தெய்வீகத் தந்தையின் விருப்பம்!
கிருஷ்ணன் வந்ததுமே, அவன் தோளில் ஆதுரத்துடனும், ஒரு தந்தையின் பாசத்துடனும் கை வைத்து அவனிடம் மென்மையான குரலில், 'மகனே, பயப்படாதே, நான் உன்னைத் துன்புறுத்த மாட்டேன்." என உறுதி அளித்தான். தெய்வீகத் தந்தை என அழைக்கப்படும் அந்த மன்னனுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்த கிருஷ்ணன், தன்னை அந்த நடு இரவில் அங்கே அழைத்ததன் காரணத்தையும் வினவினான்.
"கண்ணா," மன்னன் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது. "நீ தெய்வீகத் தன்மை பொருந்தியவன் என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு. தேவி மாதா சரியாகவே கூறி உள்ளாள். நான் உன்னையும், உன் வீரத்தையும் பெரிதும் மதிக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் என் சொந்த மகனைப் போல் உன்னை நேசிக்கவும் செய்கிறேன். அதனாலேயே உன்னை எச்சரிக்கை செய்ய இந்த நடு இரவில் இங்கே அழைத்தேன். குமாரா, நீ இங்கிருந்து உடனே கிளம்பு. இந்த நாடு உனக்கு ஏற்றதல்ல. அபாயத்தில் விளிம்பில் நீ நின்று கொண்டிருக்கிறாய், குழந்தாய். இந்த நாகலோகம் உனக்கு ஏற்றதல்ல. உன் கப்பலுக்கு உடனே செல்வாயாக. உன்னை நான் தப்புவிக்கிறேன்." என்றான்.
"தந்தையே, உங்கள் பேச்சில் இருந்தும், நீங்கள் சரளமாய்ப் பேசுவதில் இருந்தும் நீங்கள் ஓர் ஆரியர் எனப் புரியவருகிறதே. இங்கே நீங்கள் அரசர். அப்படி இருக்கையில் உங்கள் பாதுகாப்பில் இருந்து நான் ஏன் தப்பவேண்டும்? ஓர் ஆரியனான என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீர்களா?"
"மகனே, நீ இங்கேயே இருந்தாயானால் என் இளைய மகள் ஆன ஆஷிகாவை நீ மணக்க நேரிடும். பின்னர் இங்கேயே இந்த அன்னை ராணிக்கும், அவள் மக்களுக்கும் தொண்டு புரிந்து கொண்டு அடிமையாக இருக்கும் அவலத்துக்கு ஆளாவாய். உனக்கு விடுதலையே கிடைக்காது. சுதந்திரமாய்ச் சிந்திக்கக் கூட முடியாது உன்னால். உன் விருப்பம் என்பது துளிக்கூட இல்லாமல் இந்த அன்னை ராணியின் விருப்பத்திற்கேற்ப நீ வாழவேண்டும். அப்படியும் அவளை உன்னால் திருப்தி செய்ய இயலாது. வேறு உன்னை விடத் திறமைசாலி ஒருவன் வந்தானெனில் உன் இடத்திற்கு அவன் வருவான். உன் உயிர் உன்னுடையதல்ல. நீ கொல்லப் படுவாய்." என்றான் அந்த தெய்வீகத் தந்தை என அழைக்கப் பட்டவன்.
"ஆனால் நீங்கள், உங்களைப் பார்த்தால் பல வருடங்களாக இங்கே இருப்பது போல் தெரிகிறது. உங்களுக்கு எதுவும் நேரவில்லையல்லவா?" என்றான் கண்ணன்.
"மகனே, எனக்கு நேர்ந்த கஷ்டங்களை எப்படி நான் விவரிப்பேன்?? அதோடு உன்னை இங்கே சூழ்ந்திருக்கும் கஷ்டங்களையும் உனக்கு இங்கே நேரவிருக்கும் அசம்பாவிதங்களையும் என்னால் எவ்வாறு சொல்ல இயலும் எனப் புரியவில்லை. உனக்கு எப்படி புரிய வைப்பேன்?? என் மகனே, பல வருடங்கள் முன்னால், எப்போது என எனக்கே நினைவில் இல்லை, பல ஆண்டுகள் முன்னால் நான் வைவஸ்வதபுரிக்குத் தற்செயலாய் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த கப்பல் தரை தட்டி இதன் கரையில் நின்றதால் வந்து சேர்ந்தேன்." அரசன் சற்று நிறுத்திக்கொண்டான்.
"அப்போது நான் இளைஞன். எனக்கு மனமார, உளமார வரவேற்பு அப்போதிருந்த தெய்வீக அன்னை ராணியால்கொடுக்கப் பட்டது. இப்போது என் மனைவியாய் இருக்கிறாளே அவள் அப்போது வாலிபப் பருவத்தில் இருந்தாள். நான் வந்ததுமே இந்த விழா நடந்தது. அப்போது இளவரசியாகவும் தெய்வீக அன்னையாய்முடிசூடப் போகிறவளாயும் இருந்த இந்த அன்னை ராணியின் அப்போதைய கணவனை நான் தோற்கடிக்கவேண்டும். அல்லது நான் அவனால் கொல்லப்படவேண்டும். என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார். ஆனால் அதிர்ஷ்டவசமாய் நான் பார்கவ குலத்து மஹானும், ஜமதக்னியின் புதல்வரும் ஆன பரசுராமரின் சீடராய் இருந்தேன். அவருடைய கோடரி ஆயுதத்தின் வலிமையை நீ அறிவாய் அல்லவா? அவரிடம் பயிற்சி பெற்ற நான்வெகு எளிதாய் அப்போதைய பட்டத்து இளவரசனைக் கொன்றேன். பின்னர் நான் அந்த இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது. திருமணமும் முடிந்தது. நானும் இங்கேயே அடிமையானேன்."
"ஆனால் அடுத்த கப்பல் வரும்போது நீங்கள் தப்பி இருந்திருக்கலாமே? ஏன் தப்பவில்லை ஐயா?" கண்ணன் கேட்டான்.
மகனே, உனக்கு இவ்விடத்து விஷயங்கள் புரியவில்லை. ஒரு நாக கன்னிகை கணவனை வலுக்கட்டாயமாய்த் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது அவளுக்கு மிக முக்கியம். ஆனால் அவள் தானாய்த் தன்னைக் கணவனிடம் ஒப்படைத்துக்கொள்ள முடியாது. இங்கே நான் தான் அவளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன், அவளுடைய உடைமை. அவள் அல்ல. அவள் எப்போதுமே தன் தாய் ஒருவளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். கட்டுப் பட்டவளும். அவளை மணந்ததும், நான் இளவரசன் ஆனேன், அதே சமயம் நான் ஒரு சிறைக்கைதியும் கூட. அவள் சொன்னதையும், அவள் தாய் கட்டளையிடுவதையும் கேட்டு அவற்றுக்கு நான் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். ஆஹா! என்ன கொடுமை அது! அநுபவித்தால் தான் புரியும்!"
"குழந்தாய்! நான் எவ்வளவு வருந்தி இருக்கிறேன் தெரியுமா இங்கே வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே என?? தப்பிக்க வழி இல்லாமல் தவித்திருக்கிறேன், புரிந்து கொள்வாயா? ஆனால் இவர்கள் நாககன்னிகைகள். உன்னை ஒரு முறை சுற்றிக்கொண்டால் பின்னர் உன் ஆயுள் பூராவும் விடவே மாட்டார்கள். உன்னைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து உன்னை அவர்கள் அடிமையாக ஆக்கி வைத்துக்கொள்வார்கள்."
"ம்ம்ம்ம்ம் அது சரி, தந்தையே, இத்தனை வருஷங்கள் நீங்களும் ஒரு அரசனாக வாழ்ந்திருக்கிறீர்கள். அந்த அதிகாரத்தையும், செல்வாக்கையும், வசதியையும் அநுபவிக்கவே இல்லை என்கிறீர்களா?"
"ஆஹா, மகனே, என்ன கேள்வி இது? இத்தனை வருஷங்களாய் நான் பட்ட பாடு நீ அறிய மாட்டாய் அப்பா, அறிய மாட்டாய். எந்த நிமிஷம் யார் வந்து என் உயிரை எடுப்பார்களோ என ஒவ்வொரு கணமும் தவித்துக்கொண்டிருந்திருக்கிறேன். நான் வந்த பிறகு நான்கு முறைகள் இங்கே வெளி நாடுகளிலிருந்து பிரயாணிகள் வந்திருக்கின்றனர். "
"நான்கு முறைகளா? என்ன ஆயிற்று அவர்களுக்கு?"
"ஆம், வந்தார்கள், ஒவ்வொரு முறையும் தெய்வீகத் தாய் அதை முன் கூட்டியே சொல்வாள். அதற்கேற்றாற்போல் எவனாவது ஒருவன் வருவான். அவன் வந்ததும் இந்தத் திருவிழா நடக்கும். திருவிழா என்ற பெயரில் அவன் என்னைக் கொல்லப் போகிறானா? நான் அவனைக் கொல்லப் போகிறேனா என்ற பதைபதைப்பு. அதெல்லாம் உனக்குப் புரியாது மகனே!"
"பின்னர் என்ன நடந்தது அவர்களுக்கு?"
