எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 17, 2006

64. காதலுக்கு அர்த்தம் என்ன?

Tata Indicom-ல் ஒரு வழியாக வந்து வேலையை முடித்துக் கொடுத்து இருக்கிறார்கள். இனிமேல் Broadband connection-ல் தகராறு வராது என்று நம்புகிறேன். ப்ளாக்கரும், மின்தடையும் இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள்வாராக.
**********

சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். கதைகளிலும், காவியங்களிலும் நான் பார்த்த காதல் என்பது வேறாக இருந்தது. முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா என்றால் புரியவில்லை.

நான் படித்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட காதலில் முக்கியமானவையாகக் கல்கியின் "அமரதாரா" கதையில் வந்த ரங்கதுரை, இந்துமதி காதல்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. அந்தக் கதையை நான் முதலில் படிக்கும்போதே கல்கி இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அவருக்குப் பின் அவருடைய பெண் "ஆனந்தி" கதையை முடித்து இருக்கிறார். நான் முதலில் படித்தது "இந்துமதியின் கதை" என்ற பாகம் ஒன்றுதான். அதில் வரும் இந்துமதியின் தாய், தந்தையரின் காதலும், அதற்குப்பின் இந்துமதி, ரங்கதுரையின் காதலும் என்னை மிகவும் வசீகரித்தது. இந்துமதியின் தாய் சந்திரமணியின் காதல் ஆக்ரோஷமானது என்றால் இந்துமதியின் காதல் அமைதியான நதியைப் போன்றது. இன்னும் சொன்னால் வற்றாத ஜீவநதி என்றும் சொல்லலாம். அதிலேயே கல்கி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்:ரங்கதுரையின் வார்த்தைகளில்: "இந்த அன்பை என்னவென்று சொல்வது? ஒரு தாய், தன் மகளிடம் காட்டும் அன்பா, தந்தை, தன் மகளிடம் காட்டும் அன்பா, கணவன் மனைவியிடம் காட்டும் அன்பா அல்லது காதலன், காதலியிடம் காட்டும் அன்பா? புரியவில்லை." என்று வந்திருக்கும். நான் படித்து பல வருடங்களாகிவிட்டபடியால் நினைவில் இருந்து எழுதி இருப்பது தப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் அர்த்தம் இதுதான். அப்படி ஒரு காதலைப் பற்றி அதுவரை நானும் படிக்கவில்லை. அதிலும் ரங்கதுரை வெளிநாடு சென்றதும், அவன் நினைவில் இருக்கும் இந்துமதிக்கு அவன் பாடும் பாரதி பாடல் நினைவில் வரும்.

நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக்குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்டுநிதம் மேகம் அளந்தே,
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினில் உன்கைவிலக்கியே
தருமித் தழுவியதில் நின்முகங்
கண்டேன்"

இந்தப்பாட்டு ரங்கதுரை வெளிநாடு செல்லுமுன் இந்துமதிக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போவான்.
, உடனேயே நிலவில் அவன் முகமும் அவள் நினைவில் தெரிவதாகப் படம் ஓவியர் திரு மணியம் அவர்களால் வரையப்பட்டிருக்கும். இந்துமதியின் கண்களில் தெரியும் அந்த ஏக்கம் இன்னும் கண்ணிலேயே இருக்கிறது. அதற்கு அப்புறம் நான் ரங்கதுரையின் கதை நடக்கும் பாகம் வாங்கிப் படிக்க ரொம்ப நாள் ஆனது. அதுவரை ஒரே கவலையாக இருக்கும். தினமும் நினைத்துக் கொள்வேன் இந்துமதிக்கு என்ன ஆனதோ என்று. அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று தெரியும்போது எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டிருந்தது.

