எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 31, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! 2

காலையில் குளித்துவிட்டுப் பிள்ளையாரை வணங்கித் தலையின் இருபக்கமும் குட்டிக் கொள்ளுவதால் நல்ல ரத்த ஓட்டமும், நரம்புகளில் புத்துணர்ச்சியும் ஏற்படும். நம் முன்னோர்கள் ஆராயாமல் எதையும் செய்யவில்லை எனினும், நடுவில் வந்த சில பிரச்னைகளால், ஒரு தலைமுறைக்குக் காரண, காரியம் தெரியாமல் போனதால், எல்லாமே மூட நம்பிக்கை என்று ஏற்பட்டு விட்டது. மாறக்கொஞ்ச நாட்கள், இல்லை மாதங்கள் கூட இல்லை, வருடங்களே பிடிக்கலாம் எனினும் மாற்றம் வரும். முதன் முதல் இதை ஆரம்பித்து வைத்தது பற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றது. என்றாலும் முக்கியமாய்ச் சொல்லப் படுவது மகாவிஷ்ணுவின் சக்கரத்தைப் பிள்ளையார் வாங்கி வைத்துக் கொண்டு கொடுக்கவில்லை என்றும், அவர் மனதை மாற்ற விஷ்ணு விளையாட்டுக் காட்டும்போது, தன் தலையில் இரு கைகளாலும் குட்டிக் கொண்டதாயும், அப்போது விநாயகர் சிரித்தபோது வாயிலிருந்து சக்கராயுதம் கீழே விழ, விஷ்ணு அதை எடுத்துக் கொண்டதாயும் ஒரு கதை. விநாயகரை இம்மாதிரி மகாவிஷ்ணு விளையாட்டுக் காட்டியதற்குப் பின்னரே இந்த நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது

@அம்பி சொன்னதுக்கு அப்புறமே தவறு புரிந்தது. திருத்தி இருக்கேன். அம்பி இப்போ ஓகே???

அதன் பின்னர் அகத்தியர் காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த போது, மக்களுக்குப் பயன் பட வேண்டி, அகத்தியர் மாலைக் கடன்கள் செய்யச் சென்ற போது, அந்தக் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்கள் செய்ய ஆரம்பிக்க அப்போது அங்கே அந்தணச் சிறுவனாக வந்த விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகின்றார். கமண்டலத்து நீர் பொங்கிப் பெருகிப் பிரவாகமாய் ஓட ஆரம்பிக்க, திகைத்துப் போன அகத்தியர் குறும்பு செய்த சிறுவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சிறுவனைப் பிடிக்க ஓட, விநாயகர் அவர் கையில் மாட்டாமல் அங்கே இங்கே அலைக்கழித்துவிட்டுப் பின்னர் மாட்டிக் கொள்ளுகின்றார். சிறுவனைக் குட்டுவதற்கு அகத்தியர் கையை ஓங்க, விநாயகர் காட்சி தருகின்றார். குட்ட நினைத்த தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகின்றார் அகத்தியர். மக்களின் பயனுக்கு ஆகவேண்டியதை அடைத்து வைத்ததாலேயே தான் வந்து இம்மாதிரிச் செய்யும்படி ஆயிற்று என விநாயகர் சொல்ல, அகத்தியரும் தன் தவற்றை ஒப்புக் கொள்ளுகின்றார். (பிள்ளையாரப்பா, கர்நாடகாக் காரங்க காதிலே போய்ச் சொல்ல மாட்டியா???)

இம்மாதிரி தோர்பி கரணம் போடுவதால் மூளை நரம்புகள் தூண்டப் படுவதாய் சமீபத்திய ஆராய்ச்சி சொல்லுவதாய் நம்ம இ.கொ. இங்கே எழுதி இருக்கார் பாருங்க. மனித உருவும், விலங்கு உருவும் இணைந்த கோலத்தில் காட்சி அளிப்பதன் தாத்பரியமும் அனைத்து உயிர்களும் தன்னில் அடங்கும் என்பது தான். கழுத்துக்குக் கீழே மாயை, கழுத்துக்கு மேலே பரம்பொருள் என்ற உருவில் காட்சி அளிக்கின்றார் விநாயகர். நம்முடைய மூளையே சிந்திக்கின்றது அல்லவா?? அத்தகைய சிந்தனையைத் தருவதாலேயே அதை உயர்த்திச் சொல்லப் படுகின்றது. உடல் செயல்படவேண்டுமானால் மூளை சிந்திக்கவேண்டும். அது தலையினுள்ளே இருக்கின்றது. அதேபோல் தலைக்கு ஆதாரமாய் உடல் திகழ்கின்றது. இரண்டும் இல்லாமல் மற்றொன்று இல்லை. உடலால் உழைக்கவும் வேண்டும், அறிவாற்றலால் சிந்திக்கவும் வேண்டும். இதைச் சுட்டிக் காட்டவே விநாயகரின் தலை யானை உருவில் பெரியதாக இருக்கின்றது. பிள்ளையாருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம் வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலினுள் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் வெளியே வெறும் மாவாகக் காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் பூரணம் இனிப்பாய் இருப்பதைப் போல் நம் வாழ்விலும், இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர்.எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.
தேங்காய் உடைப்பது என்பதும் மிக அரிய ஒரு தத்துவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனுக்கு எவ்வாறு மூன்று கண்களோ அவ்வாறே தேங்காய்க்கும் மூன்று கண்கள். ஈசனைப் போன்ற உயர்ந்த தேங்காயைப் பிள்ளையாருக்குப் படைப்பதின் மூலம் நம்மிடம் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த வஸ்துவை இறைவனுக்குக் கொடுக்கிறோம். மேலும் தேங்காயின் ஓடு மிகவும் கெட்டியாய் நம் மண்டை ஓட்டைப் போல் இருக்கிறது. அதன் பருப்பும், உள்ளே உள்ள இனிப்பான நீரும் நம் உடலினுள் மூளைக்கு மிக அருகில் அமைந்துள்ள அமிர்தமய கோசத்தைக் குறிக்கும். நம் மண்டையையே சிதற அடிக்கிற பாவனையிலும், நம் அகங்காரம் அதன் மூலம் அகன்று உள்ளே உள்ள அமிர்தானந்த மய நிலையை நாம் அடைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தவும் தேங்காய் உடைக்கப் படுகிறது. இது போன வருஷம் போட்ட பதிவில் இருந்து எடுத்தது. சிதறுகாய் உடைப்பதன் தாத்பரியமும் நம் ஆணவம் சுக்குநூறாய்ச் சிதறவேண்டும் என்பதற்கே.

விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப் போதும். அதுவும் இல்லையா, தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லைப் பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்குச் சாற்றினல் போதும். மனம் குளிர்ந்துவிடுவார் விநாயகர். அனலாசுரனை விழுங்கியதாய் விநாயகர் உடலில் சூடு அதிகம் ஆக, அந்தச் சூடு தாங்க முடியாமல் அகில உலகமும் நடு நடுங்க, விநாயகரே தன்னை அருகால் அபிஷேகம் செய்யச் சொன்னதாய்ச் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்தது அருகம்புல் இதற்கு ஈடு, இணை ஏதும் கிடையாது என்பதைக் கெளண்டின்யர் மனைவி ஆசிரியை செய்த பரீட்சை மூலம் தெரிந்து கொண்டிருக்கின்றோம். தெரியாதவங்க கையைத் தூக்குங்க, கதை நாளைக்கு வரும்!

விநாயகர் வலம் வருவார்!

கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்!

இன்னும் இரண்டு நாட்களிலே நம்ம நண்பரின் பிறந்த நாள் வருது. இந்த வருஷமும் அவரோட பிறந்த நாளை பதிவுகள் மூலம் கோலாகலமாய்க் கொண்டாட எண்ணம். அதுவும் ராமாயணம் முழுதும் எழுதி முடிக்க உறுதுணையாக இருந்திருக்காரே! சின்ன வயசிலே முதன்முதல் கற்றுக் கொண்ட ஸ்லோகமே அவருடைய "கஜானனம் பூதகணாதி சேவிதம்" தான். அப்புறமாய்ப் பள்ளி செல்ல ஆரம்பித்ததுமே முதன் முதல் கற்றுக் கொண்ட பாரதி பாட்டும் "கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்" பாட்டு தான். பிள்ளையாரைப் போன்ற உற்ற சிநேகிதரும், கடவுளும் இல்லை என்னைப் பொறுத்தவரை. (கேஆரெஸ், நோட் திஸ் பாயிண்டு!!!) அவரோட சண்டை போட்டிருக்கேன், திட்டி இருக்கேன். பேசமாட்டேன் என்று சொல்லி இருக்கேன், சொல்லுகின்றேன். ஆனாலும் அவர் கோவிக்கிறதே இல்லை. என்ன சொன்னாலும் பேசாமல் இருக்கார். ஆனால் இந்த மூஞ்சுறைத் தான் அனுப்பி வைச்சுடறார் வீட்டிலே குட்டி போட. என்ன செய்யறதுனு புரியலை!

அவ்வளவு பெரிய சாமிக்கு இவ்வளவு சின்ன வாகனமா என்ற கேள்வி எனக்கும் வந்திருக்கு. ஆனால் ஒரு எலி போன்ற சாதாரணப் பிராணியைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டது அவரோட எளிமையையே காட்டுகின்றதுனு அப்புறமா தோன்றியது. எலி பொதுவாய் எல்லாரும் விரட்டும் ஒரு பிராணி. பொறி வைத்துப் பிடிப்போம். அதைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டதில் இருந்து எவ்வளவு சிறிய மனிதராய் இருந்தாலும் அவர்களிடமும் ஏதாவது ஒரு முக்கியத்துவம் இருக்குனு புரிய வைக்கிறார் போலிருக்கு. காலால் ஒரு நசுக்கு நசுக்கினால் உயிர் போயிடும் அந்த எலிக்கு. ஆனால் அதை இத்தனை பெரிய தொப்பை உள்ள பிள்ளையார் வாகனமாய்க் கொண்டிருக்கின்றார் என்றால் தன் உடம்பையும் அதற்கேற்றவாறு மிக மிக கனமில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்றும் தோன்றுகின்றது.

உட்கார்ந்திருக்கும் இடமோ அநேகமாய் ஏதாவது ஆற்றங்கரையிலோ, அல்லது குளத்தங்கரையிலோ, அரசமரத்தடி போதும். வேறே சுக, செளக்கியங்கள் வேண்டாம். அரசமரத்தின் சலசல, சப்தம் கேட்டால் தான் புரியும் எத்தனை இனிமை என்று. மேலும் மரத்தில் வந்து கூடு கட்டும் பலவிதமான பட்சிகள், அவற்றின் இனிய கானங்கள் சற்று நேரம் உட்கார்ந்து பார்த்தால் புரியும் பட்சிகள் ஒன்றுக்கொன்று நடத்திக் கொள்ளும் பேச்சு வார்த்தை. சாதாரணமாய் நம் நாட்டில் அரசமரத்தை வெட்டுவதில்லை. ஏனெனில் அவை மும்மூர்த்திகளின் சொரூபமாய்ப் பார்க்கப் படுகின்றது. விருட்சங்களுக்கெல்லாம் அரசன் என்பதால் அரசமரம் என்ற பெயர் பின்னால் வந்தது. ஆனால் அதற்கு முன்னால் அந்த மரத்திற்கு வேறு பெயர். ம்ம்ம்ம்????? அதுக்கும் ஒரு கதை உண்டு. மறந்துடுச்சு, நினைவு வரும்போது எழுதறேன். இந்த அரசமரம் மூலத்தில் அதாவது வேர்பாகம் பிரம்மா, என்றும் மத்திய பாகம் விஷ்ணு என்றும், மேல்பாகம், அதாவது தலைப்பாகம் ஈசன் என்றும் சொல்லுவதுண்டு. நீர், நிலைகளில் நீராடிக் குளித்துவிட்டு, இந்த மாதிரி கரையில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவது மிக மிக உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அரசமரக் காற்று உடலுக்கு நன்மை செய்யும்.

நீர் தான் உலகில் முதலில் தோன்றியதாய்ச் சொல்லுவார்கள். பின்னர் தோன்றியது மண் எனப்படும் பூமி. பிள்ளையாரைக் களிமண்ணால் பிடிக்கின்றோம். மண்ணில் இருந்து தோன்றியவர் பிள்ளையார். முதலில் தோன்றியவர் என்பதற்காகவும், மண்ணில் இருந்து தோன்றியவர் என்பதாலும் மண்ணில் செய்த பிள்ளையார்களை நீரில் கரைக்கின்றோம். நீரில் அனைத்து தேவதைகளும் குடி இருப்பதாய்ச் சொல்லுகின்றோம். ஆகவே நீரில் கரைப்பதுதான் முறையானது என்பதாலேயே மண்ணும், நீரும் சேர்த்துச் செய்த கலவையான பிள்ளையாரை நீரில் கரைக்கின்றோம். ஆனால் இன்றைய நாட்களில் இது மிக மிக அருவருப்பான ஒரு விஷயமாய்ப் போய் விட்டது.

பிள்ளையார் இன்னும் வருவார்.

Thursday, August 28, 2008

சகோதரி அனுராதா ஆன்மா சாந்தி அடையட்டும்!


கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 5 வருடங்களாகப் புற்று நோயுடன் போராடி வந்த சகோதரி அனுராதா, இன்று காலை, 9-52 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். வாழ்வின் துயரங்கள் மறைந்து அந்திமாலையில் கணவனோடு இனிமையான இல்லறம் நடத்தத் தயாராக இருந்த சகோதரிக்கு இப்படி ஒரு நோய் வந்து அவரின் உயிரைப் பறித்துக் கொண்டது சோகத்திலும் சோகம். ஆனாலும் அவருக்குக் கடைசிவரையிலும் உறுதுணையாக இருந்து வந்த அவரது கணவர் திரு சுப்பிரமணியம் அவர்களின் துணையினாலேயே அனுராதா கடைசி வரையிலும் மன உறுதியுடன் போராடினார். சுப்பிரமணியம் அவர்களைத் தேற்ற வார்த்தைகளே இல்லை. அனுராதாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை!

எங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-ல் இருந்து 500 வருடங்களுக்கு முற்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு உட்பட்ட கற்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப் பட்டன. அவற்றைக் கல்வெட்டுப் படிப்பவர் மூலம் ஆராய வேண்டி ஒருவரை அனுப்புமாறு நண்பர் மரபூர் சந்திரசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கு நேரம் இப்போது தான் வந்தது.புதுசாய்ப் படிக்கிறவங்களுக்காக அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்
இங்கே மற்றும்
இங்கே பார்க்கலாம். அந்தக் கோயிலைத் திருப்பணி செய்து மீண்டும் நித்தியப் படி வழிபாடுகள் நடக்கச் செய்து வரும் முயற்சிகள் ஓரளவு பலனை அளித்து வருகின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். கோயிலில் இருக்கும் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப் பட்ட கற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயR.E.A.C.H. Foundation உறுப்பினர் ஆன சந்திரசேகரன், அதன் அமைப்பாளர் ஆன சத்திய மூர்த்தியிடம் சொல்லி ஆவன செய்ததின் மூலம் சென்ற ஞாயிறு அன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள், தகுந்த வல்லுனர்களோடு கூடிய குழுவை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் ரீச் ஃபவுண்டேஷன் உறுப்பினர் ஆன திரு லட்சுமிநாராயணன் மூலம் பரவாக்கரை சென்று மேற்சொன்ன கோயிலைப் பார்வை இட்டிருக்கின்றார். கல்வெட்டுக்களின் வார்த்தைகள் தமிழே என்றாலும் அது பல்லவர் காலத்துக்கு முந்தைய எழுத்தாய் இருக்கலாமோ என ஒரு கருத்து திரு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அது பற்றி மேலும் ஆய்வு நடப்பதால் பின்னர் அது பற்றித் தெளிவான கருத்து வரும்.

