ராமரும், வந்த முனிவரும் பேச ஆரம்பித்தனர். லட்சுமணன் வெளியே சென்ற பின்னால் ராமர் வந்த முனிவரைப் பார்த்து," தாங்கள் யார்? தாங்கள் சொல்ல விரும்பியது எதுவாய் இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்." என்று சொல்ல, முனிவர் சொல்கின்றார். "ராமா, நான் பிரம்மதேவனால் அனுப்பப் பட்டிருக்கின்றேன். அவர் தங்களிடம் தெரிவிக்கச் சொன்ன செய்தி இதுதான். "படைப்புக்கடவுள் ஆன பிரம்மதேவன் ஆன நான் படைப்புத் தொடங்கிய போது உங்களால் படைக்கப் பட்டு உங்கள் மகன் ஆனேன். இவ்வுலகைக் காக்க வேண்டி தாங்கள் உலகில் அவதரிக்க முடிவு செய்து, அங்கு வாழும் காலத்தையும் தாங்களே நிர்ணயம் செய்திருந்தீர்கள். அந்தக் காலம் முடியும் நாள் நெருங்கிவிட்டது. ராவணனின் வாழ்க்கையை முடிக்கவேண்டி மனித உருவெடுத்து அவனை அழித்த தங்களுக்கு, தாங்களே நிர்ணயம் செய்து கொண்ட வாழ்க்கை முடிவை எய்தி விட்டது. ஆகையால் உங்களிடம் நான் "மரண தேவனை" அனுப்பி உள்ளேன். இனி தங்கள் முடிவு. இன்னும் சில காலம் பூமியில் வாழ்ந்து பூவுலக மக்களுக்கு நன்மை செய்யவேண்டும், பாதுகாவல் செய்யவேண்டும் என்று நீங்கள் கருதினால் அவ்விதமே ஆகுக! இல்லை தாங்கள் தங்கள் உரிய இடத்திற்குத் திரும்பவேண்டும் என்று நினைத்தாலும் அவ்விதமே ஆகுக!" என்று சொல்கின்றார் வந்த மரண தேவன். ராமரும் அதை ஏற்று இந்தச் செய்தி தனக்கு மகிழ்வையே அளிப்பதாயும், வந்த காரியம் முடிந்த பின்னரும், இங்கே தாமதிப்பதில் அர்த்தம் இல்லை, இதில் சிந்திக்கவும் எதுவும் இல்லை என்றும் சொல்லிவிட்டுத் தாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்புவதாயும் கூறுகின்றார். அப்போது வாசலில் ஒரே சத்தம், இரைச்சல், வாக்குவாதம். ராமர் என்னவென்று பார்க்கத் திரும்புகின்றார். அப்போது லட்சுமணன் தடையை மீறி உள்ளே வரப் பார்க்கின்றான். அடடா, என்ன இது???
லட்சுமணன் காவல் இருந்த வேளையில் அரண்மனைக்கு வந்த துர்வாசர் ராமரைக் காணவேண்டும் என விரும்ப ராமர் தனி அறையில் வேறு யாரோ ஒரு முனிவருடன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதாய்க் கேள்விப் பட, அங்கே வந்து சேருகின்றார். அங்கே காவலுக்கு இருந்த லட்சுமணன் திகைத்துப் போகின்றான். துர்வாசரின் கோபம் மூவுலகும் அறிந்ததே. சாட்சாத் அந்த ருத்ரனின் அம்சமே ஆன அவரிடமிருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது?? என்றாலும் மிக்க பணிவோடு துர்வாசரிடம், வந்த காரியம் என்னவெனத் தன்னிடம் தெரிவிக்குமாறும், தான் அதை நிறைவேற்றுவதாயும் கூறுகின்றான். ராமரைத் தற்சமயம் காண இயலாது எனவும் மிக மிக விநயத்துடன் கூறுகின்றான். ஆனால் துர்வாசரோ லட்சுமணனிடம் மிக மிகக் கோபத்துடன் கூறுகின்றார். "லட்சுமணா, என்னையா தடுக்கின்றாய்? நான் இப்போது உள்ளே சென்றே ஆகவேண்டும். நீ என்னைத் தடுத்து நிறுத்தினால் உன்னை மட்டுமின்றி, உன் சகோதரர்கள் மட்டுமின்றி, இந்த நாட்டையே சபிப்பேன். இந்த நாட்டு மக்களையும் சபிப்பேன். உடனே உள்ளே சென்று ராமனிடம் நான் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிப்பாயாக! இல்லையே என் கோபம் கட்டு மீறிப் பாயும்." என்று சொல்கின்றார்.
லட்சுமணன் சிந்தித்தான். துர்வாசர் தன்னை மட்டும் சபிப்பார் என நினைத்தால் இது என்ன பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டார்? நாட்டு மக்களுக்கும் சாபம் கிடைக்கும் என. என்ன, இப்போது அண்ணன் சொல்லை மீறி உள்ளே சென்றால் எனக்கு மட்டுமே மரண தண்டனை. மொத்த நாடும் சாபத்தால் பீடிக்கப் பட்டு வருங்காலமே துயரில் ஆழ்வதற்குப் பதிலாய், நாம் ஒருவன் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். நடப்பது எதுவானாலும் அது தனக்கே நேரட்டும் என நினைத்த வண்ணம் உள்ளே செல்கின்றான் லட்சுமணன். ராமருக்கு துர்வாசர் உடனே பார்க்க வேண்டும் என்று சொன்னதைத் தெரிவிக்கின்றான் லட்சுமணன். ராமரும் தன் கோபம், திகைப்பு ஆகியவற்றைக் காட்டிலும் துர்வாசர் உடனே கவனிக்கப் படவேண்டியவர் என்று கருதி உடனேயே சென்று முனிவருக்கு முகமன் கூறி வரவேற்றார். துர்வாசரும், தான் மாபெரும் விரதத்தை நீண்ட காலம் இருந்து அன்று தான் அதை முடித்திருப்பதாயும், விரதம் முடியும்போது உட்கொள்ளப் போகும் முதல் உணவை ராமர் கையால் பெற முடிவு செய்து அங்கே வந்ததாயும் சொல்கின்றார். ராமரும் துர்வாசருக்கு எனப் பிரத்தியேகமாய் உணவு தயாரித்து அதை அவருக்கு அளிக்க முனிவரும் திருப்தியாக உண்ணுகின்றார். பின்னர் ராமரையும், மற்றவர்களையும் ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார்.
துர்வாசர் சென்ற பின்னர் நடந்தவைகளை நினைத்த ராமரின் மனம் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தது. முனிவர் உருவத்தில் வந்த மரண தேவன் விதித்த நிபந்தனை தன் அருமைத் தம்பி லட்சுமணால் மீறப்பட்டு விட்டதே? அதனால் லட்சுமணன் தன்னால் கொல்லப் படத் தக்கவன் ஆகிவிட்டானே?? நமக்கு வேண்டியவர்களையும் அன்புக்குரியவர்களையும் நாமே பிரிவதும், நம் கையால் கொல்வதுமே நமக்கு ஏற்பட்ட விதியோ என எண்ணிக் கலங்கினார் ராமர். தன் மந்திரி பிரதானிகளை ஆலோசனை கேட்கலாம் என யோசித்தார். அப்போது அங்கே இருந்த லட்சுமணன் இதற்காகத் தாங்கள் வருந்த வேண்டாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. இது காலம் இயற்றி உள்ள ஒரு சட்டம். அதை நாம் மீற முடியாது. இது இப்படித்தான் நடக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆகவே தாங்கள் என்னைக் கைவிட்டுவிட்டு காலத்துக்குத் தாங்கள் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுங்கள். சொன்ன சொல்லை ராமன் தவறினான் என்ற அவப்பெயர் உங்களுக்கு வரவேண்டாம். வார்த்தை தவறுகின்றவர்கள் நரகத்திற்குத் தான் செல்வார்கள்." என்று சொல்லி தான் தண்டனைக்குத் தயாராய் இருப்பதை ராமரிடம் தெரிவிக்கின்றான்.
நல்ல முயற்சி ..பாராட்டுக்கள்..இதை முழுமையாய் எழுதி முடிக்க வாழ்த்துகள்..
ReplyDeleteஇந்த சேவை..பக்தி உலகிற்கு தேவை..