மறுநாள் காலை நாங்கள குளித்துத்தயாராகி ஸ்ரீமடத்திற்குப் போனோம். அங்கே பூஜை நடந்து கொண்டு இருந்தது. ஸ்ரீமஹாஸ்வாமிகள் தன் தனி அறையில் பூஜை செய்வதாகவும் சாயந்திரம் பூஜை அவர் செய்வார் எனவும் கேள்விப்பட்டோம். வந்திருந்த பக்தர்கள் எல்லாம் அவர் அவருக்குத் தெரிந்த பாடல்களையும், ஸ்லோகங்களையும் பாடிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் கலந்து கொண்டோம். சரியாகப் 10-30 மணிக்குப் பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. அதற்குப் பின்னர் ஸ்ரீஸ்வாமிகள் வந்தார். அவரிடம் எல்லாரும் தரிசனம் பெற்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம். என் கணவர் விசேஷமாக "கைலாஷ், மானசரோவர்" யாத்திரைக்குப் போக அவரிடம் கூற ஸ்ரீமஹாஸ்வாமிகளும் எண்ணம் ஈடேற ஆசி கொடுத்தார். பின் அன்றே அவர் பக்கத்தில் உள்ள "சிர்சா" என்னும் ஊருக்குக் கிளம்பிச் சென்றார். நாங்கள் மறுநாள் காலையில் சிருஙகேரியில் இருந்து கிளம்பினோம். அங்கிருந்து ஒரு கார் வைத்துக் கொண்டு மீண்டும் உடுப்பி நோக்கிப் போனோம். மததியானம் 12 மணி அளவில உடுப்பி வந்து சேர்ந்தோம். அங்கு "பெஜாவர் மடத்தை"ச் சேர்ந்த ஒரு தங்குமிடத்தில் அறை கிடைத்தது. கீழே என்பதால் வாடகை ஒரு நாளுக்கு 150/-ரூ. மேலே முதல், இரண்டாம் மாடி என்றால், 25 ரூ/- கம்மியாகக் கிடைக்கிறது. பொதுவாக நாம் இம்மாதிரி ஊர்களுக்குப் போனால் மடங்களின் அறைகள் தேர்ந்தெடுப்பது என் அனுபவத்தில் சிறந்ததாகத் தெரிகிறது. அதிகபக்ஷமாக இரண்டு நாளுக்கு மேல் தங்க முடியாது. அதற்கு மேல் என்றால் சிறப்பு அனுமதி தேவை.கோவிலில் தரிசனம் எப்போதும் உண்டு என்பதால் நாங்கள் உடனே தரிசனம் செய்யப் போனோம். கண்ணன் ராஜாங்கக் கோலத்தில் காட்சி கொடுத்தான்.பார்க்கப்பார்க்கத் தெவிட்டாத அழகு. பிரமிக்க வைக்கும் அழகு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மிக நிதானமாகத் தரிசனம் முடித்துப் பின் அங்கே உள்ள மற்ற கடவுள்கள் தரிசனமும் முடிந்து சாப்பிடப் போனோம். கோவிலில் சாப்பாடு போடுவார்கள் என்பதாலும் அன்று அமாவாசை, விரத நாள், வெளியில் சாப்பிட முடியாது என்பதாலும் கோவிலில் சாப்பிட்டோம். குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றால் நாம் பாத்திரம் எடுத்துப் போக வேண்டும். எங்களுக்கு இது பற்றித் தெரியாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்பட்டோம்.பக்கத்தில் உள்ள கல்லூரிப் பெண்கள் உதவினர். காய்கள் எதுவும் கிடையாது. வெறும் சாதம், ரசம், சாம்பார், மோர் மட்டும் தான். அவர்கள் பரிமாறும் வேகத்தில் நாம் சாப்பிட்டு விட வேண்டும். எல்லாரும் தினம் வருபவர்கள் என்பதால் தவித்தது நாங்கள் மட்டும்தான்.சிலர், நம் ஊரில் மண் சோறு சாப்பிடுவது போலக் கீழே தரையைச் சுத்தம் செய்து அதில் சாதம் போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். ஏதோ பிரார்த்தனையாம். என்ன என்று கேட்கக்கூடாது என்பதால் கேட்கவில்லை. கேட்டால் பலிக்காது என்று ஒரு நம்பிக்கை.
மறு நாள் காலையிலேயே எழுந்து 5-30 மணிக்கு நடக்கும் நிர்மால்ய சேவைக்குத் தயார் ஆனோம். கோவிலுக்குப் போகும்போது யாருமே இல்லை. கிருஷ்ணனும் நாமும் தான் என்று எண்ணிக் கொண்டோம். கோவில் ஊழியர்கள் நிர்மால்ய சேவைக்கும் அதன்பின் கிருஷணனின் குளியலுக்கும் வேண்டியது தயார் செய்து கொண்டு இருந்தார்கள். எதிரே உள்ள மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் எங்கிருந்தோ உள்ளூர் பக்தர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். உடனே போய் முன்னால் நின்று கொண்டோம். சரியாக 5-30 மணிக்குத் திரை விலகியது. ஆஹா, அந்த அழகை என்ன என்று சொல்வது, நம் வீட்டில் குழந்தை தூங்கி எழுந்து வரும் கோலம் பார்த்திருப்பீர்கள் தானே? அதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கண்ணனின் மயில்பீலி அசைய, காதில் குண்டலங்கள் தொங்க, கழுத்தில் முத்தாபரணங்கள் தொங்க, இடையில் அரைச் சலங்கையும், அரைஞாண் கயிறும் தொங்கக் குழந்தையாக என் முன் வந்து "என்னைத் தூக்கிக்கொள்" என்பது போல நின்றான். அதைப்பார்க்கும் யாரும் தன்னை மறந்து விடுவார்கள். பொதுவாக நான் கோவில்களில் எதுவும் வேண்டிக் கொள்ளும் வழக்கம் கிடையாது. நமக்கு என்ன வேண்டுமோ அதை இறைவன் ஏற்கெனவே எழுதிவிட்டான், கூடவும் கூடாது, குறையவும் குறையாது என்ற எண்ணம் உண்டு. ஆனால் அன்று இறைவனைப் பார்த்த பொழுது இவனுக்கு அல்லவா நாம் எல்லாம் கொடுக்க வேணடும்? இவன் குழந்தை அன்றோ என்றே தோன்றியது?
"கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே, கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே" என்ற பாடல்(சிலப்பதிகாரம் என்று நினைக்கிறேன்) எம்.எஸ். அம்மாவின் குரலில் என் காதில் கேட்டது. ஊத்துக்காடு கவியின், "ஆடாது அசங்காது வா" பாடலில் உள்ள "பின்னிய சடை சற்றே" என்று துவங்கும் வரிகளும் நினைவு வந்து கொண்டிருந்தது. கண்ணன் என்னும் மாயக்கள்வனின் லீலைகள் எல்லாம் நினைவில் வந்து மோதியது. இந்தக் காட்சியைத் தானே தினம் தினம் யசோதை பார்த்து இருப்பாள் இது தானே கிடைக்காமல் தேவகி கண்ணனிடம் கேட்டுப் பெற்றாள் என்று புரிந்தது. பாரதி கண்ட
"காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நநதலாலா" என்ற பாடல் வரி்களுக்கு ஏற்பக் கண்ணன் கரிய திருமாலாகக் காட்சி அளித்தான். அன்று கண்ணன் அபிஷேஹம் முடிந்து "சிம்மவாஹினி" யாகக் காட்சி தந்தான். மேலும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கோவிலுக்குப் போய்விட்டு நாங்கள் அரை மனதாக உடுப்பியை விட்டுக் கிளம்பி ஊருக்குப் போக மங்களூர் வந்து அடைந்தோம்.
அருமையான வர்னணை. நேரில் பார்தது போல இருந்தது. சபாஷ்! நல்லா தேறிட்டீங்க..
ReplyDeleteசே! இந்த நிர்மாலய தரிசனம் பற்றி எனக்கு முன்னமே தெரியாம போச்சே!
பரவாயில்லை. மறுபடி போனா போச்சு!
உங்கள் கட்டளை படி, நானும்,புதிய பதிவு போட்டாச்சு!
அப்பாடா, பதிவு வந்திருக்கு. கொஞ்ச நேரம் முன்னாலே பதிவு எழுதிட்டு வெளியீடு செஞ்சா வரவே இல்லை. ஆனால் Internet Explorer வழியாப் போனால் பதிவு இருக்கு. Firefox வழியாப் போனால் ஒரே அடம் வர மாட்டேன்னு. இத்தோட என்னத்தைப் பண்ணறது? குழந்தங்களைக் கூட சமாளிக்கலாம் போல இருக்கு. இப்போ இந்த பின்னூட்டம் firefox வழியாக் கொடுக்கறேன் வருதா பார்ப்போம்.
ReplyDeleteவந்து விட்டது. நாகை சிவா? என்ன பார்க்கறீங்க? என் பதிவு வந்துட்டதேன்னா? உங்களுக்கும் ப்ளாகர் சொதப்பல் என்றால் புரியுது இல்ல? அதான் வேணும் எனக்கு.
ReplyDeleteபுரியுது, புரியுது. நல்லாவே புரியுது. நேரம் சரியா அமைய மாட்டேங்குது, அதுக்கு அப்புறம் வச்சுக்குறேன் அந்த பிளாக்கர.....
ReplyDelete