எல்லோரும் கிருஷ்ணன் பிறப்புக்கு பக்ஷணங்கள் பண்ணுவதிலே மும்முரமாக இருப்பீங்க! நேத்திக்கு நான் ஆரம்பிச்சேன். இப்போல்லாம் ஒரே நாளிலே எல்லாமும் பண்ண முடியலை என்பதாலும், அதிக நேரம் அடுப்படியில் நிற்க முடியவில்லை என்பதாலும் பிரித்துக் கொண்டேன். நேத்திக்கு முறுக்கும், தட்டையும் பண்ணினேன். புழுங்கலரிசி முறுக்கு! என்ன,புழுங்கலரிசியில் முறுக்குப் பண்ணி நிவேதனமானு கேட்பவங்களுக்கு! திருக்கண்டீஸ்வரம் கோயிலிலும், ஆவுடையார் கோயில் ஆத்மநாதருக்கும் புழுங்கலரிசியில் நிவேதனம் உண்டு. திருக்கண்டீஸ்வரருக்கு வேண்டிக் கொள்வார்கள். வெந்நீர் அபிஷேஹம் செய்து புழுங்கலரிசியில் நிவேதனம் செய்வார்கள். ஆத்மநாதர் நம்மைப் போல! ஆறு காலமும் புழுங்கலரிசி நிவேதனம் தான். :)
என்றாலும் இன்றைக்குப் பச்சரிசியை ஊற வைச்சு மிக்சியில் மாவு திரித்து வைத்திருக்கேன். அதிலே நிவேதனத்துக்கு ஒரு நாலு முறுக்கு, நாலு தட்டை பண்ணிடுவேன். :) செரியா? இப்போ மறுபடி புழுங்கலரிசிக்கு வருவோமா?
தென் மாவட்டங்களில் இது மிகப் பிரபலம். இப்போல்லாம் சென்னையில் கூடக் கிடைக்கிறது. ஆனால் நான் கல்யாணமாகி வந்தப்போ புழுங்கலரிசி முறுக்கு, தட்டை என்றால் நம்ப ஆளில்லை! :) புழுங்கலரிசியை ஊற வைச்சு அப்போல்லாம் கல்லுரலில் போட்டு அரைத்துக் கொள்வோம். தட்டைக்கு மட்டும் எனில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், தேங்காய் சேர்த்து அரைப்பது உண்டு. இரண்டுக்குமாக எனில் உப்புக் கூடப் போடாமல் கெட்டியாக அரைத்து வைத்து விட்டுப் பின்ன ர்பிரிச்சுக்கலாம். இப்போல்லாம் கல்லுரல் இல்லாததால் கிரைண்டரிலேயே அரைக்க வேண்டி இருக்கு. அதிலும் இந்த டேபிள் டாப் கிரைண்டருக்குத் தண்ணீர் ஊற்றலைனா சரியா அரைபடாது. ஆகவே அரைத்து விட்டு மாவை உடனேயே வெள்ளைத் துணியில் கட்டி வைச்சுடணும். தேவையானால் பண்ண ஆரம்பிக்கும்வரை குளிர்சாதனப் பெட்டியில் கூட வைக்கலாம். அதன் பின்னர் பண்ண ஆரம்பிக்கையில் வெளியே எடுத்துத் தேவையான மாவோடு உப்பு, வெண்ணெய், ஜீரகம், பெருங்காயம் போட்டு முறுக்குக்குப் பிசையவேண்டும்.
கீழே உள்ள படத்தில் துணியில் கட்டிய மாவை முறுக்குக்குப் பிசைய எடுத்திருக்கேன். புழுங்கலரிசியிலே செய்தாலும் இதை இன்னமும் ருசி பார்க்கலை. இன்னிக்குக் கிருஷ்ணருக்கு இதுவும் உண்டுனு காட்டிட்டுத் தான் சாப்பிடணும். ஆகவே உங்களுக்கும் கிடையாது! :)
முறுக்கு மாவு உப்பு, வெண்ணெய், பெருங்காயம் ஜீரகம் வறுத்து அரைத்த உளுத்தமாவும் கலந்து பிசைந்தது. நீர் தெளித்துக் கொண்டால் போதும். கவனமாக நீர் சேர்க்கவும்.
சுற்றிய முறுக்குகள். பெரிசாச் சுற்றினால் பாதி கூடத் தின்ன முடியறதில்லை. ஆகையால் சுற்றும்போதே இரண்டு சுற்று முறுக்காகச் சுற்றிவிட்டால் சரியா இருக்கும். யாருக்கானும் கொடுக்கிறதுனாலும் வசதி.
நேற்று அதிக வெயிலால் சமையலறையில் எதிரே முன்னர் நாங்கள் இருந்த பகுதியிலிருந்து பிரதிபலித்த சூரிய ஒளியின் வெளிச்சம் அதிகமாக இருந்தது. ஆகவே படங்கள் கொஞ்சம் சுமார். :(
அடுப்பில் எண்ணெயில் வேகும் முறுக்குகள்.
வெந்த முறுக்குகள். நல்லாச் சிவப்பாக வேக விட்டு எடுக்கலாம்.
இப்போ அடுத்துத் தட்டை செய்ய மீதி மாவை எடுத்துக் கொண்டு காரப்பொடி, உப்பு, பெருங்காயம், ஊற வைச்ச கடலைப்பருப்பு, தேங்காய்க்கீற்றுகள், வெண்ணெய் ஆகியன போட்டுக் கலந்து கொள்ளவும்.
தட்டைக்குப் பிசைந்த மாவு. இதுக்கும் உப்பு, வெண்ணெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, தேங்காய்க்கீற்றுகள், வறுத்து அரைத்த உளுத்தமாவு சேர்த்துப் பிசைய வேண்டும். நீர் ஊற்ற வேண்டாம்.
தட்டைகள்
அடுப்பில் வேகின்றன தட்டைகள்
வேக விட்ட தட்டைகள். அதிக வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை. ஜன்னலுக்கு எதிரே வைச்சுட்டேன். யாருக்கானும் தேவையானாப் பயன்படுத்திக்கலாம் என்பதால் இப்போப் போட்டிருக்கேன். புழுங்கலரிசி இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். இப்போது கூட ஊற வைச்சுப் பண்ணிக்கலாம். இப்போ நான் கிளம்பவேண்டிய நேரம் வந்தாச்சு. மிச்சம் முடிஞ்சா ராத்திரி, இல்லைனா நாளைக்குக் காலம்பர! வேலை இருக்கு, வரேன்.
சுற்றிப் போடுங்கள்... முறுக்கின் இழைகள் அழகாக வந்திருக்கின்றன.
ReplyDeleteகோகுலாஷ்டமி வாழ்த்துகள். ஆசிரியர் தின வாழ்த்துகள்.
முறுக்கைச் சுத்தித்தான் பண்ணுவாங்க ஶ்ரீராம், நானும் சுத்தி இருக்கேன். :) உங்களுக்கும் வாழ்த்துகள்.
Deleteஆஹா நாக்கில் எச்சில் ஊறுகிறது சிறு வயது பழைய நினைவுகளில் மனம் மூழ்கி விட்டது
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, ராத்திரி வரை பொறுத்திருக்கணுமே! :)
Deleteகண்ணன் பேரைச் சொல்லிச் சொல்லி நாமே தின்போமே./ இப்போல்லாம் ஒரே நாளிலே எல்லாமும் பண்ண முடியலை/
ReplyDeleteஎல்லாமும் என்றால்...? அதற்கும் ஏதாவது கணக்கு இருக்கிறதா.? வாழ்த்துக்கள்.பலகாரம் பண்ணும்போதே பிறருக்குக் கொடுக்கும் அளவையும் நிர்ணயித்து விடுகிறீர்களோ.
வாங்க ஜிஎம்பி சார், பண்டிகைகள் எல்லாமும் இப்படி விதவிதமாகச் சமைத்து அக்கம்பக்கத்தினருக்கும் விநியோகித்து வீட்டு வேலை செய்பவர்களுக்கும் கொடுத்து நாமும் உண்டு மகிழத்தானே. கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! ஆண்டாள் சொல்லி இருப்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
Deleteநிவேதனம் செய்வதற்குக் கணக்கு எல்லாம் இல்லை. முடிந்தவரை முடிந்ததைச் செய்யலாம். என் அம்மா வீட்டில் அம்மாவுக்கு முறுக்கு சுற்ற வராது என்பதால் முறுக்கு இருக்காது. மற்ற பக்ஷணங்கள் இருக்கும். இன்னும் சிலர் வெறும் பாயசம், வடையோடு நிறுத்திப்பாங்க. அவரவர் சௌகரியம் இதெல்லாம். எனக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுப்படியில் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் இரண்டு நாளாகச் செய்தேன். கொடுப்பதற்கும் கணக்கெல்லாம் வைச்சுக்கலை. ரொம்பப் பெரியதாகப் பண்ணினால் எல்லோரும் இவ்வளவு பெரிதா என்று கேட்பார்கள். நிதானமாகப் பண்ணினால் ஒன்று கொடுக்கும் இடத்தில் இரண்டாகக் கொடுக்கலாம். இதெல்லாம் கணக்கில் சேர்த்தி இல்லை. பிறருக்குக் கொடுக்கும் அளவை நிர்ணையிப்பது என்ற அர்த்தம் வருவதே உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துத் தான் புரிகிறது. இவ்வளவெல்லாம் யோசிக்கவில்லை.
Deleteஆனந்த மயமான நாள்.. அம்மா,பாட்டி எல்லாம் புழுங்கலரிசியில் தான் செய்வார்கள். தே. எண்ணெயில்
ReplyDeleteபொரித்து எடுப்பார்கள்.. மணம் வீடு கொள்ளாது. வெங்கலப் பானையில் போட்டு வைத்தால்
எத்தனை நாளானுலும் கெடாது.
நீங்கள் பாரம்பர்யம் மாறாமல் செய்வது மிகுந்த மகிழ்ச்சி. கண்ணன் காப்பான்.
ஆமாம், ரேவதி, என் அம்மா தட்டை மட்டும் புழுங்கலரிசியை அரைத்துச் செய்வார், முறுக்குச் சுற்ற வராது. நான் சுற்ற ஆரம்பிச்சதும் சுற்றிக் கொடுத்திருக்கேன். தே.எண்ணெய் தான் நான் பயன்படுத்துவதும். அரை கிலோ எண்ணெய்க்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணுவேன். அதுக்கு மேல் எண்ணெய் செலவு செய்வதில்லை. :)
Deleteஅம்மா இந்த தட்டைக்கு உளுத்தமாவு சேர்க்க வேண்டியதில்லையா?!.. முறுக்கின் இழைகள் அழகாக இருக்கின்றன...'இதுவும் உண்டு'ன்னு கிருஷ்ணனுக்குக் காட்டுவீங்களா!!.. நீங்க நிவேதனத்துக்கு வைச்சதுமே குட்டிக் கிருஷ்ணன் ஆசையா வந்து எடுத்துத் தின்பான் பாருங்க!.... :))!.
ReplyDeleteஹிஹிஹி, பார்வதி, நைசா வைச்சீங்களே ஒரு குட்டு. நான் சும்மாப் புழுங்கலரிசியிலும் செய்யலாம் என்று காட்டுவதற்காகப் படங்கள் எடுத்துப் போட்டேன். விபரமாக அளவெல்லாம் எழுதாததால் தேவையான பொருட்களைக் குறிப்பிடவில்லை. தட்டைக்கு மட்டுமில்லை, முறுக்கு, உப்புச் சீடை எல்லாவற்றுக்கும் உளுத்தமாவு சேர்க்கணும்! :) புழுங்கலரிசியையே அரைச்சு உளுத்தமாவு போட்டு உப்புச்சீடையும் போடலாம். :) வேணும்னா பச்சைமிளகாய், தேங்காய் உப்பு, பெருங்காயம் சேர்த்துத் தனியா அரைச்சும் உளுத்தமாவு போட்டுக் கலந்து வெண்ணெய், ஊற வைச்ச கடலைப்பருப்பு, தேங்காய்க் கீற்றுகள் சேர்த்துச் சீடை போடலாம். :) வெடிக்காது. நான் உறுதி தருகிறேன்.