"ஹா, ஹா, நான் யார்?? பரசுராமரின் நேரடி சீடனாயிற்றே? என்னைத் தோற்கடிக்க முடியுமா? ஆஹா, ஒவ்வொரு முறையும் அந்த இளைஞர்கள் என்னால் மிகக் கொடூரமாய்க் கொல்லப் பட்டதை நினைக்கையில் என் மேலேயே எனக்கு வெறுப்பு மிகுந்து வருகிறது. ஆனாலும் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதைத் தான் நான் செய்ய வேண்டி இருந்தது. பின்னர் அந்த அன்னை ராணி இறந்து போனாள். என் மனைவியும், இப்போதைய அரசியும் ஆன இவள் ராணியானாள். நானும் மன்னன் ஆனேன். ஆஹா, நான் வெறும் மன்னன் மட்டும் அல்ல பிள்ளாய்! யமன்! அனைவரின் உயிரையும் எடுக்கும் மரணத்தின் கடவுளான யமன். ஆனால் இந்த யமன் அந்த அன்னை ராணி என அழைக்கப் படும் தேவிமாதாவின் கண்ணசைவினால் உயிர்களைக் கொல்லுவேன். அது தான் இங்கே எனது பிழைப்பு!" அவன் குரலில் இருந்த வறட்சியைக் கண்ட கண்ணனுக்கு அவன் மீது இரக்கமே மிகுந்தது.
"ஆனால் நீங்கள் இப்போது மிகவும் சக்தி படைத்து அதிகாரம் கொண்டு விளங்குகிறீர்கள்.இந்த ராணியும் இப்போது உங்களிடம் அன்பு கொண்டிருக்கிறாள் அல்லவா? இப்போது நீங்கள் முயன்றால் அவள் மனதை மாற்றலாமே? நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை அவள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்."'
"கண்ணா, இன்னுமா நீ புரிந்து கொள்ளவில்லை!" அரசன் சிரித்தான் என்றாலும் அவன் சிரிப்பில் உயிரில்லை." ஆஹா, என்னால் மட்டும் அது முடிந்தால்?? ம்ஹும் நடக்காது மகனே நடக்காது. எனக்கு உடல்நிலை கெடக் கூடாது. ஓய்வு என்பதும் இல்லை. தேவிமாதா அன்னை ராணியின் உடலில் புகுந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவள் வார்த்தைகளைக் கேட்பதைத் தவிர மற்ற ஒன்றை நான் நினைக்கவும் முடியாது. அற்பக் காரணங்களுக்காகக் கூட என்னைக்கொல்லலாம்."
"நீங்களும் ஏன் நான் புநர்தத்தனை அழைத்துச் செல்லும்போது என்னுடன் வரக்கூடாது?"
பெருங்குரலெடுத்துச் சிரிக்க நினைத்தான் அந்த மன்னன். ஆனால் அது இயலாத ஒன்று. கண்ணனைப் பரிதாபமாய்ப் பார்த்தான். "புநர்தத்தனை அழைத்துச் செல்வதா? கனவு காணாதே தம்பி!" என்றான்.
//"புநர்தத்தனை அழைத்துச் செல்வதா? கனவு காணாதே தம்பி!" என்றான். //
ReplyDeletepaavam kannanai avaruku teriyavillai
ஆகா..இது என்ன கடைசியில இப்படி சொல்லிட்டாரு அரசன்.
ReplyDeleteஅம்மா இன்று முழுதும் நான் 2007ல் கண்ணனின் முதல் பதிவில் இருந்து கம்சனின் வதம் வரை படித்து முடித்தேன். மிக அருமை.
ReplyDeleteவாங்க தாத்தா, சரியாச் சொல்றீங்க.
ReplyDeleteகோபி,பொறுங்க, பார்க்கலாம், என்ன நடக்குதுனு :D
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு, ஒரு தவம் மாதிரிப் படிச்சிருக்கீங்க, எனக்கு இன்னும் பொறுப்புக் கூடுது. கவனமா எழுதணும், ரொம்ப நன்றி, உங்க ஈடுபாட்டுக்கும், பாராட்டுக்கும்.
ReplyDeleteதங்கள் பதிவுகள் மிக அருமை.தொடர்ந்து அறிவை பகிருங்கள்.
ReplyDelete// எனக்கு இன்னும் பொறுப்புக் கூடுது. கவனமா எழுதணும், ரொம்ப நன்றி, உங்க ஈடுபாட்டுக்கும், பாராட்டுக்கும். //
ReplyDeleteகண்டிப்பாக, நீங்கள் சொல்வது போல மகாபாரதம் அதில் கண்ணனின் பங்கு பற்றி முழுதுமாக எழுதுவதாக இருந்தால் இரண்டு நாளைக்கு ஒருமுறை பதிவு போட்டால் கூட ஒரு வருடம் ஆகும் போல.
ஆதலால் எங்களை ரொம்ப காக்க வைக்காமல் வாரம் மூன்று கண்ணன் பதிவுகளைப் போடுங்கள். மிக்க நன்றி.
நன்றி, பித்தனின் வாக்கு.
ReplyDelete