எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 08, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!


அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி != இந்தப் பாடல் முழுவதும் கண்ணனின் கல்யாண குணங்கள் பற்றியும், அவன் வீரத்தைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாடலைப் பாராயணம் பண்ணச் செய்யலாம் என்பது பெரியோர் கூற்று. வாமனனாய் வந்து இவ்வுலகம் முழுதையும் மண்ணை மட்டுமல்லாது, விண்ணையும், பாதாளத்தையும் அளந்து மஹாபலிக்கு மோக்ஷத்தைக் கொடுத்து அவனை நித்ய சிரஞ்சீவியாக்கிய அவதாரத்தைத் திருப்பாவையில் மூன்றாம் முறையாகக் கூறி உள்ளாள் ஆண்டாள்.

முதலில் மூன்றாம் பாடலில் "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று இந்த அவதாரத்தை உத்தமமான ஒரு அவதாரமாய்ச் சொன்னவள், பின்னர் பதினேழாம் பாசுரத்தில் "அம்பரமே, தண்ணீரே, அறம் செய்யும்" பாடலில் "அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!" என்று மீண்டும் பாராட்டிச் சொல்கிறாள். மற்ற அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை சம்ஹாரமே செய்ய இந்த அவதாரத்தில் கண்ணன் மஹாபலிக்குச் செய்து வைத்த மோக்ஷ சாம்ராஜ்யப் பதவியும், நித்ய சிரஞ்சீவிப் பட்டமுமே ஆண்டாளைக் கவர்ந்திருக்கிறது போலும்.

அடுத்து

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி != சீதையை அபகரித்துச் சென்ற தென்னிலங்கைக் கோமான் ஆன ராவணனைக் கொன்றான் அன்றோ?? ராவணனையும் உடனே எல்லாம் கொன்றுவிடவில்லை. அவன் திருந்தச் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்துவிட்டுப்பின்னர் அவன் எல்லை மீறவே அவன் இருக்கும் இடம் சென்று அவனோடு முறைப்படியும் யுத்த தர்மப் படியும் சண்டையிட்டு அவனைத் தோற்கடித்துக் கொன்றான். உன்னுடைய இந்த வீரத்துக்குப் போற்றி!

பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி != சக்கரமாய் வந்து கண்ணனை அழிக்க வந்தான் சகடாசுரன். அந்தச் சகடாசுரனைத் தன் கால்களால் உதைத்தே கொன்றாயே, அந்த உன் திருவடிகளுக்குப் போற்றி.


கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி != எல்லா விதத்திலும் முயன்று பார்த்த கம்சன், வத்சாசுரனையும் கபித்தாசுரனையும் கோகுலத்துக்கு அனுப்ப, அவர்கள் கன்றுக்குட்டியாக ஒருத்தனும், விளாமரமாக இன்னொருத்தனும் நின்று கண்ணனைக் கொல்ல முயல அந்தக் கன்றையே கோலாய்க் கொண்டு விளாமரத்தை அடித்து வெட்டிச் சாய்த்து அழித்தான் கண்ணன். அவனுக்குத் தான் சிறு வயது முதலே எத்தனை எத்தனை தொந்திரவுகள், இடர்கள், தடங்கல்கள், எதிரிகள்?? பிறக்கும்போதே சிறையில் பிறந்தான், பிறந்த உடனே தாயைப் பிரிந்தான், பிறந்த சற்று நேரத்துக்கெல்லாம் தந்தையைப் பிறந்தான். வேறொரு இடத்தில் வளர்ந்தான். அங்கேயானும் நிம்மதியாக வளர்ந்தானா என்றால் இல்லை! எனினும் அவன் முகத்தின் முறுவல் மாறவில்லை. எதுக்கும் சலித்துக்கொள்ளவில்லை, அலுத்துக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும், எல்லாரையும் வென்றான். சுழன்று, சுழன்று கன்றைத் தூக்கி அடித்துக் கொன்றான் இரு அசுரர்களையும் கண்ணன். அத்தகைய வலிமை பொருந்திய கண்ணா உன் திருவடிகளுக்குப் போற்றி.


குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி != ஆஹா, இங்கே தான் மாமன் இவ்வாறு தொந்திரவு கொடுத்தானெனில் இந்த இந்திரனுக்கு என்ன வந்ததாம்?? எல்லாம் கிடக்கத் தனக்கே அனைவரும் வழிபாடுகள் செய்யவேண்டும் என எதிர்பார்த்த இந்திரன் கண்ணன் கோவர்த்தனத்துக்குச் செய்த பூஜையால் கோபம் அடைந்தான். விடாத பெருமழை! பேரிடிகளையும் அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கச் செய்தான். வஜ்ராயுதத்தை வீசி பெரிய மின்னல்களை விண்ணின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குப்பாயச் செய்தான். மழை அடர்த்தியாகப் பெய்தது. கண்ணனோ அசரவில்லையே! தான் வழிபட்ட கோவர்த்தனகிரியையே போய் வணங்கி அதையே தூக்கிக் குடையாகப் பிடிக்க, கோபர்கள் அனைவருக்கும் அதனடியிலே அடைக்கலம் கிடைத்தது. கண்ணனின் அருளாகிய குடை அன்றோ அது? மேலும் இவ்வளவு கஷ்டம் கொடுத்த போதிலும் கண்ணன் இந்திரனை அழிக்கவே இல்லை. அவன் தவறை அவனே உணரச் செய்தான். அத்தகைய பெருந்தன்மையான குணத்துக்கு போற்றி.

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி != எல்லாரையும் வென்று பகைவரகளை அடியோடு ஒழிக்கும் கண்ணன் கையின் வேலை இங்கே ஆண்டாள் போற்றுகிறாள். கண்ணனுக்கு ஏது வேல்? என்றால் இருந்ததே?? நந்தகோபனே கூர்வேல் கொடுந்தொழிலன் ஆயிற்றே? தந்தையின் ஆயுதம் பிள்ளை கையில் ஏற்றிக் கூறுகிறாள் ஆண்டாள். அத்தகைய பாதுகாப்புக்கொடுக்கும் வேலே நீ வாழ்க, உனக்குப் போற்றி!


என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!= இவ்வளவு புகழ் வாய்ந்த வீரம் செறிந்த கண்ணனுக்குப் போற்றி பாடி அவனுடைய சேவகமே எங்கள் தொழில் என அவனைத் துதித்துப் பாடவேண்டியே அவனிடம் வீடு பேறு அடையவே,( இங்கே பறை என்பது மோக்ஷத்தைக் குறிக்கும் சொல்) இன்று நாங்கள் வந்திருக்கிறோம், கண்ணா, எங்களிடம் அன்பு கொண்டு எம்மைத் தடுத்து ஆட்கொள்வாய்.

இவ்வளவு நாட்கள் தோழிகளை எழுப்பியும், பின்னர் நந்தகோபனையும், யசோதையையும் எழுப்பியும், பின்னர் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பியும், அதன் பின்னர் கண்ணனையே எழுப்பியும் வந்த ஆண்டாள் இந்தப் பாடலில் கண்ணன் எழுந்து வந்து தங்களுக்குத் திருமுக தரிசனம் கொடுத்ததை மறைமுகமாய்க் காட்டுகிறாள். அதோடு அவனிடம் நேரிடையாகவே பேசி அவனுடைய அருளை வேண்டுகிறாள்.

கண்ணனின் வீரப் புகழைப்பாடி மகிழுமாறு ஆண்டாள் கூறுவது போலவே பட்டத்திரியும் என்ன கூறுகிறார் எனில்:

மனம் குழைந்து மெய் சிலிர்த்துக் கண்களில் கண்ணீரும் இல்லாமல் எவ்வாறு நம் மனம் புனிதமடையும் எனக் கேட்கிறார்.

சித்தார்த்ரீபாவ முச்சைர் வபுஷிச புலகம் ஹர்ஷபாஷ்பஞ்ச ஹித்வா
சித்தம் ஸுத்த்யேத்கதம் வா கிமு பஹூதபஸா வித்யயா வீதபக்தே:
த்வத்காத ஸ்வாத ஸித்தாஞ்ஜந ஸதத மரீம்ருஜ்யமநோயேமாத்மா
சக்ஷுர்வத்தத்வஸூக்ஷ்மம் பஜதி ந து ததாப்ப்யஸ்தயா தர்ககோட்யா

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை மெய்ப்பொருள் ஆக்குவதையே இங்கே குறிப்பிடுகிறார் பட்டத்திரியும். இறைவனிடம் மனம் ஒன்றி மனம் குழைந்து கண்களில் கண்ணீர் பெருகி உடல் சிலிர்த்து இறை அருளைப் புரிந்து கொண்டதன் காரணமான மகிழ்ச்சிக் கண்ணீரும் இல்லை எனில் இந்த மனம் எவ்வாறு சுத்தமடையும்? எவ்வாறு புனிதமடையும்?? பக்தி இல்லாதவர்கள் மனம் எங்கனம் புனிதமாகும்?? அவர்கள் என்னதான் தவம் செய்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும் அதனால் என்ன ஆகும்?? கண்களுக்குக் கோளாறு ஏற்பட்டால் கண்களில் சித்தாஞ்சனம் என்னும் மை தீட்டுவார்கள். கண்களின் ஒளி இவ்வுலகப்பருப்பொருட்களைத் தெளிவாய்க் காண ஆரம்பிக்கும். அதே போல் உங்கள் திவ்ய கதாசார அநுபவம் என்னும் அஞ்சனம் கொண்டு எங்கள் சித்தம் தெளிவடைந்தால் ஒழிய நுண்மையான மெய்ப்பொருளை எங்கனம் நாங்கள் உணரவோ அறியவோ முடியும்?? அதை விட்டு விட்டுப் பல்வேறு பயிற்சிகள் செய்தாலுமோ, பலருடன் பலவிதமான வாதப் பிரதிவாதங்களை முன் வைத்தாலோ வேறு எந்தவிதமான செயல்களைச் செய்தாலுமோ உணர முடியாது. எங்கள் பரமாத்மாவே, உன்னுடைய கருணா கடாக்ஷம் என்னும் அஞ்சனத்தால் எங்கள் சித்தம் தீட்டப்பட்டாலே ஞானமாகிய ஒளி பட்டு எங்களால் பரம்பொருளாகிய உன் மெய்ப்பொருளை உணரமுடியும்.

No comments:

Post a Comment