கம்பு அடை
நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் மேலே.
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கிண்ணம்
இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்
துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.
4 மி.வத்தல்+பச்சை மிளகாய் 2
உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன்.
தைரியமா எடுத்துக்குங்க! நல்லாவே இருந்தது. சோள ரவையில் உப்புமா பண்ணியது தான் படம் எடுக்க முடியாமல் விட்டுப் போச்சு! முடிந்தால் இன்னொரு நாள் பண்ணுகையில் படம் எடுக்கிறேன். வர வர இந்த எண்ணங்கள் பதிவு சாப்பாட்டு எண்ணங்களா மாறிட்டு வருதோனு ஜந்தேகமா இருக்கே! ::)
இந்தக் கம்பு அடை சாப்பிடும்போதும் சரி (ஏற்கெனவே 2.3 முறை கம்பு செய்து பார்த்திருக்கேன்.)பண்ணும்போதும் சரி, எனக்கு நினைவில் வருவது கல்கியின் பார்த்திபன் கனவு தான்! அதில் தான் படகோட்டி பொன்னன், மனைவி வள்ளி வார்த்துப்போடப் போடச் சுடச் சுடக் கம்பு அடையைக் கீரைக்குழம்போடு ஒரு கை பார்த்துக் கொண்டிருப்பான். கம்பு அடையின் மணம் அந்தக் காவேரிக்கரையில் பரவியதாக எழுதி இருப்பார். அது போல் இந்தக் கம்பு அடையின் மணமும் பரவி இருக்கணும். :)
அடுத்த சோதனை வரகில்! இதுக்கு நடுவில் ப்ரவுன் ரைஸ், கைக்குத்தல் அரிசி இரண்டும் ஒண்ணுதாங்கறங்க. ஆனால் கடையில் தனித்தனியாகக் கொடுத்தாங்க. இரண்டையும் சமைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதிலே முக்கால் மணியிலிருந்து ஒரு மணி ஊற வைக்கச் சொல்லி இருந்தாலும் அது போதலை. மூன்று மணி நேரம் ஊற வேண்டி இருக்கு. பதினோரு மணிக்குக் குக்கர் வைக்க நான் எட்டு மணிக்கே ஊற வைச்சாச் சரியா இருக்கு! :)
வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.
ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி
அரை கப் இட்லி புழுங்கலரிசி
முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.
சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்
பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!
தொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார். தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.
அடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்
இட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்! :)
வெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு! தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க! தொட்டுக்க சாம்பார் தான்! ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான்.