எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 14, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்.

கண்ணன் தப்பிப்பானா??

தன்னுடைய உறுதியான குரலில் அன்னை ராணி பேசத் துவங்கினாள். “வாசுதேவ கிருஷ்ணனுக்கு நல்வரவு. நீ இங்கே என்னை நாடி வரப் போகிறாய் என்பது சில நாட்கள் முன்னாலேயே எனக்குத் தெரியும். எனக்கு இந்த உலகின் அன்னையான தேவி மாதா அறிவித்தாள். அவள் கட்டளை மூலம் எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உன்னை வரவேற்று உபசரிக்கவும் அவள் கட்டளை. நீ கொண்டு வந்திருக்கும் பரிசுப்பொருட்களையும் தேவி மாதா அங்கீகாரம் செய்யச் சொல்கின்றாள். உனக்கு இங்கே நல்முறையில் உபசாரங்கள் செய்யவும் கட்டளை இட்டிருக்கிறாள்.” என அறிவித்தாள். அவள் நிறுத்தவும் புநர்தத்தன் அன்னை ராணி கூறியவற்றைக் கண்ணனுக்குப் புரியுமாறு அவர்கள் மொழியில் மொழிமாற்றம் செய்து கூறினான். புநர்தத்தன் பேசி முடித்ததும், மீண்டும் அன்னை ராணி தன் கையை உயர்த்தவே, அங்கே மீண்டும் மெளனம் நிலவியது. “வாசுதேவ கிருஷ்ணா, மாட்சிமை பொருந்திய தெய்வீகத் தந்தையின் நேரடிக் கவனிப்பிலே உன்னை இருத்துமாறு தேவி மாதாவின் கட்டளை. அப்படியே நானும் ஆணையிடுகிறேன். தேவி மாதா, இவ்வுலகின் அன்னை, நீ எப்போதுமே இங்கே இருந்து எங்களுக்குச் சேவை செய்வாய் எனவும் கட்டளை இட்டிருக்கின்றாள். இன்று முதல் நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய்!” என்று கூறினாள்.

கண்ணனுக்கு அவை மொழிபெயர்க்கப் பட்டதுமே அவன் பதில் கூற யத்தனிக்கும்போது தன் கைகளால் அவனைத் தடுத்த வண்ணம் அன்னை ராணி மேலும் கூறினாள்:” நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய். இதில் மாற்றம் இல்லை. தேவி மாதா, இவ்வுலகின் அன்னை, உத்தரவிட்டு விட்டாள் எனில் அதை எவராலும் மீற முடியாது, மீறவும் கூடாது.” திட்டவட்டமாக அறிவித்தாள் அன்னை ராணி. கண்ணன் மீண்டும் வாயைத் திறக்கும் முன்னர் ஓர் ஆள் உயரத்துக்கு அங்கே இருந்த குண்டத்தில் இருந்து தீ எழும்பி மேலே வர, அன்னை ராணி எப்படிப் போனாள் என்றே தெரியாமல் மறைந்தாள். அந்த மேடையில் நின்று கொண்டு மெளன சாட்சியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தெய்வீகத் தந்தை என அழைக்கப் படும் அரசன், கீழே இறங்கி வந்து கண்ணன் தோளில் தன் கையை ஆதுரமாக வைத்தான். ஒரு தந்தையின் பாசம் அந்தக் கைகளில் புலப்பட்டது எனக் கண்ணனால் உணர முடிந்தது. அந்தப் பெரிய கூடாத்தின் ஒரு பக்கம் இருந்த தாழ்வாரம் வழியாகக் கண்ணனை அவன் நடத்திச் சென்றான்.

அந்த யாக குண்டத்தின் பின்னால் இருந்த ஒரு தனி அறைக்கு அது சென்றது. அங்கே கல்லால் ஆன ஒரு மேடையின் மேல் அன்னை ராணி அமர்ந்திருக்க இரு பணிப்பெண்கள் அவளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். அன்னை ராணியிடம் ஆவிர்ப்பவித்திருந்த தேவி மாதா விலகிவிட்டதால் அவள் இப்போது தன்னைத் தானே ஆசுவாசம் செய்து கொண்டிருந்தாள். அரசனுக்கும் கண்ணனின் மொழி நன்கு தெரிந்ததால் அன்னை ராணி அவன் மூலம் கண்ணனைப் பல கேள்விகள் கேட்டுக் கண்ணனை பற்றித் தெரிந்து கொண்டாள். கண்ணனுக்கு ஆச்சரியம் என்னவென்றால் அந்த அரசனாகப் பதவி வகித்த தெய்வீகத் தந்தை, குரு பரசுராமரைப் பற்றி விசாரித்தது தான். அவரைப் பற்றி விசாரித்ததோடு அல்லாமல், அவருடைய பல சீடர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டான் அந்த அரசன். பின்னர் கண்ணனை அங்கே அழைத்து வந்த பெண்மணியின் துணையோடு கண்ணன் தன் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கே இருந்த புண்யாஜனா கப்பலின் ஆட்கள் ஒருவர் மூலம் மேலும் பரிசுப் பொருட்களைக் கப்பலில் இருந்து எடுத்துவருமாறு கண்ணன் அனுப்பி வைத்தான்.

