சுமந்திரர் தொடர்ந்தார். தன்னுடைய மகன்களான ராமர், லட்சுமணன், பரதன் சத்ருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களின் வாழ்க்கை எவ்வாறு அமையும் எனத் தெரிந்து கொள்ள விரும்பிய தசரத மன்னன் அதை துர்வாசரிடம் கேட்டார். அப்போது துர்வாசர் சொன்னார். "தசரத மன்னா, நன்கு கவனித்துக் கேட்பாய்! முன்னொரு காலத்தில் அசுரர்கள் பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அங்கே அடைக்கலம் புகுந்தனர். பிருகு முனிவரின் மனைவியும் தன் கருணை உள்ளத்தால் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துக் காத்து வந்தார். அதை அறிந்த தேவர்கள் இதை மகாவிஷ்ணுவிடம் கூற அவரும் கோபம் அடைந்து, காப்பாற்றத் தகுதி இல்லாத அசுரர்களைக் காப்பாற்றியதற்காக பிருகுவின் மனைவியின் தலையைத் தன் சுதர்சனச் சக்கரத்தால் அறுத்துத் தள்ளிவிட்டார். மனைவியை மகாவிஷ்ணுவே கொன்றதைக் கண்ட பிருகு முனிவர் தன் நிலை மறந்து, தன்னை இழந்து, தன் மனைவியை இழந்தோமே என்ற பெரும் துயரத்தில் மகாவிஷ்ணுவைப் பார்த்து, "கோபத்தினால் நிதானம் இழந்து, எந்தவிதமான பாவமும் செய்யாமல் நிரபராதியான என் மனைவியைக் கொன்ற நீர், பாவங்களைப் போக்கும் வல்லமை படைத்தவர். உம்மை நான் சபிக்கின்றேன், வல்லமை படைத்தவரே! நீரும் என் போன்ற ஒரு மனிதனாய்ப் பிறந்து, உன் அருமை மனைவியை இழந்து, துயருற்று, மனைவியைக் கட்டாயமாய்த் துறந்து, நீண்டகாலம் அந்த மனவேதனையுடனேயே வாழ்வீராக!" என்று பிருகு முனிவர் விஷ்ணுவிற்குச் சாபம் கொடுக்கின்றார்.
எனினும் பிருகு முனிவருக்கு, மகாவிஷ்ணுவிற்கே சாபம் கொடுக்க நேரிட்டதை நினைத்து மிகுந்த மனக்கிலேசமும், சங்கடமும் ஏற்பட்டது. செய்வதறியாது, பித்தன் போல் கலங்கினார். ஆனால் விஷ்ணுவோ அவரைச் சமாதானம் செய்தார். வேறொரு காரணத்திற்காகத் தான் மனித அவதாரம் எடுக்கவேண்டும் எனவும், பிருகுவின் சாபத்தைத் தான் ஏற்பதாயும், அந்த அவதாரத்தில் முழு மனிதனாகவே தாம் வாழப் போவதாயும், ஆகவே பிருகு முனிவர் கலங்கவேண்டாம் எனவும் இதனால் உலகுக்கு நன்மையே ஏற்படும் எனவும் சொல்லித் தேற்றுகின்றார். தசரதா! இப்போது உனக்குப் பிறந்துள்ள இந்த ஸ்ரீராமன் அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமே எனப் புரிந்து கொள்வாயாக! இவர் அனைத்தையும் துறந்து நல்லாட்சி புரிந்து, நீண்டநாட்கள் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டுகள் பல புரிந்து, பின் தன் மனைவியான சீதையின் மூலம் பிறந்த மக்களுக்கு ஆட்சியைப் பகிர்ந்தளித்துவிட்டு மேலுலகம் செல்லுவார்." என்று கூறினார். ஆகவே லட்சுமணா, ராமர் சீதையைப் பிரிவார் என்பதும், அந்த சோகத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்பதும் ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்ட ஒன்று. இது துர்வாசர் மூலம் தசரதச் சக்கரவர்த்திக்கு பல ஆண்டுகள் முன்பாகவே எடுத்துச் சொல்லப்பட்ட ஒன்று லட்சுமணா! இதை நான் உன் மற்ற சகோதரர்கள் எவரிடமும் இன்றுவரையில் சொன்னதில்லை. ஈனிமேலும் அவர்கள் எவருக்கும் இது தெரியவேண்டியதில்லை. லட்சுமணா, கவலை கொள்ளாதே, சீதை காட்டில் குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். அந்தக் குழந்தைகள் மூலம் ரகுவம்சம் தழைக்கும். எல்லாம் விதி விதித்ததற்குச் சற்றும் மாறாமலேயே நடக்கின்றது." என்று தேற்றினார் சுமந்திரர் லட்சுமணனை.
