இளைஞர்கள், இளைஞிகள் அனைவருக்கும் பிடித்தது முதலில் நட்பும், காதலுமே. அதுவும் இன்றைய கால கட்டத்தில் நட்பு மிக மிக உயர்வாய் மதிக்கப் படுவதோடு அல்லாமல், உறவை விட நட்புக்கே முக்கியத்துவமும் கொடுக்கப் படுகின்றது.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.”
என்னும் வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, இங்கே நட்பு என்பது முதலில் இருந்தே தொடர்போ, பழக்கமோ இல்லாமல் ஒத்த உணர்ச்சியாலேயே நட்பு ஏற்படுகின்றது. அதற்குச் சான்று. சுக்ரீவனோடு , ராமனுக்கு ஏற்படும் நட்பைச் சொல்லலாம். ராமன் தந்தையின் வாக்கைக் காக்க வேண்டி நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்தான் எனில், சுக்ரீவனோ தன் அண்ணனால் விரட்டப் படுகின்றான். அண்ணன் இறந்துவிட்டான் எனத் தவறாய் நினைத்தேன், அதனால் மந்திரி, பிரதானிகளின் ஆலோசனையின் பேரிலேயே அரியணை ஏறினேன் என்று சுக்ரீவன் சொன்னபோதிலும், வாலி அதை ஏற்காமல் சுக்ரீவனின் மனைவியை அபகரித்துக் கொண்டு, சுக்ரீவனையும் நாடு கடத்துகின்றான். இங்கே ராமரின் மனைவியும் அபகரிக்கப் பட்டாள். இவ்வாறு இழப்பின் தாக்கமே இருவரையும் இங்கே ஒன்று சேர்க்கின்றது என்றும் சொல்லலாம் அல்லவா??
அதுவும் தவிர, தூய்மையான நட்பில் சமூக, பொருளாதார வித்தியாசங்கள் தென்படாது. நட்பு ஒன்றே பிரதானமாக இருக்கும். மகா பாரதத்தில் கண்ணனுக்கும், குசேலனுக்கும் உள்ள உறவு அப்படி என்றால், இங்கே ராமன், குகனோடு கொண்ட நட்பு, சுக்ரீவனோடு கொண்ட நட்பு, விபீஷணனோடு கொண்ட நட்பு என விரிவடைகின்றது. அதிலும் அனைவரையும் தம் சகோதரர்களாகவே எண்ணும் ராமரின் மனத்தின் பெருந்தன்மையும் நம்மை வியக்க வைக்கின்றது. இதைக் கம்பர்
“குகனொடும் ஐவரானோம், முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம்-
அகனமர் காதலைய நின்னொடு எழுவரானோம்
புகலருங் கானந்தந்து புதல்வரால் பொலிந்தானுந்தை”
என்று ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார்.
வால்மீகியோ வாலி அடிபட்டுக் கிடக்கும்போது, வாலிக்கும், ராமனுக்கும் நடக்கும் விவாதத்தின் மூலம் இதை நன்கு எடுத்துக் காட்டுகின்றார். “ஓர் உயிர் நண்பனின் உற்ற துணைக்காகவும், உயர்ந்த அன்புக்காகவும், தன் செல்வத்தையே துறக்கலாம். தன் சுகமாக இருந்தாலோ, அல்லது தன் ராஜ்யமாக இருந்தாலோ கூடத் துறக்கலாம். “ என நட்பின் பெருமையும், இலக்கணமும் இங்கே வால்மீகியால் எடுத்துக் காட்டப் படுகின்றது.
வாலி ராமரைத் தூற்றிப் பழிச்சொல் கூறிப் பலவாறு பேசியதைப் பொறுமையோடு கேட்ட ராமர், அப்போது அவன் கேள்விகளுக்குக் கூறும் பதிலாகக் கூறுவது இதுவே. சுக்ரீவனோடு அக்னி சாட்சியாக ஏற்பட்ட நட்புக்காகவும், அவனைக் காப்பாற்றத் தான் கொடுத்த வாக்குக்காகவும், நண்பனுக்கு உதவுதல் என்னும் உயர்ந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவுமே தான் இவ்வாறு செய்ததாய்க் கூறுகின்றார் ராமர். நட்பின் காரணமாகவே சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தும் தவறு செய்த வாலி இங்கே தண்டிக்கப் படுகின்றான்.
அதே போல் விபீஷணன் பால் ராமர் கொண்ட நட்பும் பேசப் படுகின்ற ஒன்று. விபீஷணன் தன் தமையனைத் திருத்தப் பலவகைகளிலும் முயற்சித்து விட்டே கடைசியில் ராமரைச் சரணடைகின்றான். சரணடைந்தவனுக்கு அபயம் கொடுப்பதோடு அல்லாமல், அவனைத் தன் சோதரனாகவே ஏற்கின்றார் ராமர். இவ்வாறாக எந்தவிதமான பேதங்களுக்கும் இடம் கொடுக்காமல் நட்பு ஒன்றையே மனதில் வைத்து முதலில் ஒரு வேடனும், படகோட்டியுமான குகனையும், பின்னர் ஒரு வானரம் ஆன சுக்ரீவனையும், அதன் பின்னர் ஒரு அரக்கன் ஆன விபீஷணனையும் தன் நண்பனாய் ஏற்கின்றார் ராமர். இது இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒத்த உணர்ச்சிகள் இருந்தால், அவர்கள் எந்தவிதமான பேதமும் பார்க்காமல் நட்பால் இணைய முடியும் என்பது இங்கே எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.
அடுத்துக் கூடாநட்புப் பற்றி. ராவணன் போன்ற பிறன் மனை விழையும் துன்மதியாளனோடு சேர்ந்த காரணத்தாலேயே மாரீசன் தன் தவற்றை உணர்ந்து திருந்தி வாழ ஆரம்பித்தாலும், பின்னர் அவனின் துர்போதனையால் மீண்டும் பொன்மானாக மாறி சீதையைக் கவர்ந்து செல்ல ஒத்துழைத்து அதன் காரணமாய் உயிர் துறக்கின்றான். அது போலவே ராவணனின் சோதரர்களும், மற்ற நண்பர்களும் ராவணனின் துர் நடத்தையைக் குறித்து அவனுக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும், ராவணன் தன் நண்பர்களின் நல் ஆலோசனையைச் சிறிதும் மதியாமல் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொண்டதோடு அல்லாமல், தன் குலத்துக்கும் அழிவைத் தேடித் தருகின்றான்.
"அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்."
என்று வள்ளுவர் சொல்லி இருப்பதற்கு ஏற்ப "அழ அழச் சொல்லுவாரே தன் மனிதர்" என்பதை ராவணன் உணராமால் போனான் அல்லவா?? ஆகவே நல்ல நட்பு என்பது எது அது இத்தன்மையது என்பதையும்,
"அழிவினவை நீக்கி ஆறுய்ந்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு."
ராமாயணக் காவியம் மூலம் அறிய முடிகின்றது அல்லவா??? ராவணனின் நண்பர்கள் ராவணனுக்கு அழிவைத் தரும் தீமைகளை விலக்கச் சொல்லியும் அவன் விலக்கவில்லை, எனினும் நண்பர்கள் அவனோடு உடனிருந்து துன்பமே அடைந்தனர்.
No comments:
Post a Comment