இப்போது தெரியவேண்டிய முக்கியமான விஷயம் அந்தக் கோயில் கட்டக் கொண்டு வரப்பட்ட கற்கள் அனைத்தும், பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் முன்னொரு காலத்தில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஈசனின் மாடக்கோயிலின் கற்கள் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த மாடக் கோயில் இன்று இல்லை. எனினும் இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் திரு செளந்தரராஜன் அவர்கள் (ஓய்வு), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ், பங்களூரு, சொல்லுவது, அந்த மாடக் கோயில், கோச்செங்கணான் காலத்திற்கும் முன்னால் திருமூல நாயனாரால் கட்டப் பட்டது என்று சொல்கின்றார். திருமூலரைப் பின்பற்றி, சைவ யோக மரபைப் பின்பற்றிய கோச்செங்கணான் பின்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டி இருக்கின்றான் என்றும் சொல்லுகின்றார். திருமூலர் தான் இந்தப் பரவாக்கரையில் மாடக் கோயில்கள் இரண்டை ஈசனுக்கு எழுப்பி இருக்கின்றார் என்றும் சொல்லுகின்னார். ஒன்று அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகத மாணிக்கேஸ்வரர் கோயில் (சிதிலமாகிப் போன இந்தக் கோயில் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பணி எடுக்கப் பட்டு, கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த பழைய விக்கிரஹங்கள் கிடைக்கவில்லை. புதியதாகவே வைக்கப் பட்டுள்ளது.) இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன், அடுத்துச் சொல்லுவது, பெருமாள் கோயிலின் கிழக்கே இருந்த இந்த மாடக் கோயிலின் கற்களைக் கொண்டே பெருமாள் கோயிலும், மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வு.

ஆனால் திரு செளந்தரராஜன் அவர்கள் இந்த மறைந்த ஞானானந்தேஸ்வரர் ஆலயத்தின், மிக மிகப் பழமையான மரகத லிங்கத்தை ஆய்வு செய்து, அந்த லிங்கம் திருமூலரால் அன்றி வேறு யாராலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்க முடியாது என்றும் சொல்லுகின்றார். இந்தப் பரவாக்கரையே திருமூலரால் வண்தில்லை என அழைக்கப் பட்டதாயும், இந்த வண்தில்லையின் இரு சிவபதிகளும் திருமூலரால் கட்டப் பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார். ஞானானந்தேஸ்வரர் ஆலயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அங்கே இப்போது நெல் வயல்களே காணப் படுகின்றன. ஆனால் மிக மிகப் பழமை வாய்ந்த அந்த லிங்கம் இருக்கும் இடத்தை "லிங்கத்தடி" என உள்ளூர் மக்கள் அழைப்பதோடு, ஊரில் மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது வேறு ஏதும் வேண்டுகோளை முன் வைத்தோ, லிங்கத்தடி லிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவது உண்டு என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் இன்று வரையில் அந்த மரகதலிங்கனார் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றார்.

இவருடன் உடனுறை அம்மையைக் காணவில்லை. ஆனால் துர்கை கிடைத்திருக்கின்றாள். சாஸ்தா, பிரம்மா, மற்றும் சப்த கன்னியரில் ஒருவர், மேலும் அதி முக்கியமாய் ஜேஷ்டா தேவி கிடைத்திருக்கின்றாள். இந்த ஜேஷ்டா தேவியின் சிலை மிக, மிக அழகு வாய்ந்ததாய் இருக்கின்றது. இங்கே உள்ள படத்தில் காணப்படும் விசலூர் ஜேஷ்டா தேவியைப் பெருமளவு ஒத்து இருக்கும் இந்தச் சிலையும், கூட இருக்கும் மற்றச் சிலைகளுமே பல்லவர் காலத்துக்கு முந்தி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ஜேஷ்டா தேவி வழிபாடு ராஜராஜ சோழன் காலம் வரைக்கும் இருந்து வந்ததாயும், பின்னர் முற்றிலும் அழிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. பலரும் நினைக்கும் வண்ணம், ஜேஷ்டா தேவி என்பவள், மூதேவி இல்லை என்றும் இந்த மூதேவி என்ற வார்த்தையே பின்னர் வந்தது என்றும் திரு செளந்தரராஜன் சொல்லுகின்றார். இந்த ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார். இப்போது வேங்கடநாதனுக்குக் கோயில் கட்டிக் கொள்ளத் தன் கோயிலின் கற்களைக் கொடுத்து உதவிய ஈசனுக்கும் புதியதாய்க் கோயில் எழுப்பப் பெரு முயற்சிகள் செய்து வருகின்றார் திரு செளந்தரராஜன் அவர்கள். 84 வயதாகும் அவர் பெரும் ஆவலுடன் இந்தக் கோயிலுக்கான அஸ்திவாரம் எழுப்பப் படும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். இது பற்றிய விபரமான தகவல்கள் இன்னும் பல இருக்கின்றன். ஒரே பதிவில் போட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவரும்.

Monday, August 25, 2008

அம்பி போயாச்சு, கேஆரெஸ் வந்தாச்சு! டும், டும், டும்!!

FRIDAY CAT AMBI IS BLOGGING

அம்பி போயாச்சு, கேஆரெஸ் வந்தாச்சு! டும், டும், டும்!!டும் டும் டும்!!!!!!!

அம்பிக்கும், எனக்கும் நடந்த, நடக்கிற, நடக்கப் போகும் பனிப்போர் வலை உலகு அறியும். ஆனால் இப்போ சமீப காலமா அம்பிக்கு டயாபர் மாத்தற அதிகப் படி வேலையினாலே, கொஞ்சம் குறைச்சுட்டு இருக்கார் போலிருக்கு. அதுக்காக என்னைச் சீண்டறதை விட முடியுமா?? அதுக்குச் சரியான ஆள் யாருனு அம்பி பார்த்திருக்கார். கேஆரெஸ் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிருக்கார் போலிருக்கு.. கேஆரெஸ்ஸும், நாளொரு வம்பும், பொழுதொரு பின்னூட்டமாக அதைப் பரிமளிக்கச் செய்து வருகின்றார். சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாப் போல் கேஆரெஸ் அவர் பாட்டுக்கு ஏதோ ஆன்மீகம்னு பக்திக் கதைகளை ரொம்ப ஜனரஞ்சகமா எழுதிட்டு வந்தார். நான் பாட்டுக்கு எனக்குத் தெரிஞ்சதை எழுதிட்டு இருந்தேன். வந்தது வம்பு! யாரால் , எப்போது, எங்கே ஆரம்பிச்சதுனு சொல்ல முடியலை. இந்தக் கோயில்கள் சிலவற்றிலே அகண்ட ராம நாம பஜனை பண்ணுவாங்க, தெரியும் இல்லை, விடாமல் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பஜனை பண்ணிட்டே இருக்கணும், அது மாதிரி, அம்பி இறங்கியதும், இப்போ கேஆரெஸ் முறை! :P :P :P :P

அம்பி ஆரம்பிச்சு வைக்க, மதுரையம்பதி துணைப்பாட்டுப் பாட, குமரன் எடுத்துக் கொடுக்க, திராச அவர்கள் கம்போஸ் பண்ண, திவா தனி ஆவர்த்தனம் வாசிக்க, (சும்மாச் சொல்லக் கூடாது, நல்லாவே வாசிக்கிறார், தெரிஞ்சுக்க இந்த இடங்களுக்குப் போய்ப் பாருங்க! :P:P:P:P) அதிலேயும், மெளலிக்குப் பரிஞ்சு குமரனோட இந்தப் பதிவிலே மெளலிக்காக ரொம்பவே உருகி இங்கே பின்னூட்டத்திலே இருக்கிறதும், ப்ரூட்டஸாக மாறி துலா மஹாத்மியம் வேணுமான்னு மெளலியைக் கேட்டு, அவரோட நவ கைலாயம் பதிவிலே பின்னூட்டம்போட்டிருக்கிறதும்,ஆஹா, இந்த மாதிரித் தனி ஆவர்த்தனம் யாராலேயும் முடியாது போங்க! :P:P:P ஆகவே பதிவுலக மக்களே, கேஆரெஸ்ஸின் கச்சேரி சமீப காலமாய்க் களை கட்டி இருக்கிறது. முக்கிய ஆடியன்ஸில் ஜிங்சக்கா அடிக்க கெக்கெபிக்குணியும், துர்காவும் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கின்றனர். (மை ஃப்ரண்டு, நீங்க ஃப்ரண்டா, எனிமியா?? புரியலையே, மலேசிய மாரியாத்தா?, இந்த துர்கா பண்ணற அடத்தை என்னனு கேட்கக் கூடாது?????), அதிலேயும் இந்த துர்கா போன்ற ஒரு பாசமலரை, பாசக்கிளியை, தேடிப் பிடிச்சாலும் கண்டு பிடிக்க முடியாது. அம்பி அண்ணா, கடைசியிலே பாசமலர் சாவித்திரியை விட ஒரு மேலான தங்கையைக் கண்டு பிடிச்சாச்சு, அவங்க வேறே ஏதோ ஒரு படம் சொன்னாங்களே, என்னமோ கொட்டாங்கச்சினு?? ம்ம்ம்ம்ம்?? என்னமோ தங்கச்சி, கொட்டாங்கச்சினு விஜய டி.ராஜேந்தர் ஸ்டைலிலே பேத்திட்டு இருந்தாங்க. சிரிப்புத் தாங்கலை எனக்கு! :P :P மேற்கொண்டு ஆடியன்ஸாக ஆர்வமுடன் வந்த கவிநயாவும், ராகவும் கையைப் பிசையோ, பிசை என்று பிசைந்ததில், அவங்க கையில் சப்பாத்திக்கு மாவு பிசையக் கொடுக்க முடிவு எடுக்கப் பட்டது. ஆக மொத்தம் ஒரு ஸ்பெஷல் கச்சேரி களை கட்டுகிறது. அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கின்றோம்! இதிலே சஸ்பென்ஸ் அடுத்தது யாரு????????? இது தான் இப்போ என்னோட நிலைமை!!! :P:P:P:P:P அகண்ட நாம பஜனை முழு வேகத்துடன் தொடர்கின்றது. ஆவலுடன் எதிர்பாருங்கள்!

ராமாயணத்தில் தேசீய ஒருமைப் பாடு:

ராமாயணம் வால்மீகி எழுதிய காலத்திலேயே இந்தியா ஒருங்கிணைந்தே இருந்ததாய்த் தெரிய வருகின்றது. இன்றைக்கு நாம் காணும் கங்கை, யமுனை, சரயூ, கோதாவரி, பொருநை, பம்பை போன்ற நதிகளே அன்றைக்கும் இருந்து வந்திருக்கின்றன. மலைகளும், அதன் இருப்பிடங்களும் அதன் வர்ணனைகளும் கூடியவரையில் இன்றைய நாட்களுக்குப் பொருந்தும் வண்ணமாகவே உள்ளது. இமயமலைத் தொடர் வடக்கே இருப்பதாய்க் கூறும் வால்மீகி, அங்கே இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் சீனாவையும் குறிப்பிட்டு மஞ்சள் நிறமுள்ள மிலேச்சர்கள் அங்கே வசிப்பதாயும் கூறுகின்றார். திருக்கைலை செல்லும் வழியைக் கூறும் அதே நேரம் அங்கே நிலம் மண் வளமற்றுப் பாசனங்கள் ஏதுமின்றி வெறும் தரிசாய்க் காணக் கிடைப்பதையும் குறிப்பிடுகின்றார். அங்கே மனிதர்கள் அதிகம் வசிக்க முடியாது என்று இன்று இருக்கும் அதே நிலையை அன்றும் இருந்ததாய்க் கூறுகின்றார். மேலும் தெற்கே உள்ள பொருநை நதியைக் குறிப்பிடும் வால்மீகி அங்கே பாண்டியர்கள் இருந்ததையும் குறிப்பிடுகின்றார். சோழ, சேரர்கள், ஆந்திரம், காவேரி நதி, அகஸ்தியரின் இருப்பிடம் போன்றவற்றைச் சொல்லும் வால்மீகி, தாம்பிரவர்ணியைத் தாண்டி பாண்டிய சாம்ராஜ்யம் பெரியதாகப் பரவிக் கிடந்ததாயும் கூறுகின்றார். இன்னும் பாண்டிய நாட்டின் முத்துக்களைப் பற்றி வர்ணிக்கும் வால்மீகி மகேந்திரமலையானது அகஸ்தியரால் வைக்கப் பட்டதாயும், ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அங்கே இந்திரன் வந்து பூஜை செய்ததாயும் கூறுகின்றார். இன்னும் மேற்கே இருக்கும் பாலைவனத்தையும் குறிப்பிட்டு அங்கிருந்து சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தையும் குறிப்பிடுகின்றார்.

அதோடு இல்லாமல் வால்மீகி ராமர் அநேகமாய் இந்தியாவின் அனைத்து இடங்களுக்கும், தன் பதினான்கு ஆண்டு வனவாசத்தில் பயணம் செய்ததாயும் சொல்லுகின்றார். இன்றைக்கும் நாசிக் என்னும் பஞ்சவடியில் சூர்ப்பநகையின் மூக்கு அறுக்கப் பட்ட இடம் என்று இருக்கின்றது. தினமும் ராமர் கோதாவரிக்குப் பூஜை செய்து அன்றாட வழிபாடுகள் செய்த இடம் ராமதீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. சித்திரகூடமும், தண்டகாரண்யமும் இன்றும் காண முடிகின்றது. அதே போல் பம்பா நதி தீரத்தில் சபரியைக் கண்டதும், சபரியின் பெயராலேயே சபரிமலை விளங்குவதையும் அறிய முடிகின்றது. கால ஓட்டத்தில் நதிகள், மலைகள் இடம் மாறி இருக்கலாம். காவேரி நதி கூடச் சென்னைப் பக்கமாய் ஓடிக் கொண்டிருந்ததாய் ஒரு கூற்று உண்டு. ஆகவே, இப்போது சபரி மலையோ, பம்பையோ இருப்பது கேரளத்தில் என்பதால், அது நடந்திருக்கச் சாத்தியமே இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

மேலும் ராமர் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களையும் தன் நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் ஏற்றுக் கொள்ளுகின்றார். முதலில் கங்கையைக் கடக்கும்போது வேடுவ அரசன் ஆன குகனைத் தன் நீண்ட நாள் நண்பன் என்று சொன்னதோடு அல்லாமல், பின்னர் வரும் நாட்களிலும் சீதையைப் பிரிந்த பின்னர் அவளைத் தேடிச் செல்லும் வழியில், பறவை அரசன் ஆன ஜடாயுவிற்காக ஈமக் கிரியைகள் செய்கின்றார். மனைவியையும் சுற்றத்தையும் இழந்த வானர இளவலுக்காக உதவி செய்கின்றார். அரக்கன் ஆன விபீஷணனைச் சிறிதும் சந்தேகிக்காமல் அவன் சரணடைவதை ஏற்றுக் கொள்ளுவதோடு அல்லாமல், அவனுக்கு உதவிகள் செய்வதாயும் உறுதி அளிக்கின்றார். காட்டில் வாழும் ரிஷிகள், முனிவர்கள் அனைவரையும் பாதுகாப்பதும், அவர்களின் தவங்களுக்கு இடையூறு நேராமல் பாதுகாப்பதும் தன் கடமையாக நினைக்கின்றார். தன்னலம் கருதாமல் செய்யும் இத்தகையதொரு சேவையைக் குறித்து வியக்காமல் இருக்க முடியுமா??

ராமாயணம் வட இந்தியக் காப்பியம், தென்னிந்தியர்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை எனவும் சொல்ல முடியாது. ஏனெனில், கம்ப ராமாயணத்திற்கும் முன்பே தமிழில் சில ராமாயணங்கள் இருந்தே வந்திருக்கின்றன. சங்க காலத்திலும் ராமாயணம் இருந்து வந்திருக்கின்றது.புறநானூற்றின் கீழ்க்கண்ட 378-ம் பாடல் இதைச் சொல்லுகின்றது. அரசனிடம் இருந்து பரிசில்கள் ஆக நகைகளைப் பெற்றுக் கொண்ட பாணர்கள் அவற்றை அணியும் வகைதெரியாமல் திண்டாடியதை நகைச்சுவையாகக் குறிப்பிடும் இந்தப் பாடலில், கிஷ்கிந்தாவாசிகள் கண்டெடுத்த சீதையின் நகைகளை வானரங்கள் அணியத் தெரியாமல் தவித்தது போல் பாணர்கலும் தவித்தனர் என்று குறிப்பிடுகின்றது.