அயோத்தி வந்தடைந்த லட்சுமணன் ராமரிடம் சீதையைக் காட்டில் விட்டு வந்த செய்தியைச் சொல்லிவிட்டு, ராமருக்குத் துன்பம் நேராது எனத் தேற்றுகின்றான். ராமரும் மனதைத் தேற்றிக் கொள்ளுகின்றார். சில காலம் கழித்து "லவணாசுரன்" என்பவனைக் கொல்வதற்காக ராமர் சத்ருக்கனனை அனுப்புகின்றார். லவணாசுரனைக் கொல்லச் செல்லும் வழியில் சத்ருக்கனன் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குகின்றான். அவன் அங்கே ஓர் இரவைக் கழிக்கின்றான். அந்தச் சமயம் சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவருக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர் சீதையைக் காண வருகின்றார். தன் கையில் இருந்த தர்பையை இரண்டாகக் கிள்ளி, ஆசிரமத்தின் வயது முதிர்ந்த பெண்ணிடம் கொடுத்து, தர்பையின் "குசம்" என்னும் மேல்பாகத்தால், முதலில் பிறந்த குழந்தையையும், தர்பையின் "லவம்" என்னும் கீழ்ப்பாகத்தால் இரண்டாவதாய்ப் பிறந்த குழந்தையையும் சுத்தம் செய்துவிட்டு, முறையே குழந்தைகளுக்கும், லவன், குசன் என்றே பெயர் சூட்டுகின்றார். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் செய்யவேண்டிய வைதீக காரியங்களையும் முறைப்படி அவர் செய்து முடிக்கின்றார். குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும்பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள் எனவும் ஆசீர்வதிக்கின்றார்.சத்ருக்கனனுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப் படுகின்றது. குழந்தைகள் பிறந்த செய்தி கேட்டு மிக்க மகிழ்வுற்ற சத்ருக்கனன், அதன் பின்னர் லவணாசுரனை வீழ்த்தச் செல்கின்றான். சென்று கிட்டத் தட்ட பனிரண்டு ஆண்டுகள் கழித்தே திரும்பும், சத்ருக்கனன், திரும்பும் வேளையிலும் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குகின்றான்.
இடைப்பட்ட பனிரண்டு வருடங்களில் லவனும், குசனும் காண்போர் வியக்கும் வண்ணம் கண்கவரும் தோற்றத்துடனும், தவவலிமையுடனும், மிக்க அறிவுக் கூர்மை படைத்தவர்களாயும், சகல சாஸ்திரவிதிகளை அறிந்தவர்களாகவும் ஆகிவிட்டதையும் காண்கின்றான்.
அப்போது அவர்கள் இருவருமே வால்மீகி எழுதிய, எழுதிக் கொண்டிருந்த ராமாயணக் காவியம் பாடிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைக் கேட்கும் வாய்ப்பு சத்ருக்கனனுக்குக் கிடைக்கின்றது. கேட்கும்போதே அவன் மனமானது பொங்கிப் பொங்கித் தவிக்கின்றது. எல்லையற்ற மகிழ்வுடனும், அதே சமயம் அளவு கடந்த சோகத்துடனும் கூடிய இந்தக் காவியத்தைக் கேட்ட சத்ருக்கனன் ஒரு கட்டத்தில் தன் நினைவையே இழந்துவிட்டானோ எனத் தோன்றும்படி ஆயிற்று. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட சத்ருக்கனன் வால்மீகியிடம் விடைபெற்று அயோத்தி நோக்கிச் சென்றான்.
இப்போது இங்கே சற்றே நிறுத்திவிட்டு துளசிதாசர், சீதையை ராமர் காட்டுக்கு அனுப்பியது பற்றியும், லவ, குசர்கள் பிறந்தது பற்றியும் என்ன சொல்லுகின்றார் என்று பார்க்கலாமா???
சீதை லவ குசர்கள் -அருமையான படம்!
ReplyDeleteபோன பதிவை படிச்சப்பறம் இப்பதான் மனசு சமாதானம் ஆகிறது.