எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 28, 2007

221. பாரதிக்கா அச்சம்?

மணிப்ரகாஷ் கேட்ட கேள்வி என்னோட மனசை உறுத்திட்டே இருந்தது. அவர் சொன்னது: "உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைச்சாங்க. நல்லா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சாங்க. நல்லாப்புரிஞ்சது. எங்களுக்கு அப்படிக் கிடைக்கலை. தவிர எந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி இந்தப் பாடல்களப் பாடினார், கவிதை ஊற்று எப்படி எல்லாம் பெருக்கெடுத்து ஓடியது போன்ற விவரம் தெரியாமல் சும்மா தேர்வுக்காகப் படிச்சுத் தான் எழுதினோம்" னு சொல்கிறார். தவிர முத்தமிழ்க் குழுமத்தில் "வேந்தன்" வேறே பாரதிக்குப் பயம் அவனோட அச்சத்தைத் தான் இப்படி வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறான் என்று என்னுடன் மூன்று நாளாக விவாதம். 2 நாளாய் மனசில் யோசனை ஓடிக்
கொண்டே இருந்தது. அப்போது தெளிவுக்காக வழக்கமாய் எடுக்கும்
பாரதியின் புத்தகங்களான கவிதைத் தொகுப்புக்குப் பதில் நான் எடுத்தது
தங்கம்மாள் பாரதியின் "பாரதியும் கவிதையும்" என்ற புத்தகம். சரி,
பரவாயில்லை எனப் பிரித்தால் 2வது கட்டுரையே நம் கேள்விக்குப் பதில்.

இப்போ இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு அறிமுகம். தங்கம்மாள் பாரதி, தேசீயக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் மூத்த மகள் ஆவார். இவர் பாரதியைப் பற்றிச் சில புத்தகங்கள் எழுதி உள்ளார். தன் தகப்பானாரான பாரதியின் சில அனுபவங்களையும், அவர் எழுதிய சில
முக்கியமான கவிதைகளைப் பற்றியும் கூறி இருக்கும் இவர் அது எழுதப் பட்ட சந்தர்ப்பத்தையும் கூறி இருக்கிறார். அநேகமாய்ப் பாரதி புதுச்சேரியில் வசித்த நாட்களில் நடந்த சம்பவங்களையே இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம் "காரைக்குடி, புதுமைப் பதிப்பகம் லிமிடெட்" ஆல் வெளியிடப்பட்டது. அச்சிட்டது "சாது ப்ரஸ், ராயப்பேட்டா, சென்னை".
வெளியிட்ட வருஷம் மார்ச் மாதம் 1947ம் வருஷத்தில். எனக்குக் கிடைத்தது பழைய புத்தகக் கடையில் பள்ளி நாட்களில். அப்போது இருந்தே இந்தப் புத்தகத்தை அவ்வப்போது படித்து வந்தாலும் இந்தக் கவிதை எழுதும்போது நினைவுக்கு வரவில்லை. எப்படி மறந்தேன் என்று புரியவில்லை. பின் யோசனையுடன் 2 நாட்களாய்த் தேடிய புத்தகங்களில் இந்தக் கவிதை எழுதிய சூழ்நிலை பற்றிய சான்று தேடும்போது கிடைத்தது. பிரிக்கவும் கிடைத்தது சான்றோடு முழுக் கவிதையும்.

பாரதியார் புதுச்சேரியில் இருக்கும்போது பாடப் பட்டதாய்க் கூறுகிறார் ஸ்ரீமதி
தங்கம்மாள் பாரதி இந்தக் கவிதையை. அவர் கூறும் வார்த்தைகளிலேயே:

"ஒருநாள் சென்னையில் இருந்து சில நண்பர்கள் தந்தையாரைப் பார்க்க
வந்தார்கள். அதில் இருவர் "ஆங்கில பாஷையிலும்" "சயன்ஸிலும்" மோகம்
கொண்டவர்கள். கிணற்றடியில் அப்போது தந்தை ஸ்நாநம் செய்து கொண்டிருந்தார். நண்பர்கள் மாடியிலிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

முதலாவது நண்பர்:- என்னப்பா? பாரதியாருக்குத் தமிழில் மோகம் அதிகமாமே! தமிழில் என்ன இருக்கிறது? கருத்துக்களை ஆங்கிலத்தில் சொல்வது போல, தமிழில் சொல்ல முடியவில்லை. அதற்கேற்ற அழகான சொல் தமிழ் மொழியில் ஏது?

