எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 11, 2013

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, அலர்மேல் மங்கை மகிழும் மணாளா!

சுமங்கலிப் பிரார்த்தனையில் புடைவை வைக்கும் கலத்தில் வீட்டில் உள்ள அனைவரின் நகைகளும் போட்டு அலங்கரிப்பதோடு திருமணப் பெண் வீட்டில் என்றால் பெண்ணின் நகைகளும், பிள்ளை வீட்டில் என்றால் கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கி இருந்தால் அதுவும், கூறைப்புடைவையும் வழிபாட்டில் வைக்கப்படும்.  இது எல்லாருக்கும் வழக்கம் இல்லை.  மிகச் சிலர் வீடுகளில் மட்டுமே வழக்கமாக இருக்கிறது.  ஆனால் வீட்டினரின் நகைகளைப் போட்டு அலங்கரிப்பது உண்டு.  மேலும் தஞ்சை ஜில்லாவில் அத்தைக்குப் புடைவை கொடுத்த பின்னர் அந்தப் புடைவையை அவர் கட்டிக் கொண்டு வந்து அனைவரும் நமஸ்கரித்த பின்னர் புடைவையை அவரிடம் அன்றே கொடுப்பதில்லை.  அவர் புடைவையை மாற்றிய பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனையில் வழிபட்ட புடைவையைக் கொடியில் போடுவார்கள்.  அன்றிரவு முழுதும் அந்தப் புடைவை கொடியில் இருக்கும்.  குடும்பத்துச் சுமங்கலிகள் அனைவரும் அன்றிரவு வந்து அந்தப் புடைவையை எடுத்துக் கட்டிக்கொள்வதாக ஐதீகம்.


அடுத்து சமாராதனை.  பொதுவாக வெங்கடாசலபதி சமாராதனையே நடைபெறும்.  என்றாலும் மிகச் சிலர் வீடுகளில் அவரவர் குல தெய்வ ஆராதனையையே சமாராதனையாக நடத்துவார்கள். இது சனிக்கிழமைகளிலேயே நடைபெறும்.  என்றாலும் பல சமயங்களிலும் கல்யாணம் நடைபெறப் போகும் கிழமையைப் பொறுத்து திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் வைப்பார்கள்.  சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்பவர்கள் கல்யாணத்திற்குச் சில நாட்கள் முன்னர் வரும் சனிக்கிழமையில் செய்துவிடுவார்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வீட்டுக்கு வீடு சமாராதனை நடைபெறும். சாப்பாடு வருபவர் எல்லாருக்கும் போடுவார்கள்.  சமாராதனைச் சாப்பாடு என்றே விசேஷமாகச் சொல்லப் படும்.

சாப்பாடு மெனு: சர்க்கரைப் பொங்கல்(இது தான் மிக முக்கியம்) தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, வாழைக்காய்ப் பொடிமாஸ் அல்லது பொடி போட்ட கறி,  அவரைக்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்களில் தேங்காய் போட்ட கறி ஒன்று, பருப்பு உசிலி பீன்ஸ் அல்லது கொத்தவரையில். அவியல். அவியல் இல்லை எனில் கத்தரிக்காய்ப் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும். ஒரு கலந்த சாதம், சனிக்கிழமை எனில் எள்ளுச் சாதம் தான் இருக்கும். அப்பளம் வீட்டில் செய்தது எனில் சேர்ப்பார்கள்.  சேனை அல்லது உருளை வறுவல், உளுந்து வடை,  ஊறுகாய் அன்று புதிதாய்ப் போட்டது, அவியல் என்றால் சாம்பார். பிட்லை என்றால் மோர்க்குழம்பு எனச் செய்வார்கள். ரசம், மோர்.  அன்று காலையே வழிபாடு நடைபெறும் இடத்தில் அல்லது பூஜை அறையில் என்றால் அங்கே மாக்கோலம் போட்டு படங்களைத் துடைத்துப்புஷ்பங்கள் சார்த்தி அலங்காரம் செய்வார்கள்.  பூஜைக்கு வேண்டிய மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி, சந்தனம், உதிரிப் பூக்கள், மாலை, துளசி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் போன்றவை தயார் செய்வார்கள்.  


