எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 19, 2018

சாமியே சரணம் ஐயப்பா! 3

பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.

"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது: பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.



எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.

இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? 

தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. ஏற்கெனவே அவள் பெற்ற வரம், சாபம் படித்தோம்.  அதே மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியமோ அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி!

இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோப்பெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலி வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான்.

அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.

ஐயப்பன் க்கான பட முடிவு

ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகைப்புறத்து அம்மன், என்ற பெயர்களால்  அழைக்கப்பட்ட மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்!!!!!

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா! 

28 comments:

  1. அற்புதம்...
    ஹரிஹரசுதனின் சரிதம்... படிக்கவும் கேட்கவும் பாப விநாசனம்!...

    சாமியே சரணம் ஐயப்பா!...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, சரணம் ஐயப்பா!

      Delete
  2. செவி வழிக் கதைகளையும் சேர்த்தே சொல்வதும் சிறப்பு. நல்ல நேரத்தில் நல்ல (மீள்) பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நன்றி.

      Delete
  3. தனிப்பட்ட முறையில், நான், இது நிகழ்ந்த வரலாறு, வரலாற்றுப் பாத்திரங்களின் தெய்வீக அம்சத்தைக் கணக்கில்கொண்டு தெய்வ அளவிற்கு உயர்ந்தார்களோ என்று நினைக்கிறேன் (இராமன், கண்ணனைப் பற்றியும் அவ்வாறு நினைக்கத் தோன்றும்... தெய்வ அவதாரங்கள் என்று)

    ReplyDelete
    Replies
    1. நெல்லை அதே அதே....எனக்கும் இப்படியான எண்ணம் உண்டு..

      கீதா

      Delete
    2. @நெல்லை, தி/கீதா, இது பலரும் பலமுறை சொல்வது தான். புதிது இல்லை! ஆனால் நம்புகின்றவர்களும் உண்டு. அவரவர் கருத்து அவரவருக்கு! இல்லையா?

      Delete
    3. ஸ்ரீ ஐயப்ப அவதாரத்துக்கு முன்னும் பின்னுமாக நிறைய சம்பவங்கள்...

      பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்த பின் -
      அதன் கடைசியாக நிகழ்ந்ததே ஹரிஹர சங்கமம்... ஸ்ரீ சாஸ்தா ஜனனம்...

      (இதன் அர்த்தம் புரியாத வறட்டுத் தவளைகள் ஆயிரம்.. பல்லாயிரம்!..._

      அதன்பின் - தக்ஷ யாகத்தில்
      சிவ விரோதமாகக் கலந்து கொண்ட தேவர்களுக்கு சூரபத்மனால் சாத்துப்படி கிடைக்க வேண்டும்....

      அந்த இடத்தில் இந்த்ராணியைக் காப்பதற்கு மீண்டும் தர்ம சாஸ்தா திருத்தோற்றம்...

      அதற்குப் பின் -
      ஸ்ரீ சரவண உதயம்!... அதன் பின் திசை மாறும் ...

      மகிஷி வதத்துக்காக - ஸ்ரீ பால சாஸ்தா!...

      அதன் பின் பந்தள ராஜனின் குறை தீர்க்க மகனாக திரு அவதாரம்..
      புலிப் பாலுக்காக கானகம் செல்வதும் மணிமுடி துறப்பதும் சபரிக்கு மோட்சமும் அவதார நோக்கம்...

      அப்போது தான் நிஷ்டையில் அமர்கின்றார் - சபரி பீடத்தில்...

      அதன் பின் -
      300/400 ஆண்டுகளுக்கு முன் அரபு கடல் கொள்ளையர்களையும் உள்நாட்டு முரடர்களையும் அடக்கும் பொருட்டு பந்தள சைன்யத்தில் சாதாரண வனவாசி இளைஞனாக உட்கலந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றார்...

      அந்த மாவீரனை தன் மகனாக ஸ்வீகரிக்க பந்தள ராஜன் விரும்பும் போது
      தான் யார் என்பதைக் காட்டி காட்டுக்குள் மூடிக் கிடந்த சபரி பீடத்தில்
      ஜோதியாக ஐக்கியம் ஆகி தரிசனம் தருகின்றார்...