இரண்டாம் நண்பர்:- அது மட்டுமா? "ஸயன்ஸ்" எத்தனை உயர்ந்தது? தமிழில்
இருக்கிறதா? வெள்ளைக்காரன் எப்படியிருந்தாலும் கெட்டிக்காரன்.
எத்தனை புதிய மெஷின்கள்! எத்தனை கருவிகள்! எத்தனை வஸ்துக்கள்
கண்டுபிடித்திருக்கிறார்கள்! எத்தனை சாஸ்திரங்கள் கற்கிறார்கள்!

முதலாவது நண்பர்:- ஆமாம். இன்னும் சிறிது நாளைக்குள் மேற்கு தேசத்துப்
பாஷைகள் நாடெங்கும் விரிந்து பரவிவிடும். தமிழ் ஒளிமங்கி மறைந்து
விடும்.

இரண்டாம் நண்பர்:- ஆம், ஒருவரும் அதில் சிரத்தை இல்லாமலிருந்தால்
விரைவில் அழிந்து விடும்."

மேலே கூறிய சம்பாஷணைகளை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்
அப்பா. கேட்டவுடன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகிற்று. தனக்குள்ளாகவே பேசிக் கொண்டார்.

"ஆம், வாஸ்தவம் தான். தாயை மதியாத நம் தமிழனின் அசிரத்தையால் தமிழ்
அழியும். கோழைகளே! பழம்பெருமையோடு திருப்தியடைந்து,
உண்பதும் உறங்குவதுமாகக் காலங்கழிக்கிறீர்களே! என்ன கொடுமை!
ஒருவனாவது நாட்டு நிலைமையைப் பற்றி யோசிக்கிறானா! நமது நிலை இத்தனை கீழ்த்திசை யடைந்திருக்கிறதே என்று சிந்தித்துப் பார்க்கிறானா? தாய்மொழியில் பேசுவது எழுதுவதும் கேவலமென்று கருதி
தெரியாத ஆங்கிலத்தில் உளறினாலும் மதிப்பு என்று நினைக்கிறார்கள்! சேர,
சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழின் பெருமையை அறியாத பேதைகள்! இலக்கிய வளர்ச்சியில் ஒருவரது மூளையும் செல்வதில்லை. பிழைப்புக்காகக் கட்டாயமாக ஆங்கிலம் கற்று அதிலுள்ள சுவையைப் புகழ்கிறார்களே! "

இவ்விதம் புலம்பிப் பின் மாடியிலுள்ள நண்பர்களிடம் சென்றார். "தம்பிமாரே! என்ன சொன்னீர்கள் நம் தாய்மொழியைப் பற்றி? மெல்ல மெல்லத் தமிழ் இறந்து விடும் என்கிறீர்கள்! ஒருநாளும் அவ்விதம் ஆகாது. தமிழ்மொழி மங்காது. இன்னும் சிறிது காலத்தில் தமிழர்கள் விழித்தெழுவார்கள். அப்போது தமிழ் மொழி புதுமைப் பொலிவுடன் பிரகாசிக்கும். இதோ கேளுங்கள்! ;தமிழ்த் தாய் தோன்றிய விதம் யாரும் அறியார்கள்! '
என்று கூறிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறார்.

"யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
ஆயினுமே எங்கள் தாய்- இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடுவாள் எங்கள் தாய்-" எங்கள் தாய்!"

