எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 15, 2013

பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!

பொதுவாகச் சத்திரம்/மண்டபம் பெண் வீட்டுக்கு அருகே தான் பார்ப்பாங்க. பிள்ளை வீட்டுக்காரங்க வெளியூர் எனில் அவர்களே கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் சத்திரம் வந்து சேரும்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள்.  இதைச் சிலர் பெண் வீட்டினரின் தலையிலும் கட்டுவதுண்டு.  பிள்ளை வீட்டினர் எத்தனை பேரோ அத்தனை பேருக்கும் கல்யாணத்திற்கு வந்து, திரும்பிப் போக ஆகும் செலவைப் பெண் வீட்டினர் ஏற்பது உண்டு.  இந்தச் செலவெல்லாம் இப்போது இல்லை என்றாலும் மிக அரிதாகப் பார்க்கவும் முடிகிறது.   எங்கள் நண்பர் ஒருத்தரின் பெண்ணிற்கு ஒரு பிள்ளையைப் பார்த்தார்கள்.  ஜாதகம் பொருந்தி, பிள்ளை, பெண்ணுக்கும் பிடித்துப் போய்விட்டது.  பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷன் என்னவென்றால் பிள்ளை இப்போது அமெரிக்கா திரும்பிவிடுவான்.  பின்னால் கல்யாணத்திற்குத் தான் வருவான்.  ஆகவே இப்போது திரும்பும் செலவு, மீண்டும் கல்யாணத்திற்கு வந்துவிட்டுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு திரும்பும் செலவு ஆகியவற்றோடு பெண்ணிற்கு விசா எடுக்கும் செலவு எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன்.  மூன்று பெண்களைப் பெற்ற அந்தத் தந்தை வேறு வழி இல்லாமல் அந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டார்.  பிள்ளைக்கு மூன்று வழி பயணச் செலவு, பெண்ணிற்குப் பிள்ளையோடு செல்லும்போது ஏற்படும் செலவு, விசாச் செலவு, கல்யாணச் செலவு என எக்க்கச்சக்கமாகச் செலவு ஆனது. வேண்டாம்னு வேறே வரன் பார்த்திருக்கலாமேனு கேட்டதுக்கு இப்போவே பெண்ணின் வயது 27 ஆகிவிட்டது. இன்னும் தாமதிக்கக் கூடாதுனு ஒத்துண்டோம்னு சொன்னார்.  இது சில வருடங்கள் முன்னர் நடந்தது.

பெண் வீட்டினர் செல்வதற்கு முன்னர் சமையல்காரர்கள் அங்கே சென்றுவிடுவார்கள். பெண் வீட்டில் இருந்து விஷயம் தெரிந்த யாரேனும் அங்கே சென்று சமையல்காரர்களுக்கு மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். சமையல்காரர்களும் அவர்கள் எந்த அளவிற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள்.  காடரிங் கல்யாணம் இல்லை எனில் சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மற்றப் பொருட்கள் வாங்கிச் சேமித்து வைத்திருக்கும் அறையை முக்கியமான நம்பகமான ஆள் ஒருத்தரை முன்னாலேயே போய் சாமான்களை எல்லாம் லிஸ்ட் படி வாங்கிச் சரிபார்த்து வைக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்கள்.  அந்த அறையின் சாவி அவரையும் இன்னொரு நம்பகமானவரையும் தவிர மறந்தும் கல்யாணப்பெண்ணின் தாய், தந்தையிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.  அவர்கள் இருக்கும் வேலை முசுவில் சாவியை எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள்.  ஒரு கல்யாணத்தில் சாவி கிடைக்காமல் உடைக்க வேண்டி ஆச்சு.

கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் தான் சத்திரம்/மண்டபம் செல்ல நல்ல நேரம் பார்த்திருப்பார்கள். சத்திரம் செல்லும் முன்னர் இரு வீட்டினரும் அரிசியை ஊற வைத்து அரைத்து மாக்கோலம் போட்டு வைப்பார்கள். பிள்ளை வீட்டினர் உள்ளூராக இருந்தால் அவர்கள் சத்திரம் வரும் முன்னர் பெண் வீட்டினர் அங்கே சென்றுவிட வேண்டும்.  பிள்ளை வீட்டினர் வெளியூராக இருந்தால் அதிகாலையில் வருகிறாப்போல் ஏற்பாடுகள் பண்ணி இருப்பாங்க.  ஆகவே பெண் வீட்டினர் முதல்நாள் இரவே போய்விடலாம். எங்க பொண்ணுக்கு வெள்ளிக்கிழமை கல்யாணம்.  வியாழக்கிழமை அதிகாலை 5-15 மணிக்கு நல்ல நேரம் பார்த்திருந்தோம்.  பிள்ளை வீட்டினர் மும்பையாக இருந்தாலும் இரண்டு நாட்கள் முன்னரே வந்து மாம்பலத்தில் தங்கி இருந்தனர்.  அவர்களை ஏழரைக்கு எமகண்டத்துக்குப் பின்னர் போய் அழைத்து வந்தோம். எங்க பையருக்கு ஞாயிறன்று கல்யாணம். ஆனால் அந்த வருடம் எக்கச்சக்கமாக அடித்த புயலினாலும், மறுநாள் சனிக்கிழமை அன்று புதியதொரு புயல் நாமகரணம் செய்யப்பட்டிருந்ததாலும் வெள்ளி இரவே வந்திருந்த உறவினரோடு சத்திரத்துக்குப் போய்விட்டோம்.  பெண் வீட்டினரிடமும் தெரிவித்துவிட்டோம்.  அவர்களும் ஒத்துக்கொண்டனர்.  மறுநாள் தான் தெரிந்தது அது எத்தனை நல்லது என்று.  மறுநாள் ஏதோ திடீர் பந்த் நடக்க கல்யாணத்துக்கு வரவேண்டிய மற்ற உறவினர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  அதோடு மழை வேறு.

பொதுவாகக் கல்யாணம் உத்தராயணத்திலேயே வைப்பார்கள்.  தை மாதத்தில் ஆரம்பித்து, ஆனி மாதத்தோடு கல்யாணங்கள் முடிந்துவிடும்.  பின்னர் ஆவணி பரவாயில்லை என ஆரம்பித்து இப்போதுக் கடந்த பத்து வருடங்களாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் திருமணங்கள் நடக்கின்றன.  இந்த மாதத் திருமணங்களின் நாயகன், நாயகியர் பெரும்பாலும் வெளிநாட்டு வாசிகளாகவே இருப்பார்கள்.  என்றாலும் இப்போது உள்நாட்டினரும் செய்கின்றனர்.  வட மாநிலங்களிலும் இந்தக்கலாசாரம் பரவி உள்ளது.  ஆச்சு, நம்ம விஷயத்துக்கு வருவோம். சத்திரத்துக்குப் போய்ச் சேருவோம்,  பெண் வீட்டினரோ, பிள்ளை வீட்டினரோ சத்திரம் கிளம்பும் முன்னர் யாத்ரா தானம் என்ற ஒன்றைப் பண்ண வேண்டும். பொதுவாகக் கல்யாணப் பிள்ளை மட்டுமே செய்யும் இது இரு வீட்டினரும் செய்யலாம்.  பெண்ணின் சார்பில் பெண்ணின் தந்தை செய்யலாம். கல்யாணம் பண்ணி வைக்கக் கூடவே வரும் சாஸ்திரிகளே இதைப் பண்ணி வைப்பார். சாஸ்திரிகள் இப்போதெல்லாம் கூட வருவது என்பது பிள்ளை வீட்டினர் வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே கூடவே அழைத்துவருவதோடு இருக்கிறது.  உள்ளூராக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு சடங்குக்கும் அந்த நேரத்துக்குத் தான் வருகின்றனர்.

யாத்ராதானம் உள்ளூராகவே இருந்தாலும் சுப காரியங்கள் தொடங்கும் முன்னர் வேதம் படித்தவர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு ஆரம்பிப்பது மிக நல்லது. பெண் வீட்டுக்காரங்க முன்னால் போய் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.  இது பெண் வீட்டுக்காரங்க எடுத்து நடத்தும் கல்யாணங்களில் பொதுவாகக் காணப்படுவது.  சில சமூகங்களில் பிள்ளை வீட்டினர் கல்யாணச் செலவை ஏற்பார்கள்.  அப்போது பெண் மேள, தாளத்தோடு, சீர் வரிசைகளை உறவினர்கள் ஏந்திவரக் குதிரைகள் பூட்டிய சாரட்டிலோ, காரிலோ அழைத்து வரப்படுவாள். அதற்கு முன்னர் பெண்ணிற்குப் பெண் வீட்டிலும், பிள்ளைக்குப் பிள்ளை வீட்டிலும் முக்கிய உறவின்முறையினர் அலங்கரித்து அமர வைத்து நலுங்கு வைப்பார்கள். பின்னர் பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினரில் மூன்று சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்திக்குப் பணம் போடுவது உண்டு.  பணம் இத்தனை வேண்டும் என ஆரத்தி எடுக்கும் முக்கிய உறவின் முறைப் பெண்கள் கேட்டு வாங்கிக் கொள்வதும் உண்டு. ஆயிற்று.  இப்போது நம்ம கல்யாணத்தில் பெண் வீட்டினர் முன்னாடி வந்தாச்சு.  எல்லாரும் சாமானைத் தூக்கிண்டு உள்ளே போகிறாப்போல் கல்யாணப் பெண் போக முடியாது.  அவளை ஆரத்தி எடுத்து சுற்றிக் கொட்டி வலக்காலை முன் வைத்து வரச் சொல்லுவார்கள்.  இப்போதெல்லாம் இந்த ஆரத்தி வேலையையும் காடரிங்காரர்கள் பொறுப்பில் இருந்தாலும் ஆரத்தி எடுக்கப் பெண்ணின் அத்தை, மாமி, பாட்டி சுமங்கலியாக இருந்தால் பாட்டி என அழைக்கப்படுவார்கள். இது எல்லாம் கல்யாணத்திற்கு முதல்நாள் ஆரத்திக்கு.  மறு நாள் ஆரத்திக்கு பிள்ளை வீட்டினர் ஒருத்தர், பெண் வீட்டினர் ஒருத்தர் என எடுக்க வேண்டும் என்பது எழுதப் படாத சட்டம்.

அடுத்து மாப்பிள்ளை வரப் போகிறார் தயாராக இருக்கவும்.  மாப்பிள்ளை வந்ததும் விரதம் ஆரம்பிக்கும்.  நாந்தியெல்லாம் உண்டு. ஆகவே ரொம்பப் பசிச்சால் டிபன் சாப்பிட்டுடுங்க.  பெண், பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க கோத்திர தாயாதிகள், பையர், பையரின் அப்பா, அம்மா, கோத்திர தாயாதிகள் சாப்பிட முடியாது.   எல்லாம் முடிஞ்சதும் மத்தியானமாத் தான் சாப்பாடு! :))))மத்தவங்க டிபன் சாப்பிட்டுக்கலாம்.

படத்துக்கு நன்றி: ஹுசைனம்மா! :))))))

27 comments:

  1. // பெண், பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க கோத்திர தாயாதிகள், பையர், பையரின் அப்பா, அம்மா, கோத்திர தாயாதிகள் சாப்பிட முடியாது. எல்லாம் முடிஞ்சதும் மத்தியானமாத் தான் சாப்பாடு! :))))//

    நாந்து ஸ்ரார்த்தம் என்று சொல்லி முக்கியமானவர்களை பட்டினி போட்டு விடுவார்கள்.

