எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 03, 2018

ஒரு புளியோதரையின் கதை! :)

இன்னைக்கு ஆண்டாளின் திருநக்ஷத்திரம். மாதாந்திர நக்ஷத்திரம். பூரம். ஆகவே ஏற்கெனவே செய்திருந்த வேண்டுதலின் பேரில் ஆண்டாளுக்குத் திருமஞ்சனம்+தளிகைக்குக் கொடுத்திருந்தோம். பட்டாசாரியார் பூரத்தன்று புளியோதரை தான் எனச் சொல்லி விட்டார். சரினு ஒத்துக் கொண்டு விட்டோம். எட்டரைக்கு கோஷ்டி ஆரம்பம். முடிஞ்சால் அப்போ வாங்க. உட்கார முடியாதுன்னா ஒன்பது மணிக்கு மேல் வாங்கனு சொல்லி இருந்தார். என்னாலும் கீழே உட்கார முடியாது. அவருக்கும் முடியாது. கோஷ்டியிலும் சேர்ந்து சொல்வதற்கான பயிற்சி எல்லாம் இப்போ மறந்து போச்சு! அவங்க சொல்லும் ராகத்துக்கு ஏற்ப தொடர்ந்து சொல்ல   வரதில்லை! அதோட எல்லாப் பிரபந்தங்களும் தெரியவும் தெரியாது. ஆகவே வீட்டிலஇருந்து தாமதமாகவே கிளம்பினோம். சுமார் எட்டேமுக்காலுக்குக் கிளம்பி வழியில் மங்கம்மா நகரில் குடி இருக்கும் நம்ம நண்பரைப் பார்த்துவிட்டு அவருக்கு அருகம்புல் கொடுத்துவிட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகேயே வண்டியை வைத்து விட்டு நடந்தே சென்றோம். கடைகள் எல்லாம் ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டிருந்தனர். சில கடைகளில் திறந்து வைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வெகு சில கடைகளில் வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது. நல்லவேளையாத் தெருவில் கூட்டம் இல்லை.


ரங்கா கோபுரத்துக்கு முன்பேயே ஒரு தெரிந்த ஜவுளிக்கடையில் செருப்புக்களை விட்டு விட்டு அங்கிருந்து செருப்பு இல்லாமல் நடந்தோம். கஷ்டமாய்த் தான் இருந்தது. இதிலே ரங்கா கோபுர வாயிலில் சுத்திக் கொண்டு உள்ளே வா எனக் காவல் ஊழியர் சொல்லத் திகைத்துப் போனோம். அப்புறமா என்ன நினைத்தாரோ தடுப்பைத் திறந்து எங்களை மட்டும் உள்ளே விட்டார். உள்ளே போய் ஸ்கான் மிஷினைக்கடந்து பின் கோயில் உள்ளே இருக்கும்  நிரந்தரக் கடைகளைக் கடந்து உள் ஆண்டாள் சந்நிதிக்குப் போகும் வழியில் சென்றோம். உள்ளே கோஷ்டி இன்னமும் நடந்து கொண்டிருப்பது அங்கிருந்து வந்த சத்தத்தின் மூலம் தெரிந்தது. நாங்கள் போன சிறிது நேரத்திலேயே கோஷ்டி முடிவடையப் போகிறது என்பது புரிந்தது. எங்களைப் பார்த்து விட்ட பட்டாசாரியாரும் இப்போ ஆயிடும் என்று சொல்லிச் சென்றார். பின்னர் பல்லாண்டு பாடி முடித்து கோஷ்டியும் நிறைவுற்றது. பின்னர் பட்டாசாரியார்கள் அவர்களுக்குத் தீர்த்தம் சாதித்து, சடாரி சாதித்து மரியாதை செய்த பின்னர் எங்களுக்கும் செய்தார். அதன் பின்னர் அனைவருக்கும் உள்ளே இருந்த (உண்மையான) பிரசாதம் கொடுக்கப்பட்டது. இன்னைக்குக் கூட்டம் அதிகம். ஆண்டாள் திருநக்ஷத்திரம் என்பதால். ஆகவே எங்களிடம் வரச்சே சந்நிதியில் நிவேதனம் செய்த பிரசாதம்  தீர்ந்து விட்டது. பட்டாசாரியார் மடப்பள்ளிக்குப் போய் வேறே எடுத்து வந்தார். அதே தான். என்றாலும் உள்ளே இருந்து வரலையே என எனக்குக் குறை தான். :( ஆனால் ரங்க்ஸுக்குக் கிடைத்து விட்டது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

நான் சாப்பிடும்போது நெல்லைத் தமிழரைத் தான் நினைத்துக் கொண்டேன். உண்மையான பிரசாதம் என்பதோடு மிளகாய் சேர்க்காத புளியோதரையும் கூட! அமிர்தமாக இருந்தது. கோயில் நிவேதனங்களில் மிளகாய் சேர்க்க மாட்டார்கள். பெருங்காயமும் சேர்க்க மாட்டார்கள். என்றாலும் அந்தப் புளியோதரையின் வாசமும், மணமும், ருசியும் அருமையோ அருமை! கூட்டம் கலைந்ததும் எங்களை  உள்ளே அழைத்து தரிசனம் செய்து வைத்துவிட்டு தாமதம் ஆனதுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. பின்னர் எங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்தார். அதன் பின்னர் நாங்கள் முதள் நாளே கொடுத்த பாத்திரத்தில் அமுக்கி அமுக்கிப் புளியோதரை வைத்துக் கொடுத்தார். அந்தப் புளியோதரை டப்பாவைப் போட்டிருந்த பையை என்னால் தூக்க முடியலை! :)

