
யாரோ ஒரு வண்ணான் சந்தேகப் படும் வகையில் நடந்து கொண்ட தன் மனைவியைக் கண்டிக்கும்போது, "நான் என்ன ராமனா?? பதினான்கு மாதங்களுக்கு மேல் இன்னொருவன் பாதுகாவலில் இருந்த மனைவியைத் திரும்ப அழைத்து வைத்துக் கொண்டதுபோல் வைத்துக் கொள்ள?" என்று கேட்டதாயும், அந்தப் பேச்சைக் கேட்ட தூதர்கள் ராமரிடம் வந்து சொன்னதும், ராமர் சீதையைத் துறக்க முடிவு செய்ததாயும் துளசி ராமாயணத்தில் வருகின்றது. என்றாலும் துளசியின் ராமாயணப் படி ராமர் இப்போது துறப்பதும் உண்மையான சீதை அல்ல. சீதை மேலுலகு செல்லும் நேரம் வந்துவிட்டதாய்க் கூறி ராமர் அவளை மேலுலகம் அனுப்புவதாயும், அவள் தோற்றம் மட்டுமே பூமியில் தங்கியதாயும், அந்தத் தோற்றத்தையே ராமர் காட்டுக்கு அனுப்பியதாயும் துளசியின் ராமாயணப் பாடல்கள் கூறுகின்றன.
அப்போது அந்த மாய சீதைக்குப் பிறக்கும் பையன்களே லவ-குசர்கள் என அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார் துளசி. இந்த சகோதரர்கள் மாபெரும் வீரர்களாய்த் திகழ்கின்றனர். இவர்கள் யாராலும் வெல்ல முடியாதவர்களாய் இருக்கின்றனர். ராமர் அசுவமேத யாகம் நடக்கும்போது அவர் திக்விஜயத்திற்கு அனுப்பும் குதிரையை இவர்கள் பிடித்து வைத்துக் கொள்ளுகின்றார்கள்.

குதிரையை மீட்காமல் அசுவமேத யாகம் செய்ய முடியாது. பெரும்போர் நடக்கின்றது. போர் புரிவது தன் உறவினருடன் என்பதை அறியாமலேயே இளைஞர்கள் இருவரும் போர் புரிகின்றனர். பரதன், சத்ருக்கனன், லட்சுமணன், விபீஷணன், அனுமன் என அனைவருமே இவ்விரு இளைஞர்களால் தோற்கடிக்கப் பட்டு கடைசியில் ராமரே வருகின்றார். ராமர் போர் புரியும் முன்னர் சற்று தூங்க, அந்த இளைஞர்கள் இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் பிடித்து வைத்த அனைவரையும், காட்டத் தங்கள் அன்னையை அழைத்து வருகின்றனர். சீதை அவர்களைப் பார்த்துவிட்டு, இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் உறவினர்கள். உங்கள் தந்தையின் சகோதரர்கள் என்று சொல்கின்றாள்.

No comments:
Post a Comment