கல்யாணம் ஆகிப் புக்ககம் போனதும் என் கணவர் என்னை விட்டு விட்டுப் புனே சென்று விட்டார். புனேயில் வீடு கிடைப்பது கஷ்டம் என்பதால் நான் உடனே செல்லவில்லை. கிராமத்தில் மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார், மைத்துனர்களுடன் இருந்தேன். அப்போது அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அந்தக் கடிதத்தில் நான் தனியாக இருப்பது பற்றியும் உடனே அழைத்துப் போவது பற்றியும் கொஞ்சம் கவித்துவமாக எழுதி இருந்தேன். அதற்குப் பதில் என்ன வந்தது தெரியுமா? ஒரு இன்லாண்ட் கவரில் 4 வரி. "எனக்குச் சென்னை மாற்றல் ஆகிவிட்டது. இன்னும் 10 நாளில் வந்து அழைத்துப் போகிறேன். மற்றபடி நீ தமிழ் நன்றாக எழுதுவதால் ஏதாவது கதை எழுதிப் பார்க்கவும். முயன்றால் உனக்கு நன்றாக எழுத வரும்." என்பதுதான். எனக்குச் சப்பென்றாகி விட்டது. "பரவாயில்லை" என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அதுதான் அழைத்துப் போகப் போகிறாரே, அப்புறம் என்ன என்று தோன்றியது. குடித்தனம் வைத்துப் பழகும்போதும் அத்தனை பேச்சு, வார்த்தை இல்லை. எங்கள் வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிப் பழகுவோம். என் அண்ணன், தம்பியுடன் எனக்குச் சண்டை எல்லாம் வரும். இங்கேயோ நேர்மாறாக இருந்தது. ஆகவே மறுபடியும் என் கவனம் புத்தகங்களில் திரும்பியது. நான் பாட்டுக்குப் படித்துக் கொண்டு இருப்பேன். இதற்கு நடுவில் எனக்குப் பெண் பிறந்து, ராஜஸ்தான் போய், அங்கே இருக்கும் போதே பையனும் பிறந்தான். குழந்தைகளும் ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் தான் வருவார்கள். என் அப்பா சினிமாவுக்குப் போனாலோ எங்காவது போனாலோ போய்விட்டு வந்து அந்தக் கதையெல்லாம் சொல்லுவார் எங்களுக்கு. அப்பாவுடன் விளையாடுவோம். விளையாட்டில் ஏமாற்றினால் சண்டை போடுவோம். இங்கே அந்த மாதிரி வெளிப்படையாக எதுவும் கிடையாது. ஆகவே என் கணவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா என்னவென்று எனக்குப் புரியவில்லை.

