எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 17, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே தொடர்ச்சி!


கிளம்பிச் சற்று தூரம் வந்த தேர் திடீரென நின்றது. என்னனு பார்த்தால் சேந்தனாரின் திருப்பல்லாண்டுக்காக நடராஜர் நின்றிருக்கிறார். சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடியதும் தேர் மீண்டும் கிளம்பியது. சேந்தனார் கதையும், ஆருத்ரா தரிசன நிகழ்வும் அடுத்த பதிவில் வரும். தேர் மெல்ல மெல்ல நகர்ந்து, நகர்ந்து வந்து கொண்டிருந்தது. எல்லா வீடுகளிலும் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போட்டு, நடராஜர் படத்தையும் பூரண கும்பமும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே தீபாராதனை எடுத்தார்கள். மண்டகப்படி இருக்கும் இடங்களில் மட்டுமே தேர் நிறுத்தப் படுகிறது. மக்கள் உற்சாகமாய் அந்தப் பெரிய வடத்தைப் பிடித்து இழுத்துக் கீழவீதியின் நடுவில் இருக்கும் எங்கள் கட்டளை தீக்ஷிதர் ஆன ராமலிங்க தீக்ஷிதர் வீட்டருகே வந்து நின்றபோது மணி ஒன்பதைத் தொட்டு விட்டது.

அங்கே சில கடைகளில் மண்டகப்படி விசேஷ வழிபாடுகள் நடந்தன. தேர் வடம் கீழே கிடந்தது. வடத்தினருகே சென்று நடராஜரைப் பார்த்தோம். அப்ப்பா! எவ்வளவு உயரம்! வடத்தைத் தொட்டுப் பார்த்தாலே எவ்வளவு கனம் என்றும் புரிந்தது. ஆனாலும் தேரை இழுத்தவர்கள் உற்சாகத்தோடு இழுத்தார்கள். எதிரே தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் அனைவருமே நடராஜரைப் பார்த்தவண்ணம் பின்னாலேயே சென்றனர். தேருக்குப் பின்னால் இருந்தவர்கள் தவிர மற்றவர்கள் தேரின் முன்னே நடராஜரைப் பார்த்த வண்ணமே சென்றனர். என்றாலும் அந்தக் கூட்டத்திலும் நெரிசல் ஏற்படாமல் சமாளித்தனர். மக்கள் கூட்டமும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. தேர் தெற்கு வீதிக்குத் திரும்பும் வரை காத்திருந்துவிட்டு நாங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

உள்ளே ஆட்டோ எதுவும் வராதாகையால் அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்று பேருந்து பிடித்து வைத்தீஸ்வரன் கோயில் போய்ப் பிரார்த்தனைகளையும், தரிசனத்தையும் கட்டளை வைத்திருக்கும் குருக்களையும் பார்த்துவிட்டுப் பின்னர் சிதம்பரம் திரும்பினோம். மாலை ஈசான்ய மூலைக்கு வர நாலுமணி ஆகும் என்று தீக்ஷிதர் சொல்லி இருந்ததால் அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளப்போனோம். ரங்க்ஸ் நல்லாத் தூங்கிவிட்டார். எழுந்திருக்கும்போது, (எங்கே? பிடிச்சு உலுக்கவேண்டி இருந்தது!) நாலரைக்கும் மேல் ஆகவே, தேர் நிலைக்கு வந்திருக்குமோனு நினைச்சேன். அது போலவே கீழே இறங்கியதும் ஒருவரைக் கேட்டதுக்கு 3 மணிக்கே நிலைக்கு வந்தாச்சுனு சொல்லிட்டுப் போகவே ஒரு குருக்ஷேத்திரம் மீண்டும் ஆரம்பிக்க இருந்தது. அவசரம் அவசரமா ரங்க்ஸ் என்னோட முகத்தையே பார்க்காமல் எதிரே தீக்ஷிதரைப் பார்க்கப் போயிட்டார். வேறு வழியில்லாமல் நானும் பின்னாலேயே போனேன். தீக்ஷிதர் மனைவி, மருமகள், குழந்தைகள் எல்லாம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க அவரைக் கேட்டதில் தேர் வடக்குத் தெருவையே இன்னும் தாண்டலை என்றும் ஈசான்ய மூலைக்கு வர ஐந்தரை மணியாவது ஆகும் என்றும் வடக்குத் தெருவில் ஒரு மண்டகப்படியில் நிற்பதாயும் சொல்லிவிட்டு அவங்க வீட்டிலே எல்லாரும் அங்கே தான் போறதாகவும் எங்களையும் போகச் சொன்னார். தேர் நிலைக்கு வந்ததும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் கால பூஜைகள் நடக்கும் என்றும் மீண்டும் மாணிக்கவாசகர் வந்து பதிகம் ஓதுவதும் நடக்கும் என்றும் கூறிவிட்டு அதன் பின்னரே நடராஜர் உள்ளே வருவார் என்றும் உள்ளே வரும்போதும் ஆடிக்கொண்டே வருவார். வந்துவிட்டு நேரே ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போவார் என்றும் அன்றிரவு பூராவும் லக்ஷார்ச்சனை நடக்கும் என்றும் கூறினார். நடராஜரை எங்கே இருந்து பார்த்தால் சரியாய் இருக்கும் என்பதை உள்ளே போய்ப் பார்த்துக்கோங்க, கூட்டம் இருப்பதால் சரியாய்ச் சொல்ல முடியாது. ஆயிரங்கால் மண்டபத்துக்குள்ளே வந்துவிட்டால் வெளியே வரது கஷ்டம். என்றும் கூறினார்.

