எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 12, 2018

ஸ்ரீலலிதையின் சோபனம்! சோபனம்! சோபனம்! மங்களம்!

     


கொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், பிரச்னைகள் இருக்குமே. அனைவரும் எல்லா நலனும் பெற்று அம்பிகையின் அருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்திக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.

இதற்கு முந்தைய பதிவு இங்கே! 

இப்போ தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள். லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள்.

ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!!”

“ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ”

என்று ஸ்ரீலலிதையின் சஹஸ்ரநாமம் இவளைப் போற்றும்.

அடுத்து நம் நாட்டில் இப்படி ஆக்ஞா சக்கரஸ்தானமாய்க் கருதப்படும் இடம் காசி க்ஷேத்திரம் ஆகும். அம்பிகை இங்கே துர்க்கையாகவும் காசி விசாலாக்ஷியாகவும் இருவிதப் பிரதான சக்திகளாய்த் தோன்றுகிறாள். இந்த ஆக்ஞா சக்கரம் ஆத்மத்வம் என்றும் கூறுவார்கள். இங்கே ஸ்வயம்பிரகாசமான சக்தியைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்குமே தவிர அதற்காக சுயமான ஒளி இல்லை. சூரிய, சந்திரரும், மின்னல்களும், அக்னியுமே அந்தப் பிரகாசத்தில் தெரியாதெனில் மற்றவை எம்மட்டு?? இதைக் கடந்தே ஸஹஸ்ராரத்தில் பிரவேசிக்கவேண்டும். இப்படி ஆத்மாவை எதுவும் ஒட்டாது என்பதை இங்கே பார்த்தோம் அல்லவா??? (இனிமே ஆத்மா சாந்தி அடையட்டும்னு பிரார்த்திக்கும் முன்னே கொஞ்சம் யோசிங்க)

நாம தான் கீழே தானே போவோம்?? ஆகவே கீழேயே போய்ப் பார்ப்போமே! ஆத்மாவிலிருந்து கீழே வந்தால் மனசு தோன்றுகிறது. அதே போல் நம் புருவ மத்தியிலிருந்து கீழிறங்கினோமானால் நெஞ்சுக்குழி வருகிறது. இதுவே விசுத்தி சக்கரம். ஆகாயதத்துவம்.

விசுத்தி –சக்ர- நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா

அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ”

சிவந்த ரத்த நிறத்துடனும், மூன்று முகங்களுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை இங்கு பதினாறு தள கமலத்தில் டாகினீ என்னும் பெயரில் விளங்குகிறாள். இங்கு அம்பிகையும், ஈசனும், சூரியனையும், சந்திரனையும் போல் தண்மையும், வெம்மையும் கலந்து பூவோடு சேர்ந்த மணம் போலவும், கரும்பில் கலந்திருக்கும் இனிமை போலவும், தீபத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒளி போலவும் காட்சி அளிக்கின்றனர். சகல ஜீவர்களுக்கும் ஜீவாதாரமாய்ப் பிரகாசிப்பதே இவர்கள் இருவரின் ஆநந்தமயமான ஜோதிப் பிரகாசமே. நம் புண்ணிய பாரதத்தில் இப்படி ஆகாய க்ஷேத்திரமாய் விளங்கிப் பிரகாசிப்பது சிதம்பரம் க்ஷேத்திரமே. இங்கு ஆகாய தத்துவ உபாசனை. தஹராகாசம் செய்யப் படுகிறது. “தஹராகாச-ரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இங்கு அம்பிகையும், ஈசனும் வ்யோமேஸ்வரனும், வ்யோமேஸ்வரியாகவுமோ அல்லது அர்த்தநாரீஸ்வரராகவோ வழிபடப் படுகின்றனர். பட்டர் இதை,

“பரிபுறச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே!” 

என்கிறார்.

அடுத்து ஆகாய தத்துவத்திலிருந்து இன்னும் கீழே வரணும். ஆகாயத்திலிருந்து தோன்றியது வாயு.

