மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து= நல்ல மாரிக்காலத்தில் மலையின் குகையில் வெளியே வராமல் தன் குடும்பத்தோடு அடைபட்டுக்கிடக்கும் சிங்கமானது மழை முடிந்துவிட்டது என்பது தெரிந்ததும், பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து கர்ஜனை செய்யுமாம். அவ்வளவு நாட்கள் தூங்கிக்கொண்டிருந்ததில் அதன் கண்களும் சிவந்து நெருப்புப்போல் இருக்குமாம்.
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ =பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு தன் சோம்பலை உதறிக்கொண்டு கர்ஜித்துக்கொண்டே வேட்டைக்கு ஆயத்தமாகும் சிங்கம் போல் இருக்கிறானாம் கண்ணன். இங்கே கண்ணனைச் சிங்கம் என்றது அவன் ஆற்றலைக் குறித்தே. சிங்கத்தைப் போல் ஆற்றல் மிகுந்தவன் அவன். கம்பீரம் நிறைந்தவன். மற்றபடி அவன் மென்மையான தன்மை வாய்ந்தவன். அதை அடுத்த அடியிலே சொல்கிறாள் ஆண்டாள்.
பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய= பூவண்ணன் போன்றவனே, பூவைப் போன்றவனே, இப்படிப் படுத்துக்கொண்டிருக்காமல் நீ எழுந்து இங்கே உன் சபைக்கு வந்து
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!=சிங்காதனத்தில் அமர்ந்து கொள்வாய். நாங்கள் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து எங்களுக்கு அருளுவாய், எழுந்திருந்து வா கண்ணா, இங்கே அரிதுயில் கொண்டிருக்கும் பரமாத்மாவின் நடையழகைக் காண வேண்டி ஆண்டாள் கூறி இருப்பாள் போலும், அது மட்டுமில்லாமல் தாங்கள் கஷ்டப்பட்டு எதற்கு வந்திருக்கிறோம் என்பதையும் அவனுக்குச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். தாங்கள் வேண்டுவது அவன் கருணா கடாக்ஷம் ஒன்றே. அது எங்களுக்குக் கிட்டவேண்டும் என்பதே ஆண்டாளின் மறைமுகப்பிரார்த்தனை.
பட்டத்திரியின் பிரார்த்தனையோ வேறுவிதமாய் உள்ளது. இறைவனைப் பரிபூர்ண ஸ்வரூபி என்னும் அவர் தாம் எதையும் அறிந்திருக்கவில்லை என்றும், பரமாத்மாவைத் தியானிப்பதையே தாம் விரும்புவதாயும் கூறுகிறார்.
யோ யாவாந் யாத்ருஸோ வா த்வமிதி கிமபி நைவாவகச்சாமி பூமந்
ஏவஞ் சாநந்ய பாவஸ்த்வதநு பஜநமேவாத்ரியே சைத்யவைரிந்
த்வல்லிங்காநாம் த்வதங்க்ரி ப்ரியஜந ஸதஸாம் தர்ஸநஸ்பர்ஸநாதி:
பூயாந்மே த்வத் பூஜா நதி நுதி குண கர்மாநு கீர்த்யாதரோபி
பரிபூர்ண ஸ்வரூபியே, பரம்பொருளே, தாங்கள் யாரோ, எப்படிப்பட்டவரோ, எதற்கு ஒப்பானவரோ அவை எதையும் நான் அறிந்தேன் இல்லை. அப்படி அறியாதவனான நான் விரும்புவது வேறொன்றையும் மனதில் கொள்ளாமல் தங்கள் தியானம் ஒன்றே செய்ய விரும்புகிறேன். உம்முடைய அர்ச்சாமூர்த்தித் திருமேநிகளிலும் உமது சரணங்களைப் பக்தி செய்யும் மக்களின் நடுவிலும், உமது தரிசனம், ஸ்பரிசனம், வழிபாடு, வணங்குதல், ஸ்தோத்ரம் சொல்லுதல், உமது கல்யாண குணங்களையும் லீலைகளையும் பற்றி விவரித்துக் கீர்த்தனம் செய்தல், உமது திவ்ய சரித்திரத்தைப் பற்றிப் பேசுதல் ஆகியவற்றிலே எனக்கு ஈடுபாடு உண்டாகும்படி செய்யும்.
பாடும் பொருளைப் போலவே, பாடலும், பாடலின் ஒலியும், கம்பீரம்! எனக்குப் பிடித்த பாடல். நன்றி கீதாம்மா.
ReplyDeleteநன்றி கவிநயா, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ReplyDelete