
தமிழ் வளர்த்த பெரியோர்கள் பலர் உண்டு. தமிழால் வளர்ந்த இன்றைய பெரியோர்களைப் போல் அல்லாமல் தமிழை வளர்க்கின்றோம் என அறியாமலேயே செந்தமிழுக்குப் பல சிறப்புகளைச் செய்தனர் அவர்கள். தமிழிலக்கியத்தில் பக்தி இலக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அத்தகைய பக்தி இலக்கியத்தில் சைவம், வைணவம் போன்ற சமயங்களும் பக்தியை வளர்த்தன. வைணவம் வளர்த்த தமிழில் திருமாலைப் பாடிப் பாடிப் பறந்தவர்களுள் ஆண்டாளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் என்னும்படிக்குத் தமிழ் அவள் நாவில் கொஞ்சி விளையாடியது உண்டு. தமிழை அவள் வளர்த்தாளா, தமிழ் அவளை வளர்த்ததா என்னும்படிக்கு மாலோனைப் பல பாடல்களால் துதித்தாள் ஆண்டாள். அவற்றில் திருப்பாவைக்குத் தனி இடம் உண்டு. அதிலும் அவள் துணிச்சலும் வியக்கத் தக்கதும், போற்றத் தக்கதும் ஆகும். பிறந்ததன் பயனே மாலைத் துதித்து அவன் புகழ் பாடுவதற்கே என்னும்படிக்கு, வேறு ஒருவரைத் திரும்பியும் பார்க்காதவள் ஆண்டாள். அவளுக்குப் பூமாலை தொடுக்கும் வேலையோடு ஆண்டவனுக்குப் பாமாலை பாடுவதும் வேலைதான்.
அரங்கனோ அவள் கையால் தொடுத்து, முதலில் அவள் சூடிக் கொடுத்த மாலைக்கே ஆசைப்பட்டு அதற்கே காத்திருப்பான். எத்தகைய பெரும்பேறு பெற்றாள் ஆண்டாள்? இந்த அரங்கனை அடைவதற்காக அவள் இருந்த நோன்பு தான் என்ன ஒரு அழகான நோன்பு. அக இருளையும், புற இருளையும் ஒருங்கே நீக்கும் மார்கழி மாதக் காலையில், கண்ணனின் பிரிவைத் தாங்காத வடமதுரை ஆயர்பாடிப் பெண்களைப் போல் தானும் நோன்பு நோற்று வாழ எண்ணினாள். அந்த நோக்கத்தைச் செயலும் ஆற்றினாள். ஆண்டவனிடமே தன் ஆசையைத் தெரிவித்து விண்ணப்பமும் செய்கின்றாள். தான் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாக நினைத்துக் கொண்டு, மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில், அந்த ஆயர்பாடிச் சிறுமிகளைக் கூப்பிட்டுக் கொண்டு ஒவ்வொருவராய் வந்து, யசோதை இளஞ்சிங்கத்தைப் பாரோர் புகழப் பாடலாம் என அழைத்துச் செல்கின்றாள்.
நெய் உண்ணாமல், பால் உண்ணாமல், மை எழுதாமல், மலர் சூடாமல், செய்யாதன செய்யாமல், தீக்குறளைச் சென்றோதாமல், அனைவரும் உய்யுமாறு எண்ணி உகந்து ஆரம்பிக்கின்ற நோன்பு மெல்ல மெல்ல இறைவனின் ஒவ்வொரு புகழாய்ச் சொல்லி வருகின்றது. கால்நடைகளைப் பராமரிப்பது பற்றி 3-வது பாடலில் கூறுகின்றாள் ஆண்டாள். அந்தக் கால நடைமுறைகள் ஆன இவை தற்காலத்துக்கும் பொருந்துவதைக் காண முடிகின்றது.
//ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.// 3
அடுத்ததாய் வரும் 4-வது பாடலில் மழை எப்படிப் பொழிகின்றது என்ற விளக்கத்தைக் காண முடிகின்றது. ஒரு பெண், அதுவும் 8-ம் நூற்றாண்டில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஒரு சிறு குமரிப் பெண், திருமணம் ஆகாத பெண் இவ்வாறு எப்படி உரைத்தாள்? ஆச்சரியம் தான். அதுவும் மழை வரும் விதம் அவள் எவ்வாறு வர்ணிக்கின்றாள்?
"ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து" என்று மேகங்கள் கருத்து வானம் இடித்து, மின்னல் மின்னி மழை பெய்வதை உணருமாறு அமைந்த அந்தப் பாடலில், தமிழின் சிறப்பு "ழ"கரம் அதிகமாய்க் கையாளப் பட்ட பாடல் என்ற சிறப்பையும் பெறும்.
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்*
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்*
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பக்திப் பெருக்குக் குறையாமல் வளர்ந்த ஆண்டாள், கண்ணனின் ஒவ்வொரு லீலையாகச் சொல்லி நோன்பு நூற்றபின்னர் 27-ம் நாள் "கூடாரை" மனதினால் கூட முடியாதவரை வெல்லும் சீர்க்கோவிந்தனுக்கு மூட நெய் பெய்து முழங்கை வழிவார, பாற்சோறு ஊட்டுகின்றாள்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். 27
அழகுத் தமிழில் கொஞ்சி விளையாடிய ஆண்டாள், அதன் பின்னர் தான் கண்ணனனயே கணவனாய்க் கொள்வதெனத் தீர்மானிக்கின்றாள். தன் தீர்மானத்தில் உறுதியாகவும் இருக்கின்றாள். பாண்டிய நாட்டுப் பெண்ணல்லவா? வைகை நதியானது மற்ற நதிகளைப் போல் கடலில் கலக்காது. ராமநாதபுரம் அருகே உள்ள முக்கூடல் என்னும் ஊரில் உள்ள ஒரு ஏரியில் தான் கலக்கும். பாண்டிய நாட்டுப் பெண்களும் அவ்வாறே தனித் தன்மை படைத்தவர்கள் அல்லவா? அன்னை மீனாட்சி அருளாட்சி புரிந்த நாடாயிற்றே அது. கன்னி நாடு என்னும் பேரைப்பெற்றதே? அவளைப் போன்றே மன திடமும் வாய்ந்த ஆண்டாள் கண்ணனைத் தவிர வேறொருவனைக் கணவனாய் ஏற்க முடியாது என்பதிலும் திண்ணமாய் இருக்கின்றாள்.
கண்ணன் நினைவிலே இருக்கும் அவளை மன்மதன் வந்து தொல்லை கொடுக்கின்றான். எனினும் என்ன சொல்கின்றாள் மன்மதனிடம், "மானிடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன், கண்டாய், மன்மதனே!' என்று சொல்லி விடுகின்றாள். இத்தனை தைரியமாய்த் தன் மணாளனை நிச்சயித்துக் கொண்டதோடு அல்லாமல், தன் திருமணம் பற்றிய கனவையும் கண்டு ஆனந்தித்தாள் ஆண்டாள். அதுவும் எவ்வாறு? சகல சாத்திர முறைப்படியும், அனைவரும் வந்து இருந்து வாழ்த்தித் திருமணம் நடந்ததாயும் சொல்கின்றாள்.
"இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்தென்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்திரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி! நான்"
எனச் சொல்லும் ஆண்டாள், பின்னர் சொல்கின்றாள்:
"கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையர் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் பகுதக் கனாக்கண்டேன் தோழி! நான்'
என்று சொல்லி மேலும், அந்த நாராயணனே, நேரில் வந்து மாலை சூடுவதையும் சொல்கின்றாள் அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி! நான்!'