378. எஞ்சா மரபின் வஞ்சி!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . துறை: இயன்மொழி.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

மேலும் அகநானூற்றில் 70-ம் பாடலில் ராமன், ஆலமரத்தின் நிழலில் சேதுவைக் கட்டும் முன்னர் ஓய்வு எடுத்தது பற்றியும் கீழ்க்கண்டவாறு கூறப் படுகின்றது.

கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இருபுலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப், அலர்வாய்ப் பெண்டிர்=வம்பு பேசும் மகளிர் அலர்=என்றால் கிசுகிசு என்று அர்த்தம். எத்தனை அழகிய சொல்லை இழந்துவிட்டோம்????? :((((((((
பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப், புதுவது
பொன்வீ ஞ்஡ழலொடு புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்றுஇவ், அழுங்கல் ஊரே.

தலைவியிடம் கொண்ட காதலைப் பற்றிப் பேசும் ஊரார் பற்றிக் குறிப்பிடும்போது வருவதாய்க் கூறும் இந்தச் செய்யுளில் இதில் தனுஷ்கோடி பாண்டியர் குலத்துப் பழமையான ஒன்று என்று குறிப்பிடப் படுவதோடு அல்லாமல், ராமன் வெற்றி என்பது பற்றி இல்லாமல் வேறொன்றறியாதவன் என்றும் சிறப்பித்துச் சொல்லப் பட்டிருக்கின்றான். இலங்கைப் படை எடுப்புக்கு முன்னால் தனுஷ்கோடியில் ராமன் ஆலோசனையில் ஆழ்ந்திருந்ததையும், சேதுவைக் கட்ட முனையும் முன்னர் நடந்தவை பற்றியும் இந்தப் பாடல் கூறுகின்றது.

இந்தப் பழைய ராமாயணம் பிழைத்திருக்கின்றதா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் மயிலை சீனி. வெங்கடசாமி “மறைந்து போன தமிழ் நூல்கள்” என்னும் ஒரு நூலில் மறைந்து போன பழைய ராமாயணத்தில் இருந்து சில செய்யுட்களைக் காட்டியதாய்க் கூறப்படுகின்றது. ஆனால் அந்த ராமாயணத்தின் ஆசிரியர் பெயரோ, ஊரோ சரிவரத் தெரியவில்லை எனினும் கம்பராமாயணத்திற்கும் முந்தையது இது என்பதை உறுதிபடச் சொல்லுகின்றனர். இது பற்றிய ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை எனினும் ராமாயணம் பற்றிய தகவல்கள் கடைக்கோடி தென் தமிழ்நாடு வரையில் அன்றைய நாட்களிலேயே பரவி இருந்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அன்றும், இன்றும், என்றும் இந்த நாட்டைக் கட்டிக் காப்பது “ராம” என்னும் இரண்டெழுத்துத் தான் என்பதிலும் சந்தேகம் எதுவும் இல்லை.

Saturday, August 23, 2008

கைப்புள்ள கையிலே கைப்பொண்ணு!!

அருமை நண்பரும், என்னால் அதியமான் எனப் பட்டம் சூட்டப் பட்டவருமான திரு மோகன்ராஜ் அவர்களுக்கு இன்று மாலை, (மதியம்) 3-35 மணிக்குப் பெண் குழந்தை சுப ஜனனம். தாயும், சேயும் நலம். இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். மீதி நாளை.

அவசரப் பதிவு.

Friday, August 22, 2008

ராமனின் தலமைப் பண்பு!! தவறு யார் மேல்???

//ஒரே ஒரு குறிப்பு:
எளியோர்க்கு எளியோனான அனுமன் முன்பும் காலம் தவறவில்லை!

இத்தனை காலத்துக்குள் கொண்டு வந்து சிவலிங்கம் கொணர்விக்க வேண்டும் என்று இராமன் காலத்தைச் சொல்லி அனுமனை அனுப்பவில்லை! - dissemination of resource information
அது இராமன் என்னும் மேலாளரின் குறையே அன்றி, அனுமனின் குறை ஆகாது!
ஆனால் தாமதத்தை உணர்ந்து, தன்னால் தான் தாமதம் ஆனது என்பதையும் இராமன் உணர்ந்தான்!
அதான் சீதை பிடித்த சிவலிங்கம்! - Alternate Allocation!//

வழிபாடு நடத்தணும்னு முடிவாய் விட்டது. அது அனுமனுக்குத் தெரியும். அதிலும் எப்போது??? கடல் கடக்கவேண்டும், அதற்காகப் பாலம் கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பாலத்தை நல்லபடியாய்க் கடந்து இலங்கை சென்று சீதையை மீட்கவேண்டும். எத்தனை முக்கியமான வேலை?? சீதை அங்கே எத்தகைய நிலையில் இருந்தாள்?? கிட்டத் தட்டத் தற்கொலை செய்துகொள்ளப் போனவள், அனுமன் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப் பட்டுக் காத்திருக்கின்றாள். அந்த நிலைமையில் தான் ராமர் அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்துவிட்டுப் போக விரும்புகின்றார்.

அப்போது நேரத்துக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?? அந்தச் சமயம் தாமதம் ஆகலாமா???

மேற்கண்ட விபரங்கள் துளசிராமாயணத்தில் காணப் படுவது. ஆனால் ஸ்காந்த புராணமோ வேறு மாதிரியாகச் சொல்லுகின்றது. ராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக் கொள்ளப் பிராயச்சித்தம் செய்ய நினைத்த ராமர், அதற்கான வழிமுறைகளை முனிவர்களிடம் கேட்டு அறிந்து, அதன் படி மஹேந்திரமலையில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பி அனுமனைக் கொண்டுவரச் செய்கின்றார். தாமதம் ஆகவே முனிவர்கள் சீதையை விட்டு மணலால் லிங்கம் பிடிக்கச் செய்து பூஜையை முடிக்க வைக்கின்றனர். அனுமன் லிங்கம் கொண்டு வந்தும் அது ஏற்கப் படவில்லை. இங்கேயும் நேரத்தின் முக்கியத்துவமே கூறப் படுகின்றது.
ஏனெனில் உடனேயே அயோத்தி திரும்பவேண்டும் ராமர். பதினான்கு வருடம் முடியப் போகின்றது. தவற முடியாது. அப்புறம் பரதன் கதி அதோகதிதான். அதனாலேயே குறிப்பிட்ட நேரம் தவறாமல் வழிபாட்டை முடிக்கின்றார் ராமர். அதே சமயம் அனுமனைத் தான் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், நந்திகிராமத்தில் தவம் இருக்கும் தம்பி பரதன் ஒரு அவசரக் காரன், எதாவது செய்துகொள்ளாமல் தடுக்கவேண்டும் என்பதாலும், நீண்ட நாட்கள் கழித்துத் தான் வரும்போது, கொஞ்சம் தாமதம் ஆகிவிடும், வழியில் பலருடைய சந்திப்பு நேரும் என்பதாலும், பரதனுக்குச் செய்தி சொல்ல அனுமனை முன்னே அனுப்புகின்றான். ஏற்கெனவேயே செவ்வனே செய்து முடித்த பணி அல்லவா இது!!


மேற்கண்ட இரு கருத்துக்களுமே அதாவது ராமர் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்தது பற்றிய குறிப்புகள் வால்மீகியில் இல்லை என்றாலும், பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலேயே "மேலாண்மை" குறித்த பதிவு எழுதப் பட்டது. வழிபாட்டின் முக்கியத்துவத்தை அனுமன் அறியாதவர் அல்ல. இரு சமயங்களுமே எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறியாதவர் இல்லை. எனினும் தாமதம் ஆகின்றது. வழிபாடு குறித்த நேரத்தில் முடிந்து விடுகின்றது. தன் தூதனும், அந்தரங்க மெய்க்காப்பாளனும் ஆன அனுமன் இல்லாமலா ராமன் வழிபாட்டைக் குறித்து ஆலோசித்திருப்பார். அதன் விபரங்களைக் கூறாமலா அனுமனை அனுப்புவார்?? ஆகவே குறித்த நேரம் தவறவேண்டாம் என வழிபாட்டையும் முடிக்கின்றார். அதே சமயம் அனுமன் கஷ்டப் பட்டு கொண்டு வந்த லிங்கம் பயனற்றுப் போய்விடவேண்டாம் எனவும் எண்ணுகின்றார். ஆகவே இன்று வரையிலும், இனிமேலும் அனுமன் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் மரியாதை ராமேஸ்வரம் கோயிலில். அந்த லிங்கத்தைத் தரிசித்துவிட்டே பக்தர்கள் உள்ளே செல்லவேண்டும். கோயிலிலும் முதலில் அனுமனின் லிங்கத்திற்கு வழிபாடு நடத்திவிட்டே உள்ளே மூலஸ்தானத்தில் வழிபாடு நடத்துவார்கள்.

இந்தப் பெருந்தன்மையினாலும், கருணையினாலுமே ராமன் ஒரு மாபெரும் தலைவன் ஆகின்றான். தொண்டர்கள் செய்த தவற்றைச் சுட்டுவதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்றும் நினைக்காமல் அவர்களின் உழைப்புக்குத் தகுந்த பலனையும் அளிக்கின்றான். ஆகவே ராமனின் தலைமைப் பண்பு பளிச்சிடுகின்றதே ஒழிய தாழவில்லை. இந்த இரண்டு கருத்துக்களுமே வால்மீகியில் இல்லை. இங்கே மகாதேவன் அருள் கிடைத்தது தனக்கு என்று ராமர் சீதையிடம் சேதுவைக் காட்டும்போது சொல்லுவதாய் மட்டுமே வருவதாய்த் தெரிகின்றது. தலைவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று காட்டிய ராமன் கதாநாயகனாய் இருக்கும் ராமாயணத்தில் தேச ஒருமைப் பாடு பற்றி அடுத்துக் காணலாம்.

கண்ணா, கருமை நிறக் கண்ணா!!!!!

நாத்திகருக்கும் சரி, ஆத்திகர்கள் என்று அழைக்கப் படும் பக்தியாளர்களுக்கும் சரி, ராமனும், கிருஷ்ணனும் மிக மிக முக்கியமானவர்கள். மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்திருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. எனினும் மக்கள் மனதில் மிக மிக அருகே வந்து நெருங்கியவை இரண்டே இரண்டு தான். அது ராமனும், கிருஷ்ணனுமே. ராமன் மனிதர்களுள் ஒரு மாணிக்கமாய்த் திகழ்ந்தான் என்றால் கிருஷ்ணனோ அதற்கு நேர் மாறாகப் பல மாயங்கள், மந்திரங்கள், தந்திரங்கள், சூழ்ச்சிகள், பல மனைவிகள், என்று பெயர் வாங்கினவன். சிறுவயதிலோ அவன் பண்ணிய அடம் தீராத தொல்லையாக இருந்தது. பாலையும், மோரையும், தயிரையும், வெண்ணையையும் வாங்கிச் சாப்பிடுவது பத்தாமல் திருடித் தின்னவன் அவன். வெண்ணெயைத் திருடித் தின்கும் கண்ணனுக்கு யாருமே வெண்ணெய் கொடுக்க அத்தகையதொரு திருடன் மொத்த இந்தியாவையும் கவர்ந்திழுக்கின்றான் பலவகைகளிலும் இல்லையா?? நாளைக்கு அவன் பிறந்த நாள். ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவன் கண்ணன் என்றால், ராமனோ வளர்பிறை நவமியில் புனர்பூசத்தில் பிறந்தான். கண்ணன் பிறந்ததோ நல்ல மழைக்காலம் எனில், ராமன் கடுங்கோடையில் பிறந்திருக்கின்றான். கண்ணன் பிறந்தது சிறைச்சாலை, ராமன் பிறந்ததோ அரண்மனை. சிறைச்சாலையில் பிறந்த கண்ணன், பெற்ற தாயை விட்டுவிட்டு, மற்றோர் தாயிடம் வளர்ந்தான் எனில் ராமன் வளர்ந்தது தன் தந்தையின் மூன்று மனைவியரிடம்.

கண்ணன் பிறந்ததைக் கோகுலம் எவ்வாறு கொண்டாடியது என்பதைப் பெரியாழ்வார் திருமொழியின் மூலம் பார்ப்போமா???

"வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே"

எத்தகையதொரு அருமையான காட்சியைக் கொடுக்கின்றார் பெரியாழ்வார். கண்ணன் முற்றமே இப்படி எனில் கோகுலத்தின் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமா?? கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறைந்ததம்மா!! என்ற படிக்கு வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது மகனாய் அவதரித்தான் கண்ணன். அவதரித்ததுமே தன் அவதார மகிமையையும் வெளிப்படுத்தி விட்டான். எவ்வாறு?? தாய், தந்தையருடன் பிறந்த குழந்தை பேசியது. குழந்தை பிறக்கும்போதே அசாதாரண ஒளியுடனேயே, சங்கு, சக்கரங்களுடனேயே பிறந்தது. ஆனால் தாய், பயந்ததால் பின்னர் சாதாரணக் குழந்தையாக மாறியதாம்.

//ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றானென்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!//

ஆய்ப்பாடியில் அத்தனை சந்தோஷம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். தலைகால் தெரியலைனு சொல்லுவாங்களே, அது இதுதான் என்பது போல் எல்லாரும் ஆடிப் பாடிக் களித்துக் கொண்டாடுகின்றார்கள் கண்ணனின் பிறப்பை. அது மட்டுமா?? இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகின்றான் கண்ணன்? இவர்களும் எப்படி எல்லாம் சீராட்டிப் பாராட்டுகின்றார்கள்? இதோ யசோதை கண்ணனைக் குளிப்பாட்டுவது.

//கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித்தாளுக்கு அங் காந்திட
வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே!//

என்ன தவம் செய்தாள் இந்த யசோதை! சாட்சாத் அந்தப் பரப்ரும்மமே வந்து பிள்ளையாய்ப் பிறந்துள்ளது. அதற்குக் குளிப்பாட்டிப் பசுமஞ்சளால் நா வழிக்கின்றாளாம். இன்றைக்கும் இத்தகையதொரு பழக்கம் கிராமங்களிலாவது காண முடிகின்றது அல்லவா? இந்தப் பாடல் மூலம் அன்றைய பழக்கங்களையும் சொல்லுகின்றாரே பெரியாழ்வார்! ஆச்சரியமா இல்லை?

//வாயுள் வைகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே!//
கண்ணன் வாயில் உலகைக் கண்டவர்களுக்கு இவன் ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் எனப் புரிந்து மகிழ்ந்தனராம். கண்ணனைச் சீராட்டிப் பாராட்டித் தொட்டிலிலும் இடுகின்றனர்.

//கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்//

யசோதை கண்ணனைத் தொட்டிலில் விடுவதும், எடுத்துக் கொள்ளுவதுமாய் இருக்கின்றாள். இந்த அரிய பாடலுக்கு விளக்கம் நம்ம குமரன் கொடுத்திருப்பதைப் பாருங்க, நல்லாவே விளக்கி இருக்கார். யசோதையை அந்தப் பாடு படுத்தி இருக்கானே கண்ணன், அதுக்காக எல்லாம் அவனைக் கோபிக்க முடியுமா என்ன??? மாமனாகிய கம்சன் தாத்தாவையும் சிறையில் அடைத்துவிட்டுத் தானே கொடுங்கோல் அரசனாக மாறியதைத் தண்டிக்க மட்டுமல்லாமல், இவ்வுலகில் பற்பல லீலைகளையும் நடத்திக் காட்டி, ஒரு நடமாடும் தெய்வமாகவே விளங்கியவன் கண்ணன். நந்தகோபனின் கோகுலத்தில் கண்ணன் செய்த லீலைகள் கொஞ்சமா, நஞ்சமா?? வெண்ணெய் திருடித் தின்கின்றான் கண்ணன். அவன் கோபியர் ஓடி வரும்போது அந்த வெண்ணெய் கீழே சிந்தி விடுகின்றது. அந்த வெண்ணெயிலேயே கால்பதித்து ஓடி ஒளிகின்றான் மாயக் கண்ணன். அதை நினைவூட்டவே இன்றும் அரிசிமாவினால் வெண்மையான கண்ணனின் குட்டிக் குட்டிப் பாதங்களைப் பதிக்கின்றோம், கண்ணனின் பிறந்த நாளன்று. வெண்ணெயைத் திருடித் தின்னும் கண்ணனுக்கு யாருமே வெண்ணெய் கொடுக்க மாட்டார்களா என்ன? கொடுப்பார்கள், என்றாலும் கண்ணன் கொடுக்காதது போலும், அதனாலேயே திருடித் தின்பது போலும், அடிக்குப் பயந்தது போலும் நடித்தான். கோபியர்கள் யசோதையிடம் வந்து கண்ணனைப் பற்றிய புகார்கள் சொல்ல அவளும் கண்ணனைக் கடிந்து கொண்டு உரலில் கட்டிப் போடுகின்றாள். கண்ணன் சும்மாவா இருப்பான்?? உரலையும் இழுத்துக் கொண்டு நகருகின்றான். உரலினால் மோட்சம் கிட்டுகின்றது நள, கூபரர்களுக்கு.

