புநர்தத்தன் பேசுகிறான்!
புநர்தத்தனின் கண்கள் பொங்கின. தன் கண்களில் வழியும் கண்ணீரை மறைத்துக்கொண்டு அவன், “இல்லை, என்னால் முடியாது, வாசுதேவகிருஷ்ணா, நான் இங்கிருந்து தப்ப நினைத்தாலும் அது என்னால் இயலாத ஒன்று.” என்றான். இயலாமையில் விளைந்த கோபத்திலும், மனதின் ஓர் ஓரத்தில் தந்தையிடம் உள்ள பாசம் கிளர்ந்து எழுந்ததால் விளைந்த சோகத்தாலும் அவன் குரல் தழுதழுத்தது.
“ஏன் முடியாது?? உன்னைச் சிறைக்கைதியைப் போல் வைத்திருக்கிறார்கள் எனில் உன்னை இங்கிருந்து மீட்பது என் கடமை!” என்றான் கண்ணன். “முடியாது கண்ணா, முடியாது! இந்த நாட்டில் பட்டத்து இளவரசிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்டவன் ஒன்று சாகவேண்டும், அல்லது அரசனாகவேண்டும். அவன் எவ்வளவு உண்மையாகவும், விசுவாசத்தோடும் இருக்கிறானோ, அரசனாக முடியும், இல்லை எனில் அவனுக்குச் சாவு தான் ஒரே தண்டனையாக விதிக்கப் பட்டுள்ளது. இந்த நாட்டு இளவரசியை ஏமாற்றி அவளுக்குத் துரோகம் புரிந்தவன் உயிரோடு இதுவரை திரும்பிச் சென்றதில்லை. இவை இந்த நாட்டின் கடுமையான சட்டங்கள். தெய்வீக அன்னையால் விதிக்கப் பட்டது.” என்றான் புநர்தத்தன்.
“ம்ம்ம்ம்?? எவ்வாறு நீ தேர்ந்தெடுக்கப் பட்டாய் புநர்தத்தா?? “
“இது ஒரு விசித்திரமான நாடு கண்ணா! இந்த நாட்டின் அரசிக்கு எனச் சில அபூர்வத் திறமைகளும், அதிசய சக்திகளும் இருக்கின்றன. அந்தச் சக்திகளைக் கொண்டு அவள் பல அதிசயங்களைப் புரிகின்றாள். அவள் உடலில் அம்பாள் வந்துவிடுவதாயும், அந்த நேரங்களில் அவளே அம்பாளாக மாறிவிடுவதாயும் சொல்கின்றனர். அப்போது அவள் சொல்பவை அனைத்தும் இங்கே வேதவாக்காகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவளுடைய மகள்களுக்கு என எங்கே மணமகன் பிறந்திருக்கிறான் என்பதும் அவன் எவ்விதம் இந்த நாட்டுக்கு வந்து சேருவான் என்பதும் மற்றும் அவனைக்குறித்த அனைத்துத் தகவல்களும் அவளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகின்றன. ஒருவேளை அவளுடைய இந்த மானசீக சக்தியினாலேயே அவள் தன் பெண்களுக்குரிய மணமகனைத் தன்பால் இழுக்கிறாளோ? தெரியவில்லை! அவள் சக்தியே ஒரு புதிர் கண்ணா! ம்ம்ம்ம்?? எனக்கென்னமோ அவளுடைய இந்த அதிசய சக்தியாலேயே நீயும் இங்கே வந்து சேர்ந்திருக்கிறாயோ என எண்ணுகிறேன் கண்ணா!” என்றான் புநர்தத்தன்.
கண்ணன் சிரித்தான். “புநர்தத்தா! நான் என் சொந்த விருப்பத்தின்பேரிலேயே இங்கே வந்திருக்கிறேன்.” என்றான்.
“குழப்பம் தான் மிஞ்சுகிறது. கண்ணா, எனக்குப் புரியவில்லை. ஆனால் என்ன நடந்தது என்று கேள். புண்யாஜனாவின் ராக்ஷசர்கள் என்னை இங்கே கொண்டு வந்தபோது இந்த தெய்வீக சக்தி படைத்த அன்னை ராணி என்னை வரவேற்றாள். நான் வந்த சிலநாட்களிலேயே இங்கே ஒரு திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் புதிதாய் வந்திருக்கும் இளைஞன் எவனோ, அவன் ஏற்கெனவே பட்டத்து இளவரசிக்கு மணமகனாய் அல்லது கணவனாய் இருக்கும் ஆணோடு யுத்தம் செய்யவேண்டும். இந்த யுத்தத்தில் கணவனாய் ஏற்கெனவே இருப்பவன் ஜெயித்தால் வந்தவன் கொல்லப் படுவான். வந்தவன் ஜெயித்தால் அவன் அடுத்த அரச மணமகனாய் அறிவிக்கப் பட்டு ஏற்கெனவே இருந்தவன் கொல்லப் படுவான். அப்படி நான் ஏற்கெனவே இந்தப் பட்டத்து இளவரசிக்கு மணமகனாகவும், கணவனாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவனோடு போர் புரிய நேர்ந்தது. எனக்கு வேறு வழியில்லை. மறுத்தாலும் என் உயிர் என்னுடையதில்லை. நான் அவனைக் கொன்றுவிட்டு, இந்தப் பட்டத்து அரசிக்கு மணமகனாக அறிவிக்கப் பட்டுத் திருமணம் செய்து வைக்கப் பட்டேன். இல்லை எனில் நான் இறந்தால் அவனே நீடித்திருப்பான்.” என்றான் புநர்தத்தன்.