சில வீடுகளில் வெங்கடாசலபதிக்கும் மாவிளக்குப் போடுவதுண்டு.  அவர்கள்  மாவு இடித்து, வெல்லம், ஏலக்காய் கலந்து தயார் செய்து வைப்பார்கள்.  சாஸ்திரிகள் தான் வந்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தது.  அதிலும் முன்னெல்லாம் நான்கு அல்லது ஐந்து வைதீகர்கள் வந்து சங்கல்பம் சொல்லி, வீட்டினரின் கோத்திரம், பெயர், நக்ஷத்திரங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு அனைவரின் பெயரையும் சொல்லிச் சங்கல்பம் செய்து வைத்து, சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம் சொல்லிப் பூக்களாலும், துளசியாலும் அர்ச்சனை செய்வார்கள்.  இப்போது யாரும் வருவதில்லை.  வந்தாலும் வீட்டிலேயே சமைத்தாலும் வைதீகர்கள் சாப்பிடுவதில்லை. ஆகவே வீட்டு எஜமானரே சஹஸ்ரநாமம் படித்துப்பூஜை செய்து, அக்கம்பக்கத்து நண்பர்கள், உறவினர்கள் இவர்களில் ஐந்து ஆண்களை அல்லது நான்கு ஆண்களை வைதீகர்களாக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டு முதல் பந்தியில் அமர வைப்பார்கள்.  இதற்கும் பொண்டுகள் முன்னாடி வைதீகர்களோடு சேர்ந்து சாப்பிட அமர வைப்பது உண்டு.  அதற்கு அலர்மேலு மங்காப் பொண்டுகள் என்று பெயர்.  சுமங்கலியை எண்ணெய்தேய்த்துக் குளிக்கச் செய்து, மடிசார் கட்டும் வழக்கம் இருந்தால் மடிசாருடன் பூஜை செய்து கொண்டிருக்கும்  சுவாமி படம் இருக்கும் இடம்/அல்லது பூஜை அறையில் வலப்பக்கமாகக் கோலம் போட்டு இலை போடுவார்கள்.  அன்று அந்தப் பெண்மணி அலர்மேல் மங்கையாக அவதாரம் எடுத்திருப்பார்.  வைதீகர்களோடு சேர்ந்து அந்தப் பெண்மணிக்கும் சாப்பாடு போடுவார்கள்.

சாப்பாடு முடிந்து வைதீகர்கள் ஆசீர்வாதம் பண்ணி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தக்ஷணை கொடுத்து முடிந்ததுமே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். கூடவே அலர்மேல் மங்காவுக்கும் அதே போல் வெற்றிலை, பாக்கு, தக்ஷணை உண்டு. இது எல்லாம் முடிஞ்சு அநேகமாய் மறுநாளே சத்திரத்துக்கு அல்லது கல்யாணம் நடக்கும் வீட்டுக்குப்போகிறாப் போல் அமையும்.  ஆகவே நாமும் அடுத்துப் போகப் போவது கல்யாணச் சத்திரத்துக்கே. 

12 comments:

  1. சுமங்கலிப்பிரார்த்தனை இனிதே நடைபெற்று முடிந்ததில் மகிழ்ச்சி.

    ஸ்ரீ வேங்கடாசலபதி சமாராதனை பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

    [போளி, வ்டை, சர்க்கரைப்பொங்கல், சுண்டல் போன்ற ஒரு பிரஸாதமும் இன்னும் வந்து சேரவில்லை ;(]

    ஸ்ரீநிவாஸா கோவிந்தா

    ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா !!

    புராண புருஷா கோவிந்தா

    புண்டரிகாக்ஷா கோவிந்தா !!

    ReplyDelete
  2. புரட்டாசி மாத சனிக்கிழமை சமாராதனைச் சாப்பாடு இன்னும் இங்கு தொடருவதுண்டு...

    ReplyDelete
  3. கொடியில் புடைவை போட்டு வைத்து இரவு முழுவதும் சுங்கலிகள் அதை எடுத்துக் கட்டுவது போன்ற விஷயம் எல்லாம் புதிது. எல்லாம் படித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. நானும் ரெடி.... கல்யாணம் நடக்கும் சத்திரத்துக் போகத்தான்!

    ReplyDelete
  5. சமாராதனை சிறப்பாக நடைபெற்றது. மெனுவும் குறித்துக் கொண்டேன்.