என்று கூறி விட்டுக் "கேளுங்கள், சகோதரரே! தமிழ்த் தாய் கூறுவதைக்
கேளுங்கள்!" என்று கோபமும், ஆத்திரமும்,சோகமும் கலந்த குரலில்
பாடுகிறார் தமிழ்த் தாயின் வேண்டுகோள் நிறைந்த பாடலை. அதை ஏற்கெனவே "மெல்லத் தமிழினிச் சாகும்" பதிவில் வெளியிட்டிருக்கிறேன். வேந்தரே! பாரதியா அஞ்சுகிறவன்? :-P

17 comments:

  1. கீதா ,
    பாரதிக்கு ஏது அச்சம்.
    இந்தப் புத்தகம் இப்போதும் கிடைக்குமானால் வாங்குகிறேன்.
    உணர்ச்சிப் படுகிறவர்கள் எல்லோருக்கும் தமிழ்க் கவிதை வந்து விடாது.
    அவனைப் பற்றி இப்போது நம் தமிழ்மணத்தில் பேசுகிறோம் என்றால்,அது தமிழை எழுதிப் பேசி வந்தவர்களின் செயலால் தான்.
    திடமான கருத்துகளை வெளியிடுவதற்கு நன்றி.

    ReplyDelete
  2. தமிழுக்காக தன் உயிரை கொடுத்தவனுக்கு இன்று தமிழ் மக்களே அவனை குறை கூறும் அளவுக்கு வந்துவிட்டது. இதற்கு எதிர்வாதம் சொல்ல ஒரு புத்தகமே வெளிவந்துவிட்டதா? பலே பலே! தமிழா உன்னைப்போல் ஒரு துரோகி இனி இவ்வுலகத்தில் பிறப்பானா?

    மனம் வேதனையில் மூழ்குகிறது.

    இன்று இப்படி பிதற்றும் மனிதர்கள் அன்று அவன் வறுமையிலும் மன வேதனையிலும் துடித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டபோது இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பார்களோ?

    வாய் ஜம்ப வீரர்களின் புலம்பல்களை விழலுக்கு இறைத்த நீராக நினைத்து மறந்துவிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. அழகாக சொன்னீர்கள் வல்லியம்மா..எனது கருத்தும் அதே....

    ReplyDelete
  4. WoW! Thanks a lot for all this info.sorry for the English.tamil font is giving problem.Sorry maami.
    As Mani has said I too grew up with out knowing anything like this.No one ever kindled an interest in us in those days.Thanks a lot Maami for putting this kind of posts.

    ReplyDelete
  5. நல்ல தகவல்களை கொடுத்து உள்ளீர்கள். மிகவும் பயன் உள்ளது.

    நான் வீழ்வேன் என நினைத்தாயோ? என்று கேட்பதில் இருப்பது பயம் என எப்படி பொருள்ப்படாதோ அது போல் தான் மற்றவைகளுக்கும்

    ReplyDelete
  6. //தமிழுக்காக தன் உயிரை கொடுத்தவனுக்கு இன்று தமிழ் மக்களே அவனை குறை கூறும் அளவுக்கு வந்துவிட்டது. //

    இது தவறு என்பது என் எண்ணம்ங்க. பாரதியை பற்றி அடுத்த மொழிக்காரன் குறை சொன்னால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை. அதே போல அவன் மேல் வைக்கப்படும் விமர்சனத்தை நம் மக்களுடன் விவாதித்து, ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதுன் மூலம் தான் உண்மையை உலகுக்கு ஆதாரத்துடன் கூற முடியும்.

    அதற்காக பாரதி விமர்ச்சிபதால் அவரை குறை கூறுவது என்று ஆகாது. இது பாரதிக்கு மட்டும் இல்லை மற்ற எல்லா தலைவருக்கும் தான்.

    எனக்கு காந்தியின் மேல் சில மாறுப்பட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதை பற்றி பேச்சு எடுத்தாலே நான் ஏதோ தேசத்திற்கு விரோதமாக பேசியது போல் எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்கள் தான் அதிகம்

    ReplyDelete
  7. தலைவி உண்மையாகவே நான் இதனை படித்த போது என் உடல் சிலிர்த்தே போனது,,

    இதனைப் பற்றி சொல்லுவதற்கு முன்பு..