      இந்த விஷயத்துடன்
      மேலும் சிலவற்றைக் கலந்தும் அல்லது இதையே அங்குமிங்குமாக மாற்றியும் தான்
      இப்போது சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்....

      ஜகன் மோகினியிடமிருந்து வாவரன் (வாவர்) வரை ஒரே நூலாகப் பிடித்து விடுகின்றார்கள்..

      அவர்களிடம் போய் -
      ஐயா.. அது அப்ப்டியில்லை என்றால் கேட்பார்களா?...

      இன்னும் சிலர் - அரபியில்,
      லா இலாஹா.. என்றெல்லாம் வரும் சூராக்களைச் சொல்லி பஜனை பண்ணுகின்றார்கள்...

      அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியுமா.. என்று நமக்குத் தெரியவில்லை!...

      எப்படியோ
      ஸ்வாமி எல்லாரையும் காத்து ரக்ஷிக்கின்றார்...

      Delete
    4. விளக்கமாக எழுதுங்கள் துரை! படிக்கலாம். இங்கே எதைச் சொல்ல வரீங்கனு புரியலை எனக்கு! :( வாவர் பத்தியா? அல்லது மனிதனாக இருந்தவர்களை தெய்வ நிலைக்கு நாம் உயர்த்திவிட்டோம் என நெல்லைத் தமிழரும், தி.கீதாவும் சொல்லுவது பற்றியா? பலர் வீடுகளிலும் குலதெய்வங்களாக இருப்பவர்களையும் கூட அந்த அந்தக் குடும்பத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்து பல தியாகங்கள் செய்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஏதோ ஒருவித மஹிமையுடன் வாழ்ந்தவர்களாகவே சொல்லப்படுகின்றன. அப்படி இருந்து இறந்தவர்களையே தெய்வநிலைக்கு உயர்த்தியதாயும் குலதெய்வமாக மாறிப் போனார்கள் என்றும் சொல்கின்றனர்.

      Delete
    5. ஸ்ரீ தர்ம சாஸ்தா தான் பல்வேறு காலகட்டங்களில்
      மக்களுக்காக இறங்கி வந்து அருள் புரிய வந்தார் என்பதைக் குறித்துள்ளேன்...

      Delete
    6. ஆமாம் துரை, அதைத் தெரிந்து கொண்டேன் நானும் ஆனால் இன்னமும் ஏதோ ஒன்று சொல்லாமல் விட்டது போல்! அந்தக் கனவின் தாத்பரியமோ? எதுவோ விட்டுப் போனாப்போல்!

      Delete
  4. அருமையாக தெளிந்த நீரோடைபோல சொல்லிச் செல்கின்றீர்கள்.
    சாமியே சரணம் ஐயப்பா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! பாராட்டுக்கு நன்றி.

      Delete
  5. அருமை அம்மா...

    சுவாமியே சரணம் ஐயப்பா...

    ReplyDelete
  6. மனித மனம் எப்படி பிரதிபலிக்கிறது! தனக்கு குழந்தை இல்லாத போது வேண்டி வேண்டி வரம் அருளக் கிடைத்ததும் தனக்கு குழந்தை பிறக்கும் போது இறைவனின் குழந்தையின் மீது பொறாமை!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரி நிறைய நடந்திருக்கு தி/கீதா, மனிதன் எப்போதுமே தனக்குச் சொந்தமாக எதுவும் இருக்கணும்னு தானே நினைப்பான். பிள்ளையே பிறக்கலைனா ஒரு வேளை மாற்றம் ஏற்பட்டிருக்காதோ என்னமோ!

      Delete
  7. ஐயப்ப கதை வெகு அழகாய் சொல்லி வருகிறீர்கள்.
    இந்த மாதம் ஐயப்பன் படம், பாடல்கள் என்று தொலைக்காட்சியிலும் பகிர்ந்து வருகிறார்கள்.
    ரேடியோவிலும் மணிகண்டன் பாடல்கள்.
    செவிவழி கதையும் கேட்டு இருக்கிறேன். அதை அடிப்படையாக வைத்து சுவாமி ஐயப்பன் என்ற தொடர் வந்தது . காட்டு மக்கள் தான் முதலில் அவரை பூஜை செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி அரசு!

      Delete
  8. அடுத்ததையும் அறிய ஆவலுடன்....தொடர்கிறோம்

    கீதா

    பல தகவல்கள் அறிந்தோம். ஐயப்பன் கதை அறிந்தது என்றாலும் சில தகவல்கள் புதியது. தொடர்கிறோம்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி Thi/Geetha, and Thulasidaran

      Delete
  9. பத்து வருடத்திற்கு முன் இருந்த நீரோட்டம் போன்ற நடை, மகா பாரதம் போன்ற கிளைக்கதைகள், பேச்சு தமிழ் அற்ற கட்டுரைத் தமிழ் ஆகியவை தற்போது நீங்கள் எழுதும் பதிவுகளில் காணப்படுவதில்லை. இதைத்தான் வயது வித்யாசம் அல்லது வயது கூடிவிட்டது என்று சொல்கிறோமோ?

    சபரிமலை முழுதும் போலீஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. 15000 போலீஸ் குழுமி இருக்கும்போது பக்தர்களுக்கு கோவிலில் இடமில்லை. இது இல்லாமல் பஸ் வசதியும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள். 80 கி.மி க்கு முன்பே தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.KSRTC பஸ் புறப்பாடையும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.

    கால்நடையாகச் செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    உணவு தண்ணீர் தங்குமிடம் போன்றவை கிடைக்கவில்லை. தங்குமிடம் போலீஸ் கட்டுப்பாடில்.
    பையர் நிலைமை சாந்தம் ஆனவுடன் மலைக்கு செல்வது நன்று.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, பெரும்பாலும் பேச்சுத் தமிழில் எழுதுவதையே விரும்புவேன். சில சமயங்கள் சிலர் சொல்லுவதால் மாற்றிக் கொண்டதும் உண்டு. அதோடு இப்போது எல்லாம் படிப்பது குறைந்திருக்கு. முக்கியமாய்க் கண் ஒரு பிரச்னை! அதோடு நேரம் போதாமை! முன்னைவிட வேலைகள் இப்போ ஜாஸ்தியானு யோசிச்சால் அதுவும் இல்லை. ஆனாலும் நேரம் பறந்து விடுகிறது. இணையத்தில் அமருவதையும் இப்போதெல்லாம் குறைத்துவிட்டேன். மாலை 5-00 அல்லது 5௩0க்கு மேல் இணையத்தில் உட்காருவதே இல்லை. இது எழுதிய போதெல்லாம் இரவு ஒன்பது ஒன்பதரை வரை உட்கார்ந்திருப்பேன். கண் பிரச்னை வந்ததும் படிப்பதில் இருந்து எல்லாமே குறைந்து விட்டது. அதோடு அநேகமாக எல்லாவற்றையும் எழுதி விட்டதால் "இனி என்ன?" என்ற ஓர் உணர்வும் அவ்வப்போது தோன்றுகிறது. புதிதாய் இருந்தால் பகிர்வேன் நிச்சயமாய்!

      Delete
    2. 5 அல்லது 5-30 என வந்திருக்க வேண்டும். பையர் எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு தான் அங்கிருந்து கிளம்புவார். இங்கே நிலைமை அதற்குள் சீரடையும் என எதிர்பார்க்கிறோம். இல்லைனா அங்கேயே மீனாக்ஷி கோயிலில் இருமுடியை இறக்கணும். ஐயப்பன் என்ன நினைக்கிறானோ! :(

      Delete
  10. அய்யப்பன் பற்றிக் கேட்ட கதைகள் ஏராளம் அண்மையில் வெகு வித்தியாசமாகவும் கேள்விப்பட்டேன் அதைப் பதிவுசெய்யும் ஐடியாவுமுண்டு

    ReplyDelete
    Replies
    1. பதிவு செய்யுங்கள் ஐயா. காத்திருக்கோம் படிக்க.

      Delete
  11. தெரிந்த விஷயமாக இருந்தாலும், சில விஷயங்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அதுதான் தெய்வீகத்தின் சக்தி போலும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பானுமதி. அவரவரின் சொந்த அனுபவங்களும் சேர்ந்து கொள்கின்றன.

      Delete