கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ராமர் மனம் துயருற்று, மிக்க மனவேதனையில் ஆழ்ந்தார். அந்தத் துக்கத்தினூடே அவர் கூறுகின்றார்:" இதுவரை அடையாத துக்கத்தை இன்று நான் அடைந்தேன். தந்தை காட்டுக்கு அனுப்பியபோதும் இவ்வளவு துக்கம் அடையவில்லை. சீதையை ராவணன் தூக்கிச் சென்றபோதும் கடல்கடந்து சென்று அவளை மீட்டு வந்தேன். இப்போது இந்த பூமியிலிருந்தும் அவளை நான் மீட்கவேண்டுமோ?? ஏஏ, பூமாதேவி, இதே சீதையை நீ ஜனகன் வயலை உழும்போது உன்னிலிருந்து கொடுத்தாய். ஆகையால் நீ எனக்கு மாமியார் முறை ஆவாய் அல்லவா? என் மனைவியை என்னிடம் கொடுத்துவிடு, என் அன்பு மனைவியை திரும்பக் கொடு. இல்லையேல் உன்னை சர்வநாசம் செய்வேன். உன் மலைகளைப் பொடிப் பொடியாக்குவேன். நதிகளை வற்றச் செய்வேன். காடுகளை அழிப்பேன். உன்னை ஒன்றுமில்லாமல் செய்து சமுத்திரம் பொங்கி வந்து பூமி முழுதும் ஜலப்பிரளயம் ஆகும்படி செய்துவிடுவேன். என் ஒரு அஸ்திரம் போதும் உன்னை அழிக்க!" என்று கூவுகின்றார். அந்நிலையில் அங்கே அப்போது பிரம்மா பிரசன்னம் ஆகி, "ராமா, நீ யார்?? உன் நிலையை நீ மறந்தாயோ?? உன் சீதை உனக்குத் திரும்பக் கிடைப்பாள். நீ ஒரு மாசற்ற மனிதனாய் இருந்து, வாழ்ந்து, அரசாட்சி புரிந்தது பற்றிய இந்த மாபெரும் காவியம், இந்தப் பூவுலகிலேயே தலை சிறந்த காவியமாய்த் திகழப் போகின்றது. ராமா, இதுவரை நீ அனுபவித்து வந்த சுக, துக்கம் மட்டுமின்றி இனி என்ன நடக்கப் போகின்றது என்பதையும் வால்மீகி எழுதியுள்ளார். அதை நீயும் அமர்ந்து கேட்கவேண்டும். உன் எதிர்கால நிகழ்ச்சிகளை விளக்கும் பகுதி அது. அனைவருடன் இதை நீ கேட்பாயாக!" என்று சொல்லி மறைய, சீதையின் சத்தியப் பிரமாணத்தைக் காண வந்திருந்த அனைத்து தேவர்களும் மறைந்து போகின்றனர்.
ராமரும் அவ்வாறே காவியத்தின் அடுத்த பகுதியைக் கேட்க விருப்பம் தெரிவிக்க காவியம் மறுநாள் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து லவ, குசர்களால் பாடப் படுகின்றது. அந்தக் காவியத்தை லவ, குசர்கள் பாடி முடித்தனர். ராமரும் கேட்டார். அது என்னவென்று பார்ப்போம். சீதை பூமிக்குள் சென்றதும் முற்றிலும் வெறுமையை உணர்ந்த ராமர் உலகே சூன்யமாகிவிட்டதாய் நினைத்தார். யாகத்தை ஒருவாறு சீதையைப் போன்ற ஒரு பிரதிமையைத் தங்கத்தால் செய்து அதை வைத்துக் கொண்டு முடித்தார். வந்த மன்னர்கள் விடைபெற்றுச் செல்ல, ராமர் மன அமைதியை இழந்து அயோத்திக்குத் திரும்புகின்றார். சீதையைத் தவிர மற்றொரு பெண்ணிடம் அவர் மனம் செல்லவில்லை. பல்வேறு யாகங்களைச் செய்வதிலும், நாட்டைப் பரிபாலனம் செய்வதிலும் மனத்தை நிலை நிறுத்தினார். தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாமல் ஆட்சி நடத்தி வந்தார். பருவங்கள் ஒத்துழைக்க, நாட்டு மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று மகிழ்வுடன் இருக்க, ராமரின் அன்னையர் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தினார்கள்.