இவ்வளவையும் என்ன செய்யறதுனு தெரியலை! நாங்க செருப்பை விட்டிருந்த கடைக்குப் போனால் அங்கே ஒருத்தர் பாவம் மேலே ஏற முடியாமல் வெளியே தெருவிலேயே நின்று கொண்டு துணிகள் வாங்கிக் கொண்டிருந்தார். துணைக்கு வாடிக்கையான ஆட்டோ டிரைவர் வந்திருந்தார். அவரிடம் கொஞ்சம் புளியோதரை கொடுத்தோம். நல்லவேளையாக் கையில் இலைகள் துண்டு செய்து எடுத்துப் போனோம். பின்னர் அந்த ஆட்டோ டிரைவருக்கும் கொடுத்தோம். அந்த மாமா வீட்டுக்கும் கொடுனு கேட்டு வாங்கினார். சரினு ஒரு இலையில் கட்டிக் கொடுத்தோம். பின்னர் கடைக்காரங்க மூணு பேருக்கும் கொடுத்தோம். அதுக்கு அப்புறமா தொன்னைகள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவருக்கும் கண்ணில் பட்டவர்க்கெல்லாம் கொடுத்தோம். எங்களுக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கும் வந்தது.ஒரு வழியாப் புளியோதரையைத் தீர்த்தோம். நெல்லைத் தமிழருக்குக் கொடுத்து வைக்கலைனு நினைத்துக் கொண்டேன். இத்தனைக்கும் நாங்க அரைத் தளிகைனு தான் சொல்லி இருந்தோம். முழுசுன்னா இன்னும் புளியோதரை இரண்டு டப்பா வந்திருக்கும். அப்புறமா இதை என்ன செய்யறதுனு ஙே என முழிச்சுட்டு இருக்கணும்.

உள்ளே கோயிலில் கூட்டம் இல்லை போல் இருந்தது. நம்மவர்க்கு உள்ளே போகணும்னு ஆசை! ஆனால் எனக்கு வீட்டில் சமையல் வேலை இருக்கே! அதோட கீரை வேறே வாங்கி வைச்சிருந்தோம். அதை நறுக்கிச் சமைக்கணும்னு நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.   இன்னிக்குக் காலம்பர ஆண்டாளைப் பார்க்கணும்னு கீழே போனால் ரெண்டு நாளாத் தூற்றல் போடுவதால் ஆண்டாள் வரவே இல்லையாம்! நம்ம அதிர்ஷ்டம்னு நினைச்சுண்டேன். இன்னிக்கு நல்ல வெயில்! இங்கெல்லாம் பெரிசா மழை எல்லாம் பெய்யறதில்லை. சிறு தூறல்! அதுக்கே இப்படி!   நம்பெருமாளுக்கு இந்தக் காவிரி நீரையும் சுட வைச்சுச் சூடு ரொம்ப இருக்கா, சரியா இருக்கானு ஒரு பட்டாசாரியார் கையில் விட்டுப் பார்த்துக் கொண்டு பின்னர் ஒப்புதல் தந்த பின்னர் தான் திருமஞ்சனமாம். சின்னத் தூறல்னாக் கூட அவருக்கு நோ குளியல்! :))))

69 comments:

 1. ஒரு தொன்னைப் புளியோதரை கிடைக்காமல் வாராவாரம் பொங்கல் சாப்பிட்டுப் பொங்கிட்டு வர்றேன்... அங்கே என்னடான்னா நிறைய இருக்கு என்ன பண்றதுன்னு தெரியலைன்னு சொல்றீங்க... அட ஆண்டாளே...

  ReplyDelete
  Replies
  1. @Sriram, இஃகி, இஃகி, ஜாலியா இருக்கு! எனக்கு முதல்லே உங்க நினைவு வரலை. ஏன்னா நெல்லைத் தமிழர் தான் எங்கே எந்தக் கோயிலுக்கு எப்போப் போனாலும் பிரசாதம்னு சொல்லிட்டே இருப்பார்! நீங்க புளியோதரைக்கு ஏங்கினது சாப்பிட்டப்புறமாத் தான் நினைப்பே வந்தது. இங்கே வந்து பார்த்தால் உங்க பின்னூட்டம். நாங்க வைத்தீஸ்வரன் கோயிலில் அபிஷேகம் செய்தப்போ இதை விட நிறையப் புளியோதரை, கல்கண்டு போட்ட பால் பொங்கல்! என்ன செய்யறதுனே தெரியலை! இரண்டு பக்கெட்! எப்படியோ செலவு செய்தோம்.

   Delete
  2. புளியோதரை என்றதும் எனக்கு ஸ்ரீராமின் நினைவுதான் வந்தது. என்னடா லலிதாம்பா சோபனத்திற்கு பின்னூட்டம் போடாமல் புளியோதரை பதிவிற்கு போட வந்து விட்டாள் என்று நினைக்காதீர்கள். ஒரு வாரமாக ஒரே அலைச்சல். இன்றுதான் எல்லா பதிவுகளையும் திறக்கிறேன்.

   Delete
  3. நேற்று எனக்கும் பொங்கல்தான் (ஆனால் சூடு பொறுக்காத அளவு சூடு). வேறு பிரசாதம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கிடையாது போலிருக்கு. ஒருவேளை ரொம்ப லேட்டா 12 மணிக்குப் போகணுமோ? அண்டா சைசைப் பார்த்தால், இன்னும் 100 பேருக்கு மேல் பொங்கல் பிரசாதம் இருந்தது (11 மணிக்கு)

   கேரண்டீட் புளியோதரை திருவல்லிக்கேணியில்தான் கிடைக்கும் (பிரசாத ஸ்டாலில்)

   Delete
  4. கீசா மேடம்... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எங்களுக்கு வாளியில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை எல்லாம் கொடுத்தார்கள். நாங்கள் ஒரு தொன்னை அளவு போதும் என்று சொல்லிவிட்டோம். அங்க கொடுத்த அளவில் மிகப் பெரிய வடை, சுமாராத்தான் இருந்தது. மெல்லிதாக இல்லாமல் பெரிய அடை சைசில் ஆனால் உள்ளங்கை அளவு இருந்தது.

