முதல்லே இது தேவையானு யோசிச்சேன். ஏற்கெனவே பலரும் ராமாயணத்தைப் பலவிதங்களிலும் அலசியாச்சு. இன்னமும் பேசப் பட்டும் வருகின்றது. எப்போது எழுதப் பட்டது என்று நிர்ணயிக்க முடியாத ஒரு காவியம் இன்றளவும் வாதப் பிரதிவாதங்களால் ஈர்க்கப் படுகின்றது, கற்றறிந்த பலரையும். ஆனால் பலருக்கும், தெரிஞ்ச கதையான ராமாயணத்தைத் திரும்பவும் எதுக்குப் படிக்கணும் என்ற கேள்வி வருகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதைப் படிக்கவும் வாசகர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை என்றும் தெரிய வந்தது. பரவலாக, அநேகமாய் உலகம் முழுதும் ராமாயணம் என்றொரு இந்திய இதிகாசம் பற்றி அறிந்திருந்தாலும், அப்படி என்னதான் இருக்கின்றது இதில்?? ஏன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் படுகின்றது?? இந்திய மக்கள் தங்கள் மனம் கவர்ந்த கதையாக, தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தக் காவியத்தை ஏன் நினைக்கவேண்டும்??
மேற்கத்திய அறிஞர்கள் இதை இந்தியாவின் மாபெரும் காவியங்களில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதுவே முதன்மையானது என்றும் ஒப்புக் கொள்கின்றனர். முக்கியமாய்க் குழந்தைகளுக்குப் படுக்கும் நேரம் சொல்லப் படும் கதையாக இது இருந்து வருகின்றது. மேற்கத்திய நாடுகளின் தேவதைக் கதைகளைப் பெருமளவில் ஒத்து இருந்தாலும், அதிலிருந்தும் மாறுபட்டும் வருகின்றது என்று சொல்லலாம். ஆனால் தேவதைக் கதைகளில் பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகியை அடைய மிகவும் கஷ்டப் பட்டும், பலவிதத் தடைகளை வென்றும், கடைசியில் கதாநாயகி இருக்கும் இடத்தைக் கஷ்டப் பட்டு கண்டு பிடித்தும் அடைவான். வழியில் அவனுக்குப் பல மிருகங்களும், தேவதைகளும் உதவி செய்யும்.
அது போலவே இந்தக் காவியத்திலும் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சங்கள் பல இருக்கின்றன. ஒரு மாற்றம் என்னவெனில் இதில் கதாநாயகன் திருமணம் புரிந்த பின்னரே மனைவியைப் பிரிகின்றான். இங்கேயும் காடுகள் வருகின்றன. நதிகள், மலைகள் வருகின்றன. சமுத்திரம் வருகின்றது. கதாநாயகனின் வீர, தீரப் பிரதாபங்களும், அவனின் எதிரியின் சாமர்த்தியங்களும், அவனின் வீரமும் பேசப் படுகின்றது. அத்தோடு இல்லாமல் கதாநாயகன் தன் எதிரியான அரக்கனைச் சென்றடைய அவனுக்குப் பலவிதங்களிலும் உதவி கிட்டுகின்றது. முதலில் பறவையான ஜடாயு. பேசும் பறவை. அதன் பின்னர் வானரங்கள், இவையும் பேசுகின்றன. கரடியான ஜாம்பவான். இதுவும் மனிதர்கள் போல் பேசுகின்றது. இவற்றின் உதவியோடு ஒரு மாபெரும்பாலம் கட்டி சமுத்திரத்தைக் கடக்கின்றான் கதாநாயகன்.
அதிலும் இந்த வானரங்கள் நினைத்தபோது நினைத்த உருவத்தை எடுக்கும் வல்லமை பெற்றிருக்கின்றார்கள். அதே போல் அரக்கர்களும் பல்வேறுவிதமான வடிவை எடுக்கின்றார்கள். இதற்கு மாரீசன் பொன்மானாய் மாறியதும், தூது வரும் அரக்கர்கள் பறவை வடிவில் வருவதும், மற்றொரு சமயம் வானரங்கள் போலவே உருமாறிச் சென்று உளவு பார்ப்பதும், இந்திரஜித் என்ற ராவணனின் மகன் மறைந்திருந்து மாயாஜால முறையில் போர் புரிவதும், குழந்தைகளுக்குக் கேட்கக் கேட்கத் திகட்டாத ஒன்றாய் அமையும். கதை சொல்லப் படும் உத்திக்கு இத்தகைய பாத்திரங்களின் தேவை இருக்கின்றது மட்டுமில்லாமல் கடைசிவரையில் அவை கதாநாயகனுக்குத் துணை புரிந்து அவன் வெற்றியடையவும் உதவுகின்றன. தேவதைக் கதைகளில் எவராலும் வெல்லமுடியாத ஒரு மந்திரவாதியை கதாநாயகன் எவ்வாறு மந்திர வல்லமை பெற்றிருக்கும் கிளிகள், பறவைகள், மிருகங்கள், உதவியுடன் வெற்றி கொண்டு தன்னுடைய அரசையும், அரசகுமாரியையும் கைப்பற்றுவானோ, அவ்வாறே இதிலும் கதாநாயகன் வானரங்களின் உதவியோடு ராவணன் என்ற எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனைக் கொன்று, தன் மனைவியை மீட்டுக் கொள்கின்றான்.