கண்ணன் முகம் யோசனையில் ஆழ்ந்தது. “அப்படியா? என்றால் நானும் இப்படி ஒரு விழாவில் கலந்துகொள்ளும்படி இருக்குமோ? அந்த இளவரசியை நான் மணந்துகொள்ளும்படி நேருமோ?” என்று கேட்டான்.
“அப்படித்தான் நினைக்கிறேன் கண்ணா! அன்னை ராணியின் மேல் இன்னும் தெய்வீகம் ஆவிர்ப்பவிக்கவில்லை. அப்படி ஒரு நிலை அன்னை ராணிக்கு வந்து அவள் பேசவும் ஆரம்பித்துவிட்டாளானால் அவள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர உனக்கு வேறு வழியே கிடையாது. அப்படி நீ மறுத்தாயானால் ராணியின் கணவனாக இருக்கும் அரசனால் கொல்லப் படுவாய்.” என்றான் புநர்தத்தன். “ஓஹோ, நான் அவளை மணந்துகொண்டால்??” கண்ணன் கேட்டான். இளவரசியின் நடத்தைகளுக்கான காரணம் கண்ணனுக்கு இப்போது புரிய ஆரம்பித்தது. தன் அன்னையின் தீர்க்கதரிசனத்திற்கு ஏதுவாக அவள் தன்னை அவள் வழிக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறாள்.
“நீ அவளை மணந்துகொண்டால் வாழ்நாள் பூராவும் அவளோடு இங்கேயே இருக்கவேண்டும், அல்லது வேறு ஒருவன, உன்னைவிட பலசாலியும் புத்திசாலியுமாக இருந்து இங்கே வந்து உன்னைக் கொல்லும்வரை அவளோடு வாழலாம். ராணியின் பெண்களான இவர்களுக்கு இந்த நாட்டை விட்டோ, நகரத்தை விட்டோ வெளியே செல்ல முடியாது. நீ இந்த இளவரசியை மணந்து கொண்டால், நல்ல சாப்பாடு, விலை உயர்ந்த துணிகள், ஆபரணங்கள், பேருக்குக் கொஞ்சம் அதிகாரம் அத்தனையும் கிடைக்கும். ஆனால் நீ உன் மனைவியான அந்த இளவரசியின் அடிமைதானே தவிர, நீயாகச் சுதந்திரமாய் அவளை எதுவும் செய்ய முடியாது. அவளுக்குப் பணிவிடைகள் புரிவதே உன் முக்கிய வேலை. ஒரு ஒட்டுண்ணிபோல் அவளை ஒட்டிக் கொண்டே உன் வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். நீ அந்தண்டை, இந்தண்டை நகரமுடியாமல் எப்போது பெண்காவலர்கள் உன்னைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்கள். உன் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதோடு எப்போது இந்த தெய்வீக சக்தி படைத்த அன்னை ராணி உன்னுடைய மரணத்தை அறிவிப்பாளோ என்ற கவலையும் இருக்கும்.”
“இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்வதை விட நான் இறப்பதையே மேலாக நினைக்கிறேன்.” என்றான் கண்ணன். “ நீ ஏன் மறுத்துப் பேசவில்லை புநர்தத்தா?” என்றும் கேட்டான். “என்னால் முடியாது. தெய்வீக சக்தியால் அடுத்த மணமகன் வருகிறானா என்பதை ராணி அறிவிக்கும் வரையில் நான் காத்திருக்கவேண்டும். அறிவிப்பு வந்து, திருவிழாவும் அறிவிக்கப் பட்டால் நான் ஒன்று சண்டையில் ஜெயித்து என் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, கொல்லப் படவேண்டும். இந்த இருவரில் யார் உயிர் பிழைக்கின்றனரோ அவரே அடுத்த அரசனும் ஆவான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் இந்த ஒரு நாளுக்காகக் காத்திருப்பதே என் வேலை.” என்றான் புநர்தத்தன்.
“சரி, இதில் அரசன் எங்கே வருகிறான்? அவனுக்கு என்ன வேலை?” என்றான் கண்ணன்.
அள்ளி ராஜ்யம் மாதிரி இருக்கு .
ReplyDeleteஎல்கே தாத்தா,
ReplyDeleteஅல்லி, ஒரு லக்ஷம் முறை இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே,
அல்லிக்கும், அள்ளிக்கும் வித்தியாசம் தெரியலை?? உங்க தமிழ் ஆசிரியரை நான் பார்த்தே ஆகணும்! :P:P:P:P:P:P
அடடா இந்த கூகிள் பண்ற வேலை இது
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர், எங்களுக்கும் அதே கூகிள் தானே? நல்லாச் சமாளிங்க தாத்தா!
ReplyDeleteஆகா...!!! இது என்ன கொடுமையாக இருக்கு ;)
ReplyDeleteவாங்க கோபி, ஒருத்தருக்குக் கொடுமை, ஒருத்தர் ரசிக்கிறாங்க, மனிதர்களிலே எத்தனை விதம்???
ReplyDeleteஆகா கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்தக் கதை நான் இப்பத்தான் முதலில் படிப்பதால் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மிக்க நன்றி
ReplyDelete