எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 23, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! 2ம் பாகம்

புநர்தத்தனா? கண்ணனா?? ராணியின் எதிர்பார்ப்பு!


புண்யாஜனாக் கப்பலின் ஊழியர்கள் இளவரசியின் புலம்பலை மொழி பெயர்த்தனர். “வாசுதேவ கிருஷ்ணா, தேவி மாதா அன்னை ராணியின் மூலம் ஆக்ஞை இட்டுவிட்டாளாம். நீ தற்போதைய இளவரசனும், பட்டத்து இளவரசியின் தற்போதைய கணவனும் ஆனவனோடு சண்டை இடவேண்டுமாம். நீ ஜெயித்தால் அடுத்த பட்டத்து இளவரசியைக் கைப்பிடிக்கும் பேறு பெறுவாய். உன்னால் புநர்தத்தன் கொல்லப் படுவான் என அன்னை ராணி கூறுகிறாளாம். இதை நீ மீற முடியாது. உன்னிடம் அன்பு வைத்திருக்கும் இந்தப் பெண்ணால் அதைத் தாங்க முடியவில்லை. ஒருவேளை நீ கொல்லப் படுவாயோ என அஞ்சுகிறாள்.”

கிருஷ்ணனுக்கு ஓரளவு செய்தி எதிர்பார்த்தது எனினும் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை. அது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. மேலும் இவ்வளவு விரைவில் தேவி மாதா அன்னை ராணியின் மூலம் தன்னைத் தேர்ந்தெடுப்பாள் எனவும் அவன் எதிர்பார்க்கவில்லை. பாவம் இந்தப் பெண்! தன்னை அவளுக்கென நினைத்திருந்தாள். இப்போது இந்தச் செய்தியால் ஏமாற்றம் அடைந்து விட்டாள். அவர்கள் போட்டுக்கொண்டிருந்த திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை. அதற்கு முன்னால் இந்தச் செய்தி வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது மற்ற அனைவருக்கும்.எப்படியாவது புநர்தத்தனை இங்கிருந்து கடத்திச் சென்றுவிடவேண்டும் எனத் திட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த போதே கிருஷ்ணனுக்கு இம்மாதிரியான அழைப்பு வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் கண்ணனை உடனடியாக அன்னை ராணி இருக்குமிடம் கொண்டு செல்லவும் உத்தரவாகி இருந்தது. பாதிப் பேச்சினிலேயே கண்ணன் அங்கே சென்றான். அங்கே அன்னை ராணி உடலில் தேவிமாதா புகுந்து அப்போது தான் வெளிச்சென்றதாயும், அன்னை ராணி தேவிமாதாவை நமஸ்கரித்த வண்ணம் காட்சி கொடுப்பதாயும் தெரியவந்தது. அவள் அருகில் தெய்வீகத் தந்தையான அரசன், “யமன்” அன்னை ராணியை மாறாக் காதலுடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

கண்ணனிடம் அன்னை ராணி எதுவும் பேசவில்லை. மாறாக மன்னனே பேசினான். “வாசுதேவா! தேவி மாதாவால் அடுத்த போட்டிக்கு உரியவனாக நீ தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாய். இப்போதைய இளவரசனோடு நீ போர் புரியவேண்டும். போரில் நீ கொல்லப் பட்டால் அவனே இளவரசனாக நீடிப்பான். அவனை நீ கொன்றாயானால் பட்டத்து இளவரசி லாரிகாவின் கரம் உனக்கே. நாங்கள் தேவி மாதாவின் திருத் தலத்துக்கு அலங்கரிக்கச் சென்றதும், லாரிகா பட்டத்து ராணியாவாள். நீ தான் அரசன். இது உனக்கு வாய்த்திருக்கும் மாபெரும் வாய்ப்பு. நன்றாகப் பயன்படுத்திக்கொள்வாயாக!” என்றான்.