   Delete
  5. வாங்க பானுமதி, புளியோதரைனதும் இனிமே நெ.த. ஸ்ரீராம் ரெண்டு பேரையும் நினைவு வைச்சுக்கணும்! :)))) எனக்கென்னமோ கோயில்களில் பிரசாதம் கொடுத்தால் முதல்லே நினைவுக்கு வரது இப்போல்லாம் நெ.த. தான்! :))))

   Delete
  6. வாங்க நெல்லைத் தமிழரே, திருவல்லிக்கேணியில் மடப்பள்ளியில் இருந்து வரும் புளியோதரை (மிளகு மட்டும் தான் சேர்ப்பார்கள் முன்னெல்லாம்! பெரியப்பாவோடு போகும்போதெல்லாம் வாங்கிக் கொடுப்பார். நேரே மடப்பள்ளி வாசல்லேயே நின்னு வாங்கி இருக்கோம்.) நன்றாக இருக்கும். நாங்க பெரும்பாலும் சிதம்பரம் தவிர்த்து எந்தக் கோயில்களிலும் விற்பனை செய்யப்படும் பிரசாத வகைகள் வாங்குவதில்லை. சிதம்பரத்திலும் விற்பனைக்கு வைச்சிருக்கிறது சுமார் தான். அதே தீக்ஷிதர் கொடுப்பது நன்றாக இருக்கும். அது மடப்பள்ளியில் இருந்து வரும்! கல்கண்டு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், நெய் வடை, பாதுஷா, திருவாதிரைக் களி இப்படிச் சொல்லலாம்.

   Delete
  7. //நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எங்களுக்கு வாளியில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை எல்லாம் கொடுத்தார்கள். நாங்கள் ஒரு தொன்னை அளவு போதும் என்று சொல்லிவிட்டோம். // நம்பிட்டோமுல்ல! இப்படி எல்லாம் சொல்லி மனசை சமாதானம் செய்துக்க வேண்டியது தான்! :))))

   Delete
  8. //புளியோதரை என்றதும் எனக்கு ஸ்ரீராமின் நினைவுதான் வந்தது. //

   நன்றி பானு அக்கா... உங்களுக்காவது நினைவு வந்தே...!!

   Delete
  9. //நேற்று எனக்கும் பொங்கல்தான் //

   அப்பாடி... சற்றே நிம்மதி!

   சாயங்காலங்களில் புளியோதரை கிடைக்கலாம்.

   Delete
  10. @ஸ்ரீராம், :)))))))

   //நன்றி பானு அக்கா... உங்களுக்காவது நினைவு வந்தே...!!// உண்மையைச் சொல்லி இருக்கக் கூடாதோ? :)))))

   Delete
  11. //நேற்று எனக்கும் பொங்கல்தான் //

   அப்பாடி... சற்றே நிம்மதி! // :)))))))))

   Delete
  12. //உண்மையைச் சொல்லி இருக்கக் கூடாதோ? //

   ஹா.. ஹா.. ஹா... புளியோதரைக்கு ஏங்க வைக்கிறாங்க அக்கா!

   Delete
  13. சொல்லப் போனால் புளிக்காய்ச்சல் எப்போவுமே ஸ்டாக் இருப்பதால் புளியோதரை அபூர்வம்னு இல்லைனு ஆகி விட்டது. ஆனாலும் கோயில் புளியோதரை அதுவும் பெருமாள் கோயில் புளியோதரை எப்போவுமே ஸ்பெஷல் தான்.

   Delete
  14. எப்படி புளியோதரையைமிஸ் பண்ணினேன்....

   எனக்கும் ஸ்ரீராம் தான் நினைவுக்கு வந்தார். அப்புறம் நெல்லை... ஏன்னா ஸ்ரீராம் தான் நங்கநல்லூரில் புளியோதரை கிடைக்காமல் புலம்பிருந்தார் ஹா ஹா ஹா ஹா

   ஹையோ அக்கா இனி என்னையும் நினைவில் வைச்சுக்கணும் சொல்லிப்போட்டேன். நானும் கோயில் நாலே பிரசாதத்துக்கு அலைவேன்...என்ன பிரசாதம் கிடைக்கும்னு பார்ப்பேன்....ஹா ஹா ஹா

   எந்தக் கோயிலில் (பிரசாத ஸ்டால் அல்ல...கோயில் ஆட்களே/அல்லது கோயில் மாமா யாராவது ) கொடுப்பார்களே அந்தப் பிரசாதம்....அதைப் பார்த்துட்டால் சாமிய சீக்கிரமா பிரார்த்தனை முடிச்சுட்டு அந்தப் பிரசாதம்தான் மனசுல ஓடும் ஹிஹிஹிஹி...போய் வாங்காம வரமாட்டேன்...

   திருக்குறுங்குடி கோயில் புளியோதரையில் மிளகாய் இருக்கும். அங்கு தெலுங்குவருடப் பிறப்புக்குப் பஞ்சாங்கம் வாசிப்பாங்க அதுக்கு என் அப்பாவும், அவரது மாமாவும் தான் மண்டகப்படி. அப்ப புளியோதரை வீட்டுக்குப் பெரிய தூக்கு வாளி நிறைய வரும். ஆனா திருகுறுங்குடியிலிருந்து திருவண்பரிசாரம் ஊருக்கு வரும் போது இரவு 10, ஆகிடும்..அந்த இரவிலும் நாங்கள் சாப்பிடாமல் இருக்க மாட்டோம்...அப்ப முழித்திருக்கும் வீடுகளுக்குக் கொடுப்போம். அடுத்த நாள் வைத்திருந்து நன்றாக இருக்கா என்று பார்த்து மற்ற வீடுகளுக்குக் கொடுப்பதுண்டு...

   கீதா

   Delete
  15. மிளகாய் பெருங்காயம் போடாத புளியோதரையும் செமையா இருக்கும். கோயில் ப்ரசாதம்னாலே அப்படித்தான்...(ஸ்டால் அல்ல) மடப்பள்ளியில் தயாராகி வருவது...உம்மாச்சிக்குப் படைக்கப்பட்டு வருவது!

   கீதா

   Delete
  16. இதைப் படிச்சதும் நினைவுக்கு வந்தது. முந்தாநாள் அதாவது டிசம்பர் பத்தாம் தேதி வீடு சுத்தம் செய்ய ஆட்கள் வந்திருந்ததால் சமையலறையில் சமைக்க முடியலை! சமையலறை மட்டுமே சுத்தம் செய்து முடிக்கப் பனிரண்டரை மணி ஆயிடுச்சு. ஆதலால் ரங்க்ஸ் வெளியே போய் ஓட்டலில் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு எனக்கு இன்னொரு ஓட்டலில் (மடப்பள்ளி) புளியஞ்சாதமும், தயிர்சாதமும் வாங்கிட்டு வந்துட்டார். முழுச்சாப்பாடு நான் சாப்பிடமாட்டேன் என்பதோடு எங்கே வைச்சுச் சாப்பிடறது? என்றாலும் அதுவே நிறைய இருந்தது. புளியஞ்சாதத்தில் மி.வத்தல், பெருங்காயம் போடலை. பழைய கால வழக்கப்படி மிளகு பொடி செய்து போட்டுக் கருகப்பிலை,கடுகு, கபருப்பு, கடலை மட்டும் தாளித்த புளியஞ்சாதம். தயிர்சாதமும் புளிப்பே இல்லை. ஆனால் உப்புப் போட மறந்துட்டாங்க. வீட்டில் உள்ள உப்பைச் சேர்த்துக் கொண்டேன். தொட்டுக்கப் புளிமிளகாய்! காரமோ காரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :))) ஶ்ரீராமைத் தான் நினைத்துக் கொண்டேன்.