அப்பாடி! இப்போ தைரியமா ரங்க்ஸ் என்னைப் பார்க்க நான் அசடு வழிந்தேன். இரண்டு பேரும் கீழவீதியும் வடக்கு வீதியும் சேரும் இடத்துக்குச் சென்றோம். அங்கே ரங்க்ஸ் படிக்கும்போது குடி இருந்த வீடு, (மாறவே இல்லையாம், அப்படியே இருக்குனு சொன்னார்) பாநுசேகரன் என்பவர் வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். ஏற்கெனவே பலர் இருந்தார்கள். அதோடு அங்கே பாடசாலை வேறே நடக்கிறது. அந்த மாணவர்கள், வெளி ஊர்ப் பாடசாலைகளில் இருந்து வந்திருந்த வைதீகர்கள் என்று ஒரே கூட்டமாய்த் தான் இருந்தது. காலையை விட இப்போது கூட்டம் அதிகரித்திருந்தது பார்த்ததுமே புரிந்தது. என்றாலும் திண்ணையில் கொஞ்சம் போல் இருந்த இடத்தில் நான் மட்டும் உட்காரப் போனப்போ அவங்க எழுந்து எங்களுக்கு இடம் விட்டுவிட்டு வெளியே போய் உட்கார்ந்தாங்க.

சற்று நேரத்தில் தேர் ஈசான்ய மூலைக்கு வந்து திரும்பியது. தேர் ஆடிய ஆட்டமும், குலுங்கிய குலுங்கலும் நமக்குப் பயத்தைக் கொடுக்கிறது. மேலே அமர்ந்திருக்கிறவர்கள் சற்றும் கலங்காமல் அமர்ந்திருந்தனர். அவங்களுக்குக் கீழே இன்னொரு தட்டில் விஸ்வகர்மா வகுப்பினர் அமர்ந்திருக்கின்றனர். தேரின் பொறுப்பு முழுதும் அவர்களுடையதே. பல்வேறு வேலைகளும் செய்யும் விஸ்வகர்மாக்களில் ஸ்தபதிகள், ஆசாரிகள், தச்சர்கள், கொல்லர்கள் என்று பலரும் அமர்ந்து வருகின்றனர். தேரின் பாதுகாப்பு மட்டுமில்லாமல் கீழே மண்டகப்படிக்காரர்கள் கொடுக்கும் நிவேதனத்தை வாங்கி மேலே கொடுப்பதும், மேலே உள்ள தீக்ஷிதர்களில் ஒருவர் அதை வாங்கி அன்றைய வழிபாடு செய்யும் தீக்ஷிதரிடம் கொடுத்து நிவேதனம் செய்து தீபாராதனை காட்டிப் பின்னர் கீழே மீண்டும் அவர்களிடம் கொடுப்பதும், அவங்க வாங்கி மண்டகப்படிக்காரங்களிடம் ஒப்படைப்பதும் என்று இருபக்கமும் அமர்ந்திருப்பவர்களுக்கும் சரியான வேலை. அன்று பூராவும் உணவருந்துவதில்லை. திரவ ஆகாரமாய் எடுத்துப்பார்கள் போல. கீழே இறங்குவது என்றால் அவசரமான காரியங்களுக்கு மட்டுமே தவிர்க்க முடியாது என்றால் மட்டுமே. இல்லை எனில் இறங்குவதும் இல்லை. ஆட்கள் மாறுவதும் இல்லை. இவங்க எல்லாம் ஆருத்ரா தரிசனம் தேதிக்கு ஒருமாதம் முன்னாடியே தேர்ந்தெடுக்கப் பட்டு அதற்கென நியமங்களோடு இருப்பவர்கள். கண்டிப்பாக வேறு ஆட்கள் வருவதில்லை. தேரின் மேலே நடராஜருக்கு அருகே மட்டும் வழிபாடு செய்யும் தீக்ஷிதர் குடும்பத்தின் சிறு பிள்ளைகள் உட்கார்த்தி வைக்கப்படுகிறார்கள். பழக்கம் ஆவதற்காக.

