எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 20, 2008

திரெளபதி பதிவிரதையா?? ஒரு மீள் பதிவு தொடர்ச்சி!

திரெளபதியைப் பத்தி எழுதும்போதே இது ரொம்பவே நெருடலான விஷயம் என்றும் இது ஒரு விவாதத்துக்கு வழி வகுக்கும் எனவும் தெரியும். இருந்தாலும் ரொம்ப நாளாகத் தெரிந்து கொண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் நினைப்புடன் தான் எழுதினேன். ஈஸ்வர் அவர்கள் திரெளபதி 5 பேரை மணந்து கொண்டதை வியாசர் எப்படி நியாயப் படுத்தினார் என்று சொல்லும்படி கேட்டிருந்தார். அன்று சாயங்காலம் "நடைப் பயிற்சி"யின் போது நானும், என் கணவரும் இதைப் பத்தி விவாதித்துக் கொண்டே போனோம். அப்போது சில தெளிவுகள் பிறந்தன. இருந்தாலும் இதுவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா தெரியாது. எனெனில் இறை உணர்வு என்பதோடு சம்மந்தப் பட்ட இந்த விஷயத்தை அப்படியே உணர்வு பூர்வமாக அணுகுபவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாய் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் பகுத்தறிவு வாதிகளும் சரி, நாத்தீகம் என்பவர்களும் சரி, இறைவனை நினைக்காத நாட்களே இல்லை. உண்மையாகப் பக்தி கொண்டிருப்பவர்களை விட அவர்களே எப்போதும் இறைவனை நினைக்கிறார்கள். ஆராய்ச்சியும் செய்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் விளைவும் அதன் எல்லையும் கட்டாயம் மெய்ஞ்ஞானமாய்த் தான் இருக்கும். இதை அவங்க ஒத்துக்காமல் போனாலும் உண்மை அது தான். அளவற்ற விஞ்ஞானத்தின் எல்லை மெய்ஞ்ஞானமே ஆகும். மிகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் எல்லாருமே ஆன்மீகவாதிகளாய்த் தான் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் நம் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் ஆவார்கள். இது இங்கே நிற்கட்டும்.

இவ்வுலகில் ஐம்பூதங்கள் மட்டுமில்லாமல் மனிதனுக்கும் ஐம்புலன்கள் இருக்கின்றன. நம்மையெல்லாம் படைக்கும் இறைவனுக்கும் ஐந்தொழில்கள் இருக்கின்றன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவை ஆகும். படைப்பன எல்லாவற்றையும் காப்பதோடு அல்லாமல் உரிய நேரம் வரும்போது அதை அழித்து, அதாவது வேறு இடத்திற்கு மாற்றி,அதை மாறுவதை மறைத்துப் பின் உரிய நேரம் வரும்போது முக்தி என்னும் அருள் செய்து, இத்தனையும் செய்யும் இறைவனின் லீலையை என்னென்பது? அவனுக்கு ஐந்து முகம். ஐந்து வித குணங்களால் ஆனவன். ;உண்மையில் பார்க்கப் போனால் இந்த சிவம் என்பது "சிவமாக" இருக்கும்போது நிர்க்குணப் பரப்பிரும்மமாக இருக்கிறது. இதற்கு உருவம் இல்லை. அதுவே "சிவனாக" அல்லது ஜீவனாக மாறும்போது அதனுள் "சக்தி" பாய்ந்து ஆட்டுவிக்கிறது. சிவம் வேறு. சிவன் வேறு. சிவா வேறு. சிவம் நிர்க்குணப் பிரம்மம் என்றால் சிவன் சக்தியுடன் சேர்ந்த பரம்பொருள். சிவா என்றால் அந்தச் சக்தி. சிவனை ஆட்டுவிப்பவள். இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியம்.ஒருத்தரைச் சும்மா இரு என்கிறதற்குச் "சிவனே"ன்னு இருன்னு சொல்றோம். சக்தி இல்லாத சிவன் என்று அர்த்தம். அதே நாம் கடவுளைக் குறிக்கும்போதோ "சிவ சிவா"ன்னு கூப்பிடறோம். சக்தியுடன் சேர்ந்த சிவன் இது. ஒன்றையொன்று பிரிக்க முடியாதது. பிரித்தால் வெறும் சிவன் தான். ஜீவன் இல்லை. சக்தி சேர்ந்தால் தான் எல்லாமே. புரியுதா என்று தெரியவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்த வரை புரிந்த வரை சொல்கிறேன்.

