

கண்ணன் பிறந்ததைக் கோகுலம் எவ்வாறு கொண்டாடியது என்பதைப் பெரியாழ்வார் திருமொழியின் மூலம் பார்ப்போமா???
"வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே"
எத்தகையதொரு அருமையான காட்சியைக் கொடுக்கின்றார் பெரியாழ்வார். கண்ணன் முற்றமே இப்படி எனில் கோகுலத்தின் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமா?? கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறைந்ததம்மா!! என்ற படிக்கு வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது மகனாய் அவதரித்தான் கண்ணன். அவதரித்ததுமே தன் அவதார மகிமையையும் வெளிப்படுத்தி விட்டான். எவ்வாறு?? தாய், தந்தையருடன் பிறந்த குழந்தை பேசியது. குழந்தை பிறக்கும்போதே அசாதாரண ஒளியுடனேயே, சங்கு, சக்கரங்களுடனேயே பிறந்தது. ஆனால் தாய், பயந்ததால் பின்னர் சாதாரணக் குழந்தையாக மாறியதாம்.
//ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றானென்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!//
ஆய்ப்பாடியில் அத்தனை சந்தோஷம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தலைகால் தெரியலைனு சொல்லுவாங்களே, அது இதுதான் என்பது போல் எல்லாரும் ஆடிப் பாடிக் களித்துக் கொண்டாடுகின்றார்கள் கண்ணனின் பிறப்பை. அது மட்டுமா?? இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகின்றான் கண்ணன்? இவர்களும் எப்படி எல்லாம் சீராட்டிப் பாராட்டுகின்றார்கள்? இதோ யசோதை கண்ணனைக் குளிப்பாட்டுவது.
//கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித்தாளுக்கு அங் காந்திட
வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே!//
என்ன தவம் செய்தாள் இந்த யசோதை! சாட்சாத் அந்தப் பரப்ரும்மமே வந்து பிள்ளையாய்ப் பிறந்துள்ளது. அதற்குக் குளிப்பாட்டிப் பசுமஞ்சளால் நா வழிக்கின்றாளாம். இன்றைக்கும் இத்தகையதொரு பழக்கம் கிராமங்களிலாவது காண முடிகின்றது அல்லவா? இந்தப் பாடல் மூலம் அன்றைய பழக்கங்களையும் சொல்லுகின்றாரே பெரியாழ்வார்! ஆச்சரியமா இல்லை?
//வாயுள் வைகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே!//
கண்ணன் வாயில் உலகைக் கண்டவர்களுக்கு இவன் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் எனப் புரிந்து மகிழ்ந்தனராம். கண்ணனைச் சீராட்டிப் பாராட்டித் தொட்டிலிலும் இடுகின்றனர்.
//கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்//
யசோதை கண்ணனைத் தொட்டிலில் விடுவதும், எடுத்துக் கொள்ளுவதுமாய் இருக்கின்றாள். இந்த அரிய பாடலுக்கு விளக்கம் நம்ம குமரன் கொடுத்திருப்பதைப் பாருங்க, நல்லாவே விளக்கி இருக்கார். யசோதையை அந்தப் பாடு படுத்தி இருக்கானே கண்ணன், அதுக்காக எல்லாம் அவனைக் கோபிக்க முடியுமா என்ன??? மாமனாகிய கம்சன் தாத்தாவையும் சிறையில் அடைத்துவிட்டுத் தானே கொடுங்கோல் அரசனாக மாறியதைத் தண்டிக்க மட்டுமல்லாமல், இவ்வுலகில் பற்பல லீலைகளையும் நடத்திக் காட்டி, ஒரு நடமாடும் தெய்வமாகவே விளங்கியவன் கண்ணன்.

கண்ணன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட என்ன தவம் சேய்தோம் நாம். இவ்வளவு அருமையாக, கண்ணன் அழகினில், பெருமைகளில் எங்களை ஆழ்த்தி விட்டீர் கீதாம்மா.
ReplyDeleteகண்ணனைப் பற்றி படிக்கத் திகட்டுமோ?
ReplyDeleteயசோதையின் நல்லூழ் பற்றி பேசத் திகட்டுமோ?
சின்னக் கண்ணன் குறும்பை எண்ண
புன்னகையுடனே கன்னம் குழியும்
வானும் வந்து மண்ணில் உலவும்!
நன்றி கீதாம்மா.
குட்டிக் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
இன்னும் இருக்கு ராகவ், முடிக்கலை,
ReplyDeleteநன்றி கவிநயா
இன்னும் இருக்கு ராகவ், முடிக்கலை, நேத்திக்குத் தான் எழுத ஆரம்பிச்சேன், நேரம் கிடைக்கலை, முடிஞ்சால் இன்னிக்கு, இல்லைனா அப்புறமா எழுதணும்.
ReplyDelete