எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம்பாகம்

நாககன்னிகையின் முடிவு!

“கண்ணா, என் அருமைச் சகோதரா, திக்குமுக்காடித் திணற அடிக்கும் இந்த நாககன்னிகைகளின் சக்தியைப் பற்றி நீ இன்னும் முழுதும் அறியவில்லை. அதனால் நீ நம்பிக்கையுடன் பேசுகிறாய்.” என்றான் புநர்தத்தன். கண்ணன் ஆழ்ந்த யோசனையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தன்னிருப்பிடம் சென்று உத்தவனுடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளின் தன்மையைப் பற்றி விவாதித்தான். அப்போது மீண்டும் தெய்வீகத் தந்தையான மன்னனால் அழைக்கப் பட்டான். மன்னன் அதே பாசத்தோடு கண்ணனைப் பார்த்தான். இப்போது பாசத்தோடு அநுதாபமும் சேர்ந்திருந்தது. “கண்ணா, தேவி மாதாவின் கட்டளைகளா உன்னுடைய திட்டம் பாழாகிவிட்டனவே! என்ன செய்யலாம் மகனே! என் இளைய மகள் ஆஷிகாவிற்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால் தேவிமாதாவின் கட்டளை வேறுமாதிரியன்றோ அமைந்துவிட்டது. இந்தத் திருவிழாவில் நீ புநர்தத்தனைக் கொன்றுவிட்டுத் தப்பிப் பிழைத்தாயானால் பட்டத்து இளவரசியான லாரிகா உன் மனைவியாவாள். ஆஷிகா வேறொரு இளைஞன் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் அவளோ உன்னை மிகவும் விரும்புகிறாள். அவள் இதயம் இந்த மாற்றத்தால் உடைந்தே விட்டது. அவள் புலம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை. என்னிடம் அவள் உன்மேலுள்ள தன் காதலைப் பற்றி ஒளிவு, மறைவின்றி எடுத்துச் சொன்னாளென்றால் பாரேன்!” என்றான் மன்னன்.

“ம்ம்ம்ம் , புரிகிறது அரசே, ஆனால் இந்த நிலை எப்படி மாறும்? எவ்வகையில் நான் உதவ முடியும்?? அல்லது உங்கள் உதவி கிடைக்குமா?”

“மாற்றமா? கண்ணா, தேவிமாதா ஆணையிட்டுவிட்டாளெனில் அதை எவராலும் மாற்றமுடியாது. என்னால் எப்படி உதவ முடியும்??”

“ம்ம்ம்ம், நானோ, புநர்தத்தனோ அல்லது இருவருமோ ஒருவரோடு ஒருவர் சண்டையிட இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டால்???”

“ஓஹோ, அப்படி மட்டும் செய்துவிடாதீர்கள். பின்னர் உங்கள் இருவரையுமே நான் கொல்ல நேரிடும். இங்கே நான் யமன்! மரணக்கடவுள்! தெரிந்ததா?” மன்னம் குரலில் கசப்புணர்ச்சி மேலோங்கி இருந்ததும் புரிய வந்தது.

“ஓஹோ, எனில் உங்கள் குமாரத்திகள் இருவருமே வேறு இருவர் வரும்வரை காத்திருக்க நேரிடும்.” கண்ணன் புன்னகை விரிந்தது.

அரசனோ, மெதுவான குரலில், “என் குருநாதர் பரசுராமராக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார் என்பதை நான் அறிவேன்.” தனக்குள்ளாகப் பேசிக்கொள்பவனைப் போல் கூறிக்கொண்டான். அதைக் கூர்ந்து கவனித்த கண்ணன், “ஆம், ஆம், அவர் புநர்தத்தனைத் திரும்ப அழைத்துச் சென்று நம் தர்மத்தை நிலை நாட்டி இருப்பார். சந்தேகமே இல்லை.” என்றான். சற்று நேரம் மெளனமாக இருந்த அரசன் பின்னர் ஏதோ நினைப்பு வந்தாற்போல், “ராணிமாதாவின் கட்டளையை நான் மீறமுடியாது. அதே சமயம் ஆஷிகா, அவள் நாகலோகத்து மற்றப் பெண்களைப் போல் அல்லாமல் வித்தியாசமானவள். நம் நாட்டுப் பெண்களைப் போன்றவள். அவள் மனம் கஷ்டப் படுவதைக் காணவும் எனக்குச் சகிக்கவில்லை. நீ அவளிடம் சென்று சமாதானமாய் இதில் நாம் செய்வது ஒன்றுமில்லை என்று சொல்லித் தேற்று. அவளுக்குத் தகுந்த மணமகன் வேறொருவன் விரைவில் வருவான் என்றும் சொல்.” என்றான்.

“ஓஓஓ, ஐயா, நான் எப்படி அவ்வாறு உறுதி கூற முடியும்?? அது தவறன்றோ?” என்றான் கண்ணன்.

“வாசுதேவ கிருஷ்ணா, உன்னை எவ்வகையிலேனும் தப்ப வைக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.” மன்னன் கிசுகிசுப்பான குரலில் மீண்டும் தானே பேசிக்கொள்வது போன்ற தொனியில் கூறினான். ஆஹா, இந்தச் சிறுவன் தான் தான் மேற்கொள்ளும் மேற்கொண்டிருக்கும், மேற்கொள்ளப் போகும் தர்மத்திற்காகத் தன் உயிரைக்கூடப் பெரிதாக மதிக்கவில்லையே! இவனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். மன்னன் மனதில் எண்ண ஓட்டங்கள்! கிருஷ்ணனையே பார்த்துக்கொண்டிருந்தான். கிருஷ்ணன், அவனைப் பார்த்துக்கொண்டே, “ஆம், ஐயா, உங்கள் குருநாதர் ஆன பரசுராமர் இங்கே இருந்தால் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவ்வாறே செய்துவிடுங்கள்.” மீண்டும் மீண்டும் பரசுராமரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தான் கண்ணன்.