இந்த ஐந்து தொழில்களைச் செய்யக் கூடிய இறைவனின் ஐந்து முகங்களும், ஐந்து குணங்களும் தான் சேர்ந்து பஞ்ச பாண்டவரின் அம்சமாக உருவெடுத்ததாக ஐதீகம். பஞ்ச பாண்டவர் சிவாம்சம் என்றால் அவர்களை இயங்கச் செய்யும் சக்திதான் திரெளபதி. சக்தியின் அம்சமே அவள். அதனால் தான் ஐவரையும் மணக்கும்படி நேர்ந்தது. மானிட உறவையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கட்டாயம் மனதில் நெருடல் வரும். ஆனால் இதில் உள்ள தாத்பர்யத்தைப் புரிந்து கொண்டோமானால் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இருப்பதையும், எந்தக் காரியமும் காரணம் இல்லாம் ஏற்படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். மஹாபாரதத்தைக் கதை என்று நினைத்தாலும், தெய்வீகக் கதைகளின் தாத்பர்யம் இதுன்னு புரிந்து கொள்ள வேண்டும். வெறும் கதைன்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்பவே கஷ்டம் புரிந்து கொள்ளுதல். கண்ணகியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாயும் நினைக்கவில்லை. வடநாடு, தென்னாடு என்ற வித்தியாசமும் பார்க்கத் தேவை இல்லை. திரெளபதியின் காலம் வேறே. கண்ணகியின் காலம் வேறே. நம்மைப் பொறுத்த வரை இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த திரெளபதியின் துணிச்சல் கண்ணகிக்கு இருந்ததா என்றால் இல்லைனு தான் சொல்லவேண்டும். மஹாபாரதம் கதை என்றால் சிலப்பதிகாரமும் கதை தான். நமக்கு அதைப் பற்றி இளங்கோவடிகள் மூலம் தான் தெரியும். நடந்ததா என நாம் யாரும் அறிய மாட்டோம். ஆனால் "அனல் கொண்ட மதுரை"யும், "கடல் கொண்ட புகாரும்", "மணல் கொண்ட வஞ்சி"யும் இருந்ததை சான்றுகள் மூலம் அறிகிறோம். அது போல் மஹாபாரதம் நடந்தது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

பத்ரிநாத் போகிறவர்கள் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரமே மேலே உள்ள "மானா" என்ற ஊருக்குப் போனால் சில சான்றுகள் கிடைக்கும். பத்ரியில் இருந்து ஒரு 4,5 கிலோ மீட்டர் காரில் போய் விட்டுப் பின் அங்கிருந்து ஒரு 3,4 கிலோ மீட்டர் தூரம் மலையில் ஏறிப் போனோமானால் மானா" என்ற சிறு ஊர் வருகிறது. தற்சமயம் திபெத்திய அகதிகள் அதிகம் இருக்கிறார்கள்.. அங்கே இருந்து சற்று மேலே ஏறினால் மஹாபாரதம் எழுதிய "வேத வியாசர்" இருந்த குகை வரும். அதற்குச் சற்று முன்னால் ஒரு குகை போன்ற இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் இருக்கிறது. அங்கே தான் வியாசர் சொல்லச் சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கிப் பிள்ளையார் மஹா பாரதத்தை எழுதியதாகச் சொல்கிறார்கள். இன்னும் சற்று மேலே போனால் பஞ்ச பாண்டவரில் 2-வதான பீமன் திரெளபதி மேலுலகம் செல்லக் கட்டிய பாலம், "பீமன் பாலம்" என்ற பெயரில் உள்ளது. எல்லாரும் சரஸ்வதி நதியை அந்த இடத்தில் கடந்து போனதாகவும், திரெளபதிக்காக பீமன் பாலம் கட்டியதாயும், சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் அதுதான் என்றும் சொல்கிறார்கள். அதை நாங்கள் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அங்கே உற்பத்தி ஆகும் சரஸ்வதி அதற்கு அப்புறம் "அந்தர்யாமி" ஆகி "அலக்நந்தா"வுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் போய் அரபிக்கடலில் கலக்கிறாள். சமீப காலத்தில் 5 வருஷத்துக்கு முன்னால் "ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள்" அங்கே தான் ஜலசமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள். அதற்கு மேல் 2 கி.மீட்டரில் சீன எல்லை ஆரம்பம்.
Posted by கீதா சாம்பசிவம் at 1/16/2007 04:21:00 PM

