அநேகமாய் நம் ராமாயணம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதிலும் இந்த உத்தரகாண்டம் எழுதுவது என்பது மிக மிக அதிகமான துயரத்தைக் கொடுக்கும் ஒரு வேலை. என்றாலும், நடந்தது இதுதான், இப்படித் தான் என்பதாலும், ராமரே, தன் கதையைத் தன் குமாரர்கள் வாயிலாகக் கேட்டிருக்கின்றார் என்பது வருவது இந்த உத்தரகாண்டப் பகுதியிலும், என்பதாலும், தனக்கு நேரப் போகும் முடிவையும், ராமர் வால்மீகி வாயிலாகத் தெரிந்து கொள்கின்றார் என்பதும் இதிலேயே வருகின்றது. ஆகையால் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றே உத்தரகாண்டப் பகுதி. இனி நம் கதையில் அடுத்து என்ன நடக்கின்றது என்று பார்க்கலாமா??
*************************************************************************************
தன் ஆசிரமத்தில் லவ, குசர்களை வளர்த்து வந்த வால்மீகி அவர்களை வேதம், வில்வித்தை, அஸ்திரப் பிரயோகம், மற்றும் பல கலைகளில் சிறப்புடன் கூடியவர்களாக வளர்த்து வந்தார். கூடவே, பிரம்மாவின் அனுகிரகத்தாலும், நாரதரின் அறிமுகத்தாலும் ராமரையும், ராமரின் கதையையும் நன்கு அறிந்த வால்மீகி அதை ஒரு மாபெரும் காவியமாக இயற்றி வந்தார். சத்தியத்திலிருந்து ஒரு வார்த்தை கூடப்பிறழாது என பிரம்மாவால் உறுதி அளிக்கப் பட்டிருந்த அந்தக் காவியத்தின் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் பிரம்மாவின் அருளாலே கூறக் கைவரப் பெற்றிருந்த வால்மீகி அதை இசையுடன் பாட லவ, குசர்களே சிறந்தவர்கள் எனவும் முடிவுக்கு வந்தார். ஆகவே லவ, குசர்களுக்கு அவற்றைப் பாடச் சொல்லிக் கொடுத்திருந்தார். இரு இளைஞர்களும் ரிஷிகள் கூடிய சபையில் தங்கள் இனிமையான குரலால் ராமாயண காவியத்தைப் பாடி வந்தனர். அப்போது தான் தற்செயலாக ஸ்ரீராமர் நடத்தி வந்த அசுவமேத யாகம் பற்றியும், அங்கே ஒரு மாபெரும் வித்வத் சபை கூடுவதையும் அறிந்து கொண்டனர் இவ்விரு இளைஞர்களும். நடப்பது தங்கள் வீட்டு விசேஷம் என்பதை அவர்கள் அறியவில்லை.
அவர்களின் இளங்குரலில் அருமையான பாடல்களாய் ராமாயணம் பொழிய ஆரம்பித்தது. இனிய இன்னிசை மழையில் நனைந்த ரிஷிகள் யாகத்தின் செயல்பாடுகளுக்கு இடையே இவர்களைப் பாடவைத்து இசையைக் கேட்டு ஆனந்தித்ததோடு அல்லாமல், தங்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் எனத் தாங்கள் கருதும், கமண்டலம், மான் தோல், காஷாய வஸ்திரங்கள், மரவுரிகள் போன்றவற்றைப் பரிசாய்க் கொடுத்தனர். சிறுவர்களை வாழ்த்தினார்கள் அந்த ரிஷி, முனிவர்கள். மெல்ல, மெல்ல நகரம் பூராவும் விஷயம் பரவியது. யாரோ இரு சிறுவர்களாமே? பார்க்க மிக, மிக அழகாய் இருக்கின்றார்களாம்! தேவலோகத்துக் குமாரர்களோ? மண்ணுலகத்தில் எந்த அரசன் பெற்றெடுத்த பிள்ளைகளோ?? தெரியவில்லையே! இனிமையாகப் பாடுகின்றனராமே, நம் அரசன் ராமனின் கதையை! ஆஹா, இதோ கேட்கின்றது அல்லவா?? அவர்களின் இன்னிசை!
