பார்த்த என் யோக குரு திரு ராஜூ அவர்கள் எல்லாப் பழக்க வழக்கங்கள், என்னோட கோப தாபங்கள், உணவுப் பழக்கம் முதலியவற்றைக் கேட்டு அறிந்தார். பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தார். கீழேயே உட்கார முடியாமல் இருந்தவளைக் கீழே உட்கார வைத்தார். பத்மாசனத்தில் உட்கார முடிந்தது. கீழே படுக்க முடியாது. கீழே படுத்து சவாசனம் பண்ண வைத்தார். நடக்க முடியாமல் இருந்தவளைத் தினமும் வகுப்பிற்கு வரும்போதும், போகும்போதும் நடந்து போய்விட்டு வரும்படிச் செய்தார். "என்னால் இனி நடக்கவே முடியாது. பக்கத்தில் இருக்கும் அண்ணா வீட்டுக்குக் கூட வண்டியில் போக வேண்டி உள்ளதே" என்று ரொம்ப நொந்து போய் இருந்தேன். யோகா செய்ய ஆரம்பித்த 6 மாதத்தில் என்னால் 1கி.மீ வரை நடக்க முடிந்தது. இப்போது தினமும் 4, 5 கி.மீ வரை நடக்கிறேன். யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை என்று புரிந்தது. ஆண்டவன் படைத்த இயந்திரமான இந்த உடல் இயங்கத் தேவையான சக்தியை கொடுக்கும் சூக்ஷ்மம் நிறைந்தது. உணவு, ஒழுக்கத்துடன் யோக முறைகளும் சேர்ந்து கொண்டால் பிணியைப் போக்கலாம். இதுதான் யோக சிகிச்சை எனப்படும். இதிலே ஒரு சில யோகாசனங்கள் தினமும் செய்து வந்தாலே போதும். உடலும் மனமும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இதிலே உள்ள சூர்ய நமஸ்காரம் என்னும் வழிமுறை நாஸ்திகர்கள் கூடச் செய்யலாம். எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.
பிராணாயாமம் யோகாசனத்தின் ஒரு பகுதி தான். இந்த மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்வதின் மூலம் மன அமைதி கிட்டும். எப்படித் தாமிரக் கம்பியில் மின்சாரம் இருப்பது நம்மால் காண முடியாவிட்டாலும் உண்மையோ, அது போல நம் உடலில் பரவி உள்ள பிராணனும் நம்மால் தொட்டு உணரவோ கண்களால்காணவோ முடியாதது.இந்தப் பிராணனை ஆட்சி செய்ய முடிந்தால் உண்மையான யோகி ஆகலாம் என்கிறார்கள். நானும் பிராணாயாமம் செய்கிறேன். ஆனால் பிராணனை ஆட்சி செய்யும் நாள் இன்னும் வரவில்லை.எங்காத்துக் காரரும் கச்சேரிக்குப் போகிறார் மாதிரிதான். முயற்சி செய்தால் கிடைக்குமா பார்க்கலாம்.
கீதா
ReplyDeleteசொல்வது அத்தனையும் உண்மை.
பலருக்கு அது ஏதோ மதம் பற்றியது என்று எண்ணுகிறார்கள்.
இதைப்பற்றி பிறகு ஒரு பதிவு போடலாம் என்றுள்ளேன்.
வடுவூர் குமார்,
ReplyDeleteமுதல் முதல் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். இந்த வலைப்பதிவுக்குப் பின்னூட்டம் இட்ட ஒரே நபர் என்ற வகையிலும் நன்றி. இதில் இருந்தே தெரியும் யோகா என்றால் ஏதோ என்னவோ என்று எல்லாரும் பயப்படுவது. இத்தனைக்கும் நான் இன்னும் விவரமாக எழுத நினைத்து விட்டு விட்டேன். நீங்கள் எழுதுங்கள். நான் படிப்பேன்.
நன்றி கீதா,. என் கால் வலிக்கும் விரல்கள் மரத்துப்போவதற்கும் யோகா செய்யவேண்டும் என்றூ நினைப்பேன்.உங்கள் குரு விலாசம் கொடுக்க முடியுமா?
ReplyDelete