“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா
தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர –ஸம்ஸ்திதா

காலராத்ர்யாதி-ச்க்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ”

இங்கு பனிரண்டு தளக் கமலத்தில் வீற்றிருக்கும் அம்பிகை ச்யாமளையாக ராகினீ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறாள். இவளே கல்விக்கு அதிபதி. இவள் நம் இதயத்தில் ஞானத் தாமரையை மலர வைக்கும் ஹம்ஸங்களாக ஈசனோடு உலவுகிறாள். நம் மனத் தடாகத்தில், இதுவே மானசரோவர் எனப்படும். இந்த மானசரோவரில் பக்தர்களின் ஞாநத்தையே அநுபவித்து அதைப் பற்றியே தங்களுக்குள் இனிமையாகப் பேசிக்கொள்ளும் ஹம்சங்களான ஈசனும், அம்பிகையும் ஹம்சேஸ்வரனாகவும், ஹம்சேஸ்வரியாகவும் இருக்கின்றனர். இவர்களின் அருளாலேயே நமக்கு சகல வித்தைகளும் கிடைக்கப் பெறுகிறோம். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணையே அனைத்து வித்தைகளும். உள்முகத் தியானத்தாலேயே இது கைகூடும். இதற்காக ஜபிக்கப் படும் மந்திரமும் அஜபா மந்திரமாகவே சொல்லப் படும். தக்க குரு மூலம் தீக்ஷை பெற்று மந்திர ஜபம் உபாசிக்க வழிமுறைகளை ஏற்று முறையாக ஜபிப்பவர்களுக்கு பிரத்யக்ஷமாகத் தரிசனம் கிட்டும். ச்யாமளையின் அருளும் கிடைக்கும்.

“கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியல்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!”

என்று இவளை வியந்து கூறுகிறார் பட்டர் பெருமான். கடம்பவனத்தில் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த அழகான வீணையும் ஏந்திய வண்ணம் பச்சை நிறப் பேரழகியாகக் காட்சி அளிக்கிறாளாம் அம்பிகை. நம் நாட்டில் அநாஹதத்தில் உள்ள ஹம்ஸ்த்வந்த்வ உபாசனை முறைக்கு ஏற்பட்ட தலம் ஆவுடையார் கோவில் ஆகும். இனி ஸ்ரீலலிதையின் சோபனப் பாடல்களில் ஸ்ரீவித்தை ஜபத்தின் மஹிமை கூறுதல்.

மந்திரங்களுக்கெல்லாம் பெரிதான ஸ்ரீவித்தை
மஹாகுருவினிடத்தில் வேண்டிக்கொண்டு
மந்திரத்திற்குச் சொன்ன ஜபஹோமங்கள் செய்து
மஹிமை தேவாளுக்குப் போஜனமளித்துப்
பின்னர் தேவியை பரமாத்மாவாய்த் தியானித்து
பிறகு நிஷ்காம்ய ஜபம் செய்தபேர்க்கு
எண்ணின காரியம் கைகூடும் ஜகத்திலே
இவர்கள் எங்கும் பூஜ்யர்-சோபனம் சோபனம்

அசுத்தத்துடன் சோபனத்தைச் சொன்னபேர்க்கும்
அசங்கித்த பேர்க்கும் பிணிகளுண்டு
அசுத்தமில்லாமலும் அசங்கையில்லாமலும்
அம்மன் சோபனமென்றும் பக்தியுடன்
விச்வாஸமாய்ச் சொன்னபேர்க்கும் கேட்டவர்க்கும்
வியாதியில்லை சத்ரு பாதையில்லை
நிஜமாய் ஜ்வரம் வியாதி ரோகாதிகளில்லை
நித்ய ஸம்பத்துண்டு- சோபனம் சோபனம்

இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம்
தேவிகளென்று மனதிலெண்ணி
சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்
ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து
எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோ
அந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும்
ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும்
தீர்க்காயுஸுமுண்டு –சோபனம் சோபனம்

இனி அம்பிகையை வழிபடவேண்டிய முக்கியமான காலங்கள் நாளை பார்ப்போம். அதோடு மங்களம் பாடி முடியும். 






அநாஹதத்திற்கு அடுத்து ஸ்வாதிஷ்டானம். அக்னியின் இருப்பிடம் ஆகும் இது. வாயோர் அக்னி என்பார்கள். வாயுவில் இருந்து அக்னி உண்டாகிறது. இங்கு ஆறு தள கமலத்தில் அம்பிகை காமேசுவரியாகப்பிரகாசிக்கிறாள். “காகினீ” என்ற பெயரிலும் வழங்கப் படுவாள்.

ஸ்வாதிஷ்டாநாம்புஜகதா சதுர்வக்த்ர-மநோஹரா
சூலாத்யாயுத-ஸம்பந்தா பீத வர்ணா திகர்விதா
மேதோ-நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா
த்த்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ!!

அக்னி தத்துவமாய்க் காட்சி அளிப்பது திருவண்ணாமலையாகும். இங்குள்ளது தேஜோமயமான லிங்கம். மேலும் இங்கு தான் அம்பிகையும், ஈசனும் சமமாகவும் ஆனதாய்ச் சொல்லப் படுகிறது. அம்பிகை ஈசனின் உடலில் சரிபாதியை எடுத்துக்கொண்ட அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தை இங்கே ஒவ்வொரு கார்த்திகைப் பெளர்ணமி தீபத்தின் போதும் காணமுடியும். ஈசன் இங்கே ஸமவர்த்தகேஸ்வரராகவும், அம்பிகையை ஸமயா என்றும் வணங்குவார்கள் சாக்த உபாசகர்கள். நெற்றிக்கண்ணால் அகில உலகத்தையும் அழித்து சம்ஹரிக்கும் ருத்ரனை ஸமயா என்னும் அம்பிகை தன் குளிர்ந்த பார்வையால் குளிர்ச்சி அடைய வைத்து அதே சமயம் எரிந்த இவ்வுலகையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறாள். காமனை எழுப்பிய சஞ்சீவனியான அம்பிகை இங்கு நம் அனைவரையும் உயிர்ப்பிக்கும் சர்வ சஞ்சீவியாகவும் விளங்குகிறாள். மேலும் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு வேறு சமயங்களும் இல்லை. அவளை விடவும் உயர்ந்த தாய் வேறொருத்தியும் உண்டோ? இதையே அபிராமி பட்டர்,

உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!”

என்கிறார். ஏக உருவென்று அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தைக் கூறும் பட்டர், பக்குவமே இல்லாத நம் போன்ற பக்தர்களையும் அம்பிகையின் திருக்கடைக்கண் பார்வையானது ஆட்கொண்டு தனக்கு அன்பு செய்ய வைக்கும் என்கிறார். இதை விடவும் வேறு உயர்ந்த்தொரு சமயம் வேறு உண்டா என்று கேட்கும் பட்டர் பெருமான், அம்பிகை மேல் வைத்த பக்தியால் நமக்கு இனி மற்றொரு பிறவி எடுத்துத் துன்பப் படும் பிணி இல்லை. நம்மை ஈன்றெடுக்க மனித உருவில் இனி ஒரு தாய் இல்லை. அம்பிகையே நமக்குத் தாயாக ஆனாள். மேலும் பெண்ணாசையையும் ஒழிக்க வல்லது அர்த்த நாரீசுரத் தியானம் என்பதைச் சுட்டும் விதமாய்க் கடைசியில், “ அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே” என்கிறார். மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய பெண்கள் மேல் வைத்த ஆசையும் ஒழிந்து போகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொதுவாகச் சக்கர வரிசையில், விசுத்தி, அநாஹதம், மணிபூரகம் என்றே வரும். ஆனால் இவ்வுலகப் பஞ்சபூதத் தத்துவங்களின்படி, ஆகாயத்தின் பின் வாயுவும், வாயுவிற்குப் பின்னர் அக்னியும் தத்துவமானதால் ஸ்வாதிஷ்டானத்தைப் பார்த்தோம். அடுத்து மணிபூரகத்தைப் பார்ப்போமா? மணிபூரகம் நீரின் இருப்பிடமாய்க் கூறப்படும். நம் தமிழ்நாட்டில் திருவானைக்காவல் ஜலதத்துவமாய்ச் சொல்லப் படுகிறது. இங்கே அம்பிகை
பத்துத் தளக் கமலத்தில், ஈசனோடு அம்ருதேஸ்வரியாய்க் கூடிக் காட்சி அளிக்கிறாள். லாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

“மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா
வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி-ராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா
ஸமஸ்த-பக்த ஸுகதா லாகின்யம்பா-ஸ்வரூபிணீ!!

பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் மாபெரும் தெப்பமாய் இங்கே அம்ருதேஸ்வரரும், அம்ருதேஸ்வரியும், எப்படி பக்தர்களின் கண்களில் காட்சி அளிக்கின்றார்கள் எனில் நீருண்ட மேகம் போன்ற ஈசனிடம் அந்த மேகத்தில் தோன்றும் மின்னல் கொடியைப் போல் காட்சி அளிக்கிறாள். ஆசையானது மனிதர் மனதில் சூரிய வெப்பத்தைப் போல் உண்டாகிறது. அதனாலேயே இவ்வுலகத்தின் மேல் இடைவிடாத பற்றும் ஏற்படுகிறது. நம் ஆசையாகிய சூரிய கிரணம் அநாஹதத்தில் இருந்து கீழிறங்கி, ஸ்வாதிஷ்டானத்தின் அக்னியோடு சேர்ந்து கொண்டு, மணிபூரகத்தில் புகுந்து குளிர்ந்த மேகத்தை உண்டாக்கி அம்பிகையின் கருணை மழை பொழிந்து நம் மனதை மட்டுமில்லாமல் இவ்வுலகையும் குளிர்விக்கிறது.
இந்த அப்புவிலிருந்து தோன்றுவது ப்ருத்வி த்த்துவம். இதன் இருப்பிடம் மூலாதாரச் சக்கரம். முக்கோணத்தின் நடுவே நாலு தளத் தாமரையில் வீற்றிருக்கும் அம்பிகையை ஸாகினீ என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

மூலாதாரம்புஜாரூடா பஞ்ச வக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா
அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா
முத்கெளதநாஸக்த-சித்தா ஸாகின்யம்பா ஸ்வரூபிணீ” 

இங்கு நடராஜரோடு கூடி சிறந்த தாண்டவம் செய்யும் அம்பிகையானவள், பிரளயகாலத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை ஈசனைப் பார்ப்பதின் மூலமே உற்பத்தி செய்கிறாள்.

மஹேஸ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ-ஸாக்ஷிணீ
மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி

ஸதாசிவன் தாண்டவநர்த்தனம் (வெறும் தாண்டவம் மட்டுமே) செய்யும்போது ப்ரக்ருதி ரூபமான அம்பாளோ லாஸ்ய நர்த்தனம் (இசையுடன் கூடிய நடனம்) செய்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்க்கவே இவ்வுலகம் தோன்றுகிறது. மூலாதார க்ஷேத்திரங்களாய்க் காஞ்சியும், திருவாரூரும் சொல்லப் படுகிறது. இனி தேவியைப் பூஜிக்கும் முக்கியமான காலங்கள்.

அன்பாய் நவராத்திரி பெளர்ணமி சுக்கிரவாரம்
அம்மன் சோபனந்தன்னைச் சொன்னபேர்க்குத்
துன்பங்கள் உண்டாகமாட்டாது ஒருக்காலும்
தென் திசையை யடையார் தினஞ்சொன்னவாள்
ரொம்பச் சொல்லுவானேன் தேவி தாஸாளுக்குத்
திரிலோகமும் அவர்கட்கு ஜயம்
நம்பினபேர்களைக் காத்திடத் தேவியல்லால்
நாட்டிலே வேறுண்டோ-சோபனம் சோபனம்

அத்திரி மஹரிஷி ஆசிரமத்தில் அநசூயை
கேட்ட இக்ஞான ரஹஸ்யத்தை
நல்துறையில் வாழும் லக்ஷ்மி கடாக்ஷத்தால்
நாராயணனுரைத்த தேவி மஹிமை
ராஜேச்வரியாள் மஹிமை யகஸ்தியரும்
ஆதரவாய்ச் சொல்லச் சொன்னதற்கு
நாடு செழிக்க அவதரித்து வந்த 
மாதவர் அறிவித்தார்-சோபனம் சோபனம்

அறிந்தறியாமல் இந்தச் சோபனத்தில்
அர்த்த அக்ஷரப்பிழை இருந்தாலும் 
மஹாப்பிரபு மனுஷப்பிரபு விஷ்ணு என்பது போலும்
மராமரா என்றதொர் நாமம் போலும்
வரதசிவனார் சிவசங்கர நாமம் போலும்
வார்த்தைப் பிழைகள் தன்னைப் பொறுத்து
எதுவிதத்திலும் (பர)தேவியைத் தியானித்தால்
ஏழைக்கிரங்குவள்-சோபனம் சோபனம்

மங்கள வாழ்த்து
ஜயமங்களம் லலிதா தேவிக்கும்
ஜயமங்களம் காமேச்வரருக்கும்
ஜயமங்களம் மந்திரிணி தண்ட நாதைக்கும்
ஜயமங்களம் ஸர்வ சக்திகட்கும்
ஜயமங்களம் ஹயக்ரீவருக்கும்
ஜயமங்களம் அகஸ்தியமா முனிக்கும்
ஜயமங்களம் ஸர்வ ஜனங்கட்கும் நமக்கும்
ஜயமங்களம் நித்ய சுப மங்களம்

லலிதாம்பாள் சோபனம் முற்றுப் பெற்றது. 
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.


உதவிப் புத்தகங்கள்: 

அபிராமி அந்தாதி- உரை திரு கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 4-ம்பதிப்பு ஜூலை 1968

செளந்தர்ய லஹரி பாஷ்யத்துடன்: "அண்ணா" அவர்களால் எழுதப்பட்டது. ராமகிருஷ்ணா மடம் வெளியீடு

ஸ்ரீலலிதாம்பாள் சோபனம்: கிரி ட்ரேடர்ஸ் வெளியீடு. சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்களால் தொகுக்கப் பட்டது.பதினைந்துக்கும் மேல் பதிப்புகள் கண்டது. 

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகங்கள் மட்டும்

ஸ்ரீதேவி மஹாத்மியம் "அண்ணா" அவர்கள் உரையுடன் ராமகிருஷ்ணா மடம் வெளியீடு.


2010 ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து  மிகுந்த முயற்சியுடன் எழுத ஆரம்பித்த இது அதே வருடம் டிசம்பர் மாதத்தில் முதல் வாரம் மேற்கண்ட பதிவுகளுடன் முடிவடைந்துள்ளது. லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் குறித்து எழுதுவது எனில் இன்னும் நீண்ட காலம் தேவைப்படும். ஆழ்ந்த பயிற்சியும், தக்க குருவின் உதவியோடு புத்தக உதவிகளும் தேவைப்படும். எப்போது எனக்குக் கிடைக்குமோ தெரியலை. என்றாலும் இங்கே ஓர் சிறிய முயற்சி செய்திருக்கேன். இதைப் பலரும் அவரவர்களின் தளங்களில் அவரவர் பெயரிலேயே வெளியிட்டும் இருக்கின்றனர். ஒரே ஒருத்தரைத் தவிர்த்து யாரும் மாற்றவில்லை. :(  நான் இதை எழுதும்போதே "இல்லம்" குழுமத்திலும் போட்டு வந்ததோடு பின்னர் "மரபு விக்கி"
மரபு விக்கியிலும் இதை தரவேற்றி உள்ளேன். இதை ஓர் சிறு மின்னூலாக வெளியிடும் ஆசையும் உண்டு. அதே சமயம் அது சரியா என்னும் எண்ணமும் தோன்றுகிறது. லலிதாம்பாள் என்ன நினைக்கிறாளோ அதன் படி நடக்கும்! இது வரை பொறுமையாகப் படித்து வந்த அனைவருக்கும் என் நன்றி. தியானம், யோகம் சம்பந்தப்பட்ட இடங்களில் புரியாதோருக்கு இது கொஞ்சம் கடினமாகவே தெரியும். ஆனாலும் யோகம் பற்றியும் ஆறு சக்கரங்கள் குறித்தும் ஓரளவுக்கானும் புரிந்து வைத்திருப்பவர்களுக்குப் புரியும். இவை ஜனரஞ்சகமான பதிவுகள் அல்ல. அம்பிகையின் தத்துவத்தைப் பற்றிப் படிக்கப் படிக்க எங்கேயோ நம்மை இழுத்துச் செல்லும். கவனமாகவும் இருக்க வேண்டும். அனைவருக்கும் அம்பிகையின் அருள் பரிபூரணமாய்க் கிட்டுவதற்கு என் பிரார்த்தனைகள். 

17 comments:

  1. பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் மாபெரும் தெப்பமாய் இங்கே அம்ருதேஸ்வரரும், அம்ருதேஸ்வரியும்//
    சீர்காழி தோணியப்பர் நினைவுக்கு வந்தார். பிரளய காலத்தில் உயிர்களை தெப்பத்தில் வந்து மீட்டவர்கள் இல்லையா!

    தியானத்தில் ஒன்பது மைய தவத்தில் இந்த சக்கரங்கள் மேல் மனதை செலுத்தி தவம் செய்வோம். இப்போது கொஞ்சநாட்களாக சம்மணம் போட்டு உட்கார முடியாத காரணத்தால் செய்யவில்லை. உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் செய்ய ஆசை.குரு மூலம் கற்றுக் கொண்டது தான், உடற்பயிற்சியும், தவமும் விடாமல் செய்வோம் என்று உறுதி மொழி கொடுத்து விட்டு சில உடல் துன்பம், மனதுன்பங்களில் விட்டு விட்டே, மீண்டும் அதை அம்பிகை செய்ய சொல்கிறாள் உங்கள் மூலம் என்று எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் அருளால் செய்ய முயற்சி செய்வேன்.
    அருமையான பதிவு.
    இறைவன் அருளால் உங்கள் எண்ணம் (ஆசை) ஈடேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, தியானத்தில் ஆழ்ந்த நிலைக்குப் போக வேண்டாம் என்றே என்னோட யோக குரு வலியுறுத்துவார். எல்லாராலும் அந்த நிலையை ஏற்கமுடியாது என்பது அவர் கருத்து! ஆழ்ந்த நிலையிலிருந்து மீண்டவர்கள் தன்னிலை உடனே பெற்றால் சரி! சிலருக்குத் தன்னிலை பெறுவதற்குக் கால தாமதம் ஆகுமாம். ஆகவே தான் அம்பாள் உபாசனையில் கூட மந்திர ஜபம் மட்டுமே பெண்களுக்கு எனச் சொல்கின்றனர். அதுவும் கவனத்துடன் பயிற்சி செய்யணும் என்பார்கள்.

      Delete
    2. நானும் அதிகவலியில் அதிக வேலையில் யோகாசனப் பயிற்சியை விட்டு 2 வருடங்கள் போல் ஆகின்றது கோமதி! ஆனால் திரும்ப ஆரம்பிக்கவே இல்லை. மருத்துவர் இனி தொடரவேண்டாம் என்கிறார். நடைப்பயிற்சி செய்தது கூட நின்று போய்விட்டது! நிறைய உறுத்தலாகத் தான் இருக்கிறது. உங்களை மாதிரி யாரானும் என்னையும் தூண்டி விட்டால் வருமோ என்னமோ! :(((

      Delete
  2. அசர வைக்கும் விளக்கங்கள் அம்மா... கண்டிப்பாக மின்னூல் வரும்... வர வேண்டும் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. முயற்சி செய்யணும். விரைவில் தொகுக்கப் பார்க்கிறேன். ஏற்கெனவே தொகுத்தவை இன்னொரு மடிக்கணினியில் இருக்கு! அதில் பார்க்கணும்.

      Delete
  3. இதுபோன்ற விவரங்கள் புரிந்து கொள்வது எனக்குக் கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது! படித்தேன்.

    ஆரம்ப வரிகளிலும் கடைசி வரிகளிலும் இருக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படிச்சுப் புரிஞ்சுக்கறது கஷ்டம் ஸ்ரீராம். குரு மூலம் உபதேசம் பெறவேண்டும். அதற்கெனக் காலம் வருகையில் குருவே உங்களைத் தேடி வருவார். விரைவில் நல்லது நடக்கட்டும்.

      Delete
  4. முழுவதும் வாசித்துவிட்டேன் கீதாக்கா...வாசிக்கும் போது கண்கள் வரிகளில் ஓட வாய் அதை முணுமுணுக்க மனதில் அம்பிகைதான் அவர் உருவம்தான் முழுவதும்...மனதில் வரிகள் கூட ஏறவில்லை. ஒரு முறை வாசித்தால் போதாதுதான்..நிறைய மறைமுக அர்த்தங்கள் இருக்கு...எனக்கெல்லாம் இது புரிய ரொம்ம்ம்ம்ம்ம்பவே டைம் எடுக்கும் அக்கா...

    அழகா இருக்கு...அம்பிகையின் அருள் எல்லோருக்கும் முழுமையாகக் கிடைத்திடட்டும். அதற்கும் நம் பிரார்த்தனைகள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராமுக்குச் சொன்னதே தான் உங்களுக்கும் கீதா! எதற்கும் காலம் கனியணும்.

      Delete
  5. இவ்ளோ எழுதியிருக்கிறீங்க எப்படிப் படிக்கிறதென்றே புரியுதில்ல அவ்வ்வ்வ்:).. அனைவருக்கும் ஆண்டவர் அருள் புரியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் ஞானியாச்சே! உங்களுக்கேவா புரியலை! :))))))

      Delete
  6. பதிவு சுபம் அனைவரும் இறையருள் பெறட்டும் வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  7. >>> அம்பிகையின் தத்துவத்தைப் பற்றிப் படிக்கப் படிக்க எங்கேயோ நம்மை இழுத்துச் செல்லும். <<<

    அதைப் பற்றி யாதொன்றும் விவரிப்பதற்கில்லை...

    >>> கவனமாகவும் இருக்க வேண்டும்.. <<<

    பலரும் தடுக்கி விழுவது இந்த இடத்தில் தான்!...

    >>> அனைவருக்கும் அம்பிகையின் அருள் பரிபூரணமாய்க் கிட்டுவதற்கு என் பிரார்த்தனைகள்.. <<<

    அதுவே எனது பிரார்த்தனையும்!...

    ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை! நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை! இதில் புரியாமல் இறங்குவது ஆழம் தெரியாமல் கங்கையில் இறங்குவதற்குச் சமானம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  8. ஒவ்வொரு விஷயமும் விளக்கமா சொல்லியிருக்கீங்க .பின்னாளில் படிக்கிற பிற்கால சந்ததிக்கு மிகவும் பயனுள்ளது .அதனால் கண்டிப்பாக மின்னூலாக வரணும் .
    வாழ்த்துக்கள் அக்கா .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல். படித்து வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் நன்றி.

      Delete