எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 31, 2014

இதற்குத் தான் இரண்டாம் பரிசு!

இந்தக்காலத்தில் மகனும், மருமகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே பெரும்பாலும் நினைக்கிறார்கள்.  இப்போதைய சூழ்நிலை நிறைய மாறி இருப்பதால் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் மகனின் சுக வாழ்க்கைக்குக் குறுக்கே முட்டுக்கட்டை போடுவதில்லை. நாற்பது வருடங்கள் முன்னர் வரை கூட மாமியாருக்கு மகன் மருமகளோடு தனித்திருப்பதைக் கண்டால் பொறாமை ஏற்பட்டு விடும்.  ஆனாலும் பேரன், பேத்தி என வந்துவிட்டால் மாறும் ஒரு சில மாமியார்களும் உண்டு.

பெற்றோருக்கு எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் பிள்ளைகளின் சுக வாழ்வே குறிக்கோளாக இருக்கும்.  அவன் திருமணமாகிய பின்னர் தங்களை விட்டு விட்டு மனைவியுடன் தனியாக வசித்தாலும் பெற்றமனம் அவனைத் திட்டாது.  எங்கோ ஆயுசோடு கிடக்கட்டும் என்றே நினைக்கும். அதிலும் மகன் வயிற்றுப் பேரன்/பேத்தி என்றால் கேட்கவே வேண்டாம்.  தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்.  மாறாகச் சிலர் பெண்ணின் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு மகனின் குழந்தைகளைக் கிட்டே சேர்க்காமல் இருப்பதும் உண்டு.  ஆனால் இந்தக் கதையிலோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப் பிழிந்து தருபவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வந்து தங்க நினைத்து மகனிடம் சொல்லி முதியோர் இல்லம் வந்துவிடுகின்றனர். இதில் மகனுக்கு அதிர்ச்சி கலந்த வருத்தம்.  காரணம் என்னமோ நல்லது தான். ஆனாலும்  பெற்றோர் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஜாதகத்தைக் காரணம் காட்டுவது இந்தக் காலத்திலும் அதை நம்புபவர்கள் இருப்பதையும் காட்டுகிறது.

ஜோசியர் கூட்டுக்குடும்பமாக இருக்கவேண்டாம், ஆபத்து வரும் எனச் சொல்லி இருக்கிறார் என்கின்றனர் பெற்றோர்.   ஆனால் உண்மையான காரணம் இது இல்லை என்பது நமக்கே புரிந்து விடுகிறது.   ஏனெனில் பெரும்பாலோர் கூட்டுக் குடும்பத்தையே ஆதரிப்பார்கள்.  உண்மையான ஜோசியர் இப்படிச் சொல்லி இருப்பாரா என்னும் சந்தேகம் நமக்குள் வருகிறது.  மகனுக்கோப் பெற்றவர்களைப் பிரிந்து இருக்க முடியவில்லை என்பது பெற்றோரிடம்  அவனுக்கு உள்ள அதீத பாசத்தைக் காட்டுகிறது. என்னதான் மணிகண்டன் மனைவியும் நல்லவளாகவே மாமனார் மாமியாரைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாலும், எப்போ என்ன வம்பு கிடைக்கும் என்று அலைகிற மக்கள் இந்தச் சிறிய தாற்காலிகப் பிரிவைக் கூடப் பெரிதாக்கி வம்பு பேசுகின்றனர்.  அவ்வளவு ஏன் அவள் பெற்றோரே தங்கள் மகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் கொஞ்சம் இடிக்கிறது.  ஆனால் மருமகளோ அதையும் தாங்கிக் கொள்கிறாள்.

ஒரு படுக்கை அறைகொண்ட சிறிய வீட்டில் கூட்டுக்குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் படித்ததுமே பெற்றோர் முதியோர் இல்லம் சென்ற காரணம் நமக்கும் புரிந்து விடுகிறது. தான் பெற்ற மகனாகவே இருந்தாலும் மனைவியோடு வெளியே செல்லும்போது முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும் அம்மாக்களே அதிகம்.  இந்த மாதிரியான உலகில் தன் பிள்ளை, மனைவியோடு சேர்ந்து சந்தோஷத்தை அனுபவித்துத் தங்கள் குலத்தை விருத்தி செய்வதற்காக ஒர் குழந்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக  ஒரு பெற்றோர் முதியோர் இல்லம் செல்வது வரவேற்கத் தக்க ஒன்றே. ஆனால் அதைப் பிள்ளையிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தால் முதியோர் இல்லத்துக்குச் செலவு செய்த காசில் கொஞ்சம் கூடப் போட்டு அப்படி, இப்படிக் கடன் வாங்கி இன்னொரு அறை கட்டி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.  ஏனெனில் கணவன், மனைவி வாழ்க்கை ஒரு குழந்தை பிறந்ததும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளோடு முடிவதில்லை கணவன், மனைவி இருவரின் பந்தமும், பாசமும்.  அதையும் தாண்டி இருக்கிறது.

அத்தகைய ஒரு நிலையை இந்தத் தம்பதிகளும் அனுபவிக்க வேண்டாமா?  ஆகையால் அவர்கள் தனியாகச் செல்வதற்கு பதிலாக மகனிடம் மெதுவாக எடுத்துச் சொல்லித் தங்கள் ஆசை நிறைவேற வேண்டுமானால் இன்னொரு அறை வேண்டும் எனக் கூறி இருக்கலாம்.  ஆனால் இம்மாதிரியான சங்கடமான சூழ்நிலை மும்பை, புனே போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.  அங்கே வீடு கிடைக்காத கஷ்டம்.  இங்கே வீடு சொந்த வீடாக இருந்தும் பொருளாதாரக் கஷ்டம். மகனுக்காக அவர்கள் செய்யும் தியாகம் இது என ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் நால்வருக்குள்ளாக வெளிப்படையாகப் பேசித் தீர்க்க வேண்டிய ஒன்றை  ஊரறியச் செய்திருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது.  ஆனாலும் இதன் மூலம் நன்மையே விளைந்தாலும் அக்கம்பக்கம் பேச்சுக்களினாலும், பெற்றோரின் உதாசீனத்தாலும் அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்!   அதோடு இல்லாமல் மாமியார், மாமனார் மேல் அவள் வைத்திருந்த மரியாதைக்கு நிச்சயமாகப் பங்கம் வந்திருக்கும்.  முன்பிருந்த சகஜநிலைமை இனியும் இருக்குமா என்பதே சந்தேகம்.  பெற்றோருக்கோ தங்கள் மகளின் மன நிலையே புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் உடல்நலம் சீர்கெடுவது இதனாலோ என எண்ணினால் இல்லை.  அவள் முதல்முறையாகக் கருவுற்றிருக்கிறாள்.   அதுவும் இரட்டைக்குழந்தையாக இருக்கலாம் என இரட்டிப்பு சந்தோஷத்தையும் கொடுக்கிறாள்.  ஆனாலும் மணிகண்டனுக்கு இந்த நேரம் பார்த்துத் தன் பெற்றோர் அருகே இல்லையே எனத் தோன்றப் பெற்றோரிடம் சென்று சொல்லி ஆலோசனை கேட்கிறான்.  மணிகண்டனின் பெற்றோர் செய்த தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் நினைத்தது நிறைவேறிய திருப்தியில் இதைச் சொல்ல வந்த பிள்ளையிடமும், மருமகளிடமும் தாங்கள் திரும்ப வீட்டுக்கே வருவதாகச் சொல்லி விடுகின்றனர்.  ஆனால் கடைசி வரை தாங்கள் வெளியே வந்த காரணத்தைச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். இனி எல்லாம் சுகமே!

விட்டுக் கொடுத்துப் போவதும், ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதும் தான் இல்வாழ்க்கையின் உண்மையான தாத்பரியம் என்பதை இந்த சின்னஞ்சிறு கதையின் மூலம் புரிய வைத்த ஆசிரியருக்குப் பாராட்டுகள்.  அதே சமயம் கூட்டுக் குடும்பங்களில் ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தங்கள் குறைகளைப் பேசிப் புரியவைக்கவேண்டும் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.


