"யாதுமாகி நின்றாய்-காளி!
எங்கும் நீ நிறைந்தாய்:
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ!
பூதமைந்தும் ஆனாய்-காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்!"
பாரதி கண்ட காளி இவள். பாரதி காளியின் பக்தன். கண்ணனின் பக்தன் ஆனால் காளியின் பக்தனும் ஆனான்.பாரதி எவ்வாறு காளியைத் துதித்தான் என்றால்
"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண்" என்றும் "நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்:அல்லது நீங்கும்" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே!
சொல்லத்தகுந்த பொருளென்று காண்!இங்குசொல்லுமவர் தமையே!
அல்லல் கெடுத்தமரர்க்கிணையாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்." என்கிறான்.
அந்தக் காளியின் காட்சி எவ்வாறு என்பதைப் பார்ப்போமா?
படர்ந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்ததனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் குருதி சொட்டும் அசுரனின் தலை என்று காண்போரைக் கதி கலங்க வைக்கும் தோற்றமுள்ள இந்தக் காளி, சடலமாகத் தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன்னிரு கால்களைப் பதித்துப் பயங்கரமாகத் தரிசனம் தருகிறாள். ஆனால் இந்தத் தோற்றம் ஒவ்வொன்றுக்கும் அரிய தத்துவங்கள் உண்டு.
உயிர்கள் அவளிடம் தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவளின் மாலையில் உள்ள அரிந்த சிரங்கள் உணர்த்துகின்றன. மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்துக்கும் சக்தியாக இருப்பவள் அவள் ஒருத்தியே என்பதை உடைந்த கரங்களால் ஆன ஆடை மூலம் தெரிய வரும். ஆணவத்தோடு மனிதர்கள் செய்யும் அற்பக் காரியங்களை அவள் காலக்கிரமத்தில் வெட்டி வீழ்த்துகிறாள் என்பதை இடது கரத்தில் உள்ள வாள் தெரிவிக்கிறது.இயற்கை நடை முறைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடும் மனிதன், இறுதியில் தாயின் வாளுக்கு வெட்டுண்டு பலியாவான் என்பதை வெட்டுண்ட சிரம் தெரிவிக்கிறது. காளியை ஆராதிப்பவர்கள் வீரமாக இருக்க வேண்டும். பயம் கூடாது. அதாவது மரண் பயம். காளி அனுதினமும் சம்ஹாரத் தொழிலைச் செய்கிறாள்.இதையே செந்நிறமான அவளுடைய நீட்டிய நாக்கு காட்டுகிறது. இவளுடைய கோரத் தாண்டவம் நடக்கும் இடம் சுடுகாடு. நம் மனத்தில் ஏற்படும் ஆசை, காமம், கோபம், பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் ஒழிந்து பஸ்பம் ஆக வேண்டும் . நம் மனம் நிர்மலம் ஆக வேண்டும் என்பதையே அவளது தாண்டவத்தலம் சுடுகாடு தெரிவிக்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் அல்லவா? கோபம் என்றால் எப்படிப்பட்ட கோபம்? அக்கிரமம், அநீதி, அநியாயம் ஆகியவற்றைக் கண்டால் சீறி எழுந்து எதிரியைக் குதறி விடும் கோபம். அதுவே அவளுடைய ஒப்பற்ற குணமும் ஆகிறது.அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா? அப்போதுதான் உலகில் நீதியும், நேர்மையும், நியாயமும் ஏற்பட்டு சாந்தியும், சந்தோஷமும் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தியாக இருந்து நம்மை ரட்சிப்பவளே காளி என்னும் மஹாசக்தி.இவளைத்தான் ஊழிக்கூத்தில் பாரதியார்
"காலத்தொடுநிர்மூலம் படுவுலகும்-அங்கே கடவுள் மோனத் தொனியே தனியாயிலகும்-சிவன்
கோலங்கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத்திடுவாய்!
அன்னை!அன்னை! ஆடுங்கூத்தை
நாடச் செய்தாய் என்னை!"
என்று பாடுகிறார்.
அன்னையின் கோபம் ஈரேழு பதினாலு உலகத்தையும் வாட்ட, அவள் கோபத்தைச் சிவன் தான் ஒருவரே தணிக்கமுடியும் என்று உணர்ந்து, சடலம் போலக் கீழே படுக்கிறார். தன்னிலை தெரியாது கோபாவேசத்தில்இருக்கும் அன்னை சிவன் மார்பில் ஏறி நின்று ஊழிக்கூத்தாடினாள். அவள் காலால் மிதியுண்ட சிவன் ஒரு குழந்தையாக மாறி அழ, குழந்தையின் குரல் கேட்ட அன்னை கோபம் தணிகிறாள். அது போல நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை"எனது மகவு" என்று அருள் பாலிப்பாள். இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் "பழையோள்" எனவும் "கொற்றவை" என்றும் வழிபட்டிருக்கிறார்கள்.
கருத்து ஆதாரம்: ஜபல்பூர் நாகராஜன்
என்ன, என் பதிவு படித்த தாக்கமா?
ReplyDeleteஆழ்ந்த கருத்துக்கள், அற்புதமான சொற்கள். தீர்ந்தது சந்தேகம். பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகள்!
எனக்கும் காளி, சக்ரத்தாழ்வார் தான் இஷ்ட தெய்வங்கள்.
அம்பி, தவறாமல் வந்து என்னைப் பாராட்டும் உங்களுக்குத் தான் நான் நன்றியும் பொற்காசுகளும் கொடுக்க வேண்டும். ரொம்ப நன்றி, அம்பி.
ReplyDeleteகாளியின் தத்துவத்தை நன்றாக விளக்கியதற்கு நன்றி.இருந்தாலும் பாரதி இப்படியும் பாடியுள்ளார்
ReplyDeleteசொல்லுக்கடங்கவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் வல்லமை செய்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம். தி.ரா.ச
trc,
ReplyDeleteபராசக்தி, காளி எல்லாரும் ஒருத்தர் தான். நான் காளியின் உருவத்தின் தத்துவத்தை விளக்கவே இதை எழுதினேன்.
இந்தப்பாட்டோட இசைவடிவம் இருந்தா குடுங்களேன்
ReplyDelete