தேரை இழுக்கக்காத்திருக்கும் தேர் வடம். தேர் மரச் சக்கரங்களிலேயே ஓடி இருக்கிறது. இப்போது சில வருடங்களாக இரும்புச் சக்கரங்களுக்கு மாற்றி இருக்கின்றனர். என்றாலும், தேர் இன்னமும் மனிதர்கள் பிடித்து இழுத்துத் தான் ஓட்டுகின்றனர். ஹைட்ராலிக் பிரஷர் கொடுத்து ஓட்டுவது இல்லை. எல்லாம் பழமை, இனிமை.
தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிக்ஷாடனராய் வந்த ஈசன் ஆடிய ஆட்டத்தை முதலில் ரிஷிகளே பார்த்தார்கள். அதன் பின்னர் அம்பிகை ஈசனிடம் கேட்க அவளுக்கு மட்டும் தனியாக திரு உத்தரகோசமங்கையில் அறைக்குள் ஆடிக்காட்டினாராம். இவரின் இந்த ஆட்டத்தை மனதில் நினைத்துக்கொண்டு, சிவ பஞ்சாக்ஷரத்தை உள்ளே நிறுத்தி அஜபா ஜபம் செய்துகொண்டிருந்த மஹாவிஷ்ணு உள்ளேயே சிவனும், சக்தியும் இணைந்ததையும், அதன் மூலம் பிறந்த கந்தனையும் கண்டு ஆநந்திக்கவே மிகவும் கனம் அதிகம் ஆகிவிட்டதாம்.
ஆதிசேஷனுக்குப் பரமாத்மாவைத் தாங்கமுடியாமல் என்ன இது? திடீர்னு இத்தனை கனம் கனக்கிறாரே எனக் கேட்க விஷ்ணுவும் தான் கண்டதை விண்டு சொல்ல, தாமும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் விரும்ப சிதம்பரம் செல்லுமாறு அவரைப் பணித்த விஷ்ணு, தாமும் நடராஜர் ஆட்டத்தை நேரிலே மற்றொரு முறை காண விரும்பி அங்கே வந்தாராம். ஆகவே சித் சபை நடராஜர் மறுநாள் தாருகாவனத்து ஆட்டத்துக்குத் தயாராக அலங்காரம் செய்துகொண்டிருக்க, இங்கே பிக்ஷாடனக் கோலத்தில் ஈசனின் பிக்ஷாடனத் திருமேநிக்கு அலங்காரங்கள் முடிந்து வீதி உலாவுக்குத் தயாரானார்.
இம்மாதிரி விழாக்களில் நாதஸ்வரக் காரர்கள் இசைக்கும் மல்லாரி ராகம் இசைக்க, பிக்ஷாடனர், சாதாரணமானவரா? தங்கப் பல்லக்கிலே கிளம்பிட்டார் வீதிகளிலே பிச்சை எடுக்க. கையிலே தங்க ஓடு. பிக்ஷையைச் சுமக்கக் கூடவே குண்டோதரன். அமர்க்களமாய்க் கிளம்பிக் கீழ வாசலில் கோபுரத்துக்கு நேர் எதிரே ஆயிரங்கால் மண்டபம் செல்லும் பிரஹாரத்தில் நின்று இசையைப் பருகிக்கொண்டிருந்தார்.