“இதோ பார் கண்ணா! அந்தச் சிறுமி ஆஷிகா தற்கொலை ஏதாவது செய்து கொண்டுவிடுவாளோ எனப் பயப்படுகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு உகந்த ஆட்களை உன்னோடு அனுப்புகிறேன். நீ அவளிடம் சென்று எவ்வகையிலேனும் அவளைச் சமாதானம் செய். நீ பேசுவதை இந்த என்னுடைய ஆட்கள் அவளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லுவார்கள்.”

கண்ணன் அரசனின் ஆட்களுடன் ஆஷிகா இருக்குமிடம் நோக்கிச் சென்றான். கண்ணனைக் கண்டதுமே ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டு ஆஷிகா புலம்ப ஆரம்பித்தாள். அவள் சொன்னவற்றைக் கூட வந்தவர்களில் ஒருவன் மொழிபெயர்த்தான். “கண்ணா, என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே! நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. செத்துப் போய்விடுவேன். இங்கே அனைவருமே, ஏன் என் தாயான அன்னை ராணி உட்பட அனைவருமே எனக்கு விரோதிகள். அன்னை ராணிக்கு லாரிகா தான் ஆசைக் குமாரி, செல்லப் பெண். நான் ஒன்றுமே இல்லை அவளுக்கு. என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லாதே கிருஷ்ணா!”

நாக கன்னிகை தன்னைக் கட்டிக்கொண்டிருப்பதை நினைத்தால் கண்ணனுக்குத் தர்ம சங்கடமாக இருந்ததோடு உள்ளூர வெறுப்பும் மிகுந்தது. எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் ஆஷிகாவின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணன் தத்தளித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய இளவரசியே, அழாதீர்கள், என்னைவிட மிக அறிவாளியும், வீரனுமான வேறொருவன் உங்களை மணக்க வருவான். இது தேவி மாதாவின் கட்டளை என்கின்றனர் அல்லவோ? ஆகவே நீங்கள் இதற்காக வருந்தாதீர்கள்.”

“இல்லை, இல்லை, எனக்கு நீ தான் வேண்டும், நீ மட்டுமே, உன்னைத்தவிர வேறு யாரானாலும் எனக்குத் தேவையில்லை. உன்னைப் போல் இன்னொருவன் இவ்வுலகில் இருப்பான் என்றும் தோன்றவில்லை.”

“ஆனால் நான் நாளை கொல்லப் படப்போகிறேனே? நாளை என் வாழ்நாள் முடியப் போகிறது.”

“இல்லை, இல்லை, நான் உன்னைக் கொல்ல அநுமதிக்க மாட்டேன். உன்னை இளவரசனோ அல்லது என் தந்தையோ கொல்ல நேர்ந்தால் என்னையும் நான் என் கைகளால் கொன்று கொள்வேன்.”

“முட்டாள்தனமாகப் பேசாதீர்கள் இளவரசி. எந்த நாககன்னிகையும் அவள் கணவன் இறந்தால் இறப்பதில்லை. அவள் உடனே இன்னொருவனைத் தேடிக்கொள்வாள். இது தேவிமாதாவின் கட்டளைகளில் ஒன்று.” கண்ணன் கொஞ்சம் ஏளனமாய்ச் சொன்னான்.

ஆஷிகாவோ, “இல்லை, நீ கொல்லப்பட்டாயெனத் தெரிந்த அடுத்த நிமிடமே நானும் இறப்பேன்.” தீர்மானமாய்ச் சொன்னாள்.

6 comments:

  1. பாட்டி தினமும் ஒரு பதிவு இதை போடுங்க. ரொம்ப இடைவெளி

    ReplyDelete
  2. தாத்தா, சான்ஸே இல்லை! என்ன பண்ணறது?? ஒரு காலத்தில் தினம் இரண்டு பதிவு கூடப் போட்டிருக்கேன், மொக்கையும் சேர்த்து! :)))))))

    ReplyDelete
  3. ம்.. பயங்கரமா நம்ப விட்டலாச்சார்யா கதை மாதிரி திடீர் திருப்பம் பகீர் முடிவுகளோட அட்டகாஸமா போகின்றது கதை. இது எல்லாம் இத்தனை நாளாய் கேட்டதே இல்லையே!! இன்டெரெஸ்டிங் தான் :))ஆஷிகா கிட்ட சொல்லறேன் அவ பேரு எங்கேந்து வந்ததுனு:)) ஒரு நிமிஷம்...... மனக்கண்ணில் ஆஷிகா லாரிகா ரோலுக்கு நம்ப ஜோதிலக்ஷ்மியும் ஜெயமாலினியும் வந்து போனார்கள். மேல ஜய, ஜோதி !கீழ பாம்பு !!! நிஜமான கிருஷ்ணனே பயந்து மயக்கம் போட்டிருப்பான் இல்லை?!!.
    தெரியறது !! தெரியறது நீங்க கட்டையை எடுக்கறது தெரியற....து.....ஊஊ.

    ReplyDelete
  4. ஆகா..இன்னும் எத்தனை பெண்கள் இருக்காக அந்த அரசிக்கு ! ! !

    ReplyDelete
  5. வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹிஹி,கற்பனை நல்லாவே இருக்கு! :)))))))))

    ReplyDelete
  6. வாங்க கோபி, இந்த ராணிக்கு இரண்டே பெண்கள் தான், போகப் போகப்பாருங்க, கண்ணன் வாழ்வில் எத்தனை பெண்கள்னு! :)))))

    ReplyDelete