கொஞ்சம் கிசுகிசுப்பான குரலில் அன்னை ராணியும் அதை ஆமோதித்தாள். கண்ணன், “ஆனால் நான் போர் புரியவும் விரும்பவில்லை. இளவரசனைக் கொல்லவும் விரும்பவில்லை.” என்றான்.

“எனில் உன்னைக் கொல்லவேண்டியவன் நானே மகனே! அது என்னுடைய கடமை. மேலும் தேவிமாதா கொடுத்திருக்கும் மீறமுடியாத கட்டளைகளில் அதுவும் ஒன்று. அவள் கட்டளையை மீற முடியாது.” என்று திட்டவட்டமாய்த் தெரிவித்தான்.

“இது என்ன விசித்திரமான கட்டளைகளும், விதிமுறைகளும்? அதுவும் உலகுக்கே தாய் என்பவளிடமிருந்து?” கண்ணன் கேட்ட இந்தத் தொனியால் அன்னை ராணிக்கு ஆச்சரியம் மேலிட்டது. இன்றுவரையிலும் இம்மாதிரி எவரும் சிந்தித்தது கூட இல்லை. அதிர்ச்சியும், குழப்பமும் கலந்து கண்ணனைப் பார்க்கும்போது அவனோ, “எனக்கு எந்தத் தீங்கும் செய்யாத ஒருவனை நான் ஏன் கொல்லவேண்டும்?” என்றும் கேட்டான்.

“உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்டுவிட்டது. நாளை நடக்கப் போகும் விழாவில் நீ புநர்தத்தனைக் கொல்லவேண்டும், அல்லது அவன் உன்னைக் கொல்லவேண்டும். “ தெய்வீகத் தந்தை மேலே பேச எதுவும் இல்லை என்ற தொனியில் அப்போதைய சந்திப்பை முடிக்கத் தயார் ஆனான். கிருஷ்ணன் யோசனையுடன் அங்கிருந்து கிளம்பினான். புநர்தத்தன் இருக்குமிடம் சென்றான். அங்கே புநர்தத்தன் இதை எதிர்பார்த்தவனாகவே இருந்தான். அவனிடம்கிருஷ்ணன் நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி எனக் கேட்க அவனோ என்னால் இதை எப்படித் தடுக்க முடியும் வாசுதேவா? நாகலோகத்தின் விதிமுறைகளும், சட்டதிட்டங்களும் மீறமுடியாதவை என்றான்.

“எனில் நீ செய்யப் போவது என்ன புநர்தத்தா?” கண்ணன் கேட்டான்.

“உத்தவன் நீ கம்ஸனையும், சாணுரனையும் கொன்றது பற்றி என்னிடம் கூறினான். மேலும் நீ என் தந்தை குரு சாந்தீபனியின் சீடன். ஆகவே நீ கட்டாயம் என்னைக் கொன்றுவிடுவாய்!” புநர்தத்தன் அப்போதே கண்ணன் தன்னைக் கொல்லவேண்டும் என எதிர்பார்த்தவன் போலத் தோன்றினான். மேலும் மரணத்தைப் பல ஆண்டுகளாய் எதிர்பார்த்துக் களைத்தவன் போலும் காணப்பட்டான். அவனையே யோசனையுடன் பார்த்தான் கண்ணன்.

"புநர்தத்தா! நாம் ஒரு வகையில் புனிதமான முறையில் சகோதரர்கள் ஆகிறோம். நீ என் குருவின் மகன். குரு எனக்குத் தந்தை என்னும் முறையில் நீ என் சகோதரன் ஆகிறாய். நானும் உன் உடன்பிறவா சகோதரன் ஆகிறேன். இப்போது நான் உன்னைக் கொல்லவேண்டும், அல்லது நீ என்னைக் கொல்லவேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்த அதர்மக்கொலை சற்றும் ஏற்கமுடியாத ஒன்று." என்றான் கண்ணன். மென்மையான ஆறுதல் அளிக்கும் குரலில் இதைச் சொல்லிக்கொண்டே தன் கைகளால் அவனை மெல்ல அணைத்தான் கண்ணன். சொற்களின் ஆறுதலும், மென்மையும் கைகளின் வழியாகப் புநர்தத்தன் உடலுக்குள் புகுந்து அவன் கண்களின் வழியாக வெளியே வந்தது.