    மற்றவர்கள் எல்லா டிபனையும் வெளுத்துக்கட்டுவார்கள். ;)))))

    நல்லா எழுதுறீங்க.

    >>>>>

    ReplyDelete
  2. தலைப்பு அருமையாக உள்ளது.

    //"பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!"//

    இப்போதெல்லாம் மாட்டு வண்டி, பொட்டி வண்டி எதையுமே பார்க்க முடிவது இல்லை.

    சுவாரஸ்யமான பகிர்வுக்கு நன்றிகள்>

    ReplyDelete
  3. ரொம்ப நன்னா இருக்கு மாமி. இந்த கல்யாண பதிவுகள். ஏதோ நம்ப ஆத்து கல்யாணம் attend பண்ணறா மாதிரி இருக்கு

    ReplyDelete

  4. ஒரு கற்பனை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பிள்ளை வீட்டார் “ திருமணம் சம்பிரதாயப்படிதான் நடக்கணும்”
    பெண் வீட்டார், “ அது பற்றி எங்கள் யாருக்கும் தெரியாதே”
    பிள்ளை வீட்டார். “ திருமதி. கீதா சாம்பசிவம் பதிவுகளில் எழுதியதை கூகிளில் போய்த் தேடிப் பாருங்கள். எல்லாம் விலாவாரியாக இருக்கும். “( in lighter vein )

    ReplyDelete
  5. யாத்ராதானம் இப்போது நடைபெறுகிறதா என்று தெரியவில்லை... தெரிந்து கொண்டேன்... நன்றி...

    நாந்தி என்றால் குடும்ப முன்னோர்களின் நினைவாக செய்யும் சடங்கு தானே...? மாப்பிள்ளை வருவதற்கு டிபன் சாப்பிட்டு விடுகிறேன்... ஹிஹி...

    ReplyDelete
  6. நான் ஆவணியில் திருமணம் செய்தவன்!

    யாத்ராதானம் புதிது. கேள்விப் பட்டதில்லை. சில விளம்பரங்களில் பெண் வீட்டினுள் நுழையும்போது தானியப் பாத்திரம் ஒன்றையோ, பால் பாத்திரம் ஒன்றையோ காலால் இடறி விட்டு நுழைவது போலப் பார்த்த ஞாபகம்! அது என்ன?

    பின்னர் வருமோ!

    ReplyDelete
  7. ஆஹா பொண்ணு வந்தாச்சா.....

    பொட்டி வண்டியில வந்ததுனால பார்க்க முடியல! அதான் கல்யாணத்துக்கு வரப் போறேனே, அப்ப பார்த்துக்கறேன்! :)

    ReplyDelete
  8. அட்டகாசமான கமென்ட் ஜிஎம்பி சார்.

    ReplyDelete
  9. சாமான்களை எல்லாம் லிஸ்ட் படி வாங்கிச் சரிபார்த்து வைக்கச் சொல்லி அனுப்பி வைப்பார்கள். அந்த அறையின் சாவி அவரையும் இன்னொரு நம்பகமானவரையும் தவிர மறந்தும் கல்யாணப்பெண்ணின் தாய், தந்தையிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் இருக்கும் வேலை முசுவில் சாவியை எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள். ஒரு கல்யாணத்தில் சாவி கிடைக்காமல் உடைக்க வேண்டி ஆச்சு.//

    நல்ல உபயோகமான குறிப்பு.

    ReplyDelete
  10. வாங்க வைகோ சார், ஆமாம், நாந்தி சிராத்தம் என்பதால் சிலர் மடியாகத் தனி சமையல் கூடச் சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவாங்க. :)))))

    ReplyDelete
  11. //இப்போதெல்லாம் மாட்டு வண்டி, பொட்டி வண்டி எதையுமே பார்க்க முடிவது இல்லை.//

    அம்பத்தூரிலேயே பார்த்திருக்கேன். இன்னமும் இருக்கின்றன. அதுவும் கிராமங்களில் அடியோடு காணாமல் போகவில்லை.

    நான் கல்யாணம் ஆகி முதல் முதல் புகுந்த வீடு சென்றபோது இரட்டை மாடுகள் பூட்டிய கூண்டு வண்டியில் தான் சென்றேன். புதுசு என்பதால் மூங்கில் பாலத்தில் நடக்க வேண்டாம் என அக்கரைக்கே வண்டி வந்திருந்தது. வண்டியை ஆற்றில் இறங்கித் தள்ளினார்கள். அதெல்லாம் புதுசாக இருந்தாது. ஆனால் வைகாசி மாசம் என்பதால் அரசலாற்றில் தண்ணீர் இல்லை. ஒரே வெண்மணல்! இப்போப் பார்க்கையில் கண்ணில் ரத்தம் வருகிறது.

    ReplyDelete
  12. வாங்க சுபாஷிணி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. வாங்க ஜிஎம்பி சார், அடைப்புக்குறியே தேவை இல்லை. இதை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். நன்றி. :))))

    ReplyDelete
  14. வாங்க டிடி, போன நவம்பரில் நடந்த அண்ணா பையர் கல்யாணத்திலும் யாத்ரா தானம் இருந்தது. எங்க வீடுகளில் கட்டாயமாய் வைச்சிருக்கோம். :))) நாந்தி முன்னோரை நினைவு கூர்தல் தான். பிள்ளைவீட்டுக்காரங்க வந்ததும் அவங்களோட தேவையை நீங்க தான் பார்த்துக்கணும். சீக்கிரமா டிஃபன் சாப்பிட்டுடுங்க. :))))

    ReplyDelete
  15. வாங்க ஶ்ரீராம், ஆவணிக் கல்யாணம் எங்க வீடுகளிலேயும் ஆரம்பிச்சுப் பல வருடங்களாகி விட்டன. :)))) எப்போனு சொல்ல முடியலை. ஆனால் ஆரம்பிச்சு ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் இருக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. யாத்ராதானம் செய்திருப்பீங்க. நினைவிருந்திருக்காதுனு நினைக்கிறேன்.நீங்க சொல்வது வங்காளம், ஆந்திராவின் ஒரு பகுதி, ஒரிசாவில் போன்ற மாநிலத்தின் சம்பிரதாயம். வங்காளத்தில் சாவியைத் தூக்கித் திரும்பிப் பார்க்காமல் எறியும் வழக்கமும் உண்டு. :))))

    ReplyDelete
  17. பொதுவாக வெளியூர் போனாலே ஒரு காலத்தில் யாத்ரா தானம் செய்திருக்கின்றனர். பின்னர் புண்ய ஸ்தல யாத்ரைக்கு என்று வந்து அதன் பின்னர் பிள்ளை திருமணத்திற்கு பிள்ளை யாத்ராதானம் செய்வது என்றாகி விட்டது. ஆனால் ஶ்ரீமடங்களில் ஆசாரியர்கள் யாத்ரா தானம் செய்த பின்னே யாத்திரை புறப்படுவார்கள். அதோடு கும்பாபிஷேஹம் போன்ற புண்ய காரியங்களிலேயும் யாத்ராதானம் உண்டு. யாத்ராதானத்திற்குப் பின்னரே கும்பாபிஷேஹ கடம் புறப்படும்.

    ReplyDelete
  18. வாங்க வெங்கட், பொண்ணு வந்தாச்சு. வெட்கமா இருக்காம். அதான் தனி அறையிலே இருக்காங்க. கல்யாணத்திலே பார்த்துக்கலாம். :))))

    ReplyDelete
  19. வாங்க அப்பாதுரை, வருகைக்கு நன்றி. இந்தியா வந்திருக்கீங்களா?

    ReplyDelete
  20. வாங்க கோமதி அரசு, தொடர்ந்து வந்து கருத்துப் பகிர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  21. குறைந்த பக்ஷமாகக் காசி, ராமேஸ்வரம் போகையிலாவது யாத்ராதானம் செய்துவிட்டுப் போகவேண்டும் என்பார்கள். பெண்கள் தனியாகச் சென்றாலும் அவர்களால் இயன்றதை வேதம் படித்த, தினம் வேதம் ஓதுகின்ற அந்தணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டே செல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம்.

    ReplyDelete
  22. எத்தனை ஏற்பாடுகள். அத்தோடு பெண்ணின் பெற்றோர் தலையில் ஏறும் அழுத்தம். எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்ற கவலை.:)

    இதற்காகவே நிறைய உறுப்பினர்கள் இருக்கும் குடும்பமாக இருக்க வேண்டும். இரண்டு அத்தைகள், இரண்டு பெரியம்மாக்கள், இரண்டு சுறு சுறு சித்திகள்,மாமிகள் என்று இருந்தால் வருபவர்களை உபசரிக்க,சாப்பாட்டு வேளையில் கூடவே போக என்று எத்தனை நபர்கள் இருந்தாலும் போதாது.
    அருமையான விவரங்கள் கீதா. உண்மையாகவே கல்யாணப் பத்திரிகை ஒன்றையும் போட்டு விடுங்கள்

    ReplyDelete
  23. வாங்க வல்லி, இப்போல்லாம் நிறைய உறுப்பினர்களுக்கு எங்கே போகிறது! :)))) கல்யாணப் பெண்ணிற்கே கூடப்பிறந்த சகோதரனோ, சகோதரியோ இருப்பது அரிதாக இருக்கிறது. அதே போல் பிள்ளைகளுக்கும் கூட ஒரு சகோதரனோ, சகோதரியோ இருப்பது அரிது. இப்போல்லாம் நண்பர்களுக்குத் தான் முன்னுரிமை. :))) உறவுகள் மறைந்து வருகின்றன.:)))))

    ReplyDelete
  24. யாத்ரா தானம் பற்றி தெரிந்து கொண்டேன்.

    என் அத்தை பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் என் அப்பா தான் மளிகை சாமான்கள், காய்கறிகள் வைத்திருக்கும் ரூமின் சாவியை வைத்துக் கொண்டு கண்காணித்து கொண்டார். என் கல்யாணத்தின் போது யாரும் உதவ இல்லாததால் காண்ட்ராக்ட் விட்டு விட்டோம்...:)

    எங்கள் கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்பன்று காலையிலே எங்களுக்கான விரதமும், திருமணத்தன்று அதிகாலையில் அவர்களுக்கான விரதமும் நடைபெற்றது.

    மாப்பிள்ளை வருவதற்குள் நானும் டிபன் சாப்பிட்டு விட்டு வருகிறேன்...:))

    ReplyDelete
  25. வாங்க கோவை2தில்லி, தாமதமா வந்திருக்கீங்க! ட்ரெயின் லேட்டா? :)))) ஒரு சிலர் நாந்தி செய்வதில்லை. அதனால் உங்க கல்யாணத்திலே கல்யாணத்தன்று காலை விரதம் மட்டும் வைத்திருப்பார்கள். விரதம் முடிந்து கையில் காப்புக் கயிறு கட்டினால் அப்புறமா வெளியே செல்லக் கூடாது என்றும் சொல்வார்கள்.

    ReplyDelete
  26. எங்கள் வழக்கத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் கல்யாணத்தன்று விரதம் இருப்பார்கள். மற்றவர்கள் விரதம் இருப்பதில்லை.

    ReplyDelete
  27. வாங்க மாதேவி, சில கல்யாணங்களில் பெண், பிள்ளைக்கு மட்டுமே விரதம். :))))) ஆனால் இங்கே இரு அப்பா, அம்மாக்களுக்கும் சேர்த்து.

    ReplyDelete