எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 16, 2006

63. அனுபவம் புதுமை-தொடர்ச்சி

சிகந்திராபாத்தில் இறங்கின உடனே வண்டியை விட்டது தெரிந்ததும் பித்துப் பிடித்தது போல ஆகி விட்டது. உங்களுக்குத் தான் தெரியுமே நாங்கள் மூட்டை தூக்குவது பற்றி. இப்போதும் அதுமாதிரியே நிறைய சாமான்கள். நாங்கள் கிளம்பின சமயம் குளிர்காலம். ஆகவே ரெயிலில் எங்களுக்கு வேண்டிய குளிர் பாதுகாப்புப் பொருளே நிறைய இருந்தது. ராஜஸ்தானில் நல்ல குளிர் இருக்கும். சிலசமயம் 0 டிகிரிக்குக்கூடப் போகும். நாங்கள் அந்த வருடம் தான் போயிருந்தோம். ஆதலால் எங்களுக்கு மட்டும் இல்லாமல் இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் என் மாமனார், மாமியார், என் அப்பா, அம்மா, மற்றும் எல்லாருக்கும் குளிருக்குப் போர்த்திக் கொள்ளக் கம்பளி, ஸ்வெட்டர், ஷால்(ஆச்சரியப் படாதீர்கள்.) அங்கே எல்லாம் இருந்துவிட்டு இங்கே வந்தால் எங்களுக்குத் தான் குளிர் விட்டுப் போயிருக்கே தவிர, இங்கே எல்லாரும் போபோபோபோபோபோபோபோர்த்திக் கொண்டு படுக்கறதையும் ஜன்னல் எல்லாம் மூடுவதையும் பார்த்தால் எனக்கு இன்னும் புழுக்கமாக இருக்கும். ஆகவே நாங்கள் வாங்கி வந்தது அதிசயமே இல்லை. அது தவிர கோதுமை மாவு அது, இது , நாத்தனாருக்கு எல்லாம் புடவை என்று நிறையச் சேர்ந்து விட்டது. என் வழியில் புடவை வாங்கும் அளவு யாரும் இல்லை. வாங்கிக் கொண்டால் எனக்குத் தான் வாங்கிக்கணும். நானே சின்னப் பொண்ணு, இப்போவே 16தான்னா, அப்போ நான் பிறக்கவே இல்லை, இல்லையா? அப்புறம் யாருக்கு வாங்குவது, அதான். அது போகட்டும். நாங்கள் என்ன செய்யலாம் என்று யோசித்ததில், போர்ட்டர் சொன்னான்:"அம்மா குழந்தையுடன் இங்கே இருக்கட்டும். நாம் இருவரும் "நாம்பள்ளி" போய் இடம் போட்டுக் கொண்டுவருவோம் என்றான். நான் ஒத்துக் கொள்ளவில்லை. இங்கே போய் ஸ்டேஷன் மாஸடரிடம் கேட்கலாம் என்றேன். சரி என்று இருவரும் போனோம். ஸ்டேஷன் மாஸ்டர் முழு லிஸ்ட்டும் நாம்பள்ளியில் தான் இருக்கும் என்றும், அங்கே போனால் தான் நிலவரம் புரியும் என்றும் சொன்னார். இங்கே இருப்பது சிகந்திராபாத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டவர்களின் லிஸ்ட் மட்டும்தான் என்றார்.
என்ன செய்வது என்று யோசித்தார் என் கணவர். பின் ஒரு வண்டி பிடித்து வந்து இருவரும் "நாம்பள்ளி" போகலாம் என்றார். சரி என்று போர்ட்டரிடம் சாமானைத் தூக்கி வந்து ஸ்டேஷன் வெளியே வைத்துவிட்டு ஒரு வண்டி கொண்டுவரச் சொன்னோம். அவன் கொண்டுவந்தது ஒரு ரிக்ஷா வண்டி. இதில் எப்படிப் போவது? என்று நான் மறுத்தேன். உடனே அந்த ரிகஷா காரன் அழுதுவிடுவான் போல் இருந்தது. சரி, இதுவாவது கிடைத்ததே என்று வா போகலாம் என்று கூறினார் என் கணவர். அவர்தான் பி.எம். ,சுப்ரீம் கோர்ட் எல்லாம். ஆகவே அப்பீலே கிடையாது. பேசாமல் ஏறினேன். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டால் அவள் தனி சீட் வேண்டும் என்று பிடிவாதம். அந்த ரிக்ஷாவில் நாங்கள் இரண்டு பேருமே விழாமல் இருந்தால் அதிசயம். பிறகு அவரும் ஏறினார். சாமனை வைத்துக் கொண்டு எங்கே உட்காருவது?. தொங்கிக் கொண்டு போனோம். அது வேறே ஹுஸேன் சாகர் ஏரிப்பாலம் பூரா போகும். அந்த வழி போனவர்கள், வந்தவர்கள் எல்லாருக்கும் எங்கள் பிரயாணம் ஒரு காணக்கிடைக்காத காட்சியாக இருந்திருக்கும். அத்தனை கஷ்டத்திலும் ஏரியையும், அதன் அழகையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்போவே ரொம்ப சுத்தமாக வைத்து இருந்தார்கள். அங்கங்கே உட்கார வசதி. பார்க் மாதிரி எல்லாம் அலங்காரம். ஒருதரம் வந்து நிதானமாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். யாருக்குத் தெரியும்? நான் அங்கேயே அடுத்த மாற்றலில் வரப்போவது? அப்போது தெரியாதே?
ஒருவழியாக நாம்பள்ளி போனோம். அங்கே ஸ்டேஷனில் கேட்டதில் டிக்கெட் வாங்க வேண்டாம் என்றும் அதே டிக்கெட்டிலேயே பிரயாணம் செய்யலாம் என்றும் எழுதிக் கொடுத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். ரிசர்வேஷன் பற்றிக் கேட்டதற்கு RAC கிடைத்தால் தருகிறேன் என்றார்.