"ஜெகம் புகழும் புண்ணிய கதை ஸ்ரீராமனின் கதையே!
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே!" என ஆரம்பித்துச் சிறுவர்கள் பாடவும், அயோத்தி மக்களின் ஆரவாரங்கள் மன்னனின் அரண்மனை வரை சென்று கேட்டது. மன்னனாகிய ராமனின் செவியும் குளிரவேண்டாமா??? மன்னன் அந்தச் சிறுவர்களை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தான். சிறுவர்கள் வந்தனர்! ஆஹா, என்ன ஒளி பொருந்திய முகங்கள்?? ஆனால்?? இவர்கள் யார்? இது என்ன?? ஏன் மனம் இப்படிப் பதைக்கின்றது?? என் கண்கள் நீரைப் பெருக்குகின்றன?? சீதா, சீதா, நீ இல்லாமல் நான் எவ்வாறு தவிக்கின்றேன் என்பதையும் இந்தக் கதை சொல்லுமோ??
சிறுவர்கள் பாட ஆரம்பிக்கின்றனர் தங்கள் தகப்பன் முன்னிலையிலேயே, பாடுவது தங்கள் கதை எனத் தெரியாமலும், கேட்பது தங்கள் தகப்பனே என அறியாமலும் பாடுகின்றனர். என்ன ஒரு கொடுமையான, கொடூரமான நிகழ்வு?? இந்தப் பூவுலகில் எவருக்காவது இத்தகையதொரு கொடுமை நடந்துள்ளதா? அனைவரும் கேட்கச் சிறுவர்கள் பாடினார்கள் தங்கள் தெய்வீகக் குரலில். கேட்கக் கேட்க ராமருக்கு அரியாசனத்தில் இருப்புக் கொள்ளவில்லை. மெல்ல, மெல்ல, மெல்லக் கீழே இறங்கினார். மக்களுள் ஒருவராகச் சரியாசனத்தில் அமர்ந்தார். கதையைக் கேட்டார். மனத் தவிப்பும், கண்ணீரும் பெருக ஆரம்பித்தது. ராமர் மனதில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. தொடர்ந்து பல நாட்கள் காவிய இசை தொடர்ந்தது சிறுவர்களின் குரலில். ராமருக்குச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. இவர்கள் தான் பெற்றெடுத்த மகன்களே, சீதையின் குமாரர்களே என சர்வ நிச்சயமாய்ப் புரிந்துவிட்டது.
இனிச் செய்யவேண்டியது என்ன?? மனமோ சீதையக் காண ஏங்குகின்றது! சற்றும் வெட்கமில்லாமல் தவிக்கின்றது. ஆனால் உலகம் சொல்லும் வார்த்தையை நினைத்துக் கவலை வருகின்றது! என்ன செய்யலாம்?? ராமர் சிந்தித்தார். சபையில் கூடி இருந்த பெரியவர்களை எல்லாம் கலந்து கொண்டார். பின்னர் ஒரு சில ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வால்மீகியிடம் அனுப்பினார் தன் செய்தியுடன்! என்ன செய்தி?? மூன்றாம் முறையாகச் சீதைக்குச் சோதனை! சத்திய சோதனை! தாங்குவாளா அவள்??? ராமர் அனுப்பிய செய்தி இது தான்:
"சீதை தூய்மையானவள் தான் என்பது நிச்சயம் ஆனால், அவள் பாவம் செய்யவில்லை என்பது நிச்சயம் ஆனால், அவள் இந்த மகாசபைக்கு வந்து அதை நிரூபிக்கட்டும். தன் புனிதத் தன்மையை உறுதி செய்யட்டும். இதற்கு சீதையும் சம்மதித்து, வால்மீகியும் ஒப்புதல் அளித்தால் சீதை இந்தச் சபைக்கு வந்து தன் புனிதத்தை அனைவரும் காண நிரூபிக்கட்டும். சத்தியப் பிரமாணம் செய்யட்டும்."
செய்வாளா????
No comments:
Post a Comment