அதே சமயம் குழந்தைகளுக்குத் தேவையான நீதி போதனையும் கிடைக்கின்றது. தன் தந்தையின் வாக்கைக் காக்கவேண்டி ராமன் காட்டுக்குச் சென்றது குழந்தைகளுக்குப் பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் போதித்தால், காட்டில் ரிஷி, முனிவர்களுக்கு ராமன் உதவியது, பலம் பொருந்தியவர்கள், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல், ஒரு அரசகுமாரனின் கடமை தன் மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பதும் என்றும் சுட்டுகின்றது. மேலும் கடவுளுக்கு நிகரான பலம் பொருந்திய எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனை, ராமன் என்ற சாதாரண மனிதன் கொன்றான் என்பதும் குழந்தைகளைக் கவரும். அதே சமயம் ராவணனை வெல்ல முடிந்தது எவ்வாறு என்பதும் சொல்லப் படுவதால், ராவணன் எத்தனை வரம் வாங்கி இருந்தாலும், மனிதர்களைச் சாதாரணமாய் நினைத்தது மட்டுமில்லாமல், அடுத்தவர் மனைவியான சீதையைத் தூக்கி வந்த அராஜகச் செயலினால் அவன் பலம் பொருந்தியவனாய் இருந்தாலும், அவனின் பலம் முழுதும் பயனற்றுப் போய் விடுகின்றது. இதிலிருந்து ஒழுக்கம் தவறக் கூடாது என்ற நீதியும் குழந்தைகளைச் சென்றடைகின்றது.
ராவணன் என்ற அரக்கன், மனிதர்களை மட்டுமின்றி, குரங்குகள், மிருகங்கள், கரடிகள் போன்றவற்றையும் ஒரு பொருட்டாய்க் கருதாமல் இருக்கும் அதே சமயம் ராமன் தன் அன்பினாலும், பண்பினாலும், நட்பினாலும் அவற்றைக் கவர்ந்து தம் வசம் இழுக்கின்றார். ஒரு வானர அரசன் ஆன சுக்ரீவனிடம் நட்புப் பாராட்டுகின்றார். குழந்தைகளின் மனதில் ஆழப் பதியக் கூடிய ஒரு விஷயம் மிருகவதை என்பதும், மிருகங்களை இம்சை செய்வது தவறு என்று தோன்றும். மேலும் ஒரு அரசன் எவ்வாறு நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியவேண்டும் என்பதும் இதில் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டிருப்பது வருங்காலத் தலைமுறைக்குத் தெரியவேண்டிய முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இப்படி பலவகைகளிலும் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைக் கொண்டிருப்பதாலேயே ராமாயணம் இன்றளவும் குழந்தைகள் மத்தியில் மிக, மிகப் பிரபலமான ஒன்றாய் இருந்து வருகின்றது.
அடுத்து அரசியல் நோக்கில் பார்க்கலாம்.
கிட்டத்தட்ட ராமாயணத்தை ஒரு ஹாரி பாட்டர் கதை ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டோம் போல இருக்கு?ஹி ஹி... சும்மாதான் கேட்டேன். குழந்தைகளைக் கவர்வதற்க்கான காரணங்கள் நன்றாக இருக்கிறது. நானும் கூட அந்த ராமாயணத்தை ஹிந்தில ஒன்னும் புரியாட்டியும், அதன் மாயாஜாலங்களுக்காகவே பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteவாங்க பொற்கொடி, ரொம்ப நாள் ஆச்சு, வந்து, உங்க பதிவுக்கு நான் வந்தும் ரொம்ப நாள் ஆச்சு, ஹாரி பாட்டர் கதை ரேஞ்சுக்கு நாம என்ன கொண்டு வரது, ஹாரி பாட்டருக்கு இது ஒரு முன்னோடினு சொன்னா சரியா இருக்குமோ??
ReplyDeleteஅப்புறம் இன்னும் சில மாறுபட்ட கருத்துக்களும் வரும், அப்போவும் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்க, நன்றி, வந்ததுக்கும், கருத்துகும்.