என்று தான் கண்ட கனாவைச் சொன்ன ஆண்டாளை, அவ்விதமே பெரியாழ்வார் அரங்கநாதனுக்குச் சகல மரியாதைகளோடும் திருமணம் செய்து கொடுக்க அழைத்துச் சென்றார், அரங்கனோ, ஆண்டாளைத் தன்னுள் ஐக்கியம் செய்து கொள்கின்றான். ஆண்டாளின் தமிழோடும், தமிழ்ப்புலமை மட்டும் அல்லாமல் இங்கே பாடல்களில் வான சாத்திரமும் வருகின்றது. வெள்ளி எழுந்து வியாழமிறங்கிற்று, எனச் சொல்வதின் மூலம் அந்தக் காலக் கணிப்பையும் செய்ய முடிவதாய் ஆன்றோர் கூற்று. கீழ்க்கண்ட பாடலின் மூலம் அது தெளிவாகின்றது அல்லவா???
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!*
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்*
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். 13
ஆண்டாளின் திருவாக்கிலிருந்து வரும் பாடல்களின் மூலம் அந்தக் காலகட்டத்தின் பழக்க, வழக்கங்களும் தெரியவருகின்றது. பறவைகளை எத்தனை கூர்ந்து கவனித்திருக்கின்றாள் எனக் கவனித்தால் மிக்க ஆச்சரியமாய் இருக்கின்றது இல்லையா?
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து*
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!*
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து*
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்*
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?*
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி*
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?*
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய். 7
இந்த ஆனைச்சாத்தன் என்னும் குருவி மிக மிகத் தாமதமாய்க் குரல் கொடுக்கும் ஒன்று. இதன் மூலம் தோழி எழுந்து கொள்ள மிகத் தாமதம் ஆனது என்பதையும் காட்டுகின்றாள் அல்லவா? அதே போல் தமிழில் இப்போது நாம் பயன்படுத்தும் சொற்கள் அந்நாட்களில் எத்தனை அழகாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது என்பதை அறியவும் ஆச்சரியமாய் உள்ளது. இல்லை என்ற வார்த்தை "இலை" எனவே புழக்கத்தில் இருந்திருக்கின்றது. கேட்கவில்லையா என்பது கேட்டிலையோ எனச் சொல்லப் படுகின்றது. பேசு என்ற வார்த்தை காணப்படவில்லை. "செப்பு" என்றே சொல்கின்றாள். "தூயோம்" எனத் தூய்மையாய் வருபவர்களை அழைக்கின்றாள். அதே போல் செய்யோம், ஓதோம், உண்ணோம், எழுதோம், முடியோம், என்றே எதிர்மறைச் சொற்களையும் கையாண்டிருக்கின்றாள். இத்தகைய அறிவு பூர்வமான பாடல்களும், எழுத்துக்களும் ஒரு பெண்ணால் கையாளப் பட்டிருக்க முடியாது என்று ராஜாஜி போன்ற சிலர் கருத்து என்றாலும் பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் ஆண்டாளை விட வேறு எவராலும், இவ்வளவு நளினமாயும், எழிலோடும், அழகு பூர்வமாயும், உணர்வு மற்றும் புத்தி பூர்வமாயும் சிந்தித்திருக்கவும் முடியுமா என்ன? உலகையே ஆள்பவனையே ஆண்டவளை ஆண்டாள் என்னும் பெயரை விடப் பொருத்தமாய் என்ன பெயரில் அழைக்கவும் முடியும்? ஆண்டாள் அவள் தமிழை மட்டுமல்ல நம் உள்ளத்தையும் ஆண்டு கொண்டிருக்கின்றாள். இருப்பாள். தமிழ் உள்ளவரை திருப்பாவையும் நிலைத்து நிற்கும்.
அன்பு கீதா, நாளை ஆடிப்பூரத்துக்கு உங்க பதிவையே பாராயணம் செய்துடலாம் போல இருக்கே.
