எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 06, 2011

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22

அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!= இங்கே ஆண்டாள் கண்ணன் ஒரு அரசனாக இல்லாதிருந்தபோதும் பல பெரிய சாம்ராஜ்யத்தின் அரசர்கள் அனைவரும் அவன் உதவி வேண்டி, அவன் ஆற்றலை வேண்டி அவனிடம் வந்து இறைஞ்சியதை நினைவூட்டுகிறாள். மஹாபாரதத்திலேயே பார்க்கலாம் இதை. கண்ணன் யாருக்கு உதவி செய்கிறானோ அவர்பக்கமே வெற்றித் திருமகள் இருப்பாள் என்ற எண்ணம் தோன்றிய துரியோதனன் கண்ணனின் படைவீரர்களின் உதவி முழுதும் தனக்கே கிடைக்கவேண்டும் என்று வந்து காத்திருக்கிறான்.

முதலில் கண்ணனின் காலடியில் அவன் கண்பார்வை படும் வண்ணம் அமர்ந்திருந்தான் துரியோதனன். ஆனால் பின்னர் செருக்கு மீதூறக்கண்ணன் தலைமாட்டில் வந்து அமர்கிறான். தூங்கும் கண்ணன் நம்மைத் தான் முதலில் கவனிப்பான் என்று எண்ணி அவனிடம் உதவியைக் கேட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு. அடுத்து வந்தான் அர்ஜுனன். கண்ணன் தூங்குவதைக் கண்டான். அவன் சிவந்த பாதங்கள் சற்றே வெளியே தெரிந்தன. செந்தாமரை மலர்கள் போன்ற அந்தத் திருப்பாதங்கள் தங்கள் ஐவருக்காகவும் கால் நோக தூது நடந்ததை நினைத்தான். அவன் கண்களில் நீர் பெருகிற்று. கண்ணன் மேல் பாசமும், அன்பும் மீதூறக் காலடியில் அமர்ந்து அவன் கால்களைப்பிடித்துவிட ஆரம்பித்தான்.

கண்ணனின் முகத்தில் குறுநகை துலங்கக் கண்விழித்தான். துரியோதனன் நினைத்தது போலவே அருகே அமர்ந்திருந்தஅவனைக் கண்ணன் முதலில் பார்க்கவில்லை. முதலில் பார்த்தது அர்ஜுனனைத் தான். எனினும் துரியோதனனும் அருகே அமர்ந்திருப்பதை உணர்ந்த கண்ணன் அவனிடம் என்ன வேண்டும் துரியோதனா என்று கேட்க துரியோதனனுக்கு உள்ளூற மகிழ்ச்சி. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் வேண்டுதலைக்கூறுகிறான் துரியோதனன். "இரு துரியோதனா, காலடியில் அமர்ந்திருப்பது யார்? நான் கவனிக்கவில்லையே? அவரையும் என்னவெனக் கேட்கிறேனே! மேலும் முதலில் நான் பார்ப்பவருக்கு அன்றோ முதலில் என் உதவியைத் தரமுடியும்? அது தானே நியாயமும் கூட?" என்றான் கண்ணன். துரியோதனன், "ம்ம்ம்ம்" என்று கோபத்தோடு உறுமினான்.

"கண்ணா, பேச்சு மாறாதே! நீ முதலில் எவரைக் காண்பாயோ அவருக்கே உதவி செய்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறாய்!" துரியோதனன் கோபத்தோடு உறுமினான். "ஆம், துரியோதனா, ஆனால் என் கண்கள் கண்டது முதலில் அர்ஜுனனை அன்றோ?"