    அலர்மேல் மங்கை பொண்டுகள் தகவல் புதிது.

    மாவிளக்குக்கும் இங்கு திரியை திரித்து போடுவதில்லை. வட்டமாக பஞ்சை வைத்து கொண்டு அதில் நடுப்பகுதியை கொஞ்சம் திரித்து விட்டு தான் ஏற்றுவார்கள்.

    சத்திரத்துக்கு போக தயாராகிட்டோம்..

    ReplyDelete
  6. வாங்க வைகோ சார், பிரசாதம் வேணுமா? ஹிஹிஹி! பார்க்கிறேன். போளி, வடை, சுண்டல் கிடைச்சுடும், பழைய பதிவுகளில் இருந்து. சர்க்கரைப் பொங்கல் படம் எடுக்கலை. வேறே யாரானும் போட்டிருக்காங்களானு பார்க்கணும். :))))))

    ReplyDelete
  7. வாங்க டிடி, எங்க வீடுகளிலேயும் வைதீகர்கள் வரலைனால் கூட வீட்டு வரைக்கும் சஹஸ்ரநாமம் படித்து நிவேதனம் செய்து விநியோகிப்போம். நன்றிப்பா.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், அது தஞ்சை ஜில்லாவில் மட்டுமே உண்டுனு நினைக்கிறேன். என் புகுந்த வீட்டிலேயும் இன்னும் என் பெரியம்மா(அவங்க வாழ்க்கைப்பட்டது குன்னியூர்) வீட்டிலேயும் இன்னும் சில வீடுகளிலேயும் கேள்விப் பட்டிருக்கேன். :))))

    ReplyDelete
  9. வாங்க வெங்கட், தங்கறது அறை வேணுமா? நீங்க பிள்ளை சைடா, பெண் சைடா? அதுக்குத் தகுந்தால் போல் அறை(!!!) ஏற்பாடு செய்யப்படும். :)))))

    ReplyDelete
  10. வாங்க ஆதி, மாவிளக்குத் திரியே பருத்திப் பஞ்சை நன்கு திரித்துக் கீழே வட்டமாகவும், மேலே நுனி திரி நூல் போலவும் அப்போது புதிதாகத் திரித்துத் தான் போடுவார்கள். என் அம்மா வீட்டில் நல்ல வெள்ளைப் பருத்தித் துணியை மஞ்சளில் நனைத்துக் கொண்டு, நடுவில் அரிசி, பருப்பு வைத்து முடிச்சாகக் கட்டுவார்கள். அந்த முடிச்சின் நுனியைத் திரி போல் ஆக்கி, முடிச்சு மூழ்கும்வரை நெய்யை ஊற்றிக் கொண்டு திரியையும் நெய்யில் நனைத்து மாவிளக்குப் போடுவார்கள். திரி எரிந்து முடிச்சின் அருகே வந்துவிட்டால் தீபம் மலை ஏறிவிட்டது எனக் கூறி அதை மெதுவாக அணையாமல் எடுத்து இன்னொரு தாம்பாளத்தில் அல்லது காலியாக இருக்கும் வேறொரு விளக்கில் வைக்க வேண்டும். என் புகுந்த வீட்டிலும் கீழே உள்ள வட்டத்துக்குத் திரி எரிந்து வரும்வரை காத்திருந்து பின் எடுத்து வேறொரு விளக்கில் போடுவோம். கோயிலில் மாவிளக்குப் போட்டால் கோயிலிலேயே உள்ள வேறொரு விளக்கில் போடுவோம். இப்போது தயார் நிலையில் மாவிளக்குத் திரிகள் கிடைக்கின்றன.

    ReplyDelete
  11. சமாராதனை எனக்கு புதியதகவல்.

    சத்திரத்துக்கு வருகின்றேன்.

    ReplyDelete
  12. வாங்க மாதேவி, இங்கே விதவிதமான சமாராதனைகள் உண்டு. அவற்றில் இந்த வெங்கடாசலபதி சமாராதனையும், கார்த்திகை மாதம் அஷ்டமி தினத்தில் நடைபெறும் வைக்கத்து அஷ்டமி சமாராதனையும் மிகவும் பிரபலம். அடுத்து மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு சமாராதனை நடைபெறும்.

    ReplyDelete