ReplyDeleteஹ்ம்ம்.நான் என்னிக்குத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் போவேனோ.
என்னிக்குத்தான் அந்தக் கிளியையும் கிளி கை பிடித்தாளையும் பார்ப்பேனோ.
Dear Geetha,
ReplyDeleteWhat is thiru aazhi puram ? Is it not Thiru Aadi Pooram (Aadi month Poora nakshathiram) ?
Please clarify ..
Regards,
R.Srideepa
@வல்லி, ரொம்பவே நன்றிம்மா, வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும்.
ReplyDelete@ஸ்ரீதீபா, என் கிட்டே இருக்கும் சில புத்தகங்களில் திருஆழிபுரம் என்றே வருகிறது, எனினும் நீங்கள் சொன்னது, தர்க்கரீதியாகச் சரியாகப் பட்டதால் மாற்றி உள்ளேன், நன்றி, உங்களுக்கு.
@ஸ்ரீதீபா, உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள "என் டயரி" குழுப் பதிவு, அழைப்புக்கு மட்டும் போலுள்ளது, மற்றதில் எதுவும் காணோம்????????
ReplyDeleteDear Geetha,
ReplyDeleteMannikkavum. Naan innum enathu sinthanaigalai padhivu seiya thodangavillai. Eninum enakkum thangalai pol thamizh aarvum ullathu. Viraivil valai padivu seiya muyarchikiren.
Enathu karuthai madithamaikku nanri.
Ippadikku,
R.Srideepa
அருமையான பதிவு கீதாம்மா. படிக்கப் படிக்கத் திகட்டாத கோதைத் தமிழை அழகுறத் தந்திருக்கிறீர்கள்.
ReplyDelete//வைகை நதியானது மற்ற நதிகளைப் போல் கடலில் கலக்காது. ராமநாதபுரம் அருகே உள்ள முக்கூடல் என்னும் ஊரில் உள்ள ஒரு ஏரியில் தான் கலக்கும். பாண்டிய நாட்டுப் பெண்களும் அவ்வாறே தனித் தன்மை படைத்தவர்கள் அல்லவா? //
நல்ல உவமை :)
எங்கள் அருமைக் கண்ணான கோதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
ReplyDelete//நெய் உண்ணாமல், பால் உண்ணாமல், மை எழுதாமல், மலர் சூடாமல், செய்யாதன செய்யாமல், தீக்குறளைச் சென்றோதாமல்//
ReplyDeleteஅப்பறம் எப்படி "அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவார"???
பாலுண்ணோம்-ன்னு சொன்னவ பாற்சோறு சாப்பிடறா?
தீக்குறளைச் சென்றோடோம்-ன்னு சொன்னவ தீக்குறளை சென்று ஓதுவாளா? :))
விளக்கம் ப்ளீஸ்!
//இத்தகைய அறிவு பூர்வமான பாடல்களும், எழுத்துக்களும் ஒரு பெண்ணால் கையாளப் பட்டிருக்க முடியாது என்று ராஜாஜி போன்ற சிலர் கருத்து என்றாலும்//
ReplyDeleteஇதுக்கு மூதறிஞர் ராஜாஜி நல்லாவே வாங்கிக் கட்டிக்கிட்டாரு!
இலக்கியம், இலக்கணம், வரலாறு என்று தரவுகளாக ஜீயர் பெருமக்களும், தமிழிலக்கிய ஆர்வலரும் வைக்க, மூதறிஞராலேயே பதில் வாதம் வைக்க முடியவில்லை! :)
//பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் ஆண்டாளை விட வேறு எவராலும், இவ்வளவு நளினமாயும், எழிலோடும், அழகு பூர்வமாயும், உணர்வு மற்றும் புத்தி பூர்வமாயும் சிந்தித்திருக்கவும் முடியுமா என்ன?//
இதுக்காகவே உங்களை ஸ்பெஷலா பாராட்டுறேன் கீதாம்மா! :)