    நிஜமாகவே, நான் பாரதி பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று சில விசயங்களை சேகரித்து வந்தேன்.

    ஒரு மூன்று வாரங்களுக்கு தேவையானதினை சேகர்த்த பின்பு என்னால் நான் எண்ணிய படி அந்த பதிவுகளை தர முடியாமல் போகும் என்று தோனியதும் அதனை அப்படியே விட்டு விட்டேன்..

    ஆமாம் எனக்கு புரிந்தவைகளையே பாரதி சொன்னதாய் சொல்ல எனக்கு விருப்பமும் இல்லை. நிறைய பாடல்களுக்கு சரியான விளக்கமும் தெரியாததால் அது அப்படியே நின்று விட்டது,


    எனவே தான் நீங்கள் சொல்லியபோது நான் என் உண்மை நிலைமையினை சொன்னேன்.ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை...

    பாரதியின் வெறும் கவிதை தொகுப்பினை வைத்துக் கொண்டு இது தான் அவன் சொல்லியது என்று என்னால் தப்பாய் சொல்ல முடிந்தால் எனக்கு பாரதி பிடிக்கும் என்று சொல்ல கூட அருகதை கிடையாது.

    ReplyDelete
  8. எனவே நான் வேண்டுவது எல்லாம் உங்களைப் போன்ற பாரதியினை தெரிந்த ,புரிந்த பெரியவர்கள் எல்லாம்
    அதை மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்பதே என் ஆவா.

    ஆம் தலைவியே எல்லாவற்றிற்கும் விளக்க உரை,பதவுரை கிடைக்கும் போது ஒரு பாரதியின் பாடல்களுக்கும் கிடைத்தால் நன்றாய்த்தானிருக்கும்.


    இப்போது நீங்கள் வெளியிட்டதைப் போல...

    ReplyDelete
  9. தலைவி, என்னோட கேள்வி உங்கள உறுத்தி இப்படி யொரு பதிவ வரைவழத்தது அப்படினா எனக்கு ரொம்ப சந்தோசம்..


    அப்படியே மீண்டும் ஒரு வேண்டுகோள்.

    நீங்கள் எத்துணையோ பதிவு,தொடர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள் .. ஆனால் பாரதியின் கவிதையினை பற்றி ஏன் எழுத கூடாது...ஆன்மிகம் எழுதவும் ,பயண கட்டுரை எழுதவும் எத்துணையோ பேர் இருக்கிறார்கள்.(தவறாய் இருப்பின் மண்ணிக்கவும்)

    ஆனால் பாரதியினைப் பற்றியும்,அவனது கவிதையினை பற்றியும் நீங்கள் ஏன் எழுத கூடாது?

    அப்படியே யாராகிலும் நாங்கள் ஒருவர் விளக்கம் கேட்டாலும் நீங்கள் மட்டுமே தேடிக் கண்டுபிடித்து பதில் எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.

    எதோ நினைத்தேன் .சொல்லனும்னு தோனுச்சி.அதான்...

    பாரதி பற்றி தப்பாய் சொல்லும் ஒருவனை திருத்த சரியான ஆதாரம் தேவை யிருக்கிறது.
    எனவே உங்களது பாரதி பற்றிய பதிவுகளை எதிர் பார்த்து..

    ReplyDelete
  10. என்ன சொல்வது இந்தக் கட்டுரை பற்றி.. மணிபிரகாஷின் கருத்துகளை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அது தான் முகத்தில் அறையும் உண்மை மேடம். அருமையான தெளிவுரை. எல்லோருக்கும் இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. உங்களை போல பாரதியின் பொக்கிஷங்கள் மிகச் சிலரிடமே இருக்கிறது. நீங்கள் இது போன்று எழுதினால் தான் எல்லோருக்கும் தெரியும் மேடம். சரியான வாத்தியார்கள் கிடைக்காத பலருக்கும், பாரதி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நல்ல வாய்பினை தந்தீர்கள் மேடம்..