தழுதழுக்கும் குரலில் புநர்தத்தன் பேசினான்."வாசுதேவா, உன்னோடு சண்டை போட என்னால் இயலாது. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. என் தந்தையைச் சந்தோஷப் படுத்தவென்றே நீ இத்தகையதொரு அபாயகரமான காரியத்தில் இறங்கிக் கடைசியில் இங்கே வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை மரணம் துரத்துவதைக் கூட லக்ஷியம் செய்யவில்லை நீ. இத்தனையையும் பொருட்படுத்தாமல் இங்கே இருந்து என்னைக் காத்து அழைத்துச் செல்வது ஒன்றையே லக்ஷியமாய்க் கொண்டிருக்கும் உன்னிடம் நான் யுத்தம் புரிந்து உன்னைக் கொல்வேனா? இல்லை கிருஷ்ணா, இல்லை, என்னால் இயலாத ஒன்று!" புநர்தத்தன் அழத் தொடங்கினான்.

"ஆஹா, நான் மட்டும் உன்னைக் கொன்றுவிடுவேனா? புநர்தத்தா! என் சகோதரா! பொறுத்திரு, நம்பிக்கையை இழக்காதே! நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஏதேனும் ஒரு வழி கிடைக்கும். அனைத்துக்கும் மேலான அந்தப் பரம்பொருள் தர்மத்தின் வழியில் செல்பவனை, எந்தக் கஷ்டத்திலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனைக் கைவிடமாட்டார். நிச்சயம் இது! கவலையே வேண்டாம்!"

6 comments:

  1. /
    “இது என்ன விசித்திரமான கட்டளைகளும், விதிமுறைகளும்? அதுவும் உலகுக்கே தாய் என்பவளிடமிருந்து//

    அதானே?

    ReplyDelete
  2. அருமையாக ஆரம்பித்து விட்டது. அடுத்த இடுகைக்கு வெயிட்டிங். ஆமா இந்த மாதிரி சஸ்பென்ஸ் பிரோக் விடும்போது காபி எல்லாம் கிடையாதா? இனிமேல் இதுபோல் சஸ்பென்ஸ் வைச்சு பிரோக் போட்டால் எங்களுக்கு காபி, வடை எல்லாம் கொடுக்கனும். நாங்க கொஞ்சம் சிரமப் பரிகாரம் பண்ணனும் இல்லையா?

    ReplyDelete
  3. வாங்க தாத்தா. முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. ஹிஹிஹி, இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லை, நம்பியாரையே எத்தனை நாள் பார்க்கிறதுனு யோசிச்சேன், நல்லவேளை மாத்தினீங்க! :P

    ReplyDelete
  4. வாங்க பித்தனின் வாக்கு, வடை ரொம்பப் பிடிக்கும்போல! எனக்கும்! கொசுறு தகவல்:உளுந்துவடைனால் தயிரிலும், ஆமவடைனால் ரசத்திலும் போட்டுச் சாப்பிடப் பிடிக்கும். நீங்க கேட்ட வடை, காபி ஜமாய்க்கலாம்!

    ReplyDelete
  5. // கீதா சாம்பசிவம் said...

    வாங்க தாத்தா. முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. ஹிஹிஹி, இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லை, நம்பியாரையே எத்தனை நாள் பார்க்கிறதுனு யோசிச்சேன், நல்லவேளை மாத்தினீங்க! :P//
    என் பொண்ணு படம் போட்டு ரொம்ப நாள் ஆச்சு

    ReplyDelete
  6. ஹிஹிஹி, நினைச்சேன், உங்க தங்கமணி மாதிரி புத்திசாலியாத் தெரியறாளே உங்க பொண்ணு! :))))))))))நல்லவேளை உங்களைக் கொள்ளலை! :P

    ReplyDelete