அலங்கார வளைவில் பழம்,காய்களால் அலங்காரம், கிழக்குக் கோபுர வாசல். இந்த வாசல் வழியாகவே சித்சபையிலிருந்து நடராஜர் ஆடிக்கொண்டே வெளியே வந்து விட்ட வாசல் வழியாகப் போய்ப் பின்னர் கீழ சந்நிதியில் நிற்கும் தேரில் ஏறி வீதி வலம் வருகிறார்.
ஆருத்ரா தரிசனத்துக்குத் தயாராவது சிதம்பரம் மட்டுமில்லாமல் நடராஜரும் தயாராகிறார். அந்தச் சமயத்தில் எந்த தீக்ஷிதரின் முறையோ அவரோடு சேர்த்து எட்டுப் பேர் நடராஜரின் அலங்காரங்களுக்கும், ஒவ்வொரு கால வழிபாட்டுக்கும் தயாராகின்றனர். முக்கிய ஆசாரியர் நடராஜரின் வழிபாட்டுக்கு மட்டுமே இருந்தாலும் அவர் மேற்பார்வையிலேயே அனைத்துக் காரியங்களும் நடைபெறுகின்றன. நடராஜர், சிவகாமி அம்மையின் நகைகள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்துப் பெட்டகத்தில் இருப்பவை இந்த விழாவுக்காக வெளியே எடுக்கப் படும். இவற்றில் நளச் சக்கரவர்த்தி போட்ட நகைனு சொல்றாங்க. அவற்றிலிருந்து, பல்லவர்கள், சோழ, பாண்டியர்கள், அடுத்து வந்த விஜயநகர அரசர்கள், பாண்டிய நாயக்க வம்சத்தவர், செட்டிநாட்டரசர்கள், தனவந்தர்கள், வணிகப் பெருமக்கள் எனப் பலர் போட்டவைகளும் உண்டு. அவற்றிலிருந்து பொறுக்கி எடுக்கப் பட்ட ராஜ அலங்காரத்துக்கு உரிய 228 ஆபரணங்கள் இந்த அலங்காரத்துக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. சும்மாவா பின்னே?? நாட்டியம் அன்றோ நடக்கப்போகிறது? அதுவும் ஆடப்போவது இவ்வுலகுக்கே அரசன் அன்றோ? ஆகவே ஒரு அரசனை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அத்தனை கவனத்தோடு அலங்கரிக்கப் படுகிறார் நடராஜர்.
இதை எட்டு தீக்ஷிதர்கள் சேர்ந்து செய்கின்றனர். இந்த எட்டுப்பேரிடமும் எட்டுச் சாவிகள் இருக்கும் . எட்டுச் சாவிகளையும் போட்டால் தான் நகைப்பெட்டகம் திறக்கும். இல்லை எனில் திறக்காது. இது இப்போது இருக்கும் 200க்கும் மேற்பட்ட தீக்ஷிதர்களுக்குள்ளே மாறி மாறி வரும். இந்த அலங்காரம் செய்யும்போது திரை போடுவத்தில்லை. ஒரு பெரியப் பட்டு வேஷ்டியால் நடராஜரை முகம் மட்டும் தெரியும்படி மூடி விடுகின்றனர். உள்ளே அலங்கரிப்பது வெளியே இருக்கும் மற்ற தீக்ஷிதர்களுக்குத் தெரியாததோடு நமக்கும் தெரியாது. சொல்லப் போனால் தாங்கள் அலங்கரிப்பது எவ்வாறு அமையும் என அலங்கரிக்கும் தீக்ஷிதர்களே அறிய மாட்டார்கள் என்றும் சொல்கின்றனர். சிவகாமசுந்தரியும் அவ்வாறே பட்டுப் புடைவையால் மூடப்பட்டிருந்தாள். நாங்கள் கனகசபைக்குப் போய் தரிசனம் பண்ணி, அர்ச்சனை முடித்துக் கொண்டு ரகசியம் பார்க்கவேண்டிக் காத்திருந்தோம். எல்லோரும் ரகசியத்திற்குச் சென்றும் தீப ஆராதனையைக் காட்டிவிட முடியாது. எல்லா தீக்ஷிதர்களும் பொன்னம்பலத்தின் உள்ளே சென்று அர்ச்சனை செய்யலாம். நடராஜருக்குத் தீப ஆராதனை காட்டலாம். சிவகாமசுந்தரி, சந்திரசேகரர், குஞ்சிதபாதம், சந்திரமெளலீஸ்வரர், ஸ்வர்ணகாலபைரவர் , என அனைத்துத் திருமேனிகளுக்கும் தீபாராதனை காட்டலாம்.
ஆனால் ரகசியத்தை மூடி இருக்கும் திரையை விலக்கிவிட்டு ரகசியத்திற்கு தீப ஆராதனை காட்டுவது அன்றைய தினம் எந்த தீக்ஷிதர் பொறுப்பில் நடராஜர் இருக்கிறாரோ அவரால் மட்டுமே முடியும். அதே போல் ரத்தின சபாபதியையும், (மரகத லிங்கம்) அவர் மட்டுமே பெட்டியில் இருந்து வெளியெ எடுத்து அபிஷேஹம் செய்து, தீபாராதனை காட்ட முடியும். ஆகவே அந்தக் குறிப்பிட்ட தீக்ஷிதர் வரும்வரைக்கும் காத்திருந்து (அவர் காலவழிபாடுகளின் போது மட்டுமே வருவார். மற்ற நேரம் ஜபித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். நியமங்கள் அதிகம்.) அவர் வந்ததும், அவரிடம் வேண்டுகோள் விடுத்து ரகசிய தரிசனம் செய்து கொண்டு கோவிந்தராஜப்பெருமாள், புண்டரீகவல்லித்தாயார், மற்றும் சரபர், ஊர்த்துவ தாண்டவேஸ்வரர் போன்றவர்களை எல்லாம் தரிசித்துக்கொண்டு கோவிந்தராஜரின் ராஜகோபுரத்துக்கு எதிரே வந்து அமர்ந்தோம்.
சற்று நேரத்தில் மாலை வழிபாடு ஆரம்பிக்கும். எங்கள் கட்டளை தீக்ஷிதருக்கு அன்றைக்கு வழிபாட்டுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொறுப்பு என்பதால் எங்களிடம் சொல்லிவிட்டுக் கூட்டம் இன்றைக்கு அதிகமாய் இருக்கும். உங்களால் நிற்க முடிஞ்சால் உள்ளே வாருங்கள், இல்லை எனில் 21வது தீபாராதனைக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்களும் காத்திருந்தோம். முதலில் நாதஸ்வரம், மேள,தாளத்தோடு கட்டளைக்காரர்கள் சென்று மாணிக்க வாசகரை அழைத்துவிட்டுப் பின்னர் உள்ளே சென்று ஈசனிடம் அநுமதியும் வாங்க, மாணிக்கவாசகர் ஜாம், ஜாமென்று பல்லக்கில் பிரகாரத்தில் ஊர்வலம் வந்துவிட்டுப் பின்னர் நடராஜர் முன்னே சென்று நின்றார். இதுவரை மற்றப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்த ஓதுவார்கள், இப்போது குறிப்பிட்ட மாணிக்கவாசகரின் பதிகங்களை ஒவ்வொன்றாய்ப் பாட ஆரம்பிக்க ஒவ்வொரு பதிகமும் பாடி முடித்ததும் ஒரு தீபாராதனை எடுக்கப் பட்டது.
இன்று வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் மணிகளோ, தாரை, தப்பட்டைகளோ இல்லாமல் எல்லாமே இயல்பான முறையில் இயங்கும் மணியாகவும், மனிதர்கள் பயன்படுத்தும் கொம்பு, எக்காளம், பேரிகை, கொட்டு, மிருதங்கம் தவில், நாதஸ்வரம் போன்றவையும் முழங்க காண்டாமணியைச் சங்கிலியில் இணைத்து நாலு பேர் பிடித்து இழுத்து அடித்தார்கள். 20 தீபாராதனை முடிந்ததும் 21 கடைசி தீபாராதனை. கோவிந்த ராஜரின் சந்நிதிக்கு எதிரே நின்றவண்ணம் நாங்களும் அதைத் தரிசனம் செய்துகொண்டோம். கூட்டம் ஆடவில்லை, அசங்கவில்லை. ஒரு தள்ளு,முள்ளு கிடையாது,. ஒருத்தரை ஒருத்தர் முந்துவதோ, இடிப்பதோ இல்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் அமர்ந்திருந்தவர்கள் அமர்ந்திருக்க, நின்றிருந்தவர்கள் நின்றவண்ணமே தரிசனம் செய்ய அனைவரும் அமைதியான முறையில் தரிசனம் செய்தோம்.
இதை ஒவ்வொரு முறை சிதம்பரம் செல்லும்போதும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது பெரிய விழா. இப்படியான ஒரு விழாவில் கூட நிதானமும், ஒழுங்கையும் கடைப்பிடித்த மக்களையும், அவ்வப்போது இரவு, பகல் பார்க்காமல் நிஜமாகவே தூங்காமல் தெருக்களையும், கோயில் பிராகாரங்களையும் சுத்தம் செய்த சுகாதாரப் பணியாளர்களையும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்று ஏற்படுத்தி இருந்த போலீசுக்கு வேலையே வைக்காத பொதுமக்களையும், பொதுமக்களைக் காட்டுத்தனமாய் விரட்டாமல் மென்மையாகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்திய போலீசாரையும் எத்தனை பாராட்டினாலும் போதாது, போதவே போதாது.
முக்கியமாய்ச் சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் வேலைசெய்தது ஆச்சரியமாய் இருந்தது. அதே போல் எந்த விஐபிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் அவரவர் அவரவரால் இயன்றவரைக்கும் அருகே சென்று பார்க்கும்படியாகவும் அமைந்தது. இறைவனின் பல்லக்கு, தேரோடு செல்லும் உரிமை ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், வாத்திய விருந்தளிப்பவர்கள், கட்டளைதாரர்கள் மட்டுமே. மற்றச் சிலப்பொதுமக்கள் செல்ல முடிந்தால் கூட்டத்தைத்தாங்க முடிந்தால் செல்லலாம். தடையில்லை. எனினும் எங்கே இருந்து பார்த்தாலும் எவ்வளவு தொலைவாய் இருந்தாலும் நடராஜர் காட்சி அளிக்கிறார். அதை விட வேறு என்ன வேண்டும்?
தொடரும்.
ஏக்கத்தைக் கிளப்பி விட்ட பதிவு :(
ReplyDeleteஅடுத்த முறை அங்கு போகணும்
ReplyDeleteஅருமையாய் தரிசனம் செய்துவைத்தீர்கள்..
ReplyDeleteநன்றி. பாராட்டுக்கள்..
அருமையாய் தரிசனம் செய்துவைத்தீர்கள்..
ReplyDeleteநன்றி. பாராட்டுக்கள்..