எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 03, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= இங்கே பகவானின் குழந்தைகளாக ஆண்டாள் தங்களை முன்னிறுத்துகிறாள். அப்பா, அம்மா நம்மைக் கவனிக்காமல் தூங்கினால் நாம எல்லாம் என்ன சொல்வோம்? எங்களைக் கவனிக்காமல் தூங்கறீங்களேனு கேட்க மாட்டோமா?? இங்கேயும் கண்ணனின் அநுகிரஹம் வேண்டுமெனில் அதற்கு முன்னார் தாயார் ஆன நப்பின்னைப் பிராட்டியின் அநுகிரஹம் தேவை. அவள் உடனே வந்து பக்தர்களுக்குத் தன் கருணா கடாக்ஷத்தைத் தரச் சித்தமாய் இருக்கிறாள் தான். ஆனால் இங்கே இருவருக்கும், நீ முந்தி, நான் முந்தி எனப்போட்டி வந்துவிடுகிறது போல! கண்ணன் அவளை எழுந்திருக்கவிடாமல் அவள் தோள்களைப் பற்றி அங்கேயே நிறுத்திவிட்டுத் தானே குழந்தை போலாகிறான். இங்கே கொங்கைகள் என மார்பகத்தைச் சுட்டி இருப்பது, தாயினும் பரிந்தூட்டும் அன்னையின் பெருமையைச் சுட்டுவதற்கே அன்றி வேறொரு பொருளில் அல்ல. ஆகவே கவனமுடன் பொருள் கொள்ளவேண்டும்.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் = அழகாய்க் குத்துவிளக்கு முத்துப் போல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க தந்தத்தினால் ஆன நான்கு கால்கள் பொருத்திய கட்டிலில்

மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்= மெத் மெத்தென்ற பஞ்சால் நிரப்பப் பட்ட பட்டு மெத்தை போட்ட சயனத்தின் மேலே ஏறிப் படுத்துக்கொண்டு

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா!= அழகான மணம் பொருந்திய மலர்களைச் சூடிய நீண்ட கூந்தல் உடைய நப்பின்னைப் பிராட்டியின் மார்பின் மேல் படுத்துக்கொண்டு அவளை எழுந்திருக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் தாமரை மலர்கள் அணிந்த மார்பை உடைய கண்ணனே!

வாய் திறவாய்= வாயைத் திறக்கமாட்டாயா?

மைத்தடங்கண்ணினாய்= அழகாய் மை எழுதப் பட்ட விழிகளால் உன் பார்வை ஒன்றாலேயே செய்யவேண்டிய கருணையைச் செய்யாமல் இருக்கிறாயே அம்மா!

நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்= தாயே என்ன இது?? நீயே எழுந்து வந்து எங்களுக்கு அனுகிரஹம் செய்வாய் என நாங்கள் உன்னை வேண்டிக் காத்திருக்க நீயோ உன் மணாளன் ஆன அந்தப்பரம்பொருளையும் எழுந்திருக்க விடாமல் இருக்கின்றாயே? அம்மா என்ன இது? உன் கடைக்கண் பார்வையால் எங்களுக்கும் உன் கருணா கடாக்ஷம் கிட்டச் செய்வாய்!

எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!= தாயே நீ உன் மணாளனைப் பிரிந்துவிடுவாய் என நினைக்கிறாயா? இல்லை அம்மா, இல்லை, நீயும் அவனும் சேர்ந்து வந்தே எங்களுக்கு வேண்டிய அநுகிரஹம் செய்யவேண்டும். உன்னிடம் சரணாகதி என நாங்கள் வந்தபின்னரும் எங்களுக்குப் பிரியமானதையே நீ செய்வாய் என்றல்லவோ நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் உங்கள் இருவரின் குழந்தைகள் அன்றோ?

இங்கே ஆண்டாள் பகவானை மட்டுமின்றித் தாயாரின் கருணா கடாக்ஷமும் வேண்டும் எனச் சொல்கிறாள். இருவருமே பரபிரம்ம சொரூபமாய்க் கண்ட பட்டத்திரி சொல்வதோ

அவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம் தத்து ஸுத்தைகஸத்த்வம்
வ்யக்தஞ் சாப்யேததேவ ஸ்ப்புடமம்ருத ரஸாம்ப்போதி கல்லோலதுல்யம்
ஸர்வோத்க்ருஷ்டாமபீஷ்டாம் ததிஹ குணரஸேநைவ சித்தம் ஹரந்தீம்
முர்த்திம் தே ஸ்ம்ஸ்ரயேஹம் பவநபுரபதே பாஹிமாம் க்ருஷ்ண ரோகாத்

பகவானின் ரூபம் வெளிப்படையாகத் தோன்றாத ஒன்று. அத்தகைய ரூபத்தின் உண்மையான தத்துவத்தை அறிதல் கடினம். சுத்தமான ஸத்வமே பகவானின் ரூபம், அது ஸகுண ரூபம், தெள்ளத் தெளிவாய் விளங்கும் ரூபம். அனைத்து உயிர்களிலும் விளங்கும் ஜீவசக்தியான இந்த பிரம்மானந்த சாகரத்தின் ஒரு சின்ன அலையே இந்தக் கிருஷ்ண ரூபமாக வந்து வாய்த்திருக்கிறது. நாம் அனைவரும் மகிழவேண்டி வந்துள்ள இந்த கிருஷ்ணரூபத்தின் குணமாகிய ரஸம் நம் மனதைக் கவர்கின்றது. அதன் பல்வேறுவிதமான விளையாடல்களால் நம் மனம் மகிழ்கிறது. இந்தக் கிருஷ்ணத் திருமேநியை நான் வழிபடுகிறேன். ஏ, கிருஷ்ணா, பரந்தாமா நீயே சரணம், என்னை ஆட்கொண்டு காத்தருள்வாய்.

1 comment:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....கீதாம்மா!!!!

    ReplyDelete