இந்த மாதிரிக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் போய்விட்டது. என் மனதில் தீராக்குறைதான். ஆனால் வெளிப்படையாக இதைப் பற்றி நானும் பேசவில்லை, அவரும் பேசவில்லை. அந்த சமயத்தில் எனக்கு மூலம் வியாதி முதல் பிரசவத்தில் ஆரம்பித்தது ஜாஸ்தியாகி 12 o clock position என்னும் நிலையை அடைந்து ஆபரேஷன் செய்தால் தான் சரியாகும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்துத் தினம் இரண்டு வேளையும் என் கணவர் வருவார். எனக்கு என்னமோ கடமைக்கு வருவதாகத் தோன்றும். ஆதலால் அவரிடம் "நீங்கள் தினம் வர வேண்டாம். ஆஃபீஸ் போய்விட்டுச் சாயந்திரம் வந்தால் போதும்" என்றேன். பதில் சொல்லாமல் சிரித்துவிட்டுப் போய்விட்டார். ஆபரேஷனும் ஆனது. இப்போது ஒரு பத்து வருஷமாகத் தான் லேஸர் எல்லாம். அப்போது எல்லாம் அப்படிக் கிடையாது. லோகல் அனஸ்தீஷியா கொடுத்து ஆபரேஷன் செய்துப் பின் படுக்கையில் கொண்டு விட்டு, விட்டு டாக்டர் சொன்னார்" இங்கே பாருங்க, கீதா, ரொம்ப வலி இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். நான் சொன்னேன், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக்குப் பிரசவ வலியைவிடவா வலிக்கும் என்று சொன்னேன். டாக்டர் அதற்கு"இல்லை அம்மா, இது தாங்காது. உங்கள் நரம்பு வெட்டித் தைத்திருக்கிறோம். 24 மணி நேரம் வலி இருக்கும். உயிர் போகும் வலி இருக்கும். வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டிருக்கிறேன்". என்றார். சரி என்றேன். சிறிது நேரம் டாக்டர் இருந்துவிட்டு எனக்குக் காலில் உணர்வு வந்ததும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மறுபடி எச்சரிக்கை செய்தார். எனக்கு வேடிக்கையக இருந்தது. நர்ஸ் வேறே 10 நிமிஷத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தாள். உணர்வு வந்து ஒரு 1/2 மணிக்கெல்லாம் வலி ஆரம்பித்தது பாருங்கள், வலி என்றால் வலி சொல்லமுடியவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் என்னை அறியாமல் கத்த ஆரம்பித்தேன். மருந்துகளின் மயக்கத்திலும், ஊசியின் தாக்கத்திலும் கூட வலி பொறுக்க முடியவில்லை. கடவுளே என் உயிரை எடுத்துக் கொள் என்று மூன்றாவது மாடியில் இருந்த நான் போட்ட சத்தத்தில் பிரசவ வார்டு, மற்ற ஆபரேஷன் செய்தவர்கள், தினமும் வரும் நோயாளிகள் என்று என் அறை வாசலில் ஒரே கூட்டம் கூடி இருக்கிறது. என் அப்பாவும், அம்மாவும், சகோதரர்களும் என்ன செய்வது என்று புரியாமல் டாக்டரைத் திருப்பிக் கூப்பிட்டார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு வலி தெரிய வேண்டும். அப்போது தான் ஆபரேஷன் செய்ததின் பலன் தெரியும் என்று சொல்லி விட்டு மறுபடி ஒரு சக்தி வாய்ந்த ஊசியைப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அதற்குள் குழந்தைகள் வருவார்கள் அழைத்து வர வேண்டும் என்று வீட்டுக்குப் போவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவருக்கு விஷயம் தெரிந்து திரும்ப வந்துவிட்டார். நான் துடிப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாக என் அருகில் வந்து என் கையைத் தொட்டு ஆறுதல் சொல்ல என் கையை இறுக்கிப் பிடித்திருக்கிறார். சட்டென்று அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.

19 comments:

  1. இன்னும் உலகத்தில் சொல்லாத காதல்கள் எத்தனையோ இருக்கின்றன. ஒரே வீட்டுக்குல் இருந்தலும் சில பேருக்கு காதலை சொல்ல தெரிவதில்லை. அப்படி அடைத்து அடைத்து வைக்கப்படுகின்ற அந்த உணர்வுகள் என்றவது ஒரு நாள் அதீதமாக வெளியேறும்.

    ReplyDelete
  2. உண்மை கார்த்திக்,
    ஆனால் எதுவும் வெளிப்படையாக இருக்கும் இப்போது இம்மாதிரி எல்லாம் இருக்கிறதா சந்தேகம்தான்.

    ReplyDelete
  3. "உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!"

    இந்த வரி தான் எனக்கு இந்த பதிவை படித்ததும் நினைவுக்கு வந்தது. Love is perfect only when shared. is itn't?

    ReplyDelete
  4. அக்கா,
    உங்க காதல் ரொம்ப நல்லா இருக்கு.. உண்மை தான் இப்படி மறைத்து வைக்கும் அன்பு நிறைய இருக்கிறது.

    //ஆனால் எதுவும் வெளிப்படையாக இருக்கும் இப்போது இம்மாதிரி எல்லாம் இருக்கிறதா சந்தேகம்தான். //

    இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. இன்றைய வேகமான வாழ்க்கையில், நேரம் கிடைக்கும் போது காதலைச் சொல்லி விட வேண்டும்.. வேற என்ன செய்யறது? இதுமாதிரி பல வருடம் கழித்து காட்ட வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ.. நேரமும் அதற்கான வாய்ப்பும் இருக்கும் போதே சொல்லாலும் செயலாலும் அன்பு காட்டுவது தான் இன்றைய ஸ்டைல்...

    இந்த மாதிரி 10 வருடங்கள் பொறுமை காத்து ரொமான்டிக் வாழ்க்கை வாழ எங்களுக்குத் தெரியவில்லையோ என்னவோ :)

    ஆனால், சாம்பசிவம் சார் உங்க கடிதத்தைப் படித்து விட்டு கதை எழுத முயற்சிக்கச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.. நல்லாத் தான் சொல்லி இருக்காரு :)

    ReplyDelete
  5. சரி,சரி,சரி....
    கீதா அக்கா, ஆறு பதிவுக்கு தயார் ஆகுங்க....

    ReplyDelete
  6. மேடம்! வந்துட்டேன்...

    //அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.//
    இதைப் பத்தி கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை. இருந்தாலும் தென்னிந்தியர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் நடுவுல ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கு. மனசு நெறைய அன்பை வச்சிருதாலும் நம்மவர்கள் வெளியே காட்டிக்க மாட்டாங்க, ஆனா இதுவே வடக்கத்தியவர்கள் தங்கள் மனதில் உள்ள அன்பை தயங்காமல் வெளிப்படுத்தி விடுவார்கள். நீங்க என்னை விட நிறைய உலகம் பார்த்தவர்கள்.நீங்க என்ன நினைக்கிறீங்க?

    ReplyDelete
  7. அன்பு என்பது நல்லி கடை புடைவை அல்ல. கண்ணாடியில் வைத்து எல்லொரும் பார்த்து பாராட்டும்படி இருக்கவேண்டிய அவசியமில்லை.ஆழ்ந்த அன்பு உள்மனத்தில் இருக்கும்.அதை கண்களால் பார்க்கமுடியாது.இதயத்தால் மட்டுமே அறியமுடியும் உங்கள் கணவர் செய்ததும் அது தான். ஆனால் அந்த ஆழ்கடலில் முத்து எடுக்க உங்களுக்கு 10 வருடம் ஆனதா? அன்பன் தி ரா ச

    ReplyDelete
  8. அன்பு என்பது நல்லி கடை புடைவை அல்ல. கண்ணாடியில் வைத்து எல்லொரும் பார்த்து பாராட்டும்படி இருக்கவேண்டிய அவசியமில்லை.ஆழ்ந்த அன்பு உள்மனத்தில் இருக்கும்.அதை கண்களால் பார்க்கமுடியாது.இதயத்தால் மட்டுமே அறியமுடியும் உங்கள் கணவர் செய்ததும் அது தான். ஆனால் அந்த ஆழ்கடலில் முத்து எடுக்க உங்களுக்கு 10 வருடம் ஆனதா? அன்பன் தி ரா ச

    ReplyDelete
  9. //அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது.//

    காதலுக்கு அர்த்தம்.

    ReplyDelete
  10. //அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.//

    அக்கா.. அருமையானப் பதிவு. உங்களிடமிருந்த இது போன்ற பதிவுகளை இன்னும் அதிகமாய் எதிர்ப்பார்க்கிறேன்... மனத்தை வருடிய பதிவு. :)

    ReplyDelete
  11. அம்பி, நீங்களும் கடைசிலே பாரதியை மேற்கோள் காட்ட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பொன்ஸ், இன்றைய உலகமே வேறே. நான் ஒப்பு நோக்கவில்லை. புரிதல் கம்மியோ என்றுதான் ஒரு சந்தேகம். மற்றபடி இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகள். தொலைநோக்குப் பார்வை உண்டு என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை. இன்றைய வாழ்க்கை உங்களுடையது. மனமார்ந்த வாழ்த்துக்கள். காதலைச் சொல்வதிலும், உணர்வதிலும் உள்ள வேறுபாடு திருமணம் ஆனதும் உங்களுக்குப் புரியும்.

