அன்று படுக்கும்போதே ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. ஆனால் படுத்த சற்று நேரத்திற்கெல்லாம் அறைவாசலில் கதவை யாரோ தட்டினார்கள். யாருனு பார்த்தால் அறைப் பணியாளர். வெந்நீர் தயாராகிவிட்டதாம். கொண்டு வந்துவிட்டார். மணியைப் பார்த்தால் இரண்டரைதான் ஆகி இருந்தது. ஒரு மணி நேரம் கூடத் தூங்கவில்லை. ஆனால் இப்போ விட்டால் அப்புறமாய்க் குளிக்க வெந்நீர் கிடைக்குமோ கிடைக்காதோ! ஊர் விட்டு ஊர் வந்து குளிர்ந்த நீரில் குளிச்சு திடீர்னு உடல்நலக்கேடு வந்தால் என்ன செய்யறது? வெந்நீரை வாங்கிக்கொண்டு நான் குளிக்கப் போனேன். அதுக்குள்ளே இன்னொரு வாளி வெந்நீரையும் கொண்டு வர, வாங்கி வச்சுக்க வாளி இல்லாமல் திரும்ப அனுப்பினோம். அப்புறமாய் அவரும் குளிச்சுத் தயாரானதும் இருவருமாய்க் கோயிலுக்குக் கிளம்பினோம். அப்படியும், இப்படியுமா மணி நாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காலை வேளையில் தெருவில் நடமாட்டம் இருக்குமானு நினைச்சுப் போனால் மக்கள் சாரி சாரியாகக் கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தனர். திறந்திருந்த ஒரு ஹோட்டலில் காபி மட்டும் குடித்துவிட்டு நாங்களும் உள்ளே சென்றோம். ஆயிரங்கால் மண்டபத்தில் லக்ஷார்ச்சனை முடிந்து அபிஷேஹம் ஆரம்பித்து இருந்தது. முதன்முதல் விபூதி அபிஷேஹம் செய்தனராம். அது பார்க்க முடியவில்லை.
மெல்ல மெல்ல கூட்டத்தில் நுழைந்து நாங்கள் மெதுவாக முன்னேறினோம். ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் அனைத்துத் தரப்பிலிருந்தும் பார்க்க வசதியாக வைக்கப்பட்டிருந்தார். தெற்குப் பார்த்தே வைத்திருந்தனர். தெற்குப் பார்த்து வைப்பதன் கோட்பாடு என்னனு சிலரைக் கேட்டேன். பதில் இன்னும் கிடைக்கவில்லை. அருகே சிவகாம சுந்தரியும் இருக்க அபிஷேஹம் நடந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய அண்டா, தவலைகளில் பால் லிட்டர் லிட்டராய் இருந்தது. கிழக்கு வாசலுக்கு அருகேயே நாங்கள் சென்று அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தின் சமீபம் சென்று அபிஷேஹத்தைப் பார்க்கும் வண்ணம் வசதியாக நின்று கொண்டிருந்தோம். கொஞ்சம் முயன்றால் முன்னால் சென்று அமர்ந்து கொண்டிருப்பவர்களிடையே சென்று அமரலாம். ஆனால் கீழே அமர்ந்து கொள்வதில் எனக்கு இருந்த சிரமமும், உள்ளே அருகே சென்றுவிட்டால் பின்னர் திரும்ப வெளியே வருவதில் இருந்த பிரச்னையும் சேர்ந்து யோசிக்க வைத்தது. யாரும், யாரையும் தடுப்பதில்லை. போக ஆசைப்படுபவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
பெரிய குடங்களில் பால் நிரப்பப் பட்டு அபிஷேஹம் நடந்து கொண்டிருந்தது. பால் அபிஷேஹம் செய்யும்போதே அபிஷேஹப் பால் சேகரிக்கப் பட்டு, இன்னொரு வாசல் வழியாகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப் பட்டது. எங்களுக்கும் பிரசாதமாக ஒருத்தர் வாங்கி வந்த பால் கிடைத்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பால் அபிஷேஹத்தைப் பார்த்தோம். ஐந்தரை மணிக்கும் மேலாகியும் பால் அபிஷேஹம் நிறைவுறவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. குடத்தின் கனம் தாங்க முடியாமல் ஆசாரியருக்குக் கை நழுவிக் கொண்டிருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு அபிஷேஹத்தைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். பக்தர்கள் தேவார, திருவாசகங்களை ஓதிக்கொண்டும், வேத கோஷங்கள் செய்து கொண்டும், பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். இரவு தூக்கமில்லாமையால் அதற்கு மேல் அந்த மண் தரையின் சில்லிப்பில் நிற்கமுடியாமல் எனக்கு வீசிங் வரும்போல் இருந்ததால் திரும்பினோம். தீக்ஷிதர் வீட்டுக்கு வந்துவிட்டோம். அங்கே தீக்ஷிதர் சந்தன அபிஷேஹம் முடிந்ததும் வருவதாய்ச் சொல்லி இருந்தார். அவருக்காகக் காத்திருந்தோம். தீக்ஷிதர் வீட்டுப் பெண்மணிகள் வீட்டில் நிவேதனம் செய்த களியை உண்ணக் கொடுத்தனர். கோயிலில் இருந்தும் பிரசாதம் வரும் என்றார்கள். அன்று கோயிலிலும் களிதான் நிவேதனம். அனைவருக்கும் கொடுக்கிறார்கள். பின்னர் ஆருத்ரா தரிசனத்தின் மகிமை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதன் பின்னர் தரிசனம் முடித்துவிட்டுக் கிளம்பினோம். கீழே ஆருத்ரா தரிசன மகிமையும் நடராஜப் பத்தும்.