தடித்த எழுத்துக்களில் இருப்பவை நான் ஒரிஜினலாக அனுப்ப நினைத்த விமரிசனப் பகுதியில் உள்ளவை.  பின்னர் மீண்டும் படித்தபோது( என் வாழ்நாளிலேயே இந்த விமரிசனக் கட்டுரைகளைத் தான் மறுபடி, மறுபடி படிக்கிறேன்.  மற்றதெல்லாம் எழுதியதை அப்படியே காப்பி, பேஸ்ட் அல்லது நேரடியாக எழுதிவிடுவது தான்)  நீக்கிய சில பகுதிகளில் இதுவும் ஒன்று. 

Friday, August 29, 2014

பிள்ளையார் வந்தாரா? இங்கே வந்து கொழுக்கட்டை எடுத்துக்குங்க!


ஶ்ரீராமரின் வலப்பக்கம் தவழ்ந்த கிருஷ்ணன் கையில் வெண்ணெயுடன், ராமர் படத்தில் செருகி இருக்கும் படமும் தொட்டமளூர் கிருஷ்ணன், இடப்பக்கம் படத்தில் மஹாசுவாமிகளின் பாத தரிசனம், இடப்பக்கம் நம்ம நண்பர், மாலை போட்டுக் கொண்டு முகமே தெரியாமல் உட்கார்ந்திருக்கார். :  இந்த வருஷம் கொழுக்கட்டை எல்லாம் கொஞ்சம்னு வருத்தம் போலிருக்கு!:)




இரண்டாவது தட்டில் ஶ்ரீதேவி, பூதேவி சகிதம் பெருமாள் தொட்டில் கிருஷ்ணர், பீடத்தில் அன்னபூரணி, ரிஷப வாஹனத்தில் சிவன் ஆகியோர்.  கீழே உள்ளதை எடுக்கணும்னு நினைச்சேன்.  அப்புறமா இருக்கட்டும்னு விட்டுட்டேன். திரி, எண்ணெய், கற்பூரம், சந்தனம் குங்குமம் போன்றவை வைக்கிறோம்.



நம்ம ஆளு கதம்ப மாலையுடன் தும்பிக்கை மட்டும் தெரியும்படியா உட்கார்ந்திருக்கார். :))))பிரசாதங்கள் எல்லாம் கீழே இருக்கேனு கவலை போல!



சுவாமிக்குப் படைக்கிறோம்னு பேரிலே நாம் தானே திங்கறோம்னு சில பேர் சொல்றாங்க நினைக்கவும் நினைக்கறாங்க.  அது அப்படி இல்லை.  என்னால் இயன்றதை நான்செய்திருக்கேன்.  அதை நீ உன் பார்வையால் பார்த்து அங்கீகரித்துக்கொள்.  நீ அளித்த இந்த வாழ்க்கையை இப்படி வாழும்படி செய்த உனக்கு நன்றி அப்படினு சொல்லித் தான் அவற்றை நாம் சாப்பிடறோம்.  ஆகவே இறைவன் நமக்கு இதெல்லாம் பண்ணும்படி அனுகிரஹம் செய்திருக்கும் சக்திக்கு நன்றி சொல்லவே அவனிடம் நீயே பார்த்துக்கொள்னு காட்டிட்டு அவன் அளித்த உணவாக இதைச் சாப்பிடுகிறோம். வடையும், அப்பமும் ஒரு பாத்திரத்தில், உளுந்துக்கொழுக்கட்டை பக்கத்தில், அதுக்கடுத்து தேங்காய்க் கொழுக்கட்டை, இட்லி. பாயசம், சாதம், பருப்பு, தேங்காய், வாழைப்பழம், மற்றப் பழங்கள், வெற்றிலை, பாக்கு,  ஆகியன.   எங்க அம்மா வீட்டிலே இதைத்தவிர கடலைப்பருப்புப் பூரணம், எள் ஆகியவற்றிலும் கொழுக்கட்டை உண்டு. மாமியார் வீட்டில் இரண்டே வகை தான். :)

Thursday, August 28, 2014

ஶ்ரீராம் சொன்ன சரவணபவன் சாம்பார் சில மாற்றங்களுடன்!

முதல்லே "சாப்பிடலாம் வாங்க" வலைப்பக்கத்தில் தான் போட நினைச்சேன். ஆனால் ஏற்கெனவே பார்வையாளர்கள் இருந்தாலும் கருத்துச் சொல்லுபவர்கள் நான் "வலையுலகத் தலைவி"  என்பதால் தயங்குகிறார்கள்னு புரிஞ்சது.  (ஹிஹிஹி, சமாளிப்ஸ்! அப்படினு ம.சா. சொல்லுது)  கண்டுக்காமல் தொடர்வோம்.  நேத்தி ராத்திரிக்கு இட்லிக்குத்தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி பண்ண முடியலை. மி.பொ. ஒத்துக்காது.  ஆகவே சாம்பார் வைக்க முடிவு செய்தேன்.  என்னோட வழக்கமான பருப்பில்லா சாம்பாருக்கு பதிலா ஶ்ரீராம் சொன்ன புளியில்லா ஹோ.ச.ப. சாம்பாரை வைக்கத் தீர்மானித்தேன்.  காமிராவெல்லாம் ரெடி.

ஶ்ரீராம் சொன்ன பொருட்கள் கீழ்க்கண்டவை.  இதில் ஓரிரு மாற்றங்கள் செய்தேன்.

துவரம் பருப்பு – 1 கப் = ஒரு கப் எங்களுக்குத் தேவை இல்லை என்பதால் 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 = பெரிய வெங்காயம் சொல்லி இருக்கார்.  நான் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்துக் கொண்டேன்
தக்காளி – 1 = ஒரு நடுத்தர அளவுத் தக்காளி
உப்பு – தேவையான அளவு  = உப்புப் போட்டு வேக வைக்கலை, அப்புறமாத் தான் சேர்த்தேன்.

அரைக்க வேண்டியவை :

தக்காளி – 1   = தக்காளி  பாதி போதும் எங்க ரெண்டு பேருக்கு
பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி = இரண்டு டீஸ்பூன் தான்.  ரொம்பப் போட்டால் சாம்பார் ரொம்ப கெட்டியா இருக்கும்.  சாம்பார் கெட்டியா இருந்தால் நல்லா இருக்காதுனு எனக்குத் தோணும்.
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி = பருப்பிலேயும் போட்டேன், இங்கேயும் போட்டேன்.
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி = ம்ஹூம், போடலை, அதுக்குப் பதிலா 2 டீஸ்பூன் சாம்பார் பொடியையே போட்டுட்டேன்.
தனியா தூள் – 1 தே.கரண்டி = இன்னொரு முறை செய்யறச்சே மி.பொ.த.பொ தனியாப் போட்டுப் பார்க்கிறேன்.  செரியா?
தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி = இது சரி. 2 டீஸ்பூன் தான் போட்டேன்.
வெங்காயம்= பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன் (இது நானாகச் சேர்த்தது)

கடைசியில் தாளித்துச் சேர்க்க :

எண்ணெய் – 2 தே.கரண்டி =  ஒரு டீஸ்பூன் போதும். :)
கடுகு – 1/4 தே.கரண்டி   =  போட்டேன்.
வெந்தயம் – 1/4 தே.கரண்டி= போட்டேன்
சீரகம் – 1/2 தே.கரண்டி * = ம்ஹூம் போடவே இல்லை
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி =  நோ, நோ, போடலை
வெங்காயம் – 1  = ஒரு வெங்காயம் போடலை. சின்னதா ஒரு வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு கொஞ்சம் இதிலேயும் கொஞ்சம் அரைப்பதிலும் சேர்த்தேன்.
கருவேப்பில்லை – 4 இலை  = போட்டேன்.  சாம்பாருக்குக் கருகப்பிலை என் மாமியார் வீட்டில் போட மாட்டாங்க.  எனக்குக் கருகப்பிலை போடலைனா அது  சாம்பாரே இல்லை.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2= ஒரு பச்சை மிளகாயும், ஒரு வத்தல் மிளகாயுமாப் போட்டேன்.

கடைசியில் தூவ :  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப் = போட்டேன்.


வெங்காயத்தை வதக்கணும்னு இதிலே சொல்லலை.  ஆனால் பச்சை வெங்காயத்தை வேக விட்டால் அதிலே வரும் வாசனை அவ்வளவாப் பிடிக்காது என்பதால் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி உரித்துக் கொண்டு அவற்றை நன்கு வதக்கினேன்.  பருப்பு, ஒரு தக்காளியோடு வதக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன்.  இதையே பருப்பை நேரடியாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் வேக வைத்துக் கொண்டு, வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துத் தக்காளியையும் போட்டு வேக வைத்தால் இன்னும் நன்றாக வரும். ஆனால் நேற்று அதற்கெல்லாம் நேரமில்லை, என்பதால் குக்கரிலேயே வைச்சாச்சு.

அரைக்க வேண்டியவற்றோடு ஶ்ரீராம் சொன்ன பொருட்களோடு கொஞ்சம் பச்சை வெங்காயமும் சேர்த்து அரைத்தேன்.  குக்கரின் பருப்புக் கலவையோடு சேர்த்து இப்போது உப்பும் சேர்த்துக் கொதிக்க விட்டேன்.  இதுவே கெட்டியாத் தான் இருந்தது.  கொஞ்சம் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தினேன்.  அப்படியும் என்னோட கருத்துப்படி கெட்டியான சாம்பார் தான். :)  பின்னர் தாளிக்கும் பொருட்களைப் போட்டு நன்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்த்தேன்.  எல்லாம் முடிஞ்சு சாப்பிடும் வரை ரங்க்ஸிடம் இது விஷயத்தைச் சொல்லவே இல்லை.  ஆனால் ரங்க்ஸோ எந்தக் கமென்டும் இல்லாமல் சாப்பிட்டார் என்பதோடு சாம்பார் டேஸ்டே இன்னிக்குப் புதுமாதிரியா இருக்கு.  ரொம்பவே மைல்டாக ஜாஸ்தி காரம் இல்லாமல் இட்லிக்கு நல்ல துணையாக இருக்கு.  நீ வழக்கமா வைக்கிற சாம்பாரை இனிமேலே பண்ணாதே.  இப்படியே பண்ணிடுனு சொன்னாரே பார்ப்போம்.


மனசுக்குள்ளே க்ர்ர்ர்ரிவிட்டு (ஶ்ரீராமுக்கும், ரங்க்ஸுக்கும் தான்) அப்புறமாச் சொன்னேன்.  இது ஹோ.ச.சா. அப்படினு.  ஶ்ரீராம் சொன்னதாகவும் சொன்னேன். ஒரே பாராட்டு மழைதான் போங்க.  கொஞ்சம் இல்லை நிறையப் பொறாமையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.  :))))))

எல்லாத்தையும் விட அக்கிரமம் என்னன்னா, நீ வடக்கே எல்லாம் போடற மாதிரி ஜீரகமெல்லாம் போட்டிருந்தியானா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு சொன்னது தான்.

ஓகே, ஓகே, விட்டுடறேன். :))) இப்போ வேலை இருக்கு.  நிறையவே இருக்கு. அப்புறமா நேரம் கிடைச்சதும் வரேன். 

Wednesday, August 27, 2014

சர்க்கரை இறங்கிடுச்சு ஒரு வழியா! :)

நேத்திக்கு எழுதின பிள்ளையார் பதிவுக்குக் கருத்துனு ஶ்ரீராமைத் தவிர யாரும் சொல்லாட்டியும் பார்வையாளர்கள் நிறையவே காட்டுது. ஜி+ இலும் ஆறு பேர் இதை + செய்திருக்காங்க.   ஆகப் பிள்ளையாருக்கு வரவேற்பு எப்போவுமே இருக்கு.  இனியும் அவர் தான் வருவார்.


இன்னிக்கு நம்ம ரங்க்ஸுக்குக்கண் ஆபரேஷன்.  ஒரு வாரமா அதிலே தான் ஒரே டென்ஷன். சர்க்கரை இறங்கவே இல்லை.  அட!!!! சர்க்கரை விலையைச் சொல்லலை. அவர் உடலிலே வைச்சிருக்கும் சர்க்கரை ஆலைச் சர்க்கரை இறங்கலை. ரொம்பக் கஷ்டப்பட்டு அதைக் குறைச்சு, இதைக் குறைச்சு அரைப்பட்டினி போட்டு சர்க்கரையை இறக்கிட்டு மருத்துவர் கிட்டே போனா உடனே ஆபரேஷன்னு சொல்லிட்டாங்க.


இன்னிக்குக் காலையில் ஆபரேஷன் நடந்து முடிந்தது.  இனியும் சர்க்கரை ஏறாமல் பார்த்துக்கச் சொல்றாங்க.  அதான் ரொம்பக் கஷ்டமான வேலை! :)))))))  இனியும் சில நாட்களுக்குப் பிள்ளையார் தான் வருவார். அப்புறமாத் தான் மொக்கையோ, இல்லை வேறே பதிவோ! :)))))

Tuesday, August 26, 2014

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

நம்ம நண்பருக்காக இன்னும் இரு நாட்களில் விழா எடுக்கப் போகிறோம். வருஷா வருஷம் அதற்கு ஒரு வாரம்  முன்னரே பதிவுகள் போடுவேன்.  இப்போக் கடந்த ஓரிரு வருடங்களாக ஏதும் எழுதுவதில்லை.  இப்போ மறுபடி பிள்ளையாரைப் பத்தி எழுதுனு பிள்ளையாரே ஆக்ஞை இட்டார். ஆகவே ஒரு சில பதிவுகள் வரலாம்.  எத்தனைனு முடிவு செய்யறது பிள்ளையாரோட பொறுப்பு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.  :)

 


இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது "ஓம்" என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம்.

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் --
விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து!"

என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, "விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.


அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!"

மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்." என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து.

அடுத்து நாம் விநாயகர் எப்படி வந்தார்னு பார்க்கலாம்.

இது 2006 ஆம் வருடம் மழலைகளில் முதல்முதலாக வந்த என் கட்டுரை. அதிலே எனக்குப் பிள்ளையார் பாட்டி என்னும் புனைப்பெயர்.  எல்லா இடங்களிலும் சொந்தப் பெயரோடயே எழுதின எனக்கு அதில் தான் புனைப்பெயர். :)) இப்போக் கொஞ்ச நாட்களா அதாவது கடந்த 2, 3 மாசமாக மழலைகளுக்கு எதுவும் அனுப்ப முடியலை.  பிள்ளையார் என்ன நினைச்சிருக்கார்னு தெரியலை. :)))

Sunday, August 24, 2014

சிங்காரச் சென்னையும் என்னோட நினைவுகளும்!

சென்னைக்குக் குடி வந்த புதுசிலே மீ ஒன்லி குழந்தை! :) வில்லிவாக்கம் ஜெகந்நாத நகரில் வீடு பார்த்திருந்தார் ரங்க்ஸ்.  மாடியில் போர்ஷன். கீழே வரிசையாக நான்கு வீடுகள்.  மேலே வீட்டுக்காரங்க ஒரு போர்ஷனிலும், நாங்க இன்னொரு போர்ஷனிலும்.  புது வீடு.  கட்டி 2,3 மாசங்கள் ஆகி இருக்கும். கீழே நாலு போர்ஷனிலும் குடித்தனம் வந்தாச்சு.  ஒரே ஒரு கிணறு.  மேலே இரண்டு வீடுக்கும், கீழே நான்கு வீடுகளுக்கும்.  அப்போல்லாம் சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். தி.நகரில் சித்தி வீட்டில் ஸ்பூனில் குடிக்க, குளிக்கத் தண்ணீர் கொடுப்பாங்க. :))) ஆனால் இங்கே வில்லிவாக்கத்தில் கிணற்றைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தோஷமாகத் தான் இருந்தது.  ஆனால் மோட்டார் போடவில்லை.  கிணற்றுக் கைப்பிடிச் சுவரில் இருந்து ஒரு சிமென்ட் கட்டை போட்டு ராட்டினம் போட்டுக் கீழே இருந்து தண்ணீரை மேலே இழுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  சிமென்ட் கட்டையின் இன்னொரு பகுதி கிணற்றின் கைப்ப்பிடிச் சுவரின் மேல்பாகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.


கிணறே ஆழம். மேலே இருந்து இன்னும் 20 அடி கூட. இழுத்தாலும் சிவந்த நிறத்தில் நீர் வரும். குளிக்க மட்டும் குளியலறை மேலே. அவசரமாக் கழிவறைக்குப் போறதுனா கீழே தான் வரணும்.  உதவிக்கு வந்திருந்த மாமியாருக்கும், என் அம்மாவுக்கும் அவங்க அவங்க குடும்பம் அழைக்க அவங்க சென்று விட்டனர்.  ஒரே வாரத்தில் கீழே போய்க் கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டு வந்து மேலே சேர்த்ததில் களைப்பும், சோர்வும், உடல்வலியும் அதிகம் ஆனது.  மத்தியான நேரத்தில் தான் கிணற்றில் நீர் இறைக்கலாம்.  காலையில் கீழ்க்குடித்தனக்காரர்கள் கிணற்றை ஒட்ட இறைத்துவிடுவார்கள்.  வீட்டுக்காரம்மாவுக்கு முதல் வீட்டில் இருந்த பெண்மணி தண்ணீர் இறைத்துத் தனியாகக் கொடுத்துடுவாங்க.  ஆக மொத்தம் மீ த ஒன் அன்ட் ஒன்லி அசடு மத்தியானமா யாரும் இல்லாத நேரமாப் போய்த் தண்ணீர் எடுத்துட்டு வந்துடுவேன்.  மறு நாள் வரை அதான்.  இடுப்பில் ஒரு குடம், கையில் ஒருகுடம்னு தூக்கிக் கொண்டு வருவேன்.  ரங்க்ஸ் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வரச்சே இதைப் பார்த்திருக்கார்.

ஏற்கெனவே அவருக்கு இந்த வீடு பிடிக்கலை. அவசரத்துக்கு எடுத்திருந்தார். ஆகவே அன்றே என்னை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் போனார். நாலைந்து வீடுகளைப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒரு வீட்டைப்பார்க்க அறைகளெல்லாம் பெரிது பெரிதாக இருந்தன.  அந்த வீடு எங்களுக்கு தாராளம்.  ஆனால் வாடகை நிறைய இருக்குமோ?  வீட்டுக்காரப் பாட்டி தான் இருந்தாங்க.  மற்றக் குடித்தனக்காரங்க யாரும் இல்லை.  அந்தப் பாட்டி 60 ரூ வாடகை.  மின்சாரத்துக்கு சப் மீட்டர் இருக்கு. மூணு மாசம் அட்வான்ஸ் அப்படினு சொன்னதுமே இத்தனை பெரிய வீட்டுக்கு இம்புட்டுக் கொஞ்சமாவா வாடகைனு எனக்கு மயக்கமே வந்துடுச்சு. உடனே அந்த வீட்டை அட்வான்ஸ் கொடுத்து நிச்சயம் செய்துட்டோம். ஆனால் வில்லிவாக்கம் வீட்டுக்காரங்க ஒரே சண்டை.  அட்வான்ஸைக் கழிச்சுட்டுத் தான் போகணும், திரும்பத் தரமாட்டேனு பிடிவாதம். அவங்களோட சண்டை போட்டுட்டுக் கிளம்பி வந்தோம். பதினேழு ரூபாயோ என்னமோ நஷ்டம். அவங்க திருப்பித் தரலை.

அம்பத்தூர் வந்ததும் தெரிந்தவர்கள் மூலம் ஒரு பால்காரரை ஏற்பாடு செய்திருந்தோம்.  நாளாவட்டத்தில் பால் சுமாராக இருக்கவே வீட்டுக்கு எதிரேயே கறந்து கொடுக்கும் ஒருத்தரை ஏற்பாடு பண்ணீட்டுப் பழைய பால்காரரை நிறுத்தினோம். அந்தப் பால்காரர் என்னிடம் சண்டை போட்டதோடு அல்லாமல் புதுப் பால்காரரின் மாட்டை வெட்டப்போய்விட்டார். அப்புறமா விசாரிச்சதில் மாட்டுக்காரங்க, வீட்டு வேலைக்காரங்க இவங்களை நிறுத்திட்டு வேறே மாத்தினால் இப்படித் தான் தகராறு பண்ணுவாங்கனு தெரிஞ்சது.  கொஞ்ச நாளைக்குப் பக்கத்துப் போர்ஷன் காரர் பால் வாங்கி வைத்துப் பழைய பால்காரருக்குத் தெரியாமல் கொடுத்து வந்தார். இப்படியாகத் தானே சென்னை வாழ்க்கையில் பழம் தின்னு கொட்டையும் போட்டு முளைக்கவும் ஆரம்பிச்சது. ஆனாலும் செடியை வளரவிடப் பிடிக்கலை. :))))

Friday, August 22, 2014

சென்னைக்கு வயது 375

தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை.  எத்தனையோ தென்மாவட்ட இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெரியோர்கள் ஆகியோரின் கனவு நரகம்.  சேச்சே நகரம்! :) ஆனால் என்னை ஏனோ கவர்ந்ததே இல்லை.   ஆங்கிலேயரிடம் இதை ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்கள் தங்கள் தந்தையின் பெயரால் இதைச் சென்னை என அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததால் சென்னை என அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.  ஆனால் பெரும்பாலோருக்கு சென்னை என்பதை விட மெட்ராஸே எளிமை, இனிமை, அருமை.  வடக்கே சென்றால் அவர்கள் தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடரோ மதராசி தான். :)))) இது எழுதப்படாத சட்டத்தில் உள்ள ஒரு விஷயம்.




இந்தியாவின் நான்காவது மெட்ரோ நகராக விளங்கும் சென்னையை நான் முதல் முதலாகப் பார்த்தது 1963 ஆம் ஆண்டில் தான். அந்த வருஷம் தான் என் அண்ணாவுக்கும், தம்பிக்கும் திருப்பதியில் மைசூர் மஹாராஜா சத்திரத்தில் வைத்து உபநயனம் செய்வித்தார்கள்.  அதுக்கு நாங்க எல்லோரும் குடும்பத்தோடு திருப்பதிக்குப் போனோம்.  மதுரையிலிருந்து விழுப்புரம் வழியாகத் திருப்பதி சென்ற நாங்கள் திரும்பி வருகையில் எங்களுக்குக் காட்டுவதற்காக அப்பா சென்னை அழைத்து வந்தார்.  முதல் முதல் பார்த்த இடம் மெரினா பீச்.  பெரியப்பா திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அப்போது இருந்தார். என்னமோ காரணம் என்னவென்று தெரியவில்லை.  பீச்சைப் பார்த்ததுமே இவ்வளவு தானா எனத் தோன்றியது.



அதன் பின்னர் ஒவ்வொரு இடத்துக்கும் பயணம் செய்த போதெல்லாம் சே, இதுவே மதுரைன்னா எவ்வளவு சீக்கிரம் போயிடலாம்னு தோணும்.  இத்தனைக்கும் அப்போச் சென்னை இவ்வளவு நெரிசலாக இல்லை.  பாண்டி பஜாரில் மரங்கள் இருந்தன.  மாம்பலம் மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்தது.  லேக் வியூ ரோடில் லேக்கின் மிச்சங்கள் இருந்தன. அயோத்யா மண்டபம்னா அப்போ என்னனே யாருக்கும் தெரியாது.  1688 ஆம் ஆண்டில் சென்னையில் முதல் நகர சபை தோற்றுவிக்கப்
பட்டதாகவும், இந்தியாவின் முதல் நகர சபை அதுதான் எனவும் சொல்கின்றனர்.  ராபர்ட் க்ளைவின் ராணுவ நடவடிக்கைகள் சென்னையை அடிப்படையாக வைத்தே அமைந்தன.  இதுவே பின்னர் பிரிட்டிஷாரின் இந்திய காலனிகளின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.  நான்கு இந்திய காலனி மாகாணங்களில் சென்னை மாகாணமும் ஒன்று என்னும் பெருமையை இது பெற்றது.

சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு முழுவதும், கேரளப் பகுதியில் சிறிது, கர்நாடகத்தில் ஒரு பகுதி, ஆந்திரத்தில் ஒரு பகுதி அடங்கிய பெரிய மாகாணம் ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் சென்னை இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது.  பல சிறு கிராமங்கள் இணைந்த சென்னை இப்போது தெற்கே தாம்பரம் வரையிலும் வடமேற்கே அம்பத்தூர் வரையும் விரிந்து பரந்துள்ளது.  சக்தி பீடத்தின் ஐம்பத்தி ஒன்றாம் ஊர் என்பதே அம்பத்தூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.  தென்னைமரங்கள் நிரம்பிய பகுதி தென்னம்பேட்டையாக இருந்து பின்னர் தேனாம்பேட்டையாக மாறியுள்ளது.  குதிரைகள் லாயம் இருந்த இடமே கோடா பாக் என அழைக்கப்பட்டுக் கோடம்பாக்கமாக மாறியுள்ளது. (இது குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளேன்.)

ராஜாஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் நந்தன வருஷம் கட்டப்பட்ட காலனிக் குடியிருப்பு இப்போது நந்தனம் என்னும் பெயரில் பிரபலமாக விளங்குகிறது.  மஹாவில்வம் என அழைக்கப்பட்டு மாவில்வம் எனச் சுருங்கி பின்னர் மாம்பலம் என ஆகியதாக மாம்பலத்தைக் குறித்த கதை கூறுகிறது.  மயில் ஆர்ப்பரித்து விளையாடியதாலும் அன்னை கற்பகம் மயில் மீது தவம் செய்ததாலும் மயிலாப்பூர் என அழைக்கப்பட்ட ஊர் இன்றைய திருமயிலை.  அல்லிகள் பூக்கும் குளம் இருந்த ஊர் அல்லிக்கேணி எனப்பட்டு இப்போது திருவல்லிக்கேணியாக ஆகியுள்ளது.
பூவிருந்தவல்லி கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.  திருக்கச்சி நம்பிகள் இங்கிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டு காஞ்சிபுரம் போய் தினமும் வரதராஜப் பெருமாளை வணங்கி வந்தமையால் பூவிருந்தவல்லி என்னும் பெயர் பூந்தமல்லி, பூனமலி என அழைக்கப்படுகிறது.  பிரம்புகள் தயாரிக்கும் மூங்கில்கள் நிறைய இருந்தமையால் பெரம்பூர் என அழைக்கப்படும் ஊர் பெரம்பூர் ஆகும்.

சௌந்திரபாண்டியன் பஜார் என்னும் பெயரில் இப்போதும் பாண்டிபஜாரில் நுழையும் இடத்தில் பெயர்ப்பலகையைப் பார்க்கலாம்.  பனகல் மன்னரின் பெயரால் பனகல் பார்க்கும், தியாகராஜச் செட்டியார் பெயரால் தி.நகரும் அழைக்கப்படுகின்றன.  பல்லவர்கள் ஆட்சியில் இருந்த பல்லவபுரம் தான் இன்றைய பல்லாவரம் என்றும், முருகன் போருக்கு ஆயத்தமான இடம் தான் திருப்போரூர் எனவும் சொல்கின்றனர்.  க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்த இடம் கிரோம்பேட்டை என அழைக்கப்பட்டது.



ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.......... :))))

Thursday, August 21, 2014

சர்வாங்க சுந்தரி!



கருவிலி சர்வாங்க சுந்தரியைப் பத்தி எழுதி இருந்தேன் இல்லையா?  தற்செயலா சர்வாங்க சுந்தரியின் படம் கிடைச்சது.  பழைய ஃபைல்களில் இருந்து கிடைத்தது.  இது ராஜ கோபுரம் கட்டும் முன்னர் எடுத்த படம்னு நினைக்கிறேன். முதல் முதலாகக்கும்பாபிஷேஹம் செய்தப்போ ராஜ கோபுரம் கிடையாது.  பின்னர் தான் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. 

Wednesday, August 20, 2014

வெல்லச் சீடை மாவு அப்பமான கதை கேளுங்கள்!


எங்க வீட்டுக் கோலம் ஜன்மாஷ்டமிக்குப் போட்டது அன்றைய தினம் சேர்க்க மறந்து போச்சு.


எதிர் வீட்டில் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியை வீட்டுக் கோலம்.  சங்குக் கோலம்.


உப்புச் சீடை மாவு வெடிச்சுச் சிதறிக் கஷ்டப்படாதவங்களே இருக்காது.  ஆனால் எனக்கு என்னமோ வெடிச்சதில்லை.  உப்பைக் கல் உப்பாகவோ அல்லது பொடி உப்பாகவோ நேரிடையாகக் கலக்காமல் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பைப் போட்டு ஆற வைத்து அந்த உப்பு ஜலத்தில் மாவு பிசைய வேண்டும். ரொம்ப மொழு, மொழு எனப் பிசையக் கூடாது.  உருட்டும்போதும் ரொம்பவே மொழு மொழு என உருட்டக் கூடாது. ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் சேர்த்துக் கொண்டு உருட்டினால் போதும். :)))

வெல்லச் சீடைக்குப் பாகு தக்காளி பதமாக இருக்கணும்.  பாகு முத்திவிட்டால் சீடை கெட்டியாக ஆயிடும். எனக்கு எல்லாமும் சரியாகத் தான் இருந்தது.  ஆனால் என்னமோ தெரியலை.  பத்து சீடைக்கு மேல் உருட்ட முடியலை.  மாவை அப்படியே வைச்சுட்டேன்.  வடை மாவையும் ஐந்து வடை நிவேதனத்துக்குத் தட்டிட்டு அப்படியே வைச்சுட்டேன். மறுநாள் அந்த வடை மாவை வடை தட்டி, வீட்டுக்கு வந்த நாத்தனார் பெண்ணுக்குக் கொடுத்துட்டு, நாங்களும் கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். சீடை மாவை என்ன செய்யறது?

கேரளாவில் முக்கியமாய்ப் பாலக்காட்டுப் பக்கம் அப்பத்திற்குப் பாகு செலுத்தி வைத்துத் தான் செய்வார்கள்.  ஆனால் அதில் கோதுமை மாவு சேர்க்கிறதில்லைனு நினைக்கிறேன். நாம தான் திப்பிச வேலைகளில்தேர்ந்தவங்களாச்சே!  ஆகவே ஒரு கரண்டி கோதுமை மாவு+ கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மிக்சியில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, இந்த வெல்லச் சீடை மாவையும் போட்டுச் சுற்றினேன்.  நல்ல கெட்டியாக வடை மாவு பதத்துக்கு மாவு வந்தது.  அதை அப்படியே கையால் போண்டோ மாதிரிப் போட்டு எடுத்துவிட்டேன்.  கீழே படங்கள். தித்திப்பும் குறைந்துவிட்டது.   அதோடு நான் எப்போ அப்பம் செய்தாலும் அதில் கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்தே செய்வேன். :))))



மிக்சி ஜாரில் கலந்த மாவு




எண்ணெயில் குதிக்கும் அப்பங்கள்






வெந்த அப்பங்கள்.  சுவையோ சுவை!

Tuesday, August 19, 2014

ஓர் அதிர்ச்சித் தகவல் பகிர்வு!

அப்பமாக மாறிய வெல்லச் சீடை மாவு!  அதிர்ச்சித் தகவல். எதிர்பாருங்கள் நாளை! 

சின்ன வெங்காயம்! தேநீர், சோப் தூள்!

நேற்று ராத்திரி மோர் சாதம் தான் டிஃபன்.  பக்ஷணம் இருந்ததால் வயிறு தொந்திரவு வராமல் இருக்க வேண்டி மோர் சாதம். :) தொட்டுக்க ஒண்ணுமே இல்லையா!  ஆவக்காய் ஊறுகாய் (புதிது, இந்த வருஷம் தான் போட்டது) இருந்தது தான்.  ஆனால் நான் ஊறுகாய் போட்டுக்கிறதே இல்லை.  எப்போவானும் ஆசைக்கு!  ஆகவே நேத்திக்குச் சின்ன வெங்காயம் உரித்துத் தொட்டுக் கொண்டேன்.  உடனே அம்மா நினைப்பு வந்துடுச்சு.

சின்ன வயசிலே பழைய சாதம் சாப்பிட போர் அடிச்சாலோ, அல்லது சாதம் மிச்சம் ஆகி ராத்திரிக்கு மோர்சாதம் நிறையச் சாப்பிட வேண்டி இருந்தாலோ அம்மா மாலையே சின்ன வெங்காயத்தை உரிச்சு வால் பகுதியில் லேசாகக் கீறி உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து வைத்திருப்பாங்க.  அந்த வெங்காயத்துக்குப் போட்டி போட்டுக் கொண்டு மூணு பேரும் அடிச்சுப்போம்.  ஒரு கைப்பிடி வெங்காயத்தைத் தொட்டுக் கொண்டு ஒரு தட்டு மோர்சாதம் சாப்பிட்ட நினைவுகள் அலைமோதின! அந்த மோரின் மணமும், சாதத்தின் சுவையும் இப்போவும் மனதிலே நிற்குது.  என்னோட பாட்டி பிசைந்து கையில் போடும் கல்சட்டிப் பழையது பற்றி ஏற்கெனவே எழுதிட்டேன். :))))  சமயத்தில் சாப்பாட்டில் கூட கறிகாய்கள் இல்லை எனில் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி உப்பு சேர்த்துப் பச்சை மிளகாயோடு தொட்டுக் கொண்டு சாப்பிட்டது உண்டு. ஆனால் இது நல்லது என்றோ இதான் சாலட் என்றோ அப்போ தெரியாது. வடமாநிலங்கள் போய்த் தான் அவை தெரிந்தன என்பதோடு முள்ளங்கியைப் பச்சையாகச் சாப்பிடலாம் என்பதும் அங்கே தான் தெரிந்தது. :)


அதே போல் அப்போல்லாம் குழந்தைங்களுக்குக் காஃபியே ஜாஸ்தி கொடுக்க மாட்டாங்க.  பெரியவங்க குடிக்கிறதை ஏக்கமாப் பார்த்துட்டு இருப்போம். அவங்க குடிக்கிறதிலே கடைசி வாயில் எங்களுக்கும் பங்கு கிடைக்கும்.  ஆனால் எங்க பெரியப்பா வீட்டிலே அனைவருக்கும் காஃபி உண்டு.  இதுக்காகவே பெரியப்பா வீட்டிற்கு ஓடியது உண்டு.  எங்க வீட்டிலே காஃபி குடிக்கச் சொல்லி உபசரித்தார்களெனில் அதில் விளக்கெண்ணெய் கலந்திருக்கும் என்பது புரியப் பத்து வயசாச்சு! :))) அதனாலோ என்னமோ தெரியலை கல்யாணம் ஆனவரை காஃபியே குடிச்சதில்லை. அதுக்கப்புறமாத் தான் காஃபி பழக்கமே.

எனக்குத் தெரிந்து அப்போல்லாம் தேநீர் எனப்படும் டீ கூட அதிகமாய்க் குடிக்க மாட்டாங்க.  எங்க பெரியப்பா மட்டும் எப்படியோ டீ பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.  அப்போல்லாம் காலணா, அரையணாவுக்கு டீ பாக்கெட்(இப்போல்லாம் சாஷே என்கிறார்களே அது போல்) கிடைக்கும். குருவி போட்ட டீ பாக்கெட் வாங்குனு சொல்வாங்க.  ஆனால் அந்த டீத்தூள் க்ரானுல்ஸ் எனப்படும் சிறு சிறு மணல் துகளாகவும் இருக்காது.  இலைகளாகவும் இருக்காது.  இப்போதைய டஸ்ட் மாதிரியும் இருக்காது. அதை நீரில் போட்டும் கொதிக்க விடமாட்டார்கள்.  ஒரு பாக்கெட் வாங்கினால் ஒருத்தருக்கு 2 வேளைக்கு வரும்.  ஆகவே அதைப் பிரித்து ஒரு தம்ளரில் போட்டு நீரைக் கொதிக்க வைத்து அதில் ஊற்றி மூடி வைப்பார்கள். பின்னர் சூடாகக் காய்ந்த பாலில் தேநீரை வடிகட்டிச் சேர்த்துச் சர்க்கரை போட்டுக் கொடுப்பார்கள்.  தேநீரின் வாசனை ஊரைத் தூக்கும்.

இந்தத் தேநீரைப்பிரபலப்படுத்துவதற்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் என நினைக்கிறேன்.   தேயிலைக் கம்பெனிகள் வீட்டுக்கு வீடு ஆள் அனுப்பித் தேநீரைப் போட்டுக் காட்டச் சொல்லி, மக்களைக் குடிக்க வைத்துக் கருத்துக் கேட்கும். தேயிலைப் பொட்டலங்களை இலவசமாகக் கொடுப்பார்கள். காஃபியை விட இதற்குப் பால் செலவு குறைச்சல்னு எடுத்துக் காட்டுவாங்க.   அது என்னமோ தேநீர் என்றால் எல்லோரும் சர்க்கரை கூடுதலாகப் போட வேண்டும் என்னும் எழுதா விதியை வைத்திருக்கிறார்கள்.  ஆனால் எனக்கு தேநீருக்கும் சர்க்கரை கம்மியாகத் தான் பிடிக்கும்.  முதல் முதல் ராஜஸ்தான் போகையில் ரயிலில் பாட் டீக்கு ஆர்டர் செய்து வந்ததும்  ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க அதைக் கலந்து குடித்த அனுபவம் இனி ஒரு முறை வராது.

முன்பெல்லாம் அதே போல் சோப் தூளுக்கும் வீட்டுக்கு வந்து துணி ஊறவைத்துத் துவைத்துக் காட்டுவாங்க.  இப்போ எல்லாம் தொலைக்காட்சியில்! :))))


நெய்வேலியில் நிலக்கரி எடுக்க ஆரம்பிச்சதும் அந்தக் கரியைக் கொண்டு சமைக்கலாம் என்றும் விளம்பரம் செய்தார்கள்.  கைவண்டியில் நிலக்கரியைக் கொட்டித் தள்ளிக் கொண்டு ஒரு ஆளும், கூடவே ஒரு பெண், ஒரு பையர் வருவார்கள்.  மூட்டுவது கஷ்டம்.  மூட்டிப் பிடித்துக் கொண்டால் சீக்கிரம் சமையல் ஆகும் என்பார்கள்.  ஆனால் இந்த மாதிரி எரிவாயுவுக்கு விளம்பரம் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை.  மண்ணால் ஆன(?) ஒரு குமுட்டி இலவசமாயும் கொடுத்தாங்கனு நினைக்கிறேன்.  ஆனால் அந்தக் கரி அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. :)))))

Monday, August 18, 2014

இன்னும் சில படங்கள், இதோடு விட்டுட்டேன்பா! :))))

பதிவுகளைப் படிக்கிற அளவுக்குப் பின்னூட்டம் வரலைனு நான் சொன்னதை மாதங்கியின் அப்பா திரு மாலி அவர்கள் படிச்சுட்டுத் தான் விடாமல் படித்து வருவதாகவும், சமையல் குறிப்புக்களைக் குறித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். :)))) இப்போவும் கண்ணன் பிறந்த நாள் பதிவுக்கும் ஜாஸ்தி யாரும் கருத்துச் சொல்ல வரலை.  ஆனால் நிறையப் பேர் ரகசியமா பக்ஷணம் எடுத்துட்டு இருக்காங்க. :))))) போகட்டும்.


இங்கெல்லாம் எப்படியோ மும்பையில் சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்குப் பத்து நாட்கள் முன்னாடி இருந்தே அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன.  அதே போல் கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டத்துக்கும், ஆங்காங்கே தெருவுக்குத் தெரு உறியடிகள் கட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.   ஆனால் நாங்கள் கிளம்பும் வரை ஒரு உறியடி கூடக் கட்டலை.  சுதந்திர நாள் வந்ததால் கொடியேற்றத்துக்கு அப்புறம் தான் கட்டுவாங்களாம். அதனால் அந்தப் படம் எடுக்க முடியலை.




சமையலறை ஜன்னலுக்கு வெளியே உள்ளே வரத் துடிக்கும் புறாக்கள். 



நான் அங்கே தான் வேலை செய்துட்டு இருந்தேன்.  ஆனாலும் பயமில்லாமல் இவர் நுழையப் பார்த்தார்.




ஜன்னலுக்கு வெளியே புறாக்கள்



சென்னை விமான நிலையத்தில் சுதந்திர நாளுக்கான அலங்காரங்கள் செய்கையில் எடுத்த படம்.  காமிராவை எடுக்க முடியலை.  படம் எடுக்க விடுவாங்களானு யோசனை.  அவசரம் அவசரமாக செல்லிக் கொண்டது. சுமாராகத் தான் வந்திருக்கு. 




13 ஆம் தேதி மதியம் ஶ்ரீரங்கம் திரும்புகையில் விழுப்புரம் தாண்டியதும் தெரிந்த பசுமையான வயல்கள்.  செல்லில் எடுத்தவை. மழைத்துளிகள் இதிலேயும் இருக்கு. :)



மழைத்துளிகள் வெளியே ஜன்னலில் படும்போது எடுத்த படம். :)  ஹிஹிஹி, நிபுணி ஆயிட்டோமுல்ல! :)))





Sunday, August 17, 2014

கண்ணன் வந்துட்டான்! :)



இந்த வருஷம் கண்ணனை ஆறரைக்கே அழைத்தாச்சு.  அவனும் வந்துட்டான்.  கூப்பிட்ட குரலுக்கு வருபவன் அன்றோ!  உடம்பு இன்னும் ஒழுங்குக்கு வரலை.  ஆகையால் இம்முறை மாவு திரிச்சது/அரைச்சது மெஷினில். பயந்ததுக்கு நல்லாவே அரைச்சுக் கொடுத்தாங்க.  மிக்சியில் கஷ்டப்படலை. பக்ஷணங்களும் பேருக்குத் தான். மற்றபடி கொஞ்சம் போல் பாயசம், வடை, வெண்ணெய்,, தயிர், அவல், வெல்லம், பால் , வெற்றிலை,பாக்கு, பழங்கள், தேங்காயுடன் கண்ணனுக்குக் கொடுத்தாச்சு. பக்ஷணம் சீக்கிரம் தீர்ந்து போறதுக்குள்ளாக எல்லோரும் வந்து எடுத்துக்குங்க.



உப்புச் சீடை, வெல்லச் சீடை கொஞ்சம் போல, பலகையில் இருக்கு. தட்டை, முறுக்கு, சீப்பி, கோளோடை ஆகியன.  எல்லாம் ஒரு கைப்பிடி இருக்கும் அளவே. முறுக்கு மட்டும் கொஞ்சம் கூட. :)  அதுவும் கோணிக்கொண்டிருக்கு. :)))))  கண்ணன் பரவாயில்லைனு சொல்லிட்டான். :)))))

இவ்வளவு நேரம் கணினியில் உட்கார்ந்திருந்தது இந்தப் படங்களை அப்லோட் செய்யத் தான்.  இனிமேல் நாளைக்காலை பார்க்கலாம்.  எல்லோரும் பக்ஷணம் எப்படி இருந்ததுனு வந்து மறக்காமல் சொல்லிடுங்க. :)))))

Saturday, August 16, 2014

பூப் பூவாய்ப் பூத்திருக்கு, பூவிலே சிறந்த பூ, மல்லிப் பூ!



ஶ்ரீராமுக்காக ஒரிஜினல் சைசில் வெளியிட்டிருக்கேன்.  தெரியுதானு பார்த்துச் சொல்லுங்கப்பா.  அங்கே மல்லிச் செடியில் பூத்திருந்த ஒற்றை அடுக்கு மல்லி. மெலிதான இதழ்கள். ஆனாலும் வாசம் கம்மிதான்.



அதன் அரும்பு.  மல்லி மொட்டு!



நம்ம ஆளு உட்கார்ந்திருக்காரேனு எடுத்தேன்.  ஒரு பட்டன் ரோஸ் பூத்திருக்கிறது தெரியுதா?




வெற்றிலைக் கொடியைக் கண்டு பிடிச்சீங்களா?  இன்னொண்ணு தான் கிழங்குக் கொடி.




வெற்றிலைக்கொடியும், கிழங்குக் கொடியும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டின் இலைகளும் ஒன்று போல் இருந்தாலும் வெற்றிலை சிறிதாக இருக்கிறது. அடுத்துப் புறாக்களின் விளையாட்டுப் படம் நன்றாக வந்திருந்தால் பகிர்கிறேன்.


Friday, August 15, 2014

மும்பைப் படப் பதிவு!


மாங்காய் இஞ்சிச் செடி நல்ல உயரமாக வளர்ந்திருக்கிறது.


மழை கொட்டும்போது எடுத்த படம்


பெயின்ட் வாளியில் பூச்செடிகள்!




ஜன்னல் வழியாகத் தெரியும் தெரு


இவை எல்லாம் காமிராவில் எடுத்தவை. 





Thursday, August 14, 2014

பால்கனித் தோட்டத்தில் மாடப்புறா!


தொட்டிகள், ப்ளாஸ்டிக் வாளிகள், பெயின்ட் வாளிகள் என எல்லாத்திலேயும் செடிகள் போடப்பட்டிருக்கின்றன.  மாங்காய் இஞ்சி, வெற்றிலைக்கொடி, மல்லிச் செடி, ரோஜாச் செடிகள், சேனைக்கிழங்கு, பாகல் கொடி எனப் பலவும் உள்ளன.  ஜன்னல் முழுதும் திறக்க முடியலை.  திறந்த பாகத்தில் கிடைத்தவை மட்டும் பகிர்வுக்கு.  இவை அனைத்தும் கைபேசியில் எடுத்தேன்.




ஒற்றை ரோஜா பூத்திருக்கு பாருங்க. வெள்ளை ரோஜாவும் இருக்கு.

அதோ அந்தப் பெட்டியில் தான் புறாக்கள் குடும்பம் நடத்துகின்றன.  குஞ்சு பொரிச்சாச்சு போல!


மும்பையில் பத்து நாட்கள்!

ஒருவழியா மும்பையிலே இருந்து நேற்றிரவு திரும்பியாச்சு. அவ்வளவாக ரசிக்காத பயணம்.  ஏன்னு புரியலை. :) போனதுமே பெட்டி வராதது கொஞ்சம் மனதில் வேதனையைக் கொடுத்தாலும் தொடர் மழையால் கொஞ்சம் அறுவை அடித்தது என்பதும் உண்மை.  எங்கும் போக மனம் இல்லை.  வீட்டிலேயே இருந்தோம்.  ஒரே ஒருநாள் விலிபார்லேவில் இருக்கும் என் பெண்ணின் மாமியாரையும், அன்றே அந்தேரியில் இருக்கும் என் கணவரின் ஒன்றுவிட்ட அண்ணாவையும் போய்ப் பார்த்தோம். மற்றபடி எங்கும் செல்லவில்லை. அவ்வளவு மழை பெய்தும் தெருக்கள் சுத்தமாகக் காட்சி அளிக்கின்றன.  நல்லா அலம்பி விட்டாற்போல் மழையால் தெருக்கள் எல்லாம் பளிச்!

விமான நிலையத்திலிருந்து நாங்கள் இருந்த நவி மும்பையின் நெருல் பகுதிக்கு வர முதல் நாள் இரண்டரை மணி நேரம் ஆனது.  ஆனால் அதே விலிபார்லே போன அன்று ஒரே மணி நேரத்தில் போனோம். நேற்றுக் காலை மீண்டும் விமான நிலையம் செல்ல அரை மணி நேரம் தான் ஆனது. பணமும் குறைவு தான்.  ஓட்டுநர் வெறும் 600 ரூபாய் தான் வாங்கிக் கொண்டார்.   இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஆகி இருக்கும். ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த பட்சமாகப் பதினைந்து ரூபாய் தான் வாங்குகின்றனர்.  நாம் இருபது ரூபாய் கொடுத்தால் மீதம் ஐந்து ரூபாயைக் கரெக்டாகத் திரும்பக் கொடுக்கின்றனர்.

இதே தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக ஐம்பது ரூபாயாக உள்ளது. அதோடு சில்லறையைத் திரும்பக் கேட்டால் ஒருமாதிரியாகவும் பார்ப்பார்கள். நேற்றுச் சென்னை விமான நிலையத்திலிருந்து எழும்பூர் செல்ல முன் பதிவு செய்யப்பட்ட வாடகைக்காருக்கு 420 ரூபாய் ஆனது. இத்தனைக்கும் நெருலுக்கும், சான்டாக்ரூஸுக்கும் உள்ள தூரத்தை விடக் குறைவான தூரம் தான்.   ஆனாலும் பணம் அதிகம் தான்.  நாங்கள்  எங்கும் செல்லவில்லை என்பதால் படங்கள் அதிகம் எடுக்கவில்லை.  வீட்டு பால்கனித் தோட்டத்தில் வந்து அமரும் புறாக்களைத் தான் படம் எடுத்தேன். அவை அப்லோட் ஆகவில்லை.  பிகாசாவில் ஏதோ பிரச்னை என்கிறது.  நேற்று செல்பேசியின் மூலம் ரயிலில் வருகையில் விழுப்புரம் அருகே ஒரு பசுமையான வயலைப் படம் பிடித்தேன். காமிரா மூலம் அதிகம் எடுக்கவில்லை.  எடுத்தவரை படங்களை அப்லோட் செய்த பின்னர் போடுகிறேன்.

அங்கெல்லாம் குடியிருப்பு வளாகங்கள் மிகப் பெரிதாக இருந்தாலும் ஒவ்வொரு வளாகத்தைச் சுற்றியும் திறந்த இடங்கள் நிறைய இருப்பதோடு பல மரங்களையும் சுற்றுச்சுவரைச் சுற்றி வளர்த்திருக்கிறார்கள். வாயில்புறங்களில் அசோகா மரங்களும்,  வளாகங்களின் பின்புறங்களில் மாமரம், வேப்பமரம், தென்னை போன்றவைகளும் இருக்கின்றன.  வளாகங்களின் எதிரே உள்ள நடைமேடைகள் நடப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.  அங்கேயும் மரங்கள், பூச்செடிகள், காய்கறிச் செடிகள் போன்றவை காணப்படுகின்றன.  எந்த வளாகத்தின் எதிரே இவை உள்ளனவோ அவற்றின் நேரடிக்கண்காணிப்பில் இவை எல்லாம் வளர்க்கப்படுகின்றன.  பூங்காக்கள் நீண்ட, நெடியவையாகக் கிட்டத்தட்ட ஒரு காடாகக் காணப்படுவதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கும் பல்வேறு விளையாட்டுக்களைக் கொண்டுள்ளது.

மழை அரைமணிநேரம் விடாமல் பெய்கிறது.  பின்னர் நிற்கும்,  மீண்டும் மேகங்கள் எங்கிருந்து வந்து கூடிக் கொண்டு ஒன்றாய்ப் பேசிக்கொண்டு மழையைப் பொழிகின்றன.  எதற்கும் மும்பை மக்கள் அசைந்து கொடுக்காமல் குடையும், ரெயின்கோட்டும் கையுமாக அவரவர் வேலையைப் பார்க்கின்றனர்.  இந்தக் கொட்டும் மழையிலும் குழந்தைகளுக்கான பள்ளி வண்டிகள்  காலை ஐந்தரை மணியிலிருந்து ஏழரை மணி வரை வர ஆரம்பித்து விடுகின்றன.  சின்னஞ்சிறு குழந்தைகள் ரெயின்கோட்டைப் போட்டுக்கொண்டு அந்தக் கொட்டும் மழையிலும் பள்ளிக்குச் செல்கின்றனர்.  மதியம் பதினொன்றரையிலிருந்து பனிரண்டரைக்குள் எல்லாக் குழந்தைகளும் வீடு திரும்பி விடுகின்றனர். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு குழந்தைகள் தவிக்காவண்ணம் இவ்வகை ஏற்பாடு.

Tuesday, August 12, 2014

திடீர்னு ஏற்பட்டதொரு அதிர்ச்சி! :(

  http://vijayastreasure.blogspot.in/2014/03/blog-post_2637.html

   கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம். வேறே ஏதோ தேடப் போய் இந்தப் பதிவு கிடைத்தது. இங்கே லக்ஷ்மி விஸ்வநாதன் என்பவர் விஜயாஸ் ட்ரெஷர் என்னும் வலைப்பக்கத்தில் நான் திருமணச் சடங்குகள் குறித்துத் தொகுத்து வந்த பதிவுகளில் சுமங்கலிப் பிரார்த்தனை பற்றி எழுதியவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை வெட்டி ஒட்டியுள்ளார்.  அதிலே நான் தனிக்கூட்டுச் செய்முறையை என்னுடைய சாப்பிடலாம் வாங்க பதிவில் பார்க்கலாம்னு எழுதியதும் சேர்ந்து வந்திருக்கிறது என்பதோடு பூவாடைப் பொண்டுகள், அதிசயப்பொண்டுகள் எல்லாமும் என்னுடைய அனுபவப் பகிர்வுகள். இதை வெட்டி ஒட்டியவர் என் பெயரைக் குறிப்பிடவே இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.  ஏற்கெனவே என்னுடைய சிதம்பர ரகசியம் தொடரும் இப்படித் தான் ஒருத்தர் முழுக்க முழுக்க வெட்டி ஒட்டி இருந்தார். அதே போல் கர்ணன் குறித்து எழுதியவையும்.  பிள்ளையார் குறித்த பதிவுகள். இப்போது இது! ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றே புரியவில்லை!


http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_5.html

    2013 ஆம் வருஷம் நான் எழுதியவை இந்த வருஷம் மார்ச் மாதம் நகல் எடுக்கப்பட்டிருக்கிறது. :(   இரண்டையும் படியுங்கள்.  இன்னும் பலரும் பல இடங்களில் என் பதிவுகள் நகல் எடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்கள் என்பதாலேயே எச்சரிக்கை கொடுத்தேன்.  அப்படியும் இது நடக்கிறது. :(