Thursday, August 21, 2008

ராமாயணத் தொடரில் மேலாண்மைத் திறன்!

ராமாயணம் கம்பர் எழுதியதே பல நூற்றாண்டுகள் முன்பு. வால்மீகி எப்போது எழுதினார் என்பது உறுதிபடத் தெரியாவிட்டாலும் கம்பர் எழுதியது, அதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னரே. வால்மீகி ராமரின் காலத்திலேயே வாழ்ந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. ராமரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக, முக்கியமாய் லவ, குசர்களின் வளர்ப்புக்கு ஒரு காரணமாய், அவர்களுக்குக் குருவாய் இருந்திருக்கின்றார் வால்மீகி. பல சம்பவங்களைக் கண்ணால் கண்டறிந்ததோடு அல்லாமல், பல சம்பவங்களைக் காணும் பேறும் பெற்றிருந்திருக்கின்றார். வால்மீகியின் இந்த ராமாயணத்தில் ராமனின் குணங்களாய்ச் சொல்லப் படுபவை மனிதனாய் வாழும் அனைவருக்கும் தேவைப் படும் முக்கியமான கல்யாண குணங்கள் என்று சொல்லப் படுகின்றது.
இந்த இதிகாசம் குறிப்பிட்ட ஒரு சாராருக்கே உரியது என்றும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மட்டுமே என்றும் சொல்ல முடியாது. அதே நேரம் ஒரு வாழ்க்கைச் சரிதம் என்ற அளவிலேயே இதை நாம் பார்க்கவும் வேண்டும். எந்தவிதமான உபதேச நூலும் இல்லை. ஆனால் ஒரு அரசன் எப்படி இருக்கவேண்டும்., அரச நீதி எவ்வாறு காக்கப் படவேண்டும், மந்திரிகள் அரசனுக்கு எவ்வகையில் உதவியாய் இருக்கவேண்டும், வரிகள் விதிப்பது எப்படி? குடிமக்களின் நல்வாழ்வைப் பேணுவது எவ்வாறு என அனைத்தும் இதில் வரும் அரசர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளுவது இன்றைய நாட்களுக்குக் கூடப் பொருத்தமாய் இருப்பதைக் காண முடிகின்றது.

ராமாயணம் இன்றைய நாட்களுக்குக் கூடப் பொருந்தும் வண்ணம் ஒரு மிகச் சிறந்த மேலாண்மை இயலுக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது என்றும் ஒரு ஆய்வு செய்யப் பட்டு உள்ளது.. இந்தியன் வங்கியின் சேர்மன் ஆக இருந்து ஓய்வு பெற்ற திரு டி.எஸ்.ராகவன் அவர்கள் அத்தகையதொரு ஆய்வைச் செய்திருக்கின்றார். அதில் ஒரு தலைவனாக ராமனை அவர் போற்றுவது ராமன் காலத்தை மதிப்பதும், திறமையைப் போற்றுவதும் ஆகும். அனுமனைத் திறமை வாய்ந்த தொண்டனாக ராமன் ஏற்றுக் கொண்ட போதிலும், ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்யும்போது அனுமன் லிங்கம் கொண்டுவரத் தாமதம் ஆகவே, நேரந்தவறாமல் பூஜை செய்யவேண்டி ராமன் அனுமனுக்குக் காத்திருக்காமல் அந்த நேரத்திற்குள் தன் வழிபாட்டை முடிக்கின்றான்.
வால்மீகியில் இந்தச் செய்தி இல்லை எனினும் இது பெரும்பாலோரால் ஏற்கப் பட்டுள்ளது. அனுமன் எத்தகைய திறமை வாய்ந்தவனாக இருந்த போதிலும், காத்திருத்தல் என்பது கூடாது. ஒரு தனி மனிதனுக்காகக் காலமோ, நேரமோ காத்திருக்க முடியாது. இது அனுமனுக்கு நேர்ந்த புறக்கணிப்பு என்றும் சொல்லலாம். அதே போல் முதன் முதல் ஸ்டிரைக் செய்ததும் அனுமனே. தான் கொண்டு வந்த லிங்கத்தை வழிபடவில்லையே என வருந்துகின்றான். என்றாலும் ராமன் , சீதையால் ஸ்தாபிக்கப் பட்ட மணல் லிங்கத்துக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பூஜையை முடிக்கின்றான். அதே சமயம் அனுமன் தவறு செய்துவிட்டான் என்று அவனை வெறுத்தும் ஒதுக்கவில்லை. தான் அயோத்தி திரும்புவதற்குள் பரதன் தீக்குளித்துவிடுவானோ என எண்ணி அனுமனையே தூதும் அனுப்புகின்றான் மீண்டும். அவனின் திறமையை எந்த இடத்தில், எப்படிப் பயன்படுத்தினால் அது வெற்றி பெறும் என்பதைப் புரிந்து கொண்ட தலைவனாய் இங்கே ராமன் செயல்படுகின்றான் என்று சொல்லலாம். ஏனெனில் ஒரு முறை காலத்தில் கடமையைச் செய்யவில்லை என்பதாலும், இப்போது காலத்தில் செய்யாவிட்டால் ஒரு உயிர் போய்விடும் என்பதையும் அனுமன் நன்கு உணர்ந்திருப்பான். ஆகவே குறிப்பிட்ட காலத்தில் வேலை நடக்கும் அல்லவா? இதன் மூலம் ராமன் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிக்கும் நேர மேலாண்மை, தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ளத் தொண்டர்களுக்குக் கொடுக்கும் சந்தர்ப்பம், அரவணைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் அரவணைத்தும், கண்டிப்பாய் நடக்கும் நேரத்தில் கண்டிப்பாயும் இருந்து தலைவன் என்பதை நிரூபிக்கும் தலைமைப் பண்பு, தன் பிரச்னைகளைக் கலந்து ஆலோசித்தல் என அனைத்துமே ராமனிடம் இருந்தது. ஆகவே ஒரு தலைவனாகவும் ராமன் இங்கே சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றான்.

Wednesday, August 20, 2008

திரெளபதி பதிவிரதையா?? ஒரு மீள் பதிவு தொடர்ச்சி!

திரெளபதியைப் பத்தி எழுதும்போதே இது ரொம்பவே நெருடலான விஷயம் என்றும் இது ஒரு விவாதத்துக்கு வழி வகுக்கும் எனவும் தெரியும். இருந்தாலும் ரொம்ப நாளாகத் தெரிந்து கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் நினைப்புடன் தான் எழுதினேன். ஈஸ்வர் அவர்கள் திரெளபதி 5 பேரை மணந்து கொண்டதை வியாசர் எப்படி நியாயப் படுத்தினார் என்று சொல்லும்படி கேட்டிருந்தார். அன்று சாயங்காலம் "நடைப் பயிற்சி"யின் போது நானும், என் கணவரும் இதைப் பத்தி விவாதித்துக் கொண்டே போனோம். அப்போது சில தெளிவுகள் பிறந்தன. இருந்தாலும் இதுவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா தெரியாது. எனெனில் இறை உணர்வு என்பதோடு சம்மந்தப் பட்ட இந்த விஷயத்தை அப்படியே உணர்வு பூர்வமாக அணுகுபவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாய் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் பகுத்தறிவு வாதிகளும் சரி, நாத்தீகம் என்பவர்களும் சரி, இறைவனை நினைக்காத நாட்களே இல்லை. உண்மையாகப் பக்தி கொண்டிருப்பவர்களை விட அவர்களே எப்போதும் இறைவனை நினைக்கிறார்கள். ஆராய்ச்சியும் செய்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் விளைவும் அதன் எல்லையும் கட்டாயம் மெய்ஞ்ஞானமாய்த் தான் இருக்கும். இதை அவங்க ஒத்துக்காமல் போனாலும் உண்மை அது தான். அளவற்ற விஞ்ஞானத்தின் எல்லை மெய்ஞ்ஞானமே ஆகும். மிகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் எல்லாருமே ஆன்மீகவாதிகளாய்த் தான் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் நம் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள். இது இங்கே நிற்கட்டும்.

இவ்வுலகில் ஐம்பூதங்கள் மட்டுமில்லாமல் மனிதனுக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. நம்மையெல்லாம் படைக்கும் இறைவனுக்கும் ஐந்தொழில்கள் இருக்கின்றன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை ஆகும். படைப்பன எல்லாவற்றையும் காப்பதோடு அல்லாமல் உரிய நேரம் வரும்போது அதை அழித்து, அதாவது வேறு இடத்திற்கு மாற்றி,அதை மாறுவதை மறைத்துப் பின் உரிய நேரம் வரும்போது முக்தி என்னும் அருள் செய்து, இத்தனையும் செய்யும் இறைவனின் லீலையை என்னென்பது? அவனுக்கு ஐந்து முகம். ஐந்து வித குணங்களால் ஆனவன். ;உண்மையில் பார்க்கப் போனால் இந்த சிவம் என்பது "சிவமாக" இருக்கும்போது நிர்க்குணப் பரப்பிரும்மமாக இருக்கிறது. இதற்கு உருவம் இல்லை. அதுவே "சிவனாக" அல்லது ஜீவனாக மாறும்போது அதனுள் "சக்தி" பாய்ந்து ஆட்டுவிக்கிறது. சிவம் வேறு. சிவன் வேறு. சிவா வேறு. சிவம் நிர்க்குணப் பிரம்மம் என்றால் சிவன் சக்தியுடன் சேர்ந்த பரம்பொருள். சிவா என்றால் அந்தச் சக்தி. சிவனை ஆட்டுவிப்பவள். இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியம்.ஒருத்தரைச் சும்மா இரு என்கிறதற்குச் "சிவனே"ன்னு இருன்னு சொல்றோம். சக்தி இல்லாத சிவன் என்று அர்த்தம். அதே நாம் கடவுளைக் குறிக்கும்போதோ "சிவ சிவா"ன்னு கூப்பிடறோம். சக்தியுடன் சேர்ந்த சிவன் இது. ஒன்றையொன்று பிரிக்க முடியாதது. பிரித்தால் வெறும் சிவன் தான். ஜீவன் இல்லை. சக்தி சேர்ந்தால் தான் எல்லாமே. புரியுதா என்று தெரியவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்த வரை புரிந்த வரை சொல்கிறேன்.

இந்த ஐந்து தொழில்களைச் செய்யக் கூடிய இறைவனின் ஐந்து முகங்களும், ஐந்து குணங்களும் தான் சேர்ந்து பஞ்ச பாண்டவரின் அம்சமாக உருவெடுத்ததாக ஐதீகம். பஞ்ச பாண்டவர் சிவாம்சம் என்றால் அவர்களை இயங்கச் செய்யும் சக்திதான் திரெளபதி. சக்தியின் அம்சமே அவள். அதனால் தான் ஐவரையும் மணக்கும்படி நேர்ந்தது. மானிட உறவையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கட்டாயம் மனதில் நெருடல் வரும். ஆனால் இதில் உள்ள தாத்பர்யத்தைப் புரிந்து கொண்டோமானால் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இருப்பதையும், எந்தக் காரியமும் காரணம் இல்லாம் ஏற்படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். மஹாபாரதத்தைக் கதை என்று நினைத்தாலும், தெய்வீகக் கதைகளின் தாத்பர்யம் இதுன்னு புரிந்து கொள்ள வேண்டும். வெறும் கதைன்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்பவே கஷ்டம் புரிந்து கொள்ளுதல். கண்ணகியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாயும் நினைக்கவில்லை. வடநாடு, தென்னாடு என்ற வித்தியாசமும் பார்க்கத் தேவை இல்லை. திரெளபதியின் காலம் வேறே. கண்ணகியின் காலம் வேறே. நம்மைப் பொறுத்த வரை இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த திரெளபதியின் துணிச்சல் கண்ணகிக்கு இருந்ததா என்றால் இல்லைனு தான் சொல்லவேண்டும். மஹாபாரதம் கதை என்றால் சிலப்பதிகாரமும் கதை தான். நமக்கு அதைப் பற்றி இளங்கோவடிகள் மூலம் தான் தெரியும். நடந்ததா என நாம் யாரும் அறிய மாட்டோம். ஆனால் "அனல் கொண்ட மதுரை"யும், "கடல் கொண்ட புகாரும்", "மணல் கொண்ட வஞ்சி"யும் இருந்ததை சான்றுகள் மூலம் அறிகிறோம். அது போல் மஹாபாரதம் நடந்தது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

பத்ரிநாத் போகிறவர்கள் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரமே மேலே உள்ள "மானா" என்ற ஊருக்குப் போனால் சில சான்றுகள் கிடைக்கும். பத்ரியில் இருந்து ஒரு 4,5 கிலோ மீட்டர் காரில் போய் விட்டுப் பின் அங்கிருந்து ஒரு 3,4 கிலோ மீட்டர் தூரம் மலையில் ஏறிப் போனோமானால் மானா" என்ற சிறு ஊர் வருகிறது. தற்சமயம் திபெத்திய அகதிகள் அதிகம் இருக்கிறார்கள்.. அங்கே இருந்து சற்று மேலே ஏறினால் மஹாபாரதம் எழுதிய "வேத வியாசர்" இருந்த குகை வரும். அதற்குச் சற்று முன்னால் ஒரு குகை போன்ற இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் இருக்கிறது. அங்கே தான் வியாசர் சொல்லச் சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கிப் பிள்ளையார் மஹா பாரதத்தை எழுதியதாகச் சொல்கிறார்கள். இன்னும் சற்று மேலே போனால் பஞ்ச பாண்டவரில் 2-வதான பீமன் திரெளபதி மேலுலகம் செல்லக் கட்டிய பாலம், "பீமன் பாலம்" என்ற பெயரில் உள்ளது. எல்லாரும் சரஸ்வதி நதியை அந்த இடத்தில் கடந்து போனதாகவும், திரெளபதிக்காக பீமன் பாலம் கட்டியதாயும், சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் அதுதான் என்றும் சொல்கிறார்கள். அதை நாங்கள் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அங்கே உற்பத்தி ஆகும் சரஸ்வதி அதற்கு அப்புறம் "அந்தர்யாமி" ஆகி "அலக்நந்தா"வுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் போய் அரபிக்கடலில் கலக்கிறாள். சமீப காலத்தில் 5 வருஷத்துக்கு முன்னால் "ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்" அங்கே தான் ஜலசமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள். அதற்கு மேல் 2 கி.மீட்டரில் சீன எல்லை ஆரம்பம்.
Posted by கீதா சாம்பசிவம் at 1/16/2007 04:21:00 PM

திரெளபதி பதிவிரதையா?? ஒரு மீள் பதிவு!

உலகின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்: ஸ்ரீகிருஷ்ணன்.

உலகின் முதல் தொலைக்காட்சித் தொடர்: குருக்ஷேத்திர யுத்தம்.

உலகின் முதல் தொலைக்காட்சிப் பார்வையாளர்: சஞ்சயன்

உலகின் முதல் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர்: சஞ்சயன்

உலகின் முதல் உடல் உறுப்பு தானம் செய்தவர்: ததீசி முனிவர். இந்திரனின் வஜ்ராயுதத்துக்குத் தன் முதுகெலும்பைத் தானம் செய்தவர்.

உலகின் முதல் கண் தானம் செய்தவர்: கண்ணப்ப நாயனார்.

உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை: அகஸ்திய மஹரிஷி. குடத்துக்குள் இடப்பட்டு வளர்ந்தவர்.