5 comments:

  1. விளக்கம் விளக்கமாக இருக்கு! நன்றி கீதாம்மா! இது அங்க்கிள் சொன்னது தானே! அதை நைசா அவர் கிட்ட இருந்து காப்பியடிச்சி, பதிவில் போட்டுட்டீங்க! :)

    ReplyDelete
  2. ஆனால்...
    இது முழுமையாக ஒப்புக் கொள்ளக் கூடிய விளக்கம் அல்ல-ன்னு தான் நினைக்க்கிறேன்!

    ஐந்தொழில்களின் உருவம் பஞ்ச பாண்டவர்கள் என்பது சற்று மிகையே!

    அப்படியானால் கர்ணனின் நிலை இதில் எங்கே? அவனும் அதே தோற்றம் தானே!
    விதி வசத்தால் மாறினாலும், மூலமான தோற்றம் ஒன்று தானே? மூலமானது தானே ஐந்தொழில்கள்!
    எனவே இந்த விளக்கம் சரியாக வராது!

    ReplyDelete
  3. மேலும்
    அக்கால ஆண்கள் பல தார மணம் கொண்டதைப் போல, பெண்கள் ஒரு சிலராவது பல தார மணம் கொண்டனர் என்றும் கொள்ளலாம் அல்லவா? இன்று வாய் கிழியப் பேசும் பெண்ணுரிமை அப்போதும் கொஞ்சம் இருந்திருக்குது அல்லவா?

    பாஞ்சாலி புனிதமற்றவளாகப் போய் விடுவாளோ என்பதற்காக வேறு விளக்கங்கள் கொடுக்கலாம்! ஆனால் இங்கே புனிதம் என்ற பிரச்சனையே கிடையாது!
    அவள் அத்தனை குணங்கள் உள்ள கணவனை மனதால் வரித்தாள்!
    அத்தனை குணங்கள் உள்ள கணவர்களை வாழ்வில் வரித்தாள்!

    அதை மறைக்காமல் காப்பியம் சொல்கிறது! அவ்வளவே!

    சில வருடங்களுக்கு முன், அஸ்ஸாமில் இரு உயிர் நண்பர்கள் ஒரே மனைவியைத் தேடித் திருமணம் செய்து கொண்டார்களாம்! அந்தப் பெண்ணின் ஒப்புதலோடு!

    அப்போது பத்திரிகைகளில் இது பரவலாகக் கிழித்துப் பேசப்பட்டது!
    இந்தியா டுடே-இலும் வந்தது!
    சட்டச் சிக்கல்கள் கொடுத்துப் பார்த்தார்கள்! ஆனால் கணவனோ, மனைவியோ அல்லாமல் வேறொருவர் தரும் கம்ப்ளெயின்ட்டை சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை போலும்!
    (அப்போ நான் கல்லூரியில் இருந்தேன்! சரி விவாதம் :))

    ReplyDelete
  4. //பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த திரெளபதியின் துணிச்சல் கண்ணகிக்கு இருந்ததா என்றால் இல்லைனு தான் சொல்லவேண்டும்//

    உங்களோடு ஒவ்வொரு கருத்திலும் முரண்படனும்-னு தில்லை அம்பலவாணப் பெருமான் திருவுள்ளம் கொண்டாரோ? :)

    கண்ணகிக்கு சபையில் நீதி கேட்டு மன்னனையே சாய்க்கும் துணிச்சல் இருந்தது!
    ஆனால் திரெளபதிக்கு இல்லையே! :)

    கண்ணகி மனைவியாய் துணிச்சல் காட்டவில்லை! அன்பு ஒழுகினாள்!
    ஆனால் இழந்த பெண்ணாய் துணிச்சல் காட்டினாள்!

    திரெளபதி இழந்த பெண்ணாய் துணிச்சல் காட்டவில்லை!
    ஆனால் மனைவியாய் துணிச்சல் காட்டினாள்!

    ஓக்கே தானே கீதாம்மா?
    ஹா ஹா ஹா!
    இந்தக் கேஆரெஸ்ஸோட ஒரே தொல்லையாப் போச்சுதில்ல? :))

    ReplyDelete
  5. உள்ளேனம்மா மட்டும் போட்டுக்கறேன்... :)

    ReplyDelete