    மிகவும் நன்றி

    ReplyDelete
  11. இத்தனை நாள் எங்கே வைத்திருந்தீர்கள் இந்த விஷயங்களை எல்லாம்.. இப்போது சூடு பிடிக்கிறது உங்கள் பதிவுகள்.. ஆனால் தினமும் ஒன்று பதிவிடலாமே மேடம்.. உங்கள் ஆன்மீகப் பதிவை மெதுவாக வந்து படிக்கிறேன்

    ReplyDelete
  12. அழகாக சொன்னீர்கள்...
    எனது கருத்தும் அதே....

    ReplyDelete
  13. நன்றி சகோதரி கீதா,

    பாரதியாரைப் பற்றி இங்கு இப்படி ஒரு பதிவைப் பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? பாரதியாரைப் போன்ற தமிழர்களின் புகழை தெரியாதவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், தொடர்ந்து எழுதுங்கள்.

    பாரதியாரின் அடிகளில் எனக்குப் பிடித்தது. "விதியே! விதியே! தமிழச்சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா"


    ~ஆரூரன்~

    ReplyDelete
  14. hi if u have time pls read my new post abt bharathi

    http://bharathi-kannamma.blogspot.com/2007/02/blog-post_18.html

    ReplyDelete
  15. தலைவி அவர்களுக்கு முதலில் என் நன்றிகள்.

    மிக மிக அருமையான தேவையான பதிவு அதுவும் என் போன்றவர்களுக்கு. இன்று உங்களால் ஒரு மதிப்பு மிக்க விஷயத்தை தெரிந்து கொண்டேன்.

    மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உங்கள் எண்ணங்களை பாராட்டியே ஆக வேண்டும்.


    \\ஆனால் பாரதியினைப் பற்றியும்,அவனது கவிதையினை பற்றியும் நீங்கள் ஏன் எழுத கூடாது?

    அப்படியே யாராகிலும் நாங்கள் ஒருவர் விளக்கம் கேட்டாலும் நீங்கள் மட்டுமே தேடிக் கண்டுபிடித்து பதில் எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.\\

    நானும் இதையே தான் நினைத்தேன்.
    எங்கள் கோரிக்கையை ஆலோசியுங்கள்...

    ReplyDelete
  16. கீதா, பாரதி பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி.

    பாரதி என்பவன் ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி மட்டுமல்ல. பாரதி என்பது ஒரு பேருணர்வு. அதனால் தீண்டப் பட்டவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள்! (பார்க்க பாரதி தரிசனம்)

    // "யாவரும் வகுத்தற்கரிய பிராயத்தள்
    ஆயினுமே எங்கள் தாய்- இந்தப்
    பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
    பயின்றிடுவாள் எங்கள் தாய்-" எங்கள் தாய்!" //

    இந்த அற்புதமான வரிகள் அவர் பாரத அன்னையைக் குறித்துப் பாடியவை (தொன்று நிகழ்ந்த என்று தொடங்கும் பாடல்). பரதகண்டத்தின் அணியாக விளங்கும் தமிழுக்கும் அவை அழகாகப் பொருந்துகின்றன!

    அன்னை-மகாசக்தி-என்னாளும் கன்னி என்ற சிந்தனை இழை பாரதியின் சக்தி நெறியில் இருந்து வருகிறது.

    "... அகிலாண்ட கோடி ஈன்ற
    அன்னையே பின்னையும் கன்னியென மறை பேசும்
    ஆனந்த ரூப மயிலே!"

    என்ற தாயுமானவரின் பாடல் வரிகளே பாரதிக்கு இந்த எண்ணத்தைக் கொடுத்திருக்கக் கூடும்!

    ReplyDelete
  17. காலம் கடந்து இதைப் பார்க்கிறேன். மிக நல்ல பதிவு. பல புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

    ReplyDelete