முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!= கண்ணன் தனக்கென வாழாதவன், பிறர்க்கு அருளும்பொருட்டே தோன்றிய பூர்ணாவதாரம் கண்ணனுடைய அவதாரம். அவனோ முப்பத்து மூன்று தேவாதி தேவர்கள் கஷ்டப்படும்போதெல்லாம், அவர்களுக்குத் தீங்கு நேராமல் காக்கும் பொருட்டுச் செல்வதையே தன் தொழிலாய்க் கொண்டிருக்கிறான். அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் போரில் இவனே முன்னின்று அரக்கர்களை ஒழிப்பதைத் தன் கடமையாய் கொண்டிருக்கிறாய். இத்தகைய கஷ்டத்தை ஓடி ஓடி வந்து ஏற்கும் பரமாத்மாவே, எங்கள் துயர் தீர்க்க இப்போது நீ எழுந்து வரமாட்டாயா?? இங்கே பரமாத்மா துயில்கின்றான், அவனை எழுப்ப இத்தனை பாடா என்றெல்லாம் எண்ணினோமானால் அது இந்தப் புற உலகில் நாம் தினசரி தூங்கும் தூக்கத்தைக் குறிப்பதாய் அமையும். ஆண்டாள் கூறுவதோ நம் மனம் விழித்துக்கொண்டதையும், அது பரமாத்மாவோடு ஒன்றுபடக் காத்திருப்பதையும், பக்தியாகிய பொய்கையில் முழுகி நீராடி, மனம் முழுதும் தூய்மையான எண்ணங்களோடு பகவத் பக்தி ஒன்றே குறியாக வந்திருப்பதையும் குறிக்கும். தங்களை ஆட்கொள்ளுமாறு கேட்பதுவே துயில் எழுப்புவது என்ற பொருளில் ஆண்டாள் கூறுகிறாள்.
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!= செப்பம் என்பது இங்கே பரமாத்மாவின் பாரபட்சம் பார்க்காத தன்மையைக் குறிக்கும். அவனுடைய ராஜ்ஜியத்தில் ஏழை, பணக்காரர் என்பதோ கீழோர், மேலோர் என்பதோ கிடையாது. அவனுக்குத் தேவையானது பரிபூரண அன்பைச் செலுத்தும் பக்தர்களே. ஆகவே அவனுக்கு எவரிடமும் எந்தவிதமான வேறுபாடுகளையும் காட்டத் தெரியாது என்கிறாள். திறல் இங்கே வெற்றியைக் குறிக்கும். மேன்மேலும் வெற்றி அடைந்தவன் பரம்பொருள். அவன் அனைத்தையும் கடந்தவன் என்றாலும் பக்தர்களின் மனத்தைத் தன்பால் ஈர்த்து அவர்களை ஆட்கொள்கிறானே. அடுத்து வெப்பம் கொடுக்கும் விமலா என அழைக்கிறாள். காக்கும் அவனே சிலசமயம் சிக்ஷிக்கவும் செய்கிறான். தண்டிக்கவும் வேண்டி இருக்கிறதே. பிரஹலாதனுக்காக நரசிம்மமாய் வந்து ஹிரண்யனைத் தண்டித்தான். மஹாபலியைத் தண்டிக்க இஷ்டமில்லாமல் அவனைச் சிரஞ்சீவியாக்கினான். அதே பரசுராமனாக வந்து க்ஷத்ரிய குலத்தையே பூண்டோடு அழித்தான். ஸ்ரீராமனாக வந்து பல அரக்கர்களையும், அனைத்துக்கும் மேல் ராவணனையும் சம்ஹரித்தான். அதே சமயம் அதே ராவணனை ஆயுதம் இன்றி இருந்தபோது, "இன்று போய் நாளை வா!" என்று சலுகையும் காட்டினான். இப்படி அவனால் தேவைப்படும் நேரம் கோபம் கொண்டு தண்டிக்கவும் முடியும், அதே சமயம் தன் பக்தர்களுக்குக் குற்றங்களை மன்னித்து ஆட்கொள்ளவும் தெரியும்.
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!= எழுப்பி எழுப்பிப் பார்த்தோம் அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, திருவே, லக்ஷ்மிதேவியே, உன் கணவன் எழுந்திருக்கவில்லை. ஆஹா, என்ன காரணம் என யோசித்தோம், நீ அல்லவோ முதலில் எழுந்து உன் திருமுகத்தைக் காட்டி அவனை ஆசுவாசப் படுத்தி எழுப்பி அனுப்பவேண்டும். முதலில் நீ துயிலில் இருந்து எழுந்திரு அம்மா. பரமாத்மாவிடம் நேரிடையாக விண்ணப்பம் வைத்தும் பலன் இல்லை என்பதால் தாயாரிடம் விண்ணப்பம் வைக்கிறாள் ஆண்டாள். அம்மா, தாயே, உன் கணவனை நீ இன்முகம் காட்டி எழுப்பு என்கிறாள்.
பொதுவாய்க் கணவன் காலை எழுந்ததும் மனைவியின் முகத்தைப் பார்ப்பது நன்மை பயக்கும் என்பார்கள். ஆனால் அந்த நேரமும் மனைவியும் தூங்கி வழிந்த முகத்தோடு இருந்தால் எப்படி?? அதனால் தான் நப்பின்னையை முதலில் எழுப்பித் தன்னைச் சீர் செய்து கொண்டு, அவள் கணவனை எழுப்பி அவனை விசிறியால் விசிறி ஆசுவாசப் படுத்தித் தன் முகமாகிய கண்ணாடியில் அவனைப் பார்க்க வைத்து, அவனுக்கு இன்முகம் காட்டி அனுப்பச் சொல்கிறாள்.
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!= கணவன் எழுந்ததும் மனைவி முகத்தைப் பார்த்தால் மட்டும் போதாது. மனைவி முகம் இன்முகமாயும் இருக்கவேண்டும். அதுவும் தூங்கும் கணவனை எழுப்பும்போது மனைவிக்குப் பொறுமை வேண்டுமே. ஆகவே அவள் இன்முகத்தோடு இருந்தால் தான். அப்போது தான் அதன் பிரதிபலிப்பு கணவனிடத்தில் தெரியும். மனைவியின் இதயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி கணவன் அல்லவா? கண்ணாடி உள்ளதை உள்ளபடி காட்டும் அல்லவா?? இல்லாததைக் காட்டாது. ஆகையால் நீ உன் இன்முகத்தைக் காட்டி உன் மணாளனை எங்களோடு அனுப்பி வைத்து எங்களுக்கும் முக்தியைக் கொடுப்பாய். அவன் வந்து எங்களை ஆட்கொள்ளுமாறு செய்வாய் என தாயாரிடம் வேண்டுகிறாள். இன்னொரு பொருளில் விசிறி தானம் செய்வார்கள், கண்ணாடியும் வெற்றிலை , பாக்கு, மஞ்சளோடு வைத்துக்கொடுக்கப் படும். அதனால் நோன்பிற்கு வேண்டிய பொருட்களைக் கேட்டுப் பெற்றாள் என்றும் கூறலாம்.
இப்படி ஆண்டாள் கேட்டுக்கொண்டிருக்க பட்டத்திரி என்ன கூறுகிறார் என்றால் திருவடி சேவையே போதும் என்கிறார். பெருமாள் கோயில்களுக்குப் போனால் இந்தத் திருவடி சேவை மிக முக்கியம். எத்தனை பேர் பார்த்திருக்கீங்க?? பட்டாசாரியார்கள் கற்பூர ஆரத்தி எடுக்கையில் நின்று, இருந்து, கிடந்த எல்லாக் கோலங்களிலும் பர வாசுதேவனின் திருவடியைக் காட்டி ஆராதிப்பார்கள். அதுவே பக்தர்களுக்கு முக்கியமாகும். அவர்கள் திருவடியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டாலே போதுமே. அப்பா, உன்னை விடமாட்டேன், உன் கால்களில் விழுந்துவிட்டேன், சரணாகதி அடைந்துவிட்டேன் என், கிருஷ்ணா, நீயே கதி என்று விழுந்தவர்களை அந்தக் கால்கள் எட்டியா உதைக்கும்? குனிந்து தன் கைகளால் நம்மைத் தூக்கி உட்கார வைத்து ஆசுவாசம் செய்து தன்னோடு சேர்த்துக்கொள்ளும் அல்லவோ?
யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாததே பாத மூலம்:
நித்யம் சித்தஸ்த்திதம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நி:ஸ்ஸேஷ தாபாந் ப்ரத்ஸது பரமாநந்த ஸந்தோஹ லக்ஷ்மீம்
பரந்தாமா, கருணாசாகரமே, யோகிகளாகட்டும்,,ஞாநிகளாகட்டும், எவராயிருந்தாலும் அனைவருக்கும் பிடித்தவை, ப்ரீதியானவை உன் பாதாரவிந்தங்களே ஆகும். ஜீவன் முக்தர்களின் வாசஸ்தலங்கள் அந்தப் பாதாரவிந்தங்கள். கற்பக விருக்ஷம் அவையே. பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி வழங்குகிறதே. என் க்ருஷ்ணா, அத்தகைய உன் பாதாரவிந்தத்தை என் சிரசிலே தாங்கி என் சித்தத்திலே இருத்தி, எல்லாத் துன்பங்களையும் போக்கிப் பரம ஆநந்தமான மோக்ஷ சாம்ராஜ்யம் என்னும் ஐஸ்வர்யத்தை அருளுவாய்.
பெருமைக்குரிய பாதாரவிந்தங்களை நானும் இறுகப் பற்றிக் கொள்ளுகிறேன்.
ReplyDelete