அன்றிரவு கண்ணன் தூங்குகையில், திடீரெனத் தன் அருகே யாரோ அமர்ந்த மாதிரி தோன்றக் கண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டு விழிப்பு வந்தது. கண் விழித்துப் பார்த்தால் ஒரு நிழலுருவம் கண்ணன் அருகே அமர்ந்து கொண்டு மென்மையாகப் பேச ஆரம்பித்தது. முதலில் யாரோ என நினைத்த கண்ணன், பின்னர் இளைய இளவரசி எனத் தெரிந்து கொண்டான். அவளுடைய நீண்ட கூந்தல் கண்ணன் முகத்தை மறைக்க அவள் கண்ணனைத் தன் வசம் இழுக்க முயன்று கொண்டிருந்தாள். கண்ணன் இதிலிருந்து எப்படித் தப்புவது என்ற யோசனையில் இருந்தாலும், அவனை யோசிக்க விடாமல் அவள் அழகு மயக்கியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த கண்ணனைத் தப்புவிப்பது போல் அங்கே ஒரு பெண் அப்போது வந்து அந்த இளவரசியின் காதில் ஏதோ மந்திரச் சொற்களைச் சொல்ல, புலிக்குப் பயந்து ஓடும் மானைப் போல் அவள் கண்ணனை விட்டுவிட்டு ஓடினாள். அருகே படுத்திருந்த உத்தவன், “கண்ணா, என்ன இதெல்லாம்?” என்றான் எழுந்து கொண்டே.

“ஒன்றுமில்லை, உத்தவா, நாக கன்னி ஒரு நாகம் போலவே என்னைச் சுற்றிக்கொள்ளப் பார்த்தாள், நல்லவேளை தப்பினேன்.” என்று சொல்லிவிட்டு நகைத்தான். அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்டது. ஆஹா, நம் சக்கராயுதத்தைக் கப்பலிலேயே விட்டுவிட்டோமே! கண்ணன் வருந்தினான். காலடிகள் அறை வாயிலை நெருங்கியது. ஒரு கனத்த ஆண் குரல், "வாசுதேவ கிருஷ்ணனுக்கு தெய்வீகத் தந்தையிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. உடனே வரச் சொல்கிறார்." என்றது. "கண்ணா, நானும் வருகிறேன், தனியாய்ச் செல்லாதே!" என்று உத்தவன் சொல்ல, கண்ணனோ, "வேண்டாம் உத்தவா, உனக்கு அழைப்பு இல்லை, மேலும் இப்போதைக்கு உடனடியாக எனக்கு அபாயம் எதுவும் நேராது. கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நாக உலகத்து மனிதனுடன் சென்றான். பல அறைகளையும், தாழ்வாரங்களையும் தாண்டிச் சென்று கடைசியில் உயரமாய் திடகாத்திரமாய் அங்கே நின்று கொண்டிருந்த தெய்வீகத் தந்தையைக் கண்டான்.

6 comments:

  1. நேத்து மாலையே உங்க பதிவு வந்துச்சு அப்புறம் காணாம போச்சு..

    சீக்கிரம் ... இந்த சஸ்பென்ஸ் தாங்க முடியல

    ReplyDelete
  2. வாங்க உலவு, ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. எல்கே தாத்தா, இப்போத் தான் அநன்யா கூட உங்களைப் பத்திப் பேசிட்டு வந்தேன். சாயந்திரம் ஷெட்யூல் பண்ணினா பிடிவாதமா பப்ளிஷ் ஆச்சு, அப்புறமா அதை ட்ராப்ட் மோடிலேயே அடக்கி வச்சேன். இந்த ப்ளாகருக்கும் எனக்கும் நாலு வருஷப் பகை, அப்போ அப்போ இப்படித் தான் வேலையைக் காட்டும்! :P

    ReplyDelete
  4. நல்லா போகுது கதை. ஆனா மறுபடியும் சஸ்பென்ஸில் மாட்டிக் கொண்டது. இப்படி அப்ப அப்ப சடன் ப்ரோக் போட்டுவிடுகின்றீர்கள். காத்துருக்கோம் அடுத்த பதிவுக்கு.

    ReplyDelete
  5. வாங்க பித்தனின் வாக்கு, வேறு சில வேலைகள் இருப்பதால், பதிவு தாமதம் ஆகிறது. ஆன்மீகப் பயணத்தில் திருவாரூர் பத்தி எழுத ஆரம்பிச்சது பாதியிலே நிக்குது. போதாதுக்கு மின்வெட்டு வேறே. இணையம் இருந்தால் ஒப்புக் கொண்ட வேலையை முடிச்சுக் கொடுக்கத்தான் தோணுது. இது நம்மளோடது தானே, மெதுவா வரட்டும், :))))))))))))))))))) இப்போல்லாம் ஆப்லைனில் எழுதி வச்சுக்க நேரம் கிடைக்கிறதில்லை. ஆச்சு, முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். நன்றி உங்கள் பாராட்டுக்கு.

    ReplyDelete