வண்டியும் வந்தது. ஒரு முதல்வகுப்புப்பெட்டியில் ஏறினோம். கண்டக்டரிடம் சொன்னதற்கு வெளியில் அவர்கள் உட்கார்ந்து கொள்ளப் போட்டிருப்பார்கள் அல்லவா அந்த இடத்தில் உட்காரச் சொல்லி விட்டு சிகந்திராபாத்தில் பார்க்கலாம் என்றார். சிகந்திராபாத் வந்ததும் உட்கார மட்டும் சீட் கிடைத்தது. அதில் எப்படியோ உட்கார்ந்து கொண்டு சென்னை வரை வந்தோம். இதில் டிக்கெட் நேரே சென்னை வரை எடுத்து இருப்பதால் பார்த்த டிடிஆர் எல்லாருக்கும் ஒரே சந்தேகம். ராஜஸ்தானில் இருந்தா வருகிறீர்கள் என்று திருப்பித்திருப்பிக் கேட்டு எரிச்சல் ஏற்படுத்தினார்கள். ஒரு வழியாகச் சென்னை வந்தோம். இங்கே அண்ணா, தம்பி எல்லாம் நடந்தது தெரியாமல் எங்களைக் காணோம் என்று முதல் வண்டியில் பார்த்து விட்டுக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

4 comments:

  1. //நானே சின்னப் பொண்ணு, இப்போவே 16தான்னா, அப்போ நான் பிறக்கவே இல்லை, இல்லையா? //

    hahaaaa :) unga lollukku oru alavee illayaa?
    appadi, oru vazhiyaa, chennai vanthaachu.. marupadi chn to rajesthan post poduveengaloo? :)

    ReplyDelete
  2. அம்பி, இதுதானே வேணாங்கிறது, அப்போ அப்போ என்னோட வயசை நான் நினவு வச்சுக்க வேண்டாமா? அப்புறம் சென்னை ராஜஸ்தான் போஸ்ட் போடலாம். அப்போதான் முதல் முதல் தாஜ்மஹால் பார்த்தோம். யோசிக்கிறேன். இன்னும் ஊருக்குப் போகவே இல்லையே? அதை அப்படியே விடலாமா, தொடரலாமானு யோசிக்கிறேன். இதுக்கே இப்படின்னா பிரயாணம் செய்த எங்களுக்கு எப்படி இருக்கும்?

    ReplyDelete
  3. ஏதாவது காரணம்காட்டி தொடரை தொங்கல்லாவிட்டா அப்புறம் நடக்கிறதே வெறே.சென்ட்ரல் ஸ்டேஷன்லேயெ விட்ட எப்படி. வீட்டுக்கு கூட்டிகிட்டு போங்க.அந்த சாமான்கள் வீட்டில் எப்படி எவ்வளவு இடம் பிடித்தது அதெல்லாம் யார் சொல்லுவா? அன்பன் தி ரா ச

    ReplyDelete
  4. trc Sir,
    இந்தப் பின்னூட்டம் இங்கே இருக்கிறதை இன்னிக்குத் தான் பார்த்தேன். மன்னிச்சுக்குங்க. தேடினேன். கிடைக்கலை. வீட்டுக்குப் போனது, அப்புறம் மாமனார் சஷ்டி அப்த பூர்த்தி எல்லாம் எழுதினால் சுயசரிதை மாதிரி போகுமேனு பார்க்கிறேன். அது வரைக்கும் செண்ட்ரல் ஸ்டேஷனிலேயே நிப்போம்.

    ReplyDelete