   Delete
  17. நன்றி. நேற்று பாஸ் காலிஃப்ளவர் கறியில் காரத்தைப் புகுந்து விளையாடி சோதித்து விட்டார்!!!

   Delete
  18. மத்தியானச் சாப்பாட்டுக்கா? நாங்க காலிஃப்ளவர் என்றால் சப்பாத்தி, வெஜிடபுள் சாதம், புலவு போன்றவை தான். சாம்பார், ரசத்தோடு சேர்த்துச் சாப்பிடுவதில்லை, என்னதான் வெங்காயம் போட்டாலும்! :)))))

   Delete
 2. >>> என்றாலும் அந்தப் புளியோதரையின் வாசமும், மணமும், ருசியும் அருமையோ அருமை!..<<<

  ஆகா...
  சொல்லாழி வெண்சங்கே என்று - சார்ங்கனின் இதழ்ச் சுவையைக் கேட்ட ஆண்டாள் நாச்சியார் செய்தருளிய திருவமுது!.

  அந்தப் புளியோதரையின் சுவைக்குக் கேட்கவா வேணும்!....

  அது சரி...

  பட்டாச்சார்யர்கள் தளிகை செய்யும் சித்ரான்னங்களே சுவையமுது எனில்..

  திருக்கோதையாள் - அரங்கத்தம்மானுக்கு திருவமுது சாதித்திருப்பாள் தானே!..

  அது எத்தனை சுவையுடைத்ததாய் இருந்திருக்கும்!...

  ஆண்டாள் திருவடிகளே சரணம்!..

  ReplyDelete
  Replies
  1. ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (9:6)
   //நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
   நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
   நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
   எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?//

   வாங்க துரை, ஆண்டாள் அரங்கனுக்கு அமுது படைத்திருப்பாள். அது இன்னமும் சுவையாக இருந்திருக்கும். ஏன்னா நூறு தடா வெண்ணெய்! நூறு தடா பால்! நூறு தடா நிறைந்த அக்கார அடிசில். அப்புறம் சுவைக்குக் கேட்பானேன்!

   Delete
  2. //ஆண்டாள் அரங்கனுக்கு அமுது படைத்திருப்பாள்// ஆண்டாள் எங்கே படைதிருக்க முடியும்? என்று எண்ணி ராமானுஜர் ஆண்டாளின் சகோதரனாக தன்னை கருதி சகோதரியின் விருப்பத்தை நிரைவேற்றுவது உடன்பிறந்தவனின் கடமை என்பதால் திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு நூறு தடா வெண்ணை, நூறு தடா அக்கார அடிசல் படைத்ததாக வரலாறு.

   Delete
  3. ஆண்டாளுக்காக இராமானுசர் படைத்ததனால் ஶ்ரீவில்லிபுத்தூர் சென்று இராமானுசர் சேவிக்கச் சென்றபோது ‘அண்ணா’ என விளித்தாளாம் ஆண்டாள். (அண்ணன்தான் தங்கையின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற).

   அதனால்தான் ஆண்டாளின் வாழித்திருநாம்ம்

   பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

   அதாவது இராமானுசரின் தங்கை ஆண்டாள் வாழியே

   Delete
  4. வாங்க பானுமதி, இதைக் குறித்து நிறைய எழுதி இருக்கேன். ஸ்ரீராமானுஜர் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற போது ஆண்டாள் சந்நிதியின் அழகிய ஆண்டாள் விக்ரகம் சலங்கை ஒலி எழுப்ப, ஸ்ரீராமானுஜரைப் பார்த்து, "வருக! என் அண்ணாரே!" என அழைத்ததாகவும் சொல்வார்கள். இதைக் குறித்து நிறையப் பதிவுகள் கடந்த வருடங்களில் எழுதி உள்ளேன். முக்கியமாய் மார்கழி மாதப் பதிவுகளில்!

   Delete
  5. http://sivamgss.blogspot.com/2011/01/27.html

   http://aanmiga-payanam.blogspot.com/2009/12/blog-post_18.html

   Delete
 3. நமக்கு ஒரு தொன்னை புளியோதரை அனுப்பி இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, என் அப்பா தீபாவளி பக்ஷணங்கள் மற்றும் முக்கிய உறவினர் வீட்டுக் கல்யாண பக்ஷணங்களை தபால் மூலம் எங்களுக்கு நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ அனுப்பி வைப்பார். அந்த நினைவு வந்து விட்டது நீங்க சொல்றதைப் பார்த்து! ஆனால் தொன்னையோடு அனுப்பினால் கொட்டிடும், போய்ச் சேர்வதற்குள் ஊசிடும்! :)))

   Delete
 4. சில வார்த்தைகள் பெரும்பாலும் ஐயங்கார்கள் கூறுவது என்றுநினைக்கிறேன் தளிகை கோஷ்டி பொருள் சரியாகத்தெரியவில்லை கோஷ்டிஎன்றால் குழு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்பிரசாதங்களில் உண்மையானது எது போலியானது எது என்று ஏதாவதுண்டா என்ன

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா, கோஷ்டி பத்தி எனக்குத் தெரிந்தாலும் திரு நெல்லைத் தமிழன் இருக்கும் போது நான் விளக்குவது சரியாய் இருக்காது. தளிகைன்னா சமையல் பொதுவாக! இங்கே நிவேதனத்தைச் சொல்றாங்க. முழுத் தளிகை என்றால் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் நான்கும் என்கிறார்கள். இதுவே நாங்க அவங்க சொல்வதில் பாதி தான் கேட்டோம். அதற்கான பணமே வாங்கிண்டாங்க!