தேர் ஈசான்ய மூலையைக் கடந்ததும் எல்லாரும் தேர் முட்டியை நோக்கிப் பாயக் கூட்டத்தில் மாட்டிக்கவேண்டாம் என்று நாங்கள் சிவகாமசுந்தரியின் தேரைப் பார்த்துவிட்டு வடக்கு வாசலை நோக்கி நடையைக் கட்டினோம். அங்கிருந்து செருப்பைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு சிவகங்கைக் கரையோரமாய்க் கீழ வாசலுக்கு ஏற்கெனவே பலர் போய்க்கொண்டிருந்தார்கள். அட, நாம் தான் சாமர்த்தியம்னு நினைச்சால், நமக்கும் மேலே இல்லை இருக்காங்கனு நினச்சவாறே நாங்களும் செருப்பைத் தூக்கிக்கொண்டு போனோம். அதுக்குள்ளே சிவகங்கைக் கரை வரையும், கடைகள், கடைகள், கடைகள். எல்லாம் இன்றும், நாளையும் மட்டுமே அநுமதிக்கப்படுகின்றன. என்றாலும் மனசுக்கு உறுத்தலாய்த் தான் இருந்தது. ஒரே நல்லவிஷயம் உடனுக்குடன் சுத்தம் செய்யப் படுவது தான்.

கீழவாசலில் வெளியே போய்ச் செருப்பு வைக்குமிடத்தில் செருப்புகளை ஒப்படைத்தோம். இப்போ செருப்புக்கு ஆறு ரூபாய் என்றும் நாளை மாலை வரை எப்போ வேண்டுமானாலும் வாங்கிக்கலாம் என்றும் இரவிலும் திறந்திருக்கும் என்றும் கடைக்காரர் சொன்னார். உள்ளே போனால் எப்போ வெளியே வருவாங்கனு சொல்ல முடியாதே அதனால். நாங்கள் உள்ளே போகும்போதே ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியிலேயே க்ரில் போட்டுத் தடுத்து ஒரு மண்டபம் ஒன்றின் இடிந்த பாகங்கள் காணப்பட்டது. அந்த க்ரில்லுக்குள் புகுந்து அங்கிருந்த மேடையில் அமர்ந்து விட்டோம். நடராஜர் நுழையும் வாசலுக்கு அருகே இருந்தது அது. நடராஜர் நுழைந்தால் நம்மைப் பார்க்காமல் போகமுடியாது. அதுக்குள்ளே பக்கத்தில் இருந்தவங்க, நடராஜர் வர எட்டு மணி ஆகும் போய்ச் சாப்பிடறதுன்னா சாப்பிட்டு வாங்கனு சொன்னாங்க. இவருக்கு சர்க்கரையே பசி வந்துட்டா மயக்கம் வரப் போறதேனு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. ஆனால் அவரோ பசியே இல்லைனு சொல்லிட்டார். இப்போ வெளியே போய்ச் சாப்பிடப்போனா திரும்பி வரதுக்குள்ளே இங்கே வேறு யாரேனும் உட்கார்ந்திருப்பாங்க. கூட்டம் வரவர ஜாஸ்தியாயிட்டே இருக்கு. அப்புறம் உள்ளே நுழைய முடியாமப் போயிடும்னு அவரோட எண்ணம். சரினு உட்கார்ந்துட்டோம். வழியிலே இருக்கும் கடைகளை எல்லாம் காவலர்கள் அப்புறப்படுத்திக்கொண்டே இருந்தனர். திடீரென நாதஸ்வரம் சத்தம்.

என்னனு பார்த்தா ஆசாரியர் நடுவில் வர சுற்றி மற்ற தீக்ஷிதர்கள் வர, கையில் வெள்ளிக் கோல் ஒன்றைப் பிடித்துக்கொண்டு கோவில் ஊழியர் ஒருவர் பின் தொடர அனைவரும் ஆயிரங்கால் மண்டபம் வழியாய் ஊர்வலம் போல் வந்தனர். ஆசாரியர் நடராஜரிடம் அநுமதி வாங்கப்போகிறாராம். இவர்தான் நாளைக்கு ஆருத்ரா அபிஷேஹம் செய்யப் போகிறார். ராஜாவுக்கு அபிஷேஹம், அலங்காரம் செய்யப் போறவர் எப்படி இருப்பார்னு ராஜா பார்த்து ஓகேனு சொல்லணுமே! அதுக்கு! அவர் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் மாலைக் கட்டளைக்காரகள் சென்றனர். மீண்டும் பரபரப்பு. சரி நடராஜர் தான் வராராக்கும்னு பார்த்தா மாணிக்கவாசகர் பல்லக்கில் அவசரம் அவசரமாத் தேரை நோக்கிப் போனார். இப்போத் தான் போறார். இன்னும் கொஞ்சம் நேரமாகும்னு உள்ளூர்க்காரங்க சொன்னாங்க. ஒன்பதும் ஆயிற்று, பத்து மணியும் ஆயிற்று. தீவட்டி பிடிக்கிறவங்க தீவட்டித் திருவாசியோடு தேருக்குப் போனாங்க.

வேக வேகமாய்ப் பிள்ளையார் ஓட்டமாய் ஓடி வந்து மறைந்தார். அதன் பின்னே அதே வேகத்தோடு சுப்ரமணியரும் வர, அரை மணியில் தீவட்டி ஒளி திருவாசியாக மாற்றப்பட்டு வேகமாய் ஓடிவர, நடராஜர் வரப் போகிறார் என்பது புரிய உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து பார்க்க வசதியான இடத்துக்குப் போனேன். மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டே ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வர, நடராஜர் பல்லக்கில் ஆடி ஆடி வந்தார். அட, அந்தப் பக்கம் இல்லை பார்க்கிறார் என்று நான் நினைத்த அதே கணம் பல்லக்கு என் பக்கம் திரும்பிற்று. பார், பார், நன்றாய்ப் பார் என்ற வண்ணமே இன்னொரு ஆட்டம். அவர் ஆட்டத்துக்கு இடம் கொடுத்துக்கொண்டே மக்கள் சென்றனர். பல்லக்கோடு ஓடிக்கொண்டே பல்லக்கு திரும்பும் இடத்துக்கு வந்து மற்றொரு முறை பார்த்தேன். இப்போது இன்னும் அருகே, மிக மிக அருகே. கண்ணுக்கு எட்டாத செளந்தரியக் காட்சி! திரும்பத் திரும்ப அங்கேயே நடராஜரையே பார்த்ததில் பின்னால் சிவகாம சுந்தரி வருவதையே மறந்தும் போனேன். அதுக்குள்ளே என் கணவர் சிவகாமசுந்தரியைப் பாருனு என்னைப் பிடித்து இழுக்கவே ஒரு கணம் திரும்பியதில் சிவகாமி தெரிந்தாள். நன்றாய்ப் பார்ப்பதற்குள்ளாக பல்லக்கு நகர்ந்துவிட்டது. நடராஜர் முன்னாலே போய்விட்டாரே? எல்லாருமே பின்னால் ஓட்டமாய் ஓடினார்கள். ஆயிரங்கால் மண்டபத்திலோ கேட்கவே வேண்டாம். எல்லாரும் இடம் முன்பதிவு செய்துகொண்டு அமர்ந்திருந்தார்கள். நாங்கள் பார்க்கும்போதே ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர். இப்போ இன்னும் கேட்கவே வேண்டாம். லக்ஷார்ச்சனை பார்க்கவேண்டாம், காலை அபிஷேஹத்துக்கு வரலாம் என்று முடிவு செய்து கொண்டோம். பசி வயிற்றை அப்போது தான் கிள்ளியது.

வெளியே வந்தால் மணி பதினொன்றரை. இந்த நேரம் யார் நமக்குச் சாப்பாடு கொடுப்பாங்க? தீக்ஷிதர் வீட்டில் பாலாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் இந்த நேரம் போய் அவங்க வீட்டுப் பெண்களை எழுப்புவதா? மனம் குழம்பியது. ஆனால் அங்கிருந்த உணவு விடுதிகள் அனைத்துமே திறந்திருக்க, எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. வழக்கமாய்க் காபி, டிபன் சாப்பிடும் உணவு விடுதிக்குப் போனால் வெளியே ஐம்பது பேர் காத்திருப்பில். உள்ளே இடம் பார்த்துப் பார்த்துப் பார்த்து அநுமதித்துக்கொண்டிருந்தனர் எங்களை உள்ளே விட ஒரு மணி நேரமாவது ஆகும் போலிருந்தது. சூபர்வைசரிடம் பார்சல் கொடுக்க முடியுமா என்றால் இந்த மூன்று நாட்களும் பார்சல் சேவையே கிடையாது என்றுவிட்டார். அங்கேயே காத்திருக்கலாம் என்று ரங்க்ஸ் சொல்ல, வேண்டாம்,போகலாம் என்று நான் சொல்ல, எதிரே இன்னொரு உணவு விடுதி.

அங்கே போய்ப் பார்க்கலாம் என்று நான் கிளம்ப அரை மனசாய் அவரும் வந்தார். அங்கேயும் கூட்டம் தான். ஒருத்தர் வெளியே வருவதைக் கண்டு உள்ளே இடம் இருக்கானு கேட்டதுக்கு நாற்காலி காலினா போய் உட்காருங்க. உணவு எப்போத் தயாரோ அப்போ வரும். நான் ஒரு மணி நேரம் காத்திருந்தேன்னு சொல்லிட்டுப் போனார். நாங்க முழிச்சிட்டு நின்னப்போ ஒருத்தர் கூப்பிட்டு இரண்டு இடம் இருக்கு வாங்கனு உட்காரச் சொன்னார். உட்கார்ந்தாச்சு. சாப்பிட ஏதானும் கிடைக்குமா? அதுக்குள்ளே தட்டு நிறைய ஊத்தப்பம்(சாதா தான், சிதம்பரத்தில் நோ வெங்காயம்) எடுத்துட்டு ஒருத்தர் வர, பசிக்குப் பனம்பழம்னு நான் அதைக் கேட்க, எங்களுக்கு முன்னால் காத்திருப்பவர்களுக்குனு அவர் போக, எங்க எதிரே இருந்த ஒரு அம்மா, எழுந்து போகாதீங்க, இந்த ஊத்தப்பம் தான் எல்லாருக்கும். தொட்டுக்கத் தான் ஒண்ணும் கிடையாது. நாங்க வெறும் ஊத்தப்பம் தான் சாப்பிட்டுட்டுப் போறோம்னு சொன்னாங்க. சட்னி அரைக்கறாங்களாம் நேரம் ஆகுமாம். அதுக்குள்ளே இன்னொரு செட் ஊத்தப்பம் வர, இப்போ எங்களுக்குக் கொடுத்தார் சூபரவைசர். நான் முதல்லேயே ரெண்டு வாங்கிக்க எப்படி இருக்குமோனு நினைச்ச ரங்க்ஸ் ஒண்ணு போதும்னுட்டார். எப்படிச் சாப்பிடப் போறோம்னு நினைச்சால், வத்தக் குழம்பு இருக்கு வேணுமானு கேட்டார். ஆஹா, சரினு சொல்லிச் சாப்பிட்டோம். அப்புறம் ரங்க்ஸும் இன்னொண்ணு கேட்டுச் சாப்பிட்டார். மூன்றாவதுக்குத் தடா! அடுத்து வரவங்களுக்குக் கொடுக்கணுமே. ஒருத்தருக்கு ரெண்டு தான்! அதுக்கு மேலே கேட்டால் நோ தான்! :)))) அர்த்த ராத்திரியானாலும் சரி, பரவாயில்லைனு காப்பி வாங்கிச் சாப்பிட்டுட்டு வந்து ரூமிலே படுக்கும்போது பனிரண்டரைக்கும் மேலே ஆச்சு.

படங்கள் நன்றி கூகிளார். நான் எடுக்க முடியவில்லை! :(

3 comments:

  1. நல்ல பதிவு கீதாம்மா !

    உங்களுடன் சேர்ந்து சிதம்பரம் சென்று வந்த நிறைவு

    பதிவுக்கு நன்றி கீதாம்மா

    //அப்பாடி! இப்போ தைரியமா ரங்க்ஸ் என்னைப் பார்க்க நான் அசடு வழிந்தேன்.//

    ஏனோ ஸ்ரீராமரும் சீதா பிராட்டியாரும் நினைவுக்கு வந்தனர் ;அதென்ன வரி !

    அண்ணலும் நோக்கினார் ! அவளும் நோக்கினாள் என்பது தானே ! ஹ ஹா

    ReplyDelete
  2. வாங்க ப்ரியா, ஹிஹிஹி, நன்றிம்மா.

    ReplyDelete
  3. அருமையான தரிசனம்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete