எல்லாரும் போலிகளைப் பற்றி நிறைய எழுதறாங்க. மாயவரத்தாருக்குப் போலி இருக்காம். ஜெயக்குமாருக்குப் போலி இருக்காம். டோண்டு சார் விஷயம் எல்லாருக்கும் தெரியும். தமிழ் மணம் காசிக்குக் கூட போலி இருக்காம். இப்படி எல்லாரும் போலியைப் பற்றி எழுதும் போது நான் மட்டும் எழுதாவிட்டால் எப்படி? இதோ போலிகளுடன் என் அனுபவம்.
சின்ன வயசிலே அம்மா தனியாய்க் கஷ்டப் படறதைப் பார்த்துக் கொஞ்சம் உதவி செய்யலாமேனு ஆரம்பிச்சது. அப்புறம் இதிலே நான் நிபுணி ஆகி விட்டேன். என்ன பார்க்கறீங்க.நான் சொல்றது போளியைப் பத்தி. பார்க்கப் போனால் போளினு தான் சொல்லணும். ஆனால் சிலபேருக்கு இந்த 'ல' 'ள' 'ழ' தகறாறு இருக்கிறது. அவங்க எல்லாம் இதைப் போலினு தான் சொல்றாங்க. போளிகளில் பலவிதம் உண்டு. அவற்றில் முக்கியமானது தேங்காய் போளி, கடலைப்பருப்பு+தேங்காய்க் கூட்டணியுடன் உள்ளது, ஜீரா போளி மற்றும் பால் போளி. இதைத் தவிர சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி, உருளைக்கிழங்கு போளி, காரட், பீட்ரூட் கலவை போளி எல்லாம் உண்டு. ஆனால் போளி என்றால் மேலே கூறிய 4 வகைதான் பிரசித்தமானாது. இப்போ இந்த வெங்கடேஸ்வரா ஸ்டால் என்று போட்டுக் கொண்டு உள்ளே ஒன்றும் இல்லாமல் போளி என்ற பெயரில் ஒன்றைக் கொடுக்கிறார்களே அதையும் போளி என்று சொல்லலாம்.
இந்தத் தேங்காய் போளி செய்வதில், திருநெல்வேலிக்காரர்களை மிஞ்ச முடியாது. தேங்காய்த் திரட்டுப்பாலும் அவர்களின் தனிக் கைப்பக்குவம். கடலைப்பருப்பு+தேங்காய்க்கூட்டணியில் உள்ளது மதுரைப் பக்கம் ரொம்ப பிரசித்தம். கல்யாணங்களில் முதல் நாள் (மாப்பிள்ளை அழைக்கும் நாள்) கட்டாயம் இதைச் சாப்பாட்டில் போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஏதோ தப்பு நடந்த மாதிரி இருக்கும். இப்போ எல்லாம் கூட்டம் நிறைந்த தெருக்களில் எந்த மாப்பிள்ளையும் அழைப்பை விரும்புவது இல்லை. சில சந்தோஷங்களுக்கு, சில விலைகள். இந்த ஜீரா போளி மற்றும் பால் போளி இருக்கிறதே அதில் இந்த ஜீரா போளியை முதல் நாளே செய்து வைத்து மறு நாள் பாலில் போட்டுக் கொடுப்பதில் கில்லாடிகள் தஞ்சைத் தரணிக் காரர்கள். அப்பாடி, ஒரு வழியாக என் அண்ணா , தம்பி மனைவிகளின் பிறந்த ஊரான திருநெல்வேலியையும், என்னுடைய அருமை ஊரான மதுரையையும், நான் வாழ்க்கைப்பட்ட ஊரான தஞ்சாவூரையும் திருப்திப் படுத்தி விட்டேன். பார்க்கப் போனால் இது மஹாரஷ்ட்ரா, குஜராத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்திருக்கிறது. மஹாரஷ்டிரர்கள் (நான் சொல்வது மஹாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும்) செய்யும் ஒரு போளியைச் சாப்பிட்டால் நமக்கு வயிறு 2 நாளைக்குப் பசிக்காது. குஜராத்தில் தமிழ்நாட்டுப் பாணியில் தான் பார்த்தேன். ஹூஸ்டனில் உள்ள "THALI" என்ற பிரசித்தி பெற்ற ஹோட்டலில் சாப்பிடப் போனால் சுடச்சுட போளி வரும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். நம்மால் முடியாது என்பது வேறு விஷயம். ஆனால் நம்ம போளி புகழ் இந்த மாதிரி யு.எஸ். வரை போயிருப்பது ரொம்ப ஆச்சரியம் இல்லையா? இந்த போளி செய்வதில் நான் ரொம்ப நிபுணி. பெருமை அடித்துக் கொள்கிறேன் என்று நினைப்பவர்கள் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லுவார்கள். இதைப் படிக்கிற தண்டனை போதாது என்று இது வேறேயா என்று நினைப்பவர்களுக்கு: போளியைப் போலியின் தோலை உரிப்பதாக நினத்துக் கொண்டு சாப்பிடுங்கள். ருசிக்கும்.
பி.கு: திரு டோண்டுவிடம் நான் வைணவத்தைப் பற்றி சந்தேகம் கேட்டுப் பின்னூட்டம் கொடுத்ததற்குப் போலி "DOONDU" என்ற பெயரில் என்னை எச்சரித்திருக்கிறான். என்ன வழக்கமான மொழியில்தான் வந்தது.
கீதா..இப்படி ஒரேடியா போளி பத்தி சொல்லி, என் நாக்கை ஊற வைத்து பார்ப்பதில் உங்களுக்கு என்ன ஆனந்தம். அடுத்து செஞ்சா அனுப்பி வையுங்களேன்..ருசி பார்க்கலாம்
ReplyDeleteகார்த்திக்,
ReplyDeleteசென்னைலே இருந்துக்கிட்டு போளி பத்திக் கேட்டால் எப்படி? மேற்கு மாம்பலத்தில் கிராண்ட்
ஸ்நாக்ஸ் கடை எதிலே வேணாக் கிடைக்கும். இல்லாட்டி இந்த வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டால் எல்லாம் இந்த போளி பூரணமே இல்லாமல் செய்வதிலே கில்லாடிகள். சாப்பிட்டுப் பாருங்க.அதுவும் மேற்கு மாம்பலம் தான்.
பருப்பு போளி நம்மளின் பேவரைட்ங்க.
ReplyDeleteஅடையார் ஆனந்தபவன் போளி கொஞ்சம் நல்லா இருக்கும். ஆனால் ஒரு முறை பிள்ளையார்ப்பட்டியில் போளி சாப்பிட்டேன். சூப்பருங்க.......
அப்புறம் போலி டோண்டு, அப்ப வந்து நம்மளயும் தீட்டிகிட்டு தான் இருக்காரு. அய்யோ பாவம்.....
கீதா அவர்களே,
ReplyDeleteபோலி டோண்டு மறுபடியும் முன்னை விட மோசமாக வெளிவந்துள்ளான். முத்து (தமிழினி) அவர்கள் செய்த முயற்சிகள் ஓரளவுக்குத்தான் பலித்தன. அவனாவது திருந்துவதாவது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
மட்டுறுத்தல் செய்திருக்கிறீர்கள். உங்களை மீறி என்ன செய்ய முடியும் அவனால். அவனை லட்சியம் செய்யாது இருப்பதே நலம்.
ஒரு விஷயம் தெரியுமா? அவன் ஒருவருக்கு மட்டும் இப்போதெல்லாம் அசிங்க மடல் போடுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டான். யாருக்குத் தெரியுமா? உண்மை டோண்டுவான எனக்குத்தான். என்ன ரகசியமாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? அவனை நான் லட்சியம் செய்வதே கிடையாது. "போடா ஜாட்டான்" என்று கூறிவிட்டேன். சிறிது நேரம் கத்திப் பார்த்தான். ஒன்றும் கழட்ட முடியவில்லை. முக்கிய விஷயம், மனம் பிறழ்ந்தவனை அலட்சியம் செய்யுங்கள் அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
My mother used to do this boli very well... Hhhhmmm... u made me nostalgic..
ReplyDeleteyeeh, that venketeswara boli is without poornam..
so chennai vanthaa boli kidaikkumaa unga Aathulaa? :)