"இரு அப்பா, இவன் சொல்வதையும் கேட்டுவிடுகிறேன், உனக்கே நான் முதலில் உதவி செய்வேன்." என்று கூறிய கண்ணன் காலடியில் அமர்ந்திருப்பது அர்ஜுனன் எனத் தெரிந்து கொள்கிறான். அவனுக்குத் தெரியாததா? புரியாததா? எனினும் அப்போதுதான் தெரிந்தாற்போல் காட்டிக்கொண்டான். "அர்ஜுனா, நீயா? ம்ஹும் தாமதம் செய்துவிட்டாயே! துரியோதனன் முதலிலேயே வந்துவிட்டானாமே? என்னால் என் படை வீரர்களை ஒருவருக்கும், நான் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் இன்னொருவருக்கும் உதவ முடியும். இந்த இரண்டு உதவிகளில் உனக்கு எது வேண்டும்?? "

அர்ஜுனன், "கண்ணா, எனக்கு நீ ஒருவனே போதும், உன்னையன்றி எனக்கு வேறு துணை எதற்கு?" என்று கூற, கண்ணனும் குறுநகை மாறாமல், "அப்படியா? எனில் துரியோதனனுக்கே என் படை மொத்தமும் பணி செய்யும்! நீ காலடியில் அமர்ந்திருந்ததால் தெரியவும் இல்லை. மேலும் முதலில் வந்ததும் துரியோதனன் அன்றோ?"

"கண்ணா, எனக்கு உன் படையோ, உன் வீரர்களோ, உன் ரதங்களோ, உன் யானைப்படை, குதிரைப்படைகளோ தேவை இல்லை. எனக்குத் தேவை நீ ஒருத்தன் மட்டுமே. நீ மட்டும் எனக்கருகே இருந்தால் போதும்!" அர்ஜுனன் வேண்டுகோள்.

"அப்படியே ஆகட்டும் அர்ஜுனா, ஆனால் நான் ஆயுதமே எடுக்க மாட்டேன், வேண்டுமென்றால் ( என்ன குறும்பு பாருங்க) உனக்கு ரத சாரதியாக ஊழியம் செய்கிறேன். (அர்ஜுனனைப் போல் கொடுத்து வச்சவங்க யாரு?) நான் நிராயுதபாணியாகத் தான் உனக்குத் துணை இருப்பேன். என் படைகள் மொத்தமும் துரியோதனனுக்கு ஊழியம் செய்யும்." கண்ணன் கூற அர்ஜுனன் தலை வணங்கி ஏற்றுக்கொண்டான். கண்ணனின் அருகாமை ஒன்றே தனக்கு வேண்டியதைத் தனக்குப் பெற்றுத் தரும் என முழுமையாக நம்பினான் அர்ஜூனன். வெறும் ஆட்களின் எண்ணிக்கையில் நம்பிக்கை வைத்தான் துரியோதனன்.

வென்றவர் யார்னு சொல்லவே வேண்டாம் இல்லையா?

அது போல்தான் இங்கேயும். இவ்வுலகில் உள்ள அனைத்து அரசர்களும் கண்ணனின் ஆற்றலையும் வீரத்தையும் வேண்டிக் கேட்டுக் கண்ணனின் கட்டிலருகே காத்திருந்தால் ஏ, கண்ணா, என்னப்பா, நாங்கள் அனைவரும் உன் கருணைப்பார்வைக்காக அன்றோ வந்திருக்கோம். உன்னிடம் எதையும் எதிர்பார்த்து நாங்கள் வரவில்லை அப்பா. எங்களைக் கண் திறந்து பார்த்து எங்களை ஆட்கொள்வாய் எனக் காத்திருக்கோம்.

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ= கிண்கிணி என்பது குழந்தைகளுக்குக் கட்டும் ஒரு சிறிய மணி. குஞ்சுமணி என்றும் சொல்வார்கள். அந்த மணியின் வாயைப் போல் சின்னதாய் செப்புப் போல் இருக்கிறதாம் கண்ணனின் திருவாய். அவனது கண்களோ எனில் செவ்வரியோடிய செந்தாமரைப் பூக்களைப் போல் மெல்ல மெல்ல மலர்க்கின்றனவாம். அந்தக் கண்களினால் நீ எங்களைக் காண மாட்டாயா? நீ கண் விழிக்கும்போது உன் அருட்பார்வை எங்கள் மேல் முதலில் படவேண்டும்.


திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!= சூரியனும், சந்திரனும் போன்ற உன்னிரண்டு கண்களினால் எங்களை நீ கருணையுடன் பார்த்தாயானால் ஜென்ம ஜென்மமாய் நாங்கள் செய்த பாவங்களின் மிச்சங்கள் அனைத்தும் கரைந்து போய் நாங்கள் உய்வோமே. உன் கருணையாலே நாங்கள் இதுவரை சேர்த்திருந்த கர்ம பலன்கள் அனைத்தும் விலகி உன்னோடு நாங்கள் ஐக்கியம் ஆகி விடுவோம். என்கிறாள் ஆண்டாள்.

பட்டத்திரி எப்படி வேண்டுகிறார் என்று பார்ப்போமா?
தேவர்ஷீணாம் பித்ரூணாமபி ந புநர்ருணீ கிங்கரோ வா ஸ பூமந்
யோஸெள ஸர்வாத்மநா த்வாம் ஸரணமுபகத: ஸர்வக்ருத்யாநி ஹித்வா
தஸ்யோத்பந்நம் விகர்மாப்யகில மபநுதஸ்யேவ சித்தஸ்த்திதஸ்த்வம்
தந்மே பாபோத்த தாபாந் பவநபுரபதே ருத்த்தி பக்திம் ப்ரணீயா!

ஏ, கிருஷ்ணா, நாங்கள் அனைவரும் உனது பக்தர்கள், உன்னைச் சரணடையவே வந்திருக்கிறோம். மற்ற எல்லாச் செயல்களையும் விட்டு விட்டு முற்றியும் நீயே கதி எனச் சரண் அடைகிறோம். இனி நாங்கள் தேவர்கள், ரிஷி, முனிவர்கள், பித்ருக்கள் என எவருக்கும் கடன்பட்டவர்களாய் ஆகமாட்டோம். நீரன்றோ அனைவரின் மனதிலும் இருந்து கொண்டு அவரவர் கர்மாக்களை விட்டதால் உண்டான பாவங்களை எல்லாம் நீக்கி விடுகிறீர் அன்றோ! அவ்வளவு பெருமையும் சக்தியும் வாய்ந்த நீரன்றோ என்னுடைய துர் எண்ணங்களாலும், துர் நடத்தைகளாலும் உண்டான பாவங்களையும் தாபங்களையும் போக்கி எனக்குப் பக்தியை மேலுறச் செய்யும்.


திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிஇங்கே காணலாம்.

6 comments:

  1. கால்மாட்டில் இருந்தவனை முதலில் பார்த்ததாகத் தான் நான் படித்திருக்கிறேன்; இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. அப்பாதுரை, உங்கள் வரவுக்கு நன்றி. நீங்கள் சொல்வது தான் சரியானது. நான் தான் எழுதும்போது கவனிக்காமல் மாத்தி எழுதி இருக்கேன். நீங்க சுட்டிக்காட்டியதுமே கவனித்தேன். திருத்தி விடுகிறேன். நன்றி நாசூக்கான சுட்டிக் காட்டலுக்கு.

    ReplyDelete
  3. திருப்பாவை விளக்கம் அருமை..பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  4. அருமையான விளக்கங்கள்!
    பதிவுக்கு நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  5. அப்பாதுரை, திருத்திட்டேன், ரொம்ப நன்றி உங்களுக்கு. ஆன்லைனிலே எழுதினேனா?? அதிலே வந்த கோளாறு, திருப்பியும் பார்க்கறதில்லை! :(

    ReplyDelete
  6. சமுத்ரா,

    ப்ரியா இருவருக்கும் நன்றி.

    ReplyDelete