முதல் முதல் ஆராய்ச்சி செய்யும் எல்லாமே சற்றுக் கோணலாகவோ, அல்லது வளர்ச்சியின்மை இல்லாமலோ குறைபாட்டுடன் தான் பிறக்கும். அதனால் தானோ என்னவோ அகஸ்தியர் உருவம் சற்றுக் குட்டையாக இருந்திருக்குமோ என

எண்ணுகிறேன். இது மாதிரி நிறைய முதல் விஷயங்கள் நம்முடைய இதிகாசத்திலும்,

புராணங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.
************************************************

திரெளபதி மஹாபாரதத்தின் கதா நாயகி. 5 மஹா பதிவிரதைகளுள் ஒருத்தியாகப் போற்றப் படுபவள். அவளுடைய பதிவிரதைத் தன்மை குறித்துக் கேள்விகள் எல்லாருக்கும் உண்டு. இது புராணத்திலும், இதிகாசத்திலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் இருக்கிறது. 5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?அதற்கான விளக்கம் எனக்குத் தெரிந்த வரையில், நான் கேட்டுத் தெரிந்து கொண்டதைத் தருகிறேன்.


5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. 5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம்
என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் "அக்னிப் பிரவேசம்" செய்து
தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் "தீ மிதி" என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.
************************************************
ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள்.என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார். திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.

பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. "கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!" என்று கேட்டான். கிருஷ்ணர் சொன்னார்:"பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்! இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?" என்று கேட்டார். "ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்." என பீமன் சொல்ல, "அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?" என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ,"புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்." என்று சொல்கிறான். "பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்." என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன். "அங்கே பார்!" என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.

"பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,
அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள். உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்." என்கிறார்.

மேற்குறிப்பிட்ட தத்துவம் நான் சின்ன வயசிலே கதை கேட்ட போது கேட்டது. இப்போ சமீப காலத்தில் ஒரு திரைப்படம் கூட சம்ஸ்கிருதத்தில் வந்தது,. அதிலும் இந்தத் தத்துவம் குறிப்பிடப் பட்டிருக்கிறது. "நீனா குப்தா" திரெளபதி என்று நினைக்கிறேன். படம் பார்க்கவில்லை. மற்றும் சிலத் தொலக்காட்சித் தொடர்களிலும் வந்தது. எத்தனை பேர் பார்த்தார்கள் தெரியவில்லை. இப்போது இதை எழுதக் காரணம் குருக்ஷேத்திரப் போர் நடந்தது ஒரு மார்கழி மாசம் தான். 2 நாள் முன்னாலே ஒரு புத்தகம் படிக்கும்போது இது நினைவு வந்தது. இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதி இருக்கிறேன்.


"தேவர்கள் பூச்சொரிந்தார்-ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி என்றே"

ஓமென்றுரைத்தனர் தேவர்,
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்
பூமியதிர்ச்சி உண்டாச்சு-விண்ணை
பூழிப் படுத்தியதாம் சுழல் காற்று
சாமி தருமன் புவிக்கே-என்று
சாட்சியுரைத்தன பஞ்ச பூதங்கள் ஐந்தும்,
நாமும் கதையை முடித்தோம்- இந்த
நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!"

மஹா கவி சுப்பிரமணிய பாரதியின் "பாஞ்சாலி சபதம்" கவிதையில் இருந்து கடைசியில் வரும் சில வரிகள்.

மதுரையம்பதி திரெளபதி முதலான பஞ்ச கன்னிகைகள் பற்றித் தனியாக எழுதுவீர்களா என்று கேட்டதால் ஏற்கெனவே எழுதியதை ஒரு மீள் பதிவு போட்டிருக்கின்றேன். இதன் அடுத்த பகுதி நாளைக்கு வரும்.



இது 2007 ஜனவரியில் எழுதியது.

Tuesday, August 19, 2008

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள் - காதல்!

அடுத்து இளைஞர்களின் மனதைக் கவரும் காதல். ராமருக்கும், சீதைக்கும் காதல் என்பது கம்பராமாயணத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு காட்சி. வால்மீகி எந்த இடத்திலும் இருவரும் காதல் கொண்டதாய்ச் சொல்லவே இல்லை. எனினும் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் அன்புடனும், ஆனந்தத்துடனும் வாழ்ந்து வந்ததாகவே சொல்கின்றார். ஆனால் கம்பரோ இருவரும் ராமன் மிதிலைக்குள் நுழைந்ததுமே சீதையைப் பார்ப்பதாகவும், கன்னிமாடத்தில் இருக்கும் சீதையும், ராமரைக் காண்பதாகவும், மிக அழகாய் காதலர்களின் நோக்கை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

“எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்று வழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.”

என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது இருவரின் கண்கள் மட்டுமில்லாமல், உணர்வும் ஒன்றுபட்டது என்று சொல்லுகின்றார். காதலின் சிறப்பை இதை விடச் சிறப்பாகச் சொல்லவும் முடியுமோ??? வால்மீகியை முழுதும் உள்வாங்கிக் கொண்டே கம்பர் இந்தக் காவியத்தை வடித்திருந்தாலும், அவரின் சொல்லாற்றலால் வால்மீகியைவிடச் சிறந்து விளங்குகின்றார் என்றே சொல்லலாம் அல்லவா??

காதல் இங்கோடு நிற்கவில்லை, ராமாயணத்தில். முதலில் வருவது சூர்ப்பநகை ராமர் பால் கொண்ட காதல். இதைக் காதல் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே திருமணம் ஆனவளே சூர்ப்பநகை. ஒரு மகனும் இருக்கின்றான். ஆனால் அவனைத் தற்செயலாக லட்சுமணன் தர்ப்பைப் புல் அறுக்கும்போது கொல்ல நேருகின்றது. இது தெரிந்தோ, அல்லது தெரியாமலேயோ வருகின்றாள் சூர்ப்பநகை. வந்ததுமே ராமரின் வடிவைக் கண்டு அதிசயித்துப் போவதோடு, சீதையைக் கண்டும் பொறாமை கொள்கின்றாள். ராமரை எவ்வாறேனும் அடைந்தே தீருவது என்றும் எண்ணுகின்றாள். சகோதரர் இருவரும், சூர்ப்பநகையின் இந்த நடவடிக்கையைக் கண்டு முதலில் பரிகாசமாய்ச் சிரித்தாலும், பின்னர் சீதையை அவள் கொல்ல முயல்வது கண்டு சூர்ப்பநகை தண்டிக்கப் படுகின்றாள். உடனேயே சூர்ப்பநகையின் காதல், அல்லது காமவெறி பழிவாங்குதலில் முடிகின்றது. ராவணனின் கவனத்தைச் சீதை பால் திருப்புவதில் இவளுக்குப் பெரும்பங்கு இருக்கின்றது. இதில் முக்கோணக் காதல் என்று சொல்லமுடியாவிட்டாலும் ராவணன் சீதைபால் கொண்ட காதலை ஒருதலைக்காதல் என்றே சொல்லலாம். சீதையை அவன் மிகவும் விரும்புகின்றான். எனினும் சீதை அவனை விரும்பவில்லை. ராவணனுக்கு அது தெரிந்தே இருக்கின்றது. என்றாலும் கடைசிவரையில் சீதையை வற்புறுத்தித் துன்புறுத்தாமல், அவளாக இணங்கி வரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான். சீதை மனம் மாறித் தன்பால் திரும்புவாள் என்று காத்திருக்கின்றான். சீதையோடு கூடி சந்தோஷமாய் வாழவேண்டும் என்றும் நினைக்கின்றான். இது ராவணனின் காதலின் மேன்மையை ஒரு பக்கம் காட்டினாலும், பிறன் மனைவியை விரும்பியது என்ற பெருந்தவற்றின் காரணமாய் அவன் இறுதியில் தண்டிக்கப் படுகின்றான்.

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்.”

என்பதற்கொப்ப, பிரிந்து இருக்க நேரிட்டாலும் சீதையோ, ராமரோ ஒருவரை ஒருவர் நினைந்து ஏங்கிப் பிரிவாற்றாமையால் துடித்துக் கொண்டிருந்தனர் என்பது இங்கே தெளிவாய்ச் சொல்லப் படுகின்றது. இல்வாழ்க்கையில் கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான மெய்யன்பும், மெய்யறத்தோடும் வாழுவதையும், அவ்வாறு வாழ்ந்தவர்களே ராமனும், சீதையும் என்பதும் இங்கே சொல்லப் படுகின்றது. அன்பிற்கும், பாசத்துக்கும், காதலுக்கும் ஒரு இலக்கணமாய் வாழ்ந்த ஆதர்ச தம்பதிகள் என்று ராமரையும், சீதையையும் சொல்லலாம் அல்லவா??ஆகக் காதல் என்பதன் அர்த்தம் இங்கு தெளிவாய்ச் சொல்லப் படுகின்றது. வெறும் உடல் கவர்ச்சி மட்டும் காதல் இல்லை என்பதும், காதல் என்பது எத்தகைய தியாகத்துக்கும், பரஸ்பரம் புரிதலுக்கும், விட்டுக் கொடுத்தலுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் சுட்டுகின்றது. இதற்கு சீதை அக்னிப்ரவேசம் செய்வதையே உதாரணம் காட்டலாம். ராமருக்கு நன்கு தெரியும் சீதை தன்பால் அன்பு கொண்டிருக்கின்றாள் என்பதும், தன்னைத் தவிர பிறரை விரும்பமாட்டாள் என்பதும். சீதையும் நன்கு அறிவாள் தான் இல்லாமல் தன் பதி துன்புற்றிருப்பார் என்பதும். நாமே பார்த்தோம் சீதையைப் பிரிந்த ராமர் எவ்வாறு புலம்பி அழுதார் என்றும், நிராசையுடனும், அவநம்பிக்கையுடனும் பேசினார் என்பதும். மனைவியை மீட்கவே ராமர் பாலத்தைக் கட்டிக் கடல் கடந்து வந்து இலங்கேஸ்வரனை வென்று சீதையை மீட்கின்றார். அத்தகைய அன்பு வைத்த சீதையை மறுதலிக்க முக்கிய காரணமே எந்தவிதமான ஆட்சேபங்களோ, சந்தேகங்களோ இல்லாமல் தான் அவளை மீண்டும் அடையவேண்டும் என்ற எண்ணமே தான். எங்கே தான் உடனே ஏற்றுக் கொண்டால் பெரியவர்களால் வீண்பழிச்சொல் ஏற்பட்டுப் பின்னர் வேறு வழியில்லாமல் சீதையை இழக்க நேரிடுமோ என்ற முன் ஜாக்கிரதையே ராமரை அவ்வாறு சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்கின்றது. சீதையும் தன்மேல் பழி இல்லை என்பதாலேயே, கணவரின் கருத்துப் புரிந்து கொண்டதாலேயே அக்னிப்ரவேசத்துக்குத் தயார் ஆகிவிடுகின்றாள். எந்தவிதப் பழியும் இல்லாமல் கணவனோடு சுகமாய் வாழ எதையும் தியாகம் செய்யத் தயார் என்று நிரூபிக்கின்றாள் சீதை.

இன்றைய நாட்களில் சிறு விஷயத்துக்கும் விட்டுக் கொடுக்காமல், தன்னுடைய சுய கெளரவம் இதனால் பறி போகின்றது என்றும், சுதந்திரம் போய் விட்டது என்றும் எண்ணும் பெண்கள் நடுவில் சீதையின் இத்தகைய மாபெரும் தியாகத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வு இருப்பது கொஞ்சம் கஷ்டமே. என்றாலும் தீர ஆலோசித்தால் சீதை செய்ததில் உள்ள நியாயம் புரியும். தன் கணவனின் ராஜ்யத்திற்காகவும், அவன் ஒரு அரசன் என்பதால் அவன் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கடமைகளில் குடிமக்களைப் பேணுவதும், அவர்கள் விருப்பத்தின்படி நடப்பதும் முக்கியம் என்பதாலுமே அவன் தன்னை வேறு வழி இல்லாமலேயே நிராகரிக்க வேண்டி வந்தது என்றும் புரிகின்றது சீதைக்கு. அதைத் தன் வாயாலேயே சொல்லவும் செய்கின்றாள். அன்பு என்பது கொடுப்பதில் தான் உள்ளது என்றும், ஒரு மடங்கு கொடுத்தால் பல மடங்காய்த் திரும்பி வரும் என்றும், கொடுக்கக் கொடுக்க நிரம்பி வழிவதும் அன்பு ஒன்றே என்பதும் புரிய வரும். காதல் என்பது வெறும் சுக,போகங்களில் பங்கு பெறுவது மட்டுமல்ல என்பதும், தன் துணைக்கு எந்நாளும், எந்தக் காரியத்திலும் கைவிடாமல் துணையாக நின்று பெருமை சேர்ப்பதே காதல் என்றும் புரிய வைக்கின்றார்கள். ஆனால் ராவணனோ எனில் பிறன் மனைவியை விரும்புவதால் அவன் அடைவது தோல்வியே.


“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.”

என்னும் குறளுக்கு ஏற்ப ராமன் ஏக பத்தினி விரதனாகக் கடைசிவரை இருந்ததே, பெரும்பாலான இளைஞர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் கருத்து. இந்தப் பிறன்மனை நோக்காத பேராண்மை எக்காலத்துக்கும் பொருந்தும். ராவணன் மனைவியான மண்டோதரி, சீதைக்கு நிகரான பெருமை வாய்ந்தவளாகவும், நிரம்ப சிவபக்தி கொண்டவளாயும் இருக்கின்றாள். எனினும் அவன் அவளோடு திருப்தி அடையவில்லை. மற்றவர் மனைவியை அடைவதில் தான் இன்பம் என்றும் பெருமை என்றும் எண்ணுகின்றான்.

அஹல்யா, த்ரெளபதி, சீதா, தாரா, மண்டோதரீ ததா
பஞ்ச கன்யா ஸ்மரேந்நித்த்யம் மஹா பாதக நாஸநம்"

என்று தினமும் காலையில் வணங்கிப் போற்றும் ஐந்து கன்னிகைகளில் ஒருத்தியாக மண்டோதரி இருந்தும் ராவணன், பிறன் மனை விழைதல் என்னும் மாபெரும் தவற்றைச் செய்துவிட்டு அதன் காரணமாகவே அனைத்தையும் இழக்கின்றான். (இதில் வரும் "தாரா" தேவகுருவின் மனைவி தாரா ஆவாள். பலரும் நினைக்கும்படியாக வாலியின் மனைவி "தாரை" இல்லை. வாலியின் மனைவி தாரை ஒரு வானரப் பெண்மணி, இவள் தாரா!)

Saturday, August 16, 2008

விருந்தாளிகளின் தொல்லை தாங்கலை!!!!

நம்ம வீட்டு விருந்தாளிகள் பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சே?? ஒரு 4 நாள் முந்தி இரவில் கணினி முன்னால் உட்கார்ந்திருந்தேன் பெண்ணோடு சாட்டுவதற்குத் தயாராக. அவங்க வரதுக்கு நேரம் ஆச்சு. நான் உட்கார்ந்திருந்தது இரவு நேரம் ஆனாலும் விளக்குப் போட்டுக்கலை. விளக்குப் போட்டுட்டு உட்கார முடியாது. ம.பா.வோ சீரியல் சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தார். பொண்ணும் வரலை, சரினு மெயிலாவது பார்க்கலாம்னு ஜிமெயிலில் உட்கார்ந்திருந்தேன். ஒரு விவாத இழையில் ஆழ்ந்து போயிருந்த சமயம். காலில் ஏதோ குறு, குறு. வலக்கால் கட்டை விரலில். நமக்கு அது அடிக்கடி தொல்லை கொடுக்கும். அதுமாதிரிதான் ஏதோனு நினைச்சேன் முதல்லே. திரும்பவும் குறு, குறு, கொஞ்சம் அழுத்தமாய், வலியும் வந்தது. சாதாரணமாய் ஒரு பென்சில் விழுந்தாலே வலிக்கும் நமக்கு, அதனால் அப்படி ஏதோனு நினைச்சால், மீண்டும் அழுத்தமாய் ஒரு குறு, குறு. அவ்வளவு தான்.நாம அலறிய அலறலில் அக்கம்பக்கம் தூங்கப் போனவங்க எல்லாம் எழுந்து உட்கார, என்னோட ம.பா.வோ எனக்கு கணினி வழி ஷாக் அடிச்சுடுத்துப் போலிருக்குனு மெயினை ஆப் செய்யப் போக, நான் எழுந்து கத்திய கத்தலில், காலடியில் இருந்த ஒரு மூஞ்சுறு ரொம்பப் பயத்தோட ஓடிப் போச்சு.