பின்னர் லட்சுமணன் மகன்கள் ஆன அங்கதன், சந்திரகேது இருவருக்கும் முறையே காருபதம், சந்திரகாந்தம் என்ற பிரதேசங்களுக்கு அரசனாக முடிசூட்டினார் ராமர். பரதனின் மகன்கள் தக்ஷன், புஷ்கலன் இருவருக்கும் பரதனால் வெல்லப் பட்ட கந்தர்வப் பிரதேசத்தில் அடங்கிய தக்ஷசீலம், புஷ்கலாவதி ஆகிய இடங்களுக்கு அரசர் ஆக்கப் பட்டனர். சத்ருக்கனன் மகன்கள் ஆன சுபாஹூ, சத்ருகாதி இருவரும் முறையே மதுரா, வைதிசம் போன்ற இடங்களை ஆண்டனர். இவ்வாறு ஒருவாறு ராஜ்யப் பங்கீடு செய்த நிலையில், ஒரு நாள் ஒரு முனிவர் ஒருவர் ராமரைக் காண வந்தார். ராமரின் அரண்மனை வாயிலுக்கு வந்த முனிவர், அங்கே அப்போது இருந்த லட்சுமணனைப் பார்த்து, " ஒரு முக்கியமான காரியமாக ராமனைக் காண நான் இங்கு வந்திருக்கின்றேன். நீ சென்று ராமனிடம் என் வரவைச் சொல்வாயாக!" என்று அனுப்ப லட்சுமணனும், ராமரிடம் சென்று தெரிவிக்கின்றான்.
ராமரின் அனுமதி பெற்று லட்சுமணன் அந்த முனிவரை ராமனிடம் அழைத்துச் செல்கின்றான். அவரைப் பார்த்து ராமர், "தங்கள் வரவு நல்வரவாகட்டும். என்ன காரியமாக வந்தீர்கள்? யாரால் அனுப்பப் பட்டீர்கள்? கொண்டு வந்த செய்தி என்ன?" என்று கேட்கின்றார். அந்த முனிவர், " மிக மிக ரகசியமான ஒரு செய்தியைத் தாங்கி நான் வந்திருக்கின்றேன். அந்தச் செய்தியை நீங்கள் மட்டுமே கேட்கவேண்டும். வேறு யார் கேட்டாலோ, அல்லது நாம் பேசும்போது யார் பார்த்தாலோ, அவன் உங்களால் கொல்லப் படத் தக்கவன் ஆவான்." என்று கூறுகின்றார். ராமர் "அப்படியே ஆகட்டும்!" என்று சம்மதம் தெரிவித்து, லட்சுமணனைப் பார்த்து, "லட்சுமணா! நீ சென்று கதவின் அருகில் நிற்பாய்! நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளும்போது யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொள்வாய்! அப்படி மீறி யார் பார்க்கின்றார்களோ, அல்லது கேட்கின்றார்களோ, அவன் என்னால் கொல்லப் படுவான்!" என்று சொல்கின்றார்.
லட்சுமணன் சென்று வாயிற்கதவை அடைத்துவிட்டு நிற்கின்றான் காவலுக்கு. உள்ளே வந்தவருக்கும், ராமருக்கும் பேச்சு வார்த்தை தொடங்குகின்றது. அரண்மனை நுழைவாயிலில் துர்வாச முனிவர் மிக, மிக வேகத்துடனும், கோபத்துடனும் வந்து கொண்டிருக்கின்றார்.
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
ReplyDeleteவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
கேஆரெஸ் அண்ணன் பதிவில் ஏற்கனவே படிச்சாச்சு. :p
ReplyDeleteகதைய சீக்ரம் முடிங்க.