பிக்ஷாடனராக தாருகாவனத்தில் ஆடிய ஈசன், அதன் பின்னர் ஈசனின் கணங்கள் என்று சொல்லப் படும் தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி தில்லைச் சிற்றம்பலம் வந்து சேர்ந்து பொன்னம்பலத்தில் தன் நடனத்தைத் தொடங்கிய நாள் திருவாதிரைத் திருநாளாகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவில் லக்ஷார்ச்சனை முடிந்ததும் ஆரம்பித்துக் காலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.
மேலும் ஈசனின் கணங்கள் ஆன தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனின் வழிபாட்டுக்கெனத் தில்லை வந்தவர்கள் கூத்த பிரானின் ஆடலைக் காணமுடியாமல் ஏங்கியதாயும், கூத்தனை வேண்டியதன் பேரில் நடராஜர் திருவாதிரை அன்றே சிதம்பரம் வந்து கோயில் கொண்டதாயும் ஐதீகம். ஆகவே இந்த அபிஷேஹம் முடிந்ததும், எட்டு மணியில் இருந்து பனிரண்டு மணி வரையிலும் நடராஜருக்கு அலங்காரங்கள் செய்து, சிவகாம சுந்தரி உடன் வர, நடராஜர் மீண்டும் ஆநந்த தாண்டவம் ஆடிக்கொண்டே தில்லைக் கோயிலின் சிற்றம்பலத்தில் கோயில் கொண்டருளுகிறார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது. தாவித் தாவி ஆடுவது தாண்டவம், ஆண்களுக்கு மட்டுமே உரியது. இசையும், நளினமும் சேர்ந்த்து லாஸ்யம், பெண்களுக்கு உரியது. ஆகவே நடராஜரின் தாண்டவம் வேகத்தோடும், தாளத்தோடும் காணப்படும். அதுவே சிவகாமி அம்மை நளினமாகவும், மென்மையாகவும் ஆடுவாள்.
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
பிறவும்நீ ஒருவநீயே,
பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
பெற்றதாய் தந்தைநீயே,
பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 1
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 2
கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 3
பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 4
நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,
விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 5
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 6
அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
வனோ தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 7
காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 8
தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 9
இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 10
சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியனிவரை,
சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 11
தூர்தர்ஷன் பாரதியில் சிதம்பரம் பற்றிய டாகுமெண்ட்ரி படம் யாமினி கிருஷ்ணமூர்த்தி நாட்டியம் ஆடி எடுத்தது ஒளிபரப்பினாங்க. அதில் இருந்து ஒரு காட்சி மட்டும் இங்கே பார்வைக்கு. யாமினி அன்று ஆடியபோது தாண்டவத்துக்கும், லாஸ்யத்துக்கும் உள்ள வேறுபாடு நன்கு புரிந்ததோடு, யாமினி கண்ணிலோ, மனசிலோ தெரியாமல் ஈசன் மட்டுமே தெரிந்தார். அற்புதமான ஆட்டம்.
ரொம்ப நல்லா சொன்னீங்க. நேரில் பார்த்த திருப்தி. உங்களுக்கு அந்த ஆண்டவன் நீங்க ஆயுளையும் ஆரோக்யத்தையும் கொடுக்கட்டும்
ReplyDeleteபதிவுக்கு நன்றி கீதாம்மா
ReplyDelete// மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. ௨//
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
விழா காலங்களில் இறைவனை தரிசிக்க செல்லும் அனுபவங்களை விவரமாக சொன்ன விதம் சிறப்பாக இருக்கிறது
நாங்களும் பின் தொடர்கிறோம் கீதாம்மா.,
புவனா, கஜ முக சம்ஹாரம் பற்றி என்னிடம் கேட்டாள்;எனக்கு தெரியவில்லை ;உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் கீதாம்மா
கமெண்ட்ஸ் போட்டால் உடனே பப்ளிஷ் ஆகிறமாதிரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் கீதாம்மா
ReplyDeleteஇத்தனை பதிவு வந்துடுத்து ஊருக்கு வந்து திரும்பறத்துக்குள்ள?? வந்தாச்சு மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஷிவம். விட்டுப் போனதை படிக்கிறேன்:))
ReplyDeleteவாங்க எல்கே, நன்றி. உங்கள் வாழ்த்திற்கும் நன்றி.
ReplyDeleteகஜசம்ஹார மூர்த்தியைப் பற்றி ஆன்மீகப் பயணம் பக்கத்திலே எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன். பார்க்கிறேன். ஆனாலும் எழுதி வைச்சது இருக்கு சேமிப்பிலே, அதை எடுத்துப் போடறேன், எழுதலைனா அதைப் போடறேன்.
ReplyDeleteகமெண்ட்ஸ் போட்டால் உடனே பப்ளிஷ் ஆகிறாப்போல் மாத்தறது கொஞ்சம் சிரமம் ப்ரியா. தனி மடல் கொடுக்கிறேன். மாடரேஷன் தான் நல்லது!
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ஒரு கனவு மாதிரி இருக்கு நீங்க வந்துட்டுப் போனது. உடல்நலம் இப்போ எப்படி இருக்கு?? பார்த்துக்குங்க. வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDelete//யாமினி கண்ணிலோ, மனசிலோ தெரியாமல் ஈசன் மட்டுமே தெரிந்தார். அற்புதமான ஆட்டம்.//
ReplyDeleteஎல்லாம் பார்வையிலே இருக்கு! நல்ல மனசு, அதான்!
கீதாம்மா ! நான் டிவி யை போட்டோ எடுத்தா மட்டும் நடுவில் கோடு தெரிகிறது ;என்ன காரணம்!
ReplyDelete