   Delete
  2. பிரசாதம் நேரே மடப்பள்ளியிலிருந்து வந்தால் அது உண்மையான பிரசாதம். வெளியே ஸ்டாலில் விற்பவை எல்லாம் டென்டர் விட்டு கான்ட்ராக்ட் போட்டு அந்தக் கான்ட்ராக்டர் செய்து கொண்டு வந்து விற்பவை! அவை கோயில் மடப்பள்ளிகளில் பட்டாசாரியார்களால் செய்யப்படுவதில்லை.

   Delete
  3. தளிகை - சமையல். நாங்கள் வீட்டிலும் (ஆத்திலும்-அதாவது அகத்திலும்), 'தளிகை பண்ணியாச்சா' என்றுதான் சொல்லுவோம். ப்ரபந்தமோ அல்லது ஸ்தோத்திரங்களோ, பெருமாள் சன்னிதியில் (கோவிலில்) அதற்குரிய நேரத்தில் அதற்கான குவாலிஃபைடு பக்தர்கள் சேர்ந்து சொல்லுவதை நாங்கள் 'சேவாகாலம்' என்போம். அதைச் சொல்பவர்கள், சன்னிதி முன்பு இரு வரிசையில் நின்றுகொண்டு (அல்லது அமர்ந்து) சொல்வார்கள். இவர்களின் அந்தக் கூட்டத்தை/குழுவை கோஷ்டி என்று சொல்வோம். சொல்லுபவர்கள்தான் கோஷ்டி. உதாரணமாக, நான் அந்த சமயத்தில் அங்கு இருந்தாலும் நான் சேர்ந்துகொள்ள முடியாது (தெரிந்திருந்தாலும்). ஒவ்வொரு கோவிலிலும் அதற்குரிய குழு உண்டு. இதிலேயும் கோவில் சம்ப்ரதாயத்தைச் சேராதவர்கள் சொல்லமுடியாது.

   மடைப்பள்ளி - கோவிலில் பெருமாளுக்கான பிரசாதங்கள் செய்யும் இடம்.

   பிரசாதங்களில் உண்மை/போலி - அப்படி எதுவும் கிடையாது. பெருமாளுக்கு (அல்லது மூலவருக்கு, அது சிவன் கோவிலாக இருந்தாலும்) சமர்ப்பிப்பது பிரசாதம். இது பெரும்பாலும் விலைக்குக் கிடைக்காது. இன்றைக்கு நான், என் பிறந்த நாளுக்காக அல்லது ஏதோ காரணத்துக்காக, காலை பிரசாதத்துக்கான செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்றால், என்னை 'கட்டளைதாரர்' என்பார்கள். பிரசாதத்தில் பல்வேறு வகை உண்டு என்றாலும் (தத்தியோன்னம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று பல) அதற்கான விலையை மாறுபடும். கட்டளைதாரர் எதனையும் ஏற்றுக்கொள்ளலாம் (ஒரு நாளில் ஒரு பிரசாதம்). ஆனால் சில நாட்களில் இன்றைக்கு இந்த பிரசாதம்தான் என்று உண்டு. பெருமாளுக்கு சமர்ப்பணம் ஆனதும் (கண்டருளப் பண்ணியதும்), சேவாகாலம் செய்த கோஷ்டியில் உள்ளவர்களுக்கு விநியோகிப்பார்கள் (அவர்களுக்கு இரண்டு முறை). பிறகு மற்ற பக்தர்களுக்கும் விநியோகம் ஆகும். கட்டளைதாரர், பாத்திரம் கொண்டுவந்திருந்தால் அவர்களுக்குத் தனியாக கொடுப்பார்கள் (அது கொஞ்சம் அதிகமா இருக்கும்). சிலர், கோவிலிலேயே விநியோகம் செய்துவிடுங்கள் என்பார்கள்.

   பிரசாத ஸ்டால் என்பது, கோவிலுக்கு வருபவர்களுக்கு மனத்திருப்திக்காக வெளியார் செய்து விற்கும் கடை. இதற்கும் கோவில் தெய்வங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. அதாவது இவை கண்டருளப்பண்ணப் பட மாட்டாது. பொதுவா பிரசாத ஸ்டாலில் (எல்லாக் கோவிலிலும்) புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், முறுக்கு, அப்பம், லட்டு என்று வகை வகையாக விற்பார்கள்).

   ரொம்ப நீட்டிவிட்டேனோ?

   Delete
  4. //பிரசாதங்களில் உண்மை/போலி - அப்படி எதுவும் கிடையாது.// மடப்பள்ளியில் இருந்து வந்தால் தான் பிரசாதம்! வீட்டில் நாம் தினம் தினம் நிவேதனம் செய்துவிட்டுப் பிரசாதமாக உணவு அருந்துவது வேறே! கோயில் பிரசாதம் என்பது வேறே! மற்றபடி உங்கள் கருத்தைத் தான் நான் சுருக்கமாகச் சொல்லி இருக்கேன். :))))

   Delete
  5. கோஷ்டியில் உள்ளவர்கள் தனியாக சந்நிதிக்கே நேரே உட்கார்ந்திருந்தாலும் கொஞ்சம் தள்ளி நாங்கல்லாம் இருந்தோம். யாரும் தடுக்கவில்லை. ஆண்கள், பெண்கள் எனக் குழுமி இருந்த அனைவரும் கூடவே பாசுரங்கள் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பல்லாண்டு பாடும்போது எல்லோருமாகச் சொன்னோம். யாரும் தடுக்கவில்லை. இதற்கு முன்னர் சின்ன வயசில் பார்த்த கோஷ்டிகளிலும் சரி, இப்போதும் சரி கோஷ்டிக்காரர்களுக்கு இரண்டு முறை எல்லாம் கொடுக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து சொல்லுவதைத் தடுத்ததும் இல்லை. தேவதா காயத்ரி, மற்றும் மந்திர புஷ்பம் சொல்கையில் எல்லோருமே சொல்வதைப் போல் இங்கேயும் எல்லோரும் சொன்னார்கள். தீர்த்தம் 3 முறை, சடாரி சாதித்தல் தலை, மார்பு, தோள், பிடரி என சாதித்தார்கள். இதைப் பல பெருமாள் கோயில்களிலும் பார்த்திருக்கேன். மற்றவர்களுக்கு தலையில் மட்டும் சடாரி!

   Delete
  6. @ நெ.த.: //..ரொம்ப நீட்டிவிட்டேனோ?//
   @ கீதா சாம்பசிவம்..

   ரொம்பப்பேருக்கு சில வார்த்தைகளினால் புரிந்துகொள்வதில் குழப்பம் உண்டாவதால், நீட்டியது சரிதான் !

   இதுபோன்ற விசேஷமான பதிவுகளில், கடைசி பாராவாக ‘அருஞ்சொற்பொருள்’ கொடுத்துவிடலாம்.. சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காக.

   Delete
  7. நெல்லை நானும் கோஷ்டியில் பிரபந்தம் தெரிந்தவர்கள் சொல்லலாம் புத்தகம் வைத்துக் கொண்டும் சொல்லலாம். நான் பார்த்திருக்கேன்...யாரும் எதுவும் சொன்னதில்லை.

   கீதா

   Delete
 5. அரங்கன் கோவில் புளியோதரை பிரசாதம் - அதன் ருசியே தனிதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 6. தமிழகத்தில் இருந்தபோது இணையம் பக்கம் வரவில்லை. தலைநகர் திரும்பிய பிறகு பணிச்சுமை. பெரும்பாலான பதிவுகள் படிக்கவில்லை இன்னும். இனிமேல் தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஓ, அப்படியா? மெதுவா வாங்க! அப்படி ஒண்ணும் முக்கியமான பதிவுகள் எழுதவில்லை. :)

   Delete
 7. எங்களையும் ஏங்க வைத்து விட்டீர்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, விரைவில் கிடைக்கும் அரங்கன் அருளால்!

   Delete
 8. கோயிலில் தரப்படுகின்ற புளியோதரைக்கு தனி ருசி இருப்பதை நான் அறிந்ததுண்டு. நீங்கள் அதனை ரசித்து, பகிர்ந்து கொண்டமையறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 9. ஆண்டாள் திருவடிகளைத் தரிசித்த உங்களுக்கும் நமஸ்காரம் கீதா. இது பெரும் பாக்கியம்.
  இங்கும் கோவிலில் ஆண்டாள் மிக அழகி.
  பிரசாதம் என்னவோ கீழே கிடைப்பதுதான்.

  நன்றாகத்தான் இருக்கும். ஆந்திரக்காரம் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, எனக்குப் போய் நமஸ்காரமா? அதுவும் நீங்க? அப்படியே அதை ஆண்டாளுக்கு மாற்றி விடுகிறேன். :)))) நிஜம்மாவே நேற்று ஆண்டாள் மிக அழகாக இருந்தாள். அருமையகா அலங்கரித்திருந்தார்கள். முன்னால் இருந்த பட்டாசாரியார் இப்போ இல்லை போல! இவர் வேறே! ரொம்பவே அனுசரணையா இருக்கார்!

   Delete
 10. புளியோதரை பிரியரை கூப்பிட்டு இருக்கலாம் (ஸ்ரீராம்)
  என் கணவருக்கும் மிகவும் பிடிக்கும் பெருமாள் கோவில் புளியோதரை.
  ஸ்ரீராம் சொல்வது போல் எந்த கோவில் போனாலும் சர்க்கரை பொங்கல், அல்லது வெண்பொங்கலே கொடுக்கிறார்கள் என்று அலுத்துக் கொள்வார்கள்.
  இறைவனின் வேண்டுதலகள் முறையாக நடந்து வருவது மகிழ்ச்சியே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, புளியோதரை தான் என்பது பத்து, பதினைந்து நாட்கள் முன்னாடியே தெரியும். பூர நக்ஷத்திரத்தன்று வேறு பிரசாதம் போடுவதில்லையாம். ஆனால் ஸ்ரீராம் தான் பிசியா இருக்காரே! எங்கே இருந்து வரது? :)))))

   Delete
  2. அப்பாடி... நன்றி கோமதி அக்கா!

   Delete
 11. //கோஷ்டியிலும் சேர்ந்து சொல்வதற்கான பயிற்சி எல்லாம் இப்போ மறந்து போச்சு!// - இது எந்த சன்னிதி? உள் ஆண்டாள், வெளி ஆண்டாள்? - ப்ரபந்தக் கோஷ்டி என்பது வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கும் மெம்பர்களிலிருந்து உள்ளவர்கள் அல்லவா? (என்றோ படித்திருக்கிறேன். நாலாயிரமும் மனப்பாடமாகத் தெரிவது மட்டுமல்ல, அதைப் பரீட்சித்துப்பார்த்துத்தான் தேர்ந்தெடுப்பார்கள், அவர்கள் எல்லோரும் தென் கலை சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கணும் என்றெல்லாம் சட்டம் உண்டு). நீங்கள் எப்படி அவர்களுடன் சேர்ந்து சொல்லமுடியும் (தெரிந்திருந்தாலும்?)

  ReplyDelete
  Replies
  1. தினம் தினம் கூடச் சேர்ந்து சொல்லும் பயிற்சியைத் தான் இங்கே பயிற்சினு சொன்னேன். நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை. மற்றபடி எனக்குத் தெரிந்தவற்றைத் தான் அவங்களோடு சேர்ந்து சொல்லி வருவேன். தெரியாததில் மூக்கை நுழைப்பது இல்லை. நீங்க சொல்லும் நிபந்தனைகள் எல்லாம் மதுரைக் கோயில்களில் பார்த்திருக்கேன்.

   Delete
 12. ஓ.. உள் ஆண்டாள் சன்னிதியிலா? பிரசாதம் யாருக்குப் போகணுமோ அவங்களுக்குத்தான் அது போகும். எவ்வளவு முயற்சி செய்தாலும் கிடைக்காது. அரங்கனின் பிரசாத மகிமைக்குக் கேட்பானேன்.

  அரைத் தளிகைக்கு எவ்வளவு ரூபாய்?

  ReplyDelete
  Replies
  1. அரைத்தளிகைக்கு 300 ரூபாய்னு நினைக்கிறேன். கூட்டம் அதிகம் நேற்று. சுமார் ஐம்பது பேருக்கு மேலே இருந்திருப்பார்கள். கோஷ்டி மகாஜனங்களே 20 பேர். பொது மக்கள் ஐம்பதுக்குக் குறையாது! நிவேதனம் பண்ண எடுத்து வந்த பாத்திரம் முதல் வரிசையிலேயே தீர்ந்து விட்டது. அடுத்த வரிசைக்கெல்லாம் வேறே தான். அதுவும் பெண்கள் வரிசை முழுதும் வேறே தான் வந்தது. ஆண்கள் வரிசையில் அவர் நின்றிருந்ததால் அவருக்குக் கொஞ்சம் கிடைத்தது.

   Delete
  2. நெல்லைத் தமிழரே, முகப்பேர் சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுமார் பதினைந்து அல்லது பதினாறு வருடங்கள் முன்னர் முழுத் தளிகைக்கு ஏற்பாடு செய்தோம். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வெண் பொங்கல் எனத் தூக்குத் தூக்காக! அன்னிக்கு அம்பத்தூரில் அக்கம்பக்கம் வீடுகளில் சமையலே இல்லை! :)))))))))))

   Delete
  3. இதுதானே (முகப்பேர் ஶ்ரீநிவாசர்), பெரிய ஶ்ரீநிவாசர் உருவம் கொண்ட கோவில்? 1989லேயே கேள்விப்பட்டிருக்கேன். அவர் அருள் வேணும் அவரைச் சேவிக்க...

   Delete
  4. ஆமாம், இது தான் பெரிய ஸ்ரீநிவாசர் மூலவராக இருக்கும் கோயில். இந்தக் கோயில் பட்டாசாரியாரின் உறவினர்கள் ராஜஸ்தான் புஷ்கரில் உள்ள தென்னிந்திய முறையில் கட்டப்பட்ட பெருமாள் கோயிலில் இருக்கின்றனர். அங்கே உள்ள பட்டாசாரியார் ஜாடையில் இங்கேயும் ஒருத்தர் இருக்கவே அவரிடம் பேசிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். நினைத்தால் இந்தக் கோயிலுக்குப் போவோம். வண்டியிலேயே போயிடலாம் என்பது ஒரு வசதி! வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு நிறையத் தரம் போயிருக்கோம்.

   Delete
 13. புளியோதரைக் கதை ஆண்டாள் கதையை விட சூப்பரா இருக்கு. கோயில் பிரசாதம் என்றாலே அது என்னமோ தெரியல்ல, விரதமாக கோயிலுக்குப் போவதாலயோ என்னமோ அமிர்தம் போல இருக்கும். எங்கள் பிள்ளைகள் வீட்டில் என்ன சாதமும் சாப்பிட மாட்டார்கள்.. ஆனா கோயிலில் எனில் எது கொடுத்தாலும் இரு தடவைகள் வாங்கிச் சாப்பிடுவினம்.. எங்களுக்கு வியப்பாவே இருக்கும்..

  இப்போ நெ.தமிழன் ஜொள்ளுவார் அது உங்கள் சமையல் அப்பூடி என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

  இருப்பினும் கீசாக்கா நீங்க கொஞ்சமாவது நெ.தமிழனுக்குக் கொடுத்திருக்கலாம்.. இன்று சனிக்கிழமைதானே விடுமுறையாகத்தானே இருப்பார்.. சொல்லி அனுப்பியிருந்தால் வந்திருப்பார்:)..

  ReplyDelete
  Replies
  1. நான் இதில் நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன். சாதாரண சமையல் (தளிகை) இறைவனுக்கு உணர்வு பூர்வமாகப் படைத்த பிறகு ருசி கூடியிருக்கும்.

   கோவில் பிரசாதம், அங்க போடுகிற உணவுலாம் நிச்சயம் புனித உணர்வைக் கொடுக்கும். இத்தனைக்கும் வீட்ல, முந்திரி, நெய் என்று எந்தப் பொருட்களை உபயோகப்படுத்தினாலும் கோவிலில் சாதாரணமாகத் தயாரிக்கப்படும் பிரசாதம் அருகில்கூட வரமுடியாது.

   Delete
  2. நெல்லைத் தமிழன் வந்தால் கோயில் பிரசாத ஸ்டாலில் வாங்கிச் சாப்பிட்டுப்பார் அதிரடி! நான் ஒண்ணும் வாங்கித் தரப் போறதில்லை! :)))))

   நீங்க சொல்றாப்போல் எங்க பேத்திகளும் அப்படித் தான்! கோயில் சாப்பாடு என்றால் காணாதது கண்ட மாதிரி சாப்பிடுவாங்க! அதே வீட்டில் கொடுத்தால் "நோ!" தான்!

   Delete
 14. ஓ ஆண்டாள் கீசாக்காவை ஏமாத்திப் போட்டுதோ? அது நீங்க செல்பி எடுத்திடப் போறீங்க எனும் பயத்தால ஒளிச்சிட்டா போல எங்கட நெ.தமிழன் ஸ்ரீராமைப்போல ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

  ReplyDelete
  Replies
  1. அதிரடி, கோயிலுக்கு செல்ஃபோன் எடுத்துச் செல்லத் தடை. கொஞ்சம் கெடுபிடியாக முன்பெல்லாம் அலுவலகத்தில் வாங்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போல்லாம் கண்டுக்கறதே இல்லை. ஆனாலும் நான் என்னையே இன்று வரை செல்ஃபி எல்லாம் எடுத்துக் கொண்டதில்லை! எடுக்கும் ஆசையும் இல்லை. செல்ஃபி பைத்தியங்களைப் பார்த்து வெறுத்துப் போயிட்டேன். இதுக்காக உயிரைக் கூட விடறாங்க! இதில் என்ன இருக்குனு தான் புரியலை!

   Delete
  2. உண்மைதான் கீசாக்கா சமீபத்தில ஒரு இண்டோனேசியா யுனி ல படிக்கும் மாணவர் கொழும்பு போய், அங்கு வெள்ளவத்தையில கடற்கரையால ரெயின் தண்டவாளம் போகும், அதில ஏறி நிண்டு ரெயின் வந்துகொண்டிருக்கும்போது செல்பி எடுத்தாராம், காதில இயர்ஃபோன் வேறு இருந்துதாம் அதனால ரெயின் கிட்ட வந்தது தெரியாமல் அதிலயே அடிச்சு ஆள் சரியாம்.. இப்போதைய பிள்ளைகளை நினைச்சாலே நடுங்குது... எல்லோரும் பத்திரமாக இருக்கோணும் என வேண்டிகொண்டிருக்க வேண்டி இருக்கு எப்பவும்.

   Delete
 15. சென்னையில் எந்தெந்தக் கோயில்களில் எந்தெந்த நாளில் பிரசாதம் வழங்கப்படுகிறது என்கிற தகவல்கள்

  மாமல்லபுரத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் பொங்கல், வடை, சுண்டல், புளிசாதம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரசாதம் வழங்கப்படுகின்றது.

  அடையார் பத்மநாபசுவாமி கோயிலில் விழாக்காலங்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

  இச்சம்பாக்கத்தில் அமைந்துள்ள சாய் பாபா கோயிலில் பிரதி வியாழக்கிழமை மதியம் வேளையில் பலவித பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
  மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புளிசாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

  முகப்பேர் சாந்த பெருமாள் கோயிலில் சர்க்கரைப் பொங்கலும், புளிசாதமும் சிறப்பு.

  ; மைலாப்பூரில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் கோயிலில் மிளகு வடை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

  மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளிசாதமும் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

  மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுண்டல், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், தயிர் சாதம், பால் கோவா, பிஸ்கேட், சாக்லேட் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

  நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயிலில் மாலை வேளையில் புளி சாதம், வெண் பொங்கல், மிளகு வடை பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

  பெரம்பூர் ஐயப்பன் கோயிலில் வெண் பொங்கல் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

  போரூரில் உள்ள சாய்பாபா கோயிலில் வடை, வெண்பொங்கல், கேசரி ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வழங்கப்படுகிறது.

  புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு பிரதோஷ காலங்களிலும் வெண்பொங்கல், கேசரி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

  புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புளிசாதம் பிரதி சனிக்கிழமைகளில் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

  தி.நகர் குருத்வாரா (சிக்கியர் கோயிலில்) அளவற்ற சாப்பாடு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
  தி.நகர் வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் மத்திய கைலாஷ் கோயில்களில் விழாக்காலங்களில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றது.

  திருவான்மியூர் சாய் பாபா கோயிலில் பிரதி வியாழக்கிழமைகளில் பலவித பிரசாதங்கள் வழங்கப்படுகின்றது.

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் மற்றும் வடபழனி முருகன் கோயில்களில் புளிசாதம் பிரசாதமாக வழங்கப்படும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மதுரைத் தமிழரே, தகவலுக்கு நன்றி. முகப்பேர் சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலைத் தான் சாந்தப் பெருமாள்னு சொல்லி இருக்கீங்களோனு நினைக்கிறேன். அங்கே தினம் தினம் பிரசாதம் உண்டு. மடப்பள்ளியிலிருந்து சமைத்து தரிசனம் செய்து முடித்துப் போகும் பக்தர்களுக்கெல்லாம் பிரசாதம் கட்டாயமாய்க் கொடுப்பார்கள். சாம்பார் சாதம், எலுமிச்சை, புளி, தேங்காய்ச் சாதங்கள், தயிர் சாதம், பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என மூணு மணி நேரத்துக்கு ஒரு தரம் முன்னெல்லாம் மாறும். இப்போ ஏழு, எட்டு வருடங்களில் என்ன மாறி இருக்குனு தெரியலை. வேலூர் ஸ்ரீபுரத்திலும் பிரசாதம் கொடுக்கிறார்கள். ஆனால் என்னென்னவோ கட்டுப்பாடுகள். ஆகவே நாங்கள் வாங்கவில்லை.

   Delete
 16. புளியோதரை... மை ஃபேவரைட்

  ReplyDelete
  Replies
  1. அட, சிபி, வாங்க, வாங்க பல வருடங்களுக்குப் பின் வருகை தந்ததுக்கு நன்றி. புளியோதரை உங்களையும் இழுத்து வந்து விட்டது.

   Delete
 17. புளியோதரை ப்ரசாதம் கிடைத்து சாப்பிடுவதும், கூடவே கொஞ்சம் பேருக்காவது அதை வினியோகிக்க நேர்வதும் பாக்யம். உங்களுக்கு அது கிடைத்திருக்கிறது.

  //..நம்பெருமாளுக்கு இந்தக் காவிரி நீரையும் சுட வைச்சுச் சூடு ரொம்ப இருக்கா, சரியா இருக்கானு ஒரு பட்டாசாரியார் கையில் விட்டுப் பார்த்துக் கொண்டு பின்னர் ஒப்புதல் தந்த பின்னர் தான் திருமஞ்சனமாம்..//

  இது உங்கள் பதிவில் எனக்குத் திருப்தி தந்த வரி! அந்த பட்டருக்குக் கோடி புண்ணியம். சூடு சரியா இருக்கான்னு ஒருதடவைக்கு ரெண்டு தடவையாத் தொட்டுப்பார்த்துதானே, வீட்டில் சின்னக் குழந்தைக்குக் குளிப்பாட்டுவோம். அப்படித்தானே நம்பெருமாளுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் (அந்தந்தக் கோவில்களில், சன்னிதிகளில்) நடக்கவேண்டும். இதையெல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் அர்ச்சகர்கள் சரியாகக் கையாளவேண்டும்.

  டெல்லியில் ஆர்.கே.புரம் கோவில் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி செல்வோம். திருமஞ்சனம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கும். உத்சவர் திருமஞ்சனத்திற்காக பாத்திரத்தில் அர்ச்சகர் வெந்நீரை எடுக்கையில் ஆவி பறக்கும். எனக்கு பதட்டம் உண்டாகியிருக்கிறது. சூடு அதிகம்போல் தெரிகிறதே. இன்னும் கொஞ்சம் ஆறவைத்திருக்கலாமோ? தொட்டுப்பார்த்துவிட்டு விடக்கூடாதா? அப்படி என்னய்யா அவசரம்? என்று நினைத்ததுண்டு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், அவ்வப்போது அபூர்வமாக வந்து கருத்துகள் சொல்வதற்கு நன்றி.

   Delete
 18. அனைவருக்கும்
  அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete