எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 10, 2007

வாழ்க, வாழ்க, பாரதி சமுதாயம் வாழ்கவே!



செப்டம்பர் 11 பாரதியின் நினைவு தினம். வாழ்நாள் பூராவும் வறுமையில் சிக்கித் தவித்த ஒரு கவிஞன் பாரதி. கிட்டத் தட்டப் பத்து வருடங்கள் போல் 1908- 1918 வரை தாய்நாட்டைக் காண முடியாமல், ப்ரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியிலேயே வாழ்ந்து வந்தவர். 1918-ல் வறுமை மிகுந்து போகக் குடும்பம் மட்டும் கடையம் செல்கிறது. தங்கம்மாள் பாரதியின் திருமணம் ஒரு காரணமாய்ச் சொல்லப் பட்டாலும் முக்கிய காரணம் வறுமையும், பாரதி தாய்நாட்டுக்கு வரவேண்டும் என்ற ஆசை கொண்டிருந்ததும் தான். ஆனால் அவர் பாண்டிச்சேரியை விட்டுக் கடலூர் எல்லையில் கால் வைத்ததுமே கைது செய்யப் பட்டார்.

1918 நவம்பர் 20-ல் கைது செய்யப் பட்டு ரிமான்டில் 34 நாட்கள் கடலூர் ஜெயிலில் வைக்கப் படுகிறார். வலுவான காரணங்கள் இல்லை. ஆகவே விசாரணையும் செய்ய முடியாமல் பாரதியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை செய்வதாய்க் கூறவே, அனைவரும் அதையே ஆதரிக்க, பாரதியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதலை ஆகிறார்.இதைப் பற்றி எழுதும் "நடேசன் சத்யேந்திரா" அவர்கள், "He was released after he was prevailed upon to give an undertaking to the British India Government that he would eschew all political activities. , என்கிறார். இந்த இடத்தில் "prevailed " என்ற வார்த்தையை பாரதி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டார் என்ற அர்த்தத்திலேயே சொல்கின்றார். பாரதி கடையத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் முக்கிய நிபந்தனை. ஆகவே 1920 வரை அங்கேயே கட்டாய வாசம் செய்கிறார். இந்தச் சமயம் தான் எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக் கவி எழுதுகிறார். பயன் இல்லை. சென்னையில் ரவீந்திர நாத் தாகூருக்கு நோபல் பரிசு கொடுத்ததுக்குப் பெரும் விழா நடப்பதும் அப்போது தான். 1920 டிசம்பரில் அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஒப்ப ஆங்கிலேய அரசு பாரதிக்கான நிபந்தனைகளைத் தளர்த்துகிறது. அவர் சென்னை வருகிறார்.

"சுதேசமித்திரனின்" உதவி ஆசிரியர் ஆகிறார். பல கட்டுரைகள் எழுதியதும் இப்போது தான். 1921 ஜூனிலேயே யானை மிதித்தகாச் சொல்கின்றனர். ஆனால் பாரதி இறந்தது என்னமோ செப்டம்பரில் தான். வறுமை தான் காரணம் என்றும், அரசு அதை மூடி மறைப்பதாகவும் சொல்கின்றர்.ஷண்முகம் சபேசன் தன்னுடைய "பாரதியார் யார்" என்னும் ஆஸ்திரேலிய வானொலிக்கான ஆய்வுப் பேச்சு ஒன்றில் 2004 செப்டெம்பர் பாரதி நினைவு நாளில் இவ்வாறு கூறுகிறார். எது எப்படியோ தன்னுடைய கவிதைகளாலேயே நாட்டு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியதும், ஆங்கில அரசு அதைக் கண்டே மிரண்டதும் உண்மை! அவரின் கிளிக்கண்ணியின் இந்த வரிகள் இத்தனை வருடங்கள் கடந்து இப்போதும் மனித சுபாவத்துக்குப் பொருந்துவதைக் காணலாம்.

"நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திரமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டதிற் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ!

சொந்த அரசும் புவிச்
சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க்குண்டாகுமோ? - கிளியே
அலிகளுக்கின்பமுண்டோ?

கண்களிரண்டிருந்தும்
காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ - கிளியே
பேசிப் பயனென்னடீ?"


நிறையவே எழுதலாம் பாரதியின் எழுத்தைப்பற்றி. "பொதுவுடமை" பற்றி அனைவருக்கும் முன்னாலேயே அவர் நிறையப் பேசி விட்டார். அவர் கண்ட சமுதாயம் இன்னும் நாட்டில் ஏற்படவில்லை. அவர் வார்த்தைகளை நினைவு கூருவோம்.

"வாழ்க, வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே!
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே - ஜெய ஜெய ஜெய,

முப்பது கோடி, ஜனங்களின் சங்கம், (இப்போ 100 கோடினு பாடணும்)
முழுமைக்கும் பொது உடமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை! "

5 comments:

  1. பொதுவா நமக்கு ஒருத்தர் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது. போனதுக்கு அப்புறம் அவருக்கு சிலை வெக்கறது, அவர் வீட்டை தேசிய உடமையாக்கறதுனு எல்லா கூத்தும் நடக்கும்.
    பாரதியின் பாடல்களை சுட்டு/மேற்கோள் காட்டியே இன்னிக்கு பல பேர் பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்.
    மீண்டும் ஒரு நல்ல பதிவு. :)

    ReplyDelete
  2. //"வாழ்க, வாழ்க, பாரதி சமுதாயம் வாழ்கவே!" //

    முண்டாசு கவிஞனின் புகழ் என்றுமே எங்குமே ஒங்குகவே!

    ReplyDelete
  3. உங்கள் பதிவைப் படித்து நெஞ்சு கனத்தது. சரியான நேரத்தில் சரியான
    பதிவு.
    எந்த சட்டத்திற்குள்ளும் அடைக்க
    முடியாத மஹாகவி. மனதில் எந்நேரமும் சுதந்திரக்கனலைத் தூக்கிச் சுமந்த வாழ்க்கை அவனது.
    வாழ்க நீ எம்மான்!
    ஓங்குக உன் புகழ்!

    ReplyDelete
  4. அருமையான பதிவு தலைவி :)

    \\நிறையவே எழுதலாம் பாரதியின் எழுத்தைப்பற்றி.\\

    சொல்லிக்கிட்டே இருக்கிங்க...

    ReplyDelete
  5. //\\நிறையவே எழுதலாம் பாரதியின் எழுத்தைப்பற்றி.\\

    சொல்லிக்கிட்டே இருக்கிங்க... //

    எழுதிக்கிட்டும் தான் இருக்காங்க....

    :)

    ReplyDelete