வெளியே மழை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்தது. மார்கழி மாசம் பொதுவாய் மழை இருக்காது. ஆனால் இந்த வருஷமோ தினம் தினம் மழை. நாங்கள் அம்பத்தூரை விட்டுக்கிளம்பிக் காரில் ரயில் நிலையம் ஏறும்போதும் மழை கொட்டியது. சிதம்பரத்தில் மழை இல்லையேனு நினைச்சோம். ஆனால் சாயந்திரம் நாலு மணிக்குப் பிடிச்ச மழை ஆறு மணிக்கு மேலாகியும் நிற்காமல் பெய்தது. கோவிந்தராஜரின் ராஜகோபுரத்துக்கு எதிரே தான் எங்கள் தீக்ஷிதரின் இருப்பிடம். அங்கே நாங்கள் அமர்ந்தவண்ணம் மழை பெய்கிறதே, நாளைத் தேரோட்டம் எப்படி நடக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம். அதற்கேற்றாற்போல் மின்சாரம் நின்றது. எங்கும் இருட்டுச் சூழ்ந்தது. உள்ளே ஆயிரக்கணக்கான ஜனங்கள் மாணிக்கவாசகரின் பதிகங்களைக் கேட்டுக்கொண்டும், தீப ஆராதனையைப் பார்த்துக்கொண்டும் இருந்தனர். அங்கிருந்து முணுக்கென்று ஒரு சின்னச் சப்தம் கூட வரவில்லை. அழகான அகல்விளக்குகளின் ஒளியில் தீப ஆராதனையைப் பார்ப்பதும் ஒரு விதத்துக்குக் கொடுத்து வைச்சிருக்கணுமே. தீபத்தின் ஒளியில் இயற்கையான சூழலில் நடந்த அந்தத் தீபாராதனை மொத்தம் 21-ல் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேல் மின்சாரம் இல்லாமலேயே நடந்தது.
உள்ளே சென்ற மக்கள் எவரும் பதறி அடித்துக்கொண்டு வெளியே வரவில்லை. உள்ளே இருந்து எந்தவிதமான புகாரும் இல்லை. வெளியே இருளில் அமர்ந்திருந்த நாங்கள் தான் கவலைப்பட்டோம். ஆனால் எங்கள் தீக்ஷிதர் அதெல்லாம் கவலைப்படவே வேண்டாம். இது அவனோட திருவிழா அவனே நடத்திப்பான், அவனுக்குத் தெரியாததா என்று கூறிவிட்டார். யாருக்கும் எந்தவிதமான பதட்டமும் இல்லை என்பதும் ஆச்சரியமாய் இருந்தது. ஏனெனில் மழையின் வேகம் அப்படி இருந்தது. சற்று நேரத்தில் ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டுத் தேவையான இடங்களுக்கு மட்டும் மின்சாரம் வந்தது. எங்களை பிக்ஷாடனரைப் போய்க் கட்டாயம் தரிசிக்கவேண்டும் என்றும், பிக்ஷாடனருக்கு எங்களால் முடிந்த பணம் போட்டுவிட்டு விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொள்ளுமாறும் எங்கள் தீக்ஷிதர் கூறவே நாங்களும் சென்றோம். பிக்ஷாடனர் இன்னும் வீதிக்குச் செல்லவில்லை. அங்கேயே இருந்து பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்.
பிக்ஷாடனரின் அலங்காரம் மிக மிக எளிமையாக இருந்தது. கையில் திருவோடு. உதட்டில் குமிண் சிரிப்பு. காரணம் சொல்லத் தெரியாமலேயே எனக்கு அழுகை வந்தது. படிச்ச எல்லா ஸ்லோகங்களும், பாடல்களும் மறந்து போகப் பித்துப் பிடித்தவள் மாதிரி பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றேன். சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. இது என்ன கோலம்? எதற்காக இது? அவன் பிச்சை எடுப்பதா? அதை நாமும் பார்க்கிறோமே, அவனுக்குப் பிச்சையும் போடுகிறோமே, நாமெல்லாமே அவன் போட்ட பிச்சை தானே என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். கைகள் நடுங்க என் கணவர் கொடுத்த பணத்தை வாங்கிப் போட்டுவிட்டுச் சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு பிக்ஷாடனர் அங்கிருந்து நகரப் போகிறார் என்று புரிந்ததும், மீண்டும் உள்ளே வந்தோம். திருஞானசம்பந்தர், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"யதின் பொருளும் புரிய ஆரம்பித்தது. உள்ளே கடைசி தீபாராதனை நடக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக ஓதுவார்களின் குரல் ஓங்கி ஒலிக்க, அதற்கும் மேல் காண்டாமணி கணீர் கணீர் என அடிக்க, நாங்கள் உள்ளே சென்று நிதானமாயும், செளகரியமாயும் தீபாராதனையைப் பார்த்துக்கொண்டு திரும்பி வந்தோம்.
மறுநாள் காலை தேரை எங்கே இருந்துபார்க்கலாம் என்று கேட்டதற்கு சித்சபையில் இருந்து நடராஜர் ஆடிக்கொண்டே வந்து தேரில் ஏறுவார் என்றும், அதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும் என்றும் கூறிய தீக்ஷிதர் அதைப் பார்க்கச் செளகரியமான இடத்தையும் குறிப்பிட்டார். கூட்டம் உள்ளே முதல்நாள் இரவில் இருந்தே சென்று தங்க ஆரம்பித்திருந்தது. ஆகவே உள்ளே வந்தால் வெளியே மீண்டும் வர ரொம்பவே கஷ்டமாய் இருக்கும் என்பதால் பார்க்கும் தூரத்தில் இருந்து பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார். அதற்கேற்றாற்போல் கோயிலில் சித்சபையைச் சுற்றியும் கோவிந்தராஜர் சந்நிதி இருக்கும் மேடையிலும் மக்கள் கூட்டம்.
எல்லா வீதிகளிலும் கடைகள் போட்டிருந்தனர். அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாரி, சாரியாக மக்கள் வந்தனர் என்பதைக் கண்கூடாய்ப் பார்த்தோம். ஆடிக்கொண்டே வரும் நடராஜர் தேரில் ஏறித் தேரில் வலம் வந்துவிட்டுப் பின்னர் மீண்டும் ஆடிக்கொண்டே கோயிலுக்கு வந்து ஆயிரக்கால் மண்டபத்துக்குப் போய் அங்கே அபிஷேஹம் முடிந்து, மறுபடி ஆடிக்கொண்டே சென்று சித்சபையில் அமர்வது தான் ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா நக்ஷத்திரமும் பெளர்ணமியும் கூடிய தினத்தில் நடராஜர் தில்லையம்பலத்தில் வந்து அமர்ந்து ஆநந்த நடராஜராகத் தன் ஆட்டத்தைத் தொடங்கியதாய் ஐதீகம். நிற்காத மழையில் தேர் எப்படி ஓடுமோ என்று கவலை பிறந்தது. எட்டு மணி அளவில் ஒரு பெரிய இடி முழக்கத்துடன் மழை கொஞ்சம் நின்று தூற்றல் மட்டும் போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் சாப்பிட்டுவிட்டு எங்கள் அறைக்கு வரும்போது மணி பத்தாகிவிட்டது.
விடுதியின் உதவியாளிடம் காலை சீக்கிரம் போக வெந்நீர் வேண்டும் என்று சொல்ல அவரும் நாலரை மணிக்கெல்லாம் தயாராகிவிடும் என்று உறுதி அளித்தார். அவ்வளவில் மறுநாளை எதிர்பார்த்துப் படுத்தோம்.
இப்படி வரிசையா பெரிய பெரிய (சைஸை சொல்லலை, மேட்டரை சொல்றேன்) என்னை போன்ற சிறியவர்கள்(அறிவு, வயசு ரெண்டுமே தான் :P) என்னனு கமெண்ட் போடுறது!!! அதான் முக்காவாசி நேரம் சைலண்டா இருக்கறது. நல்ல சேவை!!!
ReplyDeleteஉணர்ச்சி பூர்வமா எழுதியிருக்கீங்க.. மழை நின்னுதா இல்லியா? மார்கழி மாசத்தில் வென்னீர் இல்லையினா குளிக்க முடியாதா?
ReplyDeleteஹை, போர்க்கொடி, எங்கே இந்தப் பக்கம்?? அப்புறம் எத்தனை நாளைக்குச் சின்னப் பொண்ணு?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
ReplyDeleteவரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா! :D
அப்பாதுரை,
ReplyDeleteகுளிக்கலாம் தான், ஆனால் போற இடத்திலே வீசிங் ஜாஸ்தியாச்சுன்னா நெபுலைசரையும், ஆக்சிஜனையும் தேடிண்டு போகணும். அது வேணாமேனு தான், எதுக்கும் முன் ஜாக்கிரதையா இருந்துடறது! :))))))))))