அவ்வளவு தான். மொத்தமாய் நிலைமை அப்படியே மாறிப் போச்சு. அதுவரைக்கும் பயத்தோட இருந்த ம.பா.வுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு மூஞ்சுறுக்கா இப்படிக் கத்தினே?? அது ஒண்ணும் கடிக்காது. உனக்குத் தான் சும்மாவே வலிக்கும். நீ அதை மிதிச்சதிலே அது உயிரோட இருக்கிறதே பெரியவிஷயம், இப்போ அதைப் பயமுறுத்தி வேறே வச்சிருக்கே. எங்கே போச்சோ?? தேடணுமேனு ஒரே கவலை. தேடறது எதுக்குனு கேட்காதீங்க. எங்க வீட்டிலே துணி வைக்கும் அலமாரியிலே இருந்து, எல்லா இடத்திலும் தாராளமாய் வந்து போகும் ஜீவன் அது. துணி எல்லாம் அதன் கழிவுகளால் ஒரே நாசம். எப்படி என் புடவைகளைக் காப்பாத்தறதுனு ஒரே மண்டைக் குடைச்சல். அதை உள்ளே வர விடாதேனு இவர் ஆர்டர். என்னமோ நான் அதை வெத்திலை, பாக்கு வாங்கிக்க வானு கூப்பிட்ட மாதிரி. என்னத்தைச் சொல்றது?? உள்ளே வந்த அதை வெளியே விடாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, அதை வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுக்க விட்டுட்டேனு இவருக்குக் கோபம். அது என்ன கையில் பிடிக்கவா முடியும்?? எப்படியோ ஓடி, ஒளிஞ்சுக்கறது.

நேத்திக்கும் அப்படித் தான் ராத்திரி உட்கார்ந்திருந்தேன் கணினிக்கு முன்னால். அப்போ பாருங்க, பக்கத்திலேயே இருக்கும் வார்ட்ரோபில் இருந்து ஏதோ தட்டற சப்தம். விட்டு, விட்டுக் கேட்டது. இவ்வளவு உள்ளே வந்து ஒளிஞ்சுக்கக் கூடிய ஒரே நபர் மூஞ்சுறைத் தவிர வேறே எதுவாய் இருக்கும்?? உடனேயே ம.பா.வைக் கூப்பிட, அவரும் ஓடோடி வந்தார், நேத்திக்கு சீரியல் எதுவும் இல்லை! அதனால் தான்! :P வந்து கதவைத் திறந்து பார்த்தால் ஒரு குஞ்சு தெரிஞ்சது. சரிதான், பிரசவத்தை இங்கே வச்சிருக்குனு நினைச்சு, இன்னிக்குக் காலம்பர வரை வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டு, பின்னே?/ அதில் இருக்கும் சாமான்களை எடுத்துட்டுத் திரும்ப வைக்க ஒரு அரை நாள் பிடிக்கும். அத்தனை வேண்டாத சாமான்கள் இருக்கு அதிலே. காலம்பர அவர் வார்ட்ரோபைத் திறந்து கொண்டு, வாளி, முறம், ப்ரஷ் (குட்டியாச்சே, துடைப்பத்தால் எடுத்தால் வலிக்கும் இல்லையா??) சகிதம் உட்கார, நான் கையில் கம்புடன், ஹாலில் நட்ட நடுவாக, ஒரு நாற்காலியில் அமர்ந்தேன், அம்மா வந்தால் வெளியே விரட்ட.

மெதுவாய்த் திறந்து பார்த்தால், ஒரு மூஞ்சுறு அசையாமல் கிடக்கு. என்னனு புரியலை, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு. அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் மேலும் 2 குஞ்சுகள். அதுங்க இரண்டும் துள்ளலோ துள்ளல். மெதுவா அதை எடுத்து வாளிக்குள் போட்டுவிட்டு, அதுக்குள்ளே அம்மா வராமல் இருக்கணுமேனு பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்லி, அசையாமல் இருக்கிறதை முதலில் வெளியே கொண்டுவிட்டு, காக்காய் வேறே கொத்தாமல் இருக்கணும், அது கண்ணுக்குப் படாமல் மறைவாய் விட்டு, மத்தது இரண்டையும் அப்படியே விட்டுட்டு வந்து, திரும்ப வார்ட்ரோபை சுத்தம் செய்து, அறையையும் சுத்தம் செய்துவிட்டுக் குளித்துச் சாப்பிடும்போது மணி 1-00 க்கு மேல் ஆயிடுச்சு.

கொல்லையில் காக்காய்க்குச் சாதம் வைத்தால் கொஞ்ச நாளாக் காணாமல் போயிருந்த அம்மாப் பூனை வருது, மெதுவாய் ஏதோ விஷயம் சொல்லிக் கொண்டே. என்னனு பார்த்தால் அதோட வயிறு பெரிசா இருக்கு. மீண்டும் குட்டி போடப் போகுதோ?? அதுக்குத் தான் தாஜா பண்ணுதோ??

கடவுளே!!!!

Friday, August 15, 2008

காந்தியவாதி கல்யாணராமன் கேள்வி!! ஆட்சியாளர்கள் என்றால் யார்?


ஜெயா + சானலில் இன்று 12-30 மணி அளவில் காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்த திரு கல்யாணராமனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்றைய நாட்களில் அரசும், நிர்வாகமும் பெருமளவில் ஊழலின் ஊற்றாக மாறி இருப்பது குறித்து வருந்திய அவர், காந்தி இருந்திருந்தால் 50 களிலேயே இந்த ஊழல் ஆரம்பித்ததை ஒட்டிப் புதிய கட்சி ஆரம்பித்து, மீண்டும் சுதந்திரம் கிடைக்கப் போராடி இருந்திருப்பார் என்றும் கூறுகின்றார்.

சேவை புரிவது ஒன்றே நோக்கமாய்க் கொண்டிருந்த காந்தியும், அவரின் தொண்டர்களும் இத்தகைய புரட்சியைக் கட்டாயம் செய்திருப்பார்கள் என்றே சொல்கின்றார். நாட்டு மக்களிடையே அத்தகையதொரு விழிப்புணர்ச்சி வரவேண்டும் என்றும் சொல்கின்றார். காந்தியின் தொண்டர்களாய் இருந்த, ராஜாஜி, ஆசார்ய கிருபளானி, ஜெயப்ரகாஷ் நாராயண், ஆச்சார்ய வினோபாபாவே போன்றோர் அரசியலை விட்டும், கட்சியை விட்டும் விலகி மக்கள் சேவையில் இறங்கியதையும் உதாரணம் காட்டிய அவர், அவர்கள் கூட இப்போதைய நிலையில் புரட்சிக்கே ஆதரவு தெரிவித்து, இரண்டாவது சுதந்திரத்துக்குப் போராடுவார்கள் என்றே தாம் நினைப்பதாய்த் தெரிவித்தார்.

பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோர் அரசிடம் இருந்து பலவிதமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், மேன்மேலும் சம்பளம் என்றும் வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் போன்றோர் அரசின் செலவில் பெருமளவு தங்கள் சொந்த உபயோகத்திற்கே பயன்படுத்துவதாயும், விமானப் பயணங்களையே விரும்புவதாயும் தெரிவித்த அவர், காந்தி கடைசி வரையில் ரயில் பயணமே மேற்கொண்டதையும், அதிலும் 3-ம் வகுப்பிலேயே, பிரயாணத்தை மேற்கொண்டதையும் சுட்டிக் காட்டினார்.

இன்றைய நாட்களில் அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலோர் அங்கே உள்ள பார்க், புல்தரை போன்றவற்றில் உலாவிக் கொண்டே இருப்பதாயும், அரசு நிர்வாகம் சீராக இல்லை என்றும் சொல்லும் அவர், அரசு அலுவலர்கள் சரியாக வேலை செய்ய வேண்டும், என்றும், சம்பளம் கிடைப்பதால், மேற்கொண்டு அதிக ஆசை இல்லாமல் அவர்கள் நிர்வாகத்தைச் சீராக நடத்துவதைத் தங்கள் கடமையாய்க் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். அரசு உங்கள் அரசு என்று கூறும் அரசியல்வாதிகள் தங்கள் அளவில் அப்படியே நினைத்துக் கொள்ளுவதாயும், தங்கள் சுயலாபங்களுக்கே அரசைப் பயன்படுத்துவதாயும் மறைமுகமாய்க் கூறிய அவர், அதே போல், பொதுச் சொத்து, உங்கள் சொத்து என்று கூறுவதையும் அப்படியே எடுத்துக் கொண்டு அனைவருமே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் முறைகேடாகப் பொதுச் சொத்தை அனுபவிப்பதோ செய்கின்றார்கள் என்றும் வருந்தினார்.

இன்றைய அரசைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்று உச்ச நீதி மன்றம் வருத்தத்துடன் கூறி இருக்கும் செய்தி வந்த தினசரியை எடுத்துக் காட்டிய அவர், தீவிரவாதம் மலிந்திருக்கும் இந்நாட்களில் போலீசுக்கு அதைத் தடுக்கும் பெரும்பங்கு இருப்பதாயும் கூறினார். போலீஸ் ஸ்டேஷன்களை மூடவேண்டும் என்று கூறிய அவர் அதற்கான உதாரணமாய்த் தன் வாழ்வின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறினார்.

திரு கல்யாண ராமன் 20 வயதுகளில் இருக்கும்போது ஒரு ஆங்கிலேயக் கம்பனியில் வெல்பேர் ஆபிசர் என்ற போஸ்டில் நியமிக்கப் பட்டிருக்கின்றார். நியமிக்கப் பட்டு வேலையில் சேர்ந்து 3 நாட்கள் ஆகியும் அவருக்குத் தனி அறையோ, அல்லது தனி மேஜை, நாற்காலியோ கொடுக்கப் படவில்லை. இளவயது கல்யாணராமனுக்கு இது உறுத்தலாய் இருக்கத் தன் மேலதிகாரியான ஆங்கிலேயரைப் பார்த்து, தனக்குத் தனி அறையும், தனி மேஜை, நாற்காலியும் கேட்டிருக்கின்றார். அவர் முதுகில் ஒரு தட்டுத் தட்டிய அந்த அதிகாரி என்ன கூறினாராம் தெரியுமா??
"தம்பி, மேஜை , நாற்காலி போட்டு உட்காரவா வந்தாய்? போ, போய், தொழிற்சாலை முழுதும் சுற்றி வா, என்ன நடக்கின்றது என்று கவனி. அது தான் உன் வேலை! " தொழிற்சாலையைச் சுற்றி வந்து அங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு பிடிப்பதும், பின்னர் நன்மைகளைக் கண்டறிவதுமே தன் வேலை என்று உணர்ந்ததாய்க் கூறும் அவர் நாட்டிலும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் மூடப் பட்டு போலீசார் சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். அப்போது தான் புதிதாக யார் வருகின்றார்கள் என்பதோ, அல்லது, எங்கே தவறு நடக்கின்றது என்றோ கண்டறிய முடியும், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் என்பது அவர் கருத்து.

மேலும் சேவை மனப்பான்மை இன்றைய நாட்களில் குறைந்துவிட்டதாய்ச் சொன்ன அவர், நாட்டை இன்று ஆண்டு கொண்டிருப்போர் அனைவருமே பெருமளவில் கொள்ளைக் காரர்களே என்பதாயும் வருந்துகின்றார். எல்லா விஷயங்களுக்கும் சரியான குறிப்புகளோடும், ஆதாரங்களையும் காட்டியே பேசிய இவர் பேட்டி திரும்பத் திரும்ப ஒளிபரப்பானால் ஒருவேளை மாற்றம் ஏதேனும் ஏற்படுமோ??? அல்லது அதுவும் கனவாகி விடுமோ??????

நாளை நமதே!!!!

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!


வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்
ஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்:

கப்பல் விடறோமோ இல்லையோ, கப்பல் விடற சாக்கிலே ஒருத்தருக்கொருத்தர் கட்சிகள் சண்டை போட்டுக்கிறோமே??? அடிமேலைக் கடலில் கப்பல் விடறதா முக்கியம்??

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்

அட, ஆமாம், கிராமங்களில் சுவரே இல்லாமல் பள்ளிக் கூடம், கூரையே இல்லாமல் பள்ளிக் கூடம், மரத்தடியில் பள்ளிக் கூடம், பள்ளிக் கட்டிடத்திலே கீழ்த்தரமான வேலைகள் செய்பவர்கள் தங்குமிடம் என்று பள்ளித் தலங்களை இப்படிக் கோயிலாக மாத்திட்டுத் தானே வரோம்?? இன்னும் சில ஊர்களில் பள்ளித் தலத்துக்கு அருகேயே டாஸ்மாக் இருக்கிறது என்பதும் கூடுதல் உற்சாகம். ஆகவே

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

எங்கே இருந்து பாலம் அமைக்கிறது, இருக்கிறதையே அழிக்கலாமானு பார்க்கிறோம். வீதி சமைக்கிறதாவது, ஒண்ணாவது, ஏதானும் நடக்கிற காரியமாப் பேசுங்க! ஆகவே
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்..

பக்கத்து வீதிக்கே தண்ணீர் தர மாட்டோம். எங்க தெருவுக்கு வந்து பாருங்க, குழாயில் தண்ணீர் வரும் நேரம் எல்லாரும் எவ்வளவு ஒத்துமைனு தெரியும்! வீதி நடக்கத் தகுதி இல்லையேனு ஏதானும் செய்யலாம்னு யாராவது முன்வந்தால் கூட அவங்களைச் செய்ய விட்டுடுவோமா என்ன??
இதிலே வங்கத்து நீரை எடுத்து மையத்து நாடுகளிலே பயிர் செய்யணுமா உங்களுக்கு?? வேறே வேலையைப் பாருங்க ஐயா! நல்லாக் கனாக் காண்கிறீங்க போங்க!

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்


மதுரை- பெரிய குளம் செல்லும் பாதையில் ஒரு மலையே காணாமப் போச்சு. அதைத் தான் குடைந்தெடுப்போம்னு சொல்றாரோ என்னமோ??? இல்லைனா நாங்க என்ன, விளையற கனிகளுக்கு எல்லாம் உரிய பணம் கொடுத்து வாங்குவோமா?? கனிமம் விளைந்தால் விட்டுடுவோமா?? இன்னிக்குத் தேதிக்குக் கோலாரிலே வேலையே இல்லையே! சுரண்டிட மாட்டோமா என்ன??? நாங்க உணவுப் பொருள் கூட இறக்குமதி தான் செய்வோம், அதான் எங்களுக்குப் பிடிக்கும்!! நீங்க சொல்றது ஜுஜுபி!!!!

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.


அதெல்லாம் போறோம் எட்டுத் திசை என்ன பதினாறு திசை இருந்தாக் கூடப் போவோம், பத்தலை எங்களுக்கு. ஆனால் என்னமோ கொண்டு வருவோம்கறீங்க??? என்னத்தைக் கொண்டு வரது??? எங்களுக்கு வேண்டாம்?? நாங்க ஏன் திரும்பி வரோம் இங்கே?? பைத்தியமா என்ன நாங்க?? அப்பா, அம்மா தனியா இருந்தா என்ன?? யார் எப்படிப் போனா எங்களுக்கு என்ன?? எங்க தொழில் நுட்ப அறிவால் நாங்க பிழைக்கிறோம்.

எங்கள் பாரத தேசெமென்று தோள் கொட்டுவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

அதெல்லாம் எந்தக் காலமுங்க?? நீங்க என்ன இன்னும் "கனாக் காணும் காலங்கள்" லேயே இருக்கீங்க போலிருக்கு??? இப்போ எல்லாம் ஜப்பான் முத்து, ஐரோப்பா முத்துனு கிடைக்குது, இந்த முத்தை எவன் சீண்டுவான்???

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம்ப்பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.

என்ன, என்ன, என்ன , என்னங்க இது புதுசா??? சிந்து நதி, இந்தியாவிலே இருந்துச்சா என்ன?? எங்களுக்குத் தெரியாதே?? அது பாகிஸ்தானில் இல்லை இருக்கு??? நமக்குச் சொந்தமா??? அதிலே சேர நாட்டுப் பெண்களோட படகிலே போகணுமா?? ஓகே, ஒத்துக்கறோம் இதை மட்டும், ஆனால் அடுத்து இது என்ன??? தமிழ் துரோகியா நீங்க??? சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துனு சொல்லிட்டு??? தமிழ் இன, மானம் இல்லாதவர் போலிருக்கு நீங்க! அதான் இப்படி எல்லாம் சொல்றீங்க??? அதெல்லாம் ஒத்துக்க முடியாதுங்க. விளையாடறதெல்லாம் சரி, தெலுங்கில் பாட்டா??? என்ன இசைக்கு மொழி இல்லையா??? யாருங்க சொன்னது??? அரசியல்வாதிங்க வீட்டுக்குத் தான் இதெல்லாம் ஒத்து வரும், எங்களைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் இசைக்கு மொழி உண்டு, மொழி கடந்தது இசை இல்லைனு ஒத்துண்டே ஆகணும்.

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்

ஹிஹிஹி, அது எப்படிங்க??? கோதுமைக்கு, வெற்றிலையா??? வியாபார நுணுக்கமே தெரியாத ஆளு போலிருக்கு??? கோதுமை விளைஞ்சால் உடனேயே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யறதை விட்டுட்டு?? பக்கத்து மாநிலத்துக்கு, அதுவும் வெற்றிலைக்குப் போய் எந்த மடையன் கொடுப்பான்?? ரொம்பவே பேராசைக் காரரா இருப்பீங்க போலிருக்கே??? வியாபாரம் உருப்பட்டாப்பல தான்! அப்புறம் நாங்க எப்படி சூப்பர் மார்கெட் எல்லாம் திறந்து எங்க பொருட்களை எப்படி விற்பனை செய்வோம்??? கொஞ்சம் நடைமுறை உலகுக்கு வாங்க ஐயா!

சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசு அளிப்போம்.

என்னது, சிங்கமராட்டியர் கவிதைக்கு??? சேரத்துத் தந்தங்களா?? சரியாப் போச்சு போங்க! மராட்டி மாநிலம் மராட்டியருக்கேன்னு சொல்றதெல்லாம் உங்க காதிலே விழலை??? 60 வருஷத்திலே இப்படி மொழியை ஊக்குவிக்கிறதுக்கு எங்களுக்கு மட்டும் தான் தெரியும்னு எத்தனை அரசியல்வாதிங்க தோள் கொட்டறாங்க??? அவங்க மொழி பேசறவங்க, மட்டும் அவங்க மாநிலத்திலே இருக்கலாம்னு சட்டமே கொண்டு வராமல் இருக்கோமே, அதுக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டாம்??? என்ன மனுஷன் நீங்க???

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

வேண்டாம், வேண்டாம், நான் போறேன், நான் போயே போயிடறேன். பாரதியார் தலை தெறிக்க ஓடுகின்றார். பாட்டு???? அதான் பாதியிலே நிப்பாட்டிட்டோமில்ல???? \

இந்தியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் பூர்த்தி!

ஜெய்ஹிந்த்!

வந்தேமாதரம்!

Thursday, August 14, 2008

ராமாயணம் பற்றிய சில எண்ணங்கள் பகுதி 3 நட்பு!

இளைஞர்கள், இளைஞிகள் அனைவருக்கும் பிடித்தது முதலில் நட்பும், காதலுமே. அதுவும் இன்றைய கால கட்டத்தில் நட்பு மிக மிக உயர்வாய் மதிக்கப் படுவதோடு அல்லாமல், உறவை விட நட்புக்கே முக்கியத்துவமும் கொடுக்கப் படுகின்றது.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.”

என்னும் வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, இங்கே நட்பு என்பது முதலில் இருந்தே தொடர்போ, பழக்கமோ இல்லாமல் ஒத்த உணர்ச்சியாலேயே நட்பு ஏற்படுகின்றது. அதற்குச் சான்று. சுக்ரீவனோடு , ராமனுக்கு ஏற்படும் நட்பைச் சொல்லலாம். ராமன் தந்தையின் வாக்கைக் காக்க வேண்டி நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்தான் எனில், சுக்ரீவனோ தன் அண்ணனால் விரட்டப் படுகின்றான். அண்ணன் இறந்துவிட்டான் எனத் தவறாய் நினைத்தேன், அதனால் மந்திரி, பிரதானிகளின் ஆலோசனையின் பேரிலேயே அரியணை ஏறினேன் என்று சுக்ரீவன் சொன்னபோதிலும், வாலி அதை ஏற்காமல் சுக்ரீவனின் மனைவியை அபகரித்துக் கொண்டு, சுக்ரீவனையும் நாடு கடத்துகின்றான். இங்கே ராமரின் மனைவியும் அபகரிக்கப் பட்டாள். இவ்வாறு இழப்பின் தாக்கமே இருவரையும் இங்கே ஒன்று சேர்க்கின்றது என்றும் சொல்லலாம் அல்லவா??

அதுவும் தவிர, தூய்மையான நட்பில் சமூக, பொருளாதார வித்தியாசங்கள் தென்படாது. நட்பு ஒன்றே பிரதானமாக இருக்கும். மகா பாரதத்தில் கண்ணனுக்கும், குசேலனுக்கும் உள்ள உறவு அப்படி என்றால், இங்கே ராமன், குகனோடு கொண்ட நட்பு, சுக்ரீவனோடு கொண்ட நட்பு, விபீஷணனோடு கொண்ட நட்பு என விரிவடைகின்றது. அதிலும் அனைவரையும் தம் சகோதரர்களாகவே எண்ணும் ராமரின் மனத்தின் பெருந்தன்மையும் நம்மை வியக்க வைக்கின்றது. இதைக் கம்பர்

“குகனொடும் ஐவரானோம், முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம்-
அகனமர் காதலைய நின்னொடு எழுவரானோம்
புகலருங் கானந்தந்து புதல்வரால் பொலிந்தானுந்தை”

என்று ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார்.


வால்மீகியோ வாலி அடிபட்டுக் கிடக்கும்போது, வாலிக்கும், ராமனுக்கும் நடக்கும் விவாதத்தின் மூலம் இதை நன்கு எடுத்துக் காட்டுகின்றார். “ஓர் உயிர் நண்பனின் உற்ற துணைக்காகவும், உயர்ந்த அன்புக்காகவும், தன் செல்வத்தையே துறக்கலாம். தன் சுகமாக இருந்தாலோ, அல்லது தன் ராஜ்யமாக இருந்தாலோ கூடத் துறக்கலாம். “ என நட்பின் பெருமையும், இலக்கணமும் இங்கே வால்மீகியால் எடுத்துக் காட்டப் படுகின்றது.

வாலி ராமரைத் தூற்றிப் பழிச்சொல் கூறிப் பலவாறு பேசியதைப் பொறுமையோடு கேட்ட ராமர், அப்போது அவன் கேள்விகளுக்குக் கூறும் பதிலாகக் கூறுவது இதுவே. சுக்ரீவனோடு அக்னி சாட்சியாக ஏற்பட்ட நட்புக்காகவும், அவனைக் காப்பாற்றத் தான் கொடுத்த வாக்குக்காகவும், நண்பனுக்கு உதவுதல் என்னும் உயர்ந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கவுமே தான் இவ்வாறு செய்ததாய்க் கூறுகின்றார் ராமர். நட்பின் காரணமாகவே சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தும் தவறு செய்த வாலி இங்கே தண்டிக்கப் படுகின்றான்.

அதே போல் விபீஷணன் பால் ராமர் கொண்ட நட்பும் பேசப் படுகின்ற ஒன்று. விபீஷணன் தன் தமையனைத் திருத்தப் பலவகைகளிலும் முயற்சித்து விட்டே கடைசியில் ராமரைச் சரணடைகின்றான். சரணடைந்தவனுக்கு அபயம் கொடுப்பதோடு அல்லாமல், அவனைத் தன் சோதரனாகவே ஏற்கின்றார் ராமர். இவ்வாறாக எந்தவிதமான பேதங்களுக்கும் இடம் கொடுக்காமல் நட்பு ஒன்றையே மனதில் வைத்து முதலில் ஒரு வேடனும், படகோட்டியுமான குகனையும், பின்னர் ஒரு வானரம் ஆன சுக்ரீவனையும், அதன் பின்னர் ஒரு அரக்கன் ஆன விபீஷணனையும் தன் நண்பனாய் ஏற்கின்றார் ராமர். இது இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒத்த உணர்ச்சிகள் இருந்தால், அவர்கள் எந்தவிதமான பேதமும் பார்க்காமல் நட்பால் இணைய முடியும் என்பது இங்கே எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.

அடுத்துக் கூடாநட்புப் பற்றி. ராவணன் போன்ற பிறன் மனை விழையும் துன்மதியாளனோடு சேர்ந்த காரணத்தாலேயே மாரீசன் தன் தவற்றை உணர்ந்து திருந்தி வாழ ஆரம்பித்தாலும், பின்னர் அவனின் துர்போதனையால் மீண்டும் பொன்மானாக மாறி சீதையைக் கவர்ந்து செல்ல ஒத்துழைத்து அதன் காரணமாய் உயிர் துறக்கின்றான். அது போலவே ராவணனின் சோதரர்களும், மற்ற நண்பர்களும் ராவணனின் துர் நடத்தையைக் குறித்து அவனுக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும், ராவணன் தன் நண்பர்களின் நல் ஆலோசனையைச் சிறிதும் மதியாமல் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொண்டதோடு அல்லாமல், தன் குலத்துக்கும் அழிவைத் தேடித் தருகின்றான்.

"அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்."

என்று வள்ளுவர் சொல்லி இருப்பதற்கு ஏற்ப "அழ அழச் சொல்லுவாரே தன் மனிதர்" என்பதை ராவணன் உணராமால் போனான் அல்லவா?? ஆகவே நல்ல நட்பு என்பது எது அது இத்தன்மையது என்பதையும்,

"அழிவினவை நீக்கி ஆறுய்ந்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு."

ராமாயணக் காவியம் மூலம் அறிய முடிகின்றது அல்லவா??? ராவணனின் நண்பர்கள் ராவணனுக்கு அழிவைத் தரும் தீமைகளை விலக்கச் சொல்லியும் அவன் விலக்கவில்லை, எனினும் நண்பர்கள் அவனோடு உடனிருந்து துன்பமே அடைந்தனர்.

Tuesday, August 12, 2008

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள்ள்- பகுதி 2

ராமாயணத்தில் அரசியல் உண்டா?? தாராளமாய் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு இது ஒரு அரசியல் காவியமே ஆகும். ஒரு அரசன் எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்பதை வால்மீகி பல இடங்களில் விளக்கி இருக்கின்றார். அதிலும் தசரதன் மூலம் நன்கு விளக்குகின்றார். தசரதனைப் பற்றிச் சொல்லும் இடங்களில், தசரதன், நான்கு வேதங்களையும் அறிந்தவராயும், பின்னால் நடக்கக் கூடியவற்றை அறியும் திறன் படைத்தவனாயும், ஐம்புலன்களையும் அடக்கியவனாயும், மனிதர்களிடம் நட்புப் பாராட்டுபவராயும், குரு பக்தி நிரம்பியவராயும், குடிமக்களைத் தன் மக்கள் போல் கருதும் அரசனாகவும், நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றில் பற்றுள்ளவராயும் சித்தரிக்கின்றார். குடிமக்களைப் போஷித்து, சிறப்பாக ஆளும் வல்லமை பெற்றவர்களே சிறந்த அரசனாய் இருக்க முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார். அரசன் ஆளுவதற்காக அல்லாமல், மக்களால் ஆளப் படுவதற்கென்றே அரசன், என்றும், மக்கள் தொண்டே மன்னனுக்கு முக்கியமாய் இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார்.

"அறனிழுக்கா நல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு."

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப ஆட்சிமுறைக்கு உரிய அறத்தில் தவறாமல், நல்லறம் புரிந்து, வீரத்துடன், குறையில்லாத மானத்துடன் ஆட்சி புரிந்ததாய்ச் சொல்கின்றார் வால்மீகி.

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு ஒப்ப, நாட்டுக்கு உயிர்நாடியாக இருப்பது நல்லரசனின் ஆட்சியே என்றும் தெரிய வருகின்றது, இந்த மாபெரும் காவியத்தினால்.

அரசன் தானாகத் தன்னிச்சையாக எந்தவிதமான முடிவும் எடுக்காமல் தன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசிப்பது குறித்தும் இதில் சொல்லப் படுகின்றது. தன் சொந்த மகனாகவே இருந்தாலும் யுவராஜ பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னால், தன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்து அவர்களின் சம்மதம் பெற்றே ராமனின் பட்டாபிஷேகத்தை நிச்சயம் செய்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி. பட்டாபிஷேகம் நடக்கப் போகின்றது என்பதால் தன் மகனுக்கு அரச நீதி பற்றிய அறிவுரைகளும் தசரதர் ராமனுக்கு எடுத்துக் கூறுகின்றார். ஒரு அரசன் எவ்வாறு இருக்கவேண்டும், காமம், குரோதம், போன்ற துர் எண்ணங்களுக்கு இடம் கொடாமல், நாள் தோறும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வது முக்கியம் என்றும், பிறநாட்டு விபரங்களை ஒற்றர்கள் மூலம் அறியவேண்டும் எனவும், மக்கள் மனம் மகிழுமாறும், நீதி தவறாமலும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க வேண்டும் எனவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் அரசனைப் பற்றிப் பெருமை கொள்ளும்படி நடக்கவேண்டும் எனவும் கூறப் படுகின்றது.

இதைப் போலவே குலகுருவான வசிஷ்டரும் ராமருக்கு அரச நீதிகளைக் கூறுகின்றார். அமைச்சர்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கக் கூடாது, வீண் பகை கொள்ளக் கூடாது, அன்பு நெறியைக் கடைப்பிடித்தல் எனப் பல்வேறு நல்வழிகளும் அரசனுக்கு உரியனவாய் எடுத்துச் சொல்லப் படுகின்றது.

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி."

என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப மன்னர்கள் தங்களை உடலாகவும், குடி மக்களைத் தங்கள் உயிராகவும் கருத வேண்டும் என்று வசிஷ்டர் ராமருக்கு எடுத்துச் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாகும்.

"இறை காக்கும் வையகமெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்."

என்பதற்கொப்ப நல்லரசன் நல்வழியில் ஆட்சி புரிந்து வந்தால் அவனை அவனின் நற்செயல்களே காக்கும் என்பதையும் வசிஷ்டர் வாயிலாக எடுத்துச் சொல்கின்றார் வால்மீகி. மேலும் மன்னனாகவே ஆகப் போகின்றவன் ஆனாலும் அவனுக்கும் பதவி ஆசை இருக்கக் கூடாது என்பதும், ஆட்சியில் அமரப் போகின்றோம் என்ற இறுமாப்பு இருக்கக் கூடாது, எப்போதுமே ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப் படுகின்றது. அதற்கேற்ப ராமரும் தசரதர் அழைத்து, ராமருக்கு முடி சூட்டும் தன் முடிவைச் சொன்னதும், ராமரின் மனதில் மகிழ்வும் இல்லை, தளர்வும் இல்லை, எனவும், இது தசரத மன்னனின் ஆணை, அதை ஏற்று நடக்கின்றேன் என்றே ராமன் கூறுவதாயும் வால்மீகி கூறுகின்றார்.

இவ்விதம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி நடத்தவேண்டும் என்ற கூற்றுகளும், கருத்துக்களும் அக்காலத்திற்கு மட்டுமில்லாமல், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றது அல்லவா??
அடுத்து ராமாயணம் ஒரு காதல் காவியமா?? இளைஞர்களுக்கு எவ்வகையில் ஏற்றது??

Monday, August 11, 2008

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள்! பகுதி 1

முதல்லே இது தேவையானு யோசிச்சேன். ஏற்கெனவே பலரும் ராமாயணத்தைப் பலவிதங்களிலும் அலசியாச்சு. இன்னமும் பேசப் பட்டும் வருகின்றது. எப்போது எழுதப் பட்டது என்று நிர்ணயிக்க முடியாத ஒரு காவியம் இன்றளவும் வாதப் பிரதிவாதங்களால் ஈர்க்கப் படுகின்றது, கற்றறிந்த பலரையும். ஆனால் பலருக்கும், தெரிஞ்ச கதையான ராமாயணத்தைத் திரும்பவும் எதுக்குப் படிக்கணும் என்ற கேள்வி வருகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதைப் படிக்கவும் வாசகர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை என்றும் தெரிய வந்தது. பரவலாக, அநேகமாய் உலகம் முழுதும் ராமாயணம் என்றொரு இந்திய இதிகாசம் பற்றி அறிந்திருந்தாலும், அப்படி என்னதான் இருக்கின்றது இதில்?? ஏன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் படுகின்றது?? இந்திய மக்கள் தங்கள் மனம் கவர்ந்த கதையாக, தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தக் காவியத்தை ஏன் நினைக்கவேண்டும்??

மேற்கத்திய அறிஞர்கள் இதை இந்தியாவின் மாபெரும் காவியங்களில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதுவே முதன்மையானது என்றும் ஒப்புக் கொள்கின்றனர். முக்கியமாய்க் குழந்தைகளுக்குப் படுக்கும் நேரம் சொல்லப் படும் கதையாக இது இருந்து வருகின்றது. மேற்கத்திய நாடுகளின் தேவதைக் கதைகளைப் பெருமளவில் ஒத்து இருந்தாலும், அதிலிருந்தும் மாறுபட்டும் வருகின்றது என்று சொல்லலாம். ஆனால் தேவதைக் கதைகளில் பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகியை அடைய மிகவும் கஷ்டப் பட்டும், பலவிதத் தடைகளை வென்றும், கடைசியில் கதாநாயகி இருக்கும் இடத்தைக் கஷ்டப் பட்டு கண்டு பிடித்தும் அடைவான். வழியில் அவனுக்குப் பல மிருகங்களும், தேவதைகளும் உதவி செய்யும்.

அது போலவே இந்தக் காவியத்திலும் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சங்கள் பல இருக்கின்றன. ஒரு மாற்றம் என்னவெனில் இதில் கதாநாயகன் திருமணம் புரிந்த பின்னரே மனைவியைப் பிரிகின்றான். இங்கேயும் காடுகள் வருகின்றன. நதிகள், மலைகள் வருகின்றன. சமுத்திரம் வருகின்றது. கதாநாயகனின் வீர, தீரப் பிரதாபங்களும், அவனின் எதிரியின் சாமர்த்தியங்களும், அவனின் வீரமும் பேசப் படுகின்றது. அத்தோடு இல்லாமல் கதாநாயகன் தன் எதிரியான அரக்கனைச் சென்றடைய அவனுக்குப் பலவிதங்களிலும் உதவி கிட்டுகின்றது. முதலில் பறவையான ஜடாயு. பேசும் பறவை. அதன் பின்னர் வானரங்கள், இவையும் பேசுகின்றன. கரடியான ஜாம்பவான். இதுவும் மனிதர்கள் போல் பேசுகின்றது. இவற்றின் உதவியோடு ஒரு மாபெரும்பாலம் கட்டி சமுத்திரத்தைக் கடக்கின்றான் கதாநாயகன்.

அதிலும் இந்த வானரங்கள் நினைத்தபோது நினைத்த உருவத்தை எடுக்கும் வல்லமை பெற்றிருக்கின்றார்கள். அதே போல் அரக்கர்களும் பல்வேறுவிதமான வடிவை எடுக்கின்றார்கள். இதற்கு மாரீசன் பொன்மானாய் மாறியதும், தூது வரும் அரக்கர்கள் பறவை வடிவில் வருவதும், மற்றொரு சமயம் வானரங்கள் போலவே உருமாறிச் சென்று உளவு பார்ப்பதும், இந்திரஜித் என்ற ராவணனின் மகன் மறைந்திருந்து மாயாஜால முறையில் போர் புரிவதும், குழந்தைகளுக்குக் கேட்கக் கேட்கத் திகட்டாத ஒன்றாய் அமையும். கதை சொல்லப் படும் உத்திக்கு இத்தகைய பாத்திரங்களின் தேவை இருக்கின்றது மட்டுமில்லாமல் கடைசிவரையில் அவை கதாநாயகனுக்குத் துணை புரிந்து அவன் வெற்றியடையவும் உதவுகின்றன. தேவதைக் கதைகளில் எவராலும் வெல்லமுடியாத ஒரு மந்திரவாதியை கதாநாயகன் எவ்வாறு மந்திர வல்லமை பெற்றிருக்கும் கிளிகள், பறவைகள், மிருகங்கள், உதவியுடன் வெற்றி கொண்டு தன்னுடைய அரசையும், அரசகுமாரியையும் கைப்பற்றுவானோ, அவ்வாறே இதிலும் கதாநாயகன் வானரங்களின் உதவியோடு ராவணன் என்ற எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனைக் கொன்று, தன் மனைவியை மீட்டுக் கொள்கின்றான்.

அதே சமயம் குழந்தைகளுக்குத் தேவையான நீதி போதனையும் கிடைக்கின்றது. தன் தந்தையின் வாக்கைக் காக்கவேண்டி ராமன் காட்டுக்குச் சென்றது குழந்தைகளுக்குப் பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் போதித்தால், காட்டில் ரிஷி, முனிவர்களுக்கு ராமன் உதவியது, பலம் பொருந்தியவர்கள், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல், ஒரு அரசகுமாரனின் கடமை தன் மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பதும் என்றும் சுட்டுகின்றது. மேலும் கடவுளுக்கு நிகரான பலம் பொருந்திய எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனை, ராமன் என்ற சாதாரண மனிதன் கொன்றான் என்பதும் குழந்தைகளைக் கவரும். அதே சமயம் ராவணனை வெல்ல முடிந்தது எவ்வாறு என்பதும் சொல்லப் படுவதால், ராவணன் எத்தனை வரம் வாங்கி இருந்தாலும், மனிதர்களைச் சாதாரணமாய் நினைத்தது மட்டுமில்லாமல், அடுத்தவர் மனைவியான சீதையைத் தூக்கி வந்த அராஜகச் செயலினால் அவன் பலம் பொருந்தியவனாய் இருந்தாலும், அவனின் பலம் முழுதும் பயனற்றுப் போய் விடுகின்றது. இதிலிருந்து ஒழுக்கம் தவறக் கூடாது என்ற நீதியும் குழந்தைகளைச் சென்றடைகின்றது.

ராவணன் என்ற அரக்கன், மனிதர்களை மட்டுமின்றி, குரங்குகள், மிருகங்கள், கரடிகள் போன்றவற்றையும் ஒரு பொருட்டாய்க் கருதாமல் இருக்கும் அதே சமயம் ராமன் தன் அன்பினாலும், பண்பினாலும், நட்பினாலும் அவற்றைக் கவர்ந்து தம் வசம் இழுக்கின்றார். ஒரு வானர அரசன் ஆன சுக்ரீவனிடம் நட்புப் பாராட்டுகின்றார். குழந்தைகளின் மனதில் ஆழப் பதியக் கூடிய ஒரு விஷயம் மிருகவதை என்பதும், மிருகங்களை இம்சை செய்வது தவறு என்று தோன்றும். மேலும் ஒரு அரசன் எவ்வாறு நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியவேண்டும் என்பதும் இதில் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டிருப்பது வருங்காலத் தலைமுறைக்குத் தெரியவேண்டிய முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இப்படி பலவகைகளிலும் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைக் கொண்டிருப்பதாலேயே ராமாயணம் இன்றளவும் குழந்தைகள் மத்தியில் மிக, மிகப் பிரபலமான ஒன்றாய் இருந்து வருகின்றது.

அடுத்து அரசியல் நோக்கில் பார்க்கலாம்.

Sunday, August 10, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 87

லட்சுமணனை என்ன செய்வது என்று ராமர் யோசித்தார், தன்னுடைய மந்திரி, பிரதானிகளையும், முக்கிய பெரியவர்களையும் அழைத்து, தன் சகோதரர்களையும் அழைத்து நடந்த விஷயத்தைக் கூறுகின்றார். தன் குல குருவான வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்கின்றார். வசிஷ்டர், கூறுகின்றார்:"ராமா, உன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பது நன்கு புரிகின்றது. லட்சுமணனிடம் இருந்து நீ கட்டாயம் பிரிந்தே ஆகவேண்டும். இப்போது நீ லட்சுமணனைக் கைவிடுவதே சரியானது. காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. நீ கொடுத்த வாக்கை எக்காரணம் கொண்டும் தவறக் கூடாது. வாக்குத் தவறுதலைப் போன்ற ஒரு அதர்மம் வேறு எதுவும் இல்லை. அது ஒன்றே மூவுலகும் அழியக் காரணமாகிவிடும், ஆகவே லட்சுமணனைக் கைவிடு!" என்று சொல்கின்றார் வசிஷ்டர்.

ராமர் அனைவர் முன்னிலையிலும் லட்சுமணனைப் பார்த்து, " நான் உன்னை விட்டு விட்டேன், இனி உனக்கும் எனக்கும் எந்த விதமான உறவு கிடையாது. உற்றவனைக் கைவிடுதல் அவனைக் கொல்லுவதற்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே நான் உன்னை இப்போது கைவிடுவது, உன்னைக் கொல்வதற்குச் சமம்." என்று கூறுகின்றார். லட்சுமணன் கண்கள் குளமாகக் கண்ணீரோடு அங்கிருந்து வெளியே செல்கின்றான். பின்னர் சரயூ நதிக்கரைக்குச் சென்று, அங்கே தர்ம சாஸ்திரப் படியும், வேத நெறிகளின் படியும் சில, நியமங்களைக் கடைப்பிடித்து முடித்து, தன் மூச்சை அடக்கி, அங்கேயே அமர்ந்தான். விண்ணில் இருந்து இந்திராதி தேவர்கள் தோன்றி, பல மஹரிஷிகளோடு அங்கே வந்து, லட்சுமணன் மீது பூமாரி பொழிந்து, அவனை மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் விண்ணுலகம் அழைத்துச் சென்றனர்.

இவ்விதம் லட்சுமணனும் பிரிந்ததும், ராமருக்கு அரசனாய் இன்னும் ஆட்சி செலுத்தவேண்டுமா என்ற எண்ணம் தோன்றி, ஒரு நாள் அரச சபையில் அனைவர் முன்னிலையிலும், தான் இனி அரசனாய் இருக்க விரும்பாததாயும், பரதனுக்கு முடிசூட்டிவிட்டுத் தான் கானகம் செல்ல விரும்புவதாயும் சொல்கின்றார். சபையில் கூடி இருந்த அனைவரும் துயரத்தில் மூழ்க, பரதனோ, தனக்கு அரசாட்சி வேண்டாம் என்றும்,ராஜ்யத்தின் மீது தனக்கு ஆசை இல்லை என்றும் சொல்கின்றான். மேலும் ராமரின் இரு பிள்ளைகள் ஆன லவனும், குசனும் முறையே அரசாளத் தகுதி பெற்றிருப்பதாயும், தென் பகுதிக்குக் குசனும், வட பகுதிக்கு லவனும் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளட்டும் என்றும், தானும் ராமருடன் போக விரும்புவதால் உடனே செய்தியை சத்ருக்கனனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்கின்றான். அவனின் தீர்மானத்தைக் கேட்டு வசிஷ்டர் ராமரிடம் பரதன் சொன்னபடி செய்வதே முறையானது என்றும் அதற்கு ஒத்துக் கொள்ளுமாறும் சொல்கின்றார். ராமரும் மீண்டும் சபையோரிடம் அவர்களின் சம்மதத்தைக் கேட்க அனைவரும் ஒருமித்த குரலில் நீங்கள் செல்லும் இடத்திற்கு நாங்களும் வருகின்றோம், எங்களையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பின்னால் வருவதே எங்களுக்கு மிக விருப்பமானது என்று சொல்கின்றனர்.

ராமரும் அவ்வண்ணமே இசைந்து, வட கோசலத்திற்கு லவனையும், தென் கோசலத்திற்கு குசனையும் மன்னர்களாக முடி சூட்டுகின்றார். நடந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டு அங்கே வந்த சத்ருக்கனனும், தங்கள், தங்கள் மகன்களும் அரசாட்சியை முறையாகச் செய்வதாயும், தானும் ராமருடன் வரப் போவதாயும், கூறுகின்றான். ராமர் மறுக்கக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கின்றான். வானரர்கள், விபீஷணனைச் சேர்ந்த அரக்கர்கள் என அனைவருக்கும் செய்தி தெரிவிக்கப் பட்டு அனைவரும் அயோத்தியில் வந்து குவிந்தனர். ரிஷிகள், கந்தர்வர்கள், அனைவரும் வந்தனர். சுக்ரீவன் தான் அங்கதனுக்கு முடிசூட்டிவிட்டு வந்திருப்பதாய்த் தெரிவிக்க, விபீஷணனும் அங்கே வந்து ராமருடன் செல்லும் நோக்கத்துடன் வந்து நிற்க, ராமர் அவனைப் பார்த்து, "விபீஷணா, இக்ஷ்வாகு குல தெய்வம் ஆன அந்த ஜகந்நாதனை வழிபட்டு வருவாய், சூரிய, சந்திரர் இருக்கும் வரையில், இந்த பூமி இருக்கும் வரையில் நீ இலங்கையை ஆள்வாய். மக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறக் கூடாது." என்று சொல்கின்றார்.பின்னர் அனுமனைப் பார்த்து, "நீ என்ன செய்யப் போகின்றாய்?" என்று கேட்க, அனுமனோ பூமியிலேயே இருக்கப் போவதாய்ச் சொல்ல, ராமர் அனுமனிடம், " உன் விருப்பப் படியே ஆகட்டும். என்னுடைய சரித்திரம் பேசப்படும் காலம் வரையில் நீ இந்தப் பூமியில் வாழ்வாய்!"
என்று சொல்கின்றார். மறுநாள் வந்தது. வசிஷ்டர் சாஸ்திரங்கள் கூறியபடி அனைத்து நியமங்களையும் செய்து முடிக்க, பரத, சத்ருக்கனர் பின் தொடர, ராமர் சரயூ நதிக்கரைக்குச் சென்றார். பிரம்மாவும், தேவாதி தேவர்களும் காட்சி கொடுக்க, வானம் அசாதாரணமானதொரு பிரகாசத்துடன் காட்சி கொடுக்க, காற்றில் நறுமணம் கமழ, பூமாரி பொழிய, தெய்வீக இசை இசைக்கப் பட, ராமர் சரயூ நதியில் இறங்கினார். பிரம்மா நல்வரவு கூறுகின்றார்:"மஹாவிஷ்ணுவே, வருக, வருக, உங்கள் இடத்திற்கு மீண்டும் வருக. உங்கள் சகோதரர்களோடு உங்கள் இயல்பை அடைவீராக. உன்னை நன்கு அறிந்தவர் எவரும் இல்லை, உன்னால் அறியத் தக்கவன், அழிவற்றவன் ஆகின்றான்." என்று முகமன் கூறுகின்றார்.

தேவாதி தேவர்களும், ரிஷி, முனிவர்களும்,"மங்களம் பெருகட்டும்!"என்று நல்வாழ்த்துக் கூற, ராமருடன் வந்த அனைவரும் நதியில் இறங்க அனைவருக்கும் அவரவர்களுக்கு உரிய நல்லுலகம் கிட்டியது. அனைத்து உலகங்களிலும், அசையும் பொருட்களிலும், அசையாப் பொருட்களிலும், ஒவ்வொரு உயிரிலும் வியாபித்து இருக்கும் மஹாவிஷ்ணு தன் நிலையை அடைந்தார்.

இந்த ராமாயண மாலா ரத்தினத்தை இதுவரை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லாம் அவன் செயல். இயக்குவதும், இயங்குவதும் அவனே.

ஓம் நமோ நாராயணாய!

"காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி!"

நாளை இதன் முடிவுரைகளும், ராமாயணத்தில் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் பற்றிய குறிப்புகளும் தொடரும்.

விரைவில், அழகு தெய்வம் மெல்ல மெல்ல