மூன்றாம் முறையாக ஜனகன் மகளுக்குச் சோதனை காத்திருக்கின்றது. அதுவும் இம்முறை அவள் புகுந்த வீட்டிலேயே, யார் முன்னிலையில் சகல மரியாதைகளுடனும், மருமகளும், பட்டமகிஷியும் ஆனாளோ அந்த மக்கள் அனைவரு முன்னிலையிலும் அவள் சபதம் செய்யவேண்டும். சத்தியப் பிரமாணம் செய்து தன் தூய்மையை நிரூபிக்கவேண்டும். தன்மானமுள்ள எந்தப் பெண்ணும் இதை உடனடியாக ஏற்க மாட்டாள் தான். ஆனால் சீதை ஏற்றாள். தன்மானம் இல்லாததினால் அல்ல. தன்மானம் அளவுக்கு அதிகமாய் இருப்பதாலேயே இதற்கு ஒரு முடிவு இதன் மூலம் கிட்டும் என்ற எதிர்பார்ப்பினாலோ, அல்லது அவள் தனக்குத் தானே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டதாலோ?? யார் அறிய முடியும்???
எனினும் வால்மீகி முனிவரிடம் ராமரின் தூதர்கள் வந்து ராமரின் செய்தியைச் சொன்னதும், வால்மீகி மட்டுமின்றி சீதையும் சம்மதித்தாள், பெரும் சபையினரின் முன்னே தன் தூய்மையை நிரூபிக்க. வால்மீகி முனிவர் சீதை தூய்மையானவள் ஆகையால் அவள் சபதம் செய்ய எந்தத் தடையும் இல்லை, என்றே செய்தி அனுப்புகின்றார் ராமருக்கு. ராமரும் மனம் மகிழ்ந்தவராய், சபையில் கூடி இருந்த மற்ற அரசர்களையும், ரிஷி, முனிவர்களையும் பார்த்து மறுநாள் சீதை சத்தியப் பிரமாணம் செய்யப் போவதாயும், அனைவரும் அதை வந்து நேரில் பார்க்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றார். விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் வரட்டும், வந்து அந்த நிகழ்ச்சியைக் காணட்டும் என்கின்றார் ராமர். ஆஹா, இந்த சத்தியப் பிரமாணத்தில் சீதை வென்று வந்துவிட்டாளானால், அவளுடன் மீண்டும் கூடி வாழவேண்டும் என்ற ஆசை ராமரின் உள்மனதில் இருந்ததோ?? தெரியவில்லை. ஆனால் ராமர் அத்தோடு விட்டாரா என்ன?? யாகம் நடக்கும் இடத்திற்குச் சென்று அங்கே இருந்த ஜாபாலி, வசிஷ்டர், வாமதேவர், காச்யபர், விஸ்வாமித்திரர், துர்வாசர், பார்கவர், புலஸ்தியர், மார்க்கண்டேயர், மெளத்கல்யர், பாரத்வாஜர், கெளதமர் போன்ற ரிஷிகளிடமும், சீதை மறுநாள் ராஜசபையில் சபதம் செய்யப் போவதாயும் அனைவரும் வந்து பார்க்கவேண்டும் எனவும் அழைக்கின்றார். ராமர் அழைத்தது போக மக்களுக்கும் செய்தி பரவி அனைவரும் அயோத்தியை நோக்கி வரத் தொடங்குகின்றார்கள். இதன் இடையே விண்ணுலக மாந்தருக்கும் செய்தி சென்றடைந்து அவர்களும் தயார் ஆகின்றனர். அரக்கர்களும், வானரர்களும் பெருமளவில் குவிந்து இந்த நிகழ்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். மறுநாளும் வந்தது. வால்மீகி ரிஷி சபைக்கு வருகின்றார். அவர் பின்னே அதோ!!! சீதை! என்ன இவளா சீதை?? ஆம், ஆம், இவளே சீதை!சபையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் கல்லாய்ச் சமைந்து போய் அமர்ந்திருக்க, இருகரம் கூப்பியபடியே வால்மீகிக்குப் பின்னால் மெதுவாய் நடந்து வந்தாள் சீதை. அவள் இதயத்தில் ராமர் தவிர வேறு யாரும் இல்லை என்பது அவள் கண்களில் இருந்து தெரிந்தது. சபையோர் சற்று நேரம் பேச்சற்று இருந்துவிட்டுப் பின்னர் மெதுவாய் சீதையை வாழ்த்தினார்கள். அப்போது வால்மீகி பேச ஆரம்பிக்கின்றார்:" ராமா, தசரதன் புதல்வா! நாட்டு மக்களின் அவதூறுப் பேச்சால் நீ என்னுடைய ஆசிரமத்துக்கு அருகே கொண்டு வந்து விட்டு விட்டுப் போன இந்த உன் மனைவி சீதை மிக மிகத் தூய்மையானவள். இந்த இரு குழந்தைகள் ஆன லவனும், குசனும் உன்னுடைய பிள்ளைகளே. அவதூறுக்கு அஞ்சி மனைவியைக் கைவிட்ட உன்னுடைய முன்னிலையில் இதோ, இப்போது சீதை சத்தியப் பிரமாணம் செய்வாள். ராமா! நான் பொய்யே சொன்னது இல்லை. பல்வேறு ஜப, தவங்களை மேற்கொண்டு இருக்கின்றேன். அப்படிப் பட்ட நான் பொய் சொன்னால் என்னுடைய தவங்களின் பலன் எனக்குக் கிட்டாமல் போய்விடும். மனதாலோ, வாக்காலோ, என் செய்கையாலோ நான் ஏதேனும் பாவம் செய்திருந்தால் எனக்கு என்னுடைய தவபலன் கிட்டாது. ஆகவே நான் உறுதியுடன் சொல்கின்றேன். சீதை பாவம் செய்யாதவள். சீதை பாவமற்றவள் என்றால் மட்டுமே என்னுடைய நன்னடத்தையின் பலன் எனக்குக் கிட்டும்."
"அவள் தூய்மையானவள் என்பதாலேயே நான் அவளுடைய பொறுப்பை எடுத்துக் கொண்டு அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தேன். உன்னையே தெய்வமாய்க் கருதும் இவள், இதோ இப்போது அனைவர் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்வாள். " என்று வால்மீகி சொல்கின்றார்.ராமர் தன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, மறுமொழி சொல்கின்றார். "மகரிஷி, உங்கள் வார்த்தைகள் எனக்குள் மிக மன ஆறுதலையையும், நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஏற்கெனவேயே சீதை அக்னிப்ரவேசம் செய்து தேவர்கள் முன்பு தன் தூய்மையை நிரூபித்தாள். அதன் பின்னரே நான் அவளை அயோத்திக்கு அழைத்து வந்தேன். குற்றமற்ற என் மனைவியை அவதூறுப் பேச்சுக்கு அஞ்சியே நான் துறக்கவேண்டி வந்தது. ஆனால் அதனால் என் மனம் படும் பாடு சொல்ல முடியாது. இந்த இரு குமாரர்களும் என் மகன்களே என்பதிலும் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை. சீதையின் பால் நான் மிக்க அன்பு வைத்திருக்கின்றேன் என்பதை இந்த மாபெரும்சபையின் முன் நான் பிரகடனம் செய்கின்றேன்." என்று சொல்கின்றார்.
அப்போது சீதை, மெல்லிய குரலில், தன்னிரு கைகளையும் கூப்பியவண்ணம் கீழ்க்கண்டவாறு சொல்கின்றாள்:
"ரகுகுலதிலகமான ஸ்ரீராமனைத் தவிர, வேறொருவரை நான் நினைத்ததில்லை என்பது உண்மையானால்,
பூமித் தாயே, எனக்கு நீ இடமளிப்பாய்!
மனதாலும், வாக்காலும், சரீரத்தாலும் ராமனைத் தவிர வேறொருவர் என் சிந்தையில் இல்லை என்பது உண்மையானால், அவரையே நான் வணங்கி நிற்பது உண்மையானால்,
பூமித் தாயே, எனக்கு நீ இடமளிப்பாய்!
ராமரைத் தவிர, வேறொருவரை என் சிந்தையில் நான் நினைத்ததில்லை என்பது உண்மையானால்,
பூமித் தாயே, எனக்கு நீ இடமளிப்பாய்!"
என்று சீதை சொல்லி முடித்ததும், பூமி பிளந்தது.
அனைவரும் பேச்சு, மூச்சற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, பூமியில் ஒரு உயர்ந்த ரத்தின சிம்மாசனம் பலவிதமான அலங்காரங்களுடன் தோன்றியது. சிம்மாதனத்தில் அமர்ந்திருந்த பூமித்தாய், தன்னிரு கரம் நீட்டி, "மகளே, என்னிடம் வருவாய்!" என சீதையை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொள்கின்றாள். விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. சபையோர் அந்தக் காட்சியைப் பார்த்து ஆனந்த கோஷம், கர கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தபோதே, சிம்மாசனம் மறைந்தது.
அத்துடன் சீதையும் மறைந்தாள். அனைவரும் திகைத்தனர். உலகமே ஸ்தம்பித்து ஒரு கணம் அசையாமல் நின்றது.
ராமரின் கண்களில் இருந்து கோபம், ஆத்திரம், துக்கம் ஆகியவை ஊற்றாகப் பிரவாகம் எடுத்தது.
No comments:
Post a Comment