    ReplyDelete
  13. சிவா, நான் ஏற்கெனவே 4 பதிவு போட்டிருக்கேன். இப்போ 6 பதிவா? பார்க்கலாம்.

    ReplyDelete
  14. கைப்புள்ள, அனுபவம் வேணுங்கறது இல்லை கருத்துச் சொல்றதுக்கு. பரவாயில்லை. நம்ம தமிழ் நாட்டிலும் அன்பை வெளிப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு நிஜமாவே அனுபவம் இல்லை என்பதால் புரியவில்லை. கைப்புள்ளதானே!

    ReplyDelete
  15. trc Sir,
    நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா நிறைய எழுதணும். ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். எப்பவும் தம்பி, தங்கைகளிடமிருந்து விலகி இருந்தவர் (படிப்பின் காரணமாக) அம்மாவிடம் மட்டும் பேசுவார். எனக்கு ஏதாவது தேவை என்றாலும் மாமியார் மூலம் தான் போக வேண்டும். அவங்க எதிர்காலம் பொறுப்பு இவர் கையில் இந்த மாதிரி ஒரு serious ஆன மனிதரை நான் புரிந்து கொள்ள எனக்கு நேரம் கிடைக்காமல் என்னுடைய பொறுப்புக்களும் சேர்ந்து கொண்டது. சாதாரணமாக மனைவிக்கு முடியவில்லை என்றால் கணவன் செய்யும் உதவி என்ற அளவில்தான் நான் புரிந்து கொண்டிருந்தேனே தவிர, மனத்தளவில் நாங்கள் நெருங்கித்தான் இருந்தோம் என்பது அப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பிறந்த வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிக் கொள்ளும் சூழ்நிலை. இங்கே நேர்மாறானது. அதற்கு என்னைத் தயார் படுத்திக் கொள்வதிலேயே என் கவனமும் இருந்தது. உண்மையில் நாங்கள் சகஜமாகப் பேச ஆரம்பித்தது அதற்குப் பின் தான். முத்து எடுக்கப் பத்து வருஷம் ஆனாலும் நல்முத்து தானே!

    ReplyDelete
  16. மனசு,
    நீங்க மனசு இல்லையா? அதான் புரிஞ்சுக்கறீங்க.

    ReplyDelete
  17. வேதா, பெண்களின் மனதைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதற்கு வயசு தேவை இல்லை என்று தெரிகிறது. நல்ல அருமையான பதில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. தேவ்,
    ரொம்ப நன்றி. அப்போஅப்போ என்னோட பதிவுக்கும் வருவதற்கு. இதே மாதிரிக் காதலைப் பத்தி எழுதினால் போர் அடிக்கும். அப்போ அப்போ என்னோட அனுபவங்களை எழுதறேன். முடிஞ்சபோது வாங்க.

    ReplyDelete
  19. பல விதமான குணங்கள் கொண்டது இந்த மனித இனம். நாம் ஒன்று கூறினால் யாராவது தப்பாக எடுத்துக்கொள்வார்களே என்று எண்ணி ஒரு நபர் தனது குறை களை எவ்வளவு முடிமறைக்க முடியும். என்று சிந்தித்து அவர்களி மனதில் எற்படும் வலியை மறைவான பொருளாக வைத்து இறுதியில் பலவிதமான இடர்களில் சிக்கி தவிக்கின்ற மக்கள் கூட்டத்தில் உங்கள் வாழ்கை பயணத்தின் ஒவ்வொரு அடிகளையும் என்னிடம் நேர் முகமாக பகிந்துக் கொண்டது போல் ஒரு உணர்வு. இவ்வித மனப்பாண்மை யாருக்குவராது.
    உங்கள் வாழ்க்கை என்றும் இனிமையான தென்றல் வீசிட எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்.
    இப்படிக்கு,
    குறிஞ்சித்தமிழ்.
    http://kurinchitamil.blogspot.com
    http://nicerajakumar.tripod.com

    ReplyDelete