மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
இந்தப் பாடலில் கண்ணனிடம் நோன்புக்குத் தேவையான பொருட்களை ஆண்டாள் கேட்டுப் பெறுவதாய் ஐதீகம். உண்மையில் அவள் நோன்புக்கான பொருட்களை யாசிப்பது என்பது முக்திக்கான வழிகளைக் காட்டித் தரும்படி கேட்பதே ஆகும். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்= ஆயிற்று, கண்ணனை எழுப்பியாயிற்று. நீ வந்து உன் சிங்காதனத்தில் அமர்ந்து கொண்டு எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருள் என்றும் வேண்டிக்கொண்டாயிற்று. கண்ணனும் வந்துவிட்டான். அவன், "பெண்களே, என்னவேண்டும் உங்களுக்கு?" என்றும் கேட்டுவிட்டான் போலும். அவனைத் தங்களுக்கு மிக நெருக்கமானவன் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அந்தப் பெண்களிடையே தோன்றிற்று. இது எல்லாருக்குமே இருக்கும் இல்லையா?? பல நண்பர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஓர் உயர்பதவியோ, அல்லது மேன்மையானவரோ நண்பர் எதிர்ப்பட்டால் அவர் நமக்கு மிகவும் தெரிந்தவர் எனக் காட்டிக்கொள்ள, அதுவும் அனைவருக்கும் முன்னால் அவருக்கும், நமக்கும் உள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்ட விரும்பமாட்டோமா?? அப்படியே இங்கே எல்லாப் பெண்களுக்கும் கண்ணன் தங்களுக்கெல்லாம் நெருங்கியவன் என்று காட்டிக்கொள்ளத் தோன்றிற்று. ஆகவே மாலே, மணிவண்ணா, என்றெல்லாம் கொஞ்சிக் கூப்பிடுகின்றனர். அதுவும் தங்களோடு ஆடி, ஓடிப் பாடிக் களித்தவன் என்ற பாவனை தோன்றும்படி கூப்பிட்டுக் கேட்கவே, கண்ணனும் என்ன வேண்டும் என்று மீண்டும் கேட்கிறான். நாங்கள் வேண்டுவதைக் கேள் கண்ணா!
இவை எல்லாம் எங்களுக்கு முன்னிருந்த எங்கள் முன்னோர்கள் செய்தவையே, அவர்களைப் பார்த்தே நாங்களும் அவ்வண்ணமே கேட்கிறோம்.
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே= அப்பா, கண்ணா, உன் பாஞ்சசன்னியம் என்ற சங்கை எடுத்து நீ முழக்கினாயானால் இந்த அகில உலகமுமே நடுங்குமே? அப்படிப்பட்ட பாஞ்சசன்னியம் எங்களுக்கும் வேண்டும். நாங்கள் உலகை எல்லாம் நடுங்க வைக்கப்போவதில்லை. நீ அடைந்த வெற்றியை, எங்களை ஆட்கொண்ட சந்தோஷத்தை அதை முழக்கித் தெரிவிப்போம். எங்கள் கண்ணா, அதனால் எங்களுக்குப் பாஞ்சசன்னியம் வேண்டும்.
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே= அதோடு மட்டுமா? மேலும் உன் புகழைப் பாடும்போது கூடவே முழக்கம் போடும் பறை, பேரிகைகள், வாத்தியங்கள், எக்காளங்கள், கொம்பு போன்றவையும் தேவை. இதன் மூலம் உன் நாம ஜபத்தை நாங்கள் செய்வோம். அது மட்டுமா? உனக்குப் பல்லாண்டிசைக்கும் சத்சங்கத்தைச் சேர்ந்த பெரியோர்களையும் எங்களுக்கு குருவாக ஆக்கிக்கொடுப்பாய். அவர்கள் மூலம் சத்குரு கிடைத்து உன்னருகே நாங்கள் நெருங்கிவர இயலும்.
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!= இது மட்டுமா?? இந்த மார்கழி அதிகாலையில் எழுந்து நாங்கள் நதிக்கோ, திருக்குளத்துக்கோ போய் நீராடிவிட்டு உன் நாமாவளியைப் பாடிக்கொண்டு வருகிறோமே? எங்களுக்கு வெளிச்சம் காட்ட ஒரு அழகான விளக்கைக் கொடுப்பாய். இங்கே விளக்காய் ஆண்டாள் கேட்பது அறியாமை என்னும் இருட்டை விலக்கி ஞானதீபமாகிய விளக்கைத் தரும்படிக் கேட்கிறாள். மேலும் எங்களுடன் கூட வரும், வந்து கொண்டிருக்கும் மற்றத் தோழியரும் அறியும் வகையில் நாங்கள் வருவதையும் நோன்பு நூற்பதையும் அனைவரும் அறியும் வகையில் ஒரு கொடியைக் கொடுப்பாய், எங்களை எல்லாம் மூடிக் காத்து அருளும் விதானத்தையும் கொடுப்பாய் என்றும் கேட்கிறாள். இந்தக் கொடியைக் கேட்பது, மஹாவிஷ்ணுவின் கருடக் கொடியில் இருக்கும் கருடனின் பாதார விந்தங்களைப் பற்றுவதன் மூலம் பகவானையும் பற்றலாம் என்பதற்காக. அவனைப் பற்ற அவனடியார்கள் அவனுக்கு நெருங்கியவர் மூலம் முயல்வதே நல்லதல்லவா? விதானமும் கேட்பது தங்களைக் காக்கப் பரம்பொருள் விதானம் போல் வந்து ஆட்கொள்ள வேண்டும் என்பதற்கு. ஒரு விதானம் (canopy)என்னும் கூரையானது எவ்விதம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் மூடிக் காக்கிறதோ அவ்வாறே கண்ணனின் அருள் என்னும் விதானம் தங்கள் பாவங்களை அகற்றித் தங்களை அறியாமையிலிருந்து அகற்றி மேலும் பாவம் செய்யாமல் காத்து அருளவேண்டும். மேலும் தங்களால் தங்கள் முயற்சியாலேயே எல்லாமும் நடக்கிறது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் அனைத்தும் அவன் கிருபையாலேயே, அவன் பாதுகாத்தலிலேயே நடந்தது, நடக்கும் என்பதையும் சுட்டுவதற்காக. இத்தனையும் சொல்லிவிட்டுக் கடைசியில் ஆலினிலையாய் என்று சொல்கிறாள்.
மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய நிலையில் ஈரேழு பதினாலு லோகங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு ஒரு சின்னஞ்சிறிய ஆலிலையில் கால் கட்டைவிரலைச் சப்பிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தையாக ஏதும் தெரியாதவனாய் நீ காட்சி கொடுத்தாலும், நீ அன்றோ அனைத்தையும் உள்ளடக்கியவன்? அனைத்தையும் உண்டு பண்ணுபவன்? அனைத்தையும் காத்து, ரக்ஷிப்பவன்?? நீ இல்லை எனில் உன் அருள் இல்லை எனில் எங்களால் ஏதுஇயலும்?? ஆகையால் உன் அருளே எங்களுக்கு வேண்டும் கண்ணா, எல்லாச் செல்வத்திலும் பெரிய செல்வம் அதுவே என்கிறாள்.
இப்படிக் கண்ணனிடமே மனதை வைத்து அவனிடம் அருள் ஒன்றையே யாசிக்கும் ஆண்டாளைப் போல் பட்டத்திரியும், அவனிடம் மனதை வைப்பது ஒன்றே சுகம் என்கிறார்.
த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுகமயி விசரந் ஸர்வ சேஷ்டாஸ் த்வதர்த்தம்
த்வத்பக்தை: ஸேவ்யமாநாநபி சரிதசராநாஸ்ரயந் புண்ய தேஸாந்
தஸ்யெள விப்ரே ம்ருகாதிஷ்வபி ச ஸமமதிர் முச்யமாநாவமாந
ஸ்பர்த்தாஸூயாதி தோஷ: ஸததமகில பூதேஷு ஸம்பூஜயே த்வாம்
ஈசா, பரம்பொருளே, உம்மைத் தவிர வேறு எதிலும், எவரிடமும் மனதை வைக்காதவனாய் நான் இருக்கவேண்டும். அவ்விதமான வாழ்க்கையே சுகமான வாழ்க்கையாகும். எல்லாக் கர்மாக்களையும் செய்தாலும் அவற்றை உமக்கே நான் அர்ப்பணமாக்கவேண்டும். உமது பக்தர்கள் சேவித்த அனைத்து திவ்ய க்ஷேத்திரங்களையும் அவர்கள் செய்த அனைத்து புண்ணிய திவ்யசெயல்களையும் நானும் செய்யுமாறு அருளவேண்டும். நீசமான மனிதர்களாய் இருந்தாலும் சரி, உயர்ந்த எண்ணமுடையவர்களாய் இருந்தாலும் சரி, அல்லது மிருகங்களானாலும், பறவைகளானாலும் அனைவரிடமும் நான் சமபுத்தி கொண்டவனாய் இருத்தல் வேண்டும். மானம், அவமானம், பொறாமை, துவேஷம், அஸூயை போன்ற துர்க்குணங்கள் நீங்கி அனைத்து உயிர்களிலும் உம்மைத் தவிர வேறொருவரையும் காண முடியாதவனாய் உம்மையே கண்டு வழிபடுபவனாய் இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment