எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 12, 2011

அன்பெனும் அக்ஷயபாத்திரத்தில் இருந்து

அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

"//அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். //

இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது?? நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.


நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகலமறுக்கிறது என்றே சொல்லலாம்.

//மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே

மாயை மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்த்தே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்//

கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது. ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல. உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும். அன்பானது கொடுக்கும் பொருள். அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும். ஊற்றுக்கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனை குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.


அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக்கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆநந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை. ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.
நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.
"அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப்பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.


. இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது. எல்லாரையும் எல்லாவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக்குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்குமூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன். அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''

அன்புக்கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நான் எல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன். அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும். பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும். அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.


இன்று ஸ்வாமி விவேகாநந்தரின் பிறந்தநாள். இளைஞர்கள் தினம். இந்தச் செய்தி ஸ்வாமி விவேகாநந்தர் இளைஞர்களுக்குச் சொன்னவை.


2 comments:

  1. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வழி. மௌனம் எல்லாருக்கும் வழி இல்லை. அது நமக்கு இல்லைன்னா என்ன பண்ண முடியும்?
    பரம்பொருள் மேலேதான் அன்பு வைக்கணும்ன்னா அது புரிதலே முதல் படி. அப்புறம் அது தானா வரட்டும். காலம் கனியணுமே!
    ஈசனை நாட நாட ஆசையும் போயிடும் இல்லையா?

    ReplyDelete
  2. நல்ல பதிவு கீதாம்மா!

    சற்று மனதிற்கு பாரமாக தான் இருக்கிறது !

    இதில் உள்ள தகுதிகளான அடக்கம் ,விவாத அற்ற குணம் ,மௌனம் ,

    பிரதி பலன் பாராமல் அன்பு,பக்தி செலுத்துவது ,ஆசைகளி விடுவது ,

    மாயைகளை ஒதுக்குவது ,அன்பு piravaagam

    ம்ம்ம்ம் பெருமூச்சு விட தான் முடிகிறது!

    ReplyDelete