Deleteஅம்ம்ம்ம்மாஆஆஆ!.. குட்டெல்லாம் இல்லைம்மா நிஜம்மா!!!!... நான் நீங்க கொடுக்கற ரெசிபி பார்த்து தான் நிறைய பட்சணங்கள் கத்துக்கிட்டேன்.. அப்படியிருக்க குட்டாவது!... புழுங்கலரிசின்னா உளுத்த மாவு வேண்டாம் போலன்னு தான் நினைச்சேன்.. நான் ரெடிமேட் மாவெல்லாம் வாங்கறதில்லைங்கறதால, வீட்டுலயே வறுத்து அரைத்து சலிச்ச உளுத்த மாவு தான் போடுவேன்.. அதைப் பண்ண கொஞ்சம் சோம்பேறித்தனம்...புழுங்கலரிசில செஞ்சிடலாமேன்னு நினைச்சு தான் கேட்டேன்.. இதுக்கும் போடணுமா!!!!.. ஆனாலும் ஒரு தடவை செஞ்சு பார்க்கலான்னு நினைக்கறேன்.. இந்த வருஷம் வீட்டுல பண்டிகை இல்லைங்கறதால, அடுத்தடுத்த நாள் பட்சணம் பண்ணி நிவேதனம் பண்றேன். இது பண்ணிப் பார்க்கறேன்...
Deleteஅட!! சும்மா வம்புக்குத் தானே! :)
Deleteஅட எங்க ஊரு முறுக்கு, தட்டை....புழுங்கரிசி....நல்ல டேஸ்டியா இருக்கும்...
ReplyDeleteஎங்கள் வீட்டில் எப்போதும் இந்த அரிசியில் அதுவும் டொப்பி அரி என்று சொல்லும் அரிசியில் தான் செய்வார்கள் டொப்பி என்பது வேறு ஒன்றுமில்லை ஐ ஆர் 20...வகை...ஆனால் கிருஷ்ண ஜெயந்தி அன்றுமட்டும் பச்சரிசி இடித்துதான் அந்த மாவில்தான் செய்வார்கள்...எனக்கு புழுங்கரிசி முறுக்கு தட்டை ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் மாமியார் குடும்பத்தில் புழுங்கரிசியில் செய்தால் பிடிக்காது என்பதால் நான் தனியாக இருக்கும் போது மட்டும் செய்து கொள்வேன்.
இங்கே சென்னையில் பெசன்ட் நகர் போகும் வழியில் உள்ள சரவணா அரிசிக் கடையில் டொப்பி அரிசி என்றாலே கிடைக்கின்றது.
நீங்கள் சொல்லி இருப்பது போலத்தான்.....தண்ணீர் கூடி விட்டால் துணியில் சுற்றி வைத்துவிட்டால் சரியாகிவிடும். வீட்டில் நேரம் கழித்துச் செய்ய வேண்டும் என்றால் அப்படித்தான் ஈரமான வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுவார்கள். கல் உரலில் தான் நாங்கள் அரைப்பதுண்டு. நான் தான் அரைப்பேன் அப்போது...தட்டைக்கு புழுங்கலரிசியோடு சிவப்பு மிளகாய், பெருங்காயம் எல்லாம் (கட்டிப்பெருங்காயம் ஊறவைத்து) போட்டு அரைப்பது வழக்கம்...எங்கள் பக்கங்களில்...
இப்போது க்ரைண்டர்.
கீதா
வாங்க கீதா, அரிசியெல்லாம் நல்ல அரிசி தான். என்ன உப்புத் தான் சமுத்திரத்திலே இருந்து வந்து இறங்கிடுச்சு! :( மற்றபடி இந்தப் புழுங்கலரிசி தட்டை, முறுக்கு அடிக்கடி செய்வேன். எங்க மாமியார் வீட்டிலும் புழுங்கலரிசி போட்டால் முறுக்கே சுற்ற முடியாது என்பார்கள். அவங்களும் கும்பகோணம் தான். முன்னாடி எல்லாம் கல்லுரலில் தான் அரைத்துக் கொண்டிருந்தேன். கல்லுரலை விட்டே 20 வருஷம் ஆகப் போகிறதே. தட்டைக்குனு தனியா அரைச்சாக் காரங்களைச் சேர்த்தே அரைப்பது எங்களுக்கும் வழக்கம் தான். இரண்டுக்கும் சேர்த்து அரைத்ததால் காரத்தைத் தனியாகச் சேர்த்தேன். :)
Deleteஓ!! ஓகே காட் இட்..
Deleteகீதா