எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 19, 2013

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே இனி 
நானில்லையே உயிர் நீயே


படைப்புக்குத் தேவை பெண்ணினமே.  புழு, பூச்சியில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் பெண் இனம் ஆண் இனத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அனைத்துப் படைப்புகளும் பெண்ணினத்தில் இருந்தே வருகின்றன என்பதையும் அறிவோம்.  இப்படி இயற்கையே பெண்ணைப் படைக்கவும், ஆணை அதற்குத் தேவையான விதையைத் தரவும் எனப் படைத்து இருக்கிறபோது ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? பெண்ணுக்கே சுபாவமாகவே துன்பங்களை ஜீரணித்து எதிர்த்து நிற்கும் வல்லமை உண்டு. மநுநீதியில் கூட இதைக் குறித்துக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாய்ப் பரமாசாரியார் சொல்கிறார். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு.  ஆகவே பிரம்மசாரியானவன் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டித் திருமணம் செய்து கொள்கிறான்.  இதற்காகப் பல வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து ஒரு காலத்தில் தனக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்கின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் முன்னர் பெண்ணின் குலம், கோத்திரம் போன்றவை விசாரிக்கப் படும்.  ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது தடுக்கப் படுகிறது.  உறவின் முறை திருமணமும் தடுக்கப்பட்டே இருக்கிறது.  எந்த சாஸ்திரமும் உறவின் முறைத் திருமணத்தை ஆதரிக்கவே இல்லை.  எல்லா கோத்திரக்காரர்களும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதோடு ஒரே கோத்திரமாக இருந்துவிட்டால் காலப்போக்கில் ஆண்-பெண் விகிதங்கள் குறையும்போது அந்த கோத்திரக்காரர்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஒரே கோத்திரம் மறுக்கப்படுகிறது.  வெவ்வேறு கோத்திரங்களில் பிறந்தவர்கள் இணைந்தாலே குடும்பம் செழிப்படையும் என்பது தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை ஆகும்.  மேலும் மன ஒற்றுமைக்கும் வெவ்வேறு கோத்திரத்தையே சிபாரிசு செய்கிறது சாஸ்திரம்.  அதோடு பெண்ணுக்குப் பதினேழு வயது கட்டாயம் முடிந்திருக்க வேண்டும்.  ஆணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம்.  இதற்கான காரணமாக ஆயுர்வேதம் கூறுவது என்னவெனில், பெண் பதினாறு வயதில் பூர்ணவதியாக கர்ப்பம் தரிக்க தகுதி வாய்ந்தவளாக ஆகிவிட்ட்டாலும் ஆணுக்கு இருபத்தைந்து வயதில் தான் தந்தை ஆகும் தகுதி ஏற்படுகிறது எனக் கூறுகிறது.  பதினாறு வயதுக்குக் கீழே உள்ள பெண்ணுக்கும், இருபதுக்குக் கீழே உள்ள ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாக ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கலாம் அல்லது அற்ப ஆயுளில் இறக்கலாம் எனக் கருதி வந்தனர்.

அதற்கும் முன்னால் பால்யத்திலே திருமணம் செய்விக்கும் வழக்கம் இருந்ததா எனத் தெரியவில்லை.  ஆனால் இது குறித்துப் பரமாசாரியார் தெரிவிப்பது என்னவெனில் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வித்த வழக்கம் இருந்தது என்றே கூறுகின்றார்.  பால்யத்தில் மனதில் கபடு, சூது தெரியா  பிள்ளைப் பருவத்தில் காமம் உட்புகும் முன்னர் இருவருக்கும் திருமணம் செய்வது வழக்கமாக இருந்ததை நாமெல்லோருமே அறிவோம்.  எங்க வீட்டில் என் அம்மாவின் அம்மா அப்படித் திருமணம் ஆனவரே.  ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது திருமணம் ஆகி இருக்கிறது.  என் தாத்தாவுக்குப் பதினேழு வயது.  அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  ஆகவே என் பாட்டி வயதுக்கு வரும்வரையில் பிறந்தகத்திலும், புக்ககத்திலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறார்.  ஐந்து வயது மாட்டுப் பெண்ணை மாமனார் தன் சம்பந்தி வீட்டிற்கு வந்து தங்கள் வீடு இருக்கும் பக்கத்து கிராமத்துக்குத் தூக்கிக் கொண்டு செல்வாராம்.  வாயில் விரலைப் போட்டுக் கொண்டு மாமனார் தோளிலேயே என் பாட்டி தூங்கி விடுவாராம்.  ஆனால் இப்படிச் சிறு வயதில் இருந்து பழகியதால் புக்ககத்து மனிதர்களோடு நெருக்கமும், பாசமும் அதிகம் ஆகும் என்பது அவர்கள் கணிப்பு.

இம்மாதிரியான திருமணங்களால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் இயல்பாக நட்பு உருவாகி அது காதலாகவும், பாசமாகவும் மாறி, அவர்கள் வாழ்க்கைக்கு நீடித்ததொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது முன்னோர் கணிப்பு.  இப்போதெல்லாம் ஆசையில் தொடங்கினாலும் பின்னர் அது நட்பாகவும் மாறவேண்டும்.  ஏனெனில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றொரு சொல்லாடல் உண்டு.  ஆசை அடங்கினாலும் நட்பு தொடரும்; தொடரவேண்டும்.  இதுவே கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் காரணம்.  தாம்பத்திய இன்பம் என்பது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும்.  கல்யாணத்தின் குறிக்கோள் அது இல்லை. நட்பின் அடிப்படையில் இளமை முதிர்ந்து ஆசாபாசங்கள் இல்லாத எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கையில் நட்பின் அடிப்படையில் ஒன்றிய உள்ளங்கள் கொண்ட தம்பதிகள் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்து போவார்கள் என்பதும் கண்கூடு.  

அதோடு முடிந்ததா?  அந்தக் காலத்தில் பெண் பார்ப்பது என்றெல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர்.  பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது.  அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் இப்போதும் தெலுங்கு பேசும் மக்களின் திருமணத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே திரை கட்டுவது வழக்கம்.  பெண்ணை அந்தத் திரை திறந்ததுமே பார்ப்பது மணமகன் முதல் முறையாகப் பார்ப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது.  வட மாநிலங்களில் இப்போதும் திருமணம் முடிந்த முதலிரவின் போது பெண்ணின் முகத்திரையை மணமகன் அகற்றுவது என்பது ஒரு சாஸ்திரம் சார்ந்த சம்பிரதாயமாகவே பார்க்கப் படுகிறது.  அதுவரையிலும் மணமகள் மணமகன் தன்னைப் பார்க்க முடியாமல், "குங்கட்"எனப்படும் முகத்திரை அணிந்தே காணப்படுவாள்.

படம் உதவி: கூகிளார், உஜிலாதேவி ப்ளாக்ஸ்பாட்.

தொடரும்.

நான்கைந்து நாட்களாக விருந்தினர் வருகையால் எதுவும் எழுத முடியவில்லை.  அதுக்கு முன்னாடி யுபிஎஸ் கலாட்டா.  கிட்டத்தட்டப் பத்து நாட்களாக கணினி கிட்டே அதிகம் வராமல் சும்ம்ம்மா முக்கியமான மடல்கள் மட்டும் பார்க்கப்பட்டது ஒரு சாதனை! :))))))) 

33 comments:

  1. எத்தனை எத்தனை மாற்றங்கள் தற்போது...

    தொடருங்கள் இன்னும் தெரிந்து கொள்கிறோம்...

    ReplyDelete
  2. நிம்மதியா இருந்தோம்! யூபிஎஸ்ஸை சரி பண்ணவரை சொல்லுங்க. போன் பண்ணி திட்டணும்! :-))))))

    ReplyDelete
  3. பெண் / பிள்ளை பார்க்கும்போது தந்தை வழியில் 5 தலைமுறைக்கும் தாய் வழியில் 3 தலைமுறைக்கு உறவு இருக்கக்கூடாது என்று சாஸ்த்ரம். இது eugenics.

    ReplyDelete
  4. பையன் பொண்ணை பார்ப்பது எங்கே! குழந்தை பிறந்ததுமே கூட இன்னார் இன்னாருக்கு என்று ஊர் பெரியவர்கள் தீர்மானித்து விடுவார்களாம்!

    ReplyDelete
  5. palaya visayangalai therinjikaren

    ReplyDelete
  6. வாங்க டிடி, இன்னும் நிறைய வரும். :))))

    ReplyDelete
  7. வாங்க வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இருக்கே!

    ReplyDelete
  8. ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். வா.தி. ஆனால் இப்போல்லாம் சொந்தம் ஏதேனும் ஒரு வகையில் இருக்கணும்னு சொல்றாங்க. தெரியாத இடத்தில் பெண்ணை எடுப்பதற்கோ, கொடுப்பதற்கோ யோசிக்கிறாங்க. காலத்தின் கோலம். :(

    ReplyDelete
  9. @வா.தி. ஆமாம், இது இப்போவும் சில இடங்களில் நடக்குது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கிறாங்க. :)))

    ReplyDelete
  10. வாங்க எல்கே, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //க்டும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு.//

    அமெரிக்காவின் கடன் வாங்கும் பழக்கம், இந்தியாவின் சேமிக்கும் பழக்கம் பற்றியெல்லாம் எழுதிய எஸ். குருமூர்த்தி, இந்தியாவின் குடும்ப அமைப்பு பெண்ணை நம்பி, பெண்ணின் கையில் இருக்கிறது, பெண்ணை மதிப்பவர்கள் இந்தியர்கள் (பெரும்பான்மைக் கருத்து) அதன் காரணமாகவே - குடும்பம் என்ற கட்டமைப்பின் காரணமாகவே - அமெரிக்கா அளவு இந்தியப் பொருளாதாரம் மோசமாகவில்லை என்று கொஞ்ச நாள் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

    ஒரே கோத்திரம், பால்ய விவாகங்களுக்கான காரணங்கள் எல்லாம் சொல்லி விட்டீர்கள் (ளா?)

    ReplyDelete
  12. //தெரியாத இடத்தில் பெண்ணை எடுப்பதற்கோ, கொடுப்பதற்கோ யோசிக்கிறாங்க. காலத்தின் கோலம். :( //

    பாவம் காலம். எல்லாப் பழியும் அதன் மேல் தான்!

    ReplyDelete
  13. ஹிஹிஹி, ஸ்ரீராம், பல்லாவரத்திலே உங்களைக் கடத்தி வைச்சிருந்தவங்க கிட்டே இருந்து எப்போத் தப்பிச்சு வந்தீங்க?:))))

    //க்டும்பத்தைக் //

    அது சரி, இப்படி எடுத்துப் போட்டு எ.பி. வந்திருக்குனு சொல்லி ஸ்கையை வாங்கணுமா? திருத்திட்டேன், திருத்திட்டேன், ஏற்கெனவே வி.எ. ஊத்திண்டு வா.தி. கண்டு பிடிச்சுச் சொல்லிட்டார். :))))))

    ஒரே கோத்திரத்துக்கும், பால்ய விவாஹங்களுக்குமான காரணங்கள் இவை போதாதா??????????ம்ம்ம்ம்ம்ம்ம்?????

    ReplyDelete
  14. ஜீவி சார், காலம் பாவம் தான், ஆனால் மனிதர்கள் தான் மாறுகிறார்கள் என்பதும் உண்மையே. சொல்வது என்னமோ காலத்தைத் தான். :)))))))

    ReplyDelete

  15. நான் திருமணங்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அனுப்புகிறேன்.

    ReplyDelete
  16. பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரம்//

    எங்கள் திருமணத்திலும் ஒரு சடங்கு உண்டு. பிள்ளை பெண்ணை, ஊஞ்சலில் விளையாடும் போது பார்ப்பது என்று. இப்போது சில கல்யாண மண்டபங்களில் ஊஞ்சல் இல்லாமையால். திருமண சடங்கு நடத்தும் இடத்தில் எதிர் எதிராக நாற்காலியில் மணமகள், மணமகன் அமரவைக்க பட்டு பார்த்துக் கொள்வார்கள், பின் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொள்வார்கள், அதன்பின் மாலை மாற்றிக் கொள்வார்கள். அப்புறம் தான் திருமாங்கல்யம் அணிவித்தல்.
    மோதிரம் அணிவிக்கும் போது ஊஞ்சல் பாட்டு வாசிப்பார்கள் நாதஸ்வர வித்வான்கள், ”மாலை மாற்றும் போது மாலை சாற்றினாள் கோதை” பாடல் இசைக்க படும்.
    திருமாங்கல்யம் அணிவித்தவுடன்
    சம்பந்தர் தேவாரம் ”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற பாடலைப் பாடுவார்கள்.

    திருமணத்து அன்று தான் மணமகன் பெண்ணை முதன் முதலில் பார்ப்பது என்பது அந்தக்காலம் . இப்போது முன்பே பார்த்து சம்மதம் தந்த பின் அலைபேசியில் அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள்.
    அன்று தான் பார்ப்பது போன்ற சடங்கை மட்டும் விட்டுவிடாமல் இன்னும் திருமணத்தின் போது செய்கிறார்கள்.

    ReplyDelete
  17. ஆண்/பெண் வழிகளில் தலைமுறைகளுக்கு உறவின்மை கவனித்துச் சேர்த்தது ஆச்சரியம்.

    ம்ம்ம்.. ஸ்ரீராம்.. பெண்களை மதிக்கும் இந்தியாவில் தான் அக்கிரம gang rape தொடர்ந்து நடக்கிறது. இதைப் பற்றியும் குருமூ ஏதாவது எழுதியிருப்பாரென்று நம்புகிறேன்.

    ReplyDelete
  18. வாங்க ஜிஎம்பி சார், உங்க பதிவைப் படிச்சேன். வெறுமனே குழந்தை பெற்றுக் குடும்பம் நடத்துவதற்கு மட்டுமே திருமணம் இல்லைனு சொல்லத் தான் இந்தப் பதிவுகளே. அதோடு ஒவ்வொரு சடங்குகளின் உண்மையான அர்த்தங்களையும் புரியறாப்போல் சொல்லும் எண்ணமும் இருக்கிறது. பார்க்கலாம். :)))))

    ReplyDelete
  19. வாங்க கோமதி அரசு, எல்லாக் கல்யாணங்களிலும் பெண்ணை மணமகன் மணமேடையில் முதல்முறையாகப் பார்க்க வேண்டும் என்று நானும் படித்துத் தெரிந்து கொண்டேன். நீங்களும் சொல்லிவிட்டீர்கள். நன்றிங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  20. அப்பாதுரை, எதுவுமே அர்த்தம் இல்லாமல் செய்யலை. இல்லையா?

    ஆமாம், பெண்ணை மதிக்கும் இந்தியா இன்று தரம் கெட்டதாக மாறிக்கொண்டு வருகிறது. நேற்று ஆக்ராவில் ஒரு இங்கிலாந்து சுற்றுலா யாத்ரிகப் பெண்ணை ஹோட்டல் மானேஜர்/ஹோட்டல் சொந்தக்காரர் மானபங்கப் படுத்த முயன்று அந்தப் பெண் இரண்டாம் மாடியிலிருந்து குதித்துத் தப்பி இருக்கிறார். காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏன் இப்படி கொடூரமாக ஆண்கள் அலைகின்றனர் என்பதே புரியவில்லை! :((((((

    ReplyDelete

  21. வேறு எதற்காக இருந்தாலும் அவை எல்லாம் இரண்டாம் , மூன்றாம் பட்சக் காரணங்களே.

    ReplyDelete

  22. மாறுபட்ட கோணங்கள் இருக்கிறதுஎன்று தெரிவிக்கவே என் பதிவை அனுப்பினேன். திருமணங்களை வெறும் சடங்காகப் பார்க்கும் கண்ணோட்டம் கூடாது என்று நினைக்கிறேன். என் பதிவைப் படித்துக் கருத்து எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  23. குருமூர்த்தி சொல்லவில்லை. எனினும் வேறு சில இடங்களில் ஒரு ஒப்பீடு படித்தேன். நிறைய பேருக்குக் கோபம் வரும். ஒரு சர்வே எடுத்துப் பார்த்தால் இந்த அக்கிரமம் இந்தியாவில்தான் குறைவான சதவிகிதமாம். குறைவு என்றாலும் தப்புதான்.

    ReplyDelete
  24. வாங்க ஜிஎம்பி சார், ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சிருஷ்டிக்கும், அவரவர் வம்ச விருத்திக்கும் என்பதும் திருமணத்துக்கு ஒரு காரணமே தவிர, அதுவே முக்கியக் குறிக்கோள் இல்லை என்பதே என் கருத்து. தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி. தவறாமல் வந்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  25. //குருமூர்த்தி சொல்லவில்லை. எனினும் வேறு சில இடங்களில் ஒரு ஒப்பீடு படித்தேன். நிறைய பேருக்குக் கோபம் வரும். ஒரு சர்வே எடுத்துப் பார்த்தால் இந்த அக்கிரமம் இந்தியாவில்தான் குறைவான சதவிகிதமாம். குறைவு என்றாலும் தப்புதான்.//

    ஸ்ரீராம் சொல்வதை ஆமோதிக்கிறேன். இது குறித்த என் கருத்தும் எழுதினால் யாராலும் தாங்க முடியாது. தப்பே ஆனாலும் அதற்குக் காரணம் நாமே என்பது சுடும் உண்மை!

    ReplyDelete

  26. சிருஷ்டிக்கு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் போதும். திருமணம் என்ற சடங்கு இவர்கள் சேர்ந்து இயங்க சமூகம் கொடுக்கும் ஒரு அங்கீகாரம் என்பதே என் கருத்து. இவர்கள் பெற்றுப் போடும் பிறவிகளுக்கு பொறுப்பேற்கவைக்க அது ஒரு லைசென்ஸ்.அதை பலவிதமான வியாக்கியானங்கள் மூலம் இல்லை என்று சொல்வது உண்மை நிலையை மறுக்கும் ஒரு வாதமே. procreation is the essence of living beings. அது தவறு இல்லையே. ஏன் மறுக்கவேண்டும். ?

    ReplyDelete
  27. நான்கைந்து நாட்களாக விருந்தினர் வருகையால் எதுவும் எழுத முடியவில்லை. அதுக்கு முன்னாடி யுபிஎஸ் கலாட்டா. கிட்டத்தட்டப் பத்து நாட்களாக கணினி கிட்டே அதிகம் வராமல் சும்ம்ம்மா முக்கியமான மடல்கள் மட்டும் பார்க்கப்பட்டது ஒரு சாதனை! :)))))))

    இவ்வளவு சிரமகளுக்கும் மத்தியில் உங்கள் படைப்பாற்றல் கண்டு வியந்தேன் !வாழ்த்துக்கள் அருமையான விசயங்களைத் தொடர்ந்தும் பதிவிடும் உங்கள்
    படைப்பாற்றல் ஓங்குக !....மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  28. குறைவான சதவிகிதம் இந்தியாவில் என்பது அப்பட்டமான பொய்.... இது நம் கண்களை நாமே மூடிக் கொள்வதற்குச் சமம்.
    பலாத்காரங்கள் எல்லா ஊர்களிலும் நடக்கின்றன.. எல்லாரும் மனிதர்கள் தான்.. ஆனால் இந்த அளவு மிருகத்தனம்.. ஓடுகிற பஸ்சில் மணிக்கணக்கில்... இதெல்லாம் இந்தியாவில் தான்.. ஒப்பீடுகளுக்கு அப்பாலானவை இவை.. எத்தனை குருமூர்த்திகள் அமெரிக்காவைப் பழி சொன்னாலும் இவை நடப்பதென்னவோ இந்தியாவில் தான்.

    ReplyDelete
  29. //சிருஷ்டிக்கு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் போதும். திருமணம் என்ற சடங்கு இவர்கள் சேர்ந்து இயங்க சமூகம் கொடுக்கும் ஒரு அங்கீகாரம் என்பதே என் கருத்து. இவர்கள் பெற்றுப் போடும் பிறவிகளுக்கு பொறுப்பேற்கவைக்க அது ஒரு லைசென்ஸ்.அதை பலவிதமான வியாக்கியானங்கள் மூலம் இல்லை என்று சொல்வது உண்மை நிலையை மறுக்கும் ஒரு வாதமே. procreation is the essence of living beings. அது தவறு இல்லையே. ஏன் மறுக்கவேண்டும். ?//

    சிருஷ்டி மட்டுமே திருமணத்தின் நோக்கம் இல்லை என்பதே நான் கூறுவது. வாதமெல்லாம் இல்லை. இப்போதெல்லாம் ஆணும், பெண்ணும் இணைவதே இதற்குத் தான் என்றாகி விட்டது. போகட்டும், அடுத்த பதிவுகளையும் படியுங்கள். போகப்போகப் பார்க்கலாம். :))))))

    ReplyDelete
  30. அம்பாளடியாள், பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. அடிக்கடி வாங்க. :))))

    ReplyDelete
  31. //குறைவான சதவிகிதம் இந்தியாவில் என்பது அப்பட்டமான பொய்.... இது நம் கண்களை நாமே மூடிக் கொள்வதற்குச் சமம்.//

    இருக்கலாம், புள்ளி விபரங்கள் கூறுவதைத் தான் நானும் சொல்லி இருக்கேன். :))))


    //பலாத்காரங்கள் எல்லா ஊர்களிலும் நடக்கின்றன.. எல்லாரும் மனிதர்கள் தான்.. ஆனால் இந்த அளவு மிருகத்தனம்.. ஓடுகிற பஸ்சில் மணிக்கணக்கில்... இதெல்லாம் இந்தியாவில் தான்.. ஒப்பீடுகளுக்கு அப்பாலானவை இவை.. எத்தனை குருமூர்த்திகள் அமெரிக்காவைப் பழி சொன்னாலும் இவை நடப்பதென்னவோ இந்தியாவில் தான்.//

    நிச்சயமா, இந்தியாவில் தான் வக்கிரங்கள் நடக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை. :((( எல்லாமே மோசமானதுக்குக் காரணம் மீடியா, புத்தகங்கள், சினிமா, தொலைக்காட்சி என்று எத்தனையோ காரணம். இங்கே சுயக் கட்டுப்பாடு என்பதே இல்லை. சுயக் கட்டுப்பாடு இருந்தால் தான் இதெல்லாம் குறைய ஆரம்பிக்கும்.

    ReplyDelete
  32. பல விடயங்கள் தெரிந்து கொள்கின்றோம்.

    ReplyDelete
  33. நல்ல விஷயங்களை சொல்ல ஆரம்பித்து இருக்கிறீர்கள்.
    பலரும் கொடுக்கும் மறுமொழிகள் இன்னும் நிறைய விஷயங்களை தெளிவாக்குகின்றன.

    காலம் மாறிவிட்டது என்பதைவிட மனங்களின் மாற்றம் என